காற்று21

கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்காக ஃபிரெஷர்ஸ் டே  வைத்திருந்தனர், அதில் இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள்  ஆடிப்பாடிக் கொண்டாட, அங்கே  சிவில் டிபார்ட்மெண்ட் மொத்தமும்  கூடி அக்கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன்  கண்டு களித்தனர்.

விழா முடியும் தருவாயில் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து தங்களுக்கு தெரிந்ததை செய்து விட்டு  போகச் சொல்ல, மேடையேறி வந்த அவர்களும் ஆடிப் பாடி விட்டுச் செல்ல, கடைசியாக” லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், யாராவது வரீங்களா?” சீனியர் ஒருவன் மைக்கை பிடித்து கேட்டான்.

“நான் பாடுறேன் ” என்று சாகரன்,  கையை  உயர்த்த, இந்த இரண்டு மாதத்தில் இப்படி ஒரு ஜீவன் இருப்பதை அறியாத அவர்கள், அந்த ஜீவனை ஆச்சரியமாக பார்த்ததோடு மேடைக்கு அழைக்க, அழகான  புன்னகையோடு மேடை ஏறினான்.

“வாங்கோ அம்பி !நீ  இந்தக் காலேஜ்  தானா?  இந்த ரெண்டு மாசத்துல  உன்னை பார்த்ததே இல்லையே  !” என அவர்கள் கேட்க, ” நான் கொஞ்சம் 

சை டைப் அவ்வளவா  யார்கிட்டயும் பேசிக்க மாட்டேன். அதான் என்னை  பத்தி யாருக்கும் தெரிஞ்சிருக்காது சீனியர்” என்றான்.

“இப்போ  உன்னை பத்தி தெரிஞ்சுக்கலாம், சரி என்ன பண்ண போறேள்?”

“அதான் பாடுறேன் சொன்னேனே !” என்றான்.

“ஓ பாடுங்கோ !” என்றவன், ” சாமி பாட்டு இல்லேல” என அவனும் பயந்து போயி  கேட்க, ” நீங்களுமா சீனியர்?” எனக் அழகாய் வெட்கப்பட்டு சிரிக்க,  

“ஐயோ !!! என்ன டா இவன் அழகா வெட்கப்பட்டு சிரிக்கறான். எனக்கு இவனை பாக்கறச்ச சிலம்பாட்டத்துல வர ஜூனியர் சிம்பு போலவே இருக்காண்டா ! அவனுக்கு ஆள் இருக்கானு கேளுங்க டா !” சீனியர் கேர்ள்ஸ் புலம்ப,

“டேய் இவ்வளவு  நாள் யாருனே தெரியாம மறஞ்சு இருந்தவன வெளிக் கொண்டு வந்து தப்பு பண்ணிட்டீங்களே டா ! எத்தனை  பொண்ணுங்க  பைத்தியமாக போகுதோ !” சீனியர்களை புலம்ப விட்டவன் தன்னவளை பார்த்து பாட ஆரம்பித்தான்.

ரோமியோவின் ஜீலியட்

தேவதாஸின் பார்வதி

ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரிதோன்றுவாளே

நான் விரும்பும் காதலி

அவளது அழகெல்லாம்

எழுதிட ஓர் பாஷை

இல்லையே

அவளை நான்

அறிந்தபின்

உயிரின் மேல் ஓர் ஆசை

இல்லையே

பூவாழை கொண்டாடும்

தாய்பூமியை

பார்த்துசந்தோஷம்

கொண்டாடும்என் காதலை பார்த்து

கொண்டாட்டம் கொண்டாட்டமே..

ஹேஓஹோஓ

அவள் உலக அழகியே

நெஞ்சில் விழுந்த அருவியே…!

பாடி முடிக்க, ஆண்கள் வாயை பிளக்க , பெண்கள் கண்களில் சிவப்பு நிற இதய வடிவம் வந்து போனது. பக்கத்தாத்து  எதிர்த்த வீட்டு  வயசான மாமியே மயங்கறச்ச, கன்னி பெண்கள் அவன் குரலுக்கு மயங்க மாட்டார்களா என்ன ?மயங்க வில்லை என்றால் அவர்கள் பெண்களே இல்லையே ! கரகோசத்துடன் கீழே இறங்கி நிழலியின் அருகே அம்பியாய் வந்து  நின்றவன் மேல் தான் அத்தனை கண்களும். நிழலியின் கண்கள் கூட அவனை விட்டு அகல  மறுத்தன.

