சுயம்-வரம் 11

அத்தியாயம்-11

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருஎன

முறையுறக் கிளந்த ஓப்பினது வகையே.

    -தொல்காப்பியம்.

பிறப்பு, குடிப்பிறப்பு, ஆண்மை, வயது, அழகுநிலை, அடக்கம், அருள், உணர்வு, செல்வ செழிப்பு ஆகிய பத்தும் தலைவனுக்கு தலைவிக்கும் உரிய ஒப்புமை பண்புகளாகும். இந்தப் பத்துப் பொருத்தமும் திருமணத்திற்கு உரியதாகும். களவொழுக்கமும் தலைப்படும்.

ராகினி உமா வீட்டில் இருந்தாள். உமாவிடமிருந்து ஒரு உடையை வாங்க வந்திருந்தாள். உமா குளித்துக் கொண்டிருந்தாள். அதனால் அவள் அறையில் அமர்ந்திருந்தாள் ராகினி. அவளுக்கு காஃபி எடுத்துக் கொண்டு வந்தார் உமாவின் அம்மா.

நடந்த சம்பவங்களின் மிச்சம் அவர் முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்தது. ஆளே கருத்து இளைத்து விட்டிருந்தார். அவர் அறைக்குள் நுழைந்த சத்தம் கேட்டதும் கைப்பேசியில் எதையோப் பார்த்துக் கொண்டிருந்த உமா அதை வைத்து விட்டு அவரிடம் இருந்து காஃபியை வாங்கினார்.

“ஏங்கம்மா கூப்பிட்டா நானே வரப் போறேன். நீங்களே கொண்டு வராட்டி என்ன?”

என்று வாஞ்சையோடு கேட்டாள்.

“பரவால்லைடா இதனால் என்ன வந்துருச்சு?”

சோகம் படிந்த அவர் கண்களைப் பார்த்தார். உமாவைப் போலவே இரக்க குணம் மிகுந்தவர். சரி என்ற ரீதியில் தலையை ஆட்டினாள் உமா.

“வேற எதாவது வேணுமா?..”

“இல்லைம்மா. காஃபி மட்டும் போதும்.”

“சரி எனக்கு தோட்டத்தில் வேலை இருக்கு. உமா வந்திருவா. நீ இங்கேயே இரு.” என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அவர் கூறாமல் சென்ற வார்த்தைகள் அவர் கண்களில் தேங்கி நின்று அவருடன் வெளியேறியது.

உமாவின் கட்டிலில் அமர்ந்தவள் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள். காயத்ரி உண்மையைப் போட்டு உடைத்ததும் அந்த ஆடியோ கிளிப் எடுத்து அவளுடைய மாமாவுக்கு அனுப்பி விட்டாள் உமா. அவருக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. கோபம், ஆத்திரம். புயலென கிளம்பி உமாவின் வீட்டுக்கு வந்தார். உமாவுக்கு அவளுடைய அம்மாவின் அண்ணனிடம் செல்லம் அதிகம். தாய்மாமா அல்லவா. அவர் இதைப் பார்த்துக் கொள்வார் என்று தோன்றியது.

அதன் படி காயத்ரியிடம் மாப்பிள்ளை பேசும் ஆடியோ கிளிப் இரு பக்கத்திலும் அணு குண்டாக வெடித்தது. இதில் அதிக அதிர்ச்சிக்கு உள்ளானவர்கள் உமாவின் பெற்றோர்தான். மாப்பிள்ளை என்றவன் பேசிய வார்த்தைகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அவன் தங்களிடம் எப்படி எல்லாம் பேசினான் என்று நினைத்தால்… ஆனால் அவை அனைத்தும் ஏமாற்று வேலை என்று புரிந்தது. உமாவும் அன்று மதியமே வீட்டுக்கு வந்து விட்டாள். வீட்டுக்குள் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தார் அவளுடைய அன்னை. தந்தை ஒரு மூலையில் நாற்காலியில் சாய்ந்திருந்தார்.

அவளுடைய தாய்மாமா வீட்டின் பின்புறம் இருந்தவர் உமா கேட் திறக்கும் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

“வா.. சாமி. போ ரூமுக்கு போ. இப்ப போன் பன்னி நான் உண்மையைக் கேட்டதுக்கு அப்புறம் அவனுக எப்படி பேசறானுக தெரியுமா? அத்தனையும் வேஷம். நீ ஒன்னும் நினைச்சுக்காத.”

என்று கூறியவுடன் அவளும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள். தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே உமாவினை மனதளவில் வீழ்த்தி இருந்தது. அவன் கூறியது போல் தானும், தன் குடும்பமும் ஏமாளி தானோ என்று தோன்றியது.

காயத்ரியின் கோபமும் ஒரு பக்கம் அவள் மனதைத் தாக்கி இருந்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கடவுளிடம் கேட்டுக் கொண்டாள். ‘எத்தனையோ பொண்ணுங்க கல்யாணம் பன்னிட்டு வாழறாங்க? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது? லவ் பன்னி ஏமாத்தினுவங்களுக்கு எல்லாம் என் கண் முன்னாடியே  கல்யாணம் ஆகி சந்தோஷமா வாழறாங்க. ஆனால் எனக்கு மட்டு ஏன்?..’ படுக்கையில் படுத்துக் கொண்டே இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அவன் வேறு விஷயம் தெரிந்ததில் இருந்து அழைத்துக் கொண்டிருந்தான். அவன் தொல்லை தாங்காமல் போனை வேறு அணைத்துப் போட்டிருந்தாள்.

மாலை நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் சுறு சுறுப்பாக இருக்கும் வீட்டில் எதுவும் ஓடவில்லை. உமாவின் தாய்மாமா தோட்டம் சார்ந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரவு நேரமும் ஆனது. அப்போது பரபரப்புடன் வாகனங்கள் உமாவின் வீட்டின் முன் நின்றன. சத்தம் கேட்டு உமாவின் தாயார் கூட எழுந்து வந்தார்.

மாப்பிள்ளையும், அவன் தாயாரும் கோபத்துடன் உள்ளே  நுழைந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தாய்மாமா அணை போல் நின்று கொண்டிருந்தார்.

“ஏய் உமா.. ஏய் உமா…”

 மாப்பிள்ளை வீட்டு வாசலில் இருந்து கத்தினான்.

அழுது கொண்டே உறங்கி இருந்த உமா சத்தம் கேட்டு அதிர்ந்து விழித்தாள். அழுததில் தலை வேறு பயங்கரமாக வலித்தது. இன்னும் தூக்கத்தில் இருந்தவளுக்கு வெளியில் கேட்ட சத்தம் மனதில் ஊசி போல் ஏறியது.

“அவனா இங்கயா?” என்று தோன்றியது. தலையைப் பிடித்துக் கொண்டே எழுந்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்திக் கொண்டாள். வெளியில் அரவம் அதிகமாகிக் கொண்டிருந்தது. உமாவின் தந்தையும் எழுந்து வெளியில் வந்தார். தாயார் உடனே உமாவின் அறையை நோக்கிப் போனார்.

வரம் தரும்…