சாகரம் 5

“தெருவுல எல்லார் வீட்டுலயும் ஜென்மாஷ்டமிக்குப் பட்சணம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க… சம்முவும் அம்முவும் ராதை கெட்டப் போடப்போறாங்களாம்… ராதைக்கு முடி என்ன கழுத்தளவுக்கா இருக்கும்னு கேட்டு நான் ஆச்சி கிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன்… அதுங்க என்னமும் பண்ணட்டும்… என்னோட கவனமெல்லாம் வெல்லச்சீடை மேல தான்”

    -அமிர்தாவின் சாகரன்

விடுமுறை முடிய இன்னும் நாட்கள் இருந்தது. எனவே குழந்தைகள் உற்சாகமாய் விளையாட்டுகளில் நேரத்தைப் போக்கினர். வித்யாசாகரும் ஹரிஹரனும் தினமும் டியூசனுக்குச் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவர். சமுத்ரா அவளது நடனப்பயிற்சிக்குச் சென்றுவிடுவாள்.

அவர்கள் எப்போது வருவார்கள் என மேகவர்ஷினியோடு சுந்தரும் பிரணவும் காத்திருப்பார்கள். இப்போது அமிர்தவர்ஷினியும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டாள்.

அவர்கள் வந்ததும் மதியவுணவுக்குப் பின்னர் விளையாட்டு களை கட்டும். மிகவும் களைத்துச் சோர்ந்து போன நாட்களில் கேரம், சதுரங்கம், சீட்டு விளையாடுவார்கள்.

அதுவே உற்சாகத்துடன் இருந்தால் கிரிக்கெட்டும், அவர்கள் கண்டுபிடித்த டைனோசர் விளையாட்டுமாய் தோட்டம் அல்லோகலப்படும். அந்தத் தோட்டம் இருவீட்டாருக்கும் பொது என்பதால் கிணற்றில் நீரிறைக்க வரும் போதெல்லாம் ஜானகியின் கண்ணில் அமிர்தா படுவாள்.

கள்ளமில்லா முகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் அச்சிறுமி மீது அவருக்கு எந்தத் துவேசமும் இல்லை தான். ஆனால் இடையிடையே குழந்தைகளுக்கு பழச்சாறு நொறுக்குத்தீனியைக் கொண்டு வந்து நீட்டும் விஜயலெட்சுமியைக் கண்டுவிட்டால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும்.

அப்படி தான் அன்றைய தினம் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த இளையவர்களுக்கு எலுமிச்சம்பழச்சாறோடு ஓமப்பொடியைக் கொண்டு வந்து நீட்டிய விஜயலெட்சுமியிடம் வித்யாசாகர்

“அத்தை டெய்லி ஓமப்பொடி சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு… எனக்கு ரிப்பன் பக்கோடா செஞ்சு தர்றிங்களா?” என ஆசையாய் கேட்க

“என் மருமகனுக்கு இல்லாததா? கொஞ்சநேரம் வெயிட் பண்ணு… அத்தை பக்கோடாவோட வர்றேன்” என்று அவன் சிகையை வாஞ்சையுடன் கோதிவிட்டுச் சென்றார் அவர்.

இக்காட்சி ஜானகியின் கண்ணில் பட்டு அவரது இரத்தக்கொதிப்பை அதிகமாக்கியது. “இவளுக்கு என் மகன் மருமகனாக்கும்?” என்று நொடித்துக் கொண்டார்.

அதே நேரம் வித்யாசாகர் கையில் வைத்திருந்த சீட்டுக்கட்டுகளை எட்டிப் பார்க்கிறேன் என அமிர்தவர்ஷினி அவனது கரத்தை இறுக்கமாகப் பற்றி இருந்தது வேறு அவரது பார்வையில் விழுந்து வைக்க அடுத்த நிமிடமே

“அம்மைக்குத் தப்பாம பிறந்திருக்கா இந்தக் குட்டிச்சாத்தான்… பெரிய மனுஷியானதுக்கு அப்புறமும் என்ன பசங்களோட விளையாட்டு வேண்டியது கிடக்கு?” என்று கறுவிக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

ஆனால் அமிர்தாவின் வயதே ஆன சமுத்ராவும் ஹரிஹரனும் அங்கே அடிபிடி சண்டையிடுவதை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் சமுத்ராவை ஜெயலெட்சுமி வாய் நிறைய மருமகளே என்று விளிப்பதை முகம் ஜொலிக்க காதில் தேன் பாய்வது போன்ற உணர்வுடன் கேட்டுக் கொண்டிருப்பவர் தான் ஜானகி!

