கோதையின் பிரேமை – 04
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பூரிப்பில், கருத்தூன்றி படிக்கவேண்டும் என்ற எண்ணம் அருள் மனதில் அழுந்தப் பதிந்தது. பதினோராம் வகுப்புகள் தொடங்கும் முன் விட்டப் படிப்பை எட்டிப் பிடிக்க விழைந்தவன், கோடை விடுமுறை நாட்களில், அடிப்படை பாடங்களை முறையாகக் கற்க பூங்கோதையின் உதவியை நாடினான்.
சாதிக்கத் துடிக்கும் அவன் ஆர்வத்தை மெச்சிய பூங்கோதையும் அவன் விருப்பத்திற்கு மனதார சம்மதம் தெரிவித்தாள்.
பூங்கோதையின் தனித்துவமான கற்பிக்கும் வழிமுறைகளை, அக்கம் பக்கத்தில் வசிக்கும் நண்பர்களிடமும் பகிர்ந்தான் அருள். அவர்களுக்கும் அதேபோல கற்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட, அதிகாலைகளில் மொட்டைமாடி, வ(வா)ண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலையாகக் காட்சி அளித்தது.
புரிதலோடுப் பழகுவதாக வாக்களித்த பிரேம்குமாரும், கடமை தவறாமல் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்து வந்தான். கூடுதலாகப் பூங்கோதைக்கு ஒத்தாசையும் செய்தான்; படிக்க வந்திருக்கும் வாண்டுகளை மேய்க்கும் பொறுப்பு ஏற்று!
பாடங்களை நேர்த்தியாகப் பயிலும் பட்சத்தில், அவர்கள் விரும்பிய ஒன்றை வகுப்பின் இறுதியில் தினமும் செய்யலாம் என்றாள் பூங்கோதை. பிரேம்குமாரின் மிடுக்கான வலிமை பயிற்சி யுக்திகளையும், அவன் பயன்படுத்திய சாதனங்களையும் கண்டு வாயைப்பிளந்த பிள்ளைகள், சலுகையாகக் கிடைத்த பத்து நிமிடத்தில் அவனுடன் பயிற்சி செய்ய விரும்பினர்.
பூங்கோதையும் ஆமோதித்தாள்.
உடற்பயிற்சி எனத் தொடங்கிய வெகுமதி படிப்படியாக வளர்ந்து, கேரம், செஸ், கில்லி, சில சமயம் கிரிக்கெட் விளையாடுவது என்று கிண்டலும் கும்மாளமுமாக மாறியது.
அன்றும் அப்படித்தான்;
ஐந்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த அர்ஜுனுக்கு வகுத்தல் சார்ந்த வினாக்களை பூங்கோதை எழுதிக்கொடுக்க, அவனுடைய நான்கு வயது தங்கை, அண்ணனுக்குப் போட்டியாகத் தனக்கும் ஏதாவது கற்றுக்கொடுக்கும் படி, நச்சரித்தாள்.
“விளையாட வேண்டிய வயசுல ஸ்லேட்டை தூக்கிட்டு வந்துட்ட!” செல்லமாக அதட்டியவள், பலகையைப் பிடுங்கிகொண்டு,
“போ டி! பிரேம் மாமாகிட்ட உடற்பயிற்சி செய்ய கத்துக்கோ!” என விரட்டிவிட்டாள்.
உம் என்ற முகத்துடன் தத்தித்தாவி நடந்துவந்த குழந்தையை அவனும் அன்புடன் தூக்கிக்கொண்டு,
“நம்ம 1,2,3 பாடிக்கிட்டே உடற்பயிற்சி செய்யலாமா!” எனக் குழந்தையின் கன்னத்தைக் குவித்துக் கொஞ்சினான்.
உடலை வளைத்துப் பயிற்சி செய்யும் இருவரையும் ரசித்துச் சிரித்தவள், பிள்ளைகளிடம் அமைதியாக எழுதும்படி நினைவூட்டி, அனைவருக்கும் அருந்த சிற்றுண்டி எடுத்துவருவதாகக் கூறி நகர்ந்தாள்.
