சாகரம் 23 (Pre-final)

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

இன்னும் கொஞ்சநேரத்துல எனக்கும் அம்முக்கும் மேரேஜ் ஆகப் போகுதுஅந்த ஸ்பெஷல் மொமண்டுக்காக நான் ஈகரா வெயிட் பண்ணிட்டிருந்தேன்முகூர்த்தநேரம் வந்ததும் மணமேடைக்கு வந்து என் பக்கத்துல உக்காந்த அம்முவ விட்டு என்னால கண்ணை எடுக்க முடியலஅப்போ என் மனசுல உண்டான சந்தோசத்தை என்னால வார்த்தைல சொல்ல முடியலஇது காதல் கை கூடுனதால உண்டான சந்தோசம் மட்டும் இல்லஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்ட ரெண்டு பேர் ஃபேமிலி சப்போர்ட்டோட வாழ்க்கைல கணவன் மனைவியா ஒன்னு சேர்ற அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைக்காது இல்லயா? அந்த வகைல நானும் அம்முவும் வெரி வெரி லக்கியஸ்ட் கபிள் இன் த வேர்ல்ட்

                                                        –அமிர்தாவின் சாகரன்

ஹரிஹரன் “உன் கிட்ட கிங் தானே இருக்கு… என் கிட்ட குயின் இருக்குடி சம்மு” என்று டைமண்ட் சீட்டை வைக்க சமுத்ரா முகத்தைச் சுருக்கிக் கொண்டாள்.

அவன் நக்கலாகச் சிரித்தபடியே வித்யாசாகருக்கு ஹைஃபை கொடுக்க சுந்தரும் பிரணவும் உடன் சேர்ந்து கொண்டனர். சமுத்ரா தோற்றுவிட்டதாக எண்ணி தன்னருகில் அமர்ந்திருந்த அமிர்தாவைப் பரிதாபமாகப் பார்க்க அவளோ நான் இருக்கிறேன் என அபயம் அளித்தாள்.

அவர்கள் அனைவரும் நீண்டநாட்களுக்குப் பின்னர் ஒன்றாகச் சேர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். வழக்கம் போல ஹரிஹரன் திறமையாக விளையாடி ஜெயிக்கும் தருவாய்க்கு வந்துவிட்டான்.

மிச்சமிருந்தவர்கள் அமிர்தவர்ஷினியும் சமுத்ராவும் மட்டுமே. சமுத்ராவின் சீட்டு ஹரிஹரன் போட்ட கடைசி சீட்டை விட பெரியது என்பதால் அவளிடம் இரண்டு சீட்டுகள் மிச்சமிருக்கும். எனவே அவள் தோற்றுவிட்டாள் என அனைவரும் எண்ணிக் கொண்டனர்.  

ஆனால் அவர்கள் அனைவரும் அமிர்தா இன்னும் ஆட்டத்தில் இருப்பதை மறந்துவிட்டனர். அவள் மெதுவாக தனக்குப் பின்னே மறைத்து வைத்திருந்த சீட்டை எடுத்துவைத்தாள்.

“என் கிட்ட ஸ்பேட் டூ இருக்கே” என்று சொல்லிவிட்டுத் தலையாட்டவும் அனைவரும் இவ்வளவு நேரம் இந்தச் சீட்டு எங்கே இருந்தது என வாயைப் பிளந்தனர்.

“ஏய் முட்டக்கண்ணி அப்போ நாங்க ஸ்பேட் சீட்டை இறக்குனப்போ நீ யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சிருந்தியா? ஹரி இவ இன்னும் மாறலடா… முன்னாடி மாதிரியே சீட்டிங் பண்ணி விளையாடுறா” என்று குற்றம் சாட்டினான் வித்யாசாகர்.

அமிர்தவர்ஷினியோ “இதுக்குப் பேர் ராஜதந்திரம் மிஸ்டர் சாகர்… உங்களுக்கு அது இல்லனு ஒத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு இல்லாத காலரை உயர்த்திவிட்டுப் பெருமைப்பட்டுக்கொண்டாள்.

