சாகரம் 21

விஜி அத்தைக்கு அம்முவ எனக்கு மேரேஜ் பண்ணிக் குடுக்குறதுக்கு தயக்கம்அதுக்கு எனக்கும் காரணம் தெரியும்அவங்களுக்கும் அம்மாவுக்கும் சின்னவயசுல ஏற்பட்ட மனக்கசப்பு தான் இதுக்குக் காரணம்னு நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு இங்க வந்ததும் சிவா தாத்தா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்அருண் தாத்தா விஜி அத்தைய சமாதானம் செஞ்சு சம்மதிக்கவைக்கிறேனு எனக்குப் பிராமிஸ் பண்ணிருக்காங்கஅதனால மனசு கொஞ்சம் ரிலாக்சா இருக்குமேகாவும் சம்முவும் அம்மு கிட்ட என்னைப் பத்தி பேசுனாங்களாம்அவளும் தாத்தாவுக்கு இஷ்டம்னா எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்லனு சொல்லிட்டாளாம்க்கும்! அப்போ தாத்தாவுக்காக தான் ஓகே சொல்லுறா போலகொஞ்சம் போல என்னையும் நினைக்கலாம் தானே! பாத்த உடனே இம்ப்ரெஸ் ஆகலனாலும் பாக்க பாக்க இம்ப்ரெஸ் ஆகுற அளவுக்குக் கூடவா என்னோட பெர்சனாலிட்டி இல்ல? கிரேட் இன்சல்ட் வித்தி…”

                                                        –அமிர்தாவின் சாகரன்

வித்யாசாகர் அமிர்தாவை எட்டு நாட்களுக்குப் பின்னர் சந்தித்த மகிழ்ச்சியில் சிரித்த முகமாய் நிற்க பாக்யலெட்சுமியும் மேகாவும் அவனை உள்ளே அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் ரங்கநாதனும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தார்.

அவருக்கு வித்யாசாகரின் ஒன்றுவிட்ட சகோதரனைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம். எல்லாம் சரியாய் வந்தால் ஆதித்யாவுக்கும் மேகாவுக்கும் சம்பந்தம் பேசி முடித்துவிடலாம் என்ற எண்ணம்.

வித்யாசாகரும் சின்னமாமனாரிடம் இயல்பாக ஆதித்யாவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டான்.

“அவன் இருக்குற இடத்துல சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது மாமா… ரொம்ப நல்ல பையன்… அவனுக்குக் கோவம்னா என்னனு கூட தெரியாது… செம ஜாலி பேர்வழி மாமா… அவனுக்கு மேகாவ பிடிச்சிருக்குனு சொன்னான்.. ஆனா மேகாவுக்கும் அவனைப் பிடிக்கணும்… அதுக்கு அப்புறம் டிசைட் பண்ணுங்க”

தந்தை நகர்ந்ததும் வித்யாசாகரிடம் வந்து அமர்ந்த மேகாவும் அவனிடம் ஆதித்யா பற்றி தான் விசாரித்தாள். பாக்யலெட்சுமி தாங்கள் எல்லாம் தந்தை காட்டிய மாப்பிள்ளையை மறுப்பு சொல்லாது மணந்து கொண்டவர்கள் என நொடித்துக் கொண்டார்.

“நீ பண்ணிருப்ப மம்மி… அதே மாதிரி நானும் பண்ணணும்னு நினைக்காத… எனக்கு லைப் பார்ட்னரா வர்றவன் என்னோட புரஃபசனைப் புரிஞ்சிக்கிறவனா இருக்கணும்… அன்னைக்கு ஒரு அம்மா கேட்டுச்சே உங்க பொண்ணு என்ன டெய்லரானு… அந்த மாதிரி லேடிய மாமியாரா வச்சுக்கிட்டு நான் எப்பிடி என்னோட பொட்டிக்கை பெரிய க்ளாத் லைனா மாத்துறது? பையனும் சரி, அவன் ஃபேமிலியும் சரி… என்னையும் என் புரஃபசனையும் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கணும்.. மத்தபடி உங்க ஏஜ் லேடிசோட சில்லி கிச்சன் பாலிடிக்ஸ்லாம் எனக்குச் சுத்தமா பிடிக்காது… மேரேஜ் ஆகி வந்ததும் என் மகனை சுடிதார் துப்பட்டால முடிஞ்சிகிட்டானு காசிப் பேசுற மாமியார் எனக்கு செட்டாகாது… அந்த ஆதித்யா இதுக்கெல்லாம் சரிப்பட்டுவருவானானு பாத்துட்டுத் தான் நான் டிசைட் பண்ணுவேன்”

