சுயம்-வரம் 17
திருமணமாகாத (இங்கு திருமணம் ஆகாத என்பது திருமணம் இன்றி குழந்தை இருக்கும் பெண்களையும் குறிக்கும்.) மற்றும் குழந்தையற்ற பெண்கள், திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்களை விட மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. இவர்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு காதல், குடும்பம் தாண்டியும் சமூக உறவுகள் அதிகமாக இருக்கின்றன.
ஜெயச்சந்திரன் தன் வீட்டிற்கு நுழையும் காயத்ரியையும், உமாவையும் பார்த்த பிறகு குளத்துப் பக்கம் தன் வண்டியை விட்டான். ஏரிக்கரையில் பச்சை நிறத்தில் காணப்பட்ட நீரில் காற்று வீச்சு அதிகமாக இருந்ததால் நீரலைகள் உருவாகி கரையில் மோதுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுத் தொலைவில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதில் பல பறவைகள் தங்கள் வீட்டினை அமைத்துக் கொண்டிருந்ததால் அதன் ஒலிகள் எழுந்தன. இருளாக ஆரம்பிப்பதால் அந்த மரங்கள் கருமையுடன் தெரிய ஆரம்பித்தன.
ஆனால் இவை எதையும் சட்டை செய்யாமல் சந்தரனின் மனதில் சரண்யாவைப் பற்றி நினைவுகள்.
பௌணர்மி நாள் அன்று சரண்யாவின் வீட்டினர் கோயிலுக்குச் சென்றது ஜெயச்சந்திரனின் தந்தைக்குத் தெரியும். ஆனால் சரண்யாவின் அன்னையிடம் இருந்து ஒரு கொடுவாளை அவசரத்துக்கு அவர் வாங்கி இருந்தார். நாளை எங்கோ வெளியில் செல்வதாக இருக்கிறார் அது மட்டுமின்றி சந்தரனின் அம்மாவுக்கு நாளை கொடுவாள் தேவைப்படுவதாகக் கூறியிருந்தார்.
அதனால் இரவே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பிவிட்டார்.
சரண்யாவின் வீட்டில் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டி அந்த நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தான் ஜெயச்சந்திரன். சரண்யாவின் வீட்டிற்கு சற்று அருகில் ஜெயச்சந்திரனின் வீடும் இருக்கிறது. மிஞ்சிப் போனால் நூறு மீட்டர் தூரம் இருக்கும். அதனால் நடந்தே சென்று கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு நடந்து வந்தான் சந்திரன்.
வீட்டில் யாருமில்லை என்ற விஷயம் ஜெயச் சந்திரனுக்குத் தெரியாது. சரண்யா இருந்தாலும் அவனுக்கு ஏதும் பிரச்சினை இல்லை. அவன் பாட்டுக்குத் கத்தியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பி விடப் போகிறான்.
“சரண்யா…” என்றபடி உள்ளே நுழைந்தான்.
அப்போதுதான் ஹாலில் கத்தியால் தன் கையை வெட்ட முயன்று கொண்டிருக்கும் சரண்யா பட்டாள். தன் கையில் இருந்த கொடுவாளை சட்டென விட்டான் ஜெயச்சந்திரன். அது நங்கென்ற சத்தத்துடன் வீட்டின் நிலைப்படியில் உருண்டது.
“சரண்யா.. ஏய் என்னடி பன்னிட்டு இருக்க?” என்று கத்திக் கொண்டே ஓடி அவள் கையில் இருந்த கத்தியைத் தட்டிவிட்டான். சரண்யாவின் கையில் லேசான இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது.
சிங்க் அருகே போடப்பட்டிருந்த துண்டு ஒன்றை எடுத்தவன் உடனே அவள் கையை அழுத்திப் பிடித்தான். மணிக்கட்டில் காயம் பட்டால் அங்கு உள்ள முக்கிய இரத்தக் குழாய் காரணமாக இரத்தம் நிற்பது கடினம். நல்ல வேளை அவ்வளவு ஆழமாக அவள் அறுத்துக் கொள்ளவில்லை.
ஒருவேளை தான் வரும் வேளைக்கு முன் அவள் கையை அறுத்துக் கொண்டிருந்தால் இன்னேரம் இரத்த வெள்ளத்தில் உயிர் போகத் துடித்துக் கொண்டிருப்பாள். அந்த எண்ணமே சந்திரனை பயமுறுத்தியது.
