கோதையின் பிரேமை – 02

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

பூங்கோதையை நேரில் கண்டதும், அதிர்ஷ்ட தேவதையே கண்முன் தோன்றியது போல இருந்தது துளசிக்கு. தான் பணிபுரிந்து வந்த குழந்தைகள் காப்பகத்திலேயே, பூங்கோதையும் மனோதத்துவவியல் ஆலோசகராகப் பணியாற்ற வந்திருக்கிறாள் என்று அறிந்தவளுக்குக் கரைகாணா இன்பம்.

பூங்கோதையுடன் சில மணிநேரமே பேசிப் பழகியவள், அவளைத் தன் அண்ணியாகவே பாவித்தாள். நடப்பது யாவும் இறைவனின் சங்கல்பம் எனத் திடமாக நம்பினாள்.

மாலை வீடு திரும்பிய நொடிமுதல், மல்லிகாவிடம், பூங்கோதையைப் பற்றி ஓயாமல் புகழாரம் பாடினாள் துளசி.

“எவ்வளவு பெருந்தன்மை தெரியுமா மா பூங்கோதைக்கு!” என அம்மா தேய்த்து வைத்திருந்த பூரி ஒன்றினை எண்ணெயில் மிதக்கவிட்டவள்,

“மனோதத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும், எத்தனையோ பேரும் புகழும் தரும் வாய்ப்புகள் வந்தபோதும், சுகந்தி மேடம் நிர்வாகம் செய்யும் குழந்தைகள் காப்பகத்தில் தான் சேவை செய்யணும்னு பிடிவாதமா இங்க வந்துட்டாங்க மா!” என பெருமையடித்தாள்.

மென்சிரிப்புடன் மற்றொரு பூரியைத் திரட்டியபடி மல்லிகா தலையசைத்தாள்.

ஆனால் எதிரில் அமர்ந்து புஸுபுஸுவென உப்பின பூரிகளை, உருளைக்கிழங்கு மசாலாவுடன் விழுங்கியவனின் முகத்தில் தான் கடுகடுப்பு வழிந்தோடியது.

“இதில் என்ன பேரதிசயம்! நீயும்தான் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும், காப்பகத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பாக்குற!” இடித்துக்காட்டியவன்,

“வளவளன்னுப் பேசாம இன்னொரு பூரி எடுத்துட்டு வா!” அலட்டலே இல்லாமல் கேட்டான்.

ஒன்றுக்கு இரண்டாகப் பூரிகளை எடுத்துவந்து அண்ணனின் உணவுத்தட்டில் பரிமாறியவள்,

“ஒரு சிறிய திருத்தம் பிரதர்! எனக்கும் பெரிய பெரிய பொறியாளர் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு விருப்பம்தான். நீங்கதான் இரவுப்பணிகள்(Night_Shift) ஒத்துக்கக்கூடாது, வெளியூருக்குப் போகக்கூடாதுன்னு ஆயிரம் தடை விதிச்சீங்க!” நினைவூட்டி, கழுத்தை நொடித்தாள்.

“இப்போ உனக்கு என்ன குறைச்சல்னு அவனைக் குற்றம் சொல்ற! உன்மேல் இருக்கும் பாசத்தில் தானே அப்படியெல்லாம் நிபந்தனைகள் போட்டான்.” இடைபுகுந்தாள் மல்லிகா.

தகதகவென கொப்பளிக்கும் பூரியை வடிதட்டில் போட்டு, அடுப்பை அணைத்தவள், அண்ணன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“எனக்கு எந்தக் குறைச்சலும் இல்ல; அண்ணன் குணத்தையே மிஞ்சும் அளவிற்கு அண்ணியின் குணம் இருக்குன்னு சொல்றேன்!” என்று பிரேம்குமாரின் தோளினை சுற்றி செல்லம் கொஞ்சினாள் துளசி.