“அந்தப் பையன் உன் மேல பிரியமா இருக்கான்டி… இப்பிடி ஒரு மாப்பிள்ளை எங்க தேடுனாலும் கிடைக்கமாட்டான்” – பாக்யலெட்சுமி.

“மா! வெறும் பிரியத்தையும் காதலையும் வச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது… என்னைப் பிடிச்சிருக்குனு சொன்னாங்கிறதுக்காக அவனை மேரேஜ் பண்ணிக்கிட்டு வரிசையா பிள்ளைக்குட்டி பெத்துக்கிட்டு டிபிக்கல் குடும்பத்தலைவியா சீரியல் பாத்துட்டு டைம்பாஸ் பண்ணுற லைப் எனக்குச் செட் ஆகாது… எனக்குனு ஆம்பிசன் இருக்கு… அதை ஏத்துக்கிறவனைத் தான் நான் லைப் பார்ட்னரா ஏத்துப்பேன்.. திஸ் இஸ் ஃபைனல்” என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டாள் மேகவர்ஷினி.

தனது அப்பா வழி தாத்தாவான மேகநாதனின் பெயரை அவளுக்குச் சூட்டியதை எண்ணி இப்போது சலித்துக்கொண்டார் பாக்யலெட்சுமி. ஏனெனில் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என பிடிவாதம் பிடிக்கும் குணம் அவருடையது.

அதை எல்லாம் யோசித்து பாக்யலெட்சுமி ஏதோ சொல்ல வாயெடுக்க அமிர்தவர்ஷினி அவரைத் தடுத்தாள்.

“ஷீ இஸ் ரைட் சித்தி… வெறும் காதலுக்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்க முடியாது இல்லையா? லைப் பார்ட்னரா வர்றவங்க எங்களை புரிஞ்சிக்கணும், கனவுகளுக்கு சப்போர்ட் பண்ண்ணும்னு தான் எங்க ஜெனரேசன் பொண்ணுங்க ஆசைப்படுறோம்… பை காட்ஸ் கிரேஸ், எனக்கு அப்பிடிப்பட்ட லைப் பார்ட்னரா சாகர் கிடைச்சார்… அதே போல சதா தாத்தா ஃபேமிலியும் நல்ல மாதிரியானவங்க… ஜானு ஆன்ட்டி இடத்துல வேற ஒரு லேடி இருந்திருந்தா கண்டிப்பா கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகுது.. இன்னும் நல்லச்செய்தி இல்லயானு கேட்டு என்னை ஒருவழி ஆக்கியிருப்பாங்க… மேகாவுக்கும் அவளைப் புரிஞ்சுக்கிட்டவன் லைப் பார்ட்னரா வரணும்னு ஆசை இருக்கும்ல… நம்ம அதை புரிஞ்சிக்கணும்”

மேகவர்ஷினி அவளைக் அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

“அம்முக்கானா அம்முக்கா தான்! என் மனசுல உள்ளத அப்பிடியே சொல்லிட்டக்கா… நான் ரொம்பலாம் எதிர்பாக்கல… அந்த ஆதித்யா வித்தி அண்ணா மாதிரி கொஞ்சம் போல இருந்தா போதும்… நான் அவனை மேரேஜ் பண்ணிக்கிறேன்”

“மேகி! அத்தையும் மாமாவும் விசாரிக்கட்டும்… அது வரைக்கும் நீ சிங்கிள் லைபை என்ஜாய் பண்ணு குட்டிமா” என்றான் வித்யாசாகர்.