அவள் திரும்பி வருவதற்குள், வானரக் கூட்டம், பிரேம்குமாருடன் ஐக்கியமாக,
பிள்ளைகளின் சேட்டையைக் கண்டுகொண்டவள், “யாரெல்லாம் இன்னைக்குப் பாடத்தில் சரியான விடை எழுதிறிக்கீங்களோ, அவங்களுக்குக் கூடுதலா ஒரு க்ரீம் பிஸ்கெட் கொடுப்பேன்!” என அறிவித்துக் காத்திருந்தாள்.
அதிகாலை ஐந்து மணியிலிருந்து படித்துக் களைத்துப் போனவர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது.
நான்கு நண்பர்களும் துள்ளிகுதித்து ஓடிவந்தனர். நண்பர்களின் அலப்பறைகளைக் கண்ட சுட்டிப்பெண்ணும் அவர்களுக்கு இணையாக ஓடி வந்தாள்.
எழுதிவைத்திருந்த விடைகளைக் காட்டி, பாராட்டுகளும் பிஸ்கெட்டுகளும் பெற்று ஒவ்வொருவராக நகர, அர்ஜுனுடைய விடைத்தாளைப் சரிபார்த்தவள், இடவலமாகத் தலையசைத்து, அதை அவனிடமே திருப்பித்தந்தாள். கூடுதல் பிஸ்கெட்டும் தர மறுத்தாள்.
“ஒரு பதில் தானே அக்கா தப்பா எழுதியிருக்கேன்!” முகம் சுருக்கினான் அர்ஜுன்.
“ஒரு பதில் தான் டா…ஆனால் எத்தனைமுறை அதே தவறை செய்வ!” திடமாகக் கேட்டவள்,
“எந்த ஒரு எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால், ‘முடிவிலி எண்’ கிடைக்கும்னு உனக்குத் தெரியாதா…பூஜ்ஜியம்ன்னு பதில் எழுதி வெச்சிருக்க!” பிழையைச் சுட்டிக்காட்டினாள்.
“அது என்னமோ மனசுல பதியவே மாட்டேங்குது அக்கா!” முணுமுணுத்தான் அர்ஜுன்.
“சரி! உனக்கு எளிமையா புரியுறா மாதிரி சொல்லித்தரேன்.” மென்சிரிப்புடன் அனைவரையும் அருகில் அமரும்படி அழைத்தாள் பூங்கோதை.
பிஸ்கட்டுகளை தட்டில் பரப்பி கேள்விகளைத் தொடுத்தாள்.
“இதில் மொத்தம் எத்தனை இருக்கு?”
“15” இசைத்தனர் பிள்ளைகள்.
“நீங்க எத்தனை பேர் இருக்கீங்க!”
“5” ஒரே சீராகப் பதில் வந்தது.
அனைவருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால்,ஒருவர் எத்தனை பிஸ்கெட்டுகள் பெறுவார்கள் என அவள் அர்ஜுனிடம் கேட்க,
“மூன்று” என்று சரியாகச் சொன்னான்.
அவற்றை எல்லாம் டப்பாவில் போட்டுவிட்டு, காலித் தட்டைக் காட்டினாள்.
“இப்போது சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்றால், எத்தனை பிஸ்கெட்டுகள் கொடுக்கணும் அர்ஜுன்!”
“தட்டில் கொடுக்க எதுவும் இல்லை; அதனால் எங்களுக்கும் சாப்பிட எதுவும் இல்லை! எனக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்துக் காட்டி, “பூஜ்ஜியம்” என்று உதட்டைப் பிதுக்கினான்.
“மிகச்சரி”! எனப் பாராட்டியவள் அனைவரையும் பிரேம்குமார் அருகே செல்லும்படி உரைத்தாள்.
பிள்ளைகளும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனுக்கு அன்புத்தொல்லை கொடுக்க விரைந்தோடினர்.
