சுயம்-வரம் 12
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்-12
இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கு எது எது தேவையில்லையோ அது அது எல்லாந்தான் இங்கு கல்யாணத்தைத் தீர்மானிக்கிறது.
-பிரபஞ்சன்.
உமா எழுந்து நின்றாள். வெளியில் அவன் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. உள்ளே நுழைந்த உமாவின் அன்னை கண்ணீருடன் அவள் அருகே வந்தார்.
“நீ எங்கேயும் வெளியில் போக வேண்டாம்டி. உள்ளேயே இரு. இங்கேயும் நம்ம நிம்மதியைக் கெடுக்க வந்துட்டாங்க.” என்று வழியும் கண்ணீரைத் துடைத்தபடி விசும்பலுடன் கூறினார்.
அவரைப் பார்த்ததும் உமாவின் உடல் விரைத்தது.
“ஏய் வெளியில் வாடி.. ஏய் வெளியில் வாடி..உமா.. எனக்கு ஒரு பதில் சொல்லு. நிச்சயம் முடிஞ்சதுக்குப் அப்புறம் கல்யாணம் செய்யமாட்டானே என்ன அர்த்தம்?”
வெளியில் கத்திக் கொண்டிருந்தார் உமாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் அம்மா. கொஞ்சம் வீடு தனிமையில் அமைந்திருந்தாலும் சத்தம் நன்றாகக் கேட்டது. தொலைவில் இருந்த வீடுகளில் இருந்து ஆட்கள் வர ஆரம்பித்தனர். அப்படியும் அரசல் புரசலாக உமாவின் திருமணம் நின்ற விஷயம் வெளியே கசிய ஆரம்பித்திருந்தது.
உமாவின் அப்பா அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் இப்படியே கழிந்தது. ஒரு கட்டத்தில் உமா பொறுமையை இழந்தவள் அவளுடைய அம்மா தடுக்க தடுக்க வெளியில் வந்தாள்.
அவள் வெளியில் வந்தததைப் பார்த்ததும் மாப்பிள்ளையின் அம்மா திரும்ப ஆரம்பித்தார்.
“வாடிம்மா.. ஆடி அசைந்து தேராட்ட வர்ற. நிச்சயம் முடிஞ்சா அரைக் கல்யாணம் முடிஞ்ச மாதிரி. இவன் உன்னோட அரை புருஷன். நிச்சயம் முடிஞ்சு கல்யாணம் வேண்டாம்கிற உனக்கு எதாவது அறிவிருக்கா? இந்த விஷயம் கேள்விபட்டால் குடும்ப மானம் போகாது?”
ஆத்திரத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்.
“ஏய் என்னம்மா இப்படி பேசிட்டு இருக்கற?” என்று உமாவின் மாமா எகிறினார். இதுவரை அமைதியாக அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உமா அந்த அம்மாவைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
“எல்லாரும் ஒரு நிமிஷம் அமைதியாக இருங்க…” உமா கத்தினாள். அதிர்ந்து கூட பேசாத பெண் கத்தியதால் அனைவரும் சற்று அமைதியாகினர்.
“அப்படியா? கல்யாணத்திற்கு முன்னாடி நாளும் இதுவரைக்கு ஒரு கல்யாணம் நின்னு போனதில்லையா? உன்னோட குடும்பம் உண்மையை சொல்லி இருந்தால் கூட நான் கல்யாணத்திற்கு ஒத்துகிட்டு இருப்பேன். ஆனால் உங்களுக்கு நான் ஒரு புள்ளை பெத்துப் போடற மிஷின் அவ்வளவுதான். அதைக் கூட விடுங்க. என்னோட பிரண்டைப் பத்தி அவ்வளவு கேவலமான பேசுனதிலேயே இவன் குணம் தெரிய வேண்டாம். டேய்.. உன்னைத்தான் இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.. நான் எப்பவும் காயத்ரியை சந்தேகப்பட்டது இல்லை. நீ சொன்னால் நான் நம்பிருவனா? எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் இருந்தே எனக்கு அவ பிரண்டுடா.. இன்னொரு நிமிஷம் இங்க நின்னு பிரச்சினை பன்னா அப்புறம் போலீஸ் வரும்.”
