சாகரம் 12

“என்னோட எம்.பி.ஏ ஒருவழியா முடிஞ்சுது… ஊருக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி திருநெல்வேலி டவுன்ல போத்தீஸ் கடை பக்கம் போனேன்… அங்க பர்சேஸ் பண்ணுறவ லேடிசுக்கும் குழந்தைங்களுக்கும் மெஹந்தி ஃப்ரீயா வச்சு விடுறாங்க… கஸ்டமர்சை தக்க வச்சிக்க இதை மாதிரி எதாச்சும் புதுசா எங்க ஷாப்லயும் பண்ணணும்னு தோணுச்சு… அவங்க டெக்ஸ்டைல் ஷோரூம்லயே சூப்பர் மார்க்கெட்டும் அட்டாச் ஆகியிருந்துச்சு… அங்க ஒரு குட்டிப்பொண்ணு கண்ணை உருட்டி சுத்திமுத்தி பாத்துட்டிருந்துச்சு… அதைப் பாத்ததும் எனக்கு அம்மு நியாபகம் தான் வந்துச்சு”

    -அமிர்தாவின் சாகரன்

திருமண மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. மண்டபத்தின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திய வித்யாசாகர் அமிர்தவர்ஷினியுடன் சேர்ந்து உள்ளே நுழைந்தான். வரவேற்பாய் நின்ற இளம்பெண்கள் பன்னீர் தெளித்துவிட்டு வித்யாசாகரை கண்ணால் காட்டவும் அமிர்தவர்ஷினி கணவனது புஜத்தைத் தனது கரங்களால் வளைத்துக் கொண்டாள்.

“போவோமா சாகர்?” என்று முத்துப்பற்கள் மின்ன சிரித்தவளை ஆச்சரியமாய் பார்த்த வித்யாசாகர் சரியென தலையாட்டிவிட்டு அவளுடன் உள்ளே சென்றான்.

சதாசிவத்தின் பேரனுக்குக் கிடைத்த வரவேற்பில் குறைவொன்றும் இல்லை. இருவரையும் மணமகளின் தந்தையே அழைத்துச் சென்று முன்வரிசையில் அமரவைக்க வீடியோகிராபரின் கவனம் இப்போது இந்த இளம்ஜோடிகளின் பக்கம் திரும்பியது.

வித்யாசாகர் இன்னும் மனைவியின் கரங்கள் தன் புஜத்தைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்தவனாய்

“அந்தப் பொண்ணுங்க முன்னாடி நீ என் உரிமையா என் கையைப் பிடிச்சது ஓகே! ஆனா இப்போ இங்க யாரு இருக்காங்கனு விடாம பிடிச்சிட்டிருக்க அம்மு?” என்று கேட்க

“ஏன் யாரும் பாத்தா தான் உங்க கையை நான் பிடிக்கணுமா வித்தி? நீங்க என்னோட ஹஸ்பெண்ட்… உங்க கையை வாழ்நாள் முழுக்க விடமாட்டேனு அக்னிசாட்சியா சத்தியம் பண்ணிருக்கேன்… அதை நான் மீற மாட்டேன்பா” என்றாள் அமிர்தவர்ஷினி இலகுவான குரலில்.

வித்யாசாகரின் விழிகள் குறும்புத்தனத்தைப் பூசிக்கொண்டன. உரிமையுடன் தன் புஜத்தைச் சுற்றி வளைத்திருந்த அவளின் தளிர்க்கரங்களின் மீது பார்வையை ஓடவிட்டவனின் மனதில் இதமான உணர்வு பரவ அவளின் காதருகில் குனிந்தவன்

“நீ என்னை சாகர்னு கூப்பிட்டல்ல? அது கூட யூனிக்கா நல்லா இருக்கு… இனிமே நீ என்னை சாகர்னே கூப்பிடு அம்மு” என்று ஆழ்ந்த குரலில் உரைக்கவும் அமிர்தா திகைத்து விழித்தாள்.

