கோதையின் பிரேமை – 03

பூங்கோதை தன் மகளுடன் பணிபுரியும் தோழி என்று மல்லிகா அறிமுகம் செய்த மறுநொடியே வீட்டை வாடகைக்கு விட, முழுமனதுடன் சம்மதித்தார் உரிமையாளர்.

இரண்டு தளங்கள் கொண்ட தனி வீடு அது. கீழ் தளத்தில், ஆயிரம் சதுரடியில் இரண்டு படுக்கை அறைகளுடன் வீடு, இருசக்கர வாகனதிற்கான தரிப்பிடம், சிறியதொரு பூந்தோட்டம் என வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்குதான் மல்லிகா இருபிள்ளைகளுடன் வசித்துவந்தாள்.

மேல்தளத்தில் பெரும்பாலான இடம் திறந்தவெளி மொட்டை மாடியாகவும் வலதுபுறத்தில், நானூறு சதுரடியில் ஒரு அறை மட்டுமே கொண்ட இடம், பரப்பளவில் சின்னதாக இருந்ததாலும், அவ்விடத்தை வாடகைக்கு விடுவது, உரிமையாளருக்கு ஒரு சவாலாகவே இருந்தது.

விளையாட்டுப் போல ஒரு வருடமாகப் பூட்டியிருந்த வீட்டில், குடியேறும் தன் விருப்பத்தைப் பூங்கோதை சொன்னதும், வீட்டின் உரிமையாளருக்கும் பெரும் மகிழ்ச்சியே! துளசியும், மல்லிகாவும் கூட மகிழ்ந்தனர்.

ஆனால் பிரேம்குமாருக்கு தான் அதில் துளியும் உடன்பாடு இல்லை;

சூரிய நமஸ்காரம், உடற்பயிற்சி, வானத்து நட்சத்திரங்களை ரசித்தபடி இரவு தூக்கம் என மொட்டைமாடியே கதி என்று இருந்தவன், தன் இடத்தை பூங்கோதை அபகரிக்க வந்துவிட்டதாக மனதில் பொருமினான்.

அவள் கொண்டுவந்த இரண்டு பெட்டிகளை, மல்யுத்த வீரனை போல, கம்பீரமாக சுமந்து வந்து, மொட்டைமாடியில் இறக்கி வைத்தவன், தன்னுடைய கயிற்றுக் கட்டிலை அங்கிருந்து எடுக்க,

“அது அங்கேயே இருக்கட்டுமே பிரேம்!” குறுக்கிட்டாள் பூங்கோதை.

“இல்லீங்க! உங்களுக்கு எதுக்கு இடைஞ்சலாக?” பொத்தாம் பொதுவாக பதிலளித்து நகர்ந்தான்.

அவன் விருப்பம் என்பதுபோல தோள்களைக் குலுக்கியவள், நன்றிகூறி பெட்டிகளை உள்ளே எடுத்துச் சென்றாள்.

அச்சமயம் பூஜைக்குத் தேவையான பொருட்களுடன் மாடி ஏறிய துளசி, கட்டிலும் கையுமாக அண்ணனைக் கண்டதும் பக்கென்று சிரித்துவிட்டாள்.

“குமர குருவின் தவத்தைக் கலைக்க, கோதை வந்துவிட்டாள் போலும்!” சங்கத்தமிழில் கிசுகிசுத்து, அவனை உசுப்பேற்றினாள்.

“ச்சீ போடி!” சிடுசிடுத்தவன், உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு வேக எட்டுகளில் கிழே இறங்கினான்.

பெண்கள் இருவரும் பூஜை முடித்துவிட்டு வருவதற்குள் அலுவலகம் கிளம்பிவிட வேண்டுமென்று தீர்மானித்தான் பிரேம்குமார்.

அவன் ஒன்று நினைக்க, தன் அதிகாரி வேறொன்று நினைத்தார். அலைபேசியில் தொடர்பு கொண்டவர், மணிக்கணக்காகப் பேச, பெண்மானிடம் சிக்க வேண்டியதாக ஆயிற்று பிரேம்குமாருக்கு.