ஏணி வைத்தாலும் எட்டாத ஒன்றை  நினைத்து மனக்கோட்டைக் கட்டுகிறாளே எனக் கோபம் தலைக்கேறியவன், இனி அவள் பெயரை மறந்தும் உச்சரிக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினான்.

“அண்ணி பெயரை மறக்காமல் உச்சரித்தது நீ!”

காலையில் அவன் ‘கோதை’ என்று உளறியதை நினைவூட்டியவள், பூங்கோதை அவனுக்குத் தன் பெயர் எப்படித் தெரிந்தது என்று கேட்டதையும் குறிப்பிட்டாள்.

“நீங்க சுகந்தி மேடம் அலுவலக அறை எங்கேன்னு கேட்டத்துக்குத் தான் அண்ணன், கோ தேர்(Go_There!)ன்னு ஆங்கிலத்தில் அந்த லட்சணத்துல சொன்னான்னு சமாளிச்சேன் தெரியுமா!”, இல்லாத சட்டைக் காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.

தன் கவனக்குறைவை எண்ணி மனதளவில் தடுமாறினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாதவன்,

“ஏதோ தற்செயலாக நடந்த விஷயத்தை வைத்துப் பகல் கனவு காணாதே!” அதட்டலாகக் கூறி நகர்ந்தான்.

“இன்னாருக்கு இன்னார்ன்னு முடிவு செய்வது, நீயோ நானோ அந்தத் தரகரோ இல்லை; எல்லாம் கடவுளின் சித்தம்!” உரக்கப் பேசி அவன் உணர்வுகளைத் தூண்டினாள் துளசி.

பதிலுக்குப் பதில் பேசினால் தானே வாக்குவாதம் வளரும் என்று அவன் கண்டும் காணாமல் போக, அண்ணனின் மௌனத்தில் வாடியவள், அவனருகே விரைந்தோடி வழிமறித்தாள்.

“அண்ணா! நானா எதுவும் அவங்ககிட்ட சொல்லமாட்டேன்; ஆனால் இது தெய்வத்தின் தீர்ப்புன்னு என் உள்மனசு சொல்லுது! நிச்சயமாக அண்ணியே…” இடைநிறுத்தி, எச்சில் விழுங்கியவள்,

“பூங்கோதையே உன்னைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்னு சொல்லுவாங்க பாரு!” ஆழ்மனதிலிருந்து உரைத்தாள்.

மறுநாள் காலை வேலைக்குப் புறப்படத் தயாராகி வந்த துளசியிடம்,

“எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு; நீ பேருந்தில் போயிட்டு வா!” என அறிவித்தான் பிரேம்குமார்.

ஒருநாளும் அவளைத் தனியாக அனுப்பியதே இல்லை அவன்; அண்ணன் மழுப்புவதை நொடியில் உணர்ந்தவள்,

“குற்றமுள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும்னு சொல்லுவாங்க!” நாக்கைத் துருத்திக் கண்சிமிட்டினாள்.

எனக்கென்ன தயக்கம் என்பது போல ரோஷம் ஜிவ்வென்று ஏறியது அவனுக்கு. ஒரு நிமிடம் வாசலோடு வாசலாக தங்கையை இறக்கிவிட்டுச் சிட்டாகப் பறந்துவிடலாம் என்று எண்ணினான்.

 ஆனால் முன்தினம், ஒரு நிமிடம் விளையாடிய அந்த விதி, இன்றும் இடைவிடாமல் விளையாடப் போகிறது என்பதை அறியவில்லை அவன்.

“உன்னுடைய லன்ச் பேக் மட்டும்தானே எடுத்துக்கிட்ட…பாதி தூரம் போனதும் மனுஷன இங்க வா, அங்க வான்னு அலைக்கழிக்காதே!” படபடத்தவன், துளசி இறங்கிய மறுநொடியே, வண்டியைச் சல்லென்றுத் திருப்பினான்.

