சுயம்வரம்-3

அத்தியாயம்-3

செறிவும், நிறைவும், செம்மையும் , செப்பும்

அறிவும் , அருமையும் பெண்பால் ஆன. 

    அடக்கம், அமைதி, மனம் தளராமை, இனிய சொல்லுதல், அறிவுடைமை( நன்மை, தீமை அறிதல்), உள்ளக் கருத்தறியும் அருமை ஆகியவை பெண்களுக்கு உரிய இயல்பாம்.  –தொல்காப்பியர்.

 இரவு மணி ஏழு முப்பதைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. தன்னுடைய செருப்பை வாசலில் கழற்றி வைத்து விட்டு உள் நுழைந்தாள் சரண்யா. காலையில் தோழிகளைச் சந்தித்தப் பின்பு வேலையில் மூழ்கி இருந்த சரண்யா இரவு வீட்டுக்கு வந்தாள். வீட்டில் தாளிக்கும் வாசனை நாசியில் ஏறி இருமலை உண்டு செய்தது.

இருமிக் கொண்டே உள் நுழைந்தாள். எப்போதும் அப்படித்தான் தாளிக்கும் வாசனை அவளுக்கு இருமலை வரவழைத்துவிடும்.

சமையலை அம்மா முடித்து விடுவார் என்பதால் பாத்திரங்களை கழுவி வைத்தால் போதுமானது. காலை வீட்டைப் பெருக்கி, தண்ணீர் பிடித்து வைத்து செல்வாள். என்றாவது நேரமிருந்தால் சமைக்கவும் செய்வாள். இப்படித்தான் மூன்று வருடங்களாக அவளுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் குருபலன் வந்து திருமணப் பேச்சுகள் எடுத்த நாட்களில் இருந்து அவளுடைய வீட்டிற்கு வருவதற்குப் பிடிப்பதில்லை. ஏனெனில் நிறைய ஜாதகங்கள் அவளுக்குப் பொருந்தவில்லை. முதல் நிலையிலேயே அவளுடைய பெற்றோர்களுக்கு அழுத்தம் அதிகமாகிவிட்டிருந்தது.

பல ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை சோதிடர்களும், ஜாதகமும் தீர்மானிக்கிறது. செவ்வாய் ஜாதகம் என்பதால் அவளுடைய பெற்றோர்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி வரன் தகையாத கோபம் அவளுடைய அம்மாவின் வாயிலாக வார்த்தைகளாக சரண்யாவைக் சிறிது சிறிதாகக் கீறி கூறு போட ஆரம்பித்திருந்தது.

ஒரு காலத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அம்மாவிடம் ஏனோ சிரித்துப் பேசவே முடிவதில்லை. பழையதை நினைத்துக் கொண்டு கைகால் முகம் கழுவியள் வழக்கமான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.

மெல்ல அவளுடைய வீடு ஹிட்லர் மக்களைக் கொல்லப் பயன்படுத்திய விஷவாயுக் கிடங்காய் மாறி அவளை மூச்சடைக்கச் செய்து கொண்டிருந்தது.

இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா. அப்போதுதான் டைனிங்க் டேபிளில் இருந்த பத்திரிக்கை பட்டது.

“யாரு பத்திரிக்கைமா அது?” இயல்பாகக் கேட்டு விட்டாள்.

ஏதோ பாத்திரத்தை எடுத்துக் கொண்டிருந்த சரண்யாவின் அம்மா கோமதி திரும்பிப் பார்த்தார்.

“நம்ம ஊரு சுகன்யாவோட பத்திரிக்கை. அவங்க அப்பா சாயந்தரம் வச்சுட்டு போனாரு. ஒரு டிகிரி படிச்ச உடனே அவங்க வீட்டு பேச்சைக் கேட்டு உடனே கல்யாணம் பன்னிக்கப் போகுது சுகன்யா. நீயும் தான் இருக்கியே? இப்படி வேணாம். அப்படி வேணாம்.. எல்லாம் என் தலை எழுத்து.”

சரண்யாவுக்கு சாப்பாடு உள்ளே இறங்க மறுத்தது. சுகன்யாவுக்கு இன்னும் இருபத்தியோரு வயது கூட முழுதாக முடியவில்லை. அதுமட்டுமின்றி சுகன்யாவுக்கு அவ்வளவு மன முதிர்ச்சி கிடையாது. அடிக்கடி சத்துக் குறைவால் உடல் நலமின்றியும் போகும்.

இதை நினைக்கையில் சரண்யாவுக்கு இதயம் அடித்துக் கொண்டது. இப்படித்தான் சுகன்யாவுடைய அக்காவிற்கு பதினைந்து வயதிலேயே திருமணம் செய்து வைத்திருந்தனர். குழந்தைத் திருமணம் தான். சரண்யாவின் வயது என்றாலும் எட்டு வயதில் அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

பாட புத்தகத்தைச் சுமக்கும் வயதில் அவள் பிள்ளையை பெற்றெடுத்திருக்கிறாள். தமிழ்நாட்டிலும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதைத் தடுக்க முடிவதில்லை.