வித்யாசாகரும் அமிர்தாவும் தனித்துப் பேசும் சூழல் அங்கே உருவாகவில்லை. அவர்களும் இன்று மாலை பயணநேரத்தில் பேசிக்கொள்ளலாம் என எண்ணியவர்களாய் எப்போதும் போல மேகாவின் அரட்டையில் கலந்துகொண்டனர்.

காலையுணவை மட்டும் வீட்டில் முடித்துக் கொண்டவர்கள் மதியம் ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவெடுத்தனர். பெரியவர்களை அழைத்துக்கொண்டு இளையவர்கள் அன்றைய தினம் முழுவதும் திருநெல்வேலியிலிருக்கும் மால்கள், கோவில்கள் என சுற்றிவிட்டு மதியவுணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டனர்.

அமிர்தா முதல் முறையாக வித்யாசாகருடன் வெளியே சென்ற தருணத்தை மிகவும் ரசித்தாள் எனலாம். அதிலும் நெல்லையப்பர் கோயில் யானையுடன் இருவரும் செல்பி எடுத்துக்கொண்ட தருணம் அவனது கரம் உரிமையாய் அவள் தோள் மீது படிய அமிர்தா அந்தக் கணத்தை மனப்பெட்டகத்தில் சேமித்துக்கொண்டாள்.

கூடவே ஹோட்டலில் அவளுக்குப் பிடித்த உணவுவகைகளை ஆர்டர் செய்தவனுடன் சேர்ந்து சாப்பிட்ட தருணத்தையும் தான்.

மால்களில் சுற்றி அலைந்துவிட்டு அமிர்தாவும் மேகாவும் அவர்களுக்கான ஷாப்பிங்கில் இறங்க பாக்யலெட்சுமியும் ரங்கநாதனின் பர்சுக்குக் கொஞ்சம் வேலை கொடுத்துவிட்டு ஓய்ந்தார்.

எல்லாம் முடித்து வீடு திரும்பியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாராயினர் அமிர்தாவும் வித்யாசாகரும். ரங்கநாதன் இரவு தங்கிவிட்டு நாளைய தினம் காலையில் கிளம்பலாமே என சொல்ல வித்யாசாகரோ

“இவளுக்காக அங்க எல்லாரும் ஆவலோட காத்திருக்காங்க மாமா… தாத்தா வேற அம்மு இல்லாம வீட்டுல எரியுற லைட்டுக்குலாம் வால்டேஜ் கம்மியான மாதிரி இருக்குனு புலம்ப ஆரம்பிச்சிட்டார்… இன்னொரு தடவை வர்றப்ப குறைஞ்சது டென் டேய்ஸ் டேரா போட்டுட்டுத் தான் கிளம்புவோம்” என்று அவரிடம் வாக்கு கொடுக்க அதன் பின்னர் தான் ரங்கநாதனின் குடும்பத்தினர் அவனையும் அவனது மனைவியையும் செங்கோட்டைக்கு வழியனுப்பி வைக்க ஒப்புக்கொண்டனர்.

மாலை காபிக்குப் பின்னர் அவர்களிடம் கிளம்புவதாக விடைபெற பாக்யலெட்சுமி மஞ்சள் குங்குமத்துடன் பட்டுச்சேலை ஒன்றை வைத்துக்கொடுத்தார்.

“இதுல்லாம் எதுக்கு சித்தி?”

“வீட்டுக்கு வர்ற சுமங்கலிக்கு மஞ்சள் குங்குமம் குடுக்குறது நம்ம பழக்கம்டா… என் பொண்ணுக்கு நான் ஸ்பெஷலா ஷேரி மட்டும் எக்ஸ்ட்ராவா குடுக்குறேன்… உன்னோட கலருக்கு நல்லாருக்கும்னு ஆசையா வாங்குனேன்”

அதற்கு மேல் மறுக்க விரும்பாதவள் கணவனுடன் சேர்ந்து சித்தி சித்தப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள். கூடவே மாலையில் இருட்டுக்கடையில் வாங்கிய அல்வா கவரையும் வாங்கிக் கொண்டாள். சமுத்ராவுக்கு மிகவும் பிடித்த இனிப்பில் அதுவும் ஒன்று என ரதவீதியில் நடக்கும் போது நினைவில் தோன்றவும் பாக்யலெட்சுமி வாங்கி வைத்திருந்தார்.