அவள் பேசி முடிக்க ஒருவரின் முகத்திலும் ஈயாடவில்லை. அப்போது அங்கு சரியாக உள்ளே நுழைந்தாள் காயத்ரி. அவளருகே அவளுடைய அப்பாவும் நின்றிருந்தார். உமா சொல்வதைக் கேட்ட காயத்ரியின் முகத்தில் பெருமிதம் குடிபுகுந்திருந்தது.
“என்னடா.. இன்னும் நிக்கிறீங்க?” என்று ஒரு அதட்டல் போட்டாள் உமா. இதுவரை காச்சு மூச்சென்று கத்திக் கொண்டிருந்த அந்த ஏமாற்றுப் பேர்வழிகள் அமைதியாக வெளியேற ஆரம்பித்தனர்.
வாயிலில் சரியாக சந்தித்தனர் காயத்ரியும் அவனும். காயத்ரி அவன் கண்களை நோக்கினாள். ‘உண்மைதாண்டா ஜெயிக்கும். பார்த்தியா எங்க பிரண்ட்ஷிப்ப..’ என்ற செய்தி ஒளிந்திருந்தது.
அவன் வெளியேறும் வரை கூட காயத்ரி யோசிக்கவில்லை. ஓடிச் சென்று உமாவை அணைத்துக் கொண்டாள். காலை கோபமாக எழுந்து சென்று விட்டாலும் காயத்ரியின் மனது கேட்கவில்லை. உறுத்திக் கொண்டே இருந்தது. மதியம் விடுப்புக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.
உமா தன்னை தவறாக நினைத்ததை அவளால் தாங்க இயலவில்லை. வீட்டுக்குச் சென்று தலைவலி என்று அமைதியாகப் படுத்துக் கொண்டாள். ஆனால் அவள் மனது அமைதியடையவில்லை. என்ன நடக்குமோ என்று நினைத்துக் கொண்டே இருந்தது. அதனால் தான் மாலை நேரம் அவளது தந்தை வந்ததும் விஷயத்தைக் கூறி அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
வீட்டின் அருகே நெருங்கும் போதே சத்தம் காதைக் கிழித்தது. தான் நினைத்தது சரி என்று புரிந்து போனது காயத்ரிக்கு.
“சாரிடி… இந்த விஷயம் தெரிஞ்சால் நீ ரொம்ப மனசு உடைஞ்சு போயிருவ. அதனால் தான் உங்ககிட்ட சொல்லலை.”
உமாவின் கண்களிலும் கண்ணீர்.
“உன்னைப் பத்தி தப்பா பேசும் போதே எனக்கு அவன் மேல் சந்தேகம். எதையும் நேருக்கு நேரா பேசற நீ உண்மையை சொல்லாத அப்பவே எனக்கு தோணுச்சு. அதான் உங்கிட்ட கேட்டேன்.”
நடப்பதை அங்கிருந்த அனைவரும் அமைதியாகப் பார்க்க உமாவின் மாமாதான் காயத்ரியின் தோளைத் தட்டினார்.
“உனக்கு ரொம்ப தைரியம் அதிகம் காயத்ரி. உமா வாழ்க்கைக்காக நீ எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க..” என்று மெச்சினார்.
“என்னோட பிரண்டை அப்படி எல்லாம் விட்ற முடியுமா?” என்றாள்.
“உமாவுக்கு இப்ப கொஞ்சம் தைரியம் வந்துருச்சு. பரவாயில்லை.”
