கோதையின் பிரேமை – 01

ஊருக்குப் புறப்படுவதற்காகப் பொருட்களை நேர்த்தியாகப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த மல்லிகா, எல்லாம் சரியாக உள்ளதா என்று, எழுதிவைத்திருந்த பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்தாள்.

“பால்கோவா, பசும்நெய், தாழம் பூ குங்குமம், சுங்குடி சேலைகள்…” என முணுமுணுத்தவளின் உதடுகள், “தைலம்!” என்று உச்சரித்ததும்,

“அடேய் குமரா! அர்ச்சகர், எண்ணெய் காப்பு தைலம் தரேன்னு சொன்னாரு டா! போய் வாங்கிட்டு வந்துடேன்!” கெஞ்சலாக மகன் பிரேம்குமாரிடம் கேட்டாள்.

பெரியப்பா ராமநாதனுக்கு ஒத்தாசையாக படுக்கை அறையில், ஸ்பிளிட் ஏ.சி(Split_A.C) பொருத்திக் கொண்டிருந்தவன், அந்த வேலை முடிந்ததும், கோவிலுக்குச் சென்று வருவதாகத் தன்மையாகப் பதிலளித்தான்.

கோவில் நடை சாத்தும் நேரம் நெருங்கிவிட்டது என்று நினைவூட்டிய ராமநாதனின் மனைவி பரிமளம், அவனை உடனே புறப்படுபடி அறிவுறுத்தினார்.

“ஆமாம் அண்ணா! உடனே போய் வாங்கிட்டு வந்துடு! இல்லேன்னா அம்மா ஊருக்குக் கிளம்ப மாட்டாங்க!” தங்கை துளசி கிண்டல் செய்ய,

“ஏன் டி சொல்லமாட்ட!”கழுத்தை நொடித்த மல்லிகா, “முட்டி வலியால் நான் படும் அவஸ்தை எனக்குத்தானே தெரியும்.” என்று சலித்துக்கொண்டாள்.

லேசாக மேடிட்ட வயிற்றுடன் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த ராமநாதன்-பரிமளத்தின் தவப்புதல்வி சரோஜா,

“சித்தி! டாக்டர் கொடுக்கற மருந்து மாத்திரைகள் கொடுக்காத நிவாரணமா அந்தத்  தைலம் தந்துடப்போகுது!” அவள் மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லை என்று தன் பங்குக்குக் கேலிசெய்து சிரித்தாள்.

“ஆரோக்கியம் தரும் காய், பழம் வகைகள் சாப்பிடாம, கலர் கலரா ஊட்டச்சத்து மாத்திரைகள் விழுங்கும் உங்களுக்கு எப்படித் தெரியும்…அறுபதிற்கும் மேற்பட்ட மூலிகைகள் அடங்கிய அந்தத் தைலத்தின் மகிமை பற்றி!” என உதட்டைச் சுழித்த மல்லிகா,

“எனக்காவது ஐம்பது வயசுக்குத்தான் முட்டி வலி பிரச்சனை வந்துது. நீ என்னடான்னா தலைப்பிரசவத்துக்கே உள்ளங்கால் வீங்குது, இடுப்பு வலிக்குதுன்னு சோர்ந்துபோற… குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தானே டி சுகப்பிரசவம் ஆகும்!” பதிலுக்கு இடித்துக்காட்டினாள்.

“அட சித்தி! மருத்துவமனைக்குப் போனோமா; பத்து நிமிஷத்துல குழந்தைப் பெத்துகிட்டோமான்னு இல்லாம, சுகப்பிரசவம் அது இதுன்னு அந்தக் காலத்துலேயே இருக்கிறியே!” நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையே தான் விரும்புவதாக அலட்டலே இல்லாமல் பதிலளித்தாள்.

“பாரு மல்லிகா! இப்படித்தான் எல்லாத்துக்கும் தர்க்கம் செய்யறா!” பரிமளம் வருந்த, மல்லிகா தன் பங்குக்குச் சுகபிரசவத்தின் நன்மைகளை எடுத்துரைக்க, வாதம் ஒரு முடிவே இல்லாமல் நீண்டுக்கொண்டே போனது.

