சாகரம் 13

“நாங்க எல்லாருமா சேர்ந்து கண்ணுப்புளி மெட்டுக்கு டூர் போனோம்… சாப்பாடு எல்லாமே வீட்டுல இருந்தே எடுத்துட்டுப் போயிட்டோம்… நான் சுண்டல் வச்சிருக்குற பாத்திரத்தை எடுத்துட்டுப் போனேன்… இந்த முட்டைக்கண்ணி ஓடி வந்து என் மேல மோதி சுண்டலைக் கொட்டிட்டா… அவ பாவம் போல முழிச்சதும் நான் யார் கிட்டவும் சொல்லல… ஆனா எல்லாரும் என்னை தான் திட்டுனாங்க”

                                                   -அமிர்தாவின் சாகரன்

அமிர்தவர்ஷினி உணவுமேஜையில் அமர்ந்திருந்த வித்யாசாகரை பார்த்துக் கொண்டிருக்க அவனோ “அம்மு!” என்று அழைத்தான். அவள் அவனருகே வந்து நிற்கவும் உணவு பரிமாறும்படி சொன்னவனின் பேச்சில் ஜானகி அதிர்ந்து விழித்தார்.

“உன்னைப் பரிமாறச் சொன்னேன் அம்மு” என்றவனின் அதட்டலில் உணர்வு பெற்றவள் வேகமாய் இட்லியை வைத்துச் சாம்பாரைத் தாராளமாக விட்டாள்.

பின்னர் கடமை முடிந்ததென திரும்பி செல்ல முயன்றவளின் கரத்தைப் பற்றி நிறுத்திய வித்யாசாகர் “அப்பிடியே போனா என்ன அர்த்தம்?” என்று கேள்வியாகப் புருவம் உயர்த்த

“அப்போ சாருக்கு ஊட்டி விடணுமாக்கும்?” என்றாள் கேலியும் குத்தலும் கலந்த குரலில். ஜானகியின் பேச்சு உண்டாக்கிய எரிச்சல் இன்னும் தீரவில்லை அவளுக்கு.

“ஆமா…. ஏன் ஊட்டிவிட்டா குறைஞ்சு போயிடுவியா? படிப்புக்கும் வேலைக்கும் நடுவுல புகுந்தவீட்டு ஜனங்களுக்குச் சமைக்கிறது கஷ்டமா இல்ல… ஆனா புருசனுக்கு ஊட்டிவிட கஷ்டமா இருக்குதோ?”

அவன் கேலி போல கேட்டாலும் அதிலிருந்த அழுத்தம் அவளைத் துணுக்குற வைத்தது.

“இது என்ன இவ்ளோ ட்ராமடிக்கா பிஹேவ் பண்ணுறார் இந்த மனுசன்? இவர் இப்பிடி நடந்துகிட்டதே இல்லயே… எது எப்பிடியோ இதுல சங்கடப்பட்டு நிக்குறது நான் தான்” என மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தாள்.

வழக்கம் போல கண்ணை உருட்டித் தங்களைச் சுற்றி இருக்கும் குடும்பத்தினரைக் காட்ட அவனோ “கண்ணை உருட்டுனது போதும்… வந்து ஊட்டிவிடு” என்று அசராமல் பதிலளிக்கவும் அமிர்தா சங்கடத்துடன் தனது புகுந்த வீட்டாரைப் பார்த்தாள்.

அவர்களுக்கு ஜானகியின் பேச்சு கொடுத்த அதிர்ச்சியே அதிகம். அத்தோடு வித்யாசாகரின் வினோதச் செய்கையையும் கண்டு திகைத்துப் போயினர்.

வித்யாசாகரின் பார்வை கூர்மையாகவும் அமிர்தா வேறு வழியின்றி இட்லியை ஊட்டிவிட அவனும் சாப்பிட்டு முடித்தான். அவனது செயல்பாடுகளைக் கண்ணுற்று திகைத்த ஜானகி அவரது அறையை நோக்கி விறுவிறுவென சென்றுவிட்டார்.

அமிர்தாவும் கையலம்பிவிட்டு மீனாட்சியிடம் “ஆச்சி நான் மதியத்துக்குச் சமைக்கவா?” என்று தயக்கமாக வினவ அவர் அவளது கையைத் தட்டிக் கொடுத்தார்.

