சுயம்-வரம் 14

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்-14

பெரும்பாலும் பண்டைக் காலத் தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல் வாழ்க்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் சிலர் ஏமாற்றவும் அதைத் தவிர்க்க திருமணச் சடங்கினை உருவாக்கினர்.  மண முறைகளில் ஏழு வகைகள் உள்ளன.

மரபு வழி மணம்: இதை பலரறி மணம் என்ற இயல்பு மணம் என்றும் கூறுவர். பெண்ணின் பெற்றோர் மண மகனிடம் ‘யான் கொடுப்ப நீ மணந்து கொள்’ என்று வேண்டி மண முடித்தலாகும். இது சமூகத்தில் பெரும் வழக்காக இருந்தது. – விக்கி பீடியா.

அடுத்த நாள் காலையில்  சரண்யா வழக்கமாக வேலைக்குக் கிளம்பினாள். ஆனால் முகம் உணர்வற்று வெளுத்திருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்தாள். காலை சாப்பிடக் கூட இல்லை. மனம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் போது உணவு ஒன்றுதான் கேடா என்று நினைத்ததுதான் காரணம்.

பேருந்தில் ஜன்னல் வழியே வெறிக்க ஆரம்பித்தாள். பேருந்தில் இசை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஏதோ குத்துப் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. தோழியர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். தோழிகள் வரவும் சரண்யாவின் முகத்தில் புன்னகை ஒன்று வந்து போனது.

பேருந்தில் பாட்டு சத்தம் சத்தம் அதிகமாக இருப்பதால் பேசினாலும் அதிகம் கேட்காது. அதனால் அமைதியாக இன்று அவரவர் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டு வந்தனர்.

 திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்தது. இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவும் இருந்தது. ஐவரும் இறங்கி எப்போதும் செல்லும் திசையில் நடக்க ஆரம்பித்தனர். சரண்யாவைப் பார்த்த நால்வருக்கும் அவள் முகம் சரியில்லை என்று புரிந்தது.

காஃபி ஷாப் வரவும் ஐவரும் அமர்ந்தனர்.

“சொல்லு சரண்யா.. என்னாச்சு?”  காயத்ரி நேரடியாகக் கேட்டாள்.

“அக்கா..”

“நீ அக்கானு இழுக்க வேண்டாம். முதல்ல நடந்ததைச் சொல்லு.” ராகினி அவள் பேச்சை வெட்டினாள்.

“இந்த டைம் ஓகே பன்னியிருந்த மாப்பிள்ளை என்னோட பேஸ்புக் போஸ்ட், யூ டியூப் சேனலில் இதை எல்லாம் பார்த்துருக்கான்.”

“அதுக்கென்ன அதெல்லாம் நல்லாதானே இருக்கும்.”

“உண்மைதான். ஆனால் அதைப் பார்த்துட்டு எங்க வீட்டுக்குக் கூப்பிட்டு இருக்கான். அவங்க அப்பா மூலமாக எங்க அப்பாவுக்கு கூப்பிட்டு பேசி இருக்கான்.”
“அப்படி என்னதான் பேசினான்?” திவ்யா கேட்டாள்.

“ஒன்னும் இல்லை. என்னோட யூ டியூப் சேனல் பார்த்து மலைச்சு போயிட்டானாம். அதனால் கல்யாணத்துக்கு அப்புறம் அதெல்லாம் விடனுமாம். அது மட்டும் இல்லாமல் பொண்ணுங்களுக்கு அதெல்லாம் சேப்டி இல்லையாம்.”

“அதில் எப்படி என்ன இருக்கு மலைச்சுப் போறக்கு. நீ சொல்ற குழந்தைகள் ஸ்டோரிதான் இருக்கு. வேற என்ன?” இது காயத்ரி.

“என்னது கல்யாணத்துக்கு அப்புறம் நிறுத்திடனுமா? அதில் நீ ஒன்னும் தப்பா பேசலையே..” உமா கூறினாள்.

“அது மட்டும் இல்லாமல் கல்யாணத்துக்கு அப்புறம் பேஸ்புக், வாட்ஸ் அப் இப்படி எதிலும் இருக்கக் கூடாதாம்.”

