சாகரம் 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
“சம்மு எக்சாம் ஹால் டிக்கெட்ட மறந்து வீட்டுலயே வச்சிட்டுப் போயிட்டா… நான் என்னோட சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போய் அவ கிட்ட குடுத்துட்டேன்… அப்போ அம்மு அவ கூட உக்காந்து தமிழ் கைடுல ராமாயணம் மனப்பாடச்செய்யுளைக் காட்டி ஏதோ சொல்லிட்டிருந்தா… ஆனா என்னைப் பாத்ததும் முகத்தைக் கோனார் தமிழ் உரைக்குள்ள புதைச்சுக்கிட்டா… ஏன் இப்போலாம் என்னைப் பாத்தா அம்மு ஒதுங்கிப் போறானு புரிய மாட்டேங்கிறது”
-அமிர்தாவின் சாகரன்
தங்கள் மனதிலுள்ள தயக்கங்களையும் தொழில் மற்றும் கல்வி பற்றிய தங்களின் திட்டங்களையும் வருங்கால வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொண்டதால் உண்டான நிம்மதியுடன் அடுத்து வந்த ஒரு மாத காலத்தில் வித்யாசாகரும் அமிர்தவர்ஷினியும் தங்களது வேலைகளில் கவனமாயினர்.
அமிர்தவர்ஷினியின் பொறுப்பில் சில நிறுவனங்களின் வரி மற்றும் கணக்குகள் ஒப்படைக்கப் பட்டிருந்தன. அது அரைவருடக் கணக்கை முடிக்கும் மாதம் என்பதால் அந்த வேலைகளில் அமிர்தா பிசியாகி விட்டாள்.
கூடவே அடுத்த ஜூனில் அவள் ஃபைனல் தேர்வு எழுதுவதற்கான பாடத்தையும் ஒரு புறம் படிக்க ஆரம்பித்தாள். அதிலேயே அவளது நேரம் சரியாய் கழிந்தது எனலாம்.
இடையிடையே திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு வருகை தரும் மேகவர்ஷினி அவள் கையிலிருந்து புத்தகத்தைப் பிடுங்கி வைத்துவிட்டு அழகுநிலையத்துக்கு அழைத்துச் செல்வது, அவளுக்குத் தேவையான புடவைகள், சுடிதார்கள், டாப்கள் வாங்க ஷாப்பிங் அழைத்துச் செல்வது என அவ்வபோது அவள் மணப்பெண் என்பதை நினைவுறுத்துவாள்.
அமிர்தவர்ஷினிக்கும் இடையிடையே இம்மாதிரியான இளைப்பாறுதல் தேவைப்பட்டது. இல்லையெனில் படிப்பிலும், தொடர்ந்து வந்த கணக்கு வழக்கு வேலைகளிலும் அவளுக்கு உண்டான டென்சனில் தலை முடி கொட்டிப் போயிருக்கும்.
அதனால் தான் என்னவோ திரிபுரசுந்தரி அவளுக்கென மூலிகைத்தைலம் தயாரித்துக் கொடுத்துவிட வார இறுதி விடுமுறையில் அதைக் கூந்தலில் தடவிச் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுக் கூந்தலை அலசினால் அவளுக்குத் தலைபாரம் இறங்கியது போன்ற உணர்வு வரும்.
அவளது நிலை இப்படி என்றால் வித்யாசாகரோ நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தான். கடை விரிவாக்கத்திற்கான வேலைகள் ஒருபுறம் நடக்க அதை மேற்பார்வை செய்து கொண்டே அன்றாட விற்பனையிலும் கவனம் வைத்திருந்தான்.
மேலாண்மையில் சதாசிவம் அவனுக்குப் பக்கபலமாக இருந்தார் என்றால் கணக்குவழக்குகளை அருணாசலமும் ரகுநாதனும் பார்த்துக் கொண்டனர்.
கல்யாணவேலைகளைத் தாங்களே இழுத்துப் போட்டுச் செய்ய முடியாதென்பதால் சதாசிவம் நிச்சயம் முதல் திருமணவரவேற்பு வரை அனைத்து நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டையும் தென்காசியிலுள்ள வெட்டிங் பிளானிங் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
நிச்சயத்திலேயே பூ அலங்காரம் முதல் வீடியோ, சாப்பாடு, மணமேடை அலங்காரம், தாம்பூலப்பை கொடுப்பது என அனைத்தையும் குறை சொல்ல முடியாதபடி அவர்கள் செய்துவிட்டதால் திருமணம் குறித்த பதற்றம் ஏதுமின்றி அவரும் அவரது நண்பர், மகன் மற்றும் பேரனுடன் சேர்ந்து கடை விரிவாக்கப் பணியில் மூழ்கிப் போனார்.
