சுயம்-வரம் 15

அத்தியாயம்-15

ஏறு தழுவுதல்:

 ஜல்லிக் கட்டு. முல்லை நிலத்தில்.. அதாவது ஆடு மாடுகளை வளர்க்கும் ஆயர்களின் பெண்களை மண முடிக்க மாட்டினை அடக்க வேண்டும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் எனில் ஆடவன் வீரத்தையும், திறனையும் அறிந்த பின்னரே பெற்றோர் மணமுடித்து தருவர்.

மடலேறுதல்:

ஒரு ஆண் தான் விரும்பிய பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் பனை மடலைக் கொண்டு குதிரை அதற்கு அலங்காரம் செய்து தானும் தலையில் எருக்கம் பூவை சூடி, கழுத்தில் எலும்பு மாலையுடன் ஊருக்குள் வலம் வந்து தன்னை இந்த நிலையில் தள்ளிய  காதலிக்கும் பெண்ணை இகழ்கின்றான். அதனால் ஊருக்குள் பலரும் அந்தப் பெண்ணை இகழ்கின்றனர். இறுதியில் அந்தப் பெண்ணுக்கு இந்த ஆணுடன் திருமணம் நடக்கும். இந்த வகை பெருந்திணையில் வரும். ஆனால் இது மிக அரிது. எனக்குத் தனிப்பட்ட முறையில் இதன் மீது உடன்பாடு இல்லை. அதே போல் பெண்கள் மடலேறுதல் இல்லை.

பௌணர்மி நாள். அவளுடைய அம்மா, அப்பா இருவரும் கோயிலுக்குச் சென்று விட்டனர். சரண்யா வேலையில் இருந்து வந்த பிறகு மெதுவாகக் கிளம்பிச் செல்வாள். சரண்யா வழக்கம் போல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அவள் மனம் வெந்து கொண்டிருந்தது. அவளுடைய அம்மா காலையில் பேசிய வார்த்தைகள் அவள் தீக்கங்குகளாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தன. வெளியில் சிரித்தாலும், வேலை செய்தாலும் மனதுக்குள் உண்மையான மகிழ்ச்சி என்பது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதிலும் காலையில் அவளுடைய அன்னையும், பாட்டியும் பேசிய வார்த்தைகள் அப்படி.

இப்படி அந்த மாப்பிள்ளை அழைத்துக் கேட்கும் போது சரண்யா அதை எல்லாம் விட முடியாது என்பதை மென்மையாக் கூறி மறுத்திருந்தாள்.

“இதை எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு விட்டறதனா எனக்குச் சரி.” என்றான்.

“இதை எல்லாம் எப்பவும் விட முடியாது.” என்று சரண்யா மறுத்தாள்.

‘இவன் என்ன இப்படி பேசிட்டு இருக்கான். எல்லாம் ஐநூறு வருஷம் முன்னாடி பொறந்தவன். இப்பவே இப்படினா.. இன்னும் எப்படி எல்லாம் பிளாக்மெயில் பன்னுவானோ..’ என்று தோன்றியது.

அவளுடைய அன்னையும் நடப்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாரே…

“அம்மா.. இதை நிறுத்திருங்க.. இப்பவே இத்தனை பிளாக்மெயில் செய்யறான். ச்சே.. நான் கூட இவன் இப்படி இருப்பானு நினைக்கல.”

இவள் முடிவாக மறுத்து விட அது நின்று போனது. ஆனால் மறு நாள் காலையில் அவளுடைய அன்னையும் அத்தையும் கேட்டததை தான் அவளால் தாள இயலவில்லை.

காலையில் சரண்யா அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் அவள் அத்தையின் வருகை அனைத்தையும் மாற்றிவிட்டது. ஏனென்றால் இது அத்தை வழி மூலம் வந்த சம்பந்தம்.

அவர் வந்ததும் ஆரம்பித்து விட்டார்.

“ஏன் சரண்யா அந்தப் பையன் தான் பாதுகாப்பு இல்லைனு சொல்லுதே அதெல்லாம் நீ விட்ற வேண்டியதுதானே…”

“ஏனுங்க அத்தை.. நமக்கு எங்கதான் பாதுகாப்பு இருக்கு. நான் கூட ஏதோ பரவால்லைனு சரினு சொன்னா இப்பவே இத்தனை பிளாக் மெயில்.”

“பசங்கனா அப்படித்தான் இருப்பாங்க. நாமதான் அனுசரிச்சுப் போகனும்.”

“அத்தை இந்த மாதிரி ஆளுங்க கூட எல்லாம் என்னால் பேசக் கூட முடியாது. இதில் அனுசரிச்சு வாழனுமாம். அவனுக்கு சமைக்கவும் துவைக்கவும் வேற பொண்ணப் பார்த்துக்க சொல்லுங்க.”

இதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சரண்யாவின் அம்மா இடையிட்டார்.