“உனக்கு எதாவது அறிவிருக்கா பச்சைக்கிளி? இப்ப என்ன நடந்துச்சுனு நீ இப்படி செய்யற?” சந்திரன் அவளைக் கோபமாகத் திட்டினான்.
“விடு சந்திரா.. நான் வாழறதுக்கு செத்தே போயிடலாம்.” சரண்யா அழவில்லை. அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. ஆனால் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.
ஒரு துளிக் கண்ணீர் இன்றி அவள் பேசிய வார்த்தைகள் சந்திரனின் மனதில் அதிர்வை ஏற்படுத்தின.
“இப்ப சூசைட் பன்னிக்கற அளவுக்கு என்ன நடந்துருச்சு?”
“என்ன நடக்கலை தெரியுமா? எனக்கு கல்யாணம் நடக்கலை. அதான் பிரச்சினை. எனக்கு கல்யாணம் ஆகறதுக்குள்ள எத்தனை தடவை என்னை உயிரோட சாகடிப்பாங்களோ? அதான் அதுக்கு முன்னாடி நானே போயிடலாம்னு முடிவு பன்னிட்டேன்.”
“நீ சூசைட் பன்னிட்டா? எல்லாம் முடிஞ்சுதா? நீ எந்தக் காரணத்துக்காக சூசைட் செஞ்சாலும் லவ்தான் காரணமா பேசுவாங்க. முதல்ல நீ எதுக்காக சூசைட் செஞ்சுக்கனும்? என்ன காரணம்னு தெரியலை. நீ ரொம்ப நாள் டல்லா இருக்கனு தெரியும். லவ் பெயிலியரால் சூசைட் பன்னிக்க டிரை செய்யலலை?”
“முதலில் பொண்ணுங்க சூசைட் பன்னா லவ் பெயிலியர்னு எவண்டா சொல்றான்? பொண்ணுங்களுக்கு வேற பிரச்சினையே இருக்காதா? ஆனால் பொண்ணுங்களை சாகடிக்கறதே இந்தக் கல்யாணமும், காதலும்தாண்டா.. ஆனால் எனக்கு பிரச்சினை எனக்கு ஒரு லைஃப் பார்ட்னரை சூஸ் பன்ன கூட சுதந்திரம் கிடையாது. நானும் தெரியாமதான் கேட்கற.. கல்யாணம் பன்னிகிட்டு வாழ்ந்தால் மட்டும் தான் வாழ்க்கையா?” இதைக் கூறும் போது குரல் லேசாக நடுங்கியது.
அவள் குரல் நடுக்கத்திலிருந்து அவளின் மனம் நிலையின்றி தடுமாறுவது புரிந்தது. பதட்டதுடன் இருப்பது புரிந்தது.
மீண்டும் கத்தியை அவள் எடுக்கச் செல்ல அதை அவளுக்கு முன் தூக்கி எறிந்தான் ஜெயச்சந்திரன்.
“சந்திரா எனக்கு வாழ்க்கையே புடிக்கலை சந்திரா.. நிம்மதியாவது சாக விடு. இந்தக் கல்யாணம் இப்படி எதுவும் புடிக்கலை. பிளீஸ்.. வெளிய போ..”
சரண்யா கெஞ்சினாள்.
சில நிமிடங்களுக்குப் முன்,
சரண்யா வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி.. இல்லை அந்தப் பெண்ணை மணி என்று கூறினால் அது சரி வராது. ஊரில் புறணி பேசி பலர் வாழ்க்கையைக் கெடுத்த பெருமை அவருக்கு உண்டு. கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அவர் சந்திரன் சரண்யா வீட்டில் நுழைவதைப் பார்த்தார்.
‘சந்திரனா?… இந்தப் பையன் எதுக்கு இன்னேரத்துக்கு இங்க வரான்? சரண்யா மட்டும் தனியாக இருப்பாளே.. இரண்டு பேரும் சின்ன வயசிலேயே ஒன்னா சுத்தும்.. இப்ப பஸ்ஸில் வரும் போது ஒன்னா வராங்க… என்ன விஷயமா இருக்கும்?’ அவர் மூளை குறுக்காக சிந்திக்க ஆரம்பித்தது.