கேசரி, வடை என துளசி கையில் இடமில்லாத அளவிற்குப் பதார்த்தங்களுடன் வர, சக்கரையும் ஏலக்காய் தூளும் சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலை ஒரு சொம்பில் கொண்டுவந்தாள் பூங்கோதை.

“ஆன்டி! நாலு டம்ளர் தாங்களேன்!” மல்லிகாவிடம் கேட்டவளின் புத்திக்குத் திடீரென்று ஒன்று எட்டியது.

“அடடா!அடுப்பை அணைக்க மறந்துட்டேன் துளசி!” எனப் பதறியவள், இமைக்கும் நொடியில் பால் சொம்பை பிரேம்குமாரின் கையில் திணித்துவிட்டுச் சிட்டாகப் பறந்தாள்.

கொதிக்கும் பாலின் சூட்டில் அவன் உள்ளங்கையும் விரல்களும் நர்தனமாடியது. நட்டநடு வரவேற்பறையில் சொம்புடன்  நின்று திண்டாடும் அண்ணனைக் கண்ட துளசிக்கோ ஒரே குதூகலம்.

அவனருகே ஓடி வந்தவள், “பால் சொம்பு கொடுக்கும் அளவிற்கு, உங்க காதல் கதை ராக்கெட் வேகத்திற்குப் பறக்குதே பிரதர்!” என வம்பிழுத்துக் கண்சிமிட்டினாள்.

கோபம் தலைக்கேறியவன், அச்சொம்பினை அவள் கையில் திணித்து, வாசலை நோக்கி வேகநடை இட்டான்.

“அடேய் குமரா! சாப்பிடாம போறியே டா!” பாசத்தில் பின்னால் ஓடிய அம்மாவின் குரலுக்கும் நிற்கவில்லை அவன்.

அவன் வண்டியியை உயிர்ப்பித்த விதத்திலேயே கோபத்தின் உச்சியில் இருக்கிறான் என்று புரிந்துகொண்டாள் மல்லிகா.

மகளை கண்டிப்பதற்கு மல்லிகா வாய்திறக்கும் முன், அங்கு வந்துவிட்டாள் பூங்கோதை.

“பிரேம், எதுவுமே சாப்பிடாம கிளம்பிட்டாரா ஆன்டி!” தன்மையாகக் கேட்டவளின் கண்கள் முன்வாசலை அலசியது.

“அவனுக்கு அலுவலகத்திலிருந்து ஏதோ முக்கியமான அழைப்பு வந்துது! அதான் கிளம்பிட்டான்!சாயங்காலம் சாப்பிடுவான் மா!” புன்முறுவலுடன் சமாளித்தாள் மல்லிகா.

மாலை வீடு திரும்பியவனின் கோபம் துளிக்கூட குறையவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு தவிர்க்கும் அண்ணனின் செயலில், துளசிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“அவன்தான் பூங்கோதை பேச்சை எடுக்காதன்னு தீர்மானமா சொல்றானே; அதையும் மீறி நீ இப்படி விளையாடலாமா துளசி!” சிந்திக்கச் சொன்னாள் மல்லிகா.

“மன்னிச்சிரு அண்ணா! இனிமேல் இப்படியெல்லாம் விளையாடமாட்டேன்!” கண்ணிர் மல்க, அவன் கன்னங்களை வருடினாள்.

“உன் மன்னிப்பைத் தூக்கிக் குப்பையில் போடு!” மன்னிப்பு கேட்பதும், பின் அதே தவறை மறுபடி செய்வதுமென அவள் போக்கில் சலிப்புத் தட்டியது அவனுக்கு.

“இந்த ஒருமுறை எனக்காக மன்னிச்சிரு டா குமரா!” மென்மையாகக் கேட்டுக்கொண்ட மல்லிகா, மகளுக்கு மேலும் அறிவுறுத்தினாள்.

