சாகரம் 2

“நான் அம்முவ முதல் தடவை பாத்தது எங்க தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற ஆத்தோட படிக்கட்டுல தான்.. அந்த ஆறு எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓடுறதால எங்க தாத்தாவோட அப்பா நாங்க எல்லாரும் குளிக்கிறதுக்காக படிக்கட்டு கட்டி வச்சாராம்… சிவா தாத்தா கதை சொல்லிருக்காரு… அதே படிக்கட்டுல ஒரு காலையும் தண்ணிக்குள்ள இன்னொரு காலையும் வச்சபடி தான் அவ நின்னுட்டிருந்தா… அது ஆழமான இடம்… சோ நான் ஓடிப்போய் அவளை மேலே இழுத்துட்டு வந்துட்டேன்… அப்போ தான் அவளோட கண்ணை ஃபர்ஸ்ட் டைம் பாத்தேன்… கோலிக்கா சைஸ்ல பெரிய கண்ணு அவளுக்கு… சரியான முட்டக்கண்ணி முழியழகி தான் இந்த அமிர்தவர்ஷினி!”

    -அமிர்தாவின் சாகரன்

பத்து வருடங்களுக்கு முன்பு

பொழுது புலர்ந்து சூரியன் பூமிப்பெண்ணைத் தனது ஆரஞ்சு வண்ணக்கதிரால் முத்தமிட ஆரம்பித்த நேரம் லெட்சுமி பவனத்தில் ஒரு சிறுமியின் பேச்சு சத்தம் அந்தத் தெருவில் நடமாடுபவர்களின் செவிப்பறையைத் தீண்டித் திரும்பியது.

“நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்… நானும் தாத்தா கூட சேர்ந்து வாக்கிங் போவேன்… தாத்தா நீ தானே எனக்கு சோன்பப்டி வாங்கித் தர்றேனு சொன்ன? அம்மா கிட்ட சொல்லு தாத்தா… நானும் உன் கூட வருவேன்”

அவளது கீச்சுக்குரல் உச்சஸ்தாயியில் கேட்க அருணாசலம் பேத்தியின் குட்டை முடியை நீவி விட்டவாறே “மேகா குட்டிய ஒன்னும் சொல்லாத பாக்யா… அவளும் என் கூட வரட்டும்” என்று சொல்லவும் அவரது கையைப் பற்றிக்கொண்டு கண்ணை உருட்டி தனது தாயாருக்கு அழகு காட்டினாள் பதினோரு வயது மேகவர்ஷினி.

“வாக்கிங் போறதுலாம் சரி தான்… வெளிய இன்னும் குளிர் குறையலடி… இந்த மப்ளரைப் போட்டுக்கோ” என்று அதட்டலுடன் குளிருக்காக அவளுக்கு மப்ளரை அணிவித்தாள் அவளது அன்னை பாக்யலெட்சுமி.

தனது தந்தையும் மகளும் ஒன்றாய் நடந்து செல்வதைப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி நின்ற பாக்கியலெட்சுமி அருணாசலத்தின் மூன்றாவது மகள். ஹாலின் நடுநாயகமாய் தொங்கிய தங்களது குடும்ப புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு பெருமூச்சு வந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

அதில் அருணாசலமும் திரிபுரசுந்தரியும் அமர்ந்திருக்க அவரது பின்னே அணிவகுத்து நின்றிருந்தனர் அவரது மூன்று மகள்கள். பெண்கள் மகாலெட்சுமிக்குச் சமானம் என்பதால் ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, பாக்யலெட்சுமி என பெயரிலும் லெட்சுமியைப் புகுத்திவிட்டார் அவர்.

தந்தைக்கும் தாய்க்கும் பக்கவாட்டில் இடமும் வலமும் அரண் போல நின்றிருந்தனர் இளைய சகோதரர்கள் சங்கரனும் நாராயணனும்.