“ஒரு விஷயம் பேச ஆரம்பிச்சா, பட்டிமன்றம் மாதிரி வாக்குவாதம் செய்யறதே உங்களுக்கு வாடிக்கையாகிப் போச்சு!” இடைபுகுந்த பிரேம்குமார், அர்ச்சகரிடமிருந்து தைலம் வாங்கி வருவதாகக் கூறி புறப்பட்டான்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களின் சொந்த ஊர். சகோதரர்கள் ராமநாதனும் பத்மநாபனும் மனைவி மக்கள் என்று கூட்டுக் குடும்பமாக அங்கேயே வசித்து வந்தனர்.

பத்மநாபனின் மறைவுக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை மேற்கொண்ட பிரேம்குமார், வேலை நிமித்தமாகப் பெங்களூரில் குடியேற வேண்டியதாயிற்று.

அதீத தெய்வ நம்பிக்கை கொண்ட மல்லிகா, வருடம்தோறும் ஆண்டாளுக்கு உகந்த மார்கழி மாதத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிக்க வந்துவிடுவாள். திருவிழா முடியும் தருணத்தில் பிரேம்குமாரும், துளசியும் ஊருக்கு வர, குடும்பத்தினர் ஒன்றுகூடிப் பொங்கல் பண்டிகைக் கொண்டாடுவர்.

இந்த ஆண்டும் அரட்டை, கும்மாளம், செல்லச்சண்டைகள் என விடுமுறை நாட்களை குடும்பத்தினர் மகிழ்ந்து அனுபவிக்க, நாட்கள் வேகமாக நகர்ந்தது.

“பங்குனி உத்திரம் சேர ஊருக்கு வா குமரா! ஆண்டாள் திருக்கல்யாணம் பாக்குறது ரொம்ப விசேஷம்!” ராமநாதன் யோசனை சொல்ல,

அச்சமயத்தில் பணியில் விடுப்பு எடுப்பது கடினம் என்றவன், அம்மாவும் தங்கையும் வருவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினான்.

“பெரியப்பா சொல்றது சரிதான் குமரா! ஆண்டாள் திருக்கல்யாணம் தரிசிக்கும் வேளை, உனக்கும் திருமணம் கைகூடட்டும்!” ஆதங்கத்துடன் உரைத்தாள் மல்லிகா.

“துளசி கல்யாணம் முடியட்டும் மா! அப்புறம் என் கல்யாணம் பற்றி யோசிக்கலாம்!” மறுத்துப் பேசினான் பிரேம்குமார்.

“அண்ணா! நீதான் என்னை தாரை வார்த்துக் கொடுக்கணும்னு சொல்லிருக்கேனே!” நூறாவது முறையாக நினைவூட்டினாள் துளசி.

சரோஜாவிற்கு இளங்கோவனுடன் திருமணம் நிச்சயமான சமயமே, அவள் கொழுந்தனார் கதிரேசனுக்குத் துளசியை மணம்முடிக்கக் கேட்டுப், புகுந்த வீட்டுச் சொந்தங்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

அன்பான குடும்பம், நற்குணத்திற்கும், சகோதரப் பாசத்திற்கும் பெயர்போன அண்ணன்-தம்பி என நிறைகளை உணர்ந்த துளசி வீட்டாருக்கும் அதில் பரிபூரணச் சம்மதம்.

துபாயில் பிரபலமான வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த கதிரேசன், இரண்டு வருடங்களில் தனது பணி ஒப்பந்தம் முடிந்ததும், துளசியைத் திருமணம் செய்துகொள்வதாகவும், இந்தியாவிலேயே நிரந்தரமாக குடியேறுவதாகவும் கூற, அவர்கள் திருமணத்தை ஒத்திப்போட இரு வீட்டாரும் மனதாரச் சம்மதித்திருந்தனர்.

அதே சமயம், பெற்றோர் ஸ்தானத்தில், அண்ணன் பிரேம்குமார் தான், தம்பதி சமேதராகத் தன்னைத் தாரை வார்த்துக் கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தாள் துளசி.

