சாகரம் 1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“பாயு மொளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!”

எனக்குப் பிடிச்ச பாரதியோட கவிதை இது… ஒவ்வொரு தடவை அம்முவ பாக்குறப்போவும் இந்தக் கவிதை தான் நியாபகத்துக்கு வரும்! ஆனா அம்முவுக்குப் பாரதியோட கண்ணம்மாவ விட செல்லம்மா தான் இஷ்டமாம்… கண்ணம்மாக்காக கசிஞ்சு உருகுன பாரதி செல்லம்மாவுக்கு ஒரு ரெண்டு வரி ஹைகூவாச்சும் எழுதிருக்கலாம்னு சொல்லுவா”

                                                 -அமிர்தாவின் சாகரன்

குற்றாலச்சாரலின் குளுமை நிறைந்த தென்றல் கொஞ்சி விளையாடும் அற்புதமான காலைப் பொழுதில் வெண்கதிரோனின் பொற்கதிர்கள் வெம்மையாகத் தாக்காமல் இதமாக வருடியபடியே வீசும் பூமி செங்கோட்டை. இயற்கையன்னையின் பசுமையைக் காலமாற்றத்தினால் உண்டான வளர்ச்சி முழுவதும் அழித்துவிடாமல் காத்துக் கொண்டிருக்கும் நகரமான செங்கோட்டையின் பெரிய திருமண மண்டபமான ஸ்ரீ பாலாஜி மஹால் ஜனக்கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

கேரளா பாணி நுழைவு வாயிலை அடுத்த பசும்புல்வெளி மண்டபத்தைச் சுற்றிலும் பச்சைப் போர்வையாய் ஓட சுற்றுச்சுவரை ஒட்டினாற்போல அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த புதர்ச்செடிகள் அரண் போல அமைந்திருந்தன.

மண்டப வளாகத்தினுள் வினாயகர் சிலை ஒன்று இருக்க அதன் முன்னே சில சிறுவர் சிறுமிகள் நின்று தோப்புக்கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதனை அடுத்து இரு மாடிகளுடன் கண்ணாடியால் இழைத்துக் கட்டப்பட்டிருந்த ஸ்ரீ பாலாஜி மஹால் கம்பீரமாய் நின்றது. உள்ளே நுழைவதற்கு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் முடியும் இடத்தில் வருபவர்களுக்குப் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தனர் சில இளம்பெண்கள்.

மண்டபத்திற்குள் செல்லும் வாயிலில் பொன்னிற அலங்கார வளைவுகளுடன் இரு பக்கமும் தூண்கள் மலர் அலங்காரத்துடன் நிறுத்தப்பட்டிருக்க அவற்றையெல்லாம் ரசித்தபடியே உள்ளேயும் வெளியேயுமாய் போய் கொண்டிருந்தனர் சிலர்.

“சதா டெக்ஸ்டைல்ஸ் ஓனரோட வீட்டு நிச்சயதார்த்தமாச்சே… ஏற்பாட்டுக்குக் கேக்கவா செய்யணும்? அதுவும் அருமைப்பேரனோட நிச்சயதார்த்தம்.. நெருங்குன நண்பரோட மூத்தப் பேத்தி தான் கல்யாணப்பொண்ணுங்கிறப்போ எதுலயும் குறை வந்துடக் கூடாதுனு தான் ஏதோ வெட்டிங் பிளானராம்ல… அவங்கள தென்காசில இருந்து வர வச்சிருக்காராம்”

உறவுக்கார ஆண்கள் தன் வீட்டு நிச்சயதார்த்தத்தை வியந்து பேசியதைக் கேட்டுக் கொண்டு தனது மூக்குக்கண்ணாடியைப் பெருமிதமாகச் சரி செய்து கொண்டார் சதாசிவம். எழுபது வயது முதியவர்.

