சாகரம் 18

கிருஷ்ணா மாமாவும் விஜி அத்தையும் அம்முவுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்களாம்.. எனக்கு ஒரு நிமிசம் உலகமே நின்னு போன ஃபீல்அது எப்பிடி நான் ஒருத்தன் இருக்குறப்போ மாமா அம்முக்கு வேற மாப்பிள்ளை பாக்கலாம்? ஒரு வேளை அம்மு யாரையும் விரும்புறாளானு இன்டேரக்டா அவ கிட்டயே கேட்டுப் பாத்துட்டேன்அவ ஆஞ்சனேயரோட ஃபீமேல் வெர்சன் மாதிரி இன்னும் நாலு வருசத்துக்கு சிங்கிள் தான்னு அடிச்சுப் பேசுறாஇப்போ நான் என்ன பண்ணனும்னு புரியலஆனா என்னால அம்முவ வேற ஒருத்தனுக்கு விட்டுக் குடுக்க முடியாதுபிகாஸ் ஐ லவ் ஹெர் அ லாட்

                                                        –அமிர்தாவின் சாகரன்

அமிர்தவர்ஷினி அன்றைய தினம் காலையில் கண் விழித்ததும் கணவனின் யோசனையை எப்போது செயல்படுத்தலாம் என்ற எண்ணத்துடன் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அன்றைய மாலை வரை மட்டுமே நேரம் இருந்தது.

மறுநாள் காலையில் அவளும் வித்யாசாகரும் திருநெல்வேலி செல்வதாக முடிவெடுத்திருந்தனர். அன்று போனால் இன்னும் எட்டு நாட்கள் அவளுக்குத் தேர்வு இருக்கும். அதன் பின்னர் இரண்டு தினங்களாவது சித்தி வீட்டில் தங்கும் எண்ணம் அவளுக்கு.

அதற்குள் அவளது மாமியாரை அந்த வீணையை வாசிக்கவைத்தே ஆகவேண்டும். எப்படி அக்காரியத்தை நிறைவேற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடியே குளியலறையிலிருந்து தலையைத் துவட்டியபடியே வெளியே வந்தான் வித்யாசாகர்.

அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் தனது டவலால் அவளை வளைத்து இழுத்தவன் “முட்டக்கண்ணி முழியழகிக்கு என்ன யோசனை?” என்று கொஞ்ச ஆரம்பிக்கவும் அமிர்தா கண்களை விரித்து அவனை நோக்கினாள்.

“மானிங்கே ரொமான்ஸ் மூட்ல இருக்கிங்களே மிஸ்டர் வித்யாசாகர்… என்ன காரணம்?”

“வேற என்னடி அம்மு? நீ இன்னும் எட்டு நாளுக்கு இங்க இருக்க மாட்டியே… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்… உன்னோட முட்டைக்கண்ணு உருட்டல், அழகா சுழிக்கிற புருவம், உனக்கு மட்டுமே சொந்தமான மைசூர் சாண்டல் சோப்போட வாசம் இதைலாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு மீண்டும் மனைவியின் வாசத்தை மனதில் நிரப்பிக்கொண்டான்.

இன்னும் எட்டு நாட்களுக்கு அவனுடன் இருக்கப்போவது அவளின் இந்த வாசனை மட்டும் தானே! அவனது இறுகிய அணைப்பில் நெகிழ்ந்து போனவள் எக்கி நின்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நானும் உங்கள மிஸ் பண்ணுவேன் சாகர்… நான் டெய்லியும் உங்களுக்குக் கால் பண்ணுவேன்… நீங்க என் கிட்ட பேசணும்”

“ம்ம்”

“அப்புறம் நைட் நைன் ஓ கிளாக்குக்கு நான் வீடியோ கால் பண்ணுவேன்… நீங்க அப்போ ஃப்ரீ ஆயிடுவிங்களா?”

“ம்ம்”

படக்கென அவனிடமிருந்து விலகியவள் “என்ன எல்லாத்துக்கும் ம்ம்னு மட்டும் சொல்லுறிங்க… நான் சொல்லுறது காதுல விழுதா? இல்லயா?” என்று கேட்கவும் அவன் மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ப்ச்… நானும் உன் கூடவே திருநெல்வேலிக்கு வந்துடவா?”

ஏக்கத்துடன் கேட்டவனது குரலில் அவளுக்கும் உள்ளுக்குள் உருகியது.

 “எட்டு நாள் தானே! கண் மூடி திறக்கறதுக்குள்ள ஓடிப் போயிடும் சாகர்… அதுக்கு அப்புறம் நம்மள யாராலயும் பிரிக்க முடியாது” “நான் ஆன்ட்டிய எப்பிடியாச்சும் வீணைய வாசிக்க வைக்கப் போறேன்… நீங்க தலைய துவட்டிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் அவள்.