உடனே கேட் திறந்த வைத்திருந்த சரண்யா வீட்டின் அருகே சென்றார். அவர் சரண்யாவின் வீட்டுக்குச் செல்ல மாட்டார். ஏனென்றால் ஒரு முறை புறணி பேசி சரண்யாவிடம் அன்னை கொடுத்த பதிலில் அவர்கள் வீட்டுக்குப் பக்கமே வருவதில்லை. ஆனால் ஏன் இன்று அவரை மீறி அவருடைய ஆர்வம் வழி நடத்திவிட்டது.
வெளியில் நின்றவருக்கு அரை குறையாக , ‘கல்யாணம் புடிக்கலை.. வாழ புடிக்கலை..’ இப்படி காதில் விழுந்தது. அதனால் சந்திரனுக்கும் சரண்யாவுக்கும் காதல் என்று முடிவு செய்தவர் உடனே தன் வீட்டுக்கு வேகமாக ஓடியவர்.
ஊரில் அவருடைய பேச்சைக் கேட்டும் கூட்டத்தில் ஒருவரை அழைத்தார். ஊரே கோயிலில் இருக்கும் போது நேராக அந்த ஆளும் அங்குதான் இருந்தார்.
“ஹலோ.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்த சரண்யாவும் சந்திரனும் லவ் பன்றாங்க. இப்ப கூட சந்திரன் இல்லாமல் வாழ மாட்டேனு சரண்யா சொல்லிட்டு இருக்கு. இரண்டு பேரும் அவங்க வீட்டில் தனியா இருக்காங்க. அதனால்தான் அந்தப் புள்ளை அத்தனை பசங்களை வேண்டாம்னு சொல்லுச்சோ.. இப்ப புரியுதா? காரணம்..” என்று கொளுத்திப் போட்டவுடன் கோயிலில் போடும் பொட்லியை(பட்டாசு) விட இந்த விஷயமே நன்றாக வெடித்தது.
இந்த விஷயம் கேள்வி பட்டவுடன் உடனே வீட்டுக்கு சரண்யாவின் அன்னை தந்தை இருவரும் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர்.
ஜெயச்சந்திரன் டைனிங்க் டேபிளில் அமர்ந்து விட்டான். சரண்யாவின் அன்னை தந்தைக்கு அழைக்க முயல.. அதற்கு சரண்யா விடவில்லை.
“சொல்லு.. உனக்கு என்ன தான் பிரச்சினை?”
“என்ன பிரச்சினை இல்லை சொல்லு? டெய்லியும் ஏண்டா வாழறனும் பீல் பன்றேன். முன்ன எல்லாம் எப்படி சிரிப்பேன் தெரியுமா? என் முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். இப்ப எல்லாம் என்னால் யாரைப் பார்த்தும் சிரிக்கக் கூட முடியலை. இரண்டு வருஷம் முன்னாடி என்னோட வாழ்க்கை இப்படி இருக்கும்னு நான் நினைச்சுக் கூட பார்த்ததில்லை. எனக்குப் பிடிச்ச எல்லா உறவுகளும் கலாச்சாரம், சமூக வழக்கம் இப்படிங்கறத காரணம் காட்டி டாக்ஸிக்கா மாறிட்டு வருது. நான் அப்படி ஒன்னும் தப்பு செய்யலையே.. என்னோட பெத்தவங்க பார்த்து வைக்கற ஆள கல்யாணம் பன்னிக்கற முடிவு எடுத்தேன். அது படியே இருந்தேன். ஆனால் இதுக்கெல்லாம் எனக்கு கிடைச்ச பேரே வேற..” இடையில் அவள் அன்னையும், அத்தையும் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ( சென்சார் கருதி நான் பலவற்றைக் கட் செய்து விட்டேன்.)