நெற்றியில் திருநீறு துலங்க கம்பீரக்களையுடன் சிரித்தவர் அருகிலிருந்த அவரது வயதை ஒத்த நண்பரும் இப்போது நடக்கவிருக்கும் நிச்சயதார்த்த விழாவின் நாயகியின் தாத்தாவுமான அருணாசலத்தை சினேகத்துடன் கட்டிக் கொண்டார்.

“ரொம்ப சந்தோசமா இருக்கு அருணாசலம்… இது வரைக்கும் நம்ம வெறும் நண்பர்கள் தான்… ஆனா இனிமே சொந்தக்காரங்களும் ஆகப் போறோம்… இந்தச் சந்தோசத்துல எனக்கு பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு”

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த அருணாசலம் நண்பரிடம் “சந்தோசத்துல காலைல பிரஷர் டேப்ளட் போட மறந்துட்டியா சதா? தங்கச்சி உன்னைத் தேடுறா பாரு” என்று சதாசிவத்தின் மனைவியான மீனாட்சியைக் காட்ட அந்த முதியப்பெண்மணி நெற்றியில் குங்குமம் மின்ன காது, கழுத்து, மூக்கு மற்றும் கைகளை வைரத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருந்தவர் நரை இழையோடிய சிகையோடு கணவரை நோக்கி வேகுவேகுவென நடந்து வந்தார்.

“உங்கள எங்கல்லாம் தேடுறது? அங்க உங்க பேரன் வேஷ்டி கட்ட மாட்டேனு அழிச்சாட்டியம் பண்ணுறான்… வந்து என்னனு கேளுங்களேன்”

“ஏன் உன் மகனை ரெண்டு அதட்டல் போடச் சொல்லேன்… இதுக்குனு நான் அங்க வரைக்கும் வரணுமா?” என்று கேட்டவரை முறைத்த மீனாட்சி அடுத்து அருணாசலத்திடம் முறையிடத் தொடங்கவே அவரும் சதாசிவமும் சேர்ந்தே மணமகன் அறை இருக்கும் மாடிக்குப் படியேறினர்.

அங்கே காச்மூச்சென்ற சத்தத்துடன் சதாசிவத்தின் மகனும் மணமகனின் தந்தையுமான ரகுநாதனின் சலித்துப் போனக் குரல் கேட்டது. எத்தனையோ வியாபாரிகள், வணிகர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிற ஆடிட்டர் அவர். ஆனால் மகனின் இந்த அசட்டுப் பிடிவாதத்தைச் சமாளிக்க முடியாமல் ஓய்ந்து போய்விட்டார்.

“என்னடா இப்பிடி சின்னக்குழந்தையாட்டம் அடம்பிடிக்கிற? நடக்கப் போற சடங்கு சம்பிரதாயத்துக்கு நீ கட்டாயம் வேஷ்டி கட்டியே ஆகணும்… சும்மா எதுக்கெடுத்தாலும் உங்கம்மா மாதிரி விதண்டாவாதம் பேசாத” என்று இது தான் சாக்கு என்று அவரது சகதர்மிணியான ஜானகியையும் குறிப்பிடும் போதே சதாசிவமும் அருணாசலமும் உள்ளே நுழைந்தனர்.

அங்கே மணமகனுக்கு வேஷ்டி கட்டிவிட அவனது தந்தையுடன் அருணாசலத்தின் மகன்களான சங்கரனும், நாராயணனும் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்துப் போராடிக் கொண்டிருந்தனர்.

இடுப்பில் கையூன்றி தந்தையின் கையிலுள்ள வேஷ்டி சட்டையை அசூயையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மணமகனும் சதாசிவத்தின் பேரனுமான வித்யாசாகர். இருபத்தாறு வயது இளைஞன். சதா டெக்ஸ்டைல்சின் மேலாண்மையை இப்போது கவனித்துக் கொண்டிருப்பவன் அவனே.

