சுயம்-வரம் 19

அத்தியாயம்-19

மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை

தம்முள வாதல் வாயில்கட்கு இல்லை.

மனைவியின் வெறுப்புக்கு உட்பட்ட தலைவன் புரியும் கொடுமையைத் தோழி முதலிய வாயில்கள் கூற மாட்டர்கள். கணவன், மனைவிக்குள் நடப்பனவற்றை வெளியில் உரைப்பதில்லை.

திருச்செந்தூர்..

கடல் அலையும், கடல் காற்றும் உமாவின் முகத்தைத் தீண்டிக் கொண்டிருந்தது. குடும்பத்தோடு திருச்செந்தூர் வந்திருந்தாள். இரவு திருப்பூரில் பேருந்து ஏறியவர்கள் காலை ஐந்தரைக்கு திருச்செந்தூரில் அந்த பசுமை நிற இயந்திரம் இறக்கி விட்டுச் சென்றிருந்தது.

முன்பு திருச்செந்தூர் வர ஆர்வமாக இருந்தவள் இப்போது உற்சாகம் வற்றிக் காணப்பட்டாள். முகத்தில் சோர்வு வழிந்தது. வீட்டில் அன்னையும், திருச்செந்தூர் போகலாம் என்றும் கூறியதும் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தவள் இப்போது இப்படி இருக்கிறாள்.

உமா இதுவரை ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் இப்படி கொங்கு வட்டாரத்தைத் தாண்டியதில்லை.

இது பல பெண்களுக்கு இயல்பானதுதான். எங்காவது போக வேண்டும் என்று விருப்பப்பட்டால், “கல்யாணமாகி உன் புருஷனோடு போய் பார்த்துக்கோ…” என்ற ஒற்றை வாக்கியத்தில் பல பயணக் கனவுகள் காற்றோடு கரைந்து சென்று விடும். சில சமயங்களில் கண்ணீராய் கரையும்.

முதலில் திருச்செந்தூர் பயணம் என்றதும் அதன் காரணம் தெரியாமல் ஒத்துக் கொண்டாள். அவளிடம் பெற்றோர்கள் காரணமாக ஜோசியர் ஒரு தடவை திருச்செந்தூர் முருகனைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவிட அவளும் தலையாட்டிவிட்டாள். இவளேதான் டிக்கெட் முன்பதிவு செய்தாள்.

அனைத்தும் தயாரான நிலையில் கிளம்பும் நாள் வந்தது. ஆனால் அன்று மதியம் திடீரென்று காயச்சல் உமாவுக்கு வந்து விட்டது. வீட்டில் இருந்த கொரோனோ ஊசி போடும் போது கொடுத்த பாரசிட்டமாலை விழுங்கி அதைப் போக்க முயன்றாள். காய்ச்சல் மட்டுப்பட்டது.

மாலை திருப்பூர் செல்லக் கிளம்பும் போது வழக்கமாக பார்க்கும் கிளினிக்கில் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மாலை வரை நன்றாக இருந்தவளுக்கு ஆறு மணிக்கு மேல் மருத்துவனை வந்த பிறகு காய்ச்சல் எகிறி தலை சுற்றிவிட்டது.

இதெற்கெல்லாம் அசருபவள் இல்லை உமா. அவளுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கு வேலை இருந்ததால் அவளை மருத்துவமனையில் இறக்கிவிட்டுச் சென்றனர். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்றனர். அவளுடைய மாமாவின் வீடு அருகில் என்பதால் அவரைக் கூட அவசரத்திற்கு அழைத்துக் கொள்ளலாம். புறநகரில் இருக்கும் சிறிய மருத்துவமனை அது. அடிக்கடி செல்வது இல்லை என்றாலும் பரிச்சயமுண்டு.

தலைசுற்றுகிறது என்று கூறவும் அவளுக்கு ஒரு ஜூஸை எடுத்துக் கொடுத்த செவிலியர் உடனே அவள் காய்ச்சல் அளவைப் பார்க்க அது 100த் தாண்டி இருந்தது.

அருகில் இருந்த நர்ஸைப் பதட்டத்துடன் அழைத்த அந்த நர்ஸ், “உடனே குளுக்கோஸ் போடுங்க. இந்தப் பொண்ணுக்கு காய்ச்சல் ரொம்ப அதிகமாக இருக்கு. டாக்டர் வர வரைக்கும் இறங்கட்டும்.” என்று கூறினார்.

