சாகரம் 11

“அம்முவ இன்னைக்கு டிராபிக்ல பாத்தேன்… மை காட்! இவ்ளோ அழகா அவ? ஐ கான்ட் பிலீவ் திஸ்… அழகுனா வெறும் முக அழகை மட்டும் சொல்லல… அந்த ஃபேஸ்ல குழந்தைத்தனம் பத்து சதவீதமும் படிப்புக்கேத்த மெச்சூரிட்டி தொண்ணூறு சதவீதமும் மிக்ஸ் ஆகி இருந்துச்சு… சின்ன வயசுல என் முதுகுல உப்புமூட்டை ஏறி டைனோசர் விளையாட்டு விளையாடுன பொண்ணா இதுனு ஒரு செகண்ட் மைண்ட் பிளாக் ஆயிட்டுனா பாத்துக்கோங்க”

    -அமிர்தாவின் சாகரன்

திருமணத்துக்குப் பின்னர் ஒரு வாரம் கண் மூடித் திறப்பதற்குள் கழிந்துவிட்டது. வித்யாசாகரும் அமிர்தவர்ஷினியும் மறுவீடு, விருந்து என திருநெல்வேலிக்கும் புளியரைக்கும் சென்று வந்ததில் ஓய்ந்து போயினர் எனலாம்.

எல்லாம் முடிந்து இருவரும் அவரவர் பணிகளில் இயல்பாய் அமர அந்த ஒரு வார காலக்கெடு அவர்களுக்குத் தேவைப்பட்டது.

வித்யாசாகர் அவனது கடைவிரிவாக்கப் பணியிலும் மேலாண்மையிலும் கவனமாக அமிர்தா அவளது படிப்பைக் கவனித்தவாறு அவளிடம் ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்களின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதிலும் வரிவிவரங்களை ஒழுங்குபடுத்துவதிலும் மூழ்கி விட்டாள்.

அந்த ஒரு வாரத்தில் அவளும் பார்வதிபவனவாசிகளில் ஒருத்தியாக மாறிவிட்டிருந்தாள். காலையில் அலுவலகம் செல்லும் முன்னர் வீட்டுவேலைகளில் உதவவா என சமுத்ராவிடம் கேட்பாள்.

ஆனால் மீனாட்சியம்மாளும் ஜானகியும் வேண்டாமென மறுத்துவிடுவர். முதலில் மூன்று நாட்களுக்கு அமிர்தாவுக்கு இது வித்தியாசமாகத் தோணவில்லை.

ஆனால் சதாசிவத்தின் வாயிலாக மீனாட்சியின் மன எண்ணத்தைக் கேட்டறிந்த பின்னர் அந்த வயோதிகப்பெண்மணியின் மீது அவளுக்கு மதிப்பு அதிகரித்தது.

“படிக்குற பொண்ணு கைல கரண்டிய குடுத்தா நல்லாவாங்க இருக்கும்? அதான் நானும் ஜானுவும் இருக்கோமே! நாங்க பாத்துக்க மாட்டோமா? போதாக்குறைக்குச் சுத்துவேலைக்குக் கண்ணம்மா இருக்குறா… அம்மு இப்போ தான் நம்ம வீட்டுக்கு வந்துருக்கா… அவளுக்கு நம்ம ரகு மாதிரி பெரிய ஆடிட்டர் ஆகணும்னு ஆசையாம்… ஆடிட்டர் ஆக ஆசைப்படுற பொண்ணை அடுப்படிக்கு அனுப்பி வேலை செய்ய வைக்குறதுல எனக்கு இஷ்டம் இல்லங்க”

இத்தனைக்கும் மீனாட்சியம்மாள் ஒன்றும் மெத்தப் படித்த மேதாவி அல்ல. ஆனால் வாழ்க்கைப்பள்ளியில் அனுபவ ஆசான் நடத்திய பாடங்கள் அவரை முதிர்ச்சியான கண்ணோட்டமுள்ள பெண்மணியாக மாற்றியிருந்தது.

அதே நேரம் ஜானகி சராசரி மாமியாராய் மருமகளிடம் சமையலறை சாம்ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. என்ன தான் கல்லூரி சென்று படித்திருந்தாலும் அவரது தலைமுறை பெண்களுக்கு இருக்கும் எண்ணமான சமையலறை ராஜாங்கத்தை என்றும் தன் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டுமென்பது அவர் மனதில் உதயமாகி ஊறிப் போய்விட்டது.