ஆறடி உயரம்; அழகிய உருவம் என்ற நாடகத்தனமான வர்ணனைகள் எதுவும் சற்றும் தேவைப்படாத தினசரி வாழ்வில் நாம் கடந்து செல்லும் சராசரி பக்கத்துவீட்டு இளைஞன் போன்ற தோற்றம். அவன் வயதுக்கு இன்னும் கொஞ்சம் எடை போடலாம். ஆனால் ஒல்லிக்குச்சி உடல்வாகுடன் மற்றவரை வசியப்படுத்தும் பேச்சுத்திறமையும் சேர்ந்து கொள்ள தனது அக்மார்க் குறும்பினால் அனைவரையும் கவர்ந்துவிடுவான்.

ஆனால் பிடிவாதத்தில் மட்டும் அவனது அன்னையான ஜானகியைக் கொண்டிருந்தான் அவன். விழாவின் நாயகனான அவனுக்கு இது காதல் திருமணம். அப்படி இருப்பினும் வேஷ்டி விசயத்தில் மட்டும் தன் பிடிவாதத்திலிருந்து பின் வாங்க மாட்டேன் என முறுக்கிக் கொண்டிருந்தான்.

சதாசிவம் பேரனைக் கேலியாகப் பார்த்தபடியே “என்னடா வேஷ்டி இடுப்புல நிக்காதோனு பயப்படுறியோ?” என்று கேட்க அவரை முறைத்தவன்

“ஏன் பேச மாட்டிங்க தாத்தா? என்கேஜ்மெண்டுக்கும் மேரேஜுக்கும் எவன் வேஷ்டி சட்டைய யூனிபார்மா அனவுன்ஸ் பண்ணுனானோ அவன் என் கையில கிடைச்சா அவனுக்குக் கருடபுராணத்துல உள்ள ஆல் வெரைட்டி பனிஸ்மெண்டையும் சேர்த்து வச்சுக் குடுப்பேன்… சிரிக்காதிங்க ஓல்ட் மேன்… இது இடுப்பில நிக்க மாட்டேங்கிறது… வாட் கேன் ஐ டூ?” என்று பொரிந்து கொட்டினான்.

ஆனால் ஆண்கள் அனைவரும் என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்ததில் ஒரு வழியாக வேஷ்டி கட்டி முடித்தவன் “சித்தப்பா எதுக்கும் என் கூடவே இருங்க… எனக்கு என்னமோ கொஞ்சம் அன்கம்பர்டபிளா இருக்கு” என்று நாராயணனைத் தன்னுடன் நிறுத்திக்கொண்டான்.

அப்போது கதவு தட்டப்பட சதாசிவம் உள்ளே வருமாறு சொன்னதும் புயலென வேகமாக அங்கே நுழைந்தாள் ஒரு இளம்பெண். தாமரை வண்ணப் பட்டுப்புடவையில் ரதியாய் ஜொலித்தவள் பழக்கமற்ற புடவையின் கொசுவங்களை அவஸ்தையுடன் பிடித்தபடி நின்றாள்.

அவள் மேகவர்ஷினி. இருபத்தோரு வயது இளம்பெண். பேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டுத் திருநெல்வேலியில் சொந்தமாய் பொட்டிக் வைத்து ஒரு வருடமாய் நடத்துகிறாள். விழாவின் நாயகியின் சித்தி மகள். அருணாசலத்தின் இளைய பேத்தி.