இந்தப் புகைப்படத்தைக் காணும் போது தானாக பாக்யலெட்சுமியின் விழிகள் கலங்கிவிடும். ஐந்து உடன்பிறப்புகளும் ஒற்றுமையாக ஆடிப் பாடிச் சந்தோசமாய் இருந்த இல்லம் இது. இப்போதும் சந்தோசத்துக்கு எந்தக் குறைவும் இல்லை தான். ஆனால் ஐந்தில் ஒருத்தி விடுபடுகிறாளே!

அருணாசலம் அவரது மூத்தமகள் ஜெயலெட்சுமியை பக்கத்தில் புளியரையில் உள்ள ‘ஹோட்டல்காரர் குடும்பம்’ என்று மரியாதையுடன் அழைக்கப்படும் குடும்பத்தின் மூத்தமகனான சாந்தகோபாலனுக்கு மணமுடித்திருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு ஆண்வாரிசாய் ஹரிஹரன் மட்டும் தான். அவன் மாடியறையில் தூங்கிக் கொண்டிருந்தான் இப்போது.

மூன்றாவது பெண் பாக்யலெட்சுமியைத் திருநெல்வேலியில் ரங்கநாதனுக்கு மணமுடித்திருக்க அவர்கள் குடும்பத்தோடு ரங்கநாதன் மேலாளராய் பணியாற்றும் சிமெண்ட் தொழிற்சாலை இருந்த சங்கர் நகர் எனும் பகுதியில் வசித்து வந்தனர்.

அவரது இரண்டாவது மகள் விஜயலெட்சுமி. அவரது மகள்களிலேயே சற்று நிமிர்வான பெண். படிப்பிலும் வேலையிலும் கெட்டிக்காரி. அவளைப் பிடிக்காதவர்களே அந்தக் குடும்பத்தில் இல்லையெனலாம்.

ஆனால் இப்போது அவளது பெயரைக் கூட யாரும் இந்த லெட்சுமி பவனத்தில் உச்சரிக்க விரும்புவதில்லை. அவரை நினைத்துத் தான் பாக்யலெட்சுமி இப்போது கலங்கினாள்.

ஆனால் “பாக்யா மதினி உங்க தம்பி உங்களை கூப்பிடுறாங்க” என்ற நாராயணனின் மனைவி வேதவதியின் குரலும் “பாக்யா அத்தை எனக்கு புட்டு வேணும்” என்ற சங்கரனின் மகன் சுந்தரின் குரலும் ஒன்றாய் ஒலிக்க வேகமாய் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற சென்றுவிட்டாள்.

அதே நேரம் காலை நேர நடைபயிற்சிக்காக மெதுவாய் நடந்த தாத்தாவும் பேத்தியும் தங்கள் வீடு இருக்கும் தெருவைக் கடந்து நித்தியகல்யாணி அம்மன் கோயில் இருக்கும் பக்கமாக நடக்கத் தொடங்கினர்.

பேத்தியின் கேள்விகளுக்குப் பதிலடித்தபடியே அங்கிருந்து அம்மன் சன்னதி வரை நடந்தவர்கள் மெதுவாய் ஊரை வலம் வர ஆரம்பித்தார் அருணாசலம்.

‘செங்கோட்டை நகராட்சி அன்புடன் வரவேற்கிறது’ என்ற வளைவைக் காட்டிய அருணாசலம் பேத்தியிடம் “ஒரு காலத்துல நம்ம ஊர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோட சேர்ந்து இருந்துச்சுடா… அதோட அடையாளம் தான் இந்த ஆர்ச்” என்று சொல்ல மேகவர்ஷினி தனது முகவாயில் தட்டியவள்

“அது கேரளா தானே தாத்தா… என்னோட சோஷியல் சயின்ஸ் புக்ல அப்பிடி தான் போட்டிருந்துச்சு… அங்க மலையாளம் தான் அபிஷியல் லாங்வேஜாம்… அப்போ இங்கேயும் மலையாளம் தான் பேசுனாங்களா?” என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபடியே வந்தவள் போலீஸ் ஸ்டேசனைத் தாண்டி செல்கையில் அவளது அபிமான சோன்பப்டி விற்கும் கடையைப் பார்த்துவிட்டாள்.