“பிரேம்! பிரேம்! ஒரு நிமிஷம் நில்லுங்க!” ஆட்டோவிலிருந்து இறங்கியவள், ஓட்டுனருக்குப் பணம் கொடுத்தபடி அழைத்தாள்.

“அண்ணி!” என பூரிப்பில் மின்னிய துளசியின் விழிகள், அண்ணனின் அனல்பார்வையில் கப்சுப் என்று அடங்கியது.

‘மறுபடியுமா!’ என புத்தி யோசித்தாலும், மனம் ‘கோதை’ என்று சிலிர்க்கத்தான் செய்தது. ஊசலாடும் மனதிற்கு அணைக்கட்டியவன், முகத்தை விறைப்பாக வைத்துக்கொள்ள, அவனருகில் வந்தவள்,

“மன்னிச்சிருங்க பிரேம்! உங்களை யூனிஃபார்மில் பார்த்ததும் செக்யூரிட்டின்னு தவறா நெனச்சிட்டேன்!” பணிவாகப் பேசி, தன்னை அறிமுகம் செய்துகொண்டாள் பூங்கோதை.

வீட்டில் அனைவரும் அவனைக் குமரா என்று கூப்பிட்டுப் பழகிப்போன துளசிக்கு, அவள் கீச்சுக் குரலில் பிரேம் என்று அழைத்தது வேணுகானமாகவே இருந்தது. இருவரையும் ஜோடியாகப் பார்த்ததில், கண்களும் ஆனந்தத்தில் நிறைந்தது.

“இதுல தவறா நினைக்க என்ன இருக்கு; நான் செக்யூரிட்டி தானே!” இடுங்கிய கண்களுடன், தன் உத்தியோகத்தை அழுத்திக்கூறி, வண்டியை உயிர்பித்தான்.

மன்னிப்பு கேட்கிறேன் என்ற பெயரில், அவன் மனம்நோகும்படி பேசிவிட்டதாக யூகித்தாள் பூங்கோதை.

“உங்களைப் பற்றி தான் துளசி நேற்று நாள்முழுக்க புகழ்ந்துப் பேசிகிட்டே இருந்தாள்!” நல்லவிதமாகப் பேச்சுக்கொடுத்தாள்.

தங்கையின் உள்நோக்கம் அறிந்தவன், அவளைப் பார்வையால் சுட்டெரிக்க, துளசியும் இமைகள் படபடக்க அசடுவழிந்தாள்.

பாசமலர்களின் விழி மொழிகளை நேசத்தின் பரிமாற்றம் என்று தவறாக அர்த்தம் புரிந்துகொண்ட பூங்கோதை,

“நானும் உங்களை அண்ணான்னு கூப்பிடட்டுமா பிரேம்!” ஏக்கத்துடன் கேட்டாள்.

இல்லை என்று ஆன பிறகு எப்படி அழைத்தால் என்னவென்று நிதர்சனத்தை ஏற்றவன்,

“உங்க இஷ்டம்!” என்றான்.

அதில் திடுக்கிட்டுச் சுயத்திற்கு வந்த துளசி, ‘ஐயோ! முதலுக்கே மோசம்!’ என மனதளவில் பதறினாள்.

பதறிய வேகத்திலேயே, வெடுக்கென்று அண்ணன் கைவளையத்திற்குள் பின்னியவள்,

“அதெல்லாம் முடியாது பூங்கோதை! எனக்கு மட்டும்தான் அண்ணான்னு கூப்பிடும் உரிமை இருக்கிறது.” என ஜம்பமடித்தாள்.

முன்தினம் அவள் அண்ணனைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டவிதத்திலேயே, அவர்கள் நெருகத்தை உணர்ந்தாள் பூங்கோதை. இன்று கண்கூடாகவும் பார்த்துவிட்டாள்.

“சரி! பிரேம்ன்னு கூப்பிடறேன்.” மென்சிரிப்புடன் உரைத்தவள், மாலையில் சந்திக்கலாம் என்று கூறி, துளசி கைகோர்த்து நகர்ந்தாள்.

