சாகரம் 14

“இன்னைக்கு டெக்ஸ்டைலோட அக்கவுண்ட்சை ஃபுல்லா செக் பண்ணுனது இருந்து நான் அப்சர்வ் பண்ணுனது ஒன்னே ஒன்னு தான்… பெருசா லாபம் எதுவும் இல்ல… கையைக் கடிக்குற அளவுக்கு நஷ்டமும் இல்ல… ஆனா இந்த நிலமைய மாத்தணும்னா நிறைய சேஞ்சஸ் பண்ண வேண்டியிருக்கும்… அருண் தாத்தா கிட்ட இதைப் பத்தி பேசுறதுக்காகப் போனப்ப தான் அம்மு திருநெல்வேலில இருந்து வந்திருந்தது எனக்குத் தெரிஞ்சுது… அவளுக்குப் பூஜா ஹாலிடேஸாம்… அப்போ நவராத்திரிக்கு மேடம் இங்க தான் இருப்பானு நினைக்கேன்… ஏன்னு தெரியல, அவளைப் பாத்தாலே என்னோட பிரெயின் சடன் பிரேக் போட்ட மாதிரி ஸ்தம்பிச்சு நிக்குது, ஹார்ட் வைப்ரேசன் மோடுக்குப் போகுது”

                                                    –அமிர்தாவின் சாகரன்

வித்யாசாகரின் மேற்பார்வையில் சதா டெக்ஸ்டைல்சின் விரிவாக்கப்பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கட்டிடத்தின் உள்கட்டமைப்பு வேலைகளும் மின் இணைப்பு கொடுக்கும் வேலைகளும் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலை தான்.

எல்லாம் முடித்து வண்ணப்பூச்சும் முடிந்து விட்டால் ஒரு நல்ல நாளில் சதா டெக்ஸ்டைல்சின் புதிய பகுதிகளின் திறப்புவிழாவை வைத்துக்கொள்ளலாம் என பெரியவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்திருந்தனர்.

அத்தோடு கடையின் முழு மேலாண்மையையும் வித்யாசாகரிடமும், கணக்குவழக்குகள் தணிக்கை மேற்பார்வையை ரகுநாதனிடமும் ஒப்படைத்துவிட்டு இனி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்ற முடிவுக்கு அருணாசலமும் சதாசிவமும் வந்துவிட்டனர்.

கடையின் விற்பனையிலும் வாடிக்கையாளர்களைக் கவர்வதிலும் நிறைய புதிய வழிமுறைகளை வித்யாசாகர் யோசித்துச் செயல்படுத்தியதால் விற்பனை போன காலாண்டை விட இந்தக் காலாண்டில் கணிசமாக உயர வரிவிதிப்பு போக சதா டெக்ஸ்டைல்சின் அந்தக் காலாண்டுக்கான நிகர இலாபம் அதிகரித்திருந்தது.

எனவே புதிய கட்டிடம் திறப்புவிழாவின் போது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது பற்றி தனது தாத்தாக்களிடம் ஆலோசித்த வித்யாசாகர் இதனால் பெரியளவில் செலவு வருமா வராதா என்பது குறித்து மனைவியிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டான்.

“நம்ம சம்சாரம் படிச்சப் பொண்ணா இருக்குறது கூட ஒரு வகைக்கு நல்லது தான் போல” என்று கேலி போல சொன்னாலும் மனைவியின் படிப்புக்கு இடையூறு வராத வண்ணம் பார்த்துக் கொள்வதில் அவன் இது வரை தவறியதில்லை.

அதிலும் அமிர்தா இரண்டு குரூப்களையும் ஒரே நேரத்தில் எழுதப் போகிறேன் என சொன்னதும் ரகுநாதன் அவளை அலுவலகம் வராமல் வீட்டிலேயே இருந்து முழுநேரமும் தேர்வுக்காகத் தயாராகச் சொல்லிவிட்டார். அமிர்வர்ஷினி அதை மறுத்தாள்.