“ஏம்மா உங்கூட யாராவது வந்துருக்காங்களா?”

“வந்துருவாங்க… நீங்க குளுக்கோஸ் போடுங்க.. நான் அவங்களுக்கு கால் பன்றேன்.” ஜீஸை உறிஞ்சிக் கொண்டே பச்சை நிற பெட்டில் அமர்ந்து கொண்டு கூறினாள்.

ஜூஸை முழுதாக்க் குடித்தவளுக்கு சற்று தெம்பு வரவும் செவிலிப் பெண் ஒரு மாத்திரையைக் கொடுத்து விழுங்க வைத்து குளுக்கோஸ் பாட்டிலும் ஊசியும் கையுமாக வந்தார். உமா நன்றாகப் படுத்துக் கொண்டாள்.

ஐந்து இடங்களில் அவள் கைகளில் ஊசியைக் குத்திய நர்ஸ்க்கு ஐந்தாவது இடத்தில்தான் இரத்தக்குழாய் கிடைத்தது.

“என்னம்மா.. எல்லா நரம்பும் உள்ள போய் கிடக்குது?.. சாப்பிட்டியா சாப்பிடலையா?” என்றார்.

“சாப்பிட்டேன். ஆனால் இப்ப மறுபடியும் பசிக்குது..”

இரண்டு பாட்டில் குளுக்கோஸ் இறங்கியும் காய்ச்சல் இறங்கவில்லை. டாக்டர் பரிசோதித்துவிட்டு ஓய்வு அவசியம். மீண்டும் தொடர்ந்து காய்ச்சல் வந்தால் நிச்சயம் இரத்தப் பரிசோதனை அவசியம் என்று கூறிவிட்டார்.

“டாக்டர் இன்னிக்கு நைட் திருச்செந்தூர் போறோம்.. பிளீஸ்.. அதுக்கு ஏத்த மாதிரி டேப்லெட்ஸ் கொடுங்க..”

“ரெஸ்ட் அவசியம்மா.. பார்த்துக்கோ…”

ஆனால் அந்தப் பயணமோ அவளை மையப்படுத்திதான் என்று அவர் அறியமாட்டார். திருமணம் தள்ளிப் போவதால் திருச்செந்தூரில் பரிகாரம் செய்ய உமாவை அழைத்துச் செல்கிறார்கள். இதை விட்டால் திரும்பவும் செல்லவும் முடியாது. அனைத்தும் பார்த்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது காய்ச்சல் மெல்லக் குறைய ஆரம்பித்தது.

பேருந்தில் அரையும் குறையுமாகத் தூங்கிக் கொண்டு தூத்துக்குடி வந்து சேர்ந்திருந்தனர். இனி கடலில் குளித்தப்பின் முருகனைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

கடலில் சூரியன் உதிப்பதைப் பார்த்த பின் கிளம்ப எண்ணியிருந்தனர். சூரியன் போக்குக் காட்டி ஒரு வழியாக உதித்தான். சில மீனவர்கள் தொலை தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கடலலை தொம் தொம் என்று மோதியது.

திரைப்படங்களில் கடலலையில் விளையாடுவதை அவ்வளவு இன்பமாகக் காட்டியிருக்க கடலில் குளிக்கப் போனால் அங்கு கடல் நீருடன் மண்ணும் உடலில் ஒட்டிக் கொண்டது. பரிகாரத்திற்காக மக்கள் கழற்றிப் போட்ட உடைகளும் கடலோரத்தில் நீருக்குள் அலைபாய்ந்து காலைக் கவ்விக் கொண்டது.

ஒரு வழியாக கடலில் நீராடிவிட்டு உடை மாற்றிவிட்டு உணவு கூட உண்ணாமல் முருகனைத் தரிசிக்க நின்றனர். திருச்செந்தூரில் முருகனைப் பார்க்க வேண்டும் என்றால் சிறப்பு தரிசனம் என்றாலும் கால் கடுக்க நின்றுதான் ஆக வேண்டும். உமாவின் குடும்பத்தினர் பொது தரிசனத்திலேயே நின்று கொண்டனர்.