மாலையில் சந்திக்கலாம் என்று பூங்கோதைச் சம்பிரதாயத்திற்குச் சொல்லிருந்தாலும், அதைத் தினம் தினம் நடைமுறைப் படுத்திய பெருமை எல்லாம் துளைசியையே சேரும்.

காலை வேலைகளில் பூங்கோதையின் கண்ணில் சிக்காமல், மாயகண்ணனைப் போல டிமிக்கிக் கொடுத்து, மின்னல் வேகத்தில் தப்பித்துவிடும் பிரேம்குமாரை, மாலையில் குறைந்தபட்சம் அவளிடம், வணக்கம் சொல்லவாவது வைத்துவிடுவாள் துளசி.

அவனும் வேறுவழியாமல் குனிந்த தலை நிமிராமல், பூங்கோதை கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு நகர்வான்.

பெங்களூர் தனக்குப் பழக்கமில்லாததாலும், பாஷை தெரியாததாலும், வங்கி விவரங்கள், கடை வீதிகள் என பொதுவான விஷயங்களை மட்டுமே பிரேம்குமாரிடம் விசாரித்தாள் பூங்கோதை.

ஊரே விற்கும் அளவிற்குப் பெங்களூரின் சந்துப்பொந்துகளை அறிந்திருந்த துளசி, தானே அவ்விவரங்களைப் பகிர்ந்துகொள்ளாமல், பூங்கோதையைத் தன்னிடம் பேசவைக்கும் கள்ளாட்டம் பிரேம்குமாரும் அறியவே செய்தான்.

அதைப்பற்றி அவன் ஏதாவது வாய்திறந்து கேட்டுவிட்டால் போதும்; குதர்க்கமாக சிந்திக்கிறான்; அவனால் அவள் நினைவிலிருந்து மீள முடியவில்லை என்று லாவகமாக அண்ணன் மீதே பழி சுமத்திவிடுவாள் துளசி.

தங்கையிடம் விதண்டாவாதம் செய்வதைவிட பூங்கோதைக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்சொல்வதே மேல் என்று நினைத்தான்.

இதற்கிடையில் துளசியோ, கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம், அண்ணனின் அருமை பெருமைகளை பூங்கோதையின் செவிகளில் ஓதிக்கொண்டே இருந்தாள்.

அன்றும் மதியஉணவு வேளையில், சாப்பிடுவதைக் காட்டிலும், அண்ணன் புராணம் தான் பாடிக்கொண்டிருந்தாள்.

“அண்ணனுக்கு எத்தனையோ வெளிநாட்டு வாய்ப்புகள் வந்துது பூங்கோதை! என்னையும் அம்மாவையும் தனியா விட்டுட்டுப் போகவே மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டான். பெரியப்பா அறிவுரைபடி ஒரு அஞ்சு வருஷம் வெளியூரில் வேலை செய்து சம்பாதிச்சிருந்தா, இந்நேரத்திற்குப் பெங்களூரில், தனக்குன்னு ஒரு சொந்த வீடே வாங்கிருக்கலாம்!”

“நீதான் தகவல் தொழில்நுட்பம் பட்டதாரி ஆச்சே! ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருந்தா, நீயே உன்னுடைய அண்ணனுக்கு ஒரு வீடு வாங்கித் தந்திருக்கலாமே!” என்றாள் பூங்கோதை.

அண்ணனின் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை அசைப்போட்டவள் மௌனம்காக்க, அவள் கரத்தை மென்மையாக வருடிய பூங்கோதை மேலும் பேசினாள்.

“ஆண்கள் தான் குடும்பச்சுமை மொத்தத்தையும் அவங்க தலையில் போட்டுகணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல துளசி. பெண்கள் நமக்கும் அவங்களுக்கு இணையான பொறுப்பு இருக்கு!”

பூங்கோதையின் பக்குவமான பேச்சில் ஸ்தம்பித்துப் போனாள் துளசி.