“அது… அந்தப் பொண்ணுங்க… அவங்க உங்கள…” என்று தடுமாறியவளின் கரத்தைத் தட்டிக் கொடுத்தவன்

“ரிலாக்ஸ்… அவங்க என்னைச் சைட் அடிச்சது உனக்குப் பிடிக்கல… அதான் உரிமையா அவங்க முன்னாடி என்னைச் செல்லமா கூப்பிட்டு இப்பிடி என் கையை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்க… அப்பிடி தானே?” என்று வினவ ஆமென்றவள் மெதுவாய் அவன் கரத்தை விடுவிக்க முயல அவற்றை இறுக்கமாய் பற்றிக் கொண்டான் வித்யாசாகர்.

“இப்போ என் டர்ன்… நானும் அக்னிசாட்சியா கல்யாணம் பண்ணுனவன் தான்… கையை உருவிக்கலாம்னு டிரை பண்ணாதடி முட்டக்கண்ணி” என்று கொஞ்சலாய் உரைக்க அமிர்தவர்ஷினி கண்ணை உருட்டி சுற்றியுள்ளவர்களைக் காட்டினாள்.

வித்யாசாகர் யாரைப் பற்றியும் தனக்குக் கவலையில்லை என்பதைப் போல தோளைக் குலுக்கினான்.

மணமேடையில் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற ஐயரின் வார்த்தைகளைத் தொடர்ந்து நாதஸ்வரம் மங்கலநாதமாய் ஒலிக்க மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்கவே அனைவரும் அட்சதையைத் தூவி வாழ்த்தினர்.

கூடவே வித்யாசாகரும் அமிர்தவர்ஷினியும் அட்சதையைத் தூவியவர்கள் மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் முடியவும் தங்களது வாழ்த்ததைக் கூறி கையோடு வாங்கி வந்த பரிசையும் அளித்துவிட்டு உலகவழக்கப்படி புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.

மணமகளின் தந்தை சாப்பிடச் சொல்லி வற்புறுத்த அவனோ இருவருக்கும் பணியிடங்களுக்குச் செல்ல நேரமாகிறது என தன்மையாகச் சொல்லிவிட்டு மனைவியுடன் கிளம்பினான்.

காரில் செல்லும் போதே மீண்டும் வித்யாசாகர் அவனை சாகர் என அழைக்குமாறு சொல்ல அமிர்தவர்ஷினி முடியாதென அமர்த்தலாய் மறுத்தாள்.

“அப்போ நான் உன்னை முட்டக்கண்ணினு கூப்பிடுவேன்… உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கலாய்க்க அவள் மீண்டும் முறைக்க ஆரம்பித்தாள்.

“அவன் அவன் ஒய்புக்கு எவ்ளோ ரொமாண்டிக்கா செல்லப்பேர் வைக்கிறான்… நீங்களும் வச்சிருக்கிங்களே! உவ்வேக்… முட்டக்கண்ணியாம்… இவரு மட்டும் அப்பிடியே அர்னால்ட் பேரன்னு நினைப்பு… ஒல்லிக்குச்சியாட்டம் இருந்துட்டு வாய் மட்டும் எவ்ளோ தூரம் நீளுது பாரு” என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்தாள் அவள்.

இருவரும் வளவளத்தபடியே வீட்டை அடைந்தனர். வீட்டில் காலையுணவை முடித்துவிட்டு உடை மாற்றிவிட்டு இருவரும் அவரவர் பணியிடங்களுக்குச் செல்லத் தயாராயினர். வித்யாசாகர் டெக்ஸ்டைலுக்குச் சென்றுவிட அமிர்தா அவளது ஸ்கூட்டியில் அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டாள்.

அன்றைய தினம் முழுவதும் அவனது பேச்சை நினைத்தபடி அவளும், அவள் தனக்கு வைத்த பெயர்ச்சுருக்கத்தை எண்ணி அவனும் அன்றைய தினத்தை இனிய மனநிலையுடன் கழித்தனர் எனலாம்.

மாலை வீட்டுக்கு வந்த பின்னரும் அதே இனிய மனநிலை தொடர்ந்தது. எப்போதும் போல வீட்டுக்கு வந்ததும் முகம் அலம்பிவிட்டுப் பூஜையறையில் சுலோகத்தை முணுமுணுத்து விளக்கேற்றியவள் இன்னும் ஜானகிக்கு உடல்நலம் சரியாகாததால் தானே இரவுணவு சமைக்கவா என சமுத்ராவிடம் வினவினாள்.