தாலிக்குப் பொன் உருக்குவது. பந்தல் கால் நடுவது, பத்திரிக்கையைக் குலதெய்வக் கோயிலில் வைத்து வழிபாடு நடத்திவிட்டு உறவினர்களுக்குக் கொடுப்பது போன்ற நிகழ்வுகளும் ஒரு பக்கம் எவ்விதக் குறைவுமின்றி நடந்தேறின.
பத்திரிக்கை கொடுக்கும் வேலையை அமிர்தாவின் தாய்மாமாக்களான சங்கரன் மற்றும் நாராயணன் இருவரும் ஹரிஹரனுடன் சேர்ந்து செய்து முடித்துவிட்டனர். மற்றச் சம்பிரதாயங்கள் குறித்த தகவல்களை எல்லாம் வீட்டுப்பெண்கள் வெட்டிங் பிளானரிடம் சொல்லிவிட ஜெகஜோதியாய் திருமண ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டன.
திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே ரகுநாதன் அமிர்தாவை அலுவலகம் வர வேண்டாமென சொல்லிவிட்டவர் வித்யாசாகரிடமும் கடை விரிவாக்கத்தினை இந்த ஒரு வாரம் தானே மேற்பார்வை செய்து கொள்வதாகக் கூறிவிட்டார்.
இருவரும் போனில் பேசிக்கொண்டு அந்த ஏழு நாட்களை வீட்டிலேயே கழித்தனர். உறவுக்காரப்பெண்களின் வருகையும் இளையவர்களின் கேலியுமாகப் பார்வதி பவனமும் லெட்சுமி பவனமும் களை கட்டியது.
அதே போல அமிர்தாவும் மேகாவின் குறும்புப்பேச்சுக்களையும், அவ்வபோது ‘மதினி’ என்று அழைத்து சமுத்ரா செய்த கிண்டல்களையும் ரசித்தபடியே திருமணநாளை எதிர்நோக்கியிருந்தாள்.
திருமணநாளின் காலை அழகாய் விடிந்தது. மிகவும் முக்கியமாக அன்றைய தினம் இருவரைப் பெற்ற அன்னையரும் தங்களது கருத்துவேறுபாடுகளைச் சபை முன்னே காட்டிக் கொள்ளாது பட்டுச்சேலையும், அந்தஸ்தைக் காட்டும் ஆபரணங்களும் அணிந்து சிரித்த முகத்தினராய் வலம் வந்து வீட்டினரின் மனதுக்கு நிம்மதியைக் கொடுத்தனர்.
நிச்சயத்தை விட இருமடங்கு உறவினர்கள் வந்திருக்க மண்டபம் ஜேஜேவென இருந்தது. மணமக்களின் தாத்தா பாட்டிகள், பெற்றோரின் முகமெல்லாம் சந்தோசத்தில் விகசிக்க உறவினர்களை வரவேற்றபடி மண்டபத்தில் உலா வந்தனர் அவர்கள் அனைவரும்.
மணமேடையில் அமர்ந்திருந்த வித்யாசாகர் தனது மனம் கவர்ந்தவளை இன்னும் சில நிமிடங்களில் மணக்கப் போகிற சந்தோசத்தில் இருக்க ஐயர் சொல்லும் மந்திரங்கள் கூட அவன் காதில் காதல் பாடல்களாய் ஒலித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
ஐயர் மணப்பெண்ணை வரச் சொல்லவும் சமுத்ராவும் மேகாவும் மணமகள் அறையில் தயாராகி இருந்த அமிர்தவர்ஷினியை அழைத்து வந்தனர்.
மணமேடையில் அமர்ந்திருந்த வித்யாசாகரின் பார்வை தன்னை நோக்கி வரும் அமிர்தாவையே வளைய வர அவனுக்குப் பின்னே நின்றிருந்த அவனது மாமியாரும் அன்னையும் அதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
விஜயலெட்சுமிக்கு மருமகன் தன் மகளை வைத்தக் கண் வாங்காது பார்த்ததில் சந்தோசம் தான். ஆனால் ஜானகியோ தனது மகனது இச்செய்கையில் துணுக்குற்றார்.
அருகில் நின்ற ரகுநாதனின் கண்கள் அவரைக் கேள்வியாய் ஏறிட்டதில் முகத்தைச் சீராக்கிக் கொண்டார் அப்பெண்மணி. மகன் இவளால் மாறிப் போய்விடுவானோ என்ற சந்தேகம் அந்த நொடியில் அவரது மனதில் உதயமாகிவிட்டது. இருப்பினும் மகனின் திருமணநிகழ்வுகளில் கவனம் பதித்தார் அவர்.