வித்யாசாகருடன் சேர்ந்து அனைவருமே அவளைக் கொலைவெறியோடு பார்க்க அவளோ “விடுங்கயா… எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” என்று அமர்த்தலாகச் சொல்லிக் கொண்டாள்.

“இது லவ்வும் இல்ல… வாரும் இல்ல… ஆப்டர் ஆல் சீட்டாட்டம்… இதுல சீட் பண்ணிட்டு ஜெயிச்சுட்டு அதைச் சமாளிக்க இவ்ளோ சீன் போடுற நீ” என கடுப்புடன் மொழிந்த வித்யாசாகரை ஹரிஹரன் அமைதிப்படுத்தினான்.

அதன் பின்னர் இந்த விளையாட்டு வேண்டாம் என்றான் பிரணவ். கேலியாக ஐவரையும் பார்த்தவன் “நம்ம டைனோசர் கேம் விளையாடுவோமா?” என்று நமட்டுச்சிரிப்புடன் கேட்கவும் ஹரிஹரனும் வித்யாசாகரும் அவனைக் கொலைவெறியுடன் ஏறிட்டனர்.

“ஏன்டா இப்பிடி? அப்போ இதுங்க ரெண்டும் கொஞ்சம் ஒல்லியா இருந்துச்சுங்க… இப்போ ஐம்பது கிலோ அரிசிமூட்டை மாதிரி மாறிட்டிதுங்க… இதுங்கள தூக்கி எங்க முதுகை நாங்க பறிகொடுக்கவா?” என்றான் ஹரிஹரன் பரிதாபமாக.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

 அதைக் கேட்டு வித்யாசாகர் சத்தம் போட்டு நகைக்க சமுத்ராவும் அமிர்தாவும் அவனது கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர்.

சுந்தர் தான் அவர்களிடமிருந்து வித்யாசாகரைக் காப்பாற்றினான். பின்னர் அவனே சதுரங்கம் விளையாடலாம் என்று சொல்ல

வித்யாசாகர் கழுத்தைத் தடவிக்கொண்டு “அதுலயும் உங்க அக்கா சீட் பண்ணுவாடா… அவ ரூல்படி விளையாடுவானா நான் வருவேன்… இல்லனா என்னைக் கூப்பிடாதிங்கடா” என்றான் பொருமலுடன் அமிர்தாவை பார்த்தபடியே.

அதன் பின்னர் பரிதாபப்பட்டு அமிர்தவர்ஷினி ஏமாற்ற மாட்டேன் என வாக்கு கொடுத்த பின்னர் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தனர் அறுவரும்.

ஆட்டம் விறுவிறுப்பாய் சென்று கொண்டிருந்த நேரத்தில் வித்யாசாகருக்கு மொபைலில் அழைப்பு வர யாரென எடுத்துப் பார்த்தவன் “மேகி ஏன் இந்நேரத்துல கால் பண்ணுறா?” என்று கேட்டபடி அழைப்பை ஏற்கப் போனான்.

சமுத்ராவோ “கால் கட் பண்ணிட்டு வீடியோ கால் போடுண்ணா… நம்ம எல்லாரும் ஒன்னா சேர்ந்து பேசி எவ்ளோ நாளாகுது” என்று சொல்ல அவன் இணைப்பைத் துண்டித்துவிட்டு வீடியோ கால் செய்ய ஆரம்பித்தான்.

மேகவர்ஷினி அழைப்பை ஏற்றவள் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவதைப் பார்த்துவிட்டு “என்னை விட்டுட்டு நீங்க மட்டும் விளையாடுறிங்களா?” என்று ஏக்கத்துடன் சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கினாள்.

அவளை அனைவருமாகச் சேர்ந்து தாஜா செய்து சமாதானப்படுத்திய பின்னர் தான் அவள் எதற்காக அழைத்தாள் என்பதைத் தெரிவித்தாள்.