“இன்னும் உன் கையில மூனு மாசம் தான் இருக்கு… இப்பவே நிறைய கொஸ்டீன் பேப்பர்சை நீ ஒர்க் அவுட் பண்ணி பாக்கணும் அம்மு… நம்ம ஆபிஸ்ல ஆடிட்டர் அமிர்தவர்ஷினிக்காக ஒரு நாற்காலி எப்போவும் காத்திட்டிருக்கும்… அதனால இப்போ நீ படிச்சா மட்டும் போதும்டா”

பிடிவாதமாக ரகுநாதன் கூறிவிட அதன் பின்னர் அமிர்தாவும் முழுநேரமும் படிப்பில் மூழ்கிப் போனாள்.

அவளுக்கு இருக்கவே இருக்கிறது தோட்டம். அங்கே சென்று மேஜையைப் போட்டு உட்கார்ந்துவிட்டால் மதியவுணவுக்கும் மாலையில் முகம் கழுவி விளக்கேற்றுவதற்கும் தான் அவள் வீட்டுக்குள் வருவாள்.

இப்படி படிப்பிலேயே அவள் மூழ்கிவிட்டது கூட ஜானகிக்கு ஒரு வகையில் நன்மையாகத் தான் முடிந்தது. அவளை அடிக்கடி வீட்டில் காணும் போது தேவையற்று வார்த்தைகளைக் கொட்டித் தானும் காயப்பட்டு மகனது மனைவியையும் காயப்படுத்துகிறோம், எனவே அவள் அவளது வேலையைத் தனது கண்ணுக்கு மறைவாய் அமர்ந்து செய்தால் இருவரும் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது அல்லவா!

ஏற்கெனவே உடல் நலமில்லாது போன நேரம் உண்டான மனக்கசப்புக்குப் பின்னர் அமிர்தா மாமியாரிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அதற்குக் காரணம் தான் திட்டியது அவளது மனதை வருத்தி விட்டது போல என ஜானகி எண்ணிக்கொண்டார்.

ஆனால் உண்மைக்காரணமோ கடந்த காலத்தில் தன் தாய் செய்த தவறால் தேவையின்றி அனைவரிடமும் பேச்சு வாங்கிய ஜானகியின் முகத்தில் விழிக்க அமிர்தாவுக்குச் சங்கடமாக இருந்தது என்பதே!

முடிந்தளவுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தனர்.

நாட்கள் நகர கடை விரிவாக்கப்பணிகள் முடிவடைந்து திறப்புவிழாவுக்கான நாளும் வந்தது.

அன்றைய தினம் இரு குடும்ப உறுப்பினர்களும் அசத்தலாகத் தயராகி டெக்ஸ்டைலுக்குச் செல்லக் கிளம்பிய போது ஆனந்த அதிர்ச்சியாக ஜெயலெட்சுமியுடன் வந்து நின்றான் ஹரிஹரன்.

வந்த உடனே வித்யாசாகரைக் கட்டிக் கொண்டவன் “என் ஃப்ரெண்ட் அவன் லைஃப்ல முக்கியமான ஒரு விசயத்தைச் செஞ்சு முடிச்சிருக்கான்… அதுக்கு நானே வரலனா நல்லா இருக்குமா?” என்றவன் தனது வங்கிப்பணியில் செங்கோட்டை கிளைக்கு மாறுதல் கிடைத்துவிட்டது என்ற செய்தியையும் வெளியிட வித்யாசாகருக்கு மிகவும் சந்தோசம்.

அமிர்தாவுக்கும் தான். அவளது ஹரி அண்ணாவுடன் அரட்டை அடிக்க இனி வித்யாசாகர் வீடியோ கால் பேசும் நேரத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இனி தான், சமுத்ரா, வித்யாசாகர் என அனைவரும் நினைத்த நேரத்தில் ஹரிஹரனுடன் ஒன்று கூடி முன்பு போல பேசிக்கொள்ளலாம் என எண்ணிக் குதூகலித்தாள்.