மருமகள் அல்லது மருமகன் என்ற உரிமையான அழைப்பு அவரைப் பொறுத்தவரை தவறில்லை. அதைச் சொன்னவரை வைத்து தான் அதற்கான அர்த்தம் சரியானதாகவோ தவறானதாகவோ ஜானகியால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜானகி தான் அவ்வாறு கோணலாகச் சிந்தித்தாரே தவிர வித்யாசாகர் என்றுமே அமிர்தவர்ஷினியைத் தவறான கோணத்தில் பார்த்ததில்லை. மேகவர்ஷினி, ஹரிஹரன் மற்றும் சிறுவர்களான சுந்தர் மற்றும் பிரணவைப் போல அவளும் அவனுக்கு ஒரு விளையாட்டுத்தோழி மட்டுமே!

இவ்வாறிருக்க ஜானகியின் மனக்குமுறல் அமிர்தவர்ஷினி மீது கோபமாய் வெடிக்கும் நாளும் வந்தது.

வித்யாசாகரின் டியூசன் சென்டருக்கு முத்துசாமி பூங்காவைத் தாண்டித் தான் செல்லவேண்டும். அப்படி ஒரு நாள் டியூசன் முடிந்து வரும் போது அமிர்தாவும் மேகாவும் பூங்காவில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு அந்தப் பகுதிக்கு அருகில் தானே விஜயலெட்சுமியின் வீடு உள்ளது என்பது நினைவுக்கு வரவும் அவரது வீட்டை நோக்கிச் சைக்கிளை அழுத்தினான்.

அவர் சொன்ன லேண்ட்மார்க் படி அமைந்திருந்த சேஷன் நிவாஸை கண்டுபிடித்தவன் வீட்டினுள் பூனை போல அடியெடுத்து வைத்து விஜயலெட்சுமியை ஆச்சரியத்தில் ஆழ்த்த அவரும் முதல் முறை தன் வீட்டுக்கு வந்த உயிர்த்தோழியின் மைந்தனை மகிழ்ச்சியாய் வரவேற்றார்.

வித்யாசாகர் அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த உன்னிகிருஷ்ணனும் விஜயலெட்சுமியும் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைக்  காட்டிவிட்டு “நீங்க அந்த போட்டோல அழகா இருக்கிங்க அத்தை… மாமாவும் யூத்ல செம ஹாண்ட்சம்மா இருந்துருக்காரு” என்று பேசிக்கொண்டே அவர் கொடுத்த திண்பண்டத்தைக் காலி செய்தான்.

“நீ உக்காந்து டிவிய பாரு வித்தி… மேகாவும் அம்முவும் பார்க்குக்கு விளையாடப் போனவங்க இன்னும் வரல… நான் போய் கூட்டிடு வர்றேன்” என்று சொன்னபடி எழுந்திருக்க அவரை அமருமாறு சொன்னவன், தான் அவர்களை அழைத்துவருவதாகச் சொல்லிவிட்டு பொடிநடையாய் முத்துசாமி பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அங்கே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவர்களிடம் “ஏய் வாலுங்களா? ஊஞ்சல் கிடைச்சா போதும், வீடு சாப்பாடு கூட மறந்துடுமே… வாங்க… அப்புறமா விளையாடிக்கலாம்” என்று அழைக்க அவர்களும் அவனோடு கிளம்பினர்.

பூங்காவின் நடுவே செல்லும் சிமெண்ட் பாதையில் நடந்தவர்கள் திடீரென அதிர்ந்து சிலையாய் நின்றனர்.

ஏனெனில் அந்தச் சிமெண்ட் பாதையின் நடுவே நின்று கொண்டிருந்தது கிட்டத்தட்ட மேகாவின் உயரத்தில் வளர்ந்திருந்த செம்மறி ஆடு. அதன் வளைந்திருந்த கொம்புகளும், முறைத்தப் பார்வையும் மூவருக்கும் பீதியை உண்டாக்க வித்யாசாகர் அவர்களைப் பின்னே நகரச் சொன்னான்.

மூவரும் பின்னோக்கி அடியெடுத்து வைக்க ஆடு அவர்களை நோக்கி முன்னேறியது.