மெதுவாக “வித்தி அண்ணா அந்த ஆதியோட நம்பர் வேணும்” என்று கேட்கவும் அமிர்தாவும் சமுத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் மேகவர்ஷினியைக் குறும்பாக நோக்கினர்,

அவர்களின் பார்வைக்கு அர்த்தம் கண்டுகொண்டவள் “ஹலோ உங்க லுக்கே சரியில்ல… நான் அவன் கிட்ட என்னோட மைண்ட்செட்டை சொல்லணும்னு நினைக்கிறேன்… அதுக்குத் தான் கேட்டேன்… நீங்க உங்க இஷ்டத்துக்கு அஸ்யூம் பண்ணிக்காதிங்க” என்று சொல்லவும்

“நாங்க எல்லாரும் நீ சொன்னத நம்பிட்டோம்” என்றனர் வித்யாசாகரைத் தவிர அனைவரும் ஒரே குரலில்.

“பாருங்க வித்திண்ணா! எல்லாரும் என்னைக் கிண்டல் பண்ணுறாங்க” என்று உதட்டைப் பிதுக்கவே

“ஏய் விடுங்கப்பா… அவ பாவம்… குட்டிமா நான் நம்பர் சொல்லுறேன்… நீ நோட் பண்ணிக்க” என்றவன் அவளுக்கு ஆதித்யாவின் எண்ணைக் கொடுக்கவும் மேகவர்ஷினி குறித்துக்கொண்டாள்.

“ஈவினிங் கால் பண்ணுடா… அப்போ தான் அவன் ஃப்ரீயா இருப்பான்… நல்லபடியா பேசி முடிவு பண்ணுங்க” என்றான் வித்யாசாகர்.

தானும் சமுத்ராவும் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக ஹரிஹரன் சொல்லவே மேகவர்ஷினி மகிழ்ந்தவள் இருவரையும் வாழ்த்தினாள்.

“ஆதித்யா கிட்ட பேசி நீயும் சீக்கிரமா நல்ல முடிவுக்கு வாடி” என்றாள் சமுத்ரா.

“அது என் கைல இல்ல… அந்த ஆதித்யா கைல தான் இருக்கு” என்று அமர்த்தலாகச் சொன்ன மேகவர்ஷினி சில மணி நேரங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அதன் பின்னர் அனைவரும் அமிர்தவர்ஷினி மற்றும் சமுத்ராவின் நளபாகத்தில் தயாரான மதியவுணவைச் சாப்பிட்டு விட்டு எழுந்திருக்கையில் ஜானகி மற்றும் விஜயலெட்சுமி பெரியவர்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

“ரொம்ப நாள் கழிச்சு அருமையான கதாகாலட்சேபம்… மனசுக்கு நிம்மதியா இருந்துச்சுல்ல” என்ற ஜானகி விஜயலெட்சுமியையும் உன்னிகிருஷ்ணனையும் அங்கேயே மதியவுணவு சாப்பிடும்படி கட்டளையிட்டுவிட்டார்.

அதற்குள் சாப்பிட்டு முடித்த இளையவர்கள் பெரியவர்களை அமரச் சொல்லி தாங்களே பரிமாறினர்.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஓய்வெடுக்கச் சென்றுவிட இளையவர்கள் மீண்டும் விளையாட்டில் ஆழ்ந்தனர். மாலை வரை நீண்ட விளையாட்டில் நேரம் சென்றதே தெரியவில்லை.

அமிர்தா மாலை விளக்கேற்றியதும் மாமியார் வீணையைச் சாதகம் பண்ணுவதைத் தாயாருடன் சேர்ந்து ரசித்துக் கேட்டவள் வித்யாசாகர் அழைக்கவும் அவர்களின் அறைக்குச் சென்றாள்.

“எதுக்கு கூப்பிட்டிங்க சாகர்?” என்றபடி வந்தவளிடம் ஒரு அட்டைப்பெட்டியை நீட்டினான் வித்யாசாகர்.

அதைத் திறந்து பார்த்தவள் உள்ளே கருப்பு நிறத்தில் மொழுமொழுவென மின்னிய மடிக்கணினியைக் கண்டதும் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“வாவ்! சூப்பரா இருக்கு சாகர்… நானே லேப்டாப் ஒன்னு வாங்கணும்னு நினைச்சேன் தெரியுமா?” என்று குதூகலிக்கவும் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை மேஜை மீது வைத்தவள் தங்களின் தேனிலவு பற்றி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“இன்னைக்கு மானிங் ஜானு அத்தை ஹனிமூன் பத்தி சொன்னாங்க… மாமாவோட கிளையண்டுக்கு மெட்டுல ரிசார்ட் இருக்குதாம்… நம்மள அங்க போகச் சொன்னாங்க சாகர்”

“அங்க எதுக்குப் போகணும்?”