“என்னடி இந்தக் காலத்தில் இப்படி இருக்காங்க. எல்லாம் ஐநூறு வருஷம் முன்னாடி இருக்க வேண்டிய ஆளுங்க.” திவ்யா ஆதங்கப்பட்டாள்.

“இதைக் கேட்டீங்கனா.. நீங்க அவார்டே கொடுப்பீங்க..”

“இன்னும் என்ன?” ராகினி எரிச்சலுடன் கேட்டாள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்கனும், துவைக்கனும்.. சமைக்கனும், துவைக்கனும்.. சமைக்கனும், துவைக்கனும்… சமைக்கனும், துவைக்கனும்.. இதையே அந்தப்  பையன் எங்கிட்ட நாலு தடவை சொன்னான்.

நானும் எக்ஸ்பிளைன் செஞ்சேன். இது எஜிகேஷனல் வீடியோ. அவ்வளவுதானு.. ஆனால் அவன் திரும்ப தேய்ஞ்சு போன ரெக்கார்டர் மாதிரி சமைக்க, துவைக்க இப்படியே பேசினான். அவன் கிட்ட நான் கத்த மட்டும் செய்யலை. டென்சனாகி போனை கட் பன்னிட்டேன்.”

“என்னடி இவன் என்ன வேலைக்காரிக்கு ஆள் எடுக்கறானா? என்னமோ நாம சமைக்கற துவைக்கறத செய்யாத மாதிரி. அதைத்தான் காலம் முழுக்க பன்னப் போறோம்..”

“எனக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லைக்கா. ஆனால் பொண்ணுங்க இதுக்க மட்டும் தான். நீ இவ்வளவுதான். பொண்ணு அவனை விட ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் பிரபலமாக இருந்தால் அதை ஏத்துக்க முடியலை. ஒருத்தருக்கும் தெரியாமல் வீட்டு மூலையில் இருக்கனும். அவன் சொல்றதப் பார்த்தால் ஆதார் கார்டில் கூட நம்ம முகம் தெரியக் கூடாது போல. அப்படிப் பேசறான்.

இந்த மாதிரி ஆளை நான் ஓகே சொன்னதை நினைச்சால் எனக்குப் பத்திட்டு வருது. இவனுக எல்லாம் இவனும் டெவலப் ஆக மாட்டானுக. டெவலப் ஆகனும் நினைக்கற யாரையும் விட மாட்டாங்க. யூ டியூப், பேஸ்புக்கை விட எனக்கு நிஜ உலகத்தில் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லை அப்படிங்கறதுதான் ரியாலிட்டி.

இவனுகளுக்கு எல்லா பொருளும் லேட்டஸ்டா வேணுமாம். ஆனால் பொண்ணுங்க மட்டும் ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி இருக்கனுமாம். அப்புறம் பாருங்க. போட்டோ அனுப்பும் போது சுடிதாரில் அனுப்பி இருந்தேன். ஆனால் சேரியிலேதான் போட்டோ வேணுமாம். ஏன் இவன் வேஷ்டி சட்டை கட்டி போட்டோ அனுப்ப வேண்டியதுதானே. இல்லை தெரியாம கேட்கிறேன். சுடிதார் போட்டா மூஞ்சி மாறிருமா என்ன?”

சரண்யா பொங்கிக் கொண்டிருக்க தோழிகள் அனைவரும் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவள் மனதில் இருப்பதைக் கொட்டிக் முடிக்கட்டும் என்ற எண்ணம்தான் காரணம். கொண்டு வந்து வைக்கப்பட்ட காஃபியில் ஆவி கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறி ஆறிக் கொண்டிருந்து.

“என்னோட அம்மா இருக்கே.. அவன் பேசுனதைக் கேட்டதுக்கு அப்புறம் அந்தச் சேனல் ஆரம்பிக்கும் போதே சப்போர்ட்டா இருந்தவங்களே அவங்கதான். ஆனால் இப்ப ‘நீயும் சொன்னா விடற ஆளில்லையே!” னு சொல்றாங்க. என்னோட வாழ்க்கை யாரோ ஒரு முன்ன பின்ன தெரியாத ஆளால் குழப்பமாகிட்டே போகுது.”

அவள் தோளை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள்  காயத்ரி.

“கொஞ்சம் அவன் போட்டோ இருந்தால் காமி சரண்.”

