சாகரம் 10

“நான் காலேஜ் ஃபைனல் இயர்ல அடியெடுத்து வச்ச நேரம் முட்டக்கண்ணி அம்மு திருநெல்வேலிக்குப் படிக்க வந்தா… அவ சேர்ந்தது கேர்ள்ஸ் காலேஜ்… மூனு மணி வரைக்கும் காலேஜ் இருக்கும்.. அதுக்கு அப்புறம் சி.ஏ கோச்சிங் கிளாசுக்கு கிறிஸ்து ராஜா ஸ்கூலுக்குத் தான் வருவானு ஆச்சி போன் பண்ணுறப்போ சொன்னாங்க… நானும் டெய்லி காலேஜ் வாசல்ல மூனு மணில இருந்து வெயிட் பண்ணி ரோட்ல போற வர்ற ஸ்கூட்டிய எல்லாம் பாக்குறேன்…. அவளை மட்டும் பாக்கவே முடியலயே”

    -அமிர்தாவின் சாகரன்

பெரிய அறை தான் வித்யாசாகருடையது. ஒரு புறம் அவனது உடமைகளை வைத்துக்கொள்ள வார்ட்ரோப், அதனருகிலேயே ஆளுயரக் கண்ணாடி மற்றும் மோடாவுடன் கூடிய டிரஸ்சிங் டேபிள் அமைந்திருந்தது.

அவளுக்குப் பிடித்த பாஸ்டல் வண்ணமான மேஜிக் மின்ட்டில் சுவரின் வண்ணப்பூச்சு அமைந்திருக்க அதில் ஆங்காங்கே பீச் வண்ணப் பூக்களும் வரையப்பட்டிருந்தன. அத்தோடு லேவண்டர் நறுமணமுள்ள ரூம் ஸ்ப்ரே அவளுக்குள் புத்துணர்ச்சியை உண்டாக்க அதன் நறுமணத்தை உள்ளிழுத்து அனுபவித்தவளின் பார்வை அந்த பெரிய அறையின் மற்றொரு ஓரத்தில் பதிந்தது.

மரச்சட்டமிட்ட கண்ணாடி ஜன்னல்களின் அருகே கிடந்த மேஜையும் அதன் மீது இருந்த மடிக்கணினியும் வித்யாசாகருடையது போல என எண்ணிக் கொண்டவளின் பார்வை மிகவும் தாமதமாகத் தான் மல்லிகை தூவிய மஞ்சத்தை நோக்கியது.

“ஓ மை காட்! இன்னும் சினிமாத்தனமா தான் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு டெகரேட் பண்ணுறாங்க போல… இம்பாசிபிள்” என்று தனக்குத் தானே அவள் சொல்லிக் கொள்ளும் போதே அந்த அறைக்குள் அடியெடுத்து வைத்தான் வித்யாசாகர்.

அவனைக் கண்டதும் வெட்கத்தின் நாணிக் கைகளில் முகம் புதைத்துக் கொள்ளும் அளவுக்கு வித்யாசாகர் என்பவன் அமிர்தவர்ஷினிக்கு வேற்று மனிதன் இல்லை. அத்தோடு அவனது நிலைப்பாடு பற்றி ஏற்கெனவே அவன் சொல்லியிருந்த விசயங்கள் நினைவில் வரவும் அவள் இயல்பாகவே புன்னகைத்தாள்.

அந்த இயல்பான புன்னகையும் இனிய தனிமையும் காதல் கொண்ட மனதும் அவனை மாயாலோகத்துக்குள் புகுத்த முயற்சிக்க மிகவும் சிரமப்பட்டு அதிலிருந்து வெளியே வந்தவன் தானும் வெறுமெனே சிரித்துச் சமாளித்தான்.

 “உனக்கு இந்த ரூம் பிடிச்சிருக்கா?” என்று வினவியவனுக்கு ஆமென தலையசைத்தவளின் முகத்தில் தொனித்த அசௌகரியத்தைக் கண்டுவிட்டான் அவன்.

“நீ அன்கம்பர்டபிளா ஃபீல் பண்ணுறளவுக்கு நான் ஒன்னுமே பண்ணலயே?” என்று வினவியபடியே புருவம் உயர்த்தியவனிடம்

“இந்த டிசைனர் ஷேரி கொஞ்சம் ஹெவியா இருக்கு வித்தி” என்றாள் அவள் மெதுவாக.