உமாவின் தந்தைதான் “வாங்க எல்லாரும் உள்ள போலாம்..” என்று அழைத்தார். உமாவின் மாமா கூறியது போல் உமா அப்படித்தான். அதிகம் பேச மாட்டாள். மெல்லிய குரலில் பேசுவாள். அதிகம் கோபமும் வராது. அவளுக்கும் சேர்த்து காயத்ரி கோபப்படுவாள். அப்படிப்பட்ட பெண் தான் இன்று இப்படி பேசி இருக்கிறாள். இந்த மாதிரி நிறைய ஆட்களை உமா பார்த்திருக்கிறாள். அந்த அம்மா செய்ய முயன்றது எமோஷனல் மேனிபுலேஷன், கில்ட் டிரிப் என்று அறிந்திருந்தாள்.
(GUILT TRIP: நியாயமே இல்லாத ஒன்றை நம்மிடம் குற்ற உணர்வை உண்டாக்கிச் அவர்களுக்கு தேவையான முதலில் நாம் மறுத்த காரியத்தைச் செய்ய வைப்பார்கள். நிறைய குடும்பங்களில் இது நடக்கும். பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்தவற்றை செய்துவிட்டால் நீ ஒரு சுயநலவாதி என்ற பட்டம் பெற்றோரிடம் இருந்து கிடைக்கும். இது ஒரு உதாரணம்தான். எமோஷனல் மேனிபுலேஷன் பற்றி இன்னொரு எபியில் பார்ப்போம்.)
“என்ன உமா அந்தம்மா பயங்கரமா கில்ட் டிரிப்பிங்க் போல… நீயே பொங்கிட்ட..”
கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு மூச்சை நன்றாக இழுத்து விட்டாள் உமா.
“பின்ன என்னடி? எப்படி பேசுது பார்த்தியா? அரைப் புருஷனாம்..அது இதுனு. எப்படி ஏமாத்தப் பார்க்குது. நிச்சயமாகி ஒரு கல்யாணம் கூட நின்னு போறது இல்லையா. இல்லை கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி பிரிஞ்சு போறது இல்லையா.. ரொம்ப ஓவரா பேசிட்டு இருந்துச்சு. நானும் வரக் கூடாதுனு பார்த்தால்..”
“இதான் சாது மிரண்டால் காடு தாங்காதா..” இருவரும் பேசிக் கொண்டே உமாவின் அறைக்குச் சென்றனர். உமாவின் தாயார் அனைவருக்கும் தேநீர் தயாரிக்க முடிவு செய்து சமையலறையில் புகுந்து விட்டார். அதற்கு முன் காயத்ரியின் அப்பாவிற்கு தண்ணீரும் கொண்டு வந்து அளித்தார்.
“ஆனாலும் ஏமாத்திட்டு வீடு வரைக்கும் வர்றது அவங்களுக்குத் தைரியம் பாரு..” உமா முகத்தைக் கழுவிக் கொண்டு அங்கலாயத்துக் கொண்டாள்.
“அதுகளுக்கு இதயம் எல்லாம் கிடையாது. அதனால் தான் யாரோட மனசை வேணாலும் கொன்னு போடலாம்னு நினைக்கும். நல்ல வேளை நீ தப்பிச்சுட்ட. எனக்கு மனசு கேட்கலடி..” என்றாள் காயத்ரி. உமா ஒரு தன் தோழிக்கு ஒரு புன்னகையை பரிசளித்தாள்.
அவளிடம் புன்னகையைப் பார்த்தும் காயத்ரிக்கும் சிரிப்பு வந்தது.
“பார்றா.. அழுத புள்ளை சிரிக்குது..” என்று கேலி செய்தாள்.
“சும்மா இருடி.. இந்த வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்ட..”
“உனக்குத் தெரியாதா? வாயுள்ள புள்ளை பொழச்சுக்கும்..”
“முடியலடி… உன்னோட பழமொழி..”
“இதெல்லாம் என்னங்கற.. எங்க அப்புச்சி அப்ப பழமொழியை எடுத்து விடுவார். அதெல்லாம் வேற லெவலில் இருக்கும். சரி நைட் எங்க வீட்டுக்குப் போலாம் வர்றியா?”