துளசியின் எண்ணோட்டம் அறியாத பூங்கோதை,

“ஏன் டி! அண்ணன் நிழலில் நல்லா குளிர்காய்ந்துட்டு, அவர் செய்யும்  சீர் வரிசை மட்டும் வாங்கிட்டு, புகுந்த வீட்டில் சொகுசா வாழலாம்னு நினைக்குறியா?” கேட்டவள் குரலில் ஆளுமை ஓங்கியது.

பரந்த எண்ணங்கள்; வெளிப்படையான பேச்சு என எல்லாவிதத்திலும் துளசியின் மனதைக் கொள்ளைகொண்டாள் பூங்கோதை.

“போதும்! போதும்! பூங்கோதை!” மலர்ந்த முகத்துடன் அவள் கரத்தை உலுக்கியவள்,

“எனக்கும் என் அண்ணணுக்கு நிறைய செய்யணும்னு ஆசைதான்! கைநிறைய சம்பாதிக்கக்கூடிய தனியார் நிறுவனங்களில் வந்த வாய்ப்பு எல்லாம் விட்டுட்டு, வலுக்கட்டாயமா, இந்தக் காப்பகத்தில் வேலைக்குச் சேர்த்துட்டான்னு கோபம் வந்துது. இதுக்காகவா இவ்வளவு செலவு செய்து படிக்க வெச்சன்னு சண்டைக் கூட போட்டேன்!” என்றவள்,

பிரேம்குமாரின் கண்ணோட்டத்தை விவரித்தாள்.

“முதலீடு செய்த பணத்தில் எவ்வளவு லாபம் வரும்னு மதிப்பிட்டு செலவு செய்ய கல்வி ஒண்ணும் வியாபாரமும் இல்ல; உன்னைப் படிக்க வைப்பதால் எனக்கு என்ன ஆதயாம்னு யோசிக்க, நான் வியாபாரியும் இல்லன்னு கண்டித்தான்.

நான் கற்ற கல்வி நாலு பேருக்குப் பயன்படும் விதத்தில் இருக்கணும்னு அறிவுறுத்தி, காப்பகத்தில் வேலைக்கும் சேர்த்துவிட்டான்.

முதலில் அரைமனதாகத் தான் இங்க வேலைக்கு வந்தேன். ஆனால், சுகந்தி மேடத்தின் தன்னார்வமற்ற சேவை, குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத அன்பு, இதையெல்லாம் அனுபவித்தப் பிறகு தான், அண்ணன் எனக்கு எவ்வளவு நல்ல வழியை காட்டிருக்கான்னு புரிஞ்சுகிட்டேன்!” என மனம்திறந்து பேசியவள்,

“அண்ணனை பொறுத்தவரை, செய்யும் வேலை எதுவாக இருந்தாலும், அதை உண்மையான ஈடுபாட்டுடனும், மனநிறைவுடனும் செய்யணும்னு எதிர்பார்ப்பான்!” என்று பெருமூச்சுவிட்டாள்.

“ம்ம்…” என மென்மையாகத் தலையசைத்தவள், “உங்க அண்ணனுக்கும் எனக்கும் எத்தனை மனப்பொருத்தம்!” பூங்கோதை சிந்தனையில் கரைந்தவளாகப் பேச,

மணப்பொருத்தம் என்று அர்த்தம் கொண்ட துளசி,

“தெரியுமே!” துள்ளி குதித்தாள்.

“என்ன தெரியும்?” என பூங்கோதையின் விழிகள் வினா எழுப்பியது.

“அது…அது…” தடுமாறிய துளசியை, ஆபத்பாந்தவன் போல காப்பாற்ற வந்தாள் சுகந்தி.

“அது! சுகந்தி மேடம் சொற்பொழிவு கேட்டதால் வந்த உத்வேகம் தான், காப்பகத்தில் ஆலோசகராகப் பணிபுரிவதற்குக் காரணம்னு சொன்னீங்களே! அண்ணனை மாதிரியே உங்களுக்கும் சேவை மனப்பான்மை நிறைய இருக்குன்னு சொல்ல வந்தேன்!” என சமாளித்தாள்.