மேகவர்ஷினி தமக்கையை அணைத்து விடை கொடுத்தவள் பெற்றோருடன் வாசல் வரை வந்து வழியனுப்ப வித்யாசாகரும் அமிர்தாவும் காரில் அமர்ந்தவர்கள் அவர்கள் மூவருக்கும் டாட்டா காட்ட கார் வேகமெடுத்தது.

கார் மறையும் வரை பார்த்திருந்த ரங்கநாதனின் குடும்பத்தினர் சந்தோசப்பெருமூச்சுடன் வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.

அமிர்தவர்ஷினி திருநெல்வேலி நகர எல்லையைத் தாண்டும் வரை அமைதியாய் அமர்ந்திருந்தவள் அதன் பின்னர் சாலையில் வெறும் வாகனக்கூட்டங்கள் மட்டும் கண்ணுக்குத் தட்டுப்பட்ட தைரியத்தில் பக்கத்தில் அமர்ந்து சாலையில் கண் பதித்து காரை இயக்கிய கணவனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.

இதை எதிர்பாராத வித்யாசாகர் ஒரு நொடி தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டான்.

“முட்டக்கண்ணி இப்பிடி திடுதிடுப்புனு கிஸ் பண்ணாதடி… மனுசன் கான்சென்ட்ரேசன் ரோட்ல இருந்து உன் கிட்ட திரும்பிட்டா ரெண்டு பேருக்கும் பரலோகப்ராப்தி தான் கிடைக்கும்”

“அச்சோ! நான் அதை யோசிக்கவேல்ல சாகர்… ஐ அம் சாரி… பட் நான் என்ன பண்ணுறது? ஐ மிஸ் யூ சோ மச்”

கண்ணை விரித்து உதட்டைப் பிதுக்கி குழந்தை போல அவள் சொன்ன அழகில் மீண்டும் ஒரு முறை அவனது கவனம் சிதறியது.

“அம்மா அமிர்தவர்ஷினி உனக்குப் புண்ணியமா போகும்… இப்பிடி வினோதமா பிஹேவ் பண்ணி என் மைண்டை திசை திருப்பாத… வீடு போய் சேர்ற வரைக்கும் குட் கேர்ளா சாங் கேட்டுட்டு வாயேன் செல்லமே”

அதன் பின்னர் அவளுக்குப் பிடித்த பாடலை மியூசிக் ப்ளேயரில் கசியவிடவும் அமிர்தா சொல் பேச்சு கேட்கும் பெண்ணாய் மாறி தனது ரசனையைக் கணவனிடமிருந்து பாடல்களின் புறம் திருப்பினாள்.

ஆனாலும் அவனிடம் பேச்சு கொடுத்தபடியே தான் வந்தாள். அவனிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியை மட்டும் அவர்களின் இரவுணவின் போது கிடைக்கும் தனிமைக்காக ஒதுக்கி வைத்திருந்தாள்.

ஒரு வழியாக இருவரும் செங்கோட்டை நகராட்சியின் ஆர்ச்சைத் தாண்டி ஊருக்குள் நுழைந்த போது நேரம் இரவு ஏழு மணியைக் கடந்திருந்தது.

அவர்களின் தெருவுக்குள் நுழைந்த கார் வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழையும் போதே வீணை நாதம் செவியைத் தீண்டியது. அமிர்தா வித்யாசாகரை நோக்க அவனோ “இப்போலாம் டெய்லியும் அம்மா ஈவினிங் வீணை சாதகம் பண்ணுறாங்க… அதோட விஜி அத்தையும் சில நேரம் பாடுவாங்க… அவங்க ஃப்ரெண்ட்ஷிப்பும் பாண்டிங்கும் முன்ன மாதிரியே ஆயிடுச்சு” என்றான்.