அதைச் சுட்டிக்காட்டி “ஐயர் தாத்தா கடை ஓபன் பண்ணிட்டாங்க… எனக்கு சோன்பப்டி வாங்கிக் குடு தாத்தா” என்று ஆவல் ததும்ப கேட்டாள்.

அருணாசலமும் பேத்தி கேட்டதை மறுக்காது வாங்கிக் கொடுக்க அவள் சோன்பப்டியைக் கையில் வைத்துக் கொண்டு சாப்பிட மறந்தவளாய் கடைக்கும் அடுத்துள்ள வீட்டுக்கும் இடையே இருந்த சந்து ஒன்றை பார்த்து கண்ணை உருட்டிக் கொண்டிருந்தாள்.

அருணாசலம் இவ்வளவு நேரம் சோன்பப்டி வாங்கி தந்தால் தான் ஆயிற்று என குதித்துக் கொண்டு தன்னுடன் நடைபயிற்சிக்கு வந்தவள் வாங்கிக் கொடுத்த பிறகு சாப்பிடாமல் என்ன செய்கிறாள் என அவளை உற்று நோக்கினார்.

பேத்தி யாரிடம் கண் ஜாடையில் பேசுகிறாள் என எட்டிப் பார்க்க முட்டைக்கண்ணும், போனிடெயிலுமாய் முழங்கால் வரை நீண்ட கவுனுடன் அந்தச் சந்துக்குள் நின்று கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.

அவளது முகச்சாயல் அவருக்குப் பரிச்சயமானதே தான். ஒருவேளை இவள்… என்ற ரீதியில் சிந்தித்தவர் “அவ தான்  எப்போவோ இந்த ஊரை விட்டுப் போயிட்டாளே… ஆனா இந்தச் சின்னப்பொண்ணு அவளை மாதிரியே இருக்குறாளே” என ஐயமாய் அவளை நோக்கினார்.

அருணாசலம் தன்னையும் மேகாவையும் கவனித்துவிட்டாரென கண்டுகொண்டவள் பயந்து போய் நிற்க மேகாவோ “தாத்தா அம்முவோட வீட்டுக்குப் போவோமா?” என்று ஆர்வமாய் கேட்க இவளுக்கு எப்படி அந்தச் சிறுமியைத் தெரியுமென அவருக்கு ஆச்சரியம்.

பேத்தியோடு சேர்ந்து அவளருகே சென்றவரை கண்ணீர் மல்க பார்த்தாள் அச்சிறுமி. பின்னர் ஓடி வந்து “தாத்தா” என்று அணைத்துக் கொண்டவளின் ஸ்பரிசம் அவரது இரண்டாவது மகளை நினைவுறுத்த ஒரு நிமிடம் தடுமாறிய அருணாசலம் அச்சிறுமி யாரென்று புரிந்ததும் நடுங்கும் விரல்களால் அவளது முதுகை வருடிக் கொடுத்தார்.

அவள் நிமிர்ந்து பார்த்து “நீங்க எங்க வீட்டுக்கு வர மாட்டிங்களா தாத்தா? அம்மா கிட்ட நேத்து கேட்டேன்… அவங்க பதில் சொல்லல… பாக்யா சித்தியும் ஒன்னுமே சொல்லாம இருந்தாங்க… மேகா தான் உங்களைக் காட்டுறேனு எனக்குப் பிராமிஸ் பண்ணுனா தாத்தா” என்று சொல்லவும் தனது இரண்டாவது மகளுடன் கடைகுட்டிப்பெண் இன்னும் நல்லுறவுடன் தான் இருக்கிறாள் என்பது அவருக்குத் தெரிந்தது.

குழந்தையின் கூந்தலை வருடிக் கொடுத்தவர் “தாத்தா அப்புறமா உங்க வீட்டுக்கு வர்றேன்டாமா… இப்போ நீ தாத்தாவோட வீட்டுக்கு வர்றியா?” என்று வாஞ்சையாய் கேட்க அவள் ஆர்வமாய் தலையாட்டினாள்.

