சுயம்வரம் -2

அத்தியாயம்-2

பொய்யால் உருவான திருமணம்:

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப. –தொல் காப்பியர்.

    தலைவியோடு கூடிய தலைவன் பிறகு அவளை தெரியாது என்றும், பிரியேன் என்று தெய்வ முன்னிலையில் தலைவிக்கு அளித்த வாக்குறுதியில் இருந்து வழுவிய காரணத்தால் சான்றோர்கள் ஊரறிய திருமணம் என்ற சடங்கை உருவாக்கினர். 

    “கொய்ங்ங்ங்ங்க்…” என்ற பேருந்து நடத்துனரின் விசில் சத்தம் காதை அடைக்க வைத்தது. ஒரு காதில் ஆள்காட்டி விரலை வைத்து ஆட்டிக் கொண்டாள்.

“இந்த அண்ணா வேற..” என்று முனுமுனுத்துக் கொண்டாள். அந்த பேருந்து கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல கிராமங்கள் வழியே திருப்பூருக்குள் நுழையும் அந்த பேருந்தில் காலை நேரத்தில் நிச்சயம் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அந்த வழிகளில் அதிக பேருந்துகள் கிடையாது. இன்னொரு விஷயம் அந்த நேரத்திற்கு சென்றால் பள்ளிக்கு, கல்லூரிக்கு, அலுவலகம் என்று அனைத்திற்கும் சரியாக இருக்கும். அதனால் ஒரு சிறிய பைக்குள் அதிக பொருட்களை அடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி பேருந்தில் மக்கள் அடைக்கப்பட்டு பிதுங்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கஷ்டம் எல்லாம் சரண்யாவுக்கு இல்லை. அவள் ஏறும் போது பேருந்தில் இருக்கைகள் இருக்கும். அவளருகில் தோழியர் குழுவும் ஓட்டுநரின் இருக்கைக்கு பக்கவாட்டில் உள்ள முதல் இரண்டு இருக்கைகளின் இடத்தையும், எஞ்சின் அருகே முதல் இருக்கைக்கு எதிரே உள்ள சீட்டினையும் ஐவர் ஆக்கிரமித்திருந்தனர்.

“ஆமா சரண்.. எப்ப பார்த்தாலும் இவர் ஊதுனா காது செவுள் பிஞ்சு போயிரும்.” என்று அவள் கூற்றை ஆமோத்தித்தாள் காயத்ரி.

காயத்ரி, உமா, ரோகினி, திவ்யா மற்றும் சரண்யா இவர்கள் ஐவரும் தோழிகள். இதில் காயத்ரி, உமா, ரோகினி மூவரும் திவ்யா மற்றும் சரண்யாவை விட வயதில் மூத்தவர்கள். திவ்யா மற்றும் சரண்யா இருவரும் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். முதல் மூவரும் மூன்று வருடம் இவர்களை விட மூத்திருந்தாலும் ஐவரிடமும் வயதைத் தாண்டிய தோழமை உணர்வு இருந்தது. இவர்கள் ஐவருக்கும் இருக்கும் பல ஒற்றுமைகளில் பலரின் கண்ணை உறுத்தும் விஷயம் ஐவரும் திருமணமாகாதவர்கள்.

“சொல்லு சரண். நேத்து என்னாச்சு? ஈவினிங்க் கால் பன்ன அப்போவும் சரியாப் பேசலை?” காயுக்கா கேட்டார். உடனே மற்ற மூவரும் என்ன நடந்ததை அறிய வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர்.

சரண்யா நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

“அக்கா.. அவங்களுக்கு இருபத்து ஐஞ்சு பவுன் நகை, ஒரு டூ வீலர் அப்புறம்….” கூறி முடித்தாள்.

அவள் கூறியதைக் கேட்ட நால்வரும் வாயில் கை வைத்தனர்.

“சரி மாப்பிள்ளை என்ன செய்யறார்? என்ன சம்பளம்?” புருவத்தைத் தூக்கியபடி கேட்டார் ரோகினி. குரலில் லேசாகக் கோபம் இருந்தது.

“கார்மெண்ட்ஸ்லில் சூப்பர்வைசர். பிப்டீன் தவுசண்ட் சேலரி.”

“ஏய் சரண் உன்னோட சேலரி பதினாறாயிரம்.” திவ்யா அதிர்ச்சியில் வாயைப் பொத்திக் கொண்டாள். 

“அப்புறம் வேலையை விட்ரனும். அவங்க வீட்டில் ஏதோ தாத்தா முடியாமல் இருக்காராம். அவரைப் பார்த்துக்கனுமாம்.” சரண்யா தொடர்ந்தாள்.