தன்னருகில் நின்றிருந்த சமுத்ராவின் வதனம் ஹரிஹரனைக் கண்டதும் மகிழ்ச்சியும் நாணமும் கலந்து விகசித்ததைக் கண்டு யோசனையுடன் அவளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

காரில் வித்யாசாகர் அருகில் அமர்ந்திருந்த ஹரிஹரனை அவள் வைத்தக் கண் வாங்காது பார்ப்பது, அவன் திரும்பி அமிர்தாவிடம் உரையாடும் போது வெளியே வேடிக்கை பார்ப்பது என சமுத்ரா ஆடிய கண்ணாமூச்சியை ஹரிஹரன் கவனித்தானோ இல்லையோ அமிர்தா கவனித்துவிட்டாள்.

அவளது முகத்தில் அண்ணனைக் காணும் போது உண்டாகும் உணர்வும் இதழ்களில் மின்னும் சிரிப்பும் அமிர்தாவுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற ரீதியில் விசயத்தைப் புரியவைத்துவிட்டது.

இரு குடும்பத்தினரும் டெக்ஸ்டைல் கட்டிடத்தின் முன்னே வந்து இறங்க ஹரிஹரனும் வித்யாசாகரும் காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வரவும் உன்னிகிருஷ்ணனும் விஜயலெட்சுமியும் அவர்களின் காரில் வந்து இறங்கினர்.

மாமியார் ஏதெனும் முணுமுணுக்கிறாரோ என அமிர்தாவின் விழிகள் ஜானகியின் முகத்தை ஆராய அதில் எந்த உணர்ச்சியும் இல்லை. உன்னிகிருஷ்ணனிடம் மட்டும் பெயருக்கு நலம் விசாரித்த ஜானகியின் பார்வை கூட விஜயலெட்சுமியின் புறம் திரும்பவில்லை.

அதைக் கண்டு அமிர்தாவின் முகம் வாடவும் அருணாசலமும் திரிபுரசுந்தரியும் பேத்தியின் கரத்தைப் பற்றி தட்டிக் கொடுத்தனர்.

“எல்லா காயத்தையும் காலம் தான் குணமாக்கும் அம்மு”

புன்முறுவல் பூத்தவள் மனதுக்குள்ளே எல்லாம் சீக்கிரமாய் சரியாகிவிடும் என தனக்குத் தானே நம்பிக்கை கொடுத்துக் கொண்டாள்.

அதன் பின்னர் சதாசிவமும் அருணாசலமும் நல்ல நேரத்தில் ரிப்பன் வெட்டி புதியத்தளத்தைத் திறந்து வைத்தனர். அனைவருக்கும் இனிப்பு வினியோகிக்கப்பட அன்று வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் இனிப்பு பெட்டி அவர்கள் வாங்கும் ஆடைகளுடன் பரிசாக அளிக்கப்பட்டது.

வித்யாசாகர் முன்பே யோசித்தபடி ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வை அறிவித்தான். சுற்றி நின்ற ஊழியர்களின் விழிகளில் சந்தோசம் மின்னியது.

இவ்வாறான இனிய சூழல் நிலவும் போது தான் அந்தச் சம்பவமும் நடந்தது.

அங்கே வந்திருந்த வாடிக்கையாளர்களில் ஒரு குடும்பத்தினருடன் வந்திருந்த முதியப்பெண்மணி ஒருவர் ஜானகியைக் கண்டதும் வேகமாக அவர் அருகில் வந்து “நீ ஞானதேசிகன் மகள் ஜானகி தானே?” என்று தனது பார்வையைக் கூர்தீட்டிக் கொண்டு கேட்க ஜானகி சிரித்தமுகத்துடன் ஆமென்று தலையாட்டினார்.

உடனே பழைய சம்பவங்களைப் பேச ஆரம்பித்தவர், தான் இப்போது மகன் குடும்பத்துடன் வல்லத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதாக சொல்லிவிட்டு அங்கே உன்னிகிருஷ்ணனுடன் நின்றிருந்த விஜயலெட்சுமியைப் பார்த்து விடவும் “அது நம்ம விஜியா?” என்று கேட்டவர் மீண்டும் பழைய விசயங்களைப் பேசி வம்பளக்க ஆரம்பித்தார்.