“அப்போ எப்போவும் மாதிரி நைட் டிரஸ்சை சேன்ஜ் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டான்.

அதன் பிற்பாடு வழக்கம் போல குர்தி மற்றும் யோகா பேண்டுக்கு மாறி கூந்தலை போனிடெயிலாக கட்டியபிறகு தான் அமிர்தாவுக்கு மூச்சே வந்தது.

குளியலறையிலேயே உடை மாற்றிவிட்டு முகம் அலம்பியவள் அங்கே இருந்த டவலில் முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.

 அதற்குள் வித்யாசாகர் அவனது மேஜையில் மடிக்கணினியை விரித்து வைத்தபடி அமர்ந்திருக்க ஏதோ அவசர வேலை போல எண்ணிக் கொண்டவள் மெதுவாய் “எதுவும் எமெர்ஜென்சி ஒர்க்கா? நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா?” என வினவ சரியென தலையாட்டியவன் தன்னருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போடவும் அவள் அதில் அமர்ந்து கொண்டாள்.

கூடவே அவளை அமரச் சொன்னதற்காக அவன் சொன்ன காரணத்தைக் கேட்டதும் அமிர்தாவின் முகம் புன்சிரிப்பில் மலர்ந்தது.

“ஆக்சுவலா எனக்கு லேட் நைட்ல ஒர்க் பண்ணுறப்போ தூக்கம் வந்துடும்… ஆனா நீ பக்கத்துல இருக்குறப்போ, உன்னோட பிரசன்சை என் ஹார்ட் ஃபீல் பண்ணுறதால ஒரு பொட்டு தூக்கம் கூட வராது… அதான் உன்னைப் பக்கத்துல உக்கார சொன்னேன்”

காற்று வருவதற்கு வசதியாய் பெரிய சாளரத்தைத் திறந்து வைத்தவன் டேபிள் விளைக்கைப் போடவும்

“அப்போ ரூம் லைட் எதுக்கு வேஸ்டா எரியணும்? இருங்க! நான் ஆப் பண்ணுறேன்” என சொன்னபடி அமிர்தா எழுந்தாள்.

அப்போது தான் அவர்களின் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் வைக்கப்பட்டிருந்த பால் அவளது கண்ணில் பட்டது. வித்யாசாகரும் அதைக் கவனிக்க வேகமாக தம்ளரை மூடியிருந்த மூடியை எடுக்கவும் ஏலக்காயின் நறுமணம் அவளது நாசியைத் தீண்டியது.

வித்யாசாகர் “பாதாம் பாலாம்… மிச்சம் வைக்காம குடிக்கணும்னு போறப்போவே மேகா ஆர்டர் போட்டுட்டுப் போனா… நீ குடி” என்று சொல்ல அமிர்தவர்ஷினியும் அருந்தினாள்.

அப்போது வித்யாசாகருக்கு மொபைலில் அழைப்பு வரவும், அவன் பேச ஆரம்பிக்க, அமிர்தா முழு தம்ளரையும் காலி செய்துவிட்டு அதைக் குளியலறையில் உள்ள சிங்கில் கழுவி மேஜையின் மீது கவிழ்த்து வைத்தாள்.

வித்யாசாகர் போன் பேசி முடித்துவிட்டு “அம்மு அந்தப் பால்….” என்று சொன்னபடி திரும்பியவன் மனைவி முழு தம்ளரையும் காலி செய்து கழுவி கவிழ்த்து வைத்திருப்பதைக் கண்டதும் திகைத்தான்.

“ஒரு கிளாஸ் பாலையும் ஒத்தைல குடிச்சிட்டியா? அடியே இந்த ரூம்ல உன் கூட இன்னொரு அப்பாவி ஜீவன் இருக்குதே, அதுக்கும் கொஞ்சம் குடுக்கணும்னு தோணலயா? கல்நெஞ்சக்காரி”

அமிர்தாவோ “நான் குடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டப்ப நீங்க உங்களுக்கு வேணும்னு சொல்லவே இல்லயே” என்று சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் பார்க்க அவன் மீண்டும் திகைத்தான்.

“அது சரி! ஒரு பேச்சுக்கு நீ குடிச்சுக்கனு சொன்னா உடனே முழு டம்ளரையும் காலி பண்ணிடணும்… குட் பாலிசி” என்று நக்கலாய் சொல்ல

“பின்ன என்னவாம்? என்னால சாப்பாடு ஐட்டம்ஸ் எதையும் கண் முன்னாடி வச்சிட்டுக் பாத்துட்டிருக்க முடியாது” என்று சொல்லிவிட்டுப் பழையபடி நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.