“ஒண்ணு புரிஞ்சுக்கோ துளசி! நம்ம மேல இருக்கும் நம்பிக்கையில் தான் பூங்கோதை துணிந்து இந்த வீட்டிற்கு வந்திருக்கா; அவள் நம்பிக்கையை உடைக்குறா மாதிரி, நீ உள்நோக்கத்தோட பழகுறது நியாயாமா; அது நட்புக்கு அழகான்னு சொல்லு?” கேள்விகளை அடுக்கினாள்.

“ம்ஹூம்!” இடவலமாக தலையசைத்தவள் இன்னும் அதிகமாக அழுதாள்.

தேம்பி அழும் தங்கையின் முகம் பார்த்தவனின் கோபமும் நொடியில் கரைந்தது.

அவள் உள்ளங்கையை வருடியவன், “ரொம்ப சுட்டுதா!” காலையில் கோபத்துடன், சொம்பை தங்கை கையில் திணித்ததை நினைவுகூர்ந்து வினவினான்.

“இல்ல அண்ணா” விசும்பல்களுடன் பதிலளித்தவள், “உனக்கு ரொம்ப சுட்டுதா!” கம்மிய குரலில் கேட்டு அவன் கரங்களை சோதித்தாள்.

“ம்ஹூம்…இல்லை!” சிரிப்பும், கண்ணீரும் தேங்கிய பார்வையோடு தங்கையை அரவணைத்தான்.

சமாதானமான பிள்ளைகளைக் கண்ட தாயின் மனமும் குளிர்ந்தது.

அன்றிலிருந்து கனவில்கூட அண்ணன் மனம் நோகும்படி நடக்கவில்லை அவள். காப்பகத்திற்கு இருவரும் ஒன்றாகப் பேருந்தில் சென்றுவரலாம் என்று பூங்கோதை யோசனை சொன்னபோது கூட, அண்ணன் விருப்பமே தன் விருப்பம் என்று கூறிவிட்டாள்.

தங்கை, பூங்கோதையுடன் நட்போடு பழக அவனும் தடைவிதிக்கவில்லை. அவர்கள் விருப்பத்திற்குச் செவிசாய்த்தான்.

மாலை நேரங்களிலும், விடுப்பு நாட்களிலும், பூங்கோதையை தவிர்ப்பதற்குப் பல வழிகளை பிரேம்குமார் தேட, அவளோ, அவனை லட்சியம் கூடச் செய்யவில்லை. அன்றாட வீட்டு வேலைகளை செய்து முடிக்கவும், பெற்றோருடன் காணொளியில் பேசவுமே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நாள் நெருங்கிய நிலையில், ஆசிரியர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்தாள் சுகந்தி.

மூன்று மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதுவதற்குத் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட ஆசிரியர்கள், அப்பிள்ளைகளின் கவனக் குறைவையும், அலட்சியமான போக்கையும் பற்றி ஓயாமல் குறைகூறினார்கள்.

அந்த மாணவர்கள், இயல்பிலேயே  மென்மையான குணம் படைத்தவர்கள் என்றும், அவர்களைப் பரிட்சைக்கு அனுப்பவில்லை என்றால் மனமுடைந்துவிடுவார்கள் என்றும் அறிந்த பூங்கோதை மறுத்துப் பேசினாள்.

“அறிவியலில் ஆனா ஆவன்னா கூடத் தெரியாத பிள்ளைகளைப் பொதுத்தேர்வு எழுத அனுமதித்தால், நம்ம நிறுவனத்தின் பெயர் கெட்டுப் போகாதா?” கொந்தளித்தாள் அறிவியல் ஆசிரியர்.

“சரியா சொன்னீங்க மேடம்! எட்டாம் வாய்பாடு கூட மனப்பாடமாகச் சொல்லத் தெரியாத தினேஷை எப்படிப் பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பது?” ஒத்தூதினாள் கணக்கு ஆசிரியர்.

இருவரின் அர்த்தமற்ற பேச்சில், பூங்கோதைக்குக் கோபம் தலைக்கேறியது.