“என்ன பேசுறிங்க?? நம்ம ஹனிமூனுக்குத் தான்… நான் நேத்தே உங்க கிட்ட எங்க போகலாம்னு கேக்க நினைச்சேன்”

“ஹனிமூனுக்கா? அதுவும் மெட்டுக்கா? ஏன்டி உனக்கு வேற லொக்கேசனே கிடைக்கலயா?”

“ஏன் மெட்டுக்கு என்னவாம்? நீங்க தான் எங்கயும் கூட்டிட்டுப் போக மாட்றிங்க… அட்லீஸ்ட் அத்தை சொன்ன மாதிரி இங்கயாச்சும் போவோம்”

“அடியே நினைச்சா போயிட்டு வர்ற தூரத்துல இருக்குற ஊருக்கு ஹனிமூன் போகலாம்னு சொல்லுறியே! உன்னைலாம் என்ன பண்ணுறது?”

“எனக்கு அதுல்லாம் தெரியாது… உங்களுக்கு ஒன் வீக் லீவ் தானே… மரியாதையா என்னைக் கூட்டிட்டுப் போங்க… இல்லனா நானே உங்களை கிட்னாப் பண்ணிட்டுப் போயிடுவேன்”

கண்ணை உருட்டி மிரட்டியவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடி “அப்பிடிங்களா மேடம்? கிட்னாப் பண்ணிட்டுப் போய் ஹனிமூன் செலிபிரேட் பண்ணுற அளவுக்கு அங்க என்ன இருக்குதுங்க?” என்று கேலியாக கேட்டவனின் தலையில் குட்டினாள் அமிர்தவர்ஷினி.

“சரியான மக்குப்பையன்… அங்க இருக்குற இயற்கையழகைப் பாத்துட்டே இருக்கலாம்.. அதுலயும் கடல் மாதிரி தண்ணி ரொம்பி இருக்குற அந்த டேமை பாக்குறதுக்கு ஆயிரம் கண் வேணும்” என்று சொன்னவளுக்கு இப்போதே அங்கு செல்லவேண்டுமென மனம் பரபரத்தது.

வித்யாசாகர் அவளது முகத்திலிருந்தே அவளின் மன ஆசைகளைப் புரிந்து கொண்டவன் அவளது கரங்களை எடுத்து உதட்டில் ஒற்றிவிட்டு “ஓகே மகாராணி… நாளைக்கே நம்ம மெட்டுக்குப் போறோம்… அங்க போய் ஒன் வீக் ஜாலியா சுத்திப் பாத்துட்டு வருவோம்… இப்போ ஹேப்பியா?” என்று கேட்கவும் சந்தோசமாய் தலையாட்டினாள் அவள்.

*************

மறுநாள் காலையுணவை முடித்துக் கொண்டு அமிர்தவர்ஷினியும் வித்யாசாகரும் தங்களின் தேனிலவுக்காக கண்ணுப்புளி மெட்டுக்குக் காரில் கிளம்பினர்.

அவர்களின் பெற்றோரும் பெரியவர்களும் ஆயிரம் முறை கவனம் சொல்லி வழியனுப்பி வைத்தனர். காரில் வித்யாசாகருடன் அமர்ந்த அமிர்தவர்ஷினிக்குத் தன் தாயாரின் தோளில் உரிமையாய் கைபோட்டபடி நின்றிருந்த மாமியாரைப் பார்த்ததும் மனம் நிறைந்தது.

அவர்களோடு நின்றிருந்த அனைவருக்கும் டாட்டா காட்டிவிட்டு வித்யாசாகர் காரைக் கிளப்பினான். அமிர்தவர்ஷினிக்கு மனமெங்கும் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு.

இது அவனோடு செல்வதால் உண்டான உணர்வு அல்ல. எப்போது கண்ணுப்புளி மெட்டு எனும் அந்த மலையடிவார சிறு கிராமத்துக்குச் சென்றாலும் அவள் மனதில் இது போன்ற உணர்வு எழுவது வழக்கம்.