ஆனால் அவளோ “நான் இன்னைக்கு நைட் பாத்துக்குறேன் அம்மு… உனக்கு வெஜிடபிள் உப்புமா ஓகே தானே… நீ போய் படிக்குற வேலைய பாரு” என்று சொல்லிவிட அமிர்தாவும் மாடியறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்தாள்.

புத்தகத்தை விரித்து வைத்தவளின் கவனம் அதிலிருந்த எழுத்துக்களில் பதிந்துவிட அதன் பின்னர் சமுத்ராவே வந்து அழைத்த பிறகு தான் அவள் இரவுணவுக்குக் கீழே வந்தாள்.

எப்போதும் வித்யாசாகருடன் இரவுணவை முடிப்பவள் அன்று மதியம் அவனே சொல்லிவிட்டதால் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டாள்.

வீட்டில் இரவுணவைச் சாப்பிடும் போதும் இன்னும் ஜானகிக்கு தலைவலியும் பித்தத்தினால் உண்டான வயிற்றுப்பிரட்டலும் சரியாகவில்லை என்பதால் அவர் சாப்பிடவில்லை.

அமிர்தவர்ஷினி சமுத்ராவிடம் “உங்கம்மா லிட்டர் கணக்குல குடிக்குற காபிய எம்.எல் கணக்குக்கு குறைச்சா மட்டும் தான் உடம்பு சரியாகும் சம்மு… இல்லனா இப்பிடி தான் ஆகும்” என்று முணுமுணுப்பாய் சொல்ல அவளும் இரண்டு நாட்களாய் அவருக்குக் காபியே கொடுக்கவில்லை என்றாள்.

“இதுவரைக்கும் குடிச்சதே இன்னும் ஒரு வருசத்துக்குப் பித்தம் ஜாஸ்தியாகுறதுக்குப் போதும்” என்றாள் அமிர்தவர்ஷினி முத்தாய்ப்பாக.

சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் மீனாட்சியம்மாள், சதாசிவத்திடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் மாடியறையின் வராண்டாவைச் சரணடைந்தாள்.

அங்கே வீசிய குளிர்க்காற்றில் மெய்மறந்து கண் மூடியவள் அப்படியே உறங்கிப் போனாள்.

வித்யாசாகர் நள்ளிரவில் தான் வீட்டுக்குத் திரும்பினான். யாரையும் தொந்தரவு செய்யாமல் தன்னிடமுள்ள சாவியை வைத்துக் கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தவன் மொபைல் போனின் டார்ச் ஒளியின் உதவியால் மாடிப்படியேறினான்.

அங்கே மாடி வராண்டாவில் மெல்லிய மஞ்சள் ஒளியைக் கசியவைத்த விளக்குகளின் ஒளியில் பொற்பதுமையாய் சோபாவில் துயில் கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் அவளருகே சென்றவன் அவளது உறக்கம் கலையாதவாறு அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

பின்னர் குளித்து உடை மாற்றியவன் கீழே சென்று தங்கை தனக்காக செய்த உப்புமாவைச் சாப்பிட்டு முடித்து தட்டை அலம்பி வைத்தவன் மாடிவராண்டாவில் தனியாய் இருக்கும் மனைவியைத் தேடிச் சென்றான்.

அவளது நிம்மதியான உறக்கம் கலையாமல் மெதுவாய் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டவன் அவர்களின் அறைக்குள் சென்று படுக்க வைத்துவிட்டு அவள் அங்கேயே வைத்திருந்த புத்தகங்களை எடுக்கச் சென்றான்.

புத்தகங்கள் சற்று கனமாக இருக்கவும் “என்னடா இது? புக்ஸோட வெயிட் அம்முவ விட அதிகமா இருக்கு… இதை எப்பிடி தான் படிச்சு முடிச்சு, எக்சாம் எழுதி, இவளும் பாஸ் ஆகுறாளோ? பெரிய மூளைக்காரி தான் நம்ம சம்சாரம்” என்று அவளை மனதுக்குள் கேலி செய்தபடி அவளது புத்தக அலமாரியில் அவற்றை வைத்தவன் விளக்கை அணைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினம் தாமதமாகவே அனைவரும் விழித்தனர்.