“தாராளமா செய்டிம்மா தங்கம்… உன் மாமியார் அளவுக்கு நான் கண்டிப்பான மனுசி இல்ல… பிரமாதமா சமைக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்லடிம்மா… வெறும் மோரும் சாதமும் கூட எனக்குப் போதும்… நீ பெரிய பரிட்சைக்குப் படிக்கணும்ல”

அவரது பேச்சைக் கேட்டு முறுவலித்துவிட்டு “அதுக்குத் தான் ஆல்ரெடி நான் படிச்சிட்டிருக்கேனே… ஆனா இப்பிடி சமைக்கிற சான்ஸ் மறுபடியும் எப்போ கிடைக்குமோ? நானே இன்னைக்குச் சமைக்கிறேன் பாட்டி” என்றவள் மதியத்துக்குச் சமைக்க முனைந்தாள்.

அவளுக்கு உதவியாக சமுத்ராவும் சேர்ந்து கொள்ள இருவருமாய் சேர்ந்து சமையலைச் செய்து முடித்தனர். அமிர்தா சமுத்ராவிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜானகிக்குச் சமுத்ராவே தயிர்சாதத்தைச் செய்து அவரது அறைக்கு எடுத்துச் சென்று கொடுத்தாள்.

மகள் கொடுத்த உணவை மறுப்பின்றி சாப்பிட்ட ஜானகி அவளிடம் “மதியத்துக்கும் அந்த மகாராணி சமையல் தானா?” என்று கேட்கவும் சமுத்ரா அன்னையை விசித்திரமாய் நோக்கினாள்.

“நீ எப்ப இருந்து இப்பிடி மாறுனம்மா? உன்னால யாரோட மனசும் புண்படுற மாதிரி நடந்துக்க முடியாது… கீரை கொண்டு வர்ற காய்கறிக்கார லேடி கிட்ட கூட கருணையோட நடந்துப்பியே… நான் ஏன்னு கேட்டா நீ ஒரு காரணம் கூட சொல்லுவ… கஷ்டப்பட்டு உழைக்கிற ஒரு பொண்ணை இன்னொரு பொண்ணா நான் மதிக்கிறேன்னு சொல்லுவ.. அதோட இன்னொரு பொண்ணோட மனசு உன்னால கஷ்டப்பட்டா நீ பெத்தப் பொண்ணோட வாழ்க்கைய தான் அந்தப் பாவம் பாதிக்கும்னு கூட சொல்லுவ… அதுல்லாம் இப்போ உனக்கு மறந்து போச்சோ? நீ அம்முவ இப்போ நடத்துற மாதிரி நாளைக்கு என்னோட வருங்கால மாமியார் என்னை நடத்துனா உனக்கு மனசு வலிக்காதா?”

மகளின் கேள்விக்குப் பதிலளிக்காது வெறித்த ஜானகி மௌனமாய் தயிர்சாதத்தை உண்டு முடித்தார். அவரிடம் பதில் வராது போகவும் சமுத்ரா சமையலறைக்கு வந்தவள் அமிர்தாவைத் தேடினாள்.

அவள் வீட்டில் இல்லாது போகவே மீனாட்சியிடம் வினவ அவரோ அவள் அருணாசலத்தைக் காணச் சென்றிருப்பதாகச் சொல்லவும் அமைதியானாள் சமுத்ரா.

அதே நேரம் அமிர்தா அருணாசலத்துடன் தோட்டத்து விருட்சங்களின் நிழலில் அமர்ந்திருந்தவள் தனது தாயாரை ஜானகி வெறுக்குமளவுக்கு என்ன நடந்தது என வினவ அருணாசலத்தால் பதிலளிக்க முடியவில்லை.

“சொல்லுங்க தாத்தா… ஜானு ஆன்ட்டிக்கும் எங்கம்மாக்கும் ஏதோ சின்ன மனக்கசப்பு இருக்கும்னு நான் நினைச்சிட்டிருந்தேன்… ஆனா அப்பிடி இல்ல போலயே! அவங்களுக்கு இடையில அப்பிடி என்ன தான் பிரச்சனை? ஏன் இப்பிடி அவங்க எதிரும் புதிருமா இருக்காங்க? நான் ஒன்னும் சின்னப்பொண்ணு இல்ல தாத்தா… எனக்கும் இப்ப கல்யாணம் ஆகிடுச்சு… நீங்க தாராளமா என் கிட்ட என்ன நடந்துச்சுனு சொல்லலாம்”

பிடிவாதமாய் கேட்ட பேத்தியின் முகத்தைப் பார்த்த போது அருணாசலத்தின் கண்கள் கலங்கியிருந்தது.

