சுயம்-வரம் 13

அத்தியாயம்-13

உயர்மொழிக் கிளவி உறழும் கிளவி

ஐயக்கிளவி ஆடூஉவிற்கு உரித்தே.

    -தொல்காப்பியம்

ஒருவரை உயர்வாகப் புகழ்ந்து பேசுதல் தலைவன், தலைவி இருவருக்கும் உரியது. ஆனால் ஐயப் பொருளில் கூறுவது தலைவனுக்கு மட்டும் உரியதாம். உறழும் கிளவி- உயர்நிலையில் ஏத்திக் கூறுதல். ஆடூஉ-ஆண்.

புதிதாக ஒரு ஜாதகம் வந்ததும் சரண்யாவின் பெற்றோருக்குத் தலை கால் புரியவில்லை. ஈஸ்வரன் கோயிலுக்கு வரும் அய்யரை வைத்து ஜாதகம் பார்த்தனர். பொருத்தம் இருக்கவும் இதை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.

அடுத்த நாள் காலை வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சரண்யாவின் அம்மா அவளைப் பார்த்துக் கூறினார்.

“ஏய் சரண்யா. முந்தா நேத்து ஒரு ஜாதகம் வந்துச்சு. ஜாதகம் பொருந்தி வருது. இது ஒத்து வந்தா பேசி முடிப்போம்.” என்றார்.

அதில் நீ இதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற செய்தி இருந்தது. தலையை ஆட்டிவிட்டு சரண்யா வேலைக்குக் கிளம்பினாள். இப்போதெல்லாம் ஜாதகம் வந்தாலே சரண்யாவிற்கு மனதில் அழுத்தமும் கூடி விடுகிறது. இதற்கு முன்பு வீடு வரை வந்து பெண் பார்த்து விட்டு சென்ற பின் குல தெய்வம் பூ கொடுக்கவில்லை என்று ஒரு வீட்டினர் நிராகரித்தனர். மற்றொரு குடும்பம் ஜாதகத்தில் இரண்டு வருடம் தள்ளிதான் குழந்தை பிறக்கும் என்று கூறிவிட்டனர் என்ற காரணம் காட்டி திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

இதில் சரண்யாவின் தவறு எதுவும் இல்லை ஆனால் இப்படி பெண் பார்த்து விட்டு வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விட்டது அவள் தலையில் தான் விழுந்தது.

ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்தால் பார்க்கும் முதல் வரனே அமைந்து விட வேண்டும் எதிர்பார்ப்பு அநேகமாக பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதுவும் பெண் என்றால் உடனே அமைய வேண்டும். சிலர் வற்புறுத்துவதில்லை என்றாலும் இப்படி இரண்டு மூன்று தடவை தள்ளிப் போனால் அது பெற்றோர்களை விரக்தியான மன நிலையில் தள்ளி விடுகிறது.

இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. நம்முடைய தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் சின்னத்திரை நாடகங்கள் கூட திருமணத்தை வைத்தே நடத்தப்படுகின்றது. நாடகங்கள் எப்படி இருந்தாலும் சுற்றி முற்றி திருமணத்தை வைத்தே நடக்கும். திருமணத்தைச் சார்ந்தே அனைத்தும் கட்டமைக்கப்படுகின்றன.

சரண்யாவும் மாப்பிள்ளை பையனின் புகைப்படத்தைப் பார்த்தாள். பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த திரைப்படங்களில் வருவது போல் புகைப்படத்தைக் காட்டியவுடன் அல்லது பார்த்தவுடன் பிடித்து விட்டது என்று அவளால் கூற முடியாது. அப்படிக் கூறினால் அது வெறும் அழகைச் சார்ந்தது என்று அர்த்தம்.

சரண்யா பிராக்டிக்கலான பெண் வாழ்வதற்கு குணம் முக்கியம் என்று நினைப்பவள். திருமணம் என்பது வாழ்நாள் முழுக்கத் தொடரும் பந்தம் என்பதால் மனப் பொருத்தம் மிக முக்கியம். வீட்டில் ஒருவனைக் காட்டுகிறார்கள். ஜாதகம் பொருந்திப் போகிறது. நல்ல குடும்பம் என்கிறார்கள். உடனே பூம் பூம் மாடு போன்று தலையாட்டி விட்டு திருமணம் செய்து கொள்வதை அவளால் ஏற்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. காயத்ரியும் இவளைப் போலத்தான்.

வீட்டில் அவள் முன்பே சொல்லி இருந்தாள்.

“எனக்குப் பேசி எல்லாம் செட் ஆகிடுச்சுனா.. நான் சரினு சொல்லுவேன்.” என்று முன்பே கூறிவிட்டாள்.

சரண்யாவின் அம்மாவும், “உனக்குப் பிடிச்சால் தான் செய்வோம்.” என்று கூறிதான் அழைத்துச் சென்றார்.

சரண்யா பக்கம் ஆட்களை அவளுடைய தாய், தந்தை, சித்தப்பா மட்டும் உடன் சென்றனர். அவர்கள் பேசுவதற்கு இத்தனை பேர் எதற்கு. அது மட்டுமின்றி முன்பு அனைவரையும் அழைத்து திருமணம் நின்று போய் விட்டதால் பலரின் முன் அவமானப்பட விருப்பம் சரண்யாவின் பெற்றோர்களுக்கு இல்லை.

வழக்கம் போல் இந்த சந்திப்பு கோயிலில் தான் நடந்தது. மாப்பிள்ளை வீட்டினர் வரும் போதே பத்துப் பேருடன் வந்திருந்தனர். சரண்யாவிற்கு இத்தனை பேர் வந்திருப்பதே ஒரு பதட்டத்தைக் கொடுத்தது எனலாம்.