அவனையும் அமருமாறு கை காட்ட வித்யாசாகர் அமர்ந்தவன் “இங்க பாரும்மா! இனிமே எதையும் காலி பண்ணுறதுக்கு முன்னாடி என் கிட்ட வேணுமா வேண்டாமானு ஒரு வார்த்தை கேளு” என்று சொல்லவும்

“ஆப்டர் ஆல் ஒரு கிளாஸ் பாதம் பாலுக்கு இவ்ளோ அலம்பலா? சரியான சாப்பாட்டு ராமனா இருப்பிங்க போலயே!” என்று அங்கலாய்த்தாள் அமிர்தவர்ஷினி.

“அஹான்! ஏன்டி சொல்ல மாட்ட? நீ கொஞ்சம் குடிச்சிட்டு எனக்கும் மிச்சம் வைப்பனு நம்பி உன்னைக் குடிக்கச் சொன்னேன் பாரு! என்னைச் சொல்லணும்” என்று சொன்னபடியே வேலையில் மூழ்கினான் அவன்.

இடையே அமிர்தா அறையின் விளக்கை அணைத்துவிட மேஜை விளக்கின் ஒளியும், சாளரம் வழியே அறைக்குள் புகுந்த வெண்மதியின் ஒளியும் கலந்து அந்த அறையின் சிறுபான்மை பகுதியைத் தனது ஆக்கிரமிப்பில் கொண்டு வர முயன்றது.

சாளரம் வழியே தவழ்ந்த மெல்லிய தென்றல் முகத்தில் மோத அந்த மேஜைவிளக்கின் மெல்லிய ஒளியில் அவனது கைகள் மடிக்கணினியின் விசைப்பலகையின் மீது நடனமாடுவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அமிர்தவர்ஷினி.

அவள் அறிந்த வித்யாசாகருக்கு விளையாட்டுத்தனம் அதிகம். அவனால் குறும்புத்தனமாகப் பேசமுடியும் என எண்ணியிருந்தவளுக்கு அவன் கோயிலில் அன்றைய தினம் பொறுப்பாய் பேசியது பிரமிப்பைக் கொடுத்திருந்தது.

சிறுபிள்ளைகளுடன் புதுப்புது அவனால் விளையாட்டுகளை விளையாடமுடியும் என்பதை மட்டும் அறிந்தவளுக்கு திட்டமிட்டுச் செயலாற்ற கூட முடியுமென்பதையும் அன்று தான் கண்டுகொண்டாள்.

சிகை காற்றில் அசைந்து நெற்றியில் புரள ஆரம்பித்து அவனது கண்களை மறைக்கவும் அமிர்தா வேகமாக ஒதுக்கிவிட்டாள். வித்யாசாகர் மடிக்கணினியிலிருந்து தன் பார்வையை ஒரு நொடி அகற்றி அவளை நோக்கினான்.

அவனது பார்வையைக் கண்டு அவள் தனது கரத்தைச் சட்டென்று இழுக்க முயல இறுக்கமாய் அவளது கரத்தைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான் வித்யாசாகர்.

“உனக்குப் பாரதியார் கவிதை பிடிக்குமா அம்மு?”

திடீரென ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என அமிர்தவர்ஷினி புரியாது விழிக்க அவள் கரத்தில் மென்மையாக இதழ் பதித்தான் அவன்.

பின்னர் ஆழ்ந்த குரலில் அவள் விழிகளை நோக்கிவிட்டு “அவரோட கவிதை ஒன்னு உண்டு… எனக்கு அது ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு நிறுத்தியவன் மெல்லியக்குரலில் ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்ற அந்தக் கவிதையை ஏற்ற இறக்கத்துடன் பாடிக் காட்டினான்.

“அதுல சொல்லுற மாதிரி அதே நிலா வெளிச்சம், சில்லுனு வீசுற தென்றல் காத்து, கூடவே அழகான என்னோட பொண்டாட்டி, அவ கிட்ட கவிதை சொல்லுற நான்… நினைச்சாலே மனசுக்குள்ள ஒரு அழகான படபடப்பு உண்டாகுது அம்மு”

அவன் சொன்னதைக் கேட்கும் போதே உள்ளுக்குள் இனம்புரியா உணர்வொன்று ஊற்றெடுத்தது என்னவோ உண்மை! அந்த நிமிடம் அவன் பால் மெதுவாய் சரியத் தொடங்கிவிட்டது அவள் மனம்.