“வித்தி அண்ணா ரெடியாயிட்டிங்களா? அங்க அக்கா ரெடியாகி அரைமணி நேரம் ஆச்சு… வேஷ்டி கட்டி ரெடியாக இவ்ளோ நேரமா?” என மூச்சுவிடாது அங்கலாய்த்தவளை வாஞ்சையுடன் பார்த்த வித்யாசாகர்

“என்ன பண்ணுறது மேகி? உனக்கு எப்பிடி ஷேரினா அலர்ஜியோ அதே போல தான் எனக்கு வேஷ்டினா அலர்ஜி” என்று சொல்லவும் அவள் முகம் மலர

“ஐ!  உங்களுக்கும் எனக்கும் சேம் பின்ச்…. ஹைஃபை அண்ணா” என அவனது கரத்தைத் தட்டிக் கொண்டவள் பின்னர் நாக்கைக் கடித்துக்கொண்டு

“அண்ணா நம்ம கான்வர்சேசனை அப்புறமா கூட வச்சிக்கலாம்… அங்க அக்காவோட ரூம்ல என்னோட மம்மி, உங்களோட மம்மி, பெரியம்மாஸ் எல்லாரும் கால்ல வெண்ணி ஊத்துன மாதிரி நிக்கிறாங்க… போதாக்குறைக்கு சுந்து ஆச்சியும், மீனா ஆச்சியும் நாழியாகுதுனு ஐயரை விட அதிக தடவை சொல்லிட்டாங்க… சீக்கிரமா மணமேடைக்குப் போங்கண்ணா… மாமாஸ் அண்ட் தாத்தாஸ் நான் கிளம்புறேன்… நான் போனதும் மறுபடியும் அரட்டை அடிக்காம வித்தி அண்ணாவ கூட்டிட்டு வந்துடுங்க” என்று படபடத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

வித்யாசாகர் வாயில் கை வைத்து அதிசயித்தவன் “நம்ம மேகியா இவ்ளோ பொறுப்பா பேசுறா? ஐ காண்ட் பிலீவ் திஸ் தாத்தா” என்று கேலியாய் சொல்ல ஆண்கள் அனைவரும் அவனை மணமேடைக்கு அழைத்துச் செல்லத் தயாராயினர்.

அதே நேரம் மணமகள் அறையில் அலங்காரத்தைச் சரிபார்ப்பதும் செல்பி எடுப்பதும் நடந்து கொண்டிருந்தது. மேகவர்ஷினி உள்ளே நுழைந்ததும் அவளிடம் வித்யாசாகர் மணமேடைக்குச் சென்றுவிட்டானா என விசாரித்தார் அவளின் பெரியம்மாவும் மணமகளின் அன்னையுமான விஜயலெட்சுமி.

அவரிடம் பேசிக் கொண்டிருக்கையிலேயே பக்கவாட்டில் ஒருவர் முகம் சுளிப்பது நன்றாகத் தெரிய அவரை நோக்கித் திரும்பி புன்னகைத்தாள் மேகவர்ஷினி.

அவளது புன்னகையைக் கண்டதும் முகச்சுளிப்பை நீக்கிவிட்டு தானும் குறுஞ்சிரிப்பை இதழில் பூசிக் கொண்டார் அப்பெண்மணி, மணமகன் வித்யாசாகரின் தாயார் ஜானகி.

மேகவர்ஷினியை இழுத்துத் தன்னருகே நிறுத்திக்கொண்டவர் “இன்னைக்கு உனக்குத் தான் அலைச்சல் அதிகம்டி செல்லம்… எப்பிடி வேர்த்திருக்குது பாரு?” என்று விஜயலெட்சுமியை முறைத்தவண்ணம் அவளது வியர்வையைத் துடைத்துவிட்டார் அவர்.

மேகவர்ஷினியோ ஜானகியும் விஜயலெட்சுமியும் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்வது நல்லதற்கல்ல என்பதால் அவர்களின் பார்வை பரிமாற்றத்தை இவ்வளவு நேரம் குழப்பமும் தவிப்புமாய் பார்த்துக் கொண்டிருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியான மணப்பெண்ணிடம் திரும்பினாள்.