பூங்கோதை அருகில் அமர்ந்த சுகந்தி, எதிர்பக்கத்தில் அமர்ந்திருக்கும் துளசியைப் பார்த்து,

“உனக்காவது குமரன் பக்கபலமா இருக்கான்; ஆனால் பூங்கோதையின் அம்மாவுக்கு அவள் இங்கு வந்ததில் துளிக்கூட விருப்பமில்லை!” என்றாள்.

பூங்கோதையின் குடும்பத்தினரைப் பற்றி எதுவுமே கேட்டறியவில்லையே என்று அப்போதுதான் துளசியின் புத்திக்கு எட்டியது.

“ஏன் பூங்கோதை!” தாழ்ந்த குரலில் வினவினாள் துளசி.

“வேறென்ன…அவங்களுக்கு என்னைப் பக்கத்துலேயே வெச்சுக்கணும்…நல்ல இடத்தில் கல்யாணம் செய்துகொடுக்கணும்னு ஆசை!” சராசரியான தாயின் பயமமும் கவலையுமே என்று மென்சிரிப்புடன் பதிலளித்தவளுக்கு பெற்றோரின் முகம் கண்முன் தோன்றியது.

புலம்புவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று நினைத்தவள், சுகந்தியிடம் அவள் வந்த நோக்கத்தைக் கேட்டுப் பேச்சை திசைதிருப்பினாள்.

புதிதாக வந்திருந்த கணினி சாதனங்களைச் சரிபார்த்து, அதில் மென்பொருள் நிறுவல் வேலைகளைக் கவனிக்கும்படி துளசிக்குத் தகவல் சொல்ல வந்ததாகக் கூறியவள், பெண்கள் இருவரிடமும் பணி சார்ந்த மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு நகர்ந்தாள்.

தொடர்ந்து வந்த நாட்களில் பெண்கள் பெரும்பாலும் ஒன்றுகூடி வேலைகளைக் கவனிக்க, அவர்களின் உதவி சுகந்திக்குப் பேருதவியாக இருந்தது. தங்கள் அறிவுக்கு எட்டிய முன்னோட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். சுகந்தியும் அதை அன்புடன் வரவேற்றாள்.

நல்லதொரு புரிதலில் நாட்களும் நகர்ந்தது.

அன்று வழக்கம்போல காப்பகம் வந்த துளசியின் கண்கள் பூங்கோதையைத் தேடி அலைய, அவள் உடல்நலம் சரியில்லாததால் விடுப்பு எடுத்திருப்பதாகச் அறிவித்தாள் சுகந்தி. அவளை நேரில் சென்று கண்டு வருமாறும் கேட்டுக்கொண்டாள்.

விடுதியின் அறைக் கதவு திறந்தவளுக்கு, சில வினாடிகள் கூட நிமிர்ந்து நிற்க முடியவில்லை. அயர்ச்சியில் முகம் சுருக்கியவள், துளசியை உள்ளே வரும்படி கூறி, மெத்தையில் சுருண்டு படுத்துவிட்டாள்.

“உனக்கு என்னாச்சு பூங்கோதை! ஒரு போன் செய்திருக்கலாமே!” ஆதங்கத்துடன் கேட்டாள் துளசி.

சனிக்கிழமை மதியத்திலிருந்தே வயிறு உபுசமாக இருந்தது என்றும், அது தாளாத வயிற்று வலியாக மாறிவிட்டதாகவும் விவரித்தாள்.

மூன்று நாட்களாக நீடித்த வலியை அலட்சியம் செய்யக்கூடாது என்ற துளசி, அவளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

பூங்கோதையைப் பரிசோதனை செய்த மருத்துவர், அவள் அன்றாடம் உணவகத்தில் சாப்பிடுவதால் ஏற்பட்ட உபாதை என்று கூறி, அவளைக் கஞ்சி, இட்லி போன்ற பத்தியமான வீட்டு உணவு உண்ணும் படியும் அறிவுறுத்தினார்.