“இது சேவை மனப்பான்மையோடு நடத்திவரும் காப்பகம்; லாப நஷ்டம் பார்க்கும் நிறுவனம் இல்லை!” வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தியவள்,

“அப்படியே சமுதாயம் இந்தக் காப்பகத்தின் தரத்தை மதிப்பிடணும்னா, அது இங்கு வளரும் குழந்தைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கா இல்லையான்னு பார்த்து மதிப்பிடணுமே தவிர, அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடைப்போடக்கூடாது!” என்றாள்.

“மாணவர்கள் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் தானே அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும்?” உதட்டைச் சுழித்தாள் அறிவியல் ஆசிரியர்.

“படிப்பு, பரிட்சை, மதிப்பெண்கள்! இதைத் தாண்டியும் கொஞ்சம் யோசிங்க மேடம்!” முகம் சுருக்கினாள் பூங்கோதை.

“படிக்காத மேதை என்று இவர்களுக்குக் காமராஜர் விருது கொடுக்கலாமா?” ஏளனமாகக் கேட்டு அப்பெண்மணி சிரிக்க,

“அதில் என்ன தவறு!” விடாமல் வாதம் செய்தாள் பூங்கோதை.

பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் விதண்டாவாதம் செய்யும் அவர்களின் போக்கில் பொறுமையிழந்த சுகந்தி,

“என் காப்பகத்தில் வளரும் குழந்தைகள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கணும்னு நான் எதிர்பார்க்கல பூங்கோதை! அதே சமயத்தில், தேர்வுக்குத் தயாராக இல்லாத குழந்தைகளைப் பரிட்சைக்கு அனுப்பவும் எனக்கு விருப்பமில்லை!” என்றவள், ஆசிரியர்களின் ஆலோசனையை ஆமோதித்தாள்.

“அவங்களுக்குப் பரிட்சை என்று வரும்போது இயல்புக்கு மீறின பதற்றம் அதிகரிக்கிறது மேடம். அந்த நிலையில் படித்தது அனைத்தும் மறந்தும் போகிறது!” என்று விவரித்தவள், கணக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் பக்கம் திரும்பி,

“தினேஷ் எட்டாம் வாய்பாடுக்கூட மனப்பாடம் செய்ய முடியலன்னு சொன்னீங்களே! கணக்குப் பாடம் ‘ஏன், எதற்கு’ என்று புரிந்துப் படிக்கவேண்டிய ஒன்றா இல்லை மனப்பாடம் செய்யவேண்டிய ஒன்றான்னு சொல்லுங்க மேடம்!” என்றாள்.

கணக்கு ஆசிரியர் தலைகுனிந்த போதும் அறிவியல் ஆசிரியர் விடுவதாக இல்லை.

“விதிமுறைகளை மனப்பாடம் செய்துதான் காலம்காலமாக கற்றுக்கொண்டு வருகிறோம். மற்ற பிள்ளைகளுக்குப் புரியும்போது, அவனுக்கு மட்டும் புரியவில்லை என்றால், குறை அவனிடம்தான்!” என்றவள்,

“மூணு வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட்டு, சகலவசதிகளுடன் சொகுசா வாழுறதுனாலதான் இந்தப் பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களும், கல்வியின் அருமையும் தெரியல!” என முணுமுணுக்கவும் செய்தாள்.

“மேடம்!வார்த்தையை அளந்து பேசுங்க!” கண்களை உருட்டிய பூங்கோதை,

பெற்றவர்களை இழந்து நிர்க்கதியாக இருக்கும் அக்குழந்தைகளின் அவலநிலையை நினைவூட்டி, அன்பும் கரிசனமும் மட்டுமே எதிர்பார்க்கும் அவர்களுக்கு அம்மாவாக, அப்பாவாக, ஆசானாக இருப்பது காப்பகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரின் தலையாய கடமை என்றும் ஆணித்தரமாக வலியுறுத்தினாள்.

தங்களால் இயன்றது அனைத்தும் செய்துவிட்டோம் என்று கைவிரித்த ஆசிரியர்கள், அவர்களைத் தேர்வுக்கு அனுப்புவதும் அனுப்பாமல் இருப்பதும் சுகந்தியின் விருப்பம் என்றனர்.

இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்ட சுகந்தி, சிந்தனையில் சஞ்சரித்திருக்க, அவள் கரங்களை வருடிய பூங்கோதை,

“மேடம்! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க! அந்த மூன்று பிள்ளைகளும் பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு நான் அவர்களைத் தயார் செய்கிறேன்.” என்றாள்.

குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட சுகந்தி, பூங்கோதையின் வேண்டுகோளுக்குச் சம்மதம் தெரிவித்தாள்.

சகஊழியர்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தாலும், அக்குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளவே செய்தாள் பேதை.

வினாத்தாளைக் கண்டதுமே தலைசுற்றி கீழே விழும் கமலினியை, விடைகளைக் கணினியில் டைப் செய்யும் படி ஊக்குவித்தாள். ‘தட்’, ‘பட்’ என ஒலியெழுப்பும் விசைப்பலகையின் ரீங்காரத்திலும், பல வண்ணங்களில் திரையில் பிரதிபலிக்கும் எழுத்துக்களின் வடிவத்திலும் குதூகலம் கொண்டவள், தன்னையும் அறியாது சரியான விடைகளை எழுதத் தொடங்கினாள்.

கணக்கு என்றாலே பாய்ந்தடித்து ஓடும் தினேஷை அவன் வழியிலேயே மடக்கினாள். அவன் மிகவும் விரும்பிய விளையாட்டுத் துறையை மையமாகக் கொண்டு விதிமுறைகளை கற்பித்தாள். மனப்பாடம் செய்யாமலேயே பாடங்களை உற்சாகமாகக் கற்றுக்கொண்டான் அவன்.

அறிவியல் வகுப்பு என்றாலே ஜுரம் வந்துவிடும் பாஸ்கரனுக்கு. வரைப்படங்கள் சரியில்லை என்று ஆசிரியர் பொழுதுக்கும் குறைகூற, வகுப்பில் கவனமே செலுத்தமாட்டான்.

வரலாறு பாடத்தில் அதீத ஆர்வம் கொண்டவனின் பலத்தைப் பயன்படுத்தியவள்,

“டேய் பாஸ்கரா! எப்படியாவது முட்டிமோதி அறிவியல் பாடத்தில் பாஸ் பண்ணிடு டா! கோடை விடுமுறைக்கு உன்னை மைசூர் அரண்மனைக்கு அழைச்சிட்டுப் போகுறேன்!” என்றாள் கெஞ்சலாக.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே காப்பகத்தின் வாசற்கதவைக் கூட தாண்டாதவனுக்கு ஜாக்பாட் அடித்ததுப் போன்று இருந்தது, பூங்கோதையின் வார்த்தைகள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பாஸ்கரனுக்குத் தவளையின் உடல் உறுப்புகளை எளிய முறையில் வரையக் கற்றுக்கொடுப்பதற்காக, துளசியிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தாள் பூங்கோதை.

பெண்கள் இருவருக்கும் சிற்றுண்டி செய்திருப்பதாகக் குரல் கொடுத்த மல்லிகா, அவர்களை கீழே வரும்படி அழைத்தாள்.

காப்பகத்தில் குழந்தைகளின் சேட்டைகள் பற்றி கிண்டலாகப் பேசியும், கிளுகிளுவென சிரித்தும் சிற்றுண்டி உண்ணும் இருவரையும் கவனித்த பணிப்பெண்,

“துளசிம்மா! என் மகனும் இந்த வருஷம் பொதுத்தேர்வு எழுதணும்; பயப்புள்ள விளையாட்டுத்தனமாவே இருக்கான்; அவனுக்குக் கணக்குப் பாடம் மண்டையிலேயே ஏற மாட்டேங்குது! நீ கொஞ்சம் கற்றுக்கொடுக்கறியா தாயி!” கெஞ்சலாகக் கேட்க,

“அய்யோ! கணக்குப் பாடத்துக்கும் எனக்கும் ஏக பொருத்தம்!” பின்வாங்கியவள், தோழியின் தோளில் தட்டிக்கொடுத்து,

“வேணும்னா இவளைக் கற்றுக்கொடுக்கச் சொல்லுங்க! மேடம் காப்பகத்தில் பெரிய புரட்சியே செய்திருக்காள்!” என்று சீண்டினாள்.