மூன்றரை மணி நேரம் வரிசையில் நின்ற பிறகு செந்தூரனின் சந்தனத் திருமேனியின் தரிசனம் கிடைத்தது. அதற்குள் வரிசையில் நின்ற உமாவின் உடல் ஒத்துழைக்கவில்லை. இடையில் நிலக்கடலை  போன்றவற்றை உண்டிருந்தாலும் காய்ச்சல் கண்ட உடல் அவளைப் பலவீனமாக்கி இருந்தது. கூட்டம் மூச்சு முட்டியது. அதுமட்டுமின்றி மயக்கம் வருவது போலவும் இருந்தது. ஆனால் இதை எல்லாம் தாங்கிக் கொண்டு நின்றுவிட்டாள்.

இதோடு முடிந்தது என்று நினைத்தால் அதுதான் இல்லை. வள்ளிக் குகையில் தான் அவளுக்கு பரிகாரமே நடக்க இருக்கிறது.

நேரம் ஆக நேரமாக கடல் அலைகளில் வேகம் அதிகமாக இருந்தது. பொதுவாக கடல் குகைகள் கடல் அருகே உள்ள நிலப்பகுதியை அடிப்பக்கமிருந்து கடல் நீர் அரிக்க உருவாக்கப்படுபவை ஆகும்.

அங்கும் பலத்த கூட்டம். ஆண் பெண் என்று வேறுபாடு இல்லாமல் திருமண நடக்க வேண்டுபவர்கள் அதிகம். குகைக்குள் இருக்கும் வள்ளியின் திருமுகத்தைப் பார்க்க மூச்சு விட வழியில்லாத கூட்டத்தில் நின்று தரிசித்து விட்டு வந்துவிட்டாள் உமா. கோயில் பரிகாரத்தை முடித்துவிட்டு வந்துவிட காலை உணவை முடித்துக் கொண்டு மதியம் பேருந்தில் ஏறி இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தனர்.

அதன் பிறகு ஒரு வாரம் உமா உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்தாள். இந்த மாதிரி திருமணப் பரிகாரம் என்றால்தான் நாம் எல்லாம் மாவட்டத்தைத் தாண்ட முடிகிறது என்று நினைத்துக் கொண்டாள்.

***

திவ்யா சரண்யாவை விட இன்னும் அதிர்ச்சியில் இருந்தாள். தன் தோழி சரண்யாவுக்குத் திருமணமாகி இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. பௌணர்மி பூசைக்கு ஆர்வத்துடன் கிளம்பி வந்தவளுக்கு இப்படி ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தைக் கேள்விப்படுவாள் என்றும் நினைக்கவில்லை. சரண்யாவையும் சந்திரனையும் இணைத்துப் பேச முகம் சுளித்து தன் அன்னையிடம் மறுத்துப் பேசினாள். ஆனால் அனைத்தையும் தவிடு பொடியாக்கத் அவர்கள் திருமணம் நடந்தேறிவிட்டது. அதன் அதிர்ச்சியை அவளால் ஏற்க முடியவில்லை என்பதுதான் உண்மை. காயத்ரிக்கும், ராகினிக்கும் எந்த அதிர்ச்சியும் அற்று அப்படியே எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். அதிலும் காயத்ரிக்கு ஏதோ சந்திரன் என்பதால் பரவாயில்லை என்ற எண்ணம் இருந்தது.

சரண்யா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவளுக்குத் திருமணமான விஷயம் அலுவலகத்திலும் தெரிந்தது. பலரும் வாழ்த்தினர். சிலர் எப்படி திடீர் திருமணம் என்று நேரடியாகக் கேட்டனர்.  சிலர் முகுதுக்குப் பின்பு பேசினர். இவை எதையும் சரண்யா காதில் போட்டுக் கொள்ளவில்லை. தன் வேலையில் முன்பை விட முனைப்புடன் ஈடுபட்டாள். அது அவள் கவனத்தை திசை திருப்ப உதவியது. ஆனாலும் அவள் உண்மை நிலை மாலை வீட்டுக்குச் செல்லும் போது உரைத்தது.

அவள் அன்னை அவ்வவ்போது எதாவது செய்து கொடுத்துவிடுவார். ஆனால் அதெல்லாம் சரண்யா தொட்டுக் கூட பார்க்கமாட்டாள். காலை அவசரமாக மூவருக்கும் எதாவது சமைத்துவிட்டுச் செல்வாள். மாலை அவள் வீடு திரும்பும் போது அவளுக்கு உணவு தயாராய் இருக்கும்.