“நான் சொன்னத வச்சு நீ யாரையும் தப்பா நினைச்சுடக் கூடாதுடா அமிர்தா” என்று சொல்லிவிட்டு பேச்சை ஆரம்பித்தவர் ஜானகிக்கும் விஜயலெட்சுமிக்கும் இடையே இருந்த நட்பு, விஜயலெட்சுமி உன்னிகிருஷ்ணனின் காதல் கதை, அவர்களின் திருமணம் என அனைத்தையும் சொல்லவும் அமிர்தாவின் முகம் கவலையையும் ஆச்சரியத்தையும் பிரதிபலித்தது.

அவர் அனைத்தையும் சொல்லி முடிக்கவும் பெருமூச்சு விட்டவள் மெதுவாக “காதல் ரொம்ப சுயநலமானதுல்ல தாத்தா… பெத்தவங்க, ஃப்ரெண்ட்ஸ், கூடப்பிறந்தவங்கனு யாரோட நிலமைய பத்தியும் யோசிக்கிறதுக்கு நம்மள அனுமதிக்காத இந்தக் காதலுக்காக மனுசங்க எவ்ளோ முட்டாள்தனமா நடந்துக்கிறாங்க! என்னால அம்மா பண்ணுன தப்பை ஏத்துக்க முடியல தாத்தா… ஜானு ஆன்ட்டியோட கோவம் நியாயமானது தான்… அன்னைக்கு அவங்கள எல்லாரும் எவ்ளோ தூரம் மோசமா பேசிருப்பாங்க? யாரா இருந்தாலும் செய்யாத தப்புக்கு வாங்குன அவப்பெயரை மறக்க முடியாதுல்ல… விடுங்க தாத்தா… அவங்க போகப் போகச் சரியாயிடுவாங்க” என்றாள்.

“உங்கம்மாவ வெறுத்துடாதடா அம்மு… அவளுக்கும் உங்கப்பாவுக்கும் நீ மட்டும் தான் உலகம்” என்றவரைத் தீர்க்கமாய் பார்த்தவள்

“அப்போ உங்களுக்கும் அப்பிடி தானே இருந்திருக்கும் தாத்தா? சப்போஸ் நான் அவங்கள மாதிரி காதலிச்சு யாருக்கும் தெரியாம வீட்டை விட்டுப் போய் கல்யாணம் பண்ணிருந்தா அவங்களுக்கு உங்களோட வலி புரிஞ்சிருக்கும்… அவங்க செஞ்ச காரியத்துல வெறும் சுயநலம் மட்டும் தான் எனக்குத் தெரியுது தாத்தா… நீங்க என் மனசை மாத்த டிரை பண்ணாதிங்க” என்றாள் இறுகிப் போன குரலில்.

அவளது கருத்தை மாற்ற விரும்பாதவராய் அவர் அமைதி ஆகிவிட அமிர்தாவும் அந்த முதியவரை அதற்கு மேல் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாது அங்கிருந்து கிளம்பினாள்.

மதியவுணவின் போது அவளுக்கு இதே யோசனை தான். எனவே சதாசிவமும் சமுத்ராவும் வித்யாசாகரை “இப்போவாச்சும் நீயே சாப்பிடுவியா? இல்லனா அம்மு தான் ஊட்டி விடணுமா?” என்று கேலி செய்தது கூட அவள் காதில் விழவில்லை.

மதியவுணவுக்குப் பின்னர் பெரியவர்கள் ஓய்வெடுக்கச் செல்ல அமிர்தாவின் மனம் அமைதியின்றி தவிக்கவும் அவள் வீட்டுத்தோட்டத்தைச் சரணடைந்தாள். ஆற்றங்கரை படிக்கட்டை அடைந்து சளசளத்தோடும் நதியைப் பார்த்தபடியே அமர்ந்துவிட்டாள்.