“ஏண்டி சரண். இப்ப இருக்கற விலைவாசியில் உன்னோட வேலையை விட்டுட்டா ரொம்ப சூப்பரா இருக்கும். நியாயமா பார்த்தால் நீதான் வரதட்சிணை கேட்கனும். செயின் அடிக்கறவன் பரவாயில்லை போல. எப்படி காச வாங்கிட்டு ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்யறாங்க பாரு. அப்கோர்ஸ் நம்ம குடும்பத்துக்கு செய்யறது தப்பில்லை. ஆனால் இவங்க கேட்கிற வரதட்சிணை ரொம்ப இடிக்குது..”  உமா கூறினார்.

உமாவிற்கு ஒப்புதலாகக் தலையை அசைத்தாள் சரண்யா.

“நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் அக்கா. இவங்க எப்படியும் மனச பார்க்கிற ஆளுங்க இல்லை. சம்பளம் குறைவாக இருந்தால் கூட பரவாயில்லைக்கா. ஆனால் இவங்க பணத்தை மட்டும் பார்க்கிற ஆளுங்க. இவங்க கூட நிம்மதியா நம்மால் இருக்க முடியாது. அடம் பிடிச்சு வீட்டில் வேண்டானு சொல்லிட்டேன். அம்மாவுக்கு கோபம்.”

“விடுடி அம்மா கோபம் எவ்வளவு நாளைக்கு? எல்லாம் சரியாயிரும். பீல் பன்னாத.” என்று ஆறுதல் அவள் கைகளை அழுத்தி அளித்தாள் திவ்யா.  அவளுடைய மற்ற தோழிகளும் அதையே கூறினர். எல்லாம் நல்லபடியாக நடக்கும் ஆறுதல் அளித்தனர். ஆனால் அப்போது சரண்யாவுக்குத் தெரியாது. இந்த திருமண வரன்கள் அவளை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும் என்பது.

அதன் பிறகு அப்படியே வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வரும் போது ஐவரும் சிரித்துக் கொண்டே இறங்கினர். அனைவருக்கும் பத்து மணிக்கு வேலை என்பதால் இன்னும் ஒரு மணி நேரம் மீதமிருக்கும்.

ஐவரும் வழக்கமாக ஒரு காஃபி ஷாப்பிற்கு சென்று சூடாக நறுமணம் பறக்க காபி என்ற ஊக்கமூட்டும் திரவத்தை வயிற்றுக்கு ஊற்றிவிட்டுதான் வேலைக்கே செல்வர். அன்றும் ஐவரும் அப்படித்தான் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் தினமும் செல்வதால் கடைக்காரருக்கும் மிகவும் பழக்கம். அவர்கள் கேட்கமாலேயே காஃபி டேபிளுக்கு வந்து விட்டது. பேசிக் கொண்டே குடிக்க ஆரம்பித்தனர். அப்போது பக்கத்து டேபிளில் அமர்ந்து இரு கல்லூரிப் பெண்கள் பேசிக் கொண்டர்.

“உனக்குத் தெரியுமா? ஷாலினியை அவளோட லவ்வர் ஏமாத்திட்டான். அவனுக்கு இன்னொரு பொண்ணுகூடவும் பழக்கம் இருந்திருக்கு. இதை தெரிஞ்சதில் இருந்து அவ ரொம்ப மனசு விட்டு போயிட்டாள். சரியா சாப்பிடறது இல்லை. இளைச்சு போயிட்டா…” என்று அவர்கள் பேசிக் கொண்டதில் ஐவரின் காதிலும் தெளிவாக இருந்தது. 

இது தோழியர் ஐவரின் காதிலும் துல்லியமாக விழுந்தது. ஐவரும் ஒருவரின் ஒருவர் முகம் பார்த்து தலையை அசைத்துக் கொண்டனர்.

பின்னே ஐந்து தோழியரும் சொல்லி வைத்தது போல் சிங்கிள் பெண்மணிகள் ஆயிற்றே. பள்ளி முதல் கல்லூரி, வேலை இப்படி எதிலும் அவர்கள் வழியில் காதல் என்ற பட்டாம்பூச்சி வருடிப் பார்த்ததில்லை. பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்யப் போகிறோம் என்ற முடிவில் இருக்கின்றவர்கள். ஆனால் வாழ்க்கை அவர்களை அதே முடிவில் இருக்க விடுமா? இல்லை திசைமாற்றி விடுமா?.

வரம் தரும்..