மாப்பிள்ளையின் தாயார் “பூ வைத்து விடலாமா?” என்று கேட்டார். ஆனால் அதிகம் பூ வைக்க விரும்பாதவள் சரண்யா. அதிலும் இந்த நிகழ்வில் பூ வைப்பது என்பது அர்த்தமே வேறு என்பதால் மறுத்து விட்டாள். உடனே மாப்பிள்ளைப் பையனின் அம்மா முகம் லேசாகச் சுருங்கியது. பின்னே இதற்கு முன்பு பத்து பேர் பெண் பார்த்து சென்றிருந்தால் பத்து வீட்டினரும் பூ கொடுத்தால் அதை வாங்கி வைத்துக் கொள்ள முடியுமா? ஏற்கெனவே இப்படி ஒரு முறை வாங்கி வைத்து அனைத்தும் நின்று போனது நினைவுக்கு வந்தது. அதனால் மாப்பிள்ளையிடம் பேசி முடிவு செய்து தனக்கு ஒத்து வந்தால் பூ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

பையனும், பெண்ணும் பார்த்துப் பேசிக் கொள்ள எதற்கு இத்தனை பேரை அழைத்து வர வேண்டும் என்று தோன்றியது. முன் பின் தெரியாத பத்து பேர் நம் எதிரில் நின்று நம்மைக் கணிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும். உச்சி முதல் பாதம் வரை ஆராய்வார்கள்.

இத்தனை பேர் இருப்பதே சங்கடமாக உணர்ந்தாள்.

“அம்மா என்னம்மா இத்தனை பேர் வந்திருக்காங்க? சும்மா பேசறதுக்கு எதுக்கும்மா?”

“சும்மா இருடி..” என்று அதட்டினார் ஒருவர். சாமி கும்பிட்ட பின்பு அதிலிருந்த பெரியவர் ஒருவர் , “பொண்ணும், பையனும் போய் பேசிட்டு வாங்க.” என்றார்.

சரண்யா ஆயத்தமாக நிற்க மாப்பிள்ளை பையன் ஐந்தாறு முறை அழைத்தும் தயங்கினான். மாப்பிள்ளையின் அம்மாவும், அத்தையும் அவனிடம் ஏதோ சொல்லி அனுப்பினர்.

முதலில் மாப்பிள்ளை எதுவும் பேசவில்லை. சரண்யாவே பேச்சை ஆரம்பித்தாள்.

“ஹாய்..”

“ஹாய்..” என்றான் அவன்.

“உங்களைப் பத்தி சொல்லுங்க. என்ன வேலை பார்க்கிறீங்க? ஏப்படிப்பட்ட லைஃப் பார்ட்னர் வேணும்?”

சரண்யா புகைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறாள். எதிரில் இருப்பவனைப் பார்த்தால் பெரிதாக ஒன்று உள்ளுணர்வு எதிர்மறையாகக் கூறவில்லை.

“சமைக்க தெரிஞ்சுருக்கனும்.”

‘ரைட்.’ என்று மனதில் சரண்யா நினைத்துக் கொண்டாலும் வெளியில் கூறவில்லை. அவளுக்கும் இது புதிதல்லவே. திருமணம் செய்யும் பெண்களுக்காக முக்கியத் தகுதி சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சரண்யாவிற்கு சமைக்கத் தெரியும்.

எதிரில் இருப்பவனுக்கு வாழ்க்கைத் துணை என்றால் வெறும் சமையலுக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இருப்பது தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் அதை சரண்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதை வைத்து மட்டும் ஒருவரின் குணத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா.

“உங்களுக்கு?”

“எனக்கு ஈக்குவல் பார்ட்னர் தாங்க வேணும். அப்புறம் எனக்கு சமைக்கத் தெரியாது.”

“ஓ…வீட்டில் உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்க?”

“அது சும்மா யூ டியூப் பார்த்து செய்வேன். மத்தபடி வெளிவேலை தான் அதிகமாக செய்வேன்.”

“கல்யாணத்துக்குப் அப்புறம் வேலைக்கு போவீங்களா?”

“ம்ம்ம்.. நிச்சயமா.. இப்ப இருக்கற விலைவாசியில் தேவைப்படும். அப்புறம் அதுக்குத்தானே படிச்சுருக்கு.”

அவனும் தலையை ஆட்டினான். சரண்யாவிற்கு அவனை ரிஜெக்ட் செய்ய பெரிதாக ஒரு காரணம் கிடைக்கவில்லை. அவனும் நன்றாகத்தான் பேசினான். சரண்யாவிற்கும் செட் ஆகும் என்று தோன்றியது. அதனால் வீட்டிற்கு வந்து சரி என்றுவிட்டாள்.  பையனுக்கும் பிடித்திருக்க அவளுடைய வாட்ஸ்அப் மட்டும் பேஸ்புக் பகிரப்பட்டது. இப்போதைய நடை முறை அதுதானே.

சரண்யாவின் விஷயம் அறிந்த தோழிகளும் அவளுக்கு வாழ்த்தினர். அனைவருக்கும் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. வேலை, தோழிகளுடன் அரட்டை, வீட்டிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சரண்யாவின் மனது அமைதியாக இருந்தது. அடுத்து வரப் போகும் வில்லங்கத்தை அவள் அறியவில்லை. பெரிதாக திருமணக் கனவுகள் இல்லை என்றாலும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருப்பது யாருக்குமே இயல்புதானே.

வரம்..தரும்…