கொண்டாட்டங்கள் முடிய, மாணவர்கள் அவரவர் வகுப்பிற்கு சென்றனர். அமைதியாக தன்னோடு வரும் நிழலியை பார்த்துக் கொண்டே வந்தவன் “என்ன நிழலி அமைதியா வர? நன்னா இல்லையா என் பாட்டு?” என்று கேட்டவனை இமைக் கொட்டாது பார்க்க, அவள் பார்வை புரிந்து, ” என்ன என்னை கல்யாணம் பண்ணிக்கறீயா ஐயங்கார் கேட்க  போறீயா?” அவளுக்கு முன்னமே அவன் கேட்டு வைக்க, பட்டென சிரித்து விட்டாள்.

” எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்ல நிழலி” என்றான்  தோலை குலுக்கி குறும்பாக சிரிக்க, இப்போது புரையேறுவது அவளது முறையானது.

அவள் தலையை தட்டி” சும்மா விளையாட்டுக்கு  சொன்னேன் டி”என்றவனை  பொய்யாய் முறைத்தவள், ” நோக்கு வாய் கூடி போச்சு ஐயங்கார். கொஞ்சம் கூட  என் மேல உனக்கு பயமே இல்ல !”  என அலுத்துக் கொண்டாள்.

“ஹா ஹா ஹா என்ன செய்றது? வக்கீல் வண்டு முருகி கிட்ட சேர்ந்தால் அப்படி தான் வாய் கூடுறது. இதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ !” என அவளை கலாய்க்க,

“யோவ் கேனடா கொத்தனாரே ! என்ன  என்னையவே கலாய்கிறீயா பிச்சு பிச்சு” என ஒரு விரல் நீட்டி மிரட்ட, ” ஐயோ பயந்துட்டேன் நிழலி ! ” என்றவன் மேலும் சிரிக்க, அவன் புஜத்தை கிள்ளி, “கொன்னுடுவேன் ஆள பாரு !”என பொய்யாய் முறைத்தாள் .

தனது லாயர் கனவை அவனிடம் பகிர்ந்ததால் அவளை ‘வக்கீல் வண்டு முருகி’ என்றே அவளை அழைத்து கலாய்ப்பான். இவனது கனவு, கேனடாவிற்கு சென்று வேலைபார்க்க வேண்டும் என்பது தான். அதான் அவனை ‘ கேனடா கொத்தனார்’ என்பாள். இருவரும் ஒருத்தருக்கொருத்தர் அப்பெயர் சொல்லி கலாய்த்து கொள்வார்கள்.

“ஸ்ஸ் வலிக்குதுடி” என்று தேய்த்தவன் ” என் பாட்டு எப்படி சொல்லவே இல்லையே ?” என அவளை நினைத்து அவளுக்காக பாடியவன் அவள் பதிலை எதிர்பார்த்து கேட்க “செம்ம வாய்ஸ் உனக்கு சாகரா ! அப்படியே ரசகுள்ள சாப்பிடது போல இருந்தது . எத்தனை பெண்களுக்கு நீ ஹீரோவானியோ !” என்று மேலே பார்த்து சொல்ல ” ஏதே ஹீரோவா நானா போ மா !” என்று சலிப்பாக சொன்னான். ஆனால் அது தான் உண்மை,  பெண்கள் எல்லாரும் அவனை ஹீரோவாக தான் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

வகுப்பிற்குள் அவன் வந்ததும் நிழலியை இடித்து கொண்டு அவனை சுற்றி வளைக்க, நிழலியோ தடுமாறி விழப்போனாள்.

அனியும் ராக்கியும் அக்கூட்டத்தை ஆ- வென பார்த்தனர். ”  இவன் ஒரே பாட்டுல ரெமோவா மாறிட்டான் டா !” அனி அங்கலாய்க்க, “நான் தான் சொன்னேனே, அவனுக்குள்ள ஒரு ரெமோ ஒழிஞ்சு இருக்கான்னு, இனி இங்க என்ன என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ !” ராக்கி புலம்ப, ” நேத்து தான் ஒரு பொண்ணு கிட்ட சிரிச்சு வழிஞ்சேன். அதுவும்  இன்னைக்கு அவன் பின்னாடி போச்சு டா !” என்று தலையில்

கைவைத்து  விட்டான் அனி.

இங்கு சாகரனிடம் பெண்கள் பேச, அவனோ கூச்சத்தில் நெழிய ” இதெல்லாம் பார்க்கணும் கொடுமை டா !” என்று தலையில் அடித்து கொண்டனர்.