பிரேம்குமார் தன் திருமண வாழ்க்கைப் பற்றி பெரிதாகச் சிந்தித்ததே இல்லை. அவனுக்குப் படிப்பில் பெரும் நாட்டமில்லாததால், தொலைதூர கல்வியில் பெயருக்கு என்று பி.ஏ பட்டம் பெற்றிருந்தான்.

பெங்களூரில் பிரபலமான தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தான். கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவிற்கே மாதாந்திர சம்பளம் பெற்றான்.

போதாக்குறைக்குக் குடும்பச் சுமைகளும் சிறுவயதிலேயே தலையில் விழ, கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டான்.

பணம் நெருக்கடி என்று சொல்லிவிட முடியாது.

எதிர்பாராத உடல் உபாதையால் பத்மநாபன் மறைந்திருந்தாலும், அவர் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால், இறந்தப் பிறகும் தங்குதடையின்றி பென்ஷன் பணம் வந்தது. அதில் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைச் சமாளித்தாள் மல்லிகா.

தொலைநோக்குப் பார்வையோடு, வரவு செலவு கணக்குகளையும் நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தார் பத்மநாபன். அவர் சேர்த்துவைத்தப் பணத்தில் துளசி கணினி பொறியியல் துறையில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு, நிலம் என்று குடும்பச் சொத்துகள் முழுவதையும் நிர்வாகித்த, பெரியப்பா ராமநாதனின் தார்மீக ஆதரவு அவனுக்குப் பேருதவியாக இருந்தது.

ஆதலால், தன்னைத்தானே பார்த்துக்கொண்டால் போதுமென்ற நிலைமை தான் அவனுக்கு. ஆனால் படிப்பு, உத்தியோகம் என்று சகோதரிகளுடன் ஒப்பிடும் போது ஒருவித தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தான் பிரேம்குமார்.

காலத்திற்கும் தனிமரமாக இருந்துவிடலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிய, திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம் தட்டிக்கழித்தான்.

“ப்ச்ச…அதெல்லாம் பார்த்துக்கலாம் துளசி!” வழக்கம்போல பிரேம்குமார் மென்றுவிழுங்க,

பிடிவாதமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் துளசி.

“ஏன் டி கழுதை! இந்தப் பெரியப்பா உன்னைத் தாரை வார்த்துக்கொடுத்தால் ஆகாதா!” பொய்கோபத்துடன் அவள் கன்னத்தைக் கிள்ளினார் ராமநாதன்.

“அதெல்லாம் முடியாது பெரியப்பா!” தீவிரக்குரலில் உரைத்தவள், அண்ணன் முகவாயை ஏந்தி,

“அண்ணா! என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு எத்தனையோ விஷயங்கள் செய்துட்ட;  உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைந்தப் பிறகுதான் எனக்கும், கதிரேசனுக்கும் கல்யாணம்!” தீர்கமாக உரைத்தாள்.

தங்கையின் விரல்களை தன் உள்ளங்கையில் குவித்தவன், “அதுக்கில்ல துளசி…” என மென்மையாகத் தொடங்க,

“என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அண்ணா!” உறுதியாகச் சொன்னாள்.

திருமண விஷயத்தில் பிடிக்கொடுக்காமல் நழுவும் அண்ணனிடன் பிடிவாதமாகப் பேசினால் தான் வேலைக்கு ஆகும் என்று அறிந்திருந்தாள் துளசி.

தங்கை முகத்தில் சிரிப்பை வரவைக்க அவன் போராட, அவளோ சிறிதும் அசராது முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

அவர்கள் அலப்பறைகளில் சலித்துப்போன சரோஜா,

“போதும் டி உங்க பாசமலர் பரிமாற்றம்; உன்னுடைய அண்ணணுக்கு படிப்பு வரல்ல; அதனால மேற்கொண்டு படிக்கல…அதான் ஜிம்முக்கு போய் ஜம்முன்னு சிக்ஸ் பேக் வளர்த்திருக்கானே…அதில் மயங்கி ஏதோவொரு பொண்ணு மாட்டிக்குவா!” என அவன் புஜத்தில் செல்லமாகத் தட்டிக்காட்டினாள்.

