சுயம்-வரம் 16

அத்தியாயம்-16

போர் நிகழ்த்தி மணம்:

பண்டைத் தமிழர் சமுதாயத்தில் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை ஏற்படும் போது போரிட்டு வெற்றி பெற்று பெண்ணை மணந்து கொள்ளல் என்ற வழக்கம் இருந்தது.

துணைங்கையாடி மணத்தல்:

விழாக்காலத்தில் மகளிர் துணைங்கையாடியும், ஆண்கள் மன்னர் போரும் நிகழ்த்தி மணம் முடிப்பர்.

பரிசம் கொடுத்து மணத்தல்:

மணமகன் பரிசம் கொடுத்து பெண்ணின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல். இப்பரிசம் என்பது அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப் பெறும், மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினை கொடுத்து ஒப்புதல் பெற்று பெண்ணை மணந்த சான்றுகள் உண்டு.

   -விக்கி பீடியா.

சங்க கால பாடல்களில் தலைவன் தலைவியை மணமுடிக்க பொருளீட்டச் செல்வதாக பல பாடல்கள் இருக்கும். இந்த பரிசம் தற்போது பெண்ணைத் திருமணம் செய்ய பெண்கள் வீட்டினர் தரும் வரதட்சிணையாக மாறி பலர் உயிரை இன்றும் பறித்துக் கொள்கிறது.

ஒரு வாரம் கழிந்திருந்தது. அது ஒரு புதன்கிழமை மாலை. அந்தி மாலைச் சூரியன் வானில் வர்ண ஜாலங்களை ஏற்படுத்திக் கொண்டு மறைந்து கொண்டிருந்தான். சந்திரன் வீட்டு மொட்டை மாடியில் சோக ஒவியமாய் மலர்ந்திருந்தாள் சரண்யா.

அவள் கழுத்தில் அந்தி மஞ்சள் ஒளியில் பளபளத்தபடி மஞ்சள் கயிற்றுடன் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம் அவளுக்குச் சந்திரனுடன் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வாரமாகி இருந்தது.

இந்தக் கதைகளில் படங்களில் வருவது போல் திடீர் திருமணம் நடந்து விட்டிருந்தது. அவள் வாழ்க்கையில் எதிர்பாராத சந்திரனின் உதயம் அவள் மனதின் மகிழ்ச்சியை அஸ்தமனம் செய்து கொண்டிருக்கிறது. தனக்கு திருமணம் நடந்து விட்டதை அவள் நம்பவே மூன்று நாட்கள் பிடித்தது.

இரண்டு நாட்களாக அவள் மனம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. வீட்டில் அந்த நேரத்தில் யாருமில்லை. சந்திரனும் வெளியே சென்றிருந்தான். சந்திரனின் அப்பாவும் ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார்.

அதனால் தனிமையில் அமர்ந்திருந்தாள் சரண்யா. அவள் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. இப்படி ஒன்று தனக்கு நடக்கும் என்று. அதுவும் சந்திரனுடன் தன் திருமணம் நடக்கும் என்பதை அவள் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.

வெளியில் வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்டது. மேலிருந்து எட்டிப் பார்த்தவளுக்கு காயத்ரியும், உமாவும் வண்டியில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது. ராகினி ஏற்கனவே வந்து சென்று விட்டாள். ஐந்து நாட்கள் வாட்ஸப் பக்கம் செல்லவில்லை. அவளுடைய அலுவலகத்திற்கு சரண்யாவின் தந்தை அழைத்துக் கூறிவிட்டார்.

ஒரு வாரமாக எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாள். அவர்களைப் பார்த்ததும் உடனே படிகளில் வேகமாக கீழே இறங்கினாள். சரண்யாவின் பட்டியலா பேன்ட் தடுக்கிவிட படியில் கால் விரல்கள் அடித்தது. அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. உடனே ஓடிக் கதவைத் திறந்தாள்.

காயத்ரியும், உமாவும் வாசல் படி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“காலிங்க் பெல் அடிப்போம் உமா. சந்திரன் வீட்டில் சரண் தனியாக இருக்கறதான் சொன்னான். சரியாக சாப்பிடக் கூடறது கூட இல்லைனும் சொன்னான். நாம பேசுவோம்.” என்று உமாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

காயத்ரியைப் பார்த்ததும், “அக்கா..” என்று அழைத்தப்படி கண்களில் நீர் மினு மினுக்க ஓடி வந்தாள் சரண்யா.