வித்யாசாகர் மனைவியைத் தேடியவன் மாடிவராண்டாவில் இருந்து காணும் போது மனைவி நதியோரம் அமர்ந்திருப்பது அவன் கண்ணில் படவும் அவ்விடம் நோக்கி விரைந்தான்.

அமிர்தா அணிந்திருந்த லெகின்சின் கால்களை மடித்துவிட்டிருந்தவள் நதியின் நீரில் கால்களை நனைத்தபடி படிக்கட்டில் அமர்ந்திருக்க அவனும் தனது பேண்ட்டின் கால்களைச் சுருக்கிவிட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான்.

திடீரென வந்து அமர்ந்தவனை கண்டு ஒரு நொடி திடுக்கிட்டவள் பின்னர் பழையபடி யோசனையுடன் கூடிய முகபாவத்துக்கு மாற வித்யாசாகர் அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் தோளை வளைத்து அணைத்துக் கொள்ள அமிர்தவர்ஷினி அவசரமாய் அவனது கரத்தை விலக்க முயன்றாள்.

“யாரும் பாத்துட போறாங்க சாகர்… என்ன பண்ணுறிங்க நீங்க?” என்று மெதுவாய் முணுமுணுத்தவளை மையலாய் நோக்கியவன்

“ஏன் உனக்குத் தெரியலயா நான் என்ன பண்ணுறேன்னு?” என்று அவளது கண்ணோடு கண் நோக்கிக் கேட்க அமிர்தா அவனது குரலில் இருந்த காதலில் உறைந்து போனாள்.

“என் பொண்டாட்டிக்கு என்ன யோசனை? நானும் லஞ்ச் சாப்பிட்டப்போ இருந்து கவனிக்குறேன், உன் முகம் சரியில்ல… எதுவா இருந்தாலும் உன் ‘சாகர்’ கிட்ட சொல்ல மாட்டியா அம்மு?” என்று சொன்னபடி அவளது நாசியோடு நாசி உரசியபடி அவன் கேட்ட விதத்தில் அவளது உள்ளம் உருகிப் போனது.

அதுவும் சாகர் என்ற பெயரில் அவன் கொடுத்த அழுத்தம் அவர்களுக்கு இடையே இருந்த மெல்லியத்திரையை மெதுவாய் விலக்கிவிட அமிர்தா கனிந்த முகத்தில் அழகாய் அரும்பிய புன்னகையுடன் விழி மூடினாள்.

யாருமற்ற தனிமை! அவர்கள் முதன் முதலில் சந்தித்த அதே ஆற்றங்கரை படிக்கட்டு!

சில்லென்ற தண்ணீரின் குளிர்ச்சியும் மேனியைத் தீண்டிய காற்றின் இதமும் அவனருகே விழி மூடி அமர்ந்திருந்த மனையாளின் கொள்ளை அழகும் அவனது சிந்தையை ஆக்கிரமித்ததில் தான் எதற்கு வந்தோம் என்பதைக் கூட மறந்தான் அவன்.

அமிர்தாவின் செவ்விதழ்களின் நிலைத்த அவனது ரசனைப்பார்வை பின்னர் கன்னங்களுக்கு இடம்பெயர அதில் தனது முதல் முத்திரையை அழுத்தமாய் பதித்தான் வித்யாசாகர்.

அவன் இதழின் ஸ்பரிசத்தைக் கன்னத்தில் உணர்ந்த அடுத்த நொடி அவளுக்குள் உண்டான இதமான உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாதவள் புன்னகையுடன் அவன் மார்பில் கரம் வைத்துத் தள்ளினாள்.

“திடீர்னு யாரும் வந்துட்டா என்ன பண்ணுவிங்க? இடம் பொருள் ஏவலே தெரியல உங்களுக்கு” என்று சலுகையாய் குறைபட்டவளை இறுக்கமாக தோளோடு அணைத்துக் கொண்டான் வித்யாசாகர்.

“லவ் பண்ணுறதுக்கு இடம் பொருள் ஏவல்லாம் தேவை இல்லங்கிறது என்னோட ஒபீனியன்… அப்பாவோட ஆபிஸ்ல அவ்ளோ கூட்டத்துக்கு நடுவுல நீ ஃபைலோட நடந்து வர்றத பாத்தாலே எனக்குள்ள பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி ஏஞ்சல்ஸ் வந்து லாலானு பாட்டு பாட ஆரம்பிச்சிடும்… இப்போ நீ என்னோட செல்லப்பொண்டாட்டி வேற… சும்மாவா இருக்க முடியும்?”