“என்னடி அத்தை பேசிட்டே இருக்காங்க. நீ மரியாதை இல்லாமல் பதில் பேசிட்டே இருக்க? இவனை பிடிக்கலைனா வேற எவனைப் பிடிச்சுருக்கு?” என்றார். இந்தக் கேள்வி சரண்யாவைச் சுருக்கென்று தாக்கியது.

இத்தனை வருடங்கள் அவள் எடுத்து வைத்திருந்த முடிவு அது. என்ன நடந்தாலும் அன்னை தந்தை யாரைப் பார்த்து வைக்கிறார்களோ அவனைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவினை நினைத்துப் பார்த்தாள்.

“ஒருத்தனை வேண்டானு சொன்னால் இன்னொருத்தனைப் பிடிச்சுருக்குனு இல்லை.”

“இல்லை நீ யாரையோ மனசில் வச்சுட்டுத்தான் இப்படி பேசற? அவனை யாருனு சொல்லு? அவனையாவது கட்டி வச்சுத் தொலையறோம்.” என்றார் அத்தை. முன் பின் தெரியாதவர்கள் நம்மை இவ்வாறு கேள்வி கேட்டால் கண்ணீர் வராது. ஆனால் நம் குடும்பத்தினரிடமிருந்து இந்தக் கேள்வி வரும் போது பல நூறு ஊசிகளை இதயத்தில் வைத்துக் குத்தினால் வரும் உதிரமும், வலியும் உருவாகிவிடும். மனதில் உதிரம் வழிகிறது. பல நேரங்களில் சரண்யா வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் சில நேரங்களில் கண்ணீர் வெளிப்பட்டு விடுகிறது.

“எனக்கு அவனைப் பிடிக்கலை. அதுக்கு வேறு ஒருத்தனைப் பிடிச்சுருக்குனு அர்த்தம் இல்லை.”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அலுவலகம் கிளம்பி வந்தவள் தான். ஆனால் அவர்கள் கேட்ட வார்த்தைகளும் அவள் கூடவே தொடர்ந்தன. வீட்டுக்கும் வந்து விட்டாள். ஆனால் அவை காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வீட்டின் வாசலில் இருந்த விளக்கு அவள் மன உளைச்சலை அறிந்ததோ என்னவோ மின்னி அனைந்து மீண்டும் மின்னியது.

***

காயத்ரி வீடு. இன்று வேலையில் இருந்து விரைவில் வீடு திரும்பி இருந்தாள். அதனால் பால் கறந்து பால் வாங்கும் கூட்டுறவு சங்கத்தில் ஊற்றிவிட்டு வந்திருந்தாள். இதெல்லாம் அவளுக்குப் பழக்கமான வேலைகள். கைகள் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அவள் மனம் சரண்யா கூறியவற்றை அசை போட்டுக் கொண்டிருந்தது.

சரண்யாவின் அம்மா கூறுவது போல் அவளுடைய அம்மாவும் பேசுவது வழக்கம் என்றாலும் இந்த அளவு பேசமாட்டார்.

‘இவங்களே பிடிச்சா மட்டும் கல்யாணம் செஞ்சுக்கோனு சொல்றது. ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கலைனு சொன்னா இவனைப் பிடிக்கலைனா வேற யாரைப் பிடிச்சுருக்குனு கேட்கறது? இவங்கதான் மாத்தி மாத்தி பேசறாங்களா? இல்லை நமக்குத்தான் இப்படித் தோணுதா? ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா போதும் உடனே கல்யாணத்தைப் பத்தி மட்டும் தான் பேச்சு. கல்யாணம் பன்னிட்டு வாழறதும் வாழ்க்கைதான். ஆனால் பொண்ணுங்களுக்கு மட்டும் கல்யாணம் மட்டும்தான் வாழ்க்கை. குடும்பம் எல்லாம் பிடிச்சு அமைஞ்சா வாழ்க்கை சொர்க்கம். பூக்குழியில் இறங்குற மாதிரி விரும்பி ஏத்துகிட்ட லைஃப் சூப்பரா இருக்கும். இவங்க பேசறாங்க.. அவங்க பேசறாங்க.. ஜாதகம், சாதி, பணம், அந்தஸ்து, குலம் கோத்திரம் மட்டும் பார்த்து பிடிக்காமல் தள்ளிவிட்டா அதை விட ஒருத்தருக்கு நாம வேற ஒரு அநியாயம் செய்ய முடியாது.’

பாலை ஊற்றிவிட்டு எக்ஸ் எல் வண்டியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த காயத்ரிக்கு ஆயிரம் யோசனைகள் மனதில் எழுந்து ஆட்டிப் படைத்தன.

சட்டென மேட்ரிமோனியில் தான் கேட்ட அனைத்திற்கு சரி என்று கூறிய பையன் நினைவுக்கு வந்தான். அந்தப் பையன் தான் கேட்ட அனைத்திற்கு சரி என்றான். சூமுகமாக சென்று கொண்டிருந்த பேச்சு வார்த்தை காரணமே இல்லாமல் நின்று போனது. எதனால் என்று இதுவரைக்கும் காயத்ரிக்குத் தெரியாது. அப்போதுதான் திருமணம் என்பது சூது விளையாட்டில் தாயக்கட்டை போன்றது. எப்போது யாருக்கு எந்த முகம் விழும் என்றே தெரியாது என்றும் புரிந்தது காயத்ரிக்கு. ஆனால் பெரும்பாலான வீட்டில் இதை உருட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் அல்ல.. அவர்களை மையமாக வைத்து விரல்களாக குடும்பத்தினரும், சமூகமும் உருட்டி விளையாடுகிறது.