மருத்துவர் குறிப்பிட்ட மருந்துகள் வாங்கிக்கொண்ட துளசி, ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து, பூங்கோதையை தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள்.

“என்ன செய்யற துளசி! என்னை விடுதியில் விட்டுடு!” என்றாள் கெஞ்சலாக.

“பத்திய உணவு சாப்பிடச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினாரே! மறந்துட்டியா பூங்கோதை!” பதிலுக்குத் திடமாக நினைவூட்டியவள், அம்மாவை அலைபேசியில் அழைத்துத் தகவலும் சொன்னாள்.

அவர்கள் வருவதற்குள், பருப்பு ரசம், மெய்யாக அரைத்துக் காய்ச்சிய, புழுங்கலரிசி ஓமக்கஞ்சி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தாள் மல்லிகா.

முதல் முறையாக பூங்கோதையை நேரில் கண்டவளுக்குப் பேரானந்தம்.

வாடிய பூவென வெளிர்ந்திருந்த அவள் முகத்தை, மென்மையாக வருடி நலன்விசாரித்தவள், அவளை சோபாவில் அமர்த்தி, உணவையும் பரிமாறினாள்.

அவர்களின் அன்பு நிறைந்த கவனிப்பில், சிலமணி நேரத்திலேயே பூங்கோதை தேறி வர, விடுதிக்குக் கிளம்புவதாகக் கூறினாள்.

“இன்னைக்கு ஒரு நாள் என்னோடதான் இருக்கணும்!” முடிவாக சொல்லிய துளசி, அவள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தாள்.

மாலையில் வீடு திரும்பியவனுக்குப் பெரும் ஆச்சரியம். வாய்கொடுத்தால் தங்கையுடன் வாக்குவாதம் வளரும் என்று அறிந்தவன், தான் உண்டு தன் வேலையுண்டு என்று மொட்டைமாடியே கதி எனக் கிடந்தான்.

இரவு உணவை முடித்துக்கொண்ட துளசி, பனிக்காற்றில் குளிர் காயலாம் என, வேண்டுமென்றே பூங்கோதையை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றாள்.

அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு பிரேம்குமார் அலைபேசியில் நண்பனை அழைத்துக் கதையளக்க, அண்ணனின் வினோதமான செயல்களைக் கண்ட துளசிக்குக் குதூகலமாக இருந்தது.

அச்சமயம், மூவருக்கும் அருந்த நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை எடுத்துவந்தாள் மல்லிகா.

“இப்போ பரவாயில்லையா மா!” அன்பாக நலன்விசாரித்தாள்.

“உங்க கையால ஒரு டம்ளர் கஞ்சி குடிச்ச அடுத்த நிமிஷமே தெம்பு வந்துடுத்து!” என்றவள், தோழியின் கன்னத்தைக் கிள்ளி,

“இவ தான் தேவையில்லாம என்னை இங்கத் தங்கச் சொல்லி கட்டாயப் படுத்தினா!” என பொய்கோபம் கொண்டாள்.

“இதுவும் உன் வீடு மாதிரிதான் பூங்கோதை!” வேண்டுமென்றே அண்ணன் காதில் விழும் அளவுக்கு உரக்கச் சொன்னாள் துளசி.

பெண்களின் புரிதலை மெச்சிய மல்லிகா, “ஆமாம் பூங்கோதை! எப்போ வேணும்னாலும் வா மா!” என மகளுக்கு ஒத்தூதியவள்,

முடிந்த அளவிற்கு உணவகத்தில் உண்ணும் பழக்கத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினாள்.

“எனக்கு மட்டும் ஆசையா ஆன்ட்டி!” பெருமூச்சுவிட்டவள், தனக்கும் வீட்டில் சமைத்துச் சாப்பிடவே விருப்பம் என்றும், அம்மாவின் கட்டளைக்கு இணங்கி விடுதியில் தங்கியிருப்பதாகவும் கூறினாள்.