எத்தனை பெண்கள் பேசினாலும் சாகரனின் பார்வை நிழலியே சுற்றியது. பெண்களிடமிருந்து சாகரனை காப்பாற்றுவது நிழலியின் வேலையானது .

பெண்கள் மத்தியில் பிரபலமானாலும் இன்னமும் அவன் அம்பியை போல வர, அவனை ஸ்டைலாக மாற்றுகிறேன் என்ற பேர்வழியில் அவன் முடியை கலைத்து விட்டு பெண்கள் போல கொஞ்சம் கீழே  விட்டு போனி டேயில் போல போட்டு விட, வட மாநிலத்தவனை விட படு அம்சமாக இருந்தான் சாகரன். கல்லூரியில் பெண்களின் கனவு நாயகன் அவன் தான். ஆனால் ஆதர்ஷன் , அனி, ராக்கிக்கு அவனை சுத்தமாக பிடிக்காமல் போனது ‘தன்னை விட அவன் எதில் ஒசத்தி ?’ என்ற கேள்வி அவர்களின் பார்வையில் எப்போதும் இருக்கும்.

ஆனால் அவர்கள்  மூவரையும்  மனிதாக கூட அவன் மதித்ததில்லை. எப்பையும் அவன் நிழலியோடு தான் இருப்பான். தனியாக அவர்கள் மூவரும் அழைத்து அவனிடம் நிழலியை விட்டு பிரிந்து செல்லுமாறு  பேசிப்பார்த்தனர். ஆனால் அவன் ‘அவளை விட்டு போவதாக  இல்லை’ மூவரும் கடுப்பானார்கள்.

ஆதர்ஷனை தவிர வேற யாரையும் அவன் நிழலியிடம் அனுமதித்ததில்லை. முக்கியமாக  ராக்கியை அனியையும்  பெண்கள் விஷயத்தில் இருவரும் மோசம் என்பதை அவர்கள் பழகும் விதத்திலே அறிந்தவன், அவர்களிடம்  இருந்து நிழலியை காப்பாற்றினான்.

நிழலியை, தன் காதலி, தோழி என்பதை தாண்டிலும் அவளை தன் மகளாத் தான் பார்த்தான். அவனது அன்பு , அக்கறையை காண அவளுக்கு இன்னொரு வினோதனாகத் தான் தெரிந்தான். அதை அவள் தன் தந்தையிடம் கூட சொல்லிருக்கிறாள். அவனை தன் வீட்டிலும் அழைத்து வந்திருக்கிறாள். வள்ர்ந்த சாகரனை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. தன் குடும்பத்திலுள்ள அனைவருக்கும்  சாகரனை அறிமுகம் செய்து வைத்தாள். அவனையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் சாகரனோ நிழலியை பற்றி தன் வீட்டில் மூச்சு  விடவில்லை. தந்தையை பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும், ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் தவறாக எண்ணிக் கொள்ளும் காலத்து மனுஷனவர். தன்  குடும்ப சூழ்நிலையை பற்றி அவளிடம் சொல்லியிருக்கிறான், அவளும்  புரிந்து கொண்டாள். நாட்கள் , மாதங்கள் ஓட,  சாகரனின்  மூத்த அக்காவிற்கு திருமணம் முடிந்தது . அவளை அழைக்க வில்லை. ஆனால் அவன் காரணத்தை சொல்லி புரிய வைத்தான்.

இருவரின் நட்பும் புரிதலோடு பயணத்தது. ஆதர்ஷன் அவளிடம் பேச வந்தால் மட்டுமே விலகி நிற்பான். ஆனால் அப்போது மட்டும் அதீத வலியை  தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே புழுங்குவான். அதன் பின் நிழலி, பேச வந்தால் சகஜமாகிடுவான். இரவு முழுக்க அவளை எண்ணி வலியில் கரைந்தாலும் அதற்கு அவளறியாமலே அவளே மருந்தானாள்.

ஆனால் இவர்களின் நட்பை அந்நால்வரும் கோரத்துடன் தான் பார்த்தனர்.  அவர்கள் இருவரையும் பிரிக்கவும் செய்யணும் அதே நேரம் பிரித்தது தங்களால் தான் என்று வெளியே தெரிய வராமல் பிரிக்க  திட்டம் போட்டனர்.