“விஜிய எப்போ அருணாசலம் அண்ணன் குடும்பத்தோட சேர்த்துக்கிட்டார்? இதுக்கு நீ எப்படி சம்மதிச்ச ஜானகி? அப்போ எல்லாரும் சொன்ன மாதிரி அவ காதலுக்கு நீ தான் உதவியா இருந்தியா?”

ஜானகிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

கூடவே இன்று வரை விஜயலெட்சுமி செய்த காரியத்தால் தான் தலை குனிந்து நிற்கவேண்டியதாக உள்ளதே என்று குமுறியவருக்கு உதவியாக வந்து நின்றாள் அமிர்தவர்ஷினி. இதை அவரே எதிர்பார்க்கவில்லை.

“பாட்டிம்மா நீங்க சொல்லுற அதே விஜியோட பொண்ணு தான் நான்… எது சொல்லுறதா இருந்தாலும் அதோ நிக்கிறாங்களே அவங்களையே கேளுங்க… ஏன்னா தப்பு பண்ணுனவங்க அவங்க தான்… அதை விட்டுட்டுச் சம்பந்தமே இல்லாம ஏன் ஜானு ஆன்ட்டிய கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுறிங்க?”  

சற்று சத்தமாகவே சொல்லவும் சங்கடத்துடன் அந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினர் வெளியேறிவிட அங்கே நிசப்தம் நிலவியது.

விஜயலெட்சுமி மகளின் பேச்சில் அதிர்ந்து முகம் கறுத்து நின்றார். தான் செய்த தவறுக்கு அவர் இன்று வரை வருந்தாத நாளில்லை. ஆனால் சொந்தமகளே அவரைக் கை காட்டி குற்றவாளியாக்கியது தான் விஜயலெட்சுமியை வதைத்து விட்டது. அவர் நிற்க முடியாது தடுமாற உன்னிகிருஷ்ணன் மனைவியை ஆறுதலாய் தாங்கிக்கொண்டார்.

ஆனால் அதற்கு மாறாக ஜானகி தனது மருமகள் செய்த உதவியை நம்ப இயலாதவராக அதிர்ந்து போய் விழித்தார். தான் யாரை வெறுத்தோமோ, யாருடைய கையால் உணவுண்பதை அருவருப்பென மொழிந்தோமோ அவள் தான் தனக்கு இன்று நேரவிருந்த பெரிய அவமானத்தைத் தடுத்தது என்ற ஒரு விசயம் மட்டும் போதுமே! அவர் தலை குனிவதற்கு.

வித்யாசாகர் ஒரே நேரத்தில் அன்னைக்கும் மாமியாருக்கும் நடந்த அதிர்ச்சியைக் கவனித்தவன் ஊழியர்கள் வசம் டெக்ஸ்டைல்சின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி இரு குடும்பத்தினரையும் காரில் அமருமாறு கூறினான். ஹரிஹரனிடமும் மாமனாரிடமும் குடும்பத்தினரை அழைத்துச் செல்லும்படி சொன்னவன் தானும் தனது காரைத் தரிப்பிடத்திலிருந்து எடுத்தான்.

அமிர்தாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டவன் அவள் காரில் அமரவும் காரைக் கிளப்பினான். அந்தச் சிறிய நகரின் வீதியில் கார் மிதமான வேகத்தில் பயணிக்க மனைவியை ஓரக்கண்ணால் அளவிட்டுக் கொண்டு காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் இன்னொரு கண்ணைப் பதித்தபடியே காரைச் செலுத்தினான்.