அவள் சென்றதும் பெருமூச்சு விட்டபடி தலையைத் துவட்டிவிட்டு கண்ணாடியைப் பார்த்தபடி சிகையைச் சிலுப்பிக்கொண்டான்.

அதே நேரம் கீழே சென்ற அமிர்தா மெதுவாகத் தனது வேலையை ஆரம்பித்தாள். சதாசிவத்துடன் அமர்ந்திருந்த அருணாச்சலம் பேத்தியைக் கண்டதும் அவள் திருநெல்வேலி செல்வதற்கு பெட்டி படுக்கைகளைக் கட்டிவிட்டாளா என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

“அம்முகுட்டி ஊருக்குக் கிளம்புறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா? லக்கேஜ் எடுத்து வைக்கிறப்போ உன்னோட புக், ஐடி கார்ட், கால்குலேட்டரைத் தனியா ஒரு கவர்ல போட்டு வச்சுக்கோ… இல்லனா டிரஸ் கூட சேர்ந்து கலந்துடப் போகுது” என அறிவுறுத்தவும் அனைத்துக்கும் சரியென தலையாட்டி வைத்தாள்.

சமையலறையை எட்டிப் பார்த்தபடி நின்றவளின் போனில் அழைப்பு வரவே யாரென பார்த்தவள் அழைத்தது மேகவர்ஷினி என்றதும் உடனே அழைப்பை ஏற்றாள்.

எடுத்ததும் அவள் எப்போது வருகிறாள் என வேகமாகப் பேச ஆரம்பித்தாள் மேகா. அவள் கேட்ட கேள்விக்குப் அமிர்தா பதிலளிக்க, சகோதரிகள் இருவரும் வழக்கம் போல கலகலப்பாக உரையாட ஆரம்பித்தனர்.

“நாளைக்கு மானிங் நானும் சாகரும் செங்கோட்டைல இருந்து கிளம்புறோம் மேகா… எப்பிடியும் லஞ்சுக்கு முன்னாடி வந்துடுவோம்டி”

“சாகரா? அஹான்… செல்லப்பேருலாம் வச்சாச்சு போல… கலக்குற அம்முக்கா… அப்புறம் ரொமான்ஸ் மூட்ல இருக்குற புதுப்பொண்ணு எக்சாம் மோடுக்கு வந்துட்டிங்களா இல்லயா?”

“ஏய்! கிண்டல் பண்ணாதடி… எனக்கு எப்போவுமே தாத்தாவுக்கு நல்லப்பேர் வாங்கிக் குடுக்கணுங்கிறது மட்டும் மறக்காது… சாகர் இந்த விசயத்துல என்னை விட ரொம்ப தெளிவு”

“அதுல்லாம் சரி! நான் சொன்ன மாதிரி வித்தி அண்ணா கிட்ட ஹனிமூன் பத்தி பேசுனியா? எங்க போறதா ஐடியா?”

“முதல்ல எக்சாமை முடினு உன்னோட வித்தி அண்ணா சொல்லிட்டார்… அப்புறம் அவரே கூட்டிட்டுப் போவாராம்… ஏன்னா இந்த எக்சாம்ல ஒரு தடவை கோட்டை விட்டுட்டேன்னா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்… ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே நான் கிளியர் பண்ணணும்டி”

“நீ கண்டிப்பா கிளியர் பண்ணுவ… ஏன்னா நீ எப்பிடிப்பட்ட படிப்ஸ்னு எல்லாருக்கும் நல்லா தெரியும்… அதுல்லாம் சரி! மாமியார் கூட ராசியா ஆனதுக்கு அப்புறம் நீ எப்பிடி ஃபீல் பண்ணுறனு சொல்லவேல்லயே… ஜானு அத்தையையும் பெரியம்மாவையும் சேர்த்து வைக்கணும்னு உனக்குத் தோணலயா?”

“நானும் என்னென்னவோ பண்ணுறேன்… அவங்க என் கிட்ட ஒட்டுற மாதிரி இருக்கு… திடீர்னு விலகிடுறாங்க… முன்ன மாதிரி ஒரேயடியா என்னை வேத்துமனுஷியா தள்ளி வைக்கல… கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசுல பழைய நல்ல விசயங்கள் நியாபகத்துக்கு வந்தா கசப்பான சம்பவங்களை மறக்க ஆரம்பிச்சிடுவாங்கங்கிறது என்னோட கெஸ்… இப்போவும் எனக்கு சாகர் ஒரு ஐடியா குடுத்திருக்கார்”

அமிர்தா வித்யாசாகரின் யோசனையைச் சொல்லவும் மேகவர்ஷினிக்கு அதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை.