இக்காலப் பெண்களின் சாம்ராஜ்ஜியக் கனவுகள் அடுப்படியைத் தாண்டி ஆகாயம் தொட்டு விட்டதை அவர் அறியவில்லை.

அத்தோடு சமைப்பது, கணவனைக் கண் கண்ட தெய்வமாக எண்ணி கவனித்துக் கொள்வதில் தன்னைச் சுத்தமாக மறந்து போவது, அவன் வாங்கித் தரும் பூ, புடவை, அணிகலன்களில் பூரித்துப் போவது இதெல்லாம் அவரது தலைமுறையோடு முடிந்து போன விசயங்கள் என்பதை அவரது மருமகள் அவருக்கு வெகுவிரைவில் புரியவைத்துவிட்டாள்.

இன்றைய பெண்கள் தற்சார்பாய் நிற்கப் பழகி வெகுநாட்கள் ஆகிவிட்டதே! எனவே மாமியார் சமைக்கவேண்டாமென சொன்னதால் அவரிடம் விவாதம் செய்ய விரும்பாதவளாய் அவர் சமைத்து வைப்பதை உணவுமேஜையில் அடுக்கிவிட்டு அனைவருடன் சேர்ந்து சாப்பிடுவதோடு என் கடமை முடிந்தது என கிளம்பிவிடுவாள் அவள்.

தினமும் அவளது ஸ்கூட்டியில் அலுவலகம் கிளம்புபவள் மாலையிலும் அதிலேயே திரும்பி வந்துவிடுவாள். கூடவே அவளுக்கு எதுவும் வேண்டுமென்றால் வித்யாசாகரிடம் கேட்டுக்கொண்டு நிற்கும் ஆளும் அல்ல அவள்.

வரிவிதிப்பு பற்றிய புத்தகம் ஒன்று வேண்டுமென மாமனாரிடம் அவள் பேசிக்கொண்டிருக்கையில் ஜானகி வித்யாசாகர் திருநெல்வேலிக்குச் செல்லும் போது வாங்கிவருவான் என்று எண்ணியிருக்க மறுநாள் அவரது மருமகள் காரை ஓட்டிக்கொண்டு திருநெல்வேலி சென்று புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்பிவிட்டாள்.

அப்போது அதிசயித்தவர் “இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எதையும் வீட்டுல கேட்டுட்டுச் செய்யணும்கிற எண்ணமே கிடையாது… புருசன்னு ஒருத்தன் எதுக்கு இருக்கான்?” என்று தனது மாமியார் மீனாட்சியிடம் அங்கலாய்க்க போகிற போக்கில் அதைக் காதில் வாங்கிக் கொண்ட அமிர்தா அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துவிட்டாள்.

“எனக்கு ஒன்னு வேணும்னா அதை நானே வாங்கிக்கிறது தான் எனக்குப் பிடிக்கும்… ஒவ்வொரு விசயத்துக்கும் அவரைத் தொந்தரவு பண்ணுறதுல எனக்கு இஷ்டமில்ல ஆச்சி… உங்க பேரன் கூட ஷாப்போட ரூஃப்ல மாட்டுறதுக்கு சாண்டிலியர் வாங்கணும்னு சொன்னாரு… அதுக்கு அவர் என் கிட்ட பெர்மிசன் கேக்கலயே… அத போலத் தான் இதுவும்” என சாதாரணமாய் சொல்லி நகர்ந்துவிட்டாள்.

மீனாட்சியம்மாள் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் இன்னும் அமிர்தாவுக்கும் ஜானகிக்கும் இடையே சுமூகமான உறவு எதுவும் இல்லாத நிலை அவருக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

ஜானகியோ “ஏதோ வித்திய கல்யாணம் பண்ணுனதால் இவளை நான் சகிச்சிட்டிருக்கேன்… இதுல அத்தை அது இதுனு உறவு கொண்டாடுனா என்னால அதை ஏத்துக்கவே முடியாது… அந்தப் பகவான் கடைசி காலம் வரைக்கும் இவ கிட்ட தணிஞ்சு போகாம என்னைக் காப்பாத்திடணும்… அது போதும்” என எண்ணிக் கொள்வார்.