பிஸ்கெட்டுகளை மீண்டும் தட்டில் பரப்பியவள்,
“இப்போ தட்டில் 15 பிஸ்கெட்ஸ் இருக்கு; ஆனால் என் செல்லப்பிள்ளைகள் தான் இன்னைக்குப் பாடம் படிக்க வராமல், உடற்பயிற்சி செய்ய போயிட்டாங்க!” பெருமூச்சுவிட்டவள்,
“இதை யாருக்கு, எப்படிப் பகிர்ந்துக் கொடுக்கறது!” முகத்தில் கவலை தோய்ந்த பாவனையுடன் வினவினாள்.
“யாரும் இல்லையென்றால் பகிர்ந்தளிப்பதும் முடியாத காரியம்; அதனால் ‘முடிவிலி எண்’ வருது!” கணிதமுறையைப் புரிந்துகொண்ட கிளர்ச்சியில்,
“இனிமேல் கனவிலும் மறக்கமாட்டேன் அக்கா!” துள்ளிகுதித்து வந்து, தட்டோடு பிஸ்கெட்டுகளை விழுங்கப் பார்த்தான்.
“மூன்றுக்கு மேல சாப்பிடக்கூடாது அர்ஜுன்!” மீதியைத் தரும்படி கண்களை உருட்டினாள் பூங்கோதை.
சுருங்கிய முகத்துடன் அவன் திருப்பிக் கொடுக்க,
“தீனிப்பண்டம் அதிகமா சாப்பிடக்கூடாது டா. சமையலறையில் வாழைப்பழம் இருக்கு; போய் எடுத்துக்கோ!” என மென்மையாகத் தட்டிக்கொடுத்தாள்.
“ஐந்து பேர்! ஐந்து வாழைப்பழம்! ஆளுக்கொன்று!” கணக்கிட்ட படி உள்ளே ஓடினான்.
சாப்பிட்டு முடித்ததும் அவர்களை வீட்டிற்கு புறப்படும்படி கூறி நகர்ந்தாள்.
“பூங்கோதை!” உரக்க அழைத்து, “உங்களால மட்டும் எப்படீங்க எந்தவொரு பாடத்தையும் எளிய முறையில் சொல்லித்தர முடியுது?” வியர்த்த முகத்தைத் துண்டு ஒன்றால் துடைத்துகொண்டபடி அவளருகே வந்தான் பிரேம்குமார்.
உதடு பிரிக்காத புன்னகையோடு எதிரில் நின்றவள், “நினைவாற்றல் யுக்திகளில் இது ஒரு வகை; இணைப்பு நினைவூட்டல்கள்னு சொல்லுவாங்க! நமக்குத் தெரியாத ஒன்றை, தெரிந்த விஷயத்தோடு ஒப்பிட்டு நினைவில் வைத்துக்கொள்வது!” தன்மையாகப் பதிலளித்தாள்.
”ஏதேதோ வியப்பூட்டும் தகவல்கள் சொல்றீங்க! இப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தா, எனக்கும் படிப்பில் ஆர்வம் வந்திருக்குமோ என்னமோ!” ஏக்கம் அவன் குரலில் வழிந்தோடியது.
பிரேம்குமார் முட்டிமோதி பட்டம் வாங்கியதைப் பற்றி பலமுறை துளசி சொல்ல கேட்டிருந்தாள் பூங்கோதை. அதனால் அவன் மனநிலையை அவளால் உணர முடிந்தது.
“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு பிரேம். எனக்கும் தான் உங்களைப் பார்த்தால் பொறாமையா இருக்குத் தெரியுமா!” என்று உதட்டைச் சுழித்தாள்.
“என்னைப் பார்த்தாலா!” கண்கள் அகல வினவினான்.
அவன் உடல்தசைகளை நாணலென வளைத்துச் செய்யும் யோகப் பயிற்சிகளைப் பற்றி மெச்சுதலாகப் பேசியவள், “எனக்கெல்லாம் பத்து நிமிடம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே மேல்மூச்சு கீழ்மூச்சுன்னு சரமாறியா வாங்கும்!” எனச் சலித்துக்கொண்டாள்.
