காற்று 2
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
பெரிய பெரிய வீடுகளை கொண்ட அத்தெரு முழுவதும் ஓரளவு வசதியானோரே. அடிக்கடி பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பண்டிகை என்றால் கூடி, இனிப்புகளையும் வாழ்த்துக்களையும் மாற்றிக் கொள்வார்கள். பானுமதியும், கிருஷ்ணா ஜெய்ந்திக்கு அவர்களை(அக்கம் பக்கத்தினரை) அழைத்திருக்க, அவர்களும் பகுமானம்
காட்டாமல் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண்மணி புதிதாக அந்த தெருவில் குடி வந்தவர்.
அவரை தவிர, மத்த அனைவருக்கும் ஓரளவு இவர்களது வீட்டு விவகாரத்தை தெரிந்து வைத்திருந்ததால், தேவை இல்லாததை பேசி வம்பை விலைக்கு வாங்காமல் வந்த வேலையை மட்டும் பார்த்தார்கள். ஆனால்
அந்தப் பெண்மணியோ அதிதியின் பேச்சையும் அழகையும் கண்டு, அவளை அருகில் அழைத்தார்.
“உன் பேரு என்ன மா?” அவள் தாடையை பற்றிக் கேட்டார். ” அதிதி ” என்றாள்.
“அழகான பேரு, ஆமா உங்க அம்மா , அப்பா எங்க காணோம்…?” என்று சுத்தி பார்வையைச் சுழற்றியவாறே கேட்டார்.
அக்குட்டி அவருக்கு பதில் சொல்லும் முன்னே, வாசலில் வந்து நின்றாள் நிழலி. அப்போது தான் வேலை முடிந்து வந்தவள், அவர் கேட்ட கேள்வியால் நின்றாள்.
“சொல்லுமா எங்க இரண்டு பெரும்?” மீண்டும் கேட்க, ” அதிதி…!” என நிழலி அழுத்தமாக அழைத்தாள்.
தாயைக் கண்டதும் வேகமாக ஓடி அவளை கட்டிக் கொண்டு, “ஆண்ட்டி, இவங்க தான் என் அம்மா , அப்பா…” என்று கூறி,தன் தாயைப்பார்க்க, தன் மகளை அணைத்துக்கொண்டு அந்தப் புதிய பெண்மணியைப் பார்த்தாள். அவரோ நிழலியை தான் ஆராய்ந்தார். நெற்றியில் பொட்டு , கழுத்தில் தாலி காலில் மெட்டியென, திருமணமான பெண்களுக்கு உரிதான அடையாளங்களைத் தேட, எதுவும் கிடைக்காமல் போக, புரியாமல் நிழலியின் முகத்தை பார்த்தார். அவரது பார்வையை புரிந்து கோபத்தில் சிவந்தாள்.
பக்கத்தில் இருக்கும் பெண், இப்புதியவரிடம் காதில் எதையோ கிசுகிசுக்க, அமைதியானவர், கூட்டத்தோடு கிளம்பிவிட்டார்… உள்ளே நுழையும் போதே பானுமதியின் கோபப்பார்வையை அசட்டை செய்து விட்டு மாட்டியேறினாள்.
“வாசு, பானுமாவைப் பார்த்தா, இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கும் போல…” அவன் காதில் கிசுகிசுத்தாள் மிருதுளா.
“எத்தனை சம்பவம் பார்த்துட்டோம் இதையும் பார்த்திடுவோம் டீ…” என்று காலரை பின்னுக்கு இழுத்து விட, பக்கவாட்டில் இருப்பவனை திரும்பி பார்த்தவள், “