அமிர்தா சீக்கிரமாய் கண் விழித்தவள் வாசலைத் தெளித்துக் கோலமிட்டுவிட்டுப் பின்வாசல் தோட்டத்துக்குச் சென்று அந்தக் காலை வேளையில் குளிர்ந்த தென்றல் வீசுவதை அனுபவித்தபடியே மரங்களில் கீச் கீச்சென ரீங்காரமிடும் பறவைகளின் சத்தத்தைச் சிறிது நேரம் ரசித்தவள் சளசளத்து ஓடும் நதியின் நீரில் காலை நனைத்தாள்.

பின்னே தங்களின் அறைக்குத் திரும்பியவள் குளித்து உடை மாற்றிவிட்டு இன்று தனது கையால் வீட்டினருக்குச் சமைக்கலாம் என எண்ணியவளாய் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் பால் குக்கரின் சத்தம் கேட்க காபி சுடச் சுடத் தயாரானது. தாமதமாய் எழுந்து குளித்துவிட்டு வந்த சமுத்ரா முதலில் தேடியது காபியைத் தான். காபி குடித்தால் தான் அவளுக்கு அன்றைய தினம் விடியவே செய்யும்.

அவள் காபி குடித்து முடித்துவிட்டு அனைவருக்கும் எடுத்துச் செல்வதாகச் சொல்ல அமிர்தாவும் ஒரு ட்ரேயில் வைத்துக் கொடுத்தாள். சமுத்ராவின் அன்னைக்கு மட்டும் அன்று காலை காபி கட்.

இட்லி சாம்பாரை வைத்து முடித்துவிட்டுச் சமையலறையை விட்டு வெளியேறியவள் அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.

சதாசிவம் “என்னடாம்மா இன்னைக்கு உன்னோட சமையலா? சாம்பார் மணம் மூக்கைத் துளைக்குது” என்று கேட்க

“ஆமா தாத்தா.. இன்னைக்கு மதினியோட சமையல் தான்… காத்தால குடிச்ச காபியோட டேஸ்டே இன்னும் நாக்குல நிக்குது” என்று சிலாகித்தாள் சமுத்ரா.

ரகுநாதனும் மீனாட்சியும் அவருடன் வந்து உணவுமேஜையில் அமர அமிர்தவர்ஷினி தனது மாமியாரின் அறையை எட்டிப் பார்த்துவிட்டு “ஆச்சி! உங்க மருமகளைக் காணுமே… என்னாச்சு? இன்னும் உடம்பு சரியாகலயா?” என்று வினவ, அவளது கேள்விக்குப் பதிலாக தனது அறைவாயில் வந்து நின்றார் ஜானகி.

மெதுவாக உணவுமேஜையை நோக்கி நகர்ந்தவர் சாப்பிட அமர அவருக்கு அமிர்தா ஒரு தட்டை வைக்கவும் இட்லியை வைத்துக் கொண்டார். சாம்பாரை ஊற்றிவிட்டு இட்லி விள்ளலை வாயில் வைத்தவர் அதன் சுவை மாறவும் புருவம் சுருக்க அவரது மகள் இன்றைய சமையலைச் செய்தது அமிர்தவர்ஷினி தான் என்று சொல்லவும் ஜானகி முகத்தைச் சுளித்துவிட்டுக் கையை உதறியபடி எழுந்தார்.

“போயும் போயும் இவ கையால சமைச்சத நான் சாப்பிடணுமா? இந்தக் கையால எத்தனை நாள் அசைவம் செஞ்சு சாப்பிட்டாளோ? சை! இதுக்கு நான் பட்டினியாவே இருந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் அருவருப்புடன் முகத்தைச் சுளித்தார் அவர்.

அவரது பேச்சு அமிர்தவர்ஷினிக்கு மட்டுமன்றி அங்கிருந்த அனைவருக்கும் ஜானகியின் மனதில் அவள் மீதிருந்த வெறுப்பைப் பட்டவர்த்தனமாகக் காட்டிவிட்டது.

ரகுநாதன் “ஜானு” என்று முதல் முறையாக மனைவியை அதட்ட அவரோ கற்சிலை போல நின்றிருந்தார்.