ஓங்கியுயர்ந்த மலைச்சிகரங்களைக் கொஞ்சி விளையாடும் மஞ்சு மேகங்களும், காலை நேரப் பனியும், சுற்றிலும் பழமரத்தோப்புகளும், பாக்கு மரங்களும், மிளகுக்கொடிகளுமாக பசுமை வண்ணம் போர்த்திய அந்தக் கிராமமும், சளசளத்து ஓடும் காட்டாறும், மத்தளத்தைப் போல முழங்கும் அருவிகளும் காண காண திகட்டாதவை!

ஊருக்குள் நுழையும் முன்னர் காருக்குப் பாஸ் வாங்கிவிட்டு காரைக் கிளப்பினான் வித்யாசாகர். சாலையின் இரு புறங்களில் தெரிந்த வயல்வெளிகளும் கண்ணுக்கு எதிராய் வீற்றிருந்த மேற்குத்தொடர்ச்சி மலையும் அவர்களின் ரசிகமனதுக்குத் தீனி போட அதிகம் பேசிக்கொள்ளாமல் இயற்கை காட்சிகளில் மனதைத் தொலைத்தவண்ணம் இருவரும் ஊருக்குள் சென்று கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் ரகுநாதனின் கிளையண்டான மதியழகனின் இல்லம் வர அங்கே காரை நிறுத்தியவர்கள் தங்கள் உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டனர்.

மதியழகன் ஜீப்பை வரவழைப்பதாகச் சொல்ல வித்யாசாகர் வேண்டாமென மறுத்துவிட்டான்.

“வேண்டாம் அங்கிள்! நாங்க அடிக்கடி வந்து பழகுன இடம் தான்… நீங்க சொன்ன ரிசார்ட்டுக்குச் சின்னப்பையனா இருந்தப்போ நான் அப்பா கூட வந்திருக்கேன்… எனக்கு ஸ்பாட் தெரியும்… அது மட்டுமில்லாம எங்களுக்குக் கால்நடையா போகணும்னு ஆசையா இருக்கு”

“சரிங்க தம்பி… பாத்து பத்திரமா போங்க… உன்னோட செருப்பைக் கழட்டிடுமா… எப்பிடியும் வழில கல்லும் மண்ணுமா தான் இருக்கும்… காட்டாத்துல இப்போ கணுக்கால் அளவுக்குத் தான் தண்ணி ஓடுது… ஜில்லுனு ஓடுற தண்ணில காலை நனைச்சிட்டு போங்க… நல்லா இருக்கும்” என்று ஊர்க்காரராய் அவர் சொல்ல அமிர்தா தனது பேரலல் ஹீல்சை கழற்றிக்கொண்டாள்.

இருவரும் அவரிடம் கார்ச்சாவியைக் கொடுத்துவிட்டு ரிசார்ட்டின் சாவியுடன் தங்கள் உடமைகள் நிரம்பிய லக்கேஜ் பேக்கை ஆளுக்கொன்றாய் தூக்கியபடி பொடிநடையாய் நடக்க ஆரம்பித்தனர்.

குறுகலான வழியின் இரு மருங்கிலும் ஆளுயரத்துக்கு கற்களால் எழுப்பப்பட்டிருந்த சுவருக்கு மேலேகாக காட்டுக்கொடிகள் படர்ந்திருந்தன. அதன் வண்ணமலர்களின் நறுமணம் நாசியை வருட இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

வழியிடையே சின்னச் சின்ன பாறாங்கற்கள் கிடக்க “இங்க தானே நம்ம டூர் வந்தப்போ நீங்க கைல வச்சிருந்த சாப்பாட்டைக் கொட்டி ஜானு அத்தை கிட்ட திட்டு வாங்குனிங்க?” என்று கேலியாகக் கேட்ட அமிர்தா அந்த நினைவில் சற்று உரக்க நகைத்தாள்.