முதல் திட்டத்தை நிறைவேற்ற  அந்த நாளும் வந்தது. வேறு கல்லூரியில்  நடந்த இன்டெர் காலேஜ் காம்பேட்டிஷனில் கலந்து கொள்ள, முதலாமாண்டு  இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர் அந்தக் கல்லூரிக்குச் செல்ல, அதில் சிவல் டிபார்ட்மெண்ட்டிலிருந்து நிழலி, ஆதர்ஷன், சாகரன், அனி, ராக்கி இன்னும் சிலர் சென்றனர். குரூப் சாங்ஸ் பாட இவர்கள்  அனைவரும் வந்திருந்தனர். என்ன தான் உள்ளே வன்மம்  இருந்தாலும் கல்லூரிக்காக  ஒற்றுமையாக போட்டியில் கலந்து  கொண்டனர்.  

பின் நிழலியும் சாகரனும் கேன்டீன் சென்று காபி அருந்தி கொண்டிருக்க, உடலை இறுக்க பற்றியது போல ஒரு சுடியில் மார்பை மறக்க இரண்டு பக்கம் ஷாலை குத்திவிட்டு,  அடக்கம் ஒடுக்கமாக ஒரு பெண் வந்து அவர்கள் முன் வந்து  நின்றாள்.

“சாகரன் எப்படி இருக்கேள்?” அவனது பாஷையை போல பேசினாள் அந்தப்பெண், “நீங்க யாரு? என் பெயர் எப்படி உங்களுக்கு தெரியும்?”

“என்ன சாகரன் என்னை மறந்துட்டேளா?”பதற்றமாக கேட்க, “நேக்கு உங்களை யாருனே தெரியாது? இதுல மறந்துட்டேளான்னு கேக்குறேளே ! யாரு நீங்க?”

“நமக்குள்ள நடந்த சண்டையில் பிரிஞ்சுட்டோம் தான். அதுக்காக உங்க காதலிய மறந்துடுவீங்களா சாகரன் ! என்னை யாருன்னு கேக்குறீங்களே ?” மேலும் அவள் விசும்ப,

நிழலியும் சாகரனும் பார்த்துக் கொண்டனர். “ஹலோ இப்போ ஏன் அழறேள்? எனக்கு நீங்க யாருனே சத்தியமா தெரியாது? எதுக்கு என் கிட்ட வந்து இப்படி பேசுறேள் ?” அவன் பதறி கொண்டு கேட்க, நிழலி அவளை வெறித்தாள்.

“பின்ன அழமா என்ன பண்ண சொல்றேள்? என்னை தெரியாதுனு சொன்னால் அழறத தவிர வேற என்ன செய்ய? நாம ரெண்டு பேரும் ஒரே பள்ளில தான படித்தோம். நீங்க தானே வந்து என்னை காதலிக்கிறேன்  சொன்னீங்க. நானும் உங்க காதலை ஏத்துண்டேனே, நாம்  ரெண்டு பேரும் காதலிசோமே மறந்துட்டேளா? ஏதோ ஒரு சண்டையில என்னை  மொத்தமா மறந்துட்டேளா?” அவள் கண்ணை கசக்க, சாகரனுக்கோ தலையே  சுற்றியது, ‘யாரிவள் திடீரென வந்து காதலி என்று சொல்லி அழுகிறாள் ? ஆனால் எனக்கு இவளை யாரென்று கூட தெரியாதே? நிழலி வேறு தன்னை என்ன நினைப்பாளோ !’ உள்ளுக்குள் புலம்பியவன், நிழலியை பார்க்க, அவளோ அவளை கூர்ந்து பார்த்தாள்.

“ஏன் அமைதியா இருக்கீங்க சாகரன்?  பேசுங்க என்னை ஏன் மறந்தீங்க?” கண்களில் நீரோடு அவள் தன் நாடகத்தை போட, அவன் மேலும் குழம்பி தவித்தான். ஆனால் நிழலிக்கு இது நாடகம் என்று புரிய சுற்றி சுற்றி பார்த்தாள். அவள் கண்ணில் பட்டது அனியும் ராக்கியும் தான். தன் நட்பு வட்டாரத்திலுள்ள ஒரு பெண்ணை அழைத்து சாகரன் ஏமாற்றியதாக கூறி நடிக்க சொல்ல, நிழலியும் அதனை நம்பி அவனை பிரிய  வேண்டும் என்றுஅரதபழசான இத்திட்டத்தை சொல்லி, அவளை அனுப்பி வைத்தவர்கள், அவள்  சரியாக செய்கிறாளா? ‘என்று மறைந்து  நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘ஓ…  இது உங்க வேலையா? இருங்கடா  உங்களை வச்சு செய்றேன்”என்று எண்ணிக் கொண்டவள்,

“என்ன சாகரா அந்தப் பொண்ணு அழுகுது இப்படி சிலை மாதிரி நிக்கற? அந்த பொண்ணை ஏன் தெரியாதுனு சொல்ற?”  உண்மையென நம்பியது போல பேச அவனோ அதிர்ந்தான்.