தன்னை ஜானகிக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்பது வெகு நன்றாகவே அமிர்தாவுக்குத் தெரிந்த விசயம். ஆனால் இப்படி வெளிப்படையாக வெறுப்பை உமிழும்படி தான் என்ன கொலைக்குற்றமா செய்துவிட்டோம் என தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள் அவள்.

கடந்த சில தினங்களாக ஜானகிக்கும் மீனாட்சிக்கும் உடல்நலமில்லை என அறிந்த பின்னரும் வேறு எந்த வேலையும் செய்யாது வீடு விட்டால் அலுவலகம், பின்னர் படிப்பு என்று சுயநலத்துடன் சுற்றிவிட்டுச் சமுத்ராவின் தலையில் அனைத்து வேலைகளையும் கட்டுகிறோமே என்ற குற்றவுணர்ச்சி அவளுக்குள் எழுவதை அமிர்தவர்ஷினியால் தவிர்க்க முடியவில்லை.

அத்தோடு புகுந்தவீட்டார் தனது கைமணத்தையும் சுவைத்துப் பார்க்கட்டுமே என்ற ஆர்வத்துடன் இன்று சமைத்திருந்தாள். ஆனால் ஜானகி அதற்கு அமிலத்தைப் போல வார்த்தைகளைக் கொட்டியதையும், முகத்தில் காட்டிய அருவருப்பையும் பார்த்தவள் தானும் தனது தாயாரைப் போல சுத்தச் சைவம் தான் என கத்திவிடலாமா என்று கூட யோசித்தாள்.

ஆனால் இப்போது கத்தினால் அது மரியாதையின்மையாக ஜானகியின் அகராதியில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே அமைதியாய் ஒரு நிமிடம் யோசித்தவள் பின்னர் பதில் சொல்ல முடிவெடுத்தாள்.

தனது மாமியாரை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு “எங்கம்மா சின்ன வயசுல எனக்கு ராமாயணம் கதை சொல்லுவாங்க… அதுல ராமனை குகன் மீட் பண்ணுறப்போ அவருக்கு மீனையும் தேனையும் கொண்டு வந்து குடுத்தானாம்.. அன்னைக்கு வரைக்கும் அசைவம் சாப்பிடாத ஸ்ரீராமசந்திரமூர்த்தி உண்மையான அன்போட அவன் குடுத்த மீனையும் தேனையும் ஏத்துக்கிட்டாராம்… கடவுளுக்குத் தெரிஞ்ச அன்போட மகிமை மனுசங்களுக்குத் தெரியாம போயிடுச்சு… என்ன பண்ணுறது? இது கலிகாலமாச்சே!” என்று நறுக்கு தெறித்தாற் போல சொல்லிவிட்டுத் தனது அறை இருக்கும் மாடிக்குப் படியேறினாள்.

அமிர்தவர்ஷினி மீதான வெறுப்பு இன்று வெளிப்படையாக வாய் வார்த்தையில் வந்துவிட ஜானகி தன்னை விட்டேற்றியாய் நோக்கிய குடும்பத்தினரை உணர்ச்சியற்ற பார்வையால் வெறித்துவிட்டுத் தனது அறைக்குள் போக முயல அதே நேரம் அமிர்தாவின் கரத்தைப் பற்றி இழுத்தவண்ணம் மாடிப்படியில் விறுவிறுவென இறங்கிக் கொண்டிருந்தான் அவரது மைந்தன் வித்யாசாகர்.

அவன் பின்னே சங்கடத்துடன் வந்த அமிர்தவர்ஷினி கையை உருவிக்கொள்ள முயல அவளைத் தனது கூரியப் பார்வையால் அடக்கியவன் தாயாரை நோக்கிய வண்ணம் உணவுமேஜையை அடைந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்பது புரியாது அவனது அன்னையோடு வீட்டின் பெரியவர்கள் விழித்ததைப் போல அவனது தர்மபத்தினியும் விழிக்க ஆரம்பித்தாள். அன்னையின் மனதையும் வருத்தாது அதே நேரம் மனைவியின் மனக்குமுறலும் தீரும் வண்ணம் என்ன செய்யப் போகிறான் வித்யாசாகர்?