“மனோதத்துவவியல் படித்தவர்களுக்கு வசியமாக பேசக் கற்றுக்கொடுக்கணுமா என்ன!” அவன் வம்பிழுக்க, அவள் முகம் நொடியில் வாடியது.
“எனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசித்தான் பழக்கம்.” தலைகுனிந்து முணுமுணுத்தவள்,
“சரி! அலுவலகம் கிளம்ப நேரமாகுது! வண்டியை சர்வீஸ் வேற விடணும்!” எனச் சிணுங்க,
அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“ரெண்டுபேரும் பேருந்தில் போயிட்டு வாங்க! நானே உங்களுடைய வண்டியை சர்வீஸ் செய்து எடுத்துட்டுவரேன்!” நமுட்டுச் சிரிப்புடன் உரைத்தான்.
“உங்களுக்கு எதுக்கு வீண்வேலை…!” பூங்கோதை மறுக்கவும்,
அவர்களிடம் நற்செய்தி பகிரும் குஷியில் புள்ளிமான் என துளசி, தாவி வரவும் சரியாக இருந்தது.
வந்தவளின் முகத்தில் பூத்திருந்த காதல் பூக்களைக் கவனிக்காமல், வண்டியை சேவை மையத்தில் யார் விடுவது என்று இருவரும் மாற்றி மாற்றி வாதாட,
“ஷூ!” உதட்டின் மேல் விரல் வைத்துக் காட்டி இருவரையும் அதட்டிய துளசி,
“யார் வேணும்னாலும் வண்டியை சர்வீஸுக்கு கொண்டு போய்விடுங்க! நான் அடுத்த ஒரு வாரத்திற்குக் காப்பகம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டேன்!” என அசடுவழிந்தாள்.
ஏன் என்று இருவரும் அவளைக் கேள்வியாகப் பார்த்து நிற்க,
“துபாயிலிருந்து கதிர் வந்திருக்கார் அண்ணா!” சொல்லும்போதே பேதையின் கன்னங்கள் நாணத்தில் சிவந்தது; இமைகள் குடைசாய்ந்தது.
கொஞ்சுகிறேன் என்ற பெயரில் தோழியின் கன்னங்களை அழுத்தமாகக் கிள்ளி இன்னும் சிவப்பாக்கினாள் பூங்கோதை.
“என்ன திடீர்னு!” பிரேம்குமார் அக்கறையாக வினவ,
“இரண்டு வாரம் விடுமுறையாம்…இன்பதிர்ச்சி கொடுக்கலாம்னு யார்கிட்டையும் சொல்லாமல் வந்திருக்காரு!” என்றவள், கதிரேசன் அடுத்த ஒரு வாரத்திற்கு பெங்களூரில் இருந்தபடி, தன்னை தினமும் சந்திக்கவிருப்பதாக விவரங்களைப் பகிர்ந்தாள்.
“சரி பிரேம்! என்னைக் காப்பகத்தில் இறக்கி விட்டுட்டு, நீங்களே வண்டியை சர்வீஸ் செய்துட்டு வாங்க!” அலட்டலே இல்லாமல் உரைத்தாள் பூங்கோதை.
அவள் தன்னுடன் ஒன்றாக வருவதை விரும்பாதவன், மறுப்பு சொல்ல காரணம் தேட, அவளே மேலும் பேசினாள்.
“அட என்ன யோசிக்கறீங்க பிரேம்! காதல் ஜோடிகள் இந்த ஒரு வாரம் உங்க பைக்கில் உல்லாசமா ஊர் சுற்றட்டுமே! அதுவரைக்கும், நீங்க என்னுடைய வண்டி உபயோகிச்சுக்கோங்க! ஆனால் என்னைத் தினமும் பிக் அப் டிராப் மட்டும் பண்ணிடணும்! சரியா!” முடிவே செய்துவிட்டாள் பூங்கோதை.
அண்ணனின் மனநிலை அறிந்த துளசி மௌனம் காக்க, தங்கையின் வாடிய முகத்தைக் கண்டவனுக்கு வேறொன்று உறுத்தலாக இருந்தது.
