சாகரம் 6

“எனக்கு நித்தியகல்யாணி அம்மன் கோயிலோட சரவுண்டிங் ரொம்ப பிடிக்கும்… சுத்தி நிக்குற மரம், கோயிலுக்கு வெளியே பென்சில் வச்சு கோடு போட்ட மாதிரி ஓடுற ரோடு… ரோட்டுக்கு அந்தப் பக்கம் பச்சைப் பசேல்னு இருக்குற வயல், மரம் அசைஞ்சு வீசுற காத்துல அந்த வயல்ல உள்ள நாற்று அசையுறதுலாம் பாக்குறதுக்குக் கோடி கண் வேணும்! அதனால பாலம் கட்டுற வேலை ஆரம்பிச்சதால நாங்க டெம்ப்ரரியா உள்ள மரப்பாலத்துல தான் நடந்து வந்தோம்… சுந்தருக்கு இங்க மொட்டை போடுறதா சங்கர் சித்தப்பா வேண்டிக்கிட்டாராம்… சோ எல்லாரும் குடும்பத்தோட வந்தோம்… எப்போவும் கவுன் போட்டுச் சுத்துற முட்டக்கண்ணி அம்மு இன்னைக்கு பட்டுப்பாவாடை சட்டை போட்டு பொண்ணு மாதிரி இருந்தா… ஆனா பாவாடை தடுக்கி அடிக்கடி அவ கீழ விழுந்தது காமெடியா இருந்துச்சு”

    -அமிர்தாவின் சாகரன்

அமிர்தவர்ஷினி கணக்கியல் பிரிவைத் தான் பதினோறாம் வகுப்பில் தேர்வு செய்திருந்தாள். அவள் பத்தாம் வகுப்பில் தொண்ணூற்று ஐந்து சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருந்தாள்.

அவளது வகுப்பாசிரியையும் தோழிகளும் அவள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புக்குச் செல்ல வசதியாக அறிவியல் பிரிவையோ அல்லது கணினி அறிவியலையோ தேர்வு செய்வாள் என எண்ணியிருக்க அவள் தெளிவாக முடிவெடுத்துவிட்டு விண்ணப்பத்தில் ‘அக்கவுண்டென்சி’ என எழுதினாள்.

அவள் விண்ணப்பத்தைப் பள்ளியில் கொடுத்த போது அலுவலகத்திலுள்ள பணியாளர் கூட “ஏன் பாப்பா இவ்ளோ மார்க் எடுத்துட்டு அக்கவுண்ட்ஸ் எடுக்குற?” என்று கேட்டு வைக்க

அவளோ “நான் எங்க தாத்தாவ மாதிரி பெரிய அக்கவுண்டெண்ட் ஆகணும்னு ஆசைப்படுறேன்ணா” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அதன் பின்னர் கேட்பவர் அனைவரிடமும் அவள் அதையே சொல்ல அது சதாசிவம் மற்றும் அருணாசலத்தின் காதுகளை அடைந்தது. அருணாசலத்துக்குப் பேத்தியை நினைத்துப் பெருமை பிடிபடவில்லை. அவளும் பதினோறாம் வகுப்பில் சேர்ந்து பாடங்களை ஆர்வத்துடன் படிக்கலானாள்.

அச்சமயத்தில் ஒரு நாள் சதாசிவம் அமிர்தாவிடம் “நீ உன் தாத்தாவ மாதிரி பெரிய அக்கவுண்டெண்ட் ஆகணும்னு சொன்னியாமே?” என வினவ

“ஆமா தாத்தா… எங்க தாத்தா சொல்லுவாங்க அவங்க கணக்கு முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணி நீங்க ரிப்போர்ட் வாங்குவிங்களாம்… அதே மாதிரி எனக்காகவும் எல்லாரும் வெயிட் பண்ணணும்னு ஆசையா இருக்கு தாத்தா” என்றாள் ஆவலுடன்.