“எதுக்கு மா இப்படித் தனியா சிரமப்படுற; அம்மா அப்பாகிட்ட உன் பிரச்சனையை சொல்லி, அவங்களையும் பெங்களூருக்கு அழைச்சிட்டு வந்துடலாமே!” அக்கறையாகக் கேட்டாள் மல்லிகா.

பம்பாயில் பெற்றோர் இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதால் அவர்கள் பணி ஓய்வு பெரும்வரை வேறெங்கும் வர இயலாது என்றவள்,

“அவங்களுக்கு நான் பம்பாயிலேயே பணிபுரிந்து, கல்யாணமும் செஞ்சிக்கணும்னு ஆசை. நான்தான், படித்தப் படிப்புக்கு அர்த்தம் தேடணும்னு ரெண்டு வருஷம் அவகாசம் கேட்டுப் பிடிவாதமா இங்க வேலைக்கு வந்துட்டேன்!

இப்போ உடம்பு சரியில்லன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே ஊருக்கு வரச்சொல்லிடுவாங்க!” ஆற்றாமையுடன் உரைத்தவளின் கண்கள், வலதுபுறத்தில் பூட்டப்பட்டிருந்த குடியிருப்புப் பகுதியைத் தழுவி மீண்டது.

“இதைத்தானே வாடகைக்கு விடுறதா விளம்பரம் செய்திருக்காங்க!” மதியம் வரும்போது, முன்வாசலில் இருந்த டுலெட் பலகையை நினைவுகூர்ந்து விசாரித்தாள்.

ஆம் என்று மல்லிகா தலையசைக்க, பூங்கோதையின் முகம் மலர்ந்தது.

“இதை எனக்கு வாடகைக்கு விடச்சொல்லி உங்களுடைய வீட்டின் உரிமையாளர் கிட்ட சொல்லுங்களேன்! தனியா வீடு எடுத்துத் தங்குவதற்கு அம்மா ஒருபோதும் சம்மதிக்க மாட்டாங்க. ஆனால் துளசி வீட்டின் மாடியில் தான் வீடு பார்த்திருக்கேன்னு சொன்னா,மறுப்பு சொல்லமாட்டாங்க! எனக்கும் சமைத்துச் சாப்பிட வசதியா இருக்கும்” கெஞ்சலாகக் கேட்டு நச்சரித்தாள் பூங்கோதை.

என்ன சொல்வது என்று புரியாமல் மல்லிகா கைபிசைய, துளசி துள்ளலாக அவள் யோசனையை ஆமோதித்தாள்.

பெண்கள் பேச்சில் திடுக்கிட்ட பிரேம்குமார், “அதெல்லாம் முடியாது. நீங்க வேற வீடு பாருங்க!” சிடுசிடுத்தான்.

நொடியில் பூங்கோதை முகம் வாடியது.

அண்ணனிடம் சண்டையிட ஆயத்தமானாள் துளசி.

பிள்ளைகளின் மனநிலை அறிந்த மல்லிகா,”அதுக்கில்ல மா பூங்கோதை! எங்க ஓனர், குடும்பங்களுக்கு மட்டும்தான் வீட்டை வாடகைக்கு விட முடியும்னு சொல்லிருக்காரு! அதைத்தான் குமரன் அப்படிச் சொன்னான்!” மழுப்பலாகக் கூற,

“நியாயம் தானே ஆன்ட்டி! வீட்டின் உரிமையாளர் கிட்ட என்னை உங்களுடைய சொந்தக்கார பொண்ணுன்னு அறிமுகம் செய்துவைங்களேன்…நான் வேணும்னா உங்களை அத்தைன்னு கூப்பிடறேனே!” மறுவழிக் கூறி, மூவரையும் வியப்பில் ஆழ்த்தினாள் கோதை.