அண்ணனின் கைவளைவில் தன் கரத்தைப் பின்னிக்கொண்ட துளசி,

“அழகு, அந்தஸ்த்துக் காட்டி தான் என் அண்ணன் ஒரு பெண் மனதில் இடம் பிடிக்கணும்னு இல்ல…அவன் குணத்தில் மயங்கி, நான் நீ என்று பெண்கள் வரிசையில் நிப்பாங்க பாரு!” என சொடுக்குப் போட்டு சவால் விட்டாள்.

பெண்களின் குறும்புப் பேச்சில் பிரேம்குமார் இதழோரம் புன்னகை தேங்கியது.

அதைக் கண்டுகொண்ட ராமநாதன், “உன் ஜாதகத்துக்குப் பொருந்திய பெண்களின் புகைப்படங்களை தரகர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்காரு குமரா! ஊருக்குப் போனதும், அண்ணனும் தங்கையும் கலந்துப்பேசி முடிவு எடுங்க!” பேச்சோடுப் பேச்சாக விவரங்களைப் பகிர்ந்தார்.

துளசி துள்ளலாகத் தலையசைத்தாள்.

“குமரா! பெண்னை ரொம்பப் பிடித்திருந்தாலும், அவள் அழகில் சொக்கி விழுந்தாலும், கல்யாணம் ஆறு மாதத்திற்குப் பிறகுதான்னு கறாரா சொல்லிடு. என்னால வயத்தை சாய்ச்சுகிட்டு நாத்தனார் முடி போடமுடியாது!” சலித்துக்கொண்டாள் சரோஜா.

“உனக்கு ஏன் வீண் கவலை சரோஜா அக்கா! என் அண்ணன் மனைவிக்கு நான்தான் நாத்தனார் முடிச்சுப் போடுவேன்!” உரிமை கொண்டாடிய துளசி, அண்ணனை இறுக அணைத்தாள்.

“அப்போ நாத்தனார் முடிப் போட எனக்கு உரிமை இல்லையா டா குமரா?” உதட்டைப் பிதுக்கினாள் சரோஜா.

“எனக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்குன்னு சொல்லுன்னா!” துளசி ஒரு புறம் அவன் புஜத்தினைச் சுரண்ட,

“எனக்குத்தான் முதல் உரிமைன்னு சொல்லுடா குமரா!” மறுபுறம் அவன் தோளில் சாய்ந்து கெஞ்சலாகக் கேட்டாள் சரோஜா.

இருவரையும் சமமாக நேசித்தவன், அவர்களை இருபுறமும் ஆரத்தழுவி, “வேணும்னா ரெண்டு பெண்கள் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கட்டுமா?” என குறும்பாகக் கண்சிமிட்டினான்.

“அடப்பாவி அண்ணா!” என துளசி கண்கள் விரிக்க,

“குரைக்கும் நாய் கடிக்காது டி!” என தன் உடன்பிறவா தம்பியின் கன்னத்தில் கிள்ளி, கண்சிமிட்டினாள் சரோஜா.

“என் அண்ணனையா நாய்ன்னு சொல்ற…உன்ன…” துளசி வரிந்துக்கட்டிச் சண்டைக்குப் போக,

பிள்ளைத்தாச்சி என்பதையும் மறந்து சிறுமியைப் போல துள்ளிகுதித்துத் தப்பித்து ஓடினாள் சரோஜா.

பெங்களூர் வந்த நொடிமுதல் தரகர் அனுப்பிவைத்திருந்தப் புகைப்படங்களைப் பார்க்குமாறு விடாமல் நச்சரித்தாள் துளசி.

இரண்டு வருடம் அவகாசம் கொடுத்தால், பதவிஉயர்வு கிட்டும் என்றும், அதனால் சம்பளம் உயர்ந்தால், தன்னை நம்பி வரும் பெண்ணைப் பார்த்துக்கொள்ளும் தன்னம்பிக்கையும் பிறக்கும் என்று திருமணப் பேச்சை தற்காலிகமாகத் தவிர்க்க, காரணங்களை அடுக்கினான் பிரேம்குமார்.