வித்யாசாகர் அவளை முறைத்தபடியே “முட்டக்கண்ணி முழியழகி ஒருத்தி என் மேல மோதி என்னைத் தள்ளிவிட்டதால தான் சாப்பாடு கொட்டிச்சு… ஆனா நான் அவளுக்குப் பரிதாபம் பாத்து அம்மா கிட்ட நான் தான் கொட்டிட்டேனு பழிய என் மேல போட்டுக்கிட்டேன்… அன்னைக்கு அவளை மாட்டிவிட்டிருந்தா இன்னைக்கு இப்பிடி மோகினி மாதிரி இந்தக் காடே அதிருற சத்தத்துல சிரிச்சிருக்க மாட்டா…” என்றபடி முன்னேறினான்.

பேச்சுவாக்கில் அவர்கள் செல்லவேண்டிய பாதையின் நடுவே குறுக்கிட்ட காட்டாற்றில் கால் நனைத்தபடியே நடந்தனர் இருவரும்.

“தண்ணி ஐஸ் மாதிரி இருக்குல்ல… எனக்கு கால் கூசுது சாகர்” என்றபடி அவனது வெதுவெதுப்பான கரத்தைப் பற்றிக்கொண்டாள் அமிர்தவர்ஷினி.

“லக்கேஜ் பேக் இல்லனா உன்னை நான் தூக்கிப்பேன்” என்றவனின் அக்கறையில் மனம் மகிழ்ந்தவள் தானே நடப்பதாகச் சொல்லிவிட இருவருமாகச் சேர்ந்து காட்டாற்றைக் கடந்து ரிசார்ட்டை நோக்கி நடைபோட்டனர்.

சில நிமிடங்களில் ரிசார்ட் வந்துவிட்டது. அவர்களுக்காக வெளிப்புறம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கேரளா பாணியில் கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் இருவரும்.

இருவரும் உடமைகளை அவர்களது அறைக்குள் வைத்துவிட்டு வெளியே வந்தனர். அந்நேரம் பார்த்து மழை சிறு சாரலாய் தூவ ஆரம்பிக்க அமிர்தாவின் செவிகளில் தூரத்தில் பிரைவேட் அருவிப்பகுதிகளில் தண்ணீர் சளசளக்கும் சத்தம் கேட்டது.

அங்கே செல்லலாமா என்று கேட்டவளை வித்யாசாகர் தூக்கிக் கொள்ள “என்ன சாகர் இது சீரியல்ல வர்ற மாதிரி பொசுக் பொசுக்குனு தூக்கிக்கிறிங்க? இறக்கி விடுங்க… நானே நடந்து வருவேன்” என்றாள் அமிர்தா அமர்த்தலாக.

வித்யாசாகர் அவளை இறக்கிவிட்டவன் “சரி! நம்ம டைனோசர் கேம் விளையாடலாமா?” என்று கேட்டுவிட்டுக் கண்ணைச் சிமிட்ட அவள் இப்போது யோசிக்கவில்லை. அவன் முதுகில் உப்புமூட்டை ஏறி வெகு நாட்களாகி விட்டதால் உற்சாகமாகச் சம்மதித்தாள்.

அவளை உப்புமூட்டையாகத் தூக்கிக் கொண்டவன் நடக்கத் துவங்க அமிர்தவர்ஷினி அவன் முதுகில் சொகுசாக சாய்ந்து கொண்டாள். இருவரும் அப்படியே அருவிக்கரை வரையும் சென்றுவிட்டனர்

. குற்றாலம் போன்று அல்லாது குறைந்த உயரத்தில் இருந்து திமுதிமுவென கொட்டிய தண்ணீரைக் கண்டதும் வித்யாசாகர் ஆர்ப்பரித்தான்.

ஆனால் அமிர்தவர்ஷினி தன்னை இறக்கிவிடச் சொல்லிவிட்டு அங்கிருந்த பாறையில் அமர்ந்துவிட்டாள்.

“அம்மு குளிக்கலயாடி?” என்று வேண்டுமென்றே சீண்டினான் வித்யாசாகர்.

“நான் ஆல்ரெடி வீட்டுல குளிச்சிட்டேன் மிஸ்டர் சாகர்” என்றவளின் குரலில் இருந்த கடுகடுப்பு அவனுக்கு அருவி நீரை விட அதிக குளிர்ச்சியைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.