பயத்தில் இதயம் வேகமாகத் துடிக்க வித்யாசாகரும் மேகாவும் நிற்கும் போதே அமிர்தா சிமெண்ட் பாதையின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருந்த காட்டுச்செடிகளினூடே கிடைந்த மரக்குச்சியை எடுத்து ஆட்டுக்குப் பயம் காட்டவும் அது தயங்கி பின்னடைந்தது.

 அதைப் பயன்படுத்திக் கொண்டு மூவரும் வீட்டுக்குச் செல்லும் வழியை நோக்கி வேகமாக ஓட, முதலில் தயங்கிய ஆடு தலையைச் சிலுப்பிக் கொண்டு இப்போது அவர்களைத் துரத்த ஆரம்பித்தது.

மூவரும் தப்பித்தோம் பிழைத்தோமென பின்னே திரும்பி பார்த்தபடியே வீடு இருக்கும் திசையை நோக்கி ஓட, வித்யாசாகர்

“எல்லாத்துக்கும் இந்த முட்டக்கண்ணி தான் காரணம்… சும்மா முறைச்ச ஆட்டை கம்பைக் காட்டி துரத்த வச்சிட்டா… ஐயோ அது கொம்பை பாத்தாலே பீதியாகுதே” என்று கடுப்புடன் சொல்லிக் கொண்டே வீதியில் ஓடிவந்தவன் இறுதியாய் சேஷன் நிவாஸின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓட அவனைத் தொடர்ந்து ஓடிவந்த அமிர்தாவும் மேகாவும் உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டனர்.

மூவருக்கும் மூச்சு வாங்க ஆரம்பிக்க அமிர்தா மெதுவாக அந்த கதவுத்தாழ்ப்பாளின் துளை வழியே வெளியே பார்க்க ஆடு இன்னும் அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தது.

மூச்சு வாங்க “அந்த ஆடு வெளிய தான் நிக்குது” என்றவளை அவன் முறைத்து வைத்தான்.

“எவ்ளோ பெரிய கொம்பு அதுக்கு? அது மட்டும் நம்மளை முட்டியிருந்தா நம்ம செத்துருப்போம்” என்றாள் மேகா கண்ணை விரித்துப் பயத்துடன்.

பின்னர் சில நிமிடங்கள் காத்திருந்து வெறுத்துப் போன ஆடு அங்கிருந்து சென்றுவிட விஜயலெட்சுமி அவர்கள் ஆட்டுக்குப் பயந்து ஓடி வந்த கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

வித்யாசாகரிடம் உச்சி வெயிலில் வீட்டுக்குச் செல்ல வேண்டாமென்றவர் மூவருக்கும் மதியவுணவைப் பரிமாறியபடியே அவர்களது குழந்தைத்தனமான பேச்சில் கலந்து கொண்டார்.

வித்யாசாகர் அவனது அத்துணை வருட வாழ்க்கை வரலாற்றையும் ஒரே மதியத்தில் விஜயலெட்சுமியிடம் சொல்லிக் கொண்டிருக்க அவரும் உம் கொட்டி ஆர்வத்துடன் தோழியின் மகனது பிரலாபத்தைக் கேட்க ஆரம்பித்தார்.

அவனது பேச்சில் மாலை வரை நேரம் போனதே தெரியவில்லை. இவனைப் பற்றி தனது குடும்பத்தினர் சொன்னவை அனைத்தும் உண்மை தான் போல!

நிஜமாகவே பேச்சில் மன்னன் தான் தனது தோழியின் மைந்தன் என எண்ணியவாறே மூவருக்கும் தேநீர் போட்டுக் கொடுத்தவர் மூவருடனும் சேர்ந்து தந்தையின் வீட்டுக்குச் செல்லக் கிளம்பினார்.

மேகா வித்யாசாகரின் சைக்கிளில் அமர்ந்து கொள்ள அவன் சைக்கிளை உருட்டியபடியே நடந்து வந்தான். விஜயலெட்சுமி அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

ஒரு வழியாக பொடி நடையாகவே லெட்சுமி பவனத்துக்கு வந்துவிட்டனர் நால்வரும். அங்கே ஹரிஹரன் வித்யாசாகருக்காக காத்திருந்தான்.

“டேய் வித்தி! மதியத்துல இருந்து நான் உன்னைத் தேடுனேன்டா,.. எங்க போன நீ?”