அதே நேரம் அமிர்தவர்ஷினியின் இந்தத் தன்னிச்சையான போக்கு மகனுக்குக் கோபத்தை உண்டாக்கும் என அவர் எண்ணியிருக்க அவரது மைந்தனோ மனைவியைப் பாராட்டினான்.

“சும்மா நைநைனு என்னை நச்சரிக்காம உன்னோட வேலைய நீயே பாத்துக்கிட்டதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல அம்மு… உன்னோட வேலை, படிப்பு இது ரெண்டுலயும் என்னோட தலையீடு எப்போவுமே இருக்காது… அதுக்காக நீ எதையும் செய்யணும்னு நினைச்சேனா தாராளமா செய்… ஒவ்வொண்ணுக்கும் என் பெர்மிசனுக்கு வெயிட் பண்ணணும்னு அவசியம் இல்ல” என்றவனுக்கு மனதுக்குள் நெட்டி முறித்து திருஷ்டி கழித்துக் கொண்டாள் அமிர்தவர்ஷினி.

வித்யாசாகர் எப்படி அவளது படிப்பு வேலையில் மூக்கை நுழைக்கவில்லையோ அதே போல அவளது பெற்றோரைச் சென்று பார்ப்பது, ஓய்வு நேரத்தில் சமுத்ராவுடன் சேர்ந்து தாத்தா பாட்டி வீட்டில் சுந்தர் பிரணவுடன் கலாட்டா செய்வது என எதிலும் ‘நீ திருமணமானவள்; அடங்கி வீட்டில் இரு’ என்று குத்திக்காட்டி சராசரி கணவனாக அவன் அவளைக் கட்டுப்படுத்தவில்லை.

தனக்காக இத்தனை செய்பவனைத் தானும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தாள் அமிர்தவர்ஷினி.

எனவே தான் இரவில் அவன் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் அவனுக்காகக் காத்திருந்து அவனுடன் சேர்ந்து மாடிவராண்டாவில் காற்றாட அமர்ந்து இரவுணவு உண்பதை வழக்கமாக்கி இருந்தாள்.

வித்யாசாகர் கூட “ஏன் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணுற அம்மு? நீ படிச்சு முடிச்சிட்டனா சாப்பிட்டுட்டுத் தூங்கு” என்று சொன்னாலும் அதை ஏற்க மாட்டாள் அவள்.

 “நான் யூஸ்வலா லெவன் தேர்ட்டி வரைக்கும் படிக்கிறது வழக்கம் தானே… உங்களுக்குக்காக வெயிட் பண்ணுற இந்த அரைமணி நேரத்துல காத்தாட இப்பிடி உக்காந்திருக்குறது கூட நல்ல ஃபீல் தான்” என்று சொல்லி வாயடைத்து விடுவாள்.

“இருந்தாலும் ஏன் கண் முழிச்சு வெயிட் பண்ணணும் அம்மு?” என்பான் அவன் அக்கறையாய்.

“மனசுக்குப் பிடிச்சவங்களுக்காக வெயிட் பண்ணுறதுல எந்தக் கஷ்டமும் கிடையாது வித்தி” என்று புன்சிரிப்புடன் சொன்ன அமிர்தாவை அதன் பின்னர் வித்யாசாகர் சீக்கிரம் உறங்கும்படி கட்டாயப்படுத்தவில்லை.

இந்த ஒரு வார காலத்தில் அவளது கணவன் வித்யாசாகர் அவளது மனதில் உயர்ந்த இடத்துக்குச் சென்றுவிட்டான். அத்தோடு சமுத்ரா தனது மாடியறையைக் காலி செய்துவிட்டு கீழே உள்ள அறைகளில் ஒன்றைத் தனதாக்கிக் கொண்டாள்.

எனவே மாடி வராண்டாவில் மனைவி அமர்ந்து படிக்க ஏதுவாக சிறிய வட்டவடிவ சோபாவை வாங்கிப் போட்டிருந்தான் வித்யாசாகர். அங்கே அமர்ந்தால் காற்றோட்டத்துடன் கவனம் பிசகாமல் படிக்கலாம்.