இதனால் ஜானகி மனம் மாறுவாரா என்ற ஐயம் தான் அவளுக்கு. அதே ஐயத்தை அமிர்தவர்ஷினியிடம் கேட்க அவளோ முழுவதுமாக மனம் மாறவில்லை என்றாலும் சற்றேனும் மனதிலுள்ள கசப்புணர்வுகள் அகலுமே என்று சொல்லவும் தமக்கையின் இந்த முயற்சியில் அவள் ஜெயிக்க வாழ்த்து தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த ஜானகியைக் கண்டவள் உடனே யோசனையைச் செயல்படுத்த ஆரம்பித்தாள்.

“தாத்தா படிச்சு படிச்சு மூளை சூடாகிப் போயிடுச்சு… மனசு கொஞ்சம் நிம்மதியா அமைதியா இருக்கணும்னா ரிலாக்சேசனுக்கு மியூசிக், புக்னு வேற பக்கம் மனசை திசை திருப்பணும் தாத்தா… ஆனா ஆல்ரெடி புக் படிச்சு பாக்குற இடம் எல்லாம் டெபிட் கிரெடிட்டும் நம்பருமா கண்ணுக்கு முன்னாடி வருது… கொஞ்சம் மியூசிக் கேட்டா மனசுக்கு இதமா இருக்கும்”

தாத்தாக்களிடம் சொல்வது போல ஓரக்கண்ணால் ஜானகியைப் பார்த்தவளை அவரும் கவனித்துவிட்டார். வழக்கம் போல பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.

தனது மாமனாரிடம் இன்றைய தினம் மாங்காய் பச்சடியில் வெல்லம் சற்று அதிகரித்து விட்டதைக் கூறிவிட்டு அதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே என விசாரித்த ஜானகியைப் பார்த்த அமிர்தவர்ஷினி ஆயாசமடைந்தாள்.

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவள் “அது சரி! ஆசைப்பட்டதுலாம் நடக்குறதுக்கு ஒரு கொடுப்பினை வேணுமே தாத்தா… எனக்கு அது இல்லையே! ஹூம்” என்று பெருமூச்சு விட்டதற்கு அருணாசலமும் சதாசிவமும் அவளது மனம் அமைதியடைய ஆலோசனைகளை அள்ளி வழங்கினரே தவிர ஜானகி அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

“எனக்கு வாய்ச்சது மாதிரி கல்நெஞ்சக்கார மாமியார் யாருக்கும் வாய்க்கக்கூடாது பகவானே” என்று ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டாள். மனதிற்குள் தான்!

தனது பேச்சை ஜானகி கண்டுகொள்ளாத சோகத்துடன் அறைக்குத் திரும்பியவள் தனது உடமைகளை அடுக்கத் தொடங்கினாள். அருணாசலம் சொன்னது போல ஐடி கார்ட் மற்றும் புத்தகங்களைத் தனியே வைத்துக் கொண்டாள்.

அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு நிமிர்ந்தவளின் காதில் காற்றில் நீந்தி வந்த மெல்லிய வீணையின் நாதம் இன்னிசை வெள்ளமென பாய அமிர்தவர்ஷினிக்கு ஒரு நொடி கையும் காலும் ஓடவில்லை.

தான் சொன்னதைக் கேட்டு தனக்காக ஜானகி வீணையை மீட்டுகிறாரா! அப்படி என்றால் தனது அன்னையையும் மன்னித்து விட்டாரா!

எண்ணற்ற கேள்விகள் சந்தோசத்தினூடே எழ வேகமாக அறையை விட்டு வெளியேறியவள் கீழே வந்து பார்க்க அங்கே வீணையை மடியில் தாங்கி மீட்டிக்கொண்டிருந்தவர் ஜானகியே தான்.

சிம்மவண்ணத்திலான அந்த தஞ்சாவூர் வீணையின் குடப்பகுதியில் இருந்த சரஸ்வதியின் உருவத்துக்காகவும் முற்பகுதியில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருந்த யாளிக்காகவும் ஞானதேசிகனிடம் விஜயலெட்சுமியும் ஜானகியும் அடம்பிடித்து வாங்கிய நினைவு நெஞ்சில் துளிர்த்தது.

அது ஞானதேசிகன் வளமாய் இருந்த காலம் என்பதால் மகள் அடம்பிடிக்கவும் வாங்கிக் கொடுத்துவிட்டார். ஜானகியின் முகம் அந்தப் பழைய நினைவுகளின் இனிமையில் கனிந்திருந்தது.