“ஆடு மாடை எப்படி பால் கறக்க வளர்க்கறாங்களோ அதே மாதிரி பொண்ணுங்களை கல்யாணம் பன்ன, சமையல் செய்ய இப்படி வேலையாளா வளர்க்கறது. ஒரு டீசண்டா மனசுக்குப் புடிச்ச ஆளாப் பார்த்துக் கல்யாணம் பன்னிக்கனும் நினைக்கறது கூட தப்பு. ஏனால் நீ பொண்ணு.. அதெப்படி நீ யோசிக்கலாம்? உனக்கெப்படி அறிவு இருக்கலாம்? நாங்க இதை அனுபவிச்சோம்.. அதனால் நீயும் அதத்தான் அனுபவிக்கனும். இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை ஒரு வட்டம்.. ஆனால் பொண்ணுங்களுக்கு அது சுருக்குக் கயிறு மாதிரி. அந்த வட்டத்திற்குள் இருந்தாலும் ஜட்ஜ் பன்னுவாங்க.. வட்டத்தை விட்டு வெளியே வர டிரை பன்னால் சாகனும். வட்டத்திற்குள்ளேயே பயத்தோட இருக்கனும். எதெல்லாம் டாக்ஸிக்கோ அதெல்லாம் நல்லதுனு ஒரு படிப்பினை வேற.. ஐம்பது வருஷத்திற்கு முன்னாடி தந்திதான் எல்லாம். இப்ப தந்தினு ஒன்னு அழிஞ்சு போச்சு.. ஆனால் இப்ப கலாச்சாரம்ங்கற பேரில் இன்னும் சில தேவை இல்லாத ஆணி அப்படியே இருக்கு… இந்த மாதிரி ஒரு சொசைட்டியில் வாழறதுக்கு சாகறது மேல். உயிரோட இருக்கறப்ப மனச கொன்னுட்டு…செத்ததுக்குப் அப்புறம் என்ன பேசனுனா என்ன?”
மூச்சு விடாமல் பேசி முடித்தாள் சரண்யா. அவள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்.
அவள் முன் டைனிங்க் டேபிளில் உள்ள வாட்டர் பாட்டிலை நகர்த்தி வைத்தான். அதைத் திறந்து குடித்து முடித்தாள் சரண்யா.
குடித்துக் கொண்டிருக்கும் போது தட தடவென உள்ளே நுழைந்தார் அவளுடைய அம்மா, அப்பா இருவரும். நின்று கொண்டிருந்த சரண்யா திரும்பிப் பார்க்க அதற்கு முன்பு பாய்ந்து வந்து அவள் கன்னத்தில் அடித்தார் அவளுடைய தந்தை. அடி இறங்கியதில் சட்டென கீழே விழுந்தாள் சரண்யா.
சந்திரனே இதை எதிர்பார்க்கவில்லை.. சட்டென எழுந்து அடுத்து அவர் அடிக்கப் போகும் முன் அவர் கையைப் பிடித்து விட்டார்.
“இப்ப எதுக்கு சரண்யாவை அடிக்கிறீங்க?” என்று கோபத்துடன் கர்ஜித்தான் என்று கூறலாம்.
“உன்னையும் தான் அடிக்கனும். ஆனால் உன்னோட அப்பா முகத்துக்காகப் பார்க்கறேன். வீட்டை விட்டு வெளிய போ..”
“நான் போறேன் மாமா.. முதலில் சரண்யாவை அடிச்சதுக்குக் காரணம் என்ன?”
இதுவரை கண்ணீருடன் நின்று கொண்டிருந்த சரண்யாவின் அம்மா.. அழுகையின் ஊடே பேசினார்.
“என்ன காரணமா? இதுவரைக்கும் அவ கல்யாணத்துக்கு ஒத்துக்காதக்கு நீதான் காரணம்னு நம்ம ஊரு மட்டும் இல்லை.. பக்கத்து பத்து ஊரும் பேசுது..”
அவர் கூறிய பதில் சந்திரனுக்கு முதலில் புரியவில்லை.
“என்ன அத்தை சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை.. தெளிவாகச் சொல்லுங்க.”
“இன்னும் என்ன சொல்லனும்.. அதான் நீங்க இரண்டு பேரும் காதலிக்கற கதையை ஊரே பேசுது..”
இந்த வார்த்தையில் சந்திரனே இரண்டடி பின்னே நகர்ந்தான். சரண்யா அதை விட அனலிட்ட புழுவாய்த் துடித்தாள்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க? நான் மட்டும் கரக்டான நேரத்துக்கு வரலைனா.. உங்க பொண்ணு இன்னேரம் உயிரோட இருந்திருக்க மாட்டாள்.. அதை விட்டு காதல் அப்படினு பேசிட்டு இருக்கீங்க?..”
“இனி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை ஜெயா..” என்று ஆதங்கத்துடன் உள்ளே நுழைந்தார் சந்திரனின் தந்தை. வீட்டிற்கு வருமுன் சரண்யாவின் தந்தை அவருக்க்கும் அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டு வந்திருந்தார்.