வித்யாசாகர் செம்மறியாடு துரத்திய கதையிலிருந்து ஆரம்பித்து ஒரு வரி விடாமல் சொல்லி முடித்தான்.

பின்னர் தங்கள் இல்லத்தில் புத்தகப்பையை வைத்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அங்கே பார்வதி பவனத்தில் ஜானகியிடம் மதியம் வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றியதற்காக அவனுக்கு மண்டகப்படி காத்திருந்தது.

அவன் அது தெரியாமல் எப்போதும் போல வீட்டுக்குள் நுழைந்தான். எடுத்ததும்

“எங்கடா சுத்திட்டு வர்ற? இன்னைக்கு உன்னை காவேரி சுந்தரம் டாக்டர் வீடு இருக்குற ஏரியால பாத்தேன்னு சிலர் சொன்னாங்க” என்று ஜானகி ஆரம்பிக்கவும் அவரது மைந்தன் அவரிடமும் ஹரிஹரனிடம் சொன்ன அனைத்தையும் சொல்லிவிட்டான்.

“சும்மா சொல்லக் கூடாதும்மா.. விஜி அத்தையோட சமையல் செமயா இருந்துச்சு… புளிச்சேரினு ஒன்னு வச்சிருந்தாங்க… வாவ்” என்று அவன் சிலாகித்தபடியே சென்றதைக் கேட்ட ஜானகியின் மனதில் தீ எரியத் தொடங்கிவிட்டது.

அத்தோடு விட்டிருந்தால் அந்தத் தீ அணைந்திருக்கும். ஆனால் அதற்கு பின்னர் இளையவர்கள் அனைவரும் அவர்களின் விருப்பமான டைனோசர் விளையாட்டை விளையாடலாம் என தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது தான் ஆரம்பித்தது வினை.

ஒரு முறை சங்கரனும் நாராயணனும் குழந்தைகளுக்குப் பிடிக்குமென ஜுராசிக் பார்க் ஹாலிவுட் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பாகங்களின் சிடிக்களைப் போட்டுக் காட்டியிருந்தனர். அதைப் பார்த்தவர்கள் அந்த டைனோசருக்குப் பரமவிசிறி ஆகிப்போனார்கள்.

அப்போது ஹரிஹரனும் வித்யாசாகரும் சேர்ந்து கண்டுபிடித்தது தான் அந்த டைனோசர் விளையாட்டு. ஹரிஹரன் சமுத்ராவையும் வித்யாசாகர் மேகாவையும் உப்புமூட்டையாகத் தோளில் தூக்கிக் கொண்டு டைனோசர்களாக ஓடுவர். சுந்தரும் பிரணவும் தான் டைனோசரிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள்.

அவர்களின் தோட்டத்தில் விருட்சங்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் மரங்களில் ஏறியும் குறுமரங்களை உலுக்கியும் அவர்கள் இந்த விளையாட்டைத் தொடர்வர்.

இந்த விளையாட்டு தற்போது அமிர்தாவையும் அடிமைப்படுத்தி விட்டது. அவள் எப்போதும் ஹரிஹரனின் முதுகில் உப்பு மூட்டை ஏறிக் கொண்டு டைனோசர் போல சத்தமிட அவன் தங்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவான்.

அன்றைய தினம் மாலையும் அவ்வாறு விளையாடத் திட்டமிட்ட போது தான் சமுத்ரா தனக்கு உடல்நலமில்லை என வர மறுத்துவிட்டாள். எனவே மற்ற அறுவர் மட்டும் விளையாட ஆரம்பித்தனர்.

ஆனால் இம்முறை மாறுதலுக்காக அமிர்தாவை வித்யாசாகரும், மேகாவை ஹரிஹரனும் உப்புமூட்டையாகத் தூக்கிக் கொண்டு ஓட பிரணவும் சுந்தரும் பயந்தவர்களாக நடித்தபடி தோட்டத்தில் ஓட ஆரம்பித்தனர்.

அங்கே இருந்த மரங்களில் அவர்கள் ஏறிக்கொள்ள ஹரிஹரனும் வித்யாசாகரும் மரத்தைப் பிடித்து உலுக்குவது போல நடித்தனர்.