சந்திரன் தந்தை அவர்களுடைய தோட்டத்தில் இருக்கும்  ஆடு மாடுகளுக்குக் காவலாய் அங்கே தான் பெரும்பாலும் உறங்குவார். அதனால் அவர் அங்கே இருக்க சரண்யாவும், சந்திரனும் மட்டும் இருப்பார்கள். வீட்டினுள் நுழையும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டே நுழைந்தாள். அப்போது திடீரென்று காலை வாசல்படியில் இடித்துக் கொண்டாள்.

சட்டென சந்திரனின் நினைவு வந்தது. உமாவும் காயத்ரியும் வந்து சென்ற பிறகு சந்திரனிடம் பேசினாள் சரண்யா. அவளின் முகத்தைப் பார்க்காமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனின் கண்களில் சரண்யாவின் மெட்டி அணிந்த விரல்கள் பட்டது. ஒரு விரல் வீங்கி இரத்தம் கசிந்து உள்ளே பழுப்பு நிறத்தில் நின்றது. அப்படியே விட்டால் அது கால் விரல் நகத்தைப் பாதிக்கும். அதைக் கூட அவள் உணரவில்லை.

உடனே வீட்டுக்குள் சென்றவன் ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியுடன் வந்தான். ஹாலில் அமர்ந்திருந்தவள் கேள்வியுடன் பார்த்தாள்.

“காலில் அடிப்பட்டிருக்கு. வா மருந்து வச்சு விடறேன்.”

யாருக்கு எனக்கா என்ற ரீதியில் அவள் காலை உற்று நோக்கினாள். அவன் கூறியது போல் தான் இருந்தது. ஆனால் அலட்டிக் கொள்ளவில்லை சரண்யா.

“ச்சே… ஏன் பச்சைக்கிளி இப்படி செய்யற?”

என்றவன் சட்டென அமர்ந்திருந்தவளின் காலைப் பிடித்தான்.

“சேப்டி பின் கொடு.. இல்லை நீடிலில் குத்தி விட்ருவேன்.”

அமைதியாக சேப்டி பின் ஒன்றைக் கொடுக்கவும் அதின் மூலம் ஒரு துளையை உண்டாக்க கட்டி நின்ற இரத்தம் வெளியே வந்தது. அதைத் துடைத்து விட்டு மருந்து வைத்து விட்டான். தன்னுடைய தோலில் ஊசியை வைத்துக் குத்த சரண்யாவுக்கு லேசாக பயம் இருந்தது உண்மை. அதனால் அமைதியாக அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பள்ளியில் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்ததால் சந்திரனுக்கு முதலுதவி செய்வது பழக்கம். பள்ளியிலும் இது போன்று முதலுதவிகள் செய்திருக்கிறான்.

அவனும் அதன் பிறகு சரண்யாவுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. சரண்யாவும் எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்களாக அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் சரண்யாவுக்கு ஏற்ற விதத்தில் அனைத்தும் நடக்கிறது. முன்பே புரோகிராம் செய்துவிட்ட இயந்திரம் போல் அனைத்தும் நடக்கிறது.

பகலில் அப்படி மூளைக்கு வேலை கொடுத்து உழைத்தாலும் சரண்யாவால் உறங்க முடிவதில்லை. முன்பை விட அவளுடைய இரவுகள் உறக்கமின்றி கழிந்தது. எப்போதும் புயலுக்குப் பின் அமைதி என்று கூறுவார்கள். ஆனால் இந்த மனதின் எண்ணப் புயல்களுக்கு அவ்வளவு எளிதில் அமைதி கிடையாது. இங்கு அனைவரும் ஏதோ ஒரு வகையில் மற்றொருவரால் மனதளவில் உடைக்கப்படுகின்றனர். அது குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

பெரும்பாலான மனிதர்களுக்கு இது எனக்கு நடந்தது.அதனால் இது மற்றவர்களுக்கு நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் இது மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பவர்கள் குறைவு. சரண்யா பயந்ததே இதற்காகத்தான்.. தானும் எங்கே ஒரு டாக்ஸிக் மனம் கொண்டவளாக மாறிவிடுவேனோ என்று.. இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறதோ? என்ற எண்ணமும் அவள் மனதில் எழும்பியது.