அப்போது அந்த சம்பாஷனையினூடே இடையிட்ட ரகுநாதன் “நல்லா யோசி அம்மு… உனக்கு தாத்தாவ மாதிரி பெரிய அக்கவுண்டெண்ட் ஆகணுமா? இல்ல மாமாவ மாதிரி பெரிய ஆடிட்டர் ஆகணுமா?” என்று கேட்க

“ஆடிட்டர்னா அக்கவுண்டெண்டை விட பெருசா ரகு மாமா?” என சந்தேகத்துடன் வினவினாள் அவள்.

அவளது சிகையை வருடிக் கொடுத்தபடியே “ஆமாடா அம்மு… நீ பேலன்ஸ் ஷீட் ஒர்க் அவுட் பண்ணிருக்கியா?” என்று கேட்க அவள் ஆமென தலையாட்டினாள்.

“அந்த பேலன்ஸ் ஷீட்ல ஆடிட்டர் கையெழுத்து போட்டா தான் அதுக்கு மதிப்பே” என்றவர் பட்டயக்கணக்குப்படிப்பின் முக்கியத்துவத்தை வரிசையாக அடுக்க நிதானமாக கேட்டுவிட்டு

“எனக்கும் ஆடிட்டர் ஆக ஆசையா இருக்கு மாமா” என்றவளுக்கு மனதில் அப்போதே அந்தப் படிப்பின் மீது காதல் வந்துவிட்டது எனலாம்.

அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பைக் கவனமாகப் படிக்க வேண்டும் என்பதால் இரண்டு வருடங்களையும் படிப்பிலேயே கழித்தாள்.

பன்னிரண்டாம் வகுப்பில் அவள் தொண்ணூற்று ஆறு சதவிகிதத்துடன் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுவிட அவளின் அன்னைக்கும் தந்தைக்கும் பெருமை பிடிபடவில்லை.

அவள் ஆசைப்பட்டபடியே பட்டயக்கணக்காளர் படிப்பில் அவளைச் சேர்த்துவிட ஆயத்தமானவர்கள் திருநெல்வேலியில் ஒரு மகளிர் கல்லூரியில் அவளை வணிகவியல் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டனர்.

ரகுநாதனின் ஆலோசனைப்படி அவள் பாக்யலெட்சுமியின் இல்லத்தில் தங்கிக்கொண்டாள். கல்லூரி முடிவடைந்ததும் பட்டயக்கணக்குப் படிப்பு வகுப்புக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்ப அவளுக்கு ஸ்கூட்டியும் வாங்கிக் கொடுத்துவிட்டார் உன்னிகிருஷ்ணன்.

பேத்திகள் இருவரும் மேல்வகுப்பு, கல்லூரி என சென்றுவிட்டதால் தாத்தாவைக் காண விடுமுறையில் மட்டும் செங்கோட்டைக்கு வருவர்.

அமிர்தவர்ஷினிக்குப் படிப்பின் மீதிருந்த காதலால் கவனம் சிதறாமல் மூன்று வருடப் பட்டப்படிப்பு முடியும் தருவாயில் அவள் சி.ஏவில் ஐ.பி.சி.சியைக் கிளியர் செய்துவிட்டாள்.

அதன் பிறகு கட்டாயமாக ஆர்ட்டிகிள்ஷிப்புக்காக ஆடிட்டரிடம் பயிற்சி பெற்றே ஆகவேண்டுமென்ற நிலையில் தான் அவள் மீண்டும் செங்கோட்டையில் காலடி எடுத்துவைத்தாள்.

அவ்வளவு கடினமான தேர்வைக் கவனமாய் எழுதி தேர்ச்சி பெற்ற பேத்தியை நினைத்து அருணாசலத்துக்குப் பெருமை தான்.