***

திவ்யா ஒற்றைப் பெண் என்பதால் அவள் மீது அன்பு மிக அதிகம். அவள் தலையசைத்துக் கேட்டால் அவை அனைத்தும் நிச்சயம் நடக்கும். அவர்கள் வீட்டிலும் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு சொந்தத்தில் மாமன் பையன் இருக்கிறான். அவர்களும் அவளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் முன்பு இருந்தே சண்டை. அதனால் திவ்யாவின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

திவ்யா அவள் பெற்றோருடன் சரண்யாவின் ஊரில் இருக்கும் அதே கோயிலுக்குத் தான் கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்தக் கோயில் மிகவும் சிறப்பானது என்பதால் பக்கத்து ஊரில் இருந்தும் மக்கள் தரிசித்துச் செல்வது வழக்கம்.

திவ்யாவும், சரண்யா, ராகினி, காயத்ரி, உமா வழக்கமாக சிறப்பு வழிபாடு நடக்கும் நாட்களில் கோயிலுக்கு வர முயற்சிப்பர். அன்றைய நாள் காயத்ரி, உமா, ராகினி மூவரும் வரவில்லை. சரண்யாவும், திவ்யாவும் மட்டும் செல்கின்றனர்.

திவ்யா வேலையில் இருந்து வந்ததும் குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவளுக்கு அவளுடைய அம்மா தலையை பின்னி விட ஆரம்பித்தாள். திவ்யாவுக்கு அடர்ந்த கருமையான கூந்தல். அவளே பின்னிக் கொள்வாள் என்றாலும் அன்னை பின்னி விடுவது அவளுக்குப் பிடிக்கும்.

அவளுடைய அம்மா பின்ன முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“பாரு.. திவி முடி நிறைய கொட்டுது. டென்சன் அதிகம் ஆகாத.. “

“இல்லைங்கம்மா.. நான் டென்சன் ஆகறது இல்லை.”

“நீ டென்சன் ஆகறயோ இல்லையோ.. உன்னோட பிரண்ட்ஸ் வாழ்க்கையில் நடக்கறதப் பார்த்து வருத்தப்பட்டே முடி கொட்டிடும்.”

“ஏங்கம்மா.. அப்படி எல்லாம் இல்லை..”

“நாலும் அருமையான புள்ளைங்க. அதுங்களுக்கு எப்ப ஆண்டவன் வழி விடுவானோ.. குடும்பமும், குழந்தையுமா வாழ்ந்தால் நல்லா இருக்கும்.”

“ஏம்மா.. அப்ப நானு? என்னையை விட்டிங்க? நான் அருமையான புள்ளை இல்லையா?” திவ்யா சிணுங்கினாள்.

“நீ அருமையான புள்ளை இல்லை. கொஞ்சம் எருமையான புள்ளை.”

என்று திவ்யாவின் அம்மா அவளைக் கேலி செய்தார். அதைக் கேட்டுக் கொண்டே சிரித்தப்படியே உள்ளே நுழைந்தார்.

“எம்புள்ளையை நீ எதுக்கு எருமைனு சொல்ற. அது உனக்குத்தான் பொருத்தமா இருக்கும். நீதான் நான் சொல்றது எதுவும் காதுல போட்டுக்க மாட்ட.”

“நல்லா சொல்லுங்கப்பா..” தனக்கு ஆதரவு வந்ததும் திவ்யா மகிழ்ச்சி ஆகிவிட்டாள். கோயிலுக்குச் செல்ல தோப்பில் மட்டை வாங்கிப் போட்டிருந்த தேங்காய்களை எடுக்கச் சென்றிருந்தார்.

“என்ற பன்னாடி அப்படினா நீங்க மனுசியை கல்யாணம் பன்னி இருக்க வேண்டியதாம்.” முகத்தை திருப்பினார் அவர்.

“என்ன செய்யறது? எல்லாம் என்ற அய்யன் பார்த்த வேலை. உன்னைக் கல்யாணம் பன்னி வச்சுட்டார். சரி.. சரி… பேசிட்டே இருக்காத. கிளம்பு. நேரமாச்சு..”

நேரமாவதால் மூவரும் கோயிலுக்குச் செல்ல தாயாராகினர்.

***

சரண்யா இன்னும் கிளம்பவில்லை. அப்படியே ஹாலில் அமர்ந்திருந்தாள். வீட்டில் உள்ள விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டைனிங்க் டேபிள் என்பதால் சில பழங்களை வைத்து கத்தியை அவள் அம்மா வைத்திருந்தனர். சட்டென அதன் மீது அவள் பார்வை படிந்தது.

வரம்…தரும்…