மணமக்களின் சகோதரிகளான சமுத்ராவும் மேகாவும் அமிர்தாவின் அருகில் தேவதைகளாய் ஜொலித்தனர். ஐயர் கொடுத்த மாங்கல்யத்தையும் அட்சதையையும் உறவினர்களிடம் கொண்டு சென்று ஆசிர்வாதம் வாங்கி வந்தவர்கள் அதை மீண்டும் அவரிடம் நீட்ட அவர் அதை வித்யாசாகரிடம் கொடுத்தார்.
வித்யாசாகர் அதை வாங்கியவன் தனது கண்களால் அமிர்தவர்ஷினியின் முகத்தை நோக்க அவள் அந்தக்காலத்துப் பெண்களை போல தலையைக் குனிந்தெல்லாம் அமர்ந்திருக்கவில்லை.
இந்த நொடியிலிருந்து தனது சரிபாதியாய் மாறப் போகிறவனைத் தன் பெரியவிழிகளால் அளவிட்டவள் அவனை நோக்கிப் புன்னகைக்க வித்யாசாகர் தன் கையிலிருக்கும் மாங்கல்யம் கோர்த்த மஞ்சள்சரடைக் கண்ணால் காட்டினான்.
அமிர்தவர்ஷினி சம்மதமாய் தனது இமையைத் தாழ்த்தியவள் தலை குனிந்து அவன் கையால் மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டாள்.
உறவினர்களின் அட்சதை மழையிலும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஆசிர்வாதத்திலும் நனைந்தவர்கள் மூத்த தலைமுறையினரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
அடுத்தடுத்து தேங்காய் உருட்டுதல், அப்பளம் உடைத்தல் போன்ற சம்பிரதாயங்கள் இளையவர்களான மேகவர்ஷினி, சமுத்ரா மற்றும் ஹரிஹரனுடன் பிரணவும் சுந்தரும் சேர்ந்து செய்த கலாட்டாக்களால் இனிதே நடந்தேறியது.
திருமண நிகழ்வுகள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி சீராக நடக்க அருணாசலம் மகளின் திருமணத்தில் செய்ய முடியாத அனைத்தையும் இப்போது செய்து சந்தோசப்பட்டுக் கொண்டார்.
சதாசிவம் திருமண ஏற்பாடு அருமை என உறவினர்களின் புகழ்ச்சி மழையில் நனைந்து கொண்டிருந்தார்.
அவர்களின் குடும்பத்தினரைப் போலவே மணப்பெண்ணும் மணமகனும் கூட ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டே திருமணத்தின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தொடங்கினர்.
இதே சந்தோச மனநிலையுடன் மாலை வரவேற்பும் வந்துவிட்டது. மாலையில் பொன்னிற டிசைனர் சேலையில் அப்சரசாய் ஜொலித்த அமிர்தாவை அள்ளி எடுத்துக்கொள்ளலாம் என துடித்தத் கரங்களை கட்டுப்படுத்தபடியே நின்றிருந்தான் வித்யாசாகர்.
“பெரிய இவனாட்டம் அவ கிட்ட கோயில்ல வச்சு என்னென்னவோ பேசுன… இப்போ என்ன சாருக்குத் திடீர்னு மனசுல ரோமியோனு நினைப்போ? டேய் அவ உன்னைக் காதலிக்கனாலும் நீ சொன்ன சொல்லைக் காப்பாத்துறவன்னு ஒரு நல்லெண்ணம் வச்சிருக்கா… அதை ஸ்பாயில் பண்ணிடாதடா வித்தி”
மனசாட்சி இடித்துரைத்ததும் மணமகன் வித்யாசாகர் மனைவியை விடுத்து அங்கே செய்யப்பட்டிருந்த விளக்கு அலங்காரங்கள், பின்னணியில் ஒலித்த மெல்லிசை, வந்திருந்த உறவினர்களை வேடிக்கை பார்த்தபடியே தன்னையும் அமிர்தாவையும் வம்பிழுக்கும் ஹரிஹரனுக்குப் பதிலளிக்க ஆரம்பித்தான்.
அப்போது இளையவர்கள் ஏற்பாடு செய்தபடியே கேக் வந்துவிட்டது. வித்யாசாகரின் தூரத்து உறவான பரிமளா அத்தை ஜானகியிடம் “இது என்ன ஜானு புதுப்பழக்கம்? ஒருவேளை உன்னோட மருமகளோட குடும்பத்துல இதுல்லாம் வழக்கமோ?” என்று கேட்டுப் பற்ற வைக்கும் வேலையைப் பக்குவமாய் செய்து முடித்தார்.