“ஏய்! சும்மா இரு டி!” தடுத்தாள் பூங்கோதை.

தோழியைச் சற்றும் பொருட்படுத்தாமல் அன்று நடந்த கலந்துரையாடல் முதல் குழந்தைகளின் முன்னேற்றம் வரை அனைத்தையும் ஒப்பபித்தாள் துளசி.

பூங்கோதை மனசு வைத்தால், தன் பிள்ளை மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கிவிடுவான் என்று நம்பிக்கை கொண்ட பணிப்பெண் விடாமல் நச்சரிக்க,

“சரி! நாளைக்குச் சாயங்காலம் கூட்டிட்டு வாங்க!” இளநகையுடன் சம்மதித்தாள் பூங்கோதை.

“வாசலில் தான் இருக்கான் மா! இப்போவே அறிமுகம் செய்துவைக்கறேன்!” உற்சாகத்துடன் கூறியவள் வாசலுக்கு விரைந்தோடினாள்.

“சரியான வாலுப்பையன் தெரியுமா அவன்!” எச்சரித்த துளசி, “பார்க்கலாம், புரட்சி பெண் அவனை எப்படிச் சமாளிக்கறீங்கன்னு!” எனக் குறும்பாகக் கண்ணும் சிமிட்டினாள்.

இவர்கள் அலப்பறைகளக் கேட்டபடி உணவுமேஜையில் அமர்ந்து அமைதியாகச் சிற்றுண்டி புசித்தவனின் செவிகளும் கூர்மையாக வளைந்தன.

பிரேம்குமாருக்கும் தெரியும் அருளின் குறும்புத்தனம்;

மனோதத்துவவியலையே கரைத்துக் குடித்ததுபோலப் பூங்கோதையின் சாகசங்களைப் பற்றி, தங்கை பெருமையடித்ததையும் கவனிக்கவே செய்தான்.

சுட்டிப்பையனை சாகசக்காரி எப்படிக் கையாளப் போகிறாள் என்று அறியும் ஆர்வம் மேலோங்கியது அவனுக்கு.

வேண்டாவெறுப்பாக உள்ளே வந்த அருள் கவனம் முழுவதும், கையில் வைத்திருந்த வீடியோ கேமில் தான் இருந்தது.

அவனைத் தன்னருகில் அமர்த்தியவள், “உன் பெயர் என்ன தம்பி?” மென்மையாகப் பேச்சுக்கொடுத்தாள்.

“நீங்க டீச்சர்ன்னு எனக்குத் தெரியும் அக்கா! எனக்குச் சுட்டுப்போட்டலும் கணக்கு வராது! வீணா அறிவுரை சொல்லி உங்க நேரத்தை வீணாக்காதீங்க!” திமிராகப் பதிலளித்து, விளையாட்டில் கவனத்தைத் திருப்பினான்.

“இப்படித்தான் மா! பொழுதுக்கும் இந்தப் பெட்டியில் விளையாடிட்டே இருக்கான்!” பணிப்பெண் புலம்ப,

“அதை வாங்கிக்கொடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்! செல்லம் கொடுத்துட்டுப் பிள்ளையை குறைசொல்லுறீங்க!” என அவன் கேசத்தைக் கோதினாள்.

அருள் வியப்புடன் அவளை நோக்கினான்.

“இம்புட்டு விலை உயர்ந்தப் பொருளை வாங்க, எனக்கேது மா பணம்!” பெருமூச்சுவிட்டவள், தான் பணிபுரியும் மற்றொரு வீட்டின் இல்லத்தரிசி பரிசாகக் கொடுத்ததாக அறிவித்தாள்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்டவள், “இருவர் விளையாடுறா மாதிரி ஏதாவது கேம் இருந்தால் காட்டு டா!” அதிகாரமாகக் கேட்டாள்.