சரண்யா கைப்பேசியை அன்லாக் செய்து காண்பித்தாள். திவ்யா இதை வாங்கிப் பார்த்து விட்டு, “இந்த இத்துப் போன தகர டப்பா இப்படி எல்லாம் பேசுதா.. இந்த மூஞ்சிக்கு எல்லாம் நீ எப்படி ஓகே சொன்ன?” என்றாள்.

ஆம் சரண்யா அழகிய பெண். இப்போது அவள் சரி என்று கூறியவன் அவளுக்கு ஈடான அழகு கிடையாது. சுமாரிலும் சுமார் என்று கூறுவார்களே அந்த ரகம். நிறமும் அப்படித்தான். ( HERE I AM NOT TALKING ANYTHING ABOUT RACISM BASED ON SKIN COLOUR. THAT COMMENT IS NOT TO HURT ANYBODY. IN MY OPINION ALL HUMANS .. ALL THINGS … ARE BEAUTIFUL)

“உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க?”

“அந்தப் பேச்சு வார்த்தை அப்படியே நின்னு போச்சு. காலையில் எங்கம்மா வழக்கம் போல ஆரம்பிச்சுட்டாங்க.”

“எல்லாப் பொண்ணுங்களும் இதை அனுபவிச்சுத்தான் ஆகனும் போல. ஆனால் என்ன ஒரு சிலருக்கு ரொம்ப அதிக அளவில் நடக்கும்.” காயத்ரி அவள் தோளில் தட்டிக் கொடுத்தாள்.

“இல்லக்கா… இத்தனை பேச்சு பேச்சு பேசிட்டு கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகிடுமா? ஒவ்வொரு தடவையும் கத்தி எடுத்து ஏத்திட்டு தாலி ஏறுனதும் இவங்க நம்மகிட்ட சாதாரணமா பேசுவாங்க. நாமளும் சிரிச்சுட்டு அமைதியாக இருக்கனும். இவ்வளவு நாள் டார்ச்சர் எல்லாம் அப்படியே மாயமாகிடும் இல்லையாக்கா?”

“ஏய் ரொம்ப யோசிக்காத?” ராகினி அதட்டினாள்.

“இல்லைக்கா.. எனக்கு இவங்க பேசறதக் கேட்கறதுக்கு எங்காவது தொலையனும் போல இருக்கு. அதே சமயம் கல்யாணம்னா வெறுப்பு கூட வந்திரும் போல இருக்கு. அதே சமயத்தில் என்னோட ஃபேம்லியை வெறுத்திருவேனு இருக்கு.”

சரண்யா இரண்டு கைகளையும் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டாள். தோழிகள் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தனர்.

“சரண்யா இங்க பாரு. என்ன நடந்தாலும் இது உன்னோட வாழ்க்கை. அத காப்பாத்திக்க நீதான் போராடுனும். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம். இவங்க சொல்றாங்கானு எவனோ ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிட்டு அப்புறம் பிரச்சினை வந்து நின்னா யாரு நமக்கு ஹெல்ஃப் செய்வாங்க. எல்லாரும் ஏதோ ஒரு வழியில் அதே வாழ்க்கையில் ஃபோர்ஸ் பன்னி எப்படியாவது திருப்பி அனுப்புவாங்க. இரண்டு பேர் சேர்ந்து வாழும் போது அடஜஸ்ட்மெண்ட்ஸ் நிறைய செய்ய வேண்டியதிருக்கும். கல்யாணம் ஆனால் மேக்ஸிமம் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு புதுசா மாறனும் தான் பெரும்பாலானவங்களோட எதிர்ப்பார்ப்பு. ஆனால் எல்லாமே அட்ஜஸ்மெண்டா இருந்தால் கொடுமை. சோ… பிரேஸ் யுவர்செல்ஃப். நீ எல்லாம் இதை விட ஸ்டாராங்கான ஆள். எந்திரி ஆபிஸூக்கு டைம் ஆகிடுச்சு.”

ஆனால் காயத்ரிக்கும் தெரியவில்லை. மிக மிக மன உறுதி படைத்த ஆட்கள் கூட அடுத்தடுத்து அடி விழும் போது எழ முடியாமல் போகலாம். வாழ்க்கையில் எதற்கும் கேரண்டி இல்லை.

வரம்..தரும்..