சதாசிவம் கூட “ஏன் யாருனு தெரியாத ஆடிட்டர் கிட்ட சேரணும்… நம்ம ரகு ஆபிஸ்லயே அம்மு ஆர்ட்டிக்கிள்ஷிப் சேரட்டும்” என்று சொல்லிவிட்டார்.

அதைக் கேட்டபடி நின்ற அமிர்தாவுக்கு அந்த ஏற்பாடு சரியாய் வருமா என்று சந்தேகம் தான். அவளது தயக்கத்துக்குக் காரணமே ஜானகி தான்.

மீண்டும் ஒரு முறை அவரது வாயிலிருந்து தீச்சொற்கள் விழுமென்றால் அவளால் பொறுமையாக இருக்க முடியாது. ஏனெனில் அப்போதைய அமிர்தவர்ஷினி யாரும் சுடுசொல் கூறினால் கண்ணீர் விடும் குழந்தை. இப்போது அப்படி அல்லவே!

கற்றக் கல்வியும், பெற்றோர் துணையின்றி தனியாய் இருந்த காலங்களும் அவளுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. இந்த அமிர்தவர்ஷினியிடம் ஜானகி வார்த்தைகளை அள்ளி வீசினால் அதனால் சேதாரம் அவருக்குத் தான்.

ஆனால் அவருக்குப் பதிலடி கொடுக்கிறேனென தான் சதாசிவத்தையோ ரகுநாதனையோ காயப்படுத்திவிடக்கூடாதே என்ற கவலை தான் அமிர்தாவுக்கு.

அப்போது தங்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஜானகியின் பரிதவித்த பார்வை பார்ப்பதற்கு சுவாரசியத்தைக் கொடுக்கவும் உடனே ரகுநாதனிடம் ஆர்டிக்கிள்ஷிப் சேர ஒப்புக்கொண்டாள் அவள்.

கிடைத்தத் தனிமையில் ஜானகி முணுமுணுத்த போது கூட “என்னோட கவனமெல்லாம் இப்போ என் கோர்ஸை கம்ப்ளீட் பண்ணுறதுல தான் இருக்கே தவிர உங்க அசட்டுப்பிள்ளைய என் பின்னாடி சுத்த வைக்குற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்ல… அதுவுமில்லாம ஊருல இல்லாத அழகனைப் பெத்துட்டிங்க பாருங்க… அந்த ஒல்லிக்குச்சிய சும்மா குடுத்தாலும் நான் வேண்டாம்னு தான் சொல்லுவேன்… வீணா கவலைப்படாதிங்க” என்று அலட்சியம் காட்டி நகர்ந்தாள் அமிர்தவர்ஷினி.

ஜானகி தனது தவப்புதல்வனை ஒல்லிக்குச்சி என அவள் கேலி செய்ததில் கடுப்பாகி விட மாமனாருடன் டெக்ஸ்டைல்சிலிருந்து திரும்பிய மைந்தனிடம் புலம்பித் தீர்த்துவிட்டார் அவர்.

“உன்னையும் தான் திருநெல்வேலிக்கு அனுப்பி படிக்க வைச்சோம்… நீ படிச்ச காலேஜும் அவளோடது மாதிரி ரொம்ப பேமஸ் தான்… ஆனா நீ என்ன அவளை மாதிரி தலை கீழவா நடக்குற வித்தி?”

“மா! நான் படிச்சது டிகிரி… அவ புரொபசனல் கோர்ஸ் படிச்சிருக்கா… கொஞ்சம் ஆட்டிட்டியூட் காட்ட தான் செய்வா”

“அதுக்குனு இவ்ளோ திமிரு ஆகாதுடா அவளுக்கு… இத்துணூண்டு இருந்தப்போ ஊமைக்கோட்டானாட்டம் இருந்துட்டு இப்போ வாயைத் திறந்தா தேள் கொடுக்கு மாதிரில்ல கொட்டுறா! எல்லாம் அருணாசலம் மாமா குடுக்குற இடம்… இதுல பாக்குறதுக்கு வேற கண்ணுக்கு லெச்சணமா இருக்குற திமிரும் சேர்ந்துடுச்சு அவளுக்கு”

ஜானகி அவர் பாட்டுக்குப் புலம்பிவிட்டுச் செல்ல வித்யாசாகர் தான் கடைசியாய் அவளைக் கண்ட தருணத்தை நினைவு கூர்ந்தான்.