“எனக்குத் தான் எதுவுமே தெரியல… எய்ட் டேய்சா புக், கொஸ்டீன் பேப்பர், ஆன்சர் ஷீட், கால்குலேட்டர் இதை தவிர எதுவுமே என் மைண்ட்ல தோணலயே!” என்றாள் அமிர்தா வருத்தத்துடன்.

“ரொம்ப கவலைப்படாத அம்மு… இனிமே அவங்களோட பாசமழைய தினமும் லைவா பாக்கலாம்.. சில நேரம் நனையவும் செய்யலாம்.. அதனால் நோ மோர் ஓவர் எமோசன்”

கேலி செய்தபடியே அவளுடன் காரிலிருந்து இறங்கியவன் காரைப் பூட்டிவிட்டு அவளிடமிருந்த லக்கேஜ் பேக்கை வாங்கிக்கொண்டான்.

இருவருமாய் உள்ளே நுழைந்த போது கோமதி வேதவதியைத் தவிர்த்து மற்ற அனைவரும் ஹாலில் குழுமியிருந்தனர்.

அமிர்தாவைக் கண்டதும் சமுத்ரா ஓடி வந்து கட்டிக்கொள்ள அதன் பின்னர் பெரியவர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொண்டாள் அவள்.

“எக்சாம் எப்பிடி பண்ணிருக்க? இந்த தடவை ஆல் பேப்பருமே ஈசினு கேள்விப்பட்டேன்” – இது ரகுநாதன்.

“வந்ததும் கேக்குற கேள்வியா இது? அதுல்லாம் அவ நல்லா தான் எழுதிருப்பா… நைட் ரொம்ப நேரம் கண் முழிச்சு படிச்சியா? கண்ணைச் சுத்தி கருவளையம் விழுந்துடுச்சு பாரு” – இது ஜானகி.

“எல்லா விசயத்தையும் நாளைக்கு பேசிக்கலாம்… குழந்தை ரொம்ப டயர்டா இருப்பா… போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுடா” – இது தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள்.

“உன் குரல் ஏன் நமநமனு இருக்கு? ஜலதோசமா? சைனஸ் இருக்குனு தெரிஞ்சும் ஏன்டி பச்சைத்தண்ணி தலைக்கு ஊத்துன?” – இது அவளது அன்னை.

“உடம்புக்கு முடியலனா டாக்டர் கிட்ட போவோமாடா?” – இது அவளது தந்தை.

இன்னும் மிச்சமிருப்பவர்கள் வேதவதியும் கோமதியும் மட்டுமே. அவர்கள் இரவுணவு தயாரிக்கும் வேலையில் லெட்சுமிபவனத்தின் சமையலறையில் பிசியாய் சுழன்று கொண்டிருந்தனர்.

அத்தோடு நல்லவேளையாக சங்கரனும் நாராயணனும் பிரணவையும் சுந்தரையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தனர். இல்லையென்றால் அந்தக் கேள்விப்பட்டியலில் இன்னும் ஆறு கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

அமிர்தா அனைவரின் கேள்விக்கும் முடிந்தளவுக்குப் பதிலளித்தாள். அத்தோடு பாக்யலெட்சுமி கொடுத்த இருட்டுக்கடை அல்வாவை மாமியார் வசம் ஒப்படைத்தாள்.

பின்னர் ஜானகியின் “காபி போடட்டுமா?” என்ற கேள்விக்கு வேண்டாமென மறுத்தவள் களைத்திருப்பதாகச் சொல்லிவிட்டுத் தனது அறையை நோக்கிச் செல்ல வித்யாசாகர் ஹாலில் அமர்ந்து அனைவரிடமும் அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

அமிர்தவர்ஷினி மாடிப்பகுதியை அடைந்த போதே நீண்டநாட்கள் கழித்து தனது சாம்ராஜ்ஜியத்தைக் காணும் மகாராணியைப் போல உணர்ந்தாள். இந்த மாடிப்பகுதியும் அவர்களின் அறையும் வராண்டாவும் அவளது மனதில் தனியிடம் பிடித்தவை ஆயிற்றே!