அப்போது இவர்களின் சத்தம் கேட்டு மொட்டை மாடியில் காய வைத்த வடகத்தை எடுக்க வந்த ஜானகி வித்யாசாகரின் முதுகில் அமிர்தா உப்பு மூட்டை ஏறியிருப்பதைக் கவனித்தவர் ஏற்கெனவே இருந்த கோபத்துடன் அதுவும் சேர்ந்து கொள்ள பத்ரகாளி அவதாரம் எடுத்தபடியே மாடியிலிருந்து இறங்கிவந்தார்.

அவர் வருவதற்குள் விளையாட்டு முடிந்து ஹரிஹரனுடன் மற்றவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட அமிர்தா வழக்கம் போல ஆற்றின் படிக்கட்டுகளை நோக்கி செல்ல அவள் கையைப் பிடித்து நிறுத்தினார் ஜானகி.

அவள் சாதாரணமாக “சொல்லுங்க ஜானு அத்தை” என்று கேட்கவும்

“என்னடி உன் கிட்ட சொல்லணும்? வயசு பதினாலு ஆகுதுல்ல… இன்னும் என்ன சின்னகுழந்தை மாதிரி ஆம்பளை பையன் கூட சேர்ந்து விளையாடுற? பெரிய மனுசி ஆனதுக்கு அப்புறம் பொண்ணா அடக்கமா இல்லாம அதென்ன ஓனு கூப்பாடு போட்டு விளையாட்டு கேக்குது உனக்கு? இப்பிடி வாய் கிழிய கத்துனு சொல்லித் தான் உங்கம்மை உன்னை வளத்தாளோ?” என்று வசைமாரி பொழிந்தார் அவர்.

அமிர்தாவிடம் இது வரை யாரும் இவ்வாறு பேசியதில்லை. அவளுடைய பெற்றோரும் சரி; தாத்தா வீட்டினரும் சரி, அம்மு என்று அழைத்து ஆதுரத்துடன் தான் பேசுவர்.

ஆனால் இன்று ஜானகி நெருப்பாய் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிடினும் ஜானகிக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்துவிட்டது.

அந்த எண்ணம் அவளது பிஞ்சு மனதில் காயமுண்டாக்க தனது கையை அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டவள் கண்ணீருடன் திரும்ப அங்கே விஜயலெட்சுமி கல் போல இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

தோழிக்குத் தன் மீது கோபம் இருக்குமென்பது அவர் எதிர்பார்த்த விசயம் தான். ஆனால் இன்று தன் மகளிடம் ஜானகி அள்ளி வீசிய வார்த்தைகளை ஒரு தாயாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இனிமே என் பொண்ணு உன் பையன் கூட விளையாட வர மாட்டா ஜானகி… ஏன்னா பிடிக்காதவங்க கிட்ட ஒதுங்கிக்கிறது அவளோட சுபாவம்… வேற எதையும் சொல்லி வளத்தேனோ இல்லையோ, இக்னோர் நெகடிவிட்டினு அழுத்தமா சொல்லி வளத்துருக்கேன்” என்று சொன்ன விஜயலெட்சுமி மகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அன்றைய தினம் முதல் அமிர்தவர்ஷினி வித்யாசாகர் இருக்கும் திசையில் கூட தலை வைத்துப் படுப்பதில்லை. விடுமுறை முடிந்து மேகா திருநெல்வேலிக்கும், ஹரிஹரன் புளியரைக்கும் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

வித்யாசாகருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டுமென்பதால் விளையாடுவதற்கெல்லாம் அவனுக்கு நேரம் இல்லை. பள்ளி திறந்ததும் அவன் படிப்பில் கவனமாகிப் போனான்.

அமிர்தவர்ஷினி தினமும் தாத்தா வீட்டுக்கு வருபவள் தாத்தாக்களிடமும் ஆச்சிகளிடமும் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிடுவாள். ஏனெனில் அவளுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழ்நிலை.

அமிர்தவர்ஷினியும் வித்யாசாகரும் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அதன் பிறகு அமையவில்லை. ஏனெனில் கல்லூரிப்படிப்புக்கு அவன் திருநெல்வேலிக்குச் சென்று விடுதியில் தங்கிவிட்டான்.

எது எப்படியோ அவர்கள் சந்தித்துக் கொள்ளாததில் அவர்களைப் பெற்ற அன்னையர் மிகவும் நிம்மதியாக இருந்தனர். ஆனால் அந்த நிம்மதி நிரந்தரம் இல்லையென எப்போதோ விதி தனது குறிப்பேட்டில் எழுதிவிட்டதே!