அன்றைய தினம் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்காக ஆளுநர் வருகை தந்ததால் திருநெல்வேலி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கவே போக்குவரத்து நெரிச்சலும் அதிகம்.

அதனால் வழக்கத்துக்கு மாறாக சிக்னல் விளக்கின் கட்டளைப்படி வாகனங்களை அனுப்பிக் கொண்டிருந்தனர் காவல்துறையினர்.

வித்யாசாகர் அவனது எம்.பி.ஏ புராஜெக்டை வாங்கிக் கொண்டு நண்பனின் காரில் கல்லூரி விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தவன் முருகன்குறிச்சி சிக்னலில் மாட்டிக்கொண்டான்.

எப்போதடா பச்சைவிளக்கு எரியுமென எட்டிப் பார்த்தவனின் விழிகளில் ஸ்கூட்டி பெப்டில் இளம் ரோஜாவண்ண சீருடை அணிந்து அமர்ந்திருந்த அமிர்தவர்ஷினி பட்டுவிட்டாள்.

அவள் போனிடெயிலை பின்னே தூக்கிப் போட்டுவிட்டு சிக்னல் விளக்கை தனது முட்டைக்கண்ணால் உறுத்து விழித்ததையும், சிக்னல் விழ தாமதமானதில் உதட்டை அவளது அரிசிப்பற்களால் கடித்ததையும் பார்த்தவனுக்கு பார்வையை அவள் முகத்திலிருந்து திருப்பவே விருப்பமில்லை.

திடீரென அவள் முகம் மலரவும் சிக்னல் விழுந்து விட்டது போல என எண்ணியவனுக்கு அவளது ஸ்கூட்டி கிளம்பவும் அவளை ஓடிச் சென்று நிறுத்த வேண்டுமென்ற ஆவல். ஆனால் அவன் காருக்குப் பின்னே நின்றவர்களின் ஹாரன் சத்தம் காரணமாகக் காரைக் கிளப்பினான்.

அவள் பாக்யலெட்சுமியின் இல்லத்தில் தங்கிப் படிக்கிறாள் என்பதை அவன் அறிவான். எனவே விடுதியில் வெளியே செல்ல அனுமதி கிடைக்கும் போது சங்கர் நகருக்குச் சென்று விடுவான். ஆனால் அவனது கெட்ட நேரமோ என்னவோ அவன் செல்லும் போதெல்லாம் அமிர்தா அவளது வகுப்புக்குச் சென்றிருப்பாள்.

அதன் பின்னர் அவனது எம்.பி.ஏவும் முடிந்துவிட நேராக செங்கோட்டைக்கு வந்தவன் தாத்தாவுக்கு உதவியாய் அவர்களின் டெக்ஸ்டைலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டான்.

அந்தச் சிக்னல் சம்பவத்துக்குப் பின்னர் அப்போது தான் அமிர்தவர்ஷினியைப் பற்றிய பேச்சையே கேட்கிறான் அவன். இப்போதும் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை என்பது வேறு விசயம்.

இவ்வாறு ஜானகியின் முணுமுணுப்புக்கும், தாத்தாவின் ஆசைக்கும், அவளை மீண்டும் காணவேண்டுமென்ற வித்யாசாகரின் ஆவலுக்கும் எவ்வித பங்கமும் உண்டாகாதவாறு அமிர்தவர்ஷினி ரகுநாதனின் ரகு அண்ட் அசோசியேட்சில்ஆர்டிக்கிள்ஷிப்புக்காகச் சேர்ந்துவிட்டாள்.