மணப்பெண் அவள்; அவளைப் பொறுத்தவரை இது ஏற்பாட்டுத்திருமணம் தான் என்றாலும் மணமகன் அவளை உயிருக்கு உயிராய் காதலிப்பவன். எத்தனை பெண்களுக்கு அவர்களுக்காக உருகும் ஆண்மகன் கணவனாக வாய்ப்பான்! அவளுக்கு வாய்த்தும் அந்தச் சந்தோசத்தை முழுவதுமாக அனுபவிக்க அவளால் இயலவில்லை.

ஏனெனில் திருமணப்பேச்சு ஆரம்பித்த தினத்திலிருந்து பெற்ற அன்னையும் வருங்கால மாமியாரும் இப்படி ஒருவரையொருவர் முறைத்தபடி நிற்பதைக் கண்டு தவிக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் இது ஒன்றும் புதுக்கதை அல்லவே!

இப்போதும் தன்னருகில் நின்ற தங்கையிடம் “இவங்க எப்போ தான் மாறுவாங்க?” என கண்களால் ஆதங்கமாய் கேட்கவும் தவறவில்லை அவள்.

மேகவர்ஷினி அதைப் புரிந்து கொண்டவளாய் “அத்தை உங்களையும் பெரியம்மாவையும் சதா தாத்தா கூப்பிட்டாங்க” என்று சண்டைக்கோழிகளாய் சிலிர்த்து நின்ற இரு பெண்மணிகளையும் அனுப்பி வைத்தாள்.

அவர்கள் மெய்யாகவே சென்றுவிட்டார்களா என தனது பெரிய கண்களை உருட்டி ஒரு முறை பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டாள் மணமகள் அமிர்தவர்ஷினி.

எளிமையில் அழகியாய் மின்னுபவள் அன்று பட்டாடை ஆபரணத்துடன் பார்க்க சொர்க்கலோகத்திலிருந்து பூமிக்கு வந்த அப்சரஸ் போலவே அவ்வளவு அழகாய் ஜொலித்தாள்.

விஜயலெட்சுமி உன்னிகிருஷ்ணனின் புதல்வியான அமிர்தவர்ஷினி சி.ஏ ஐ.பி.சி.சி முடித்தக் கையோடு வருங்கால மாமனாரான ரகுநாதனிடம் மூன்று வருடங்களாக பணியாற்றியபடியே ஆர்ட்டிக்கிள்ஷிப் செய்து கொண்டிருந்தாள்.

அச்சமயத்தில் அவள் மீது அவரது மைந்தன் வித்யாசாகர் காதல்வயப்பட அதற்கு பின்னர் எக்கச்சக்க குழப்பங்களுக்குப் பின்னர் தான் இந்தத் திருமணப்பேச்சு முடிவானது.

அமிர்தவர்ஷினிக்கு இன்னும் தயக்கம் தான். ஏனெனில் வித்யாசாகரின் தாயார் ஜானகிக்கு அவளது தாயார் மீது இருக்கும் கோபத்தையும் அதன் விளைவாய் அமிர்தாவைக் கண்டால் அவர் எரிந்து விழுவதையும் இளம்வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவளுக்கு அவரது மைந்தன் மீது எவ்வாறு காதல் வரும்?

ஆனால் அவளது தாத்தா அருணாசலத்துக்கு நண்பரின் பேரனுடன் தனது பேத்தியின் திருமணம் முடிந்தால் நலமென மனதில் பட்டுவிட எதிர்ப்புக்குரல் எழுப்பிய ஜானகியையும் விஜயலெட்சுமியையும் அவரும் சதாசிவமும் சேர்ந்து இத்திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்திருந்தனர்.

இப்படி வேண்டாவெறுப்பாக சேரும் உறவுகள் வாழ்நாள் முழுவதும் இப்படியே தொடர்ந்தால் அது தனது வருங்காலத்துக்கு நல்லதல்ல என்பது தான் அமிர்தவர்ஷினியின் முக்கிய கவலையே.

அந்தக் கவலை தான் இப்போதும் அவள் முகத்தில். அதைக் கண்டுகொண்ட அவளின் உடன் பிறவா சகோதரி தமக்கையின் தோளைக் கட்டிக் கொண்டாள்.