வெள்ளை நிறத்தில் ஐந்து அடுக்குகளுடன் ஐந்தாவது அடுக்கின் மீது கோட் போட்ட ஆணும், வெண்ணிற கவுன் போட்ட பெண்ணும் ஃபாண்டெண்டில் செய்யப்பட்டு ஒருவரது கரத்தை மற்றொருவர் பற்றியபடி நின்று கொண்டிருக்க கிரீமால் செய்யப்பட்ட இலையுடன் கூடிய ரோஜாமலர்களை வைத்து அலங்கரித்திருந்த கேக்கை வெட்டினர் வித்யாசாகரும் அமிர்தவர்ஷினியும்.
பரிமளாவின் பேச்சைக் கேட்டதும் கேக்கைக் கண்டு ஜானகி முகத்தைச் சுளித்தார். அவரது ஆசார அனுஷ்டானங்களை அறிந்த மேகவர்ஷினி “எக்லெஸ் கேக் தான் அத்தை” என்று சொல்லவும் தான் நிம்மதியுற்றார் அவர்.
வித்யாசாகர் அமிர்தவர்ஷினிக்கு ஊட்டி விட பதிலுக்கு அவளை ஊட்டிவிடச் சொல்லி கலாட்டா செய்தனர் இளையவர்கள்.
வெட்கத்துடன் அவனுக்கு ஊட்டியவளுக்கு அடுத்து இன்னொரு ஆனந்த அதிர்ச்சியாய் அவள் முன்னே முழங்காலிட்டு மோதிரத்தை நீட்டினான் வித்யாசாகர்.
அவள் வாங்காமல் விழிக்கவும் “ஏய் முட்டக்கண்ணி விரலை நீட்டு… அப்புறமா என்னை சைட் அடிச்சுக்கலாம்” என்று சொன்னவன் அவள் நீட்டுவதற்குள் தானே அவளது மோதிரவிரலில் திணித்தான்.
இளையவர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க பெரியவர்கள் அவர்களது இந்தக் கலாட்டாக்களை ரசித்துக் கொண்டிருந்தனர்.
வரவேற்புக்கு வந்தவர்கள் இருவரது ஜோடி பொருத்தமும் அபாரம் என சொல்லிவிட்டுச் செல்ல மகளின் திருமணம் கொடுத்த கசப்பு அனைத்தும் மனதிலிருந்து சுத்தமாக வடிந்ததை போல உணர்ந்தார் அருணாசலம்.
அதே போல விஜயலெட்சுமி அவரது சகோதரிகளிடம் பேசிக் கொண்டிருந்தவர் மேடையில் தனது மகளும் மருமகனும் சகோதரிகள் மற்றும் சகோதரன்களின் வாரிசுகளுடன் புன்னகை ததும்பும் முகத்துடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு
“நம்ம பசங்க எல்லாரும் இதே மாதிரி எப்போவும் ஒற்றுமையா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்? இன்னைக்குத் தான் என் மனசு நிறைஞ்சு போயிருக்கு… என்னோட சுயநலத்தால அன்னைக்குத் தலை குனிஞ்ச நம்ம அப்பா இன்னைக்கு அமிர்தாவோட கல்யாணத்தால எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாருங்க” என்று சொன்னவாறு கண்ணீரை யாருமறியா விதமாய் துடைத்துக் கொண்டார்.
அதன் பின்னர் வரவேற்பு சிறப்பாய் முடிய மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
பார்வதி பவனத்துக்குள் அடியெடுத்து வைக்கும் முன்னர் மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துவிட்டு அதன் பின்னர் தான் உள்ளே அழைத்துச் சென்றார் ஜானகி.
கையோடு மேகவர்ஷினி கொண்டு வந்திருந்த அமிர்தாவின் உடமைகள் வித்யாசாகரின் அறைக்கு இடம் மாற அன்றைய தினம் புதுமணமக்களுக்கு மாடியறையில் தனிமையைக் கொடுத்துவிட்டு குடும்பத்தினர் கீழே உள்ள அவரவர் அறைக்குள் அடைக்கலமாயினர்.
அமிர்தா மெதுவாய் வித்யாசாகரின் அறைக்குள் அடியெடுத்து வைத்தவள் அவனது வார்ட்ரோபுக்கு அருகில் தனது ரோலர் சூட்கேஸ் மட்டும் இருக்க லக்கேஜ் பேக் இல்லாததைக் கண்டு துணுக்குற்றாள்.