“அப்பா.. நீங்களுமா?”
“இல்லை சந்திரா… அது உண்மையோ பொய்யோ? இனி அதை யாரும் நம்ப மாட்டாங்க.. அதே மாதிரி சும்மாவும் இருக்கமாட்டாங்க. நீ கிளம்பி கோயிலுக்குப் போ. அப்பா பின்னாடியே வர்ரேன்.”
நிதானமான குரலில் தந்தை கூறவும் ஒரு முறை அங்கிருப்பவர்களைத் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தான் ஜெயச்சந்திரன். பின்பு அமைதியாக வெளியேறினான்.
சரண்யா அவளாக எழுந்து அமைதியாக தன் பெற்றவர்களை வெறித்தாள். ஏதோ ஒன்று நடக்கப் போவதாக அவள் உள் மனம் அழுத்தமாகக் கூறியது. தன்னை அவர்கள் நம்பவில்லை என்ற எண்ணம் அவளுக்கு விரக்தியை மட்டும் கொடுத்தது.
அமைதியாக அவர்களை வெறித்தாள்.
“தங்கச்சி… என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுனு எனக்குத் தெரியலை.. ஆனால் நான் சந்திரனை நம்புறேன். நீங்களும் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் புள்ளையைக் கை நீட்டி இருக்கக் கூடாது. அது உங்க வீட்டு மகாலட்சுமி. அது கண்ணீர் விட்டால் நல்லா இருக்காது. சரண்யாவை என்னோட வீட்டு மருமகளா அனுப்பி வைமா.. அந்த ஈஸ்வரன் சன்னதியில் இப்பவே என்னோட மகன் தாலி கட்டுவான். நிறைஞ்ச பௌணர்மி நாளில் நல்லது நடக்கட்டும்.”
அமைதியான குரலில் சரண்யாவின் வாழ்வில் அடுத்த பூகம்பத்தை போட்டு உடைத்தார் அவர். அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள் சரண்யா.
“சரண்யா.. இப்படி நடக்கக் கூடாதுதான். ஆனால் உன்னோட விஷயத்தை அழிக்கவே முடியாத அளவுக்குப் பேசிட்டு இருக்காங்க. அதை நாம மாத்தவே முடியாது.”
அவர் பெண் கேட்டதும் சில நிமிடங்கள் யோசித்த சரண்யாவின் அன்னை, “அண்ணே நீங்க போய் எல்லாத்தையும் ரெடி பன்னுங்க. எங்க சொந்த பந்தம் பத்தி உங்களுக்கே நல்லா தெரியும். எப்படியும் இவ வாழ்க்கை இதோட முடிஞ்சுது. இவளுக்கும் வேற வழி இல்லை. நீங்க என்னங்க சொல்றீங்க?” என்று தானும் முடிவை எடுத்து விட்டு சரண்யாவின் தந்தையைப் பார்த்தார்.
“இதுக்கு மேல என்ன சொல்றது? இதுதான் சரினு எனக்கும் தோணுது.”
“அம்மா…. என்னம்மா சொல்றீங்க? இதெல்லாம் தப்புமா?” என்று அவள் கெஞ்ச ஆரம்பிக்க அதற்கு முன்பு தடை இட்டார் அவள் அன்னை.
“இங்க பாரு. ஒழுங்கா சொல்ற பேச்சைக் கேட்டு சந்திரனைக் கல்யாணம் பன்னிக்கோ.. இல்லைனா நாளைக்குக் காலையில் எங்க இரண்டு பேர் புணம் தான் இந்த வீட்டில் இருக்கும்..”
பிளாக்மெயிலின் உச்சக்கட்டத்தில் சரண்யாவை அழைத்துக் கொண்டு போயினர் கோயிலுக்கு. சந்திரன் முதலில் மறுக்க ஆனால் அவன் தந்தை ஏதோ கூற அவனும் வேறு வழியின்றி ஈஸ்வரன் கோயில் முன்னிலையில் சரண்யாவிற்கு தாலி கட்டினான். பொம்மை போல் கல்யாணத்தில் அமைதியாக நின்றாள் சரண்யா.
அவள் கன்னத்தில் இருந்த கைவிரலின் தடங்கள் சந்தனம் பூசி மறைக்கப்பட்டது. நடப்பது அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்தப்படி நின்றிருந்தாள் திவ்யா.
வரம்..தரும்….