அவளின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சியவள் சிவப்புவண்ண பட்டில் ஆடை அணிகலன்கள் மின்ன கூந்தலை மலர்கள் அலங்கரித்திருக்க எழில்தேவதையாய் ஜொலித்த அமிர்தவர்ஷினியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா அம்முக்கா! உன் அழகின் ரகசியம் என்ன கண்ணே?” என்று பழங்கால கதாநாயகிகளைப் போல இமைகளைக் கொட்டிக் கேட்க

“ம்ம்.. தாத்தா சோப்பு” என்று கேலியாய் சொல்லிவிட்டுத் தங்கையின் தலையில் செல்லமாக குட்டினாள் அமிர்தா.

மேகா வலிக்காவிட்டாலும் தலையைத் தடவிக் கொண்டவள் அமிர்தாவுடன் சேர்ந்து அத்தைமார்கள் இருவரும் சிரிப்பதைக் கண்டவள்

“கோம்ஸ் அத்தை போதும்… மிசஸ் வேதவதி நாராயணன் உங்களுக்குத் தனியா சொல்லணுமா? இருங்க உங்க மூத்த நாத்தனார்ஸ் கிட்ட போட்டுக் குடுக்கிறேன்” என்று மிரட்ட பொய்யாய் பயந்தது போல நடித்தனர் அவர்களின் அத்தைகளான கோமதியும் வேதவதியும்.

“அந்தப் பயம் இருக்கட்டும்” என்று மிரட்டவும் கதவு தட்டப்பட உள்ளே நுழைந்தார் அருணாசலம்.

தாத்தாவைக் கண்டதும் எழுந்த அமிர்தா அவர் முன்னே சென்று நின்று “நான் அழகா இருக்கேனா தாத்தா?” என்று ஆர்வத்துடன் கேட்க அவரோ

“என் பூனைக்குட்டி பேத்தி என்னைக்கும் அழகு தான்” என்று சொல்ல “தாத்தா பூனைக்குட்டினு சொல்லாதிங்க” என்று சிணுங்கினாள் அவள்.

பக்கத்தில் நின்ற மேகா நக்கலாக “ஆமா தாத்தா… சின்னப்பிள்ளையா இருந்தப்போ பூனைக்குட்டினு சொன்னிங்க… ஓகே! ஆனா இப்போ அம்முக்கா பூனைக்குட்டில இருந்து யானைக்குட்டியா புரொமோட் ஆயிட்டா… அதனால பேரை மாத்துங்க அருணாசலம்” என்று சொல்ல அமிர்தா விடைத்த மூக்குடன் அவளை முறைக்க ஆரம்பித்தாள்.

அருணாசலம் இரு பேத்திகளையும் தட்டிக்கொடுத்தவர் மூத்த மருமகள் கோமதியிடம் “உன்னைச் சங்கரன் தேடுறான் மதிம்மா… தட்டுல என்னமோ ஜெம்ஸ் வச்சு பேரை எழுதணும்னு உன் மகன் சுந்தரும், சின்னவன் பிரணவும் அங்க அட்டகாசம் பண்ணுறாங்களாம்” என்று சொல்ல அவருடன் சேர்ந்து வேதவதியும் தத்தம் மைந்தர்களின் குறும்புத்தனத்தை அடக்கச் சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்றதும் அமிர்தாவிடம் “உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் தானேடா? இல்ல தாத்தாவுக்காக சம்மதிச்சியா?” என்று கேட்க அமிர்தாவும் மேகாவும் அதற்கு பதிலளிக்காது திருதிருவென விழிக்கும் போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மணமகன் வித்யாசாகரின் தங்கை சமுத்ரா.