“சரண்…” காயத்ரி ஒரு பக்கத் தோளில் கைப்போட உமாவும் மறுபக்க தோளில் கைபோட்டுக் கொண்டாள்.

சரண்யா திருமணம் நடந்த அன்று காயத்ரிக்கு காய்ச்சல். ஒரு வாரமாக அவளைப் படுத்தி எடுத்துவிட இன்றுதான் அவளைப் பார்க்க காயத்ரியால் வர முடிந்தது. உமா ஏற்கனவே வந்திருந்தாலும் அவளைப் பார்க்க வேண்டி உடன் வந்திருந்தாள்.

தோழிகள் ஐவருக்கும் அதிர்ச்சிதான். நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த திவ்யா மயக்கம் போடாத குறைதான். அவள் மட்டுமே சரண்யாவுக்கு ஜெயச்சந்திரனுக்கும் நடந்த திருமணத்தை நேரில் பார்த்தவள். தோழிகள் திருமணத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று லிஸ்ட் போட்டு வைத்திருந்தவர்களுக்கு இப்படி திடு திடுப்பென்று ஒருவளின் திருமணம் நடப்பது அதிர்ச்சிதான்.

காயத்ரி சரண்யாவின் முகத்தை ஆராய்ந்தாள். முகம் ஒளியற்று கிடந்தது. உறக்கமற்ற இரவுகள் இலவச இணைப்பாக கண்களில் கரு வளையங்களை அளித்துச் சென்றிருந்தது. ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் சரண்யா இன்னும் சில கிலோக்கள் குறைந்தது போல் இருந்தாள்.

“சரண் நாங்கதான் வந்துட்டோம். இந்தா உனக்குப் பிடிக்கும்னு ரசமலாய், பரோட்டோ எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம்.”  வெள்ளை பாலிதீன் கவருக்குள் டப்பாக்களுக்குள் குடி கொண்டிருந்த உணவுப் பொருட்களை நீட்டினாள்.

“தண்ணீ கொடு சரண்.” என உமா கேட்கவும் சரண்யா தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு உடனே, “உள்ள வாங்க..” என்று தோழிகள் இருவரையும் தான் வாழ வந்திருக்கும் வீட்டிற்குள் அழைத்தாள்.

அவளாக விருப்பட்டு வந்த வீடில்லை. ஆனால் இனி அவள் வீடு இதுதான். இந்த உண்மை அந்த நொடி சரண்யாவின் மனதைச் சுட கண்களில் நிரம்பியிருந்த சூடான கண்ணீர் கன்னத்தைச் சுட அதைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அவர்களைப் பின் தொடர்ந்தனர் தோழிகள் இருவரும்.

வீட்டைப் பார்த்த காயத்ரிக்கு, ‘இந்த வீடு ரொம்ப அழகா இருக்குனு.’ ஒரு தடவை தோன்றத்தான் செய்தது. உள் அலங்காரம் இழைத்து இழைத்து செய்யப்பட்டிருந்தது. மர வேலைப்பாடுகள் மிகுந்து மார்டன் லுக் இல்லாமல் ஒரு செட்டி நாட்டு வீட்டைப் போன்ற தோற்றம் இருந்தது.

அங்குள்ள ஒவ்வொரு பொருட்களும் காயத்ரியின் கண்களில் இருந்து தவறவில்லை. மிகுந்த கலை நயம் மனதில் இருந்தால் மட்டுமே இப்படி பார்த்து பார்த்து செலக்ட் செய்ய முடியும். வெளிப்புறம் பார்க்க சாதாரண மாடி வீடு போன்று இருந்தாலும் உட்புறம் கொள்ளை கொண்டது.

ஆனால் சரண்யாவைப் பொறுத்தவரை அவள் எதிர்பாரமல் மாட்டிக் கொண்ட ஒரு சிறை. ஆம் தற்போதைக்கு அவள் மனநிலை அதுதான். சுற்றிலும் எத்தனை அழகிலிருந்தாலும் மனதில் நிம்மதி இல்லை என்றால் எதுவும் பிடிக்காது. இப்போது அவளுடைய நண்பன் சந்திரனையும் வெறுத்துக் கொண்டிருக்கிறாள்.

வரம்..தரும்…