சுயம்-வரம் -1

                                                             

அத்தியாயம்-1

கற்பு:

கற்புஎனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குஉரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குஉரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

     -தொல்காப்பியர்

களவில்(காதல்) ஒருவரும் அறியாமல் பழகி வந்த தலைவனும் தலைவியும். தலைவியின் பெற்றோர் தன் மகளை திருமணம் செய்து கொடுத்தல் கொடை. பலர் அறிய நடைபெறும் திருமணம் கரணம் ஆகும். எண் வகைத் திருமணம் இருந்தாலும் அதில் களவும், கற்பும் மட்டுமே தமிழ் திருமண முறையில் வரும். நம் சங்க கால திருமணத்தில் தாலி கிடையாது.

         தன் கைப்பேசியை நோக்கிக் கொண்டிருந்தாள் சரண்யா. அதில் யாருக்கோ வாட்ஸ் அப் செய்தி அனுப்பி விட்டு வெளியில் தெரியும் மரங்களை நோக்கினாள். அவர்கள் இருந்த ஆம்னி கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. அருகில் இறுக்கமான முகத்துடன் அவளுடைய அன்னை அமர்ந்து கொண்டிருந்தார். அதே போல் தான் தந்தையும். முன்னே அவள் பாட்டி அமர்ந்து கொண்டிருந்தார். டிரைவர் அவர்பாட்டுக்கு வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

சற்று முன் நடந்ததை நினைத்தாலே சரண்யாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. சரண்யா இருபத்தி மூன்று வயதாகும் பெண். இந்தியத் திருநாட்டில் கல்லூரி முடித்ததும் திருமணம் பெண்களுக்கு முடிந்து விட வேண்டும். இல்லை என்றால் பலரின் கேள்விக்குப் பதில் கூற முடியாது.

முக்கால்வாசித் திருமணங்கள் பெற்றோர்கள் விருப்பட்டு செய்கிறார்களோ என்னவோ? ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் “இன்னும் என்ன பொட்டைப் புள்ளையை வீட்டில் வச்சுருக்க?” என்று கேட்டு விடுவார்களோ என்ற சொல்லுக்காக திருமணத்தை முடித்து ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.

திருமணம் செய்து வாழும் வாழ்க்கைதான் வாழ்க்கையாகப் பார்க்கப்படுகிறது.  சரண்யாவும் தன் பெற்றவர்கள் பார்த்து ஜாதகம் பொருந்திய மாப்பிள்ளையைக் கோவிலில் வைத்து சந்திக்க அழைத்து வந்திருந்தார்கள்.

அவளும் பெற்றவர்களின் பேச்சைத் தட்டாமல் சந்தித்து வந்திருந்தாள். அவளுக்குப் பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. நல்ல குடும்பமாக இருந்தால் போதும் என்று நினைத்தாள்.

சரண்யா நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவள். அவள் வசிப்பது திருப்பூரின் அருகில் உள்ள கணபதி பாளையம் என்ற கிராமம். தோட்டம், ஆடு மாடு என்று பண்ணையமும் உண்டு. சரண்யா பி.காம் படித்ததும் திருப்பூரில் உள்ள ஒரு பையிங்க் ஆபிசில் சேர்ந்தவள் மூன்று வருடமாகப் பணி புரிந்து வருகிறாள்.

சுயமாக சம்பாதிக்கும் பெண் அவள். வேலைக்குப் போய் பழக்கப்பட்டிருந்தாள். அவள் சம்பாரித்தே ஐந்து பவுன்கள் தங்க நகைகளும் வாங்கி இருந்தாள். திருமணச் சந்தையில் விலை போக முக்கியமான பொருள் அதுதானே. பெண்கள் குணத்தைத் தாண்டி கொண்டு வரும் வரதட்சினையைப் பொருத்து மதிப்பிடப் படுகிறாள்.

இன்று கோவிலில் அவளின் குடும்பமும் மணமகனின் குடும்பமும் சந்தித்துக் கொண்டன. மாப்பிள்ளை பையனுடன் பேசவும் அவளுக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அதுமட்டும் இல்லாமல் முழுதாக ஐந்து நிமிடங்கள் கூட பேசி இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

எல்லாம் நல்லபடியாகச் சென்றது போல் தோன்றியது. ஆனால் மாப்பிள்ளைப் பையனின் வீட்டில் இருபது பவுன் நகை, இன்னும் சில பல லிஸ்டுகள் போட்டவுடன் சரண்யாவின் பெற்றோரின் முகம் மாறியது. அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டு விட வேண்டும் என்று கூறினர்.

சரண்யா தன் அம்மாவை அழைத்தாள். அவர் முகம் முழுவதும் வருத்தத்தின் சாயல்.

“என்னடி?”

“கிளம்பலாம். எனக்கு வொர்க்கு டைம் ஆகுது.”  

சரண்யாவின் அம்மா ஏதோ சொல்லவும் சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பினர்.

காரில் ஏறிய சில நிமிடங்களில் சரண்யா, “எனக்கு இந்தப் பையன் ஒத்து வராது. வேண்டாம்னு சொல்லிடுங்க.” என்றாள்.

“ஏய் சும்மா இருடி. இந்த ஜாதகம் தான் ரொம்ப நாள் கழிச்சி பொருந்தி வந்திருக்கு.”

“நீங்க பார்க்கற ஜாதகப் பொருத்தம் எல்லாம் மனப் பொருத்தம் இல்லைனா ஒன்னும் செய்ய முடியாது. வேணானு சொன்னால் அவ்வளவுதான்.”

அதன் பின் தான் இத்தனை இறுக்கம் காரில் குடி புகுந்தது. அவர்களது கிராமத்தை நோக்கிக் கார் விரைந்து கொண்டிருந்தது.

இனி ஊரில் இருக்கும் பலரின் கேள்விகள் அம்புகளாய் மாறித் துளைக்கும். சளைக்காமல் பதில் கூற வேண்டும்.