திருமணமாகி இல்வாழ்க்கை தொடங்க வேண்டியவர்களுக்குத் தன்னால்தான் இப்படியொரு சூழ்நிலை என நினைக்கும் போதே மனம் கனத்துப்போனது பிரேம்குமாருக்கு.
தங்கையின் விருப்பத்திற்கு இணங்கி, வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணும் போதெல்லாம் மனக்கண்ணில் தோன்றி இம்சித்தாள் பூங்கோதை; அதையும் மீறி, பூங்கோதை நல்லுறவாடும் தோழி மட்டுமே என்று மனதை திடப்படுத்திக் கொண்டால், நெருங்கி வந்து சோதித்தாள்…இதோ இன்று போல.
பல நாட்களுக்குப் பின் ஊருக்கு வரும் கதிரேசனை சந்திப்பதற்காக, அரைநாள் விடுப்பு எடுத்திருந்தான் பிரேம்குமார்.
தனிமையில் கிடைக்கும் ஓரிரு நிமிடத்தை வீணாக்காமல், தன்னவளுக்கு விழி வழியே காதல் தூது பறக்கவிட்டபடி, பிரேம்குமாருடன் மதியஉணவு அருந்திக்கொண்டிருந்தான் கதிரேசன்.
“இன்னும் எத்தனை நாட்களுக்கு கதிர் துபாயில் வேலை செய்யறா மாதிரி இருக்கும்?”
“இரண்டு வருடம் பணி ஒப்பந்தம் முடிஞ்சிருத்து குமரா! மேற்கொண்டு அங்கேயே வேலை செய்தாலும், ஒரு மாதம் நோடிஸ் தந்தால் போதுமாம். அதான் திருமணம் தேதி நிச்சயம் செய்யும்வரை துபாயிலே இருக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்!” தன் திட்டங்களை விவரித்தான் கதிரேசன்.
அதைக் கேட்டவனுக்கு இன்னும் அதிக நெருடலாக இருந்தது.
“அடம்பிடிக்காமல் சம்மதம் சொல்லு துளசி! சரோஜா பிரசவத்திற்கு முன்னாடி ஒரு நல்ல நாளா பார்க்கலாம்!” கெஞ்சினான் பிரேம்குமார்.
எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல பேசும் அண்ணன் மேல் கோபம் தலைக்கேறிய துளசி, முகத்தைத் திருப்பிக்கொண்டு ஹாலுக்கு நகர்ந்தாள்.
கதிரேசன் முன் வாக்குவாதம் வளர்க்க விரும்பாதவன், பொதுவான விஷயங்களைப் பேசி நேரத்தைக் கடத்தினான்.
துளசியுடன் வெளியே சென்றுவர விரும்புவதாகக் கதிரேசன் பேச்செடுக்க, தன்னுடைய பைக் சாவியை கொடுத்தான் பிரேம்குமார்.
“இருக்கட்டும் குமரா! உனக்குத் தேவைப்படும்!” கதிரேசன் தன்மையாக மறுக்க,
தன்னிடம் வேறொரு இருசக்கர வாகனம் இருப்பதாகக் பதிலளித்தவன், பூங்கோதையின் பெயரை எடுக்க வேண்டியதாயிற்று.
கதிரேசனுக்கும் ஓரளவிற்கு விவரங்கள் தெரிந்திருந்தது தான். அனாவசியமாகப் பிரேம்குமாரின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடக்கூடாது என்று கண்டும் காணாமல் இருந்தான்.
அதுவரை அமைதியாக இருந்த துளசி, பொங்கி எழுந்தாள்.
“பூங்கோதை உதவி கேட்டதும், வண்டி வாங்கிக் கொடுக்கப் போவாறாம்; அந்த வண்டியை சர்வீஸ் செய்யறது, அவங்கள பிக் அப் டிராப் செய்யறது, போதாக்குறைக்கு தினமும் மொட்டைமாடியில் பேசிக்கறதுன்னு எல்லாம் செய்வாறாம்; ஆனால் அவங்கள கல்யாணம் மட்டும் செய்துக்க மாட்டாறாம்!” கதிரேசனிடம் போட்டுக்கொடுத்தாள் துளசி.
வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்று எரிச்சல் மண்டியது அவனுக்கு. கதிரேசன் இருப்பதை உணர்ந்தவன், பொங்கிய சினத்தைக் கட்டுப்படுத்தி ஆழ்ந்து சுவாசித்தான்.
“கொஞ்சம் வெளிப்படையாகப் பேசலாமா துளசி!” தொடங்கியவனுக்கு, ‘வெளிப்படையாக’ என்று சொல்லும்போதே காலையில் பூங்கோதை முணுமுணுத்தது தான் அகக்கண்ணில் தோன்றியது.
தொண்டையை செருமிக்கொண்டவன், “பேசலாமா துளசி!” மீண்டும் கேட்டான்.
“ம்ம்…பேசலாம்!” முகம் சுருக்கினாள் அவள்.
தங்கையின் கரத்தை தனக்குள் அடக்கியவன், “ஒரு அண்ணன்னா உனக்கு வரன் பார்க்கும்போது, மாப்பிள்ளை துளசிக்கு இணையாகப் படித்திருக்காரா; நல்ல வேலையில் இருக்காரான்னு தானே பார்த்தேன்…அதே எதிர்பார்ப்பு பூங்கோதையின் பெற்றோருக்கும் இருக்குமா இல்லையா? அவர்கள் தரப்பிலிருந்து சிந்திக்கச் சொன்னான்.
அண்ணன் மட்டுமே நிறைந்திருந்த அவள் உள்ளம் எந்தக் காரணத்தையும் ஏற்கவில்லை.
“உன் குணத்திற்கு ஈடாகுமா அண்ணா அவர்கள் எதிர்பார்க்கும் அந்தப் படிப்பும், பதவியும்!” விடாமல் வாதாடினாள்.
மென்சிரிப்புடன் அவள் கேசத்தை வருடியவன்,
“பாசம் உன் கண்ணை மறைக்கிறது துளசி! நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லலியே; என் தகுதிக்கு ஏற்ற பெண்ணைப் பார்க்கலாம்னு தானே சொல்றேன்!” தெளிவுபடுத்தியவன், அவள் மனதை மாற்றிக்கொள்ளும் படி மன்றாடினான்.
மேஜையிலிருந்த பைக் சாவியை கதிரேசனிடம் நீட்டியவள்,
“வாங்க கதிர் கிளம்பலாம்!” என்றவளின் தோரணையிலேயே அவளுடைய பதிலும் அடங்கியிருந்தது.
அரைமணி நேரம் பைக் பயணத்தில் வீசிய இதமான தென்றல் காற்றிலும் அவள் கோபம் தணியவில்லை. சாலை நெரிசலில் வண்டியைச் செலுத்தியவனாலும், அவளிடம் மனம்விட்டு பேச முடியவில்லை.
கப்பன் பூங்காவை வந்தடைந்ததும், ஜீவனற்று நடக்கும் காதலியின் கைகோர்த்து நடந்த கதிரேசன்,
“துளசி! நான் ஒண்ணு சொன்னா, கோபப்பட மாட்டியே?” மென்மையாகப் பேச்சுக்கொடுத்தான்.
“ம்ம்…சொல்லுங்க!” என்றவளின் குரலில் சுரத்தே இல்லை.
“நீ குமரன்கிட்ட தேவையில்லாமல் பூங்கோதை பேச்சை எடுக்காமல் இருந்தாலே காரியம் தன்னால கைக்கூடும்!” மனம்திறந்து பேசினான்.
அவன் நோக்கம் புரியாமல் பேதை கேள்வியாகப் பார்க்க, அவள் விரல்களை அழுந்தப் பிடித்தவன்,
“இப்போதைக்கு ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா பழகிக்குறாங்க; கொஞ்சம் விட்டுப்பிடித்தால், அவங்களுக்குள்ள காதல் மலரரும்னு என் உள்மனசு சொல்லுது!அதுவரை பொறுமையா இருக்கலாம். நம்ம கல்யாணம் உன் விருப்பப்படி தான் நடக்கும், சரியா!” என்றான்.