அத்தோடு அது பின்வாயிலை நோக்கிய இடம் என்பதால் இரு குடும்பத்துக்கும் பொதுவான தோட்டமும் அங்குள்ள நீண்ட நெடிய விருட்சங்களும், கேணியும், கேட்டுக்கு மறுபுறம் ஓடும் ஆறுமாய் பௌணர்மி அன்று பார்க்க ரம்மியமாய் தோன்றும் காட்சிகளை கண்ணாற கண்டபடியே படிப்பில் மூழ்குவது அவளுக்கும் பிடித்துப் போனது.

அவ்வபோது மகளைக் காண வந்த உன்னிகிருஷ்ணன் விஜயலெட்சுமி தம்பதியினருக்கும் மகளுக்காக மருமகன் மெனக்கிடுவதில் அலாதி ஆனந்தம்.

அருணாசலமோ தனது பேத்தியை நண்பனின் பேரன் மகாராணியாய் தாங்குவதை தினந்தோறும் கண் முன் காணும் போதெல்லாம் அகமகிழ்ந்து போனார்.

அவ்வாறு இருக்கையில் நாட்கள் வேகமாக கழிந்து தங்கள் திருமணவாழ்வின் ஒரு மாதத்தை வெற்றிகரமாக முடித்து இரண்டாவது மாதத்துக்குள் அடியெடுத்து வைத்தனர் அமிர்தவர்ஷினியும் வித்யாசாகரும்.

அப்போது குற்றாலத்தில் ஜானகியின் வழி உறவினரின் பேத்திக்குத் திருமணம் என மணப்பெண்ணின் தந்தை நேரில் வந்து சதாசிவத்துக்கும் மீனாட்சியம்மாளுக்கும் பத்திரிக்கை வைத்திருந்தார். கூடவே குடும்பத்தினர் நேரில் வந்து திருமணத்தைச் சிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வைத்துவிட்டுச் சென்றிருந்தார் அம்மனிதர்.

வழக்கமாக இம்மாதிரி நிகழ்வுகளுக்கு ஜானகியும் மீனாட்சியம்மாளும் தான் ஒன்றாகச் சென்றுவருவர். ஆனால் அந்தச் சமயத்தில் மீனாட்சியம்மாளுக்கு மூட்டுவலியும், ஜானகிக்குப் பித்தத்தினால் உண்டாகும் தலைவலியும் பாடாய் படுத்த இதில் எங்கிருந்து திருமணத்துக்கு நேரில் சென்று சிறப்பிப்பது!

சமுத்ராவை மட்டும் அனுப்புவது என்றால் சரியாக இருக்காது. எனவே வீட்டின் புதுமருமகளையும் மகனையும் அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த ஜானகி பட்டும் படாமலும் அமிர்தாவிடம் பேசினார்.

“குத்தாலத்துல என் தூரத்து உறவு அண்ணன் மகளுக்கு நாளைக்குக் கல்யாணம்… எப்போவும் நானும் அத்தையும் தான் விசேஷ வீடுகளுக்கு ஒன்னா போவோம்… ஆனா இந்தத் தடவை அவங்களுக்கும் எனக்கும் சொல்லி வச்ச மாதிரி சுகமில்லாம போயிடுச்சு… அதனால வித்தியும் நீயும் போயிட்டு வந்துடுங்க”

போக முடியுமா என்று கேட்பது எல்லாம் ஜானகியின் அகராதியில் கிடையாது. அத்தோடு அமிர்தாவுக்கும் இப்போது அலுவலகத்தில் பணிகள் ஓரளவுக்கு முடிந்துவிட ஓய்வாய் தான் இருந்தாள்.

 “சரி ஆன்ட்டி” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் நகர ஜானகியும் பெரும் தலைவலி அகன்ற நிம்மதியில் தனது அறைக்குள் புகுந்து கொண்டார்.

மருமகள் இன்னும் தன்னை ‘ஆன்ட்டி’ என யாரோ போல விளிப்பது அவருக்கு வினோதமாக இருந்தது. கூடவே சிறுவயதில் அத்தை என அழைத்தவளைத் தான் திட்டியதும் நினைவுக்கு வந்தது.

“ரொம்ப ரோசக்காரி தான் போல… க்கும்… அம்மையோட அகம்பாவத்துல கொஞ்சம் கூடவா இவளுக்கு இருக்காது? ஆன்ட்டியாம் ஆன்ட்டி… எப்பிடியோ போகட்டும்” என்று புலம்பி இருக்கிற தலைவலியை இரு மடங்காக்கிக் கொண்டார் ஜானகி.