அடிக்கடி அவள் பார்வதி பவனதுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட தருணத்தில் அவளது ஆர்டிக்கிள்ஷிப் முடிந்து ஃபைனல் கோர்ஸில் அவள் சேர்ந்த நேரத்தில் ஒரு நாள் அருணாசலத்திடம் வித்யாசாகர் அமிர்தவர்ஷினியைக் காதலிப்பதாகச் சொல்லவே அருணாசலம் முதலில் அதிர்ந்து போனார்.

ஏனெனில் இதெல்லாம் சாத்தியப்படாது என்பதை அவர் நன்கு அறிவார். மகளுக்கும் ஜானகிக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் இந்தக் காதல் அவர்களுக்குள் இன்னும் கசப்பை உண்டாக்கும் என்று யோசித்தவரின் மனதை மாற்றியவர் சதாசிவம் தான்.

“நம்ம ரெண்டு குடும்பமும் எப்போவும் இதே ஒற்றுமையோட இருப்போம்கிறதுல எந்தச் சந்தேகமும் இல்ல… ஆனா நம்ம சொந்தக்காரங்களாவும் ஆயிட்டா காலாகாலத்துக்கும் நம்ம குடும்பங்கள்ல பிரிவுங்கிறதே வராது”

“அம்மு மாதிரி புத்திசாலித்தனமான பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வர்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம் மாமா… நாங்க உங்க பேத்திய மகாராணி மாதிரி பாத்துப்போம்” என்று ரகுநாதன் உறுதிமொழியே அளித்துவிட்டார்.

அதன் பின்னர் முழு குடும்பமும் அமிர்தவர்ஷினி வித்யாசாகரின் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துவிட அவர்களைப் பெற்ற அன்னையர்களின் முணுமுணுப்பும் முகத்திருப்பல்களும் அர்த்தமற்றுப் போயின.

அமிர்தாவுக்குத் திருமணம் குறித்து கனவுகள் ஏதும் இருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை செங்கோட்டையிலேயே சிறந்த ஆடிட்டர் அருணாசலத்தின் பேத்தி தான் என்ற பெருமையைத் தாத்தாவுக்கு வாங்கித் தர வேண்டும். அவ்வளவு தான்!

அதை ரகுநாதனின் மருமகளாகவும் வித்யாசாகரின் மனைவியாகவும் பார்வதிபவனத்தின் புதிய உறுப்பினராகவும் இருந்து கொண்டும் நிறைவேற்றலாம் என்று மேகவர்ஷினியும் சமுத்ராவும் எடுத்துக் கூற அவளும் அதே கோணத்தில் யோசித்துத் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிவிட்டாள். கூடவே அவளது தாத்தாவே சொன்ன பிறகு அவளுக்கு மறுத்துப் பேசும் எண்ணமில்லை.

சம்மதம் சொன்னபோது ஜானகியின் முகம் இறுகியது அமிர்தாவுக்கு இன்னும் சந்தோசத்தையே கொடுத்தது. இனி அவரது மைந்தனை ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒளித்து வைத்தாலும் சதாசிவம் அவனைத் தேடிப் பிடித்துத் தனது கழுத்தில் தாலி கட்ட வைத்துவிடுவார் என நக்கலாக எண்ணியவள் ஜானகியின் திருப்தியின்மைக்காகவே மிகவும் சந்தோசமாக இருப்பதாக காட்டிக் கொண்டாள்.

ஜானகியும் விஜயலெட்சுமியும் வெளிப்படையாகவே தங்களது விருப்பமின்மையைக் காட்டிக்கொண்டனர். இவ்வாறு ஒரு காலத்தில் உயிர்த்தோழிகளாக இருந்து பின்னர் விதியின் சூழ்ச்சியால் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் இன்று சம்பந்திகள் வேறு ஆகிவிட்டனர்.

அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு இன்று நிச்சயதார்த்தம் முடிவடைந்தும் விட்டது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்து அருணாசலம் பெருமூச்சுவிட்டார்.

சுற்றி முற்றி பார்த்தவருக்கு மண்டபத்தில் மக்கள் கூட்டம் குறைந்திருந்தது அப்போது தான் கருத்தில் பட்டது.

அதன் பிறகு தான் பழைய நினைவுகளில் நீண்டநேரம் ஆழ்ந்துவிட்டதை உணர்ந்தவராய் நிகழ்காலத்துக்கு வந்தார் அருணாசலம்.

அவரிடம் வந்து அமர்ந்த உன்னிகிருஷ்ணன் “உங்களுக்கு உடம்புக்குச் சரியில்லயா மாமா? வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறிங்களா?” என்று அக்கறையாய் வினவ

“இல்ல மாப்பிள்ளை… எல்லாம் பழைய நியாபகம் தான்… அம்முவ பத்தியும் வித்திய பத்தியும் யோசிச்சிட்டு இருந்தேன்… நேரம் போறதே தெரியல… நடந்த தப்பு எல்லாம் சரியாகுறதுக்கான சந்தர்ப்பம் இந்தக் கல்யாணம் தான்… இதுல ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்தையும் என் பேத்தி செய்யுறத நான் கண்ணாற பாக்கணும்… அப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும்” என்று சொன்னார் அருணாசலம்.

மகள் திருமணத்தில் தவறியதை பேத்தியின் திருமணத்தில் பிடிக்க நினைப்பவரின் பேச்சில் உள்ள நியாயமான ஆசை உன்னிகிருஷ்ணனை அவரது பேச்சுக்குத் தலையாட்ட வைத்தது.

பெரியவர்களின் மனநிலை இவ்வாறு இருக்க வித்யாசாகர் காதலித்தவளைக் கரம் பிடிக்கப் போகும் மகிழ்ச்சியில் முகம் முழுவதும் ஜொலிக்க மணமேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் தோழர்கள் சகோதரி சூழ அமிர்தவர்ஷினியுடன் அமர்ந்திருந்தான்.

சுந்தரும் பிரணவும் ஹரிஹரனுடன் சேர்ந்து அவனைக் கலாய்க்க அதைக் கேட்டு அமிர்தா கேலியாய் நகைத்தாள். உடனே மேகாவும் சமுத்ராவும் வரிந்து கட்டிக் கொண்டு வித்யாசாகருக்கு ஆதரவாய் பேச அவன் அமிர்தவர்ஷினியை அமர்த்தலாகப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

கூடவே அவள் புறம் குனிந்தவன் “வீட்டுக்குப் போனதும் நான் கால் பண்ணுறேன்… உன் கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்று சொல்ல அவள் தலையாட்டி வைத்தாள்.

முழுதாய் மூன்று வருடங்கள் அவளது ஆர்டிக்கிள்ஷிப் முடியட்டும் என பொறுமையாய் காத்திருந்து தன் காதலை அவளிடம் சொல்வதற்கு முன்னர் முறைப்படி பெரியவர்களிடம் சொல்லி அவர்கள் சம்மதத்துடன் காதலை வெளிப்படுத்தியவன் மீது அவளுக்கும் மரியாதை எல்லாம் எக்கச்சக்கம் தான்.

ஆனால் காதல் இருந்ததா என்றால் அதற்கு அமிர்தாவிடம் பதிலில்லை. அவள் பாசமும் மரியாதையும் வைத்திருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வித்யாசாகர் என்றால் மிகவும் இஷ்டம். அவளுக்கும் அவன் இளவயது விளையாட்டுத்தோழன் தானே! எனவே சம்மதமாய் தலையாட்டியவள் அறியவில்லை இதே வித்யாசாகரிடம் அவள் அளவற்றக் காதலைக் கொட்டப் போகிறாள் என்பதை.