“அதுக்குத்தான் பெரியப்பா சொன்னா மாதிரி அன்னைக்கே வெளிநாட்டுக்குப் போயிருக்கணும்! அம்மா, தங்கைன்னு காரணம் சொல்லி வந்த வாய்ப்பையும் மறுத்துட்ட!” முணுமுணுத்தாள் துளசி.

“வீட்டில் இரண்டு பெண்களைத் தனியா விட்டுட்டு கடல் தாண்டி வெளியூர் போகச் சொல்றியா!” சிடுசிடுத்தவன், “அப்படித்தான் பணம் சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல!” தீர்கமாக உரைத்தான்.

தந்தைக்கு நிகராக அடைகாத்த அண்ணனின் குணம் அவளுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.  

“சரி அண்ணா! உன் விருப்பம்!” தழைந்துப் போனவள், “நாங்களும் இரண்டு வருஷத்திற்கு அப்புறம் கல்யாணம் செய்துக்கறோம்…கதிர் கிட்ட சொல்லிடறேன்!” என்று பூடகமாகப் பேசி நகர்ந்தாள்.

உடன் பிறந்தவளின் அன்புத்தொல்லை ஒருவிதம் என்றால், கதிரேசனின் அக்கறையும், கனிவும் ஒருபடி மேல் என்று அறிந்திருந்தான் பிரேம்குமார். துளசியின் விருப்பங்களுக்கு மறுப்பே சொன்னதில்லை அவன்.

இனியும் தங்கையிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று உணர்ந்தவன், பெரியப்பா அனுப்பிய மின்னஞ்சலை திறந்துப் பார்த்தான்.

இருபதுக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி இருந்தார் அவர். ஒவ்வொருவரின் சுயவிவரத்தையும் படிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை அவனுக்கு.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கூற்றுக்கு இணங்க, பௌடர் உதட்டுச்சாயம் என கண்கூசும் ஒப்பனையில் மிதந்தப் பெண்களின் புகைப்படங்களை புறம் தள்ளினான். வாயில் நுழையாத பெயர்கள் என்று சில புகைப்படங்களை ஒதுக்க, மூன்றே பெண்களின் புகைப்படங்கள் தான் எஞ்சியிருந்தது.

“அஞ்சலி, சஞ்சனா, பூங்கோதை” பெயர்களை முணுமுணுத்தவன், மூன்று புகைப்படங்களையும் திரையில் முன்னும் பின்னுமாக நகர்த்த,

“பூங்கோதை… பூங்கோததை பிரேம்குமார்… கோதை…” என்று சொல்லிப் பார்த்தவனின் உதடுகள் தன்னிச்சையாக புன்னகையில் வளைந்தது.

முதல் முறையாக ஒரு பெண்ணின் முகத்தை இமைக்காமல் பார்த்ததின் தாக்கமோ, அடர் பச்சையும், நீலமும் கலந்த சுடிதார் அணிந்திருந்தவளின் காந்தக் கண்களோ,  மெல்லிய மயில் இறகுகள் இரண்டினை கன்னத்தோடு உரசிப் பிடித்து நிற்கும் அவள் கள்ளம் கபடமில்லா புன்னகையோ, ஒருநொடி தடுமாறித்தான் போனான் பிரேம்குமார்.

மறுநாள் காலை, தன் அலைபேசியில் சேமித்துவைத்த பூங்கோதையின் புகைப்படத்தைக் தங்கையிடம் காட்டி,

“பிடிச்சிருக்கா!” மென்சிரிப்புடன் வினவினான்.

பூங்கோதையின் எளிமையான தோற்றத்தைக் கண்டதும், ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு உணர்ந்ததைப் போல மெய்சிலிர்த்துப் போனாள் துளசி!

“ரொம்பப் பிடிச்சிருக்கு அண்ணா!” அண்ணனின் மனமாற்றத்தில் நெகிழ்ந்த பேதை, பனித்தக் கண்களோடு அவனை ஆரத்தழுவினாள்.

நற்செய்தி அறிந்த மல்லிகா, ராமநாதனிடம் கூற, அவரும் பேரார்வத்துடன் தரகரை அழைத்து, பெண் வீட்டாரிடம் மேற்கொண்டுப் பேசுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யச்சொன்னார்.