துருதுருவென்று ஒன்றை உயிர்ப்பித்தவன், விதிமுறைகளையும் விளக்கினான்.

“ம்ம்…!” தலையசைத்தவள், “ரெண்டு பேரும் விளையாடலாம்; தோற்கும் நபர், ஜெயிக்கறவங்க சொல்றதைக் கேட்கணும்! சரியா!” சவால்விட்டாள்.

அந்த விளையாட்டை பலமுறை விளையாடி அசால்டாக ஜெயித்தவனுக்கு, அவளுடன் போட்டியிடுவது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

இருவரும் விளையாடத் துவங்கினர். சுற்றி இருந்தவர்களின் விழிகள் இமைக்க மறந்தது; பிரேம்குமார் உட்பட.

ஐந்து நிமிடத்தில் பந்தயத்தில் வென்ற பூங்கோதை, விளையாட்டுச் சாதனத்தை லாவகமாக தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.

“இது போங்கு அக்கா!” சிணுங்கியவன் வாசலை நோக்கி நடந்தான்.

“நில்லுடா!” அதட்டியவள், அவனருகே சென்று, “பந்தயத்தில் தோற்றுப்போனவங்க, ஜெயிச்சவங்க பேச்சை கேட்கணும்!” நினைவூட்டி,

“இதை உனக்கே பரிசாகத் தர விரும்புறேன்!” என்று அவன் முன் நீட்டினாள்.

அருள் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் என மின்னியது.

“பரிசுப்பொருளை ஜிகினா காகிதத்தில் சுற்றித் தருவது தானே நியாயம்.” என்றவள்,

ஆனால் விளையாட்டுச் சாதனத்தின் மேற்பரப்பு பரப்பளவை அவன்தான் கணித்து சொல்லவேண்டும் என்று நிபந்தனையிட்டுக் கரத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“எனக்கு எப்படித் தெரியும்?” முணுமுணுத்தான் அவன்.

“விதிமுறை சொல்லித்தர மாட்டேன்; ஆனால் சில துப்புகளைக் கொடுக்குறேன்! கண்டுபிடிச்சு சொல்லு! கால்குலேடர் பயன்படுத்தினாலும் பரவாயில்லை!” என்றவள் கேள்விகளைத் தொடுத்தாள்.

“இதன் வடிவம் என்ன?”

“செவ்வகம்!”

“அதன் நீளம், அகலம், உயரம் அனைத்தையும் அளவிடு!” என்று அளவுகோல் ஒன்றை நீட்டினாள்.

சரிநுட்பமாக அளந்தவனிடம், சாதனத்தைச் சுற்றி ஒட்டுவதற்கு ஏதுவாக செய்தித்தாளில் இருந்து தனித்தனி துண்டுகள் கிழித்து தர சொன்னாள்.

மேல் பாகத்தையும் கீழ் பாகத்தையும் மூட, ஒரே அளவிலான இரண்டு செவ்வகம் துண்டுகளையும், நடுபாகத்தைச் சுற்றுவதற்கு, மெல்லிய, ஆனால் நீளமான துண்டையும் கொடுத்தான்.

அவற்றை மறுபடியும் சாதனத்தில் பொருத்திக் காட்டியவள், “இதிலிருந்து உனக்கு என்னப் புரிகிறது!”

“மேலும், கீழும் மூடும் இரண்டு செவ்வகத்தின் பரப்பளவும், மெல்லியத் துண்டை சுற்றுவதால், அதன் சுற்றளவும் கண்டுபிடிக்கணும்.” என்றவனின் முகம் மலர்ந்தது.

இமைக்கும் நொடியில் அவற்றைக் கணக்கிட்டவன், “ஆனால் உயரம் எதுக்கு அளவிடச் சொன்னீங்க?” வினா எழுப்பினான்.

“நல்ல கேள்வி!” சிந்தித்துச் செயல்படுகிறான் எனப் பூரித்தவள், மெல்லிய நூல் கயிறு ஒன்றை நடுபாகத்தில் சுற்றி,

“நீ கண்டுபிடித்த சுற்றளவு, சாதனத்தை ஒருமுறை சுற்றி வருவதற்குச் சமம்…”

அவள் சொன்னது தான் தாமதம்.