தங்களின் அறைக்குள் சென்றவள் தனது உடமைகளை வார்ட்ரோபில் அடுக்கி வைத்துவிட்டு நிமிரவும் சுவர்க்கடிகாரம் நேரம் எட்டுமணி என காட்டியது.

களைப்பு தீரக் குளித்தால் நன்றாக இருக்குமென தோன்ற குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தவள் உடம்பு கழுவி இலகு உடைக்கு மாறிய பிறகு உடலும் மனமும் இதமானதைப் போல உணர்ந்தாள்.

போனை எடுத்தவள் பாக்யலெட்சுமிக்கு அழைத்து தானும் வித்யாசாகரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டோம் என்ற தகவலைச் சொல்லிவிட்டு மேகவர்ஷினியிடம் இரண்டு வார்த்தைகள் உரையாடி முடித்து இரவு வணக்கத்துடன் அழைப்பைத் துண்டித்தாள்.

பயணக்களைப்பு மேலிட சற்று நேரம் கண்ணயரலாம் என தோன்றவும் விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தவள் அடுத்த நொடியே உறங்கியும் போனாள்.

வித்யாசாகர் கீழே குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தவன் நேரத்தைக் கவனிக்கவில்லை. ஜானகி எழுந்து சமையல் வேலையை ஆரம்பிக்கப் போகவும் விஜயலெட்சுமியும் உன்னிகிருஷ்ணனும் கிளம்ப அத்தோடு அருணாசலமும் திரிபுரசுந்தரியும் கூட தமது இல்லத்துக்குக் கிளம்பினர்.

அதன் பின்னர் ஜானகியின் நளபாகத்தில் பார்வதி பவனவாசிகள் அனைவரும் இரவுணவை ஒன்றாய் அமர்ந்து உண்டனர். வித்யாசாகர் அமிர்தவர்ஷினியைத் தவிர.

வித்யாசாகர் தங்கள் இருவருக்கும் தனியே எடுத்து வைக்கச் சொன்னவன் அனைவருக்கும் ‘குட் நைட்’ சொல்லிவிட்டு உணவு பாத்திரங்களுடம் மாடிப்படிகளில் ஏறினான்.

மாடியறையின் விளக்குகள் எரிய அவர்களின் அறைக்கதவு வெறுமெனே சாத்தியிருந்தது. உணவுப்பாத்திரங்களை மாடி வராண்டாவில் அவர்கள் எப்போதும் அமரும் இடத்தில் உள்ள சிறிய டீபாயில் வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அறையின் பெரிய சாளரம் திறந்திருந்ததால் அதன் வழியே கசிந்து வந்த நிலவொளியில் அமிர்தா உறங்குவது தெரியவே அவளின் உறக்கம் களையாதவாறு குளியலை முடித்து உடை மாற்றினான்.

 பயணக்களைப்பில் அசந்து உறங்குபவளை எழுப்ப அவனுக்கும் இஷ்டமில்லை தான். ஆனால் இரவுணவு உண்ணாமல் உறங்குவது நல்லது இல்லையே!

அவளது தோளை மென்மையாகத் தட்டி “அம்மு சாப்பிட்டுட்டுத் தூங்குடா” என வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போல மென்மையாய் உரைத்தவனின் குரல் அவளது செவியைத் தீண்டியதோ என்னவோ உறக்கத்தில் கூட அவளது இதழில் குறுஞ்சிரிப்பு ஒன்று மெதுவாய் முகிழ்ந்தது.

நிலவின் மெல்லிய வெளிச்சத்தில் செவ்விதழில் இளநகை மிளிர உறங்கியவளின் அழகில் மெய் மறந்து கன்னத்தில் கைவைத்து அவளது பூமுகத்தை ரசிக்கத் தொடங்கினான் அமிர்தாவின் சாகரன்.