“தாத்தா வித்தி அண்ணா மணமேடைக்கு வந்து நாழியாச்சு… அம்மு ரெடியாயிட்டா தானே? இன்னும் ஏன் இங்கேயே நிக்கிறிங்க? ஓ! பேத்திய பாத்து எமோசனல் ஆயிட்டிங்களா?” என்று கேட்க மூவரும் புன்முறுவல் பூத்தனர்.

சமுத்ரா இடுப்பில் கையூன்றி மூவரையும் முறைத்தவள் “அப்புறமா வந்து எமோசனல் ஆகிக்கோங்க… தாத்தா அங்க உங்களோட ஒய்ப் மிசஸ் திரிபுரசுந்தரி வெட்டிங் பிளானர் கேர்ள் கிட்ட மேடையில பூ கம்மியா ஆயிடுச்சுனு சொல்லிட்டிருக்காங்க… அதைப் போய் கவனிங்க… மேகா நீ அம்முவ கூட்டிட்டு வா” என்று அனைவருக்கும் வரிசையாய் ஆணையிட

“சம்முக்கா கால் மீ மேகி” என்று முகத்தைச் சுருக்கிச் சிணுங்கினாள் மேகவர்ஷினி. அவளுக்கு எப்போதுமே மேகா என்று அழைத்தால் பிடிக்காது.

“சரிம்மா தாயே… இப்போ அதுவா முக்கியம்? அம்மு! அங்க வித்தி அண்ணா வேற இந்த ரூம் இருக்குற திசையையே வச்ச கண் வாங்காம பாத்துட்டிருக்கான்… இப்போவே நீ போனேனா நிச்சயம் நடக்கும்…. இல்லனா ஓடிப் போய் எங்க இருந்தாச்சும் தாலிய வாங்கிட்டு வந்து உன் கழுத்துல கட்டிடுவான் போல… அவ்ளோ அவசரப்படுறான்” என்ற சமுத்ரா மேகவர்ஷினியுடன் அமிர்தவர்ஷினியை அழைத்துச் சென்றுவிட்டாள்.

அவர்களைத் தொடர்ந்து வந்த அருணாசலம் வெட்டிங்  பிளானரிடம் பேசிக் கொண்டிருந்த மனைவியைச் சமாதானம் செய்தார். அந்த அறுபத்திரண்டு வயது பெண்மணிக்கு பேத்தியின் நிச்சயத்தில் எவ்விதக் குறையும் இருக்க கூடாதென்ற எண்ணம்.

ஆனால் கணவருக்குக் கட்டுப்பட்டவராகையால் அமைதியாய் சபைக்கு வந்தவர் பேத்தி அமிர்தவர்ஷினியையும் வித்யாசாகரையும் ஒரு சேர பார்த்துவிட்டு நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தார்.

வித்தியாசாகர் பாரதியாரின் கவிதைகளுக்குத் தீவிர ரசிகன். அவனது வாழ்வின் காதல் கணங்கள் அனைத்தையும் பாரதியின் வரிகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பவனுக்கு இப்போது கூட அவரது வரிகள் நினைவுக்கு வரவே கண்கள் நிறைய காதலுடன் தன்னவளை ஏறிட்டான் அவன்.

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
             
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

ஆனால் அதை அப்படியே சொல்லிவிட்டால் அவனும் சராசரி காதலன் ஆகிவிடுவானே! எனவே அதையெல்லாம் மனதுக்குள் மட்டும் வைத்துக் கொண்டான்.

வழக்கமான குறும்புத்தனம் மேலிட அமிர்தவர்ஷினியிடம் குனிந்தான் அவன்.