அதைக்கேட்ட பேதையின் கண்கள் குளமாகின. தன்னவனின் புரிதலில் நெக்குருகிப் போனாள்.
“நம்ம திருமணம் காலவரம்பின்றி தள்ளிப்போயிட்டே இருக்குன்னு உங்களுக்குத் துளிக்கூட வருத்தமில்லையா கதிர்!” குற்றவுணர்ச்சி அவளை ஆட்கொண்டது.
அவள் தோளினை சுற்றி அரவணைத்தவன், “வருத்தம் தான்! நெஞ்சம் நிறைந்தவளைப் பிரிந்திருக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தம் தான்!” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டுக் கூற,
இதயமே வெடித்துவிடும் போல இருந்தது அவளுக்கு. தலைதாழ்த்தி அவள் விசும்பி அழ,
“…இருந்தாலும் என்னவள் கொடி பிடிக்கும் காரணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவள் விருப்பம் நிறைவேறுவதற்கு எத்தனை நாட்கள் வேணும்னாலும் காத்திருப்பேன்! என்றவன், அவளை இன்னும் இறுக அணைத்துக் கண்சிமிட்டினான்.
விழிகளால் நன்றிகூறி, பேதையும் அவன் தோள் சாய்ந்தாள்.
இதற்கிடையில், தன் மென்மையான சுபாவத்தால் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்த பூங்கோதைக்குக் காப்பகத்தில் பொறுப்புக்களும் கூடியது. அவள் தார்மீக ஆதரவுக்காகக் குழந்தைகள் தவம் கிடந்தனர்.
ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த செம்பருத்தி, போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் பருவமடைந்தாள். அதனால் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளானாள். இரவும் பகலும் செம்பருத்தி பக்கத்திலேயே பக்கபலமாக இருந்து அவள் மனதில் தைரியத்தை விதைத்தாள் பூங்கோதை.
மூன்று நாட்களுக்குப் பின் வீடு திரும்பியவள், துளசியிடம் வீட்டுச்சாவியைக் கேட்க,
“ஆனாலும் நீ, உன் சக்திக்கு மீறின விஷயங்களைத் தலையில் சுமக்குற பூங்கோதை!” அவள் காப்பகத்தில் தங்கியது தனக்குப் பிடிக்கவில்லை என்று குறைபட்டாள் துளசி.
“என்னப் பேச்சு டி பேசுற! செம்பருத்திக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்க யார் இருக்காங்க! பருவமடையும் பெண் குழந்தைக்கு ஒரு தாயின் அரவணைப்பு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாதா!” பதிலுக்கு எகிறினாள் பூங்கோதை.
தோழிகளின் வாக்குவாதத்தில், மல்லிகாவின் புத்திக்கு ஒன்று எட்டியது.
“அந்தக் குழந்தைக்கு சடங்கு செய்யலாமே பூங்கோதை!பிறந்தநாள், திருவிழா போல இதுவும் கொண்டாட வேண்டிய விஷயம்னு குழந்தை மனசுல பதிஞ்சா பயம் தன்னாலே போயிடுமே!” என்றாள்.
அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று பூங்கோதை வாய் திறக்கும் முன், அம்மாவின் மூடநம்பிக்கையில் எரிச்சலடைந்த பிரேம்குமார்,
“பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத இந்தக் காலத்துல, சடங்கு சம்பிரதாயம்ன்ற பேருல குழந்தை வயசுக்கு வந்துட்டான்னு ஊர்கூட்டி டம்மாரம் அடிப்பீங்களா!” எனச் சிடுசிடுத்தான்.
“அதேதான் பிரேம் நானும் சொல்லவந்தேன்!” பெருமூச்சுவிட்டாள் பூங்கோதை.
‘இந்த மனப்பொருத்தத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை!’ மனதிற்குள் அசைப்போட்ட துளசி, இருவரையும் பார்வையால் விழுங்கினாள்.