ஆனால் அவரது எண்ணப்படி மறுநாள் மருமகள் திருமணவீட்டுக்குச் செல்லத் தயாராகி கீழே வந்த போது சமுத்ராவிடம்

“கல்யாணவீட்டுக்குப் போறப்போ பூ வச்சிக்கணும்னு உன் ஃப்ரெண்டுக்குத் தெரியாதோ? பூஜை ரூம் அலமாரில பிச்சி சரம் தொடுத்து வச்சிருக்கேன்… அத அவ கிட்ட குடு” என்று முணுமுணுத்துவிட்டுத் தலையைப் பிடித்தபடி நகர்ந்துவிட்டார்.

சமுத்ரா அமிர்தாவிடம் பூவை நீட்டவும் அவள் புருவம் உயர்த்தி வினவ

“உன் மாமியார் உனக்காக கட்டி வச்சிருந்தாங்கம்மா” என்றாள் சமுத்ரா.

அதை நம்பமுடியவில்லை என்றாலும் அவளிடம் கொண்டை ஊசி வாங்கி வைத்துக் கொண்டவள் மீனாட்சியின் அருகே அமர்ந்து அவரது மூட்டு வலி எப்படி இருக்கிறது என ஆதுரத்துடன் கேட்டாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போது மாடியிலிருந்து தயாராகி வந்த வித்யாசாகர் வழக்கம் போல மனைவியின் எழிலுருவில் ஒரு நிமிடம் மயங்கிப் போனான்.

பின்னர் ஆட்காட்டிவிரலால் புருவத்தை நீவி விட்டபடியே “கண்ணை விரிச்சு பேசியே எல்லாரையும் கவர் பண்ணிடுவா இந்த முட்டக்கண்ணி முழியழகி” என்று மனதுக்குள் செல்லமாக மனைவியைத் திட்டிக் கொண்டே அவர்களின் அருகில் வந்து நின்றான்.

“ஆச்சி உங்க பேத்தி கிட்ட பேசி முடிச்சாச்சா? ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு… இன்னும் டிலே ஆச்சுனா நாங்க போறதுக்குள்ள முகூர்த்தம் முடிஞ்சு பொண்ணும் மாப்பிள்ளையும் ஹனிமூன் கிளம்பி போயிடுவாங்க” என்றான் அவன் கேலியாக.

அதைக் கேட்டுச் சமுத்ரா நகைத்தவள் “அதாவது ஆச்சி இது மூலமா அண்ணா இந்த உலகத்துக்கு என்ன சொல்ல வர்றான்னா, இன்னைக்கு மேரேஜ் ஆகப் போற கபிள் கூட ஹனிமூன் போக ரெடியாயிட்டாங்க… ஆனா அவனும் அம்முவும் கல்யாணமாகி ஒரு மாசம் ஆன பழைய கபிள்… அவங்க இன்னும் போகலயேனு ஆதங்கத்தைக் கொட்டுறான்” என்றாள் கேலியாக.

அதைக் கேட்டு மீனாட்சியும் அமிர்தாவும் நகைக்க வித்யாசாகர் அவள் தலையில் நங்கென்று குட்டினான்.

“ஓவர் ஸ்மார்ட்டா பேசுறதா நினைப்போ? இருடி… இன்னும் ஆறே மாசத்துல உன்னை மாமியார் வீட்டுக்குப் பார்சல் பண்ணி அனுப்பல, என் பேரு வித்யாசாகர் இல்ல” என சூளுரைத்தவன், சிரித்த முகமாய் எழுந்த மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

இருவரும் காரில் அமர சமுத்ராவுக்கும் மீனாட்சிக்கும் டாட்டா காட்டிய அமிர்தா அவனிடம் “நீ பார்த்த விழிகள் சாங் போடுங்க… அது தான் மெலடியா கேக்குறதுக்கு ரம்மியமா இருக்கும்” என சொல்ல மனையாளின் கட்டளையை மீறாதக் கணவனாய் வித்யாசாகர் அந்தப் பாடலை இசைக்கச் செய்ய விஜய் ஜேசுதாசின் குரலில் உருகிய வண்ணம் இருவரது பயணமும் ஆரம்பித்தது.