“ராமநாதன்! ஒரு சின்ன தவறு நடந்துடுத்து. அந்த மின்னஞ்சல், உங்க தம்பி மகன் ஜாதகத்துக்குப் பொருத்தமான மணப்பெண்கள் பட்டியல் இல்ல!” தரகர் மென்றுவிழுங்க,

“அதனால என்னத் தரகரே! குமரனுக்கும் இந்தப் பொண்ணுக்கும் பொருத்தம் இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க!” ராமநாதன் அலட்டலே இல்லாமல் மறுவழி சொன்னார்.

“ஜாதகம் பொருத்தம் மட்டுமில்ல…அந்த…அந்தப் பொண்ணு படிப்பிலும், உத்தியோகத்திலும்…உங்க…உங்க வீட்டுப் பையனைவிட….அது…அது…அவங்க எதிர்பாக்குறது…” தரகர் திக்கித்திணற,

“புரியுது தரகரே! எங்க குமரனுக்குப் பொருத்தமான பெண் இருந்தால் சொல்லுங்க!” தன்மையாகப் பேசி அழைப்பைத் துண்டித்தார் ராமநாதன்.

பிரேம்குமாரின் மனம் நோகாதவாறு, ராமநாதன் விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னபோதும், அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக வழிந்தோடியது.

அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருக்கப் பாடுபட்டவன், தங்கையிடம் தோற்றுத்தான் போனான்.

“அவங்கள உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா அண்ணா!” சிந்தனையில் கரைந்தவனாக மொட்டை மாடியில், நிலவின் வெளிச்சத்தில், தனியாக நின்றிருந்தவனிடம் வினவினாள் துளசி.

“ஹேய் லூசு! சும்மா புகைப்படம் தானே பார்த்தேன்!” இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தான் அவன்.

சமாதானம் ஆகாதவளாக அவள் அங்கேயே சிலையாக நிற்க, தங்கை தோள் சுற்றி ஆரத்தழுவியவன்,

“அந்தப் பெண் கொழுகொழுன்னு இருக்கறதப் பார்த்தா, நிறைய சாப்பிடுவா போல…அண்ணன் சம்பளத்துக்குக் கட்டுப்படி ஆகாது மா… இதுல பூங்கோதை…பூங்குழலின்னு அந்தக் காலத்துப் பெயர் வேற!” குறைச்சொல்ல வேண்டுமென்றே காரணங்களைத் தேடி தேடி அடுக்கி ஏளனமாக சிரித்தவன்,

“நடப்பது யாவும் நன்மைக்கேன்னு நெனச்சுக்கோ துளசி மா! எதைப் பற்றியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு!” என்று ஆறுதலாகக் கூறித் தேற்றினான்.

மனதில் ஆசைகளை தேக்கிவைத்துக்கொண்டு, வெளியில் சகஜமாக இருப்பதற்கு அண்ணனும் தங்கையும் போட்டிப்போட்டு ஊமை நாடகமாட, நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது.

திங்கட்கிழமை காலை, துளசியை அவள் பணிபுரிந்து வந்த குழந்தைகள் காப்பகத்தில் இறக்கிவிட்டவன், தன் அலுவலகத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பறக்க, அவன் அலைபேசி ஒலித்தது.

“அண்ணா! உன் மதியஉணவும் சேர்த்து நானே எடுத்துட்டு வந்துட்டேன். நுழைவாயிலுக்கு வந்து வாங்கிக்கோ!” என படபடத்தாள் துளசி.

மறுகணமே திரும்பி வந்தவன், நுழைவாயிலின் முன் காத்திருக்க,

“செக்யூரிடி! திருமதி.சுகந்தி மேடம் அலுவக அறைக்கு எப்படிப் போகணும்!” வினவியபடி அவன் எதிரே நின்றாள் பூங்கோதை.

“கோதை!” அவன் உதடுகள் தன்னிச்சையாக உதிர்க்க,

யார் இவன் என்று குழம்பி நின்றாள் கோதை.