 மேகவர்ஷினி குதூகலத்துடன் தனது சோன்பப்டியில் அவளுக்குப் பங்கு கொடுக்க அதை வாங்கிக் கொண்டவளிடம் “உன் பேரு என்னடாம்மா?” என வினவினார் அருணாசலம்.

அவள் “அமிர்தவர்ஷினி தாத்தா… எல்லாரும் என்னை அம்முனு கூப்பிடுவாங்க” என்று சொல்ல

“இவ பொய் சொல்லுறா தாத்தா… இவளை நான் தான் அம்முனு கூப்பிடுவேன்… மத்தவங்க அம்ருதானு கூப்பிடுவாங்க” என்றாள் மேகா.

அருணாசலம் இளையபேத்தியின் பேச்சைக் கேட்டு நகைத்தவர் “அது அம்ருதா இல்ல… அமிர்தா… கரெக்டா சொல்லணும்” என்று அவளது உச்சரிப்பைத் திருத்த அவளுக்கு ஏனோ ‘அமிர்தா’ வாயில் நுழையவில்லை.

மனதுக்குள் தனது தாயார் அமிர்தம்மாளின் பெயரைச் சூட்டியிருந்த மகளை மெச்சிக்கொண்டே வீடு இருக்கும் பகுதியை நோக்கி நடைபோட்டார் அவர்.

இருவரிடமும் அரட்டையடித்தபடி தனது வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தார் அருணாசலம். அங்கிருந்த வீடுகளின் பழமையும் அழகும் சிறுமி அமிர்தவர்ஷினியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்தத் தெருவில் அனைத்து வீடுகளும் பழைய காலத்து பாணி கலந்து மட்டப்பா வைத்துக் கட்டப்பட்டவை. ஓங்கி உயர்ந்த மரக் கதவுகளும், நாக்கு ஓடு போட்ட கூரையுமாக இருக்கும் கட்டைக்குத்து வீடுகள் அந்தப் பக்கங்களில் பிரபலம்.

தெருவின் இரு புறங்களிலும் வீடுகள் வரிசையாய் அணிவகுத்திருக்க வீட்டின் முற்றங்களில் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கன்னிகா கோலங்கள் மங்களகரமாய் செங்காவி அடிக்கப்பட்டு மின்னின.

அங்கே இருக்கும் குடும்பங்கள் அனைத்தும் உயர்நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அத்தோடு அடுத்தவர் விசயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்காதவர்கள். காலம் காலமாய் ஒரே இடத்தில் வசிப்பதால் உறவுமுறையை மறக்காமல் உரிமையோடு பழகும் குணம் கொண்டவர்கள்.

எனவே தான் அருணாசலம் தனது இரு பேத்திகளையும் அழைத்துக்கொண்டு வந்த போது “என்ன சார்வாள் காத்தாலேயே வாக்கிங்கா? இந்தப் பொண்ணு யாரு?” என்று கேட்க

அவர் தயக்கமின்றி “என் ரெண்டாவது மகள் விஜியோட பொண்ணு” என்று சொல்ல

“அதான பாத்தேன்… மூக்கும் முழியுமா விஜிய உரிச்சு வச்சிருக்கா… சரி அருணாசலம் சார்.. எனக்கு பேங்குக்குப் போகணும்… நாழியாகுது… வரட்டுமா?” என நாகரிகமாய் விடை பெற்றனர்.

அருணாசலம் நடந்து தெருவின் இறுதிக்கு வந்தவர் அங்கே ஜோடியாய் இரு வீடுகள் தோட்டம் சூழ இருப்பதை அமிர்தாவுக்குக் காட்டி

“பார்வதி பவனம்னு எழுதிருக்கே இந்த வீடு என்னோட ஃப்ரெண்ட் சதாசிவத்தோடது… அந்த லெட்சுமி பவனம் தான் நம்ம வீடு… இந்த ரெண்டு வீட்டையும் கட்டுனது எங்கப்பாவும் சதாவோட அப்பாவும் தான்.. வீட்டுக்குப் பின்னாடி பெரிய தோட்டம் இருக்கு… அந்த தோட்டம் நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவானது. அங்கே ஒரு கிணறு இருக்கு… இவ டெய்லி அந்த கிணத்து தண்ணில தான் குளிப்பா… கேட்டைத் திறந்தா ஆறு ஓடும்.. அந்த ஆத்துல குளிக்க படிக்கட்டு கூட இருக்கு” என்று சொல்ல அமிர்தா அவர் சொன்னதைக் கேட்டு விழிகளை விரித்தாள்.