விரல்கள் வீணையை மீட்டிக் கொண்டிருக்க இத்தனை நாட்கள் அந்த வீணையைத் தொட்டும் பார்த்திராத ஜானகி இன்று சாதகம் செய்வதைப் பார்த்தபடி வீணையின் நாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர் சதாசிவமும் அருணாசலமும்.

 அன்றைய தினம் வாரயிறுதி என்பதால் ரகுநாதனும் வீட்டிலேயே இருந்தார். தோட்டத்தில் காற்றாட அமர்ந்திருந்தவர் திடீரென கேட்ட வீணையிசையில் மெய்மறந்து அதில் இலயித்துவிட்டார்.

அவருக்கு வீணையிசை மிகவும் பிடிக்கும். திருமணமான புதிதில் எத்தனையோ முறை மனைவியை வாசிக்கச் சொல்லியும் அவர் நிர்தாட்சணியமாக மறுத்துவிடவே வற்புறுத்தும் எண்ணமற்று இருந்துவிட்டார் ரகுநாதன்.

மனைவி நேற்று இரவு அமிர்தா அந்த வீணையைப் பற்றி கேட்டதை சொல்லும் போதே மருமகள் ஏதோ செய்யப்போகிறாள் என யூகித்திருந்தார். இன்று காலையில் பழைய சாமான் வைத்திருந்த அறையிலிருந்து அந்த வீணையை எடுத்துவந்து சுத்தம் செய்து வைத்த போது அமிர்தவர்ஷினி ஜானகியை வீணை வாசிக்க வைக்காது ஓயமாட்டாள் என்பது ரகுநாதனுக்குப் புரிந்துவிட்டது.

இதோ அவரது பிடிவாதக்கார மனைவி இத்தனை ஆண்டுகளாக தீண்டக் கூட மறுத்த வீணையை மீட்ட வைத்துவிட்டாளே! கெட்டிக்காரப்பெண் தான் என மருமகளுக்கு மனதுக்குள் பாராட்டுப்பத்திரம் வாசித்தபடியே மனைவியின் வீணை நாதத்தை ரசிக்க ஆரம்பித்தார்.

அதே நேரம் சமுத்ராவும் வித்யாசாகரும் ஹாலில் நின்று ஜானகியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். விழி மூடி வாசித்துக் கொண்டவரின் இமையோர ஈரம் ஒன்றே அவர் இசை மீது எவ்வளவு காதல் வைத்துள்ளார் என்பதைச் சொல்லாமல் சொன்னது.

இவ்வளவு இசையார்வத்தையும் மனதுக்குள் புதைத்துவிட்டு வைராக்கியத்தால் அதற்கு பூட்டு போட்டுக்கொண்ட அன்னையை அமிர்தாவின் சமீபத்திய நடவடிக்கைகள் தான் மாற்றியிருக்க வேண்டுமென எண்ணிக்கொண்ட வித்யாசாகர் எதேச்சையாக வாயில் புறம் திரும்ப அங்கே சிலையாய் நின்று ஜானகியைக் கண்கள் கலங்க பார்த்துக்கொண்டிருந்தார் விஜயலெட்சுமி.

அவரும் உன்னிகிருஷ்ணனும் அன்றைய தினம் மாலையில் கொல்லத்தில் உன்னிகிருஷ்ணனின் உறவினர் வீட்டு விசேசம் ஒன்றுக்குச் செல்லவிருப்பதால் மகள் தேர்வுக்காக தங்கை வீட்டுக்குச் செல்லும் முன்னர் அவளைப் பார்த்து நன்றாகத் தேர்வை எழுதும்படி சொல்லிவிட்டுச் செல்ல வந்தார்.

லெட்சுமி பவனத்தில் அன்னையுடன் பேசியவாறு கோமதிக்கும் வேதவதிக்கும் சமையலில் உதவிக்கொண்டிருந்தவரின் செவியில் மதுரகானமாய் வீணையின் நாதம் ஒலிக்கவும் மனம் நெகிழ்ந்தார்.

“ஜானு அக்கா வீணை வாசிப்பாங்கனு தெரியும்… ஆனா இது வரைக்கும் கேட்டதே இல்ல மதினி… இந்த சரஸ்வதி பூஜைக்கு அவங்கள வாசிக்க வச்சிட வேண்டியது தான்” என்ற கோமதியிடம்

“ஜானு ரொம்ப நல்லா வீணை வாசிப்பா… கல்யாணத்துக்கு முன்னாடி தினமும் சாதகம் பண்ணுனவ தான்… அப்புறம் என்னென்னவோ நடந்து போச்சே” என்று சோகம் ததும்பும் குரலில் சொன்ன விஜயலெட்சுமியின் கரத்தை ஆறுதலாய் அழுத்தினார் வேதவதி.