ஏனெனில் அமிர்தவர்ஷினிக்கு அருவி நீரில் குளித்தால் ஒத்துக் கொள்ளாது. ஆறு என்றால் கூட பரவாயில்லை. சிறுவயதில் இங்கே வரும் போதெல்லாம் அவர்கள் அனைவரும் அருவியில் குதியாட்டம் போடுவதை அவள் பாறையில் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பாள்.

இப்போதும் அவளால் குளிக்க இயலாது போகவே வித்யாசாகர் அவளுக்கு நாக்கைத் துருத்திக் காட்டிவிட்டு அருவியில் குளிக்கத் தொடங்கினான். அவனது மனைவியோ சளசளக்கும் தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அவன் ஆசை தீர அருவியில் குளித்துவிட்டு வர இருவருமாய் சேர்ந்து மீண்டும் ரிசார்ட்டை நோக்கிச் சென்றனர். அங்கே மதியழகன் வீட்டு வேலையாள் ஒருவர் இருவருக்கும் சாப்பாட்டுடன் காத்திருக்க அவரிடம் இரவுக்குத் தாங்களே செய்து கொள்கிறோம் என சொல்லி அனுப்பினர் இருவரும்.

அவர் சென்றதும் இவ்வளவு நேரம் சிறு சாரலாய் தூவிக் கொண்டிருந்த மழை பெரிதாய் பெய்யத் துவங்கியது. மழையை ரசித்தபடி சாப்பிட்டு முடித்தவர்கள் இங்கே ஏற்கெனவே வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென நினைவு வந்தவனாகப் போனில் குடும்பத்தினருக்கு அழைத்த வித்யாசாகர் தாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்ததை தெரியப்படுத்தினான். அவர்கள் மீண்டும் கவனமாக இருக்கும் படி அறிவுரை சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.

அருணாசலம் பேத்திக்கு அருவித்தண்ணீர் ஒத்துக்கொள்ளாது என்பதால் ஆற்றில் குளிக்கும்படி சொன்ன ஸ்பெஷல் அறிவுரையைக் கேட்டு வித்யாசாகர் நகைத்து அமிர்தாவின் முறைப்பை வாங்கிக் கட்டிக்கொண்டான்.

அப்போது தான் மேகவர்ஷினியிடம் இருந்து அழைப்பு வந்தது. வித்யாசாகர் அதை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு “சொல்லு குட்டிமா” என்கவும் அவள் மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தாள்.

“வித்தி அண்ணா! ஆதியும் நானும் பேசிட்டோம்… அவனுக்கு என்னோட பொட்டிக் பத்தி நான் வச்சிருக்குற ஃபியூச்சர் பிளான்ஸ் எல்லாமே எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டேன்… பொறுமையா கேட்டவன் நான் மேரேஜுக்கு அப்புறமும் பொட்டிக் ரன் பண்ணுறதுல அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டான்… கொஞ்சம் ஜென்டில்மேன் தான் போல… நான் தான் அவனை வில்லன் லெவலுக்கு இமேஜின் பண்ணிட்டேன்… அப்புறம் அம்மா அப்பா கிட்டயும் பேசுனான்… அவனோட ஆபிஸ்ல அவனை ஆன்சைட் அனுப்ப போறாங்களாம்.. சோ ரெண்டு வருசம் அவனுக்காக காத்திருக்க முடியுமானு கேட்டான்… எனக்குமே இந்த ரெண்டு வருச அவகாசம் தேவைப்படுதே! அதனால கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிட்டேன்… இப்போ அம்மா அப்பாவும் ஹேப்பி… உங்க தம்பி ஆதியும் ஹேப்பி”

கணவன் மனைவி இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மேகவர்ஷினிக்கு வாழ்த்து சொல்லவே “ஐயோ நான் ஒரு மண்டு… ஹனிமூன் கபிள் கிட்ட போய் கதை பேசிட்டிருக்கேன் பாருங்க… எல்லாத்தையும் பொறுமையா உங்க ஹனிமூன் முடிஞ்சதும் பேசிக்கலாம்… டாட்டா” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அந்தப் பேச்சிலேயே மாலை நேரம் வந்துவிட இருவரும் பேசியபடியே இரவுணவு தயார் செய்ய ஆரம்பித்தனர். மலைப்பகுதி என்பதால் சீக்கிரமே இருட்டிவிட்டது. அந்த இரவின் அமைதியும் வெளியே சாரலாய் தூவிக் கொண்டிருந்த மழையும், தூரத்தில் கேட்ட அருவிகளின் இரைச்சலும் ரம்மியமான உணர்வை உண்டாக்கியது.