அவர் பேத்தியின் முகவாயைக் கிள்ளி முத்தமிட்டுவிட்டு தன் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றபோதே நண்பர் சதாசிவத்தின் இல்ல வாயிலில் நிழலாடியதையும் அதைத் தொடர்ந்து கதவு படீரென அறைந்து சாத்தப்பட்டதையும் கவனித்துவிட்டார்.

அது யாரென அறிந்தவராகையால் எதுவும் பேசாமல் பேத்திகளுடன் வீட்டை அடைந்தவர் உள்ளே நுழைந்ததும் நடு ஹாலில் குழுமியிருந்த  குடும்பத்தினரிடம் அமிர்தவர்ஷினியை அறிமுகப்படுத்தினார்.

பாக்யலெட்சுமி தந்தையை அதிர்ச்சியாய் நோக்க அவரோ குறுநகையுடன் “குழந்தைங்க தெய்வம் மாதிரி பாக்யாம்மா… அவங்களுக்குச் சரினு பட்டதை செஞ்சிடுவாங்க” என்று சொல்லிவிட்டார்.

திரிபுரசுந்தரி நடுமகளின் சாயலில் களையான முகத்துடன் நின்ற பேத்தியைக் கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்தவர் “என் ராஜாத்தி… இப்போ தான் ஆச்சிய பாக்கணும்னு தோணுச்சா?” என்று வாஞ்சையாய் கேட்க அமிர்தவர்ஷினிக்கு அழுகை தான் வந்தது.

அதற்குள் ஹரிஹரன், சுந்தர் மற்றும் பிரணவிடம் அமிர்தவர்ஷினியைக் காட்டி “இனிமே அவளையும் நம்ம செட்ல சேர்த்துக்கோங்க” என்று பெரியமனுஷி போல சொல்லிக் கொண்டிருந்தாள் மேகவர்ஷினி.

அதன் பின்னர் ஹரிஹரன் நல்ல மூத்தச்சகோதரனாய் தலையை வருடிக் கொடுக்க, பிரணவும் சுந்தரும் தங்களது ஜெம்சில் அவளுக்குப் பங்கு கொடுக்க அதைச் சாப்பிட்டபடியே தனது சகோதரர்களிடம் தாங்கள் கொல்லத்தில் இருந்து இங்கே வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள் அமிர்தா.

கோமதியும் வேதவதியும் ஜெயலட்சுமியிடம் “குழந்தைங்க எவ்ளோ ஈசியா ஒருத்தரோட ஒருத்தர் நெருக்கமாயிடுறாங்கல்ல மதினி! நீங்களும் பாக்யா மதினியும் லீவுக்கு வர்றப்போ வீடு கலகலப்பா இருக்குனு நாங்க அடிக்கடி சொல்லுவோம்… இப்போ இந்தக் குட்டிப்பொண்ணும் அவ அம்மாவும் வந்தா கூட நல்லா தான் இருக்கும்.. இனியாச்சும் பழசை மறந்துட்டு எல்லாரும் ஒன்னா இருக்கணும்” என்று சொல்ல அவரும் அதையே ஆமோதித்தார்.

அவரும் பாக்யலெட்சுமியும் பிள்ளைகளுக்குப் பள்ளியில் தேர்வு விடுமுறை விட்டதும் செங்கோட்டைக்கு வந்துவிடுவர். விடுமுறை நாளில் தாத்தா பாட்டிகளுடன் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நேரமும் போகும்; கூடவே உறவுகளின் முக்கியத்துவமும் புரியும் என்பது அந்தச் சகோதரிகளின் எண்ணம்.