“எதுக்கு அந்த ஓல்ட் லேடி கிட்ட அத்தைய காட்டி இவ்ளோ ரூடா பேசுன? அவங்க தப்பு பண்ணுனாங்கனு உன்னால எப்பிடி பிளேம் பண்ண முடிஞ்சுது? ஷீ இஸ் யுவர் மாம் அம்மு”

அவனது கடைசி வார்த்தையைக் கவனித்தவள் “யா! ஷீ இஸ் மை மாம்… சோ வாட்? என்னோட அம்மாங்கிறதுக்காக அவங்க பண்ணுன தப்பை என்னால சரினு சொல்ல முடியாது சாகர்… அவங்களோட லவ்வுக்காக எல்லாரையும் உதறித் தள்ளிட்டுப் போனப்பவே முழு சுயநலவாதி ஆயிட்டாங்க… அவங்களால என்னோட தாத்தா எவ்ளோ அசிங்கப்பட்டிருப்பாருனு யோசிங்க… இப்போவே அந்த ஓல்ட் லேடி இவ்ளோ ஞாபகம் வச்சு கேக்குறாங்களே! அப்போ பிரச்சனை நடந்த சமயத்துல எல்லாருமா சேர்ந்து ஜானு ஆன்ட்டிய எவ்ளோ அசிங்கப்படுத்திருப்பாங்க? என் தாத்தா ஊர் முகத்துல முழிக்க முடியாம எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்னு யோசிங்க” என்று அவளும் சத்தத்தை உயர்த்தினாள்.

“அத்தை பண்ணுனது எல்லாமே மாமா மேல உள்ள லவ்வுக்காகத் தான்… ஒய் டோண்ட் யூ டிரை டு அண்டர்ஸ்டாண்ட்?”

“சும்மா காதல் காதல்னு சொல்லாதிங்க சாகர்… பெத்தவங்க வேண்டாம், கூடப்பிறந்தவங்க வேண்டாம், குளோஸ் ஃப்ரெண்ட் கூட வேண்டாம்னு சொல்லிட்டுப் போற அளவுக்கு அப்பிடி எந்த விதத்துல அந்தக் காதல் உசத்தியா போயிடுச்சு? அதை விடுங்க… பெத்தவங்கள வயிறெரிய வச்சிட்டு இவங்க மட்டும் எப்பிடி சந்தோசமா இருக்க முடியும்? இதுக்குப் பேர் காதல் இல்ல… கடைஞ்செடுத்த சுயநலம்”

முடிவாக உரைத்தவள் அதற்கு மேல் பேச விருப்பமின்றி முகத்தைத் திருப்பி கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

வித்யாசாகர் கிட்டத்தட்ட ஊருக்கு வெளியே வந்துவிட்டவன் புல்வெளியும் மரம் செடி கொடியுமாக இருந்த இடத்தின் ஓரமாக காரை நிறுத்தினான்.

“இறங்கு” என்று கட்டளையிட்டவன் அவள் கீழே இறங்கியதும் கார் கதவைச் சாத்திவிட்டு அதன் மீது சாய்ந்து கொண்டான்.

அமிர்தாவும் அவனருகே சாய்ந்து நின்றவள் “எதுக்கு இப்போ என்னை இங்க கூட்டிட்டு வந்திங்க?” என்று எந்திரம் போல கேட்கவும் அவளைத் தன்னை நோக்கித் திரும்பினான்.

“இந்த உலகத்துல யார் வேணும்னாலும் உன் பேரண்ட்சை தப்பா பேசலாம்… ஆனா நீ பேசக் கூடாது அம்மு… அவங்கள பத்தி யோசிச்சு பாரு… அவங்களுக்குனு இருக்குற ஒரே ஒரு வாரிசுனா நீ மட்டும் தான்… உனக்கு அவங்க மேல உள்ள வருத்தம் நியாயமானது தான்… ஆனா நீயே சொல்லு… மனுசங்க எப்போவும் ஒரே மாதிரி இருப்பாங்களா? வயசு ஏற ஏற மனுசங்களோட குணாதிசயம் மாறும் அம்மு… பத்து வருசத்துக்கு முன்னாடி நல்லதா தெரிஞ்ச ஒரு விசயம் இப்போ தப்பா தெரியலாம்… அதே நேரம் இப்போ சரியா தெரியுற விசயம் இன்னும் பத்து வருசம் கழிச்சு தப்பா தோணலாம்…