எப்போதும் வீட்டில் குடும்பத்தினர் சூழ இருந்தவர்களுக்குப் புதிதாக கிடைத்த இந்தத் தனிமையில் பகிர்ந்து கொள்ள ஏகப்பட்ட கதைகள் இருக்க அவற்றைப் பேசியபடியே சமைத்தும் முடித்தனர்.

அதன் பின்னர் வித்யாசாகரின் கைவளைவுக்குள் இருந்தபடியே அவன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு முடித்த அமிர்தவர்ஷினிக்கு அவனது அணைப்பிலிருந்து மீளும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. வித்யாசாகருக்கும் அவளை விலக்கி வைக்கும் எண்ணமில்லை.

மறுநாள் விடியலில் இருவரும் ஒன்றாய் அமர்ந்து காபி அருந்தும் போது அமிர்தவர்ஷினி மற்றும் வித்யாசாகர் இருவரின் மனமும் நிறைந்திருந்தது.

“எல்லா பிராப்ளமும் தீர்ந்து மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கு சாகர்… எனக்கு இப்போ சத்தம் போட்டுக் கத்தணும் போல இருக்கு… அவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா?”

“ம்ம்… அம்மாவும் அத்தையும் பழையபடி மாறிட்டாங்க… நீயும் நல்ல பேத்தியா அருண் தாத்தாவுக்குச் செய்ய வேண்டிய கடமைல பாதிக்கிணறு தாண்டிட்ட… ஹரிக்கும் சம்முக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பேசிடலாம்.. மேகியும் ஆதியும் கூட செட் ஆன மாதிரி தான்… எனி ஹவ் வாழ்க்கை எவ்ளோ அழகானதுனு உன்னோட இருக்குற ஒவ்வொரு செகண்ட்லயும் என்னால ஃபீல் பண்ண முடியுது அம்மு”

“எல்லாம் ஓகே தான்… ஆனா நான் எக்சாம்ல பாஸ் பண்ணிடுவேனா சாகர்?”

திடீரென சந்தேகமாய் திரும்பி அவள் கேட்ட விதமும் பரிதவித்த விழிகளும் அவனை உருக்கிவிட அவளது நெற்றியில் முத்தமிட்டான் வித்யாசாகர்.

“நீ கண்டிப்பா பாஸ் ஆயிடுவ அம்மு… அப்பா அடிக்கடி சொல்லுற மாதிரி அவரோட ஆபிஸ்ல அமிர்தவர்ஷினி சி.ஏக்கு ஒரு சேர் காத்திட்டிருக்குடி… அதுல நீ உக்காரப் போற நாளை நான் செங்கோட்டைக்கு லோக்கல் ஹாலிடேவா அனவுன்ஸ் பண்ணலாமானு யோசிக்கிறேன்… நீ என்னடானா பாஸ் ஆவேனானு கேக்குற” என்று கேலியாகப் பேசியபடியே அவளுக்கு நம்பிக்கை கொடுத்தக் கணவனை தனது அகண்ட விழிகளால் நோக்கினாள் அமிர்தவர்ஷினி.

அவனுக்குத் தன் மீது இருக்கும் நம்பிக்கை ஒன்றே அவளுக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்க அதே நம்பிக்கையுடன் “ஐ லவ் யூ சாகர்” என்று மென்மையாகச் சொல்லிவிட்டு அவன் மார்பில் சாய்ந்து தேனிலவின் அழகான தருணங்களை அனுபவிக்கத் தொடங்கினாள் அவள்.

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே

வழக்கம் போல நினைவில் உதித்த பாரதியின் வரிகளை உதடு முணுமுணுக்க அவளைத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டபடி சூடான காபியுடன் காலைநேரத்தின் அழகுடன் அவர்களின் தேனிலவையும் ரசிக்கத் தொடங்கினான் அமிர்தாவின் சாகரன்.