“உங்க வீட்டுக்கா? ம்ம்ம்… அம்மாகிட்ட கேட்கனும்..”
“இரு நான் போய் கேட்டுட்டு வரேன்.” என்று எழுந்து சென்றாள் காயத்ரி.
உமாவின் அன்னை முதலில் மறுத்தாலும் பிறகு காயத்ரியின் அப்பாவும் கேட்கவும், உமாவின் தாய் மாமாவும் அழைத்துப் போகட்டும் என்று கூறவும் சம்மதித்து விட்டார்.
நாளை வேலைக்குச் செல்வதற்குத் தேவையான உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் உமா. அவர்கள் வீட்டினர் சம்மதித்தது உமாவுக்கு காயத்ரியின் வீட்டில் இருப்பது ஒரு மனமாற்றமாக இருக்கும் என்ற காரணத்தால்.
உமாவுக்கு காயத்ரியுடன் நேரத்தைச் செலவளிப்பது நல்லது என்று தோன்றியது. அதனால் கிளம்பிவிட்டாள். இரவு நெடுநேரம் காயத்ரியுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாள் உமா. அதில் பல இடங்களில் தனக்கு நடந்த ஏமாற்றத்தைப் பற்றிய பேச்சு இருந்தது. காயத்ரியும் பேசட்டும் என்று விட்டு விட்டாள்.
அடுத்த நாளை இருவரும் ஒன்றாக பேருந்தில் ஏற வாயைப் பிளந்து பார்த்தனர் மற்ற மூவரும். சரண்யாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சந்திரன் கூறியபடி நடந்து விட்டிருந்தது.
மூவரும் ஒருமித்த குரலில், “இரண்டு பேரும் என்ன நடந்ததுனு சொல்லுங்க?” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு ஒன்றாகக் கூறியதில் ஒருவரை ஒருவரைப் பார்த்து சிரித்துக் கொண்டனர். மூவருக்கும் நேற்று காலை நடந்த விஷயத்தால் நிம்மதியே இல்லை. இப்போது பிரச்சினை முடிந்து விட்டதால் மகிழ்ச்சியில் இருந்தனர்.
நடந்தவற்றை காயத்ரியும், உமாவும் விளக்கினர். திவ்யாவுக்கு இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றியது. சரண்யாவுக்கு அந்த மனிதர்களை நினைத்து கோபம் வந்தது. ராகினிக்கு வெறுப்பாக இருந்தது.
“ச்சே.. இப்படியும் இருப்பாங்களா?”
ஆமாம் என்ற ரீதியில் தலையை அசைத்தாள் காயத்ரி. நடந்தவற்றை நினைத்த ராகினி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அன்றைய வாரம் உடை எடுக்கச் சென்றனர். அதில் ராகினியின் ஒரு உடை உமாவிடம் மாட்டிக் கொண்டது. அதை வாங்கத்தான் வந்திருந்தாள் ராகினி.
அதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். உமா குளித்து முடித்து வெளியில் வந்தாள். உமாவின் புத்தகங்களை எடுத்துப் புரட்டினாள் ராகினி.
“நல்ல வேளைடி.. உன்னோட புரபசர் வேலையை விடலை. அப்படியே கேன்சல் பன்னிடலாம்.”
“ஆமாடி.. அந்த அன்னிக்கே ஆபிஸில் இன்ஃபார்ம் பன்னிட்டேன்.”
உமா திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியாகப் பணிபுரிந்துக் கொண்டே பி.ஹெச்.டியும் செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மிகவும் பிடித்த வேலை. அதனால் அதை விடவில்லை என்றதும் உமாவுக்கு நிம்மதி. இப்படித்தான் உமாவின் வாழ்வில் ஒரு புயல் அடித்து ஓய்ந்திருந்தது.
சரண்யாவின் வீட்டில் அவளுடைய தந்தையின் வாட்ஸப்பிற்கு ஒரு ஜாதகமும், பையனின் போட்டோவும் காற்றலையில் வந்து சேர்ந்தது.
வரம்-தரும்..