“ஏய் முட்டக்கண்ணி! ஏன்டி இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வச்ச? நானே எப்போடா என்கேஜ்மெண்ட் முடியும், இந்த வேஷ்டில இருந்து ஜீன்சுக்கு ஷிப்ட் ஆகலாம்னு காத்திட்டிருக்கேன்… இந்தம்மா திருவிழா தேர் மாதிரி ஆடி அசைஞ்சு அன்னநடை போட்டு மணமேடைக்கு வர்றா” என்று அவளைக் கேலி செய்ததோடு தனக்கும் வேஷ்டிக்குமான சண்டையையும் மறைபொருளாய் சொல்ல

அவளோ “இதுக்குத் தான் கொஞ்சமாச்சும் வெயிட் போடணும்னு சொல்லுறது… ஃபிட்னெஷ்னு சொல்லிட்டுத் தலை வாருற சீப்பு மாதிரி உடம்பை வச்சிருந்தா வேஷ்டி இடுப்புல நிக்கலனு இப்பிடி தான் புலம்பணும்” என்று கேலி செய்ய

“எல்லாரும் என்னை ஸ்மார்ட்டா இருக்கேனு சொல்லுறாங்க… உனக்கு மட்டும் நான் சீப்பு மாதிரி இருக்கேனா? நீ தான் பாக்க அம்பத்தஞ்சு கிலோ அரிசிமூட்டை மாதிரி இருக்க… ஏதோ காதலிச்சிட்டேனேனு பாவம் பாத்து உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சேன் தெரியுமா?” என்றான் வித்யாசாகர் அமர்த்தலாக.

அமிர்தவர்ஷினிக்கு உடனே அவனது தாயாரைச் சம்மதிக்க வைக்க அவன் எப்படியெல்லாம் போராடினான் என்பது நினைவுக்கு வரவும் சிரிப்பை அடக்க அவள் அரும்பாடு பட வேண்டியதாயிற்று.

நல்லநேரம் ஆரம்பிக்கவும் உற்றார் உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்த சடங்குகள் குறைவின்றி நடைபெற்றது. இக்கால வழக்கப்படி அமிர்தவர்ஷினியும் வித்யாசாகரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

அதன் பின்னர் இரு குடும்பத்தின் இளையவர்களும் செல்பி எடுக்கிறேன் பேர்வழியாக கலாட்டாக்களை ஆரம்பிக்கவும் பெரியவர்கள் அதைக் கண்ணாற கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.

மணமக்களின் தந்தையரான ரகுநாதனும் உன்னிகிருஷ்ணனும் சினேகமாய் பேசிக் கொள்ள அதற்கு மாறாக அவர்களின் தர்மபத்தினிகள் ஜானகியும் விஜயலெட்சுமியும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர்.

அதைக் கண்ட  போது தான் அருணாசலத்துக்குச் சுருக்கென்றது. ஒரு வேளை வாழ்நாள் முழுவதும் இந்த இருவரும் இப்படி முறைத்துக் கொண்டே இருந்தால் இளையவர்களின் வாழ்க்கை என்னாவது என்றெல்லாம் அவரது மூளை தாறுமாறாக யோசித்தது.

அதே நேரம் இவர்களின் கருத்து வேறுபாடு எதுவும் வித்யாசாகரையும் அமிர்தவர்ஷினியையும் பாதித்துவிடக் கூடாது என அந்த ஈசனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டவர் ஜானகிக்காகவும் விஜயலெட்சுமிக்காகவும் கூட வேண்டிக்கொண்டார்.

ஒரு காலத்தில் இணைபிரியாத தோழியர்களாக இருந்தவர்கள் இன்று எதிரும் புதிருமாக நிற்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பெருமூச்சு விட்டபடியே எழில் தேவதையாய் மேகவர்ஷினியுடனும் சமுத்ராவுடனும் பேசிக்கொண்டிருந்த அமிர்தாவை நோக்கியவரின் நினைவு பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஜானகியும் விஜயலெட்சுமியும் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்வது, ஜானகிக்கு அமிர்தவர்ஷினி மேல் உள்ள பிடித்தமின்மை இவை அனைத்துக்குமான  விடை அந்தக் கடந்த காலத்தில் தானே இருக்கிறது!