கூடவே தங்களின் பிள்ளைகளுடன் வாய் ஓயாது பேசிக் கொண்டிருந்த அமிர்தவர்ஷினியை ஆதுரத்துடன் நோக்கியவர் குழந்தை தன் வயதொத்தவர்களின் நட்புக்கும், உறவுகளின் அரவணைப்புக்கும் எவ்வளவு தூரம் ஏங்கியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார்.

அதே நேரம் தந்தை, தாயார் மற்றும் இளையச்சகோதரன்களிடம் தனக்கும் விஜயலெட்சுமிக்குமான பிணைப்பைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார் பாக்யலெட்சுமி.

“அவ இங்க இருந்து போனதுக்கு அப்புறமா எனக்குக் கல்யாணம் ஆகி நானும் திருநெல்வேலிக்குப் போயிட்டேன்… அப்போ தான் எதேச்சையா ஒரு நாள் இவங்கப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் கொல்லத்துக்குப் போயிட்டு வந்த போட்டோவை காட்டுனாரு… அப்போ அதுல மாமாவும் விஜியும் இருந்தாங்க… அவங்களை பத்தி கேட்டப்போ மாமா அங்க ஒரு பெரிய கம்பெனில ஃபினான்ஸ் மேனேஜர்னு சொன்னாரு… அப்புறம் நானும் மேகாப்பாவும் அவங்களை மீட் பண்ணுனோம்…

என்னால விஜிக்காவை ஒதுக்கி வைக்க முடியல… வருசத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட மீட் பண்ணுவோம்… அதான் மேகாக்கும் அம்முக்கும் நல்ல பழக்கம்… இப்போ மாமாவோட கம்பெனி பிராஞ்ச் பிரானூர்ல ஓபன் பண்ணிருக்காங்களாம்… அதனால இங்க வந்து செட்டில் ஆயிட்டாங்க… அதோட அமிர்தாவும் பெரிய மனுஷியா ஆயிட்டானு கேள்விப்பட்டேன்… அதான் நாலு நாளுக்கு முன்னாடி அவளைப் போய் பாத்துட்டு வந்தேன்.. அப்போவே தாத்தா ஆச்சிலாம் வர மாட்டங்களானு கேட்டா குழந்த”

அனைத்தையும் பொறுமையாக கேட்ட அருணாசலம் தனது மகன்களிடம் பேத்திக்குச் செய்ய வேண்டியவற்றை நினைவுறுத்த திரிபுரசுந்தரியின் குரல் இடையிட்டது.

“எல்லாம் சரிங்க… ஆனா ஜானுவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா வருத்தப்படுவாளே! எனக்கு அவளை நினைச்சா மனசுக்கு நெருடலா இருக்குங்க”

அதுவும் உண்மை தான்! இப்போது பேத்தியை அழைத்து வரும் போது அறைந்து சாத்திய பார்வதி பவனத்தின் கதவே ஜானகியின் மனநிலையைத் தெளிவாய் உணர்த்திவிட்டது அவருக்கு.

ஆனால் ஹாலில் கேட்ட பேரன்கள் மற்றும் பேத்திகளின் உற்சாக கூச்சல் அனைத்துத் தயக்கங்களையும் உடைத்துவிட தனது இரண்டாவது மகளைச் சந்தித்து பேத்திக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யுமாறு மகன்களிடம் கட்டளையிட்டு விட்டார் அருணாசலம்.

தனது மனம் அமிர்தவர்ஷினியைக் கண்டதும் மாறியதைப் போல ஜானகியும் மாறிவிடுவாள் என எண்ணினார் அவர். ஆனால் ஜானகி அவ்வளவு எளிதில் மனம் மாற மாட்டார் என்பதை அறிந்த விதி விஜயலெட்சுமியை மீண்டும் அவரது குடும்பத்துக்குள் சேர்க்க வசதியாய் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டது.