” நிழலி” என வாய் திறக்க, கண்ணடித்து அவனை அமைதி படுத்தியவள், “இருந்தாலும் உன் காதலிய, உன் காதல்ல  மறந்திருக்க கூடாது சாகரா? உனக்காக அவங்க பாம்பேக்கு போய் ஆப்ரேஷன் பண்ணி ஒரு பொண்ணா வந்திருக்கான் இல்ல வந்திருக்காள் அவனை இல்ல அவளை போய்  தெரியாது சொல்றீயா உனக்கு மனசாட்சியே இல்லையா?” என அவள் கேட்க இப்போது பதறுவது அவளது முறையாயிற்று.

“என்ன சொல்றீங்க? நான் பொண்ணு தான். பாம்பேக்கு போய் ஆப்ரேஷன் எல்லாம் பண்ணல”என்றாள் பதறிக்கொண்டு.

“அப்படியா? ஆனால் நீங்க தான சொன்னீங்க சாகரனும் நீங்களும் ஒரே பள்ளில படிச்சீங்கன்னு, அவன் பாய்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சான் அதான் ஒரு வேல அவன் மேல் உள்ள காதல்ல ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்துட்டீங்களோ  நினைச்சேன். ஒரு வேளை சாகரன் இவங்க மட்டும் தனியா உங்க ஸ்கூல் படிச்சாங்களா என்ன?” என சாகரனை பார்த்து கேட்க அவன் முகம் இப்போது தான் தெளிவானது.

“என்ன சொல்லுங்க?  பாய்ஸ் ஸ்கூல்ல நீங்க  ஒரு  பொண்ணு மட்டும் தான் படிச்சீங்களா என்ன?” எனக் கேட்டு அவள் முன்னேற, “அது அது ” என அவள் திணற அவளது கையை முறுக்கி, அவள் காதில், “அனியும், ராக்கியும் தான உன்னை அனுப்பினாங்க” என்று கேட்க” ஆமாம் ” என்று தலையை ஆட்டியனாள்.

அவள் கையை விடுவித்தவள், “சாகரா பிராங்க்காம் நீ ஒன்னும் பயப்படாத? இவங்க சும்மா உன் பயப்பட வைக்க செய்திருக்காங்க !”என்ற நிழலி அவளை முறைக்க, “சாரி சார் பிராங்க்  தான் பிரண்ட்ஸோட சேர்ந்து பண்ணினோம்” என்று அங்கிருந்து விட்டால் போதுமென்று ஓடி விட்டாள்.

தன் நெஞ்சில் கைவைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “எப்படி கண்டு பிடிச்ச நிழலி?”

“அதுவா நீ, பாய்ஸ் ஸ்கூல் படிச்சேன் சொல்லிருக்க, அவ வேற ஒரே ஸ்கூல் படிச்சோம் சொன்னாளா ?  அங்க  தான், அந்தப் பாயிண்ட் பிடிச்சேன்” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு கொள்ள, உதட்டை பித்துக்கியவன், “வக்கீல் வண்டு முருகின்னா சும்மாவா ! பின்னிடீங்க ஜீ” என்று புகழ்ந்தான்.

அதன் பின் சாகரனுக்கு தெரியாமல் அனியையும் ராக்கியையும் சட்டையை பிடிக்காத  குறையாக சண்டையிட, “விளையாட்டுக்கு தான் செய்தோம்” என்று இருவரும் சத்தியம் செய்யாத குறையாக அடிச்சி சொல்ல, அவர்கள் இருவரிடமும், “இனி சாகரனை ஏதாவது செய்யனும்  நினைச்சீங்க  நான் மனுஷியா இருக்க மாட்டேன் “மிரட்டி விட்டுச் சென்றாள்.

கொஞ்சநாள் அமைதியாக இருந்தவர்கள் சாகரனின் செயலால்  மீண்டும் அவன் மீது வன்மம் கொண்ட இருவரும் அவனை அவமான படுத்த எண்ணி,  அவனை தனியே வளைத்து அவனிடம் அத்துமீற சாகரனு தான்  கூனி குறுக நின்றான்.

காற்று வீசும்