ஆனால் சுதாரித்துக் கொண்டவளாய் கைகளை அவனிடமிருந்து உருவிக் கொண்டவள்

“கவிதையெல்லாம் சூப்பரா சொல்லுறிங்க… அப்பிடியே கொஞ்சம் சேல்ஸ் ரிப்போர்ட்டையும் பாருங்க கவிஞரே! இல்லனா அடுத்த மாசம் புவ்வாக்கு நம்ம ரெண்டு பேரும் என்ன பண்ணுறது?” என்று கேலியாகப் பேசியபடி பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“கிரிக்கெட்டும் டைனோசர் கேமும் விளையாடுன ஆளுக்குள்ள இந்தளவுக்குக் கவிதாரசனையா? ஐ கான்ட் பிலீவ் திஸ்… அம்மு நீ கொஞ்சம் கவனமாவே இரு… இப்போ உன்னோட கான்சென்ட்ரேசன் எல்லாம் படிப்புல இருக்கணும்… படிப்புல மட்டும் தான் இருக்கணும்… இவனை நீ கவனிக்க ஆரம்பிச்சனா உன்னால வேற எதைப் பத்தியும் யோசிக்க முடியாது போலயே! வெறும் அரை மணி நேரம் கேஷுவலா பேசி, பதினைந்து நிமிசம் பக்கத்துல உக்காந்து, ரெண்டு நிமிசம் இவன் சொன்ன கவிதையைக் கேட்டதுக்கே மனசு அவன் பின்னாடி ஓட ரெடியாகுது! நல்லவேளை மூளை ரெட் சிக்னல் போட்டு ஸ்டாப் பண்ணுச்சு”

பலவாறு தனக்குள் பேசிக்கொண்டவள் அவனது கவனம் முழுவதும் மடிக்கணினியின் திரை மீது பதிந்திருக்கவே கன்னத்தில் கைவைத்தபடி அவனருகில் அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.

நேரம் செல்ல செல்ல அவளை மெதுவாய் நித்ராதேவி ஆட்கொள்ள ஆரம்பித்தாள். அவனது மேஜையிலேயே தலைவைத்துப் படுத்துக்கொண்டவளை வேலையார்வத்தில் கண்டுகொள்ளாதவன் பின்னர் எதேச்சையாய் திரும்பி பார்க்கும் போது அமிர்தவர்ஷினி தூங்கிப் போயிருந்தாள்.

அவளைப் பார்த்துவிட்டு மடிக்கணினியின் திரையில் நேரத்தைப் பார்க்க நள்ளிரவுக்கு இன்னும் அரைமணி நேரமே மீதமிருந்தது. மீதமுள்ளவற்றை நாளை பார்த்துக் கொள்ளலாம் என மடிக்கணினியை அணைத்துவிட்டு மேஜையின் ஒரு ஓரமாய் வைத்தான். சாளரத்தை அடைத்துவிட்டு அறைவிளக்கை ஒளிரச் செய்தவன் அமர்ந்தவாக்கில் மேஜையில் தலை வைத்து உறங்குபவளை உறக்கம் களையாதவாறு தனது கைகளில் ஏந்தி படுக்கையில் படுக்க வைத்து போர்வையைப் போர்த்தினான்.

குழந்தையாய் உறக்கத்தில் உதட்டை வளைத்துவிட்டு மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தவளை புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு விளக்கை அணைத்தவன் தானும் உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.

இல்லற வாழ்க்கையின் ஆரம்பம் என்பது ஒருவர் தனக்கென கட்டி வைத்திருக்கும் கூட்டிலிருந்து வெளியேறி தனது துணையின் மனதைப் புரிந்து கொள்ள முயல்வதில் தான் தொடங்குகிறது. இந்தப் புரிதலைக் உணராத மனிதர்கள் ஒன்று கடனே என்று வாழ்நாட்களைக் கடத்துகின்றனர். அல்லது பாதியிலேயே பிரிந்து போய் விடுகின்றனர். இன்று ஆரம்பித்த இந்தப் புரிதல் அமிர்தவர்ஷினிக்கும் வித்யாசாகருக்கும் இடையே வலுப்பட்டுப் பிணைப்பாக மாற இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை தானே!