“எல்லாம் பழைய கதை மதினி… அத மறந்துடுங்க… உங்களுக்கும் நல்லா சாரீரம்னு மாமா அடிக்கடி சொல்லுவாங்க… அப்பிடி பாத்தா நீங்களும் பாடி நாங்க கேட்டது இல்லயே… எல்லாத்தையும் மறந்துட்டு நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் பேசிக்க கூடாதா?”

வேதவதியின் கேள்வியில் தொனித்த ஏக்கம் விஜயலெட்சுமியின் மனதில் நீண்டநாட்களாக எழுந்து கொண்டிருக்கிறது தான். தனது சுயநலத்தால் நேர்ந்த அவமானங்களைத் தாண்டி ஜானகி தன்னை மன்னிப்பாரென்ற நம்பிக்கை விஜயலெட்சுமிக்கு வர மறுத்தது.

அந்தத் தயக்கத்தை இப்போது செவியைத் தீண்டிய வீணையின் நாதம் துடைத்தெறிந்தது. அன்னையிடம் சொல்லிக்கொண்டு எழுந்தவர் பார்வதி பவனத்துக்கு வந்துவிட்டார்.

ஜானகி வீணை வாசிப்பதைக் கண்டு வாயிலிலேயே சிலையானவரை அவரது மருமகன் கண்டுகொண்டான்.

சமுத்ராவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டவன் இரு தாத்தாக்களிடம் கண்களால் வாயிலில் நின்ற விஜயலெட்சுமியைச் சுட்டிக்காட்டினான்.

“ரெண்டு பேரும் கொஞ்சம் தோட்டத்துக்கு வர்றிங்களா? அம்மு நீயும் வா… அப்பா நம்ம எல்லார் கிட்டவும் என்னவோ பேசணுமாம்” என்று சொல்லி அனைவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.

அதே நேரம் இதைக் கவனியாது வீணை வாசித்துக் கொண்டிருந்த ஜானகி மெதுவாய் வாசிப்பை முடித்தவர் வீணையை மடியிலிருந்து இறக்கிவிட்டு தனது இரு கைகளாலும் அதைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

அவரைப் பொறுத்தவரை இவ்வீணை சரஸ்வதியின் அம்சம். அதை இத்தனை ஆண்டுகள் கண்டுகொள்ளாது விட்டது எப்பேர்ப்பட்ட தவறு என அப்போது தான் புரிந்து கொண்டார்.

இனி தவறாமல் தினமும் சாதகம் செய்ய வேண்டுமென எண்ணியவராய் இதழில் குறுநகை மின்ன நிமிர்ந்தவர் வாயிலில் கண்கள் பனிக்க நின்ற விஜயலெட்சுமியைக் கண்டதும் திகைத்தார்.

இவள் எப்போது வந்திருப்பாள் என கேள்வியாய் புருவம் சுழித்தபடி எழுந்தவர் இன்னும் விஜயலெட்சுமி வாயிலிலேயே நிற்பதைக் கண்டு மெதுவாய் யாரேனும் ஹாலில் உள்ளனரா என கண்களால் துளாவினார். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் எப்போதோ மாயமாகி விட்டனரே!

தயக்கத்துடன் வேறு வழியின்றி “உள்ள வா விஜி” என்று மெதுவாக அவர் உரைத்தது தான் தாமதம்! விஜயலெட்சுமி வேகமாக வீட்டுக்குள் வந்தவர் தோழியைக் கண்ணீர் மல்க அணைத்துக் கொண்டார்.

இதை எதிர்பாராத ஜானகி முதலில் உணர்வற்று நின்றவர் பின்னர் இதே விஜயலெட்சுமி கடந்த காலத்தில் தனக்காகச் செய்த ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்துவிட்டுத் தானும் கண் கலங்க ஆரம்பித்தார்.

நேரில் கண்டாலும் காணாதது போல சென்றுவிடவேண்டும் என்ற தீர்மானத்தின்படி இத்தனை வருடங்களைக் கடத்திய இருவருக்கும் இன்றைய தினத்தில் மனதில் உள்ள தடைகள் அனைத்தும் அகல பழைய நட்பின் நினைவு மட்டும் நெஞ்சில் எஞ்சியிருக்க கண்ணீருடன் நின்றனர் இரு தோழியரும்.