தனது உடமைகளைக் கொண்டு வந்த மேகவர்ஷினி அவற்றை ஹால் சோபாவுக்கு அருகில் இருந்த பெரிய கண்ணாடி ஷோகேஸ் அருகில் வைத்த நியாபகம் வரவும் கீழே சென்றாள்.
மாடிப்படிகளின் இடப்புறம் தான் உணவு மேஜை இருந்தது. அந்த இடத்தைக் கடக்கும் போது யாரோ ஒரு பெண்மணி ஜானகியிடம் பேசுவது அமிர்தாவின் காதில் விழுந்தது.
“நீ மேகாவ உன்னோட மகனுக்கு முடிச்சு வைப்பேனு நான் எதிர்பாத்தேன் ஜானு… கடைசில உன் சினேகிதி மகளையே உனக்கு மருமகளா ஆக்கிட்டியே”
“ப்ச்… விடுங்க மதினி… நம்ம நினைக்கிறதா நடக்குது? எல்லாம் பசங்க விருப்பம் தான்… தோளுக்கு மேல வளந்த பையனை என்னால தடுத்து நிறுத்த முடியல”
ஜானகியின் குரலில் இருந்த இயலாமை அமிர்தாவுக்குச் சொன்னது ஒரே ஒரு செய்தியைத் தான். அது என்னவென்றால் தன்னை வித்யாசாகர் திருமணம் செய்ததில் அவனது அன்னைக்கு விருப்பமில்லை என்பதே!
“அதுவும் சரி தான்… ஆனா மேகா பொண்ணு உன் மருமகளா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் ஜானு… அவ இருக்குற இடத்துல கலகலனு சிரிப்புச்சத்தத்துக்குக் குறையே இருக்காதுல்ல”
அவருக்குப் பதில் சொல்ல ஜானகி வாயெடுக்கும் போதே இடையிட்டது ஒரு ஆண் குரல். அது வேறு யாருமல்ல! வித்யாசாகர் தான்.
“என்ன அத்தை இப்பிடி சொல்லுறிங்க? மேகா என் தங்கச்சி மாதிரி… அவளையும் சம்முவையும் நான் வேற வேறனு நினைச்சதே இல்ல… அவளை நான் எப்பிடி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவுமில்லாம எனக்கு அம்மு கிட்ட பிடிச்சதே அவளோட சாந்தமான குணம் தான். அவ மேகா மாதிரி எல்லார் கிட்டவும் சகஜமா பேசுற டைப் இல்ல.. மனுசங்களோட குணத்தைப் பாத்து, யோசிச்சு தான் அவங்க கூட பழகவே ஆரம்பிப்பா… இந்தப் பழக்கம் தான் எனக்கு அவ கிட்ட ரொம்ப பிடிச்சதே! முக்கியமா பெரியவங்களை மதிக்கத் தெரிஞ்சவ… அதனால தான் தாத்தால ஆரம்பிச்சு அப்பா வரைக்கும் எங்க காதலுக்கு எந்த தடையும் சொல்லல”
அதைக் கேட்டதும் அமிர்தாவுக்குத் தன் மேல் யாரோ மலர்களைக் கொட்டியது போல இருந்தது. ஏனெனில் தனக்கு மேகவர்ஷினியைப் போல கலகலப்பான சுபாவம் இல்லையோ என அவளே அடிக்கடி யோசித்து உள்ளம் குமைந்ததுண்டு.
தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் அவளின் இந்தக் குணம் தான் கணவனுக்குப் பிடித்தது என்பதை அவன் வாயாலே கேட்ட பிறகு தனது குணநலன் மீது இருந்த சின்ன மனக்குறையும் அவளுக்கு அகன்றுவிட்டது.
கூடவே அந்த இரு பெண்மணிகளிடம் தனக்காக பரிந்து பேசிய கணவன் அவளது கண்களுக்குக் கதாநாயகனாகத் தோற்றமளித்தான். அவனைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு தான் ஒன்றும் தவறிழைத்துவிடவில்லை என்று இரண்டாம் முறையும் அவளுக்குப் புலனானது.
இந்த இனிய மனநிலையுடன் தனது லக்கேஜ் பேக்கை எடுத்துக் கொண்டு மாடிப்படியேறிய அமிர்தவர்ஷினி இது நாள் வரை அவனது அறையாய் இருந்து இன்று முதல் அவர்களின் அறையாய் மாறியிருக்கும் இல்லற சாம்ராஜ்ஜியத்தின் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்தாள்.