இங்க அந்த விசயம் என்னவோ மாறாம அப்பிடியே தான் இருக்கும்… ஆனா அதை நம்ம பாக்குற கோணம் தான் சரினும் தப்புனும் காலத்துக்கேத்த மாதிரி மாறும்… சோ அப்போ காதல் பெருசா தெரிஞ்சதால குடும்பமும், ஃப்ரெண்ட்ஷிப்பும் அவ்ளோ முக்கியமில்லனு அத்தையும் மாமாவும் நினைச்சிருக்கலாம்… ஆனா தாத்தாவோட பாசத்துக்கு அவங்க ஏங்குனதே அவங்க மனசால மாறிட்டாங்கங்கிறதுக்கு சாட்சி அம்மு… பழைய விசயத்தைச் சொல்லி அந்தப் பாட்டி என் அம்மாவோட மனசை நோகடிச்சது எவ்ளோ பெரிய தப்போ அதே மாதிரி நீ உன் அம்மாவை கை நீட்டி தப்பு பண்ணுனவங்கனு சொன்னதும் பெரிய மிஸ்டேக் தான்… அவங்க பாவம் அம்மு… இனிமே இப்பிடி பண்ணாத”

பெரிய சொற்பொழிவை ஆற்றி முடித்தவன் மனைவியிடம் வேண்டுகோள் வைக்க, அவளும் தான் கை காட்டிய தருணத்தில் தாயின் கண்ணில் மின்னிய கண்ணீரை எண்ணி அச்சமயம் மனம் வருந்தினாள்.

வித்யாசாகரின் அறிவுரையை முழுவதும் ஏற்கமுடியவில்லை என்றாலும் தான் கோபத்தில் அவ்வாறு பேசியது தவறு என்று மட்டும் அவளுக்குப் புரிந்தது. அத்தோடு ஒவ்வொரு முறையும் தன்னைக் காணும் போதெல்லாம் வெறுப்பாய் நோக்கும் ஜானகியை நினைத்து இன்னும் வருந்தினாள் அவள்.

மனக்கலக்கம் தீர அவன் தோளில் சாய்வதே தீர்வு என்று தோன்றவும் அவனை அணைத்துக் கொண்டாள் அமிர்தா.

“யார் சரி, யார் தப்புனு இனிமே நான் யோசிக்கப் போறது இல்ல சாகர்… ஆனா ஒவ்வொரு தடவையும் ஜானு ஆன்ட்டி என் பேரண்ட்சையும் என்னையும் பாக்குற பார்வைல விரக்தியும் விலகலும் தான் இருக்கு… அது என்னைக்குமே மாறாது போல”

சொல்லும் போதே அவளது குரல் கம்மிப்போனது.

வித்யாசாகர் அவளது சிகையில் தாடையைப் பதித்தபடியே “நான் முன்னாடியே சொன்ன மாதிரி மனுசங்க மனசு மாறிட்டே இருக்கும்… அம்மாவோட மனசும் ஒரு நாள் மாறும்… அப்போ அவங்க உன்னைப் பாக்குற பார்வைல அன்பு மட்டும் தான் இருக்கும் அம்மு… அந்த நாள் சீக்கிரமே வரப் போகுதுனு என் உள்மனசு சொல்லுது… சோ நீ வேற எதைப் பத்தியும் யோசிக்காம எக்சாம்கு ரெடியாகு” என்று மென்மையான குரலில் ஆறுதலாய் உரைக்க அமிர்தா உம் கொட்டினாள்.

மனித மனங்களில் உண்டாகும் காயங்கள் கொடுக்கும் வலியானது அவ்வளவு எளிதில் ஆறுவதில்லை. இந்த மனக்காயங்களுக்குக் கடவுள் உருவாகிய மருந்து தான் காலம். அது மட்டுமே மனதின் காயங்களைப் படிப்படியாக குணமாக்கவல்லது. ஜானகி மற்றும் விஜயலெட்சுமி இருவருக்கும் காலம் என்ற மருந்து காயத்தை எந்தளவுக்கு ஆற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.