“இசிண்ட்? அந்த ஏஞ்சல்சுக்குக் கொஞ்சநாள் லீவ் குடுத்து அனுப்புங்க… ஏன்னா எக்சாம் முடியற வரைக்கும் என்னோட கான்சென்ட்ரேசன் மிஸ் ஆகுறத நான் விரும்பல”

“அப்போ நான் கிட்ட வந்தா உன்னோட கான்சென்ட்ரேசன் மிஸ் ஆகுதுனு சொல்லுற”

புருவம் உயர்த்தி வினவியவனிடம் “இல்லனு பொய்லாம் சொல்ல மாட்டேன் சாகர்… அரேன்ஜ்ட் மேரேஜா இருந்தாலும் உங்களோட ஒவ்வொரு பார்வைலயும் மின்னுற காதல் எனக்குள்ள உண்டாக்குற மாற்றத்தை என்னால ஃபீல் பண்ண முடியும் தானே! எனக்கு உங்க மேல லவ் இருக்கானு தெரியல… ஆனா மரியாதை நிறைய இருக்கு” என்றாள் அமிர்தா உணர்ச்சிவசப்பட்டவளாய்.

“எவ்ளோ மரியாதை மேடம்?” என கிண்டலாய் அவன் வினவ

“இவ்ளோ மரியாதை” என்றாள் அவள் தனது இரு கைகளையும் அகல விரித்துக் காட்டியபடி.

வித்யாசாகர் புன்முறுவலுடன் “எனக்கும் உன் மேல இவ்ளோ லவ் இருக்கு தெரியுமா?” என்று தனது கைகளை விரித்துக் காட்டி அதற்குள் அடைக்கலமாகும்படி அவளுக்குக் கண்ஜாடை காட்டவும் அமிர்தவர்ஷினி தயங்கினாள்.

அவனே அவளை இழுத்து அணைத்துக் கொண்டபடி “ஆனா அப்போவும் சரி! இப்போவும் சரி நீ தான் என்னைக் கண்டுக்கவே மாட்ற…” என்று குறைபட்டான்.

“அதுல்லாம் கவனிப்பேனே… உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது” என்றவள் அவனது மேனரிசம் ஒவ்வொன்றையும் வரிசையாய் சொல்ல வித்யாசாகர் உள்ளுக்குள் வியந்தாலும் வெளிப்படையாய் அசட்டை போல காட்டிக் கொண்டான்.

“ஆமா! இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. எல்லாம் பண்ணிருக்க… ஆனா லவ் மட்டும் பண்ணல… ஏதோ நானே வந்து அருண் தாத்தா கிட்ட என்னோட காதலைச் சொன்னேன்… இல்லனா என்னோட லவ் அரோகரா தான்” என்றான் சலித்தக் குரலில்.

அமிர்தவர்ஷினியோ “யெஸ்… யூ ஆர் ரைட்… நான் உங்கள அப்போ காதலிக்கல… இப்போவும் காதலிக்கல” என்றாள் தெள்ளத்தெளிவாக.

வித்யாசாகர் அவளது பதிலைக் கேட்டு மறுப்பாய் தலையாட்டியவன் “காதல் இல்லாம ஆரம்பிக்கிற வாழ்க்கை அர்த்தமில்லாதது அம்மு… நான் உன் கூட அர்த்தமில்லாம வாழ விரும்பல… உன்னோட வாழப்போற ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கைல பொக்கிஷமா நியாபகம் வச்சிக்கணும்னு விரும்புறேன்… நீயும் என்னைக் காதலிக்கிற நாள் கூடிய சீக்கிரம் வரும்” என்று சொல்லவும் பதிலுக்கு அவனிடம் மறுப்பாய் தலையாட்டினாள் அமிர்தவர்ஷினி.