“அவளோட அக்காவிற்கு உன்னோட வயசுதான். அவ மகன் பள்ளிக்கூடம் போகுது. உனக்கெல்லாம் என்ன? அப்படியே குத்துக் கல்லாட்டாம் இன்னும் இருக்க. எனக்குத்தான் மானம் போகுது. இன்னும் என்ன என்ன பேச்சுக் கேட்க வேண்டி இருக்குமோ? எதாவது பையன் இருந்தாலும் சொல்லிரு. பன்னி வச்சுத் தொலையறோம்.”

இப்படி அவளை ஏதோ ஒன்றை அடுப்பில் வைத்து  வாணொலியில் போட்டு நெருப்பில் வாட்டி கரண்டியால் குத்திக் கிளறிக் கொண்டே சரண்யாவையும் அதோ போல் வதைத்துக் கொண்டிருந்தார்.

அன்றைய இரவு சாப்பாடு எட்டு வாய் அள்ளி உண்டவுன் முடிந்து விட்டது. கைகளைக் கழுவி எழுந்தவள் கைப்பேசியுடன் உறங்கும் அறைக்குள் தஞ்சம் அடைந்தார்.

தோழிகள் வாட்ஸ்ப் குரூப்பில் வந்திருந்தனர்.

“ஹே சரண் சாப்பிட்டியா?”

திவ்யா ஆரம்பித்தாள்.

“ம்ம்ம்ம்..”

“சரண் வீட்டில் அம்மா பொறியல் செஞ்சுட்டாங்களோ?” உமாக்கா கேட்டாள்.

“ம்ம்ம்.. ஆமா. சுகன்யாவுக்குக் கல்யாணமாம். அதான் அவளோட அக்கா வரலாறை எடுத்து விளக்குனாங்க.”

“அய்யோ..” காயுக்கா அலைவரிசையில் வந்து சேர்ந்தார்.

“சைல்ட் மேரேஜ் பன்ன பொண்ண பத்தியா?” ராகினிக்கா தட்டச்சு செய்து அனுப்பிவிட்டார்.

“அவளேதான். அவங்க அப்பா அந்தப் பொண்ணு லவ் பன்னுது நினைச்சு சந்தேகத்தோட குடும்ப மானத்தைக் காப்பாத்த பதினைஞ்சு வயதில் முப்பது வயசு ஆளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சதை பெருமைனு நினைச்சு பேசிட்டு இருக்காங்க. என்னத்தை சொல்ல..”  சரண்யாவும் டைப் செய்து பதில் அனுப்பினாள்.

அலைபேசியிலே மற்ற நால்வரும் உச்சுக் கொட்டினர்.

அவள் மனதை மாற்ற உமா ஆரம்பித்தார்.

“நம்ம சாயந்தரம் பஸ்ஸில் வருவானே? உன்னைப் பார்த்துட்டு அவனைக் கல்யாணம் பன்னிக்கோ. எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துப் போயிரும்.”

உமாவின் எண்ணத்தை ஆமோதிப்பது போல் மற்ற மூவரும் பேசினர்.

“ரொம்ப சூப்பர்க்கா. அவன் நம்ம கேங்கு மட்டுமில்லால் பஸ்ஸில் ஏற எல்லாப் பொண்ணுங்களையும் அப்படித்தான் பார்ப்பான்”

“உங்கம்மா பொறியலை ஆஃப் பன்ன ஐடியா கொடுத்தா…” உமா மீண்டும் கூறினார்.

“ரைட் இன்னிக்கு என்னை வச்சு செய்யனும் முடிவு பன்னிட்டீங்க. ஆகட்டும்.” என்று பின் வாங்கினாள் சரண்யா.

மனதிற்குள் வடிவேலு பாணியில், ‘ஐய்யோ ஒன்னு கூடிட்டாங்களே..’ என்றிருந்தது. அதோடு அவளுடைய  முகத்தில் தன் தோழிகளை நினைத்து ஒரு புன்னகையும் அரும்பியது. எப்போதும் அவள் மனதை சோகம் என்று கூறினால் மாற்றிவிடுவார்கள். பிறகு சாப்பாட்டைப் பற்றிப் பேசி விட்டு பத்து மணி வாக்கில் உறக்கத்தில் ஆழ்ந்தாள் சரண்யா. இப்போதெல்லாம் சரியாக அவள் உறங்குவதில்லை. நாலு ஐந்து மணி நேரம் தூங்கிய பிறகு உறக்கத்திலிருந்து தானாக எழுந்து கொள்கிறாள்.

வரம் தரும்…