அது மட்டுமின்றி ஏன் தான் அப்படி ஒரு முடிவை எடுத்தோம் என்ற குற்ற உணர்வும் இருந்தது. எதற்காகத் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தோம்? என்ற எண்ணமும் அடிக்கடி எழுந்து அவள் மனதை ஆட்டுவித்தது. ஜெயச்சந்திரனின் தந்தையிடம் மட்டும்தான் பேசுவாள். அவருக்கு காலையில் சமைத்துவிட்டு போன் செய்து தகவலைக் கூறிவிடுவாள். அதே போல் அவள் இரவு வீடு வரும் நேரத்தில் அவளை அழைத்து வர பேருந்து நிற்குமிடத்திற்கு தன் இரு சக்கர வாகனத்தில் வந்து விடுவார்.

சரண்யாவுக்கு ஏனோ அவர் மீது மட்டும் கோபமில்லை. காலம் அது பாட்டுக் நகர்ந்தது. சந்திரன் அதே வீட்டில்தான் இருக்கிறான். ஆனால் என்ன செய்கிறான்? என்று இதுவரைக்கும் சரண்யா கேட்டுக் கொண்டதில்லை. சரண்யா இப்படி சந்திரனின் வாழ்வில் குறுக்கிடாமல் இருக்க சந்திரன் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்து வந்தான்.

உமாவைத் தவிர தோழியர் நால்வரும் காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர். உமா இன்னும் உடல் நலம் சரியில்லை என்பதால் வரவில்லை. அதனால் பஞ்சவர் கூட்டணி நால்வராக காஃபி ஷாப்பில் இருந்தனர்.

“அக்கா.. ஈவினிங்க் மார்க்கெட் போகனும்..” காயத்ரியிடம் கூறினாள் சரண்யா.

“போகலாம்.. எனக்கும் சில திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு.” காயத்ரியும் ஒப்புக் கொண்டாள்.

ராகினிதான் சலித்துக் கொண்டாள்.

“இந்த உமா மாப்பிள்ளை கிடைக்கனும் பயங்கர வேண்டுதல் போல.. காய்ச்சல் இன்னும் சரியாகலை. இவ எப்ப வந்து நமக்கு பஞ்சாமிர்தம் தந்து…” என்று சலித்துக் கொண்டாள் ராகினி.

அவளைக் கண்களைச் சுருக்கி, “உன்னைக்கா.. பிரண்டு முடியாமல் இருக்காங்க. அது கண்ணுக்குத் தெரியல்லை. பஞ்சாமிர்தம் மட்டும்தான் முக்கியம்.” திவ்யா கேட்டாள்.

அவளை ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அலட்சியமாகப் பார்த்தாள் ராகினி.

“இதென்ன இப்படி கேட்டுட்ட பஞ்சாமிர்தம் தான் முக்கியம். அதிலும் முருகன் கோயில் பஞ்சார்மிதம். திணை மாவு. இதுக்கெல்லாம் எதுவுமே ஈடாகாது. அதனால் அதுதான் முக்கியம்.”

அவள் கூறிய தொனியில் நால்வருக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“நீ அப்படியே இருந்துக்க.. அக்கா…”

“பஞ்சார்மிதத்தில் பங்கு கேளு பக்கி அப்ப வச்சுக்கிறேன்.” சரண்யா இவற்றை எல்லாம் பார்த்தப்படி வந்தாள்.

அவளைக் கவனித்தப்படி அதே பேருந்தில் பின்னால் அமர்ந்திருந்தான். சரண்யாவுக்கு அவன் பேருந்தில் ஏறியது தெரியாது. காலையில் கிளம்பும் போது அவன் வீட்டில் இல்லை என்று மட்டும் தெரியும். பேருந்து நிலையத்தில் இருந்து அவளைத் தொடர்ந்து வந்தவன் காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தான்.

தோழிகள் நால்வரும் கிளம்பினர். காஃபி ஷாப்பிலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பிரிவர். சரண்யா செல்லும் திசையில் அவளைத் தொடர்ந்தான் ஜெயச்சந்திரன்.

பல கடைகள் பத்து மணிக்குத்தான் திறக்கப்படும் என்பதால் அந்தத் தெருவில் அதிக நடமாட்டம் இல்லை. அமைதியாக இருந்தது. சட்டென சரண்யாவைத் தொடர்ந்து வந்த சந்திரன் தெருவில் கிடந்த ஏதோ ஒரு பொருளைப் பார்த்துவிட்டு சரண்யாவைப் பார்க்க அவள் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தாள்.

வரம்..தரும்..