“இன்னைக்குத் தான் என்னைப் பெத்தவங்களோட காதல் எந்தளவுக்குத் தாத்தாவையும் ஜானு ஆன்ட்டியையும் காயப்படுத்திருக்குனு தெரிஞ்சுகிட்டேன் சாகர்… காதல்ங்கிறது ஒரு சுயநலமான உணர்வு… அதுக்கு நல்லது கெட்டது, நியாயம் அநியாயம் எதுவும் தெரியாது… காதலிக்கிறவங்கள தவிர யாருமே முக்கியம் இல்லங்கிற ஹலூசினேசனை அது உருவாக்கும்… அப்போ நம்ம வேற யாரைப் பத்தியும் யோசிக்காம முழு சுயநலவாதியா மாறிடுறோம்” என்று அவள் சொல்லவும் அவளை வினோதமாய் பார்த்து வைத்தான் வித்யாசாகர்.

“என்ன உளறுற அம்மு?” என சற்று எரிச்சலுடன் வினவியவனிடம்

“இன்னைக்கு உங்கம்மாவோட வார்த்தை என்னை ஹர்ட் பண்ணிடுச்சுனு தெரிஞ்சதும் நீங்க பதிலுக்கு என் கையால சாப்பிட்டு உங்களுக்கு என் மேல இருக்குற லவ் எவ்ளோ பெருசுனு ப்ரூவ் பண்ணிட்டிங்க… ஆனா அந்த இடத்துல உங்கம்மா மனசு கஷ்டப்பட்டிருக்கும்ல… அதை நீங்க யோசிக்கல… ஏன்னா உங்களோட காதல் உங்கள யோசிக்க விடல… இது தான் காதலோட இயல்பு சாகர்” என்றாள் அமிர்தவர்ஷினி அழுத்தமான குரலில்.

வித்யாசாகர் அவளை ஏறிட்டவன் “இசிட்? நானும் என்னோட பாயிண்ட் ஆஃப் வியூவ சொல்லவா? நம்ம மேல அன்பு காட்டுற பேரண்ட்ஸ் ஆகட்டும், கூடப்பிறந்தவங்க ஆகட்டும், எல்லாருமே நம்மளோட ரத்தச்சொந்தம்… அவங்க மேல நமக்கு அன்பு பாசம் வர்றதுக்கு ஒரு காரணம் இருக்கு… ஆனா காதல் மட்டும் தான் காரணம் இல்லாம வரும்…

அதுக்கு அழகு அவலட்சணம்னு வித்தியாசம் கிடையாது… ஊரார் கண்ணுக்கு அவ எப்பிடிப்பட்டவளா இருந்தாலும் காதலிக்கிறவன் கண்ணுக்கு அந்தப் பொண்ணு ரதியா தெரிவா… அதுக்கு ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியாது… ஏன்னா இன்னைக்கும் நிறைய பொண்ணுங்க வசதியான வாழ்க்கைய விட்டுட்டு காதலிச்சவனை மேரேஜ் பண்ணிக்கிட்டு எல்லா கஷ்ட நஷ்டத்துலயும் அவங்க ஹஸ்பெண்டுக்கு உதவியா இருக்காங்க… இப்போ சொல்லு! காதல்ங்கிறது சுயநலமான உணர்வா?” என்று கேட்டுவிட்டு நிறுத்த அமிர்தவர்ஷினி பதிலறியாது தடுமாறினாள்.

அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட வித்யாசாகர் “ஒரு காயினுக்கு ஹெட் டெயில்னு ரெண்டு பக்கம் இருக்குற மாதிரி எந்த ஒரு உணர்வுக்கும் ரெண்டு பக்கம் இருக்கும்… ஒரே கோணத்துல யோசிக்க கூடாது… சரியா முட்டக்கண்ணி முழியழகி?” என்று கேட்க அவனது இறுதி வார்த்தையில் கடுப்பானவள் அவனது தோளில் படபடவென அடித்தாள்.

“நீங்க மட்டும் அர்னால்டா? ஓடிருங்க… இனிமே அம்மு அது இதுனு வந்திங்கனா கும்மிடுவேன்” என்று பல்லைக் கடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் அமிர்தவர்ஷினி.

காதல் வாழ்வைச் சுவாரசியமாக்குபவை உடல்ரீதியான தீண்டல்கள் அல்ல; இம்மாதிரி செல்லச்சண்டைகளும் சின்னக் குறும்புகளோடு மனதை இதமாய் வருடும் உரையாடல்களும் தானே!