அச்சமயம் பூங்கோதையின் அன்னை அலைபேசியில் அழைத்து, திருமணத்திற்கு வரன் பார்த்திருப்பதாகக் கூறி விவரங்களைப் பகிர்ந்தாள்.
“ரெண்டு வருஷம் அவகாசம் கேட்டேனே மா!” கெஞ்சலாக நினைவூட்டியும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அழைப்பைத் துண்டித்தவளின் முகம் இன்னும் அதிகமாக வாடிப்போக, மல்லிகா அவளிடம் அக்கறையுடன் விசாரித்தாள்.
“எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம் ஆன்ட்டி!” சலித்துக்கொண்டவள்,
அவர் பம்பாயிலேயே மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகவும், திருச்சியில் வசிக்கும் அவர் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேச தன் பெற்றோர் அடுத்தவாரம் வர இருப்பதாகவும் அறிவித்தாள்.
அதைக்கேட்ட மூவரின் சிந்தனையிலும் பல கேள்விகள் ஓடியது.
“ஆனால் உன் விருப்பம் கேட்காமல் அவங்க எப்படி முடிவெடுப்பாங்க பூங்கோதை!” படபடவென்று வினவினாள் துளசி.
“என்னைப்பற்றி எல்லாம் தெரிஞ்சுகிட்டு தான் சம்மதம் சொல்லிருக்காராம். அதையும் மீறி எனக்கு ஏதாவதுக் கேட்கணும்னு இருந்தால், அவர்கிட்ட காணொளி அழைப்பில் பேசிக்க சொல்லிட்டாங்க!”
துளசி அடுத்தக் கேள்வி கேட்பதற்கு வாய்திறக்கும் முன், வேண்டாமென்று கண்ஜாடை காட்டி அவள் கரம் பிடித்து தடுத்தாள் மல்லிகா.
பூங்கோதைக்குத் திருமணமாகிவிட்டால், அலைபாயும் தன் மனதிலும் தெளிவு பிறக்கும் என்று நினைத்தவன், நடப்பது யாவும் நன்மைக்கே என்று கருதினான்.
மதியஉணவு வேளையில் சுகந்தியை சந்தித்தப் பூங்கோதை, தனக்குத் திருமணம் செய்துவைக்க கங்கணம் கட்டியிருக்கும் அம்மாவின் மனநிலையை சுகந்தியிடம் எடுத்துரைத்து, தான் எந்நேரமும் ஊருக்குப் புறபட வேண்டியிருக்கும் என்றும் முன்தகவல் சொன்னாள்.
அச்சமயம் அங்கு வந்த செம்பருத்தி, பூங்கோதையின் முடிவில் அதிருப்தி கொண்டாள்.
“டீச்சர்! எனக்கு உடம்பு சரியில்லாத போதெல்லாம், காப்பகத்தில் என்கூடவே இருக்கேன்னு சொல்லிட்டு, இப்போ எங்கேயோ போகப்போறேன்னு சொல்றீங்களே!” பரிதாபமாகக் கேட்டாள்.
குழந்தைக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று பூங்கோதை தடுமாற, செம்பருத்தியே மேலும் பேசினாள்.
“ப்ளீஸ் டீச்சர்! என்னைவிட்டு எங்கேயும் போகாதீங்க; இல்லேன்னா என்னையும் உங்களோடவே கூட்டிட்டுப் போயிடுங்க! இந்த மாதவிடாய் பிரச்சனை வேற இனி அடிக்கடி வரும்னு சொன்னீங்களே! அடுத்தமுறை வரும்போது நீங்க பக்கத்துல இல்லேன்னா நான் என்ன செய்வேன்!” அவளை இறுக அணைத்து அப்பாவியாகக் கெஞ்ச,
அதைக்கேட்டவள் கண்கள் கலங்கிவிட்டது.
காப்பகத்திலேயே நிரந்தரமாக சேவை செய்ய சந்தர்ப்பம் அமையாதா என்று மனம் ஏங்கியபோதும், ஒரு வருடத்திற்காவது திருமணத்தை ஒத்திப்போடும் படி கேட்கலாம் எனத் தீர்மானித்தாள் கோதை.