“புரியுது அக்கா! எத்தனைமுறை நூற்கயிறை சுற்றுகிறமோ, அதுதான் உயரம். சுற்றளவை உயரத்தோடுப் பெருக்கணும் சரியா!” கேட்டவன் கண்களில் ஆர்வம் மின்னியது.

கணக்குப் பாடம் கற்கிறோம் என்பதையே மறந்து பேசிக்கொண்டிருந்தான் அவன்.

“இவ்வளவுதான் மேற்பரப்பின் பரப்பளவு! விதிமுறைகள் மனப்பாடமாக தெரியாதபோதும், சிந்திச்சுச் செயல்பட்ட பாரு!” என மெச்சியவள், விளையாட்டுக் கருவியை அவனிடமே தந்து,

“கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்…இந்த நான்கையும் மையமாகக் கொண்டுதான் கணிதத்தின் எல்லா விதிமுறைகளும், கோட்பாடுகளும் அமைந்திருக்கு. இதைத்தாண்டி வேறேதாவது இருக்கான்னு சொல்லு.”

இல்லை என்று தலையசைத்தவனின் மனதிலும் தெளிவு பிறந்தது.

“நாளைலேந்து கணக்குப் பாடம் படிக்க வரியா? அரைமணி நேரம் படிக்கலாம்; அரைமணி நேரம் வீடியோ கேம் விளையாடலாம்!” எனக் கண்சிமிட்டினாள்.

“சரி க்கா! வீடியோ கேம் உங்ககிட்டையே இருக்கட்டும்; மறக்காமல் சார்ஜ் போட்டுவைங்க!” பேருவகையுடன் சம்மதித்தவன்,

“என் பேரு அருள் அக்கா!” தன்மையாக உரைத்தான்.

பெண்கள் இருவரும் தவளை வரையும் விடாமுயற்சியில் கவனத்தைத் திசைதிருப்பினர்.

“அழகான புரிதல் பூங்கோதை!” அருள் மனநிலை உணர்ந்து செயல்பட்டதாக, மனதார பாராட்டி, எதிரில் நின்றான் பிரேம்குமார்.

“நன்றி பிரேம்!” மென்சிரிப்புடன் பதிலளித்தவள், “ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையிலும் நல்லதொரு புரிதல் இருந்தால் அழகாத்தான் இருக்கும்!” மறைமுகமாகக் தன் ஆதங்கத்தை உரைத்தாள்.

புருவச்சுளிப்புடன் பிரேம் குழம்பி நிற்க, அவளே மேலும் பேசினாள்.

“உடற்பயிற்சி, இரவுத் தூக்கம்ன்னு நீங்க மொட்டைமாடியே கதின்னு இருந்ததும் எனக்குத் தெரியும்; நான் குடித்தனம் வந்ததால்தான் நீங்க அந்தப் பக்கமே வருவதில்லைன்னும் எனக்குத் தெரியும்!” என்றாள்.

“அது…அது…” பிரேம் தடுமாற,

“என்னை வேற்றுக்கிரக வாசி மாதிரி பார்க்காமல், சகஜமாகப் பழகினால் நல்லாயிருக்கும்னு சொல்றேன்!” தன் எதிர்பார்ப்பை தெளிவுபடுத்தினாள்.

அதைக்கேட்டவன் இதழோரம் புன்னகை தேங்கியது.

“சரி! நாளைலேந்து மொட்டைமாடியிலேயே உடற்பயிற்சி செய்யறேன்!”மிருதுவாகக் கூறி நகர்ந்தான்.

காண்பது கனவா இல்லை நிஜமா என்று கிள்ளிப் பார்த்தாள் துளசி.

“ஆ…ஆ…வலிக்குது…எதுக்கு டி என்னைக் கிள்ளின!” புஜத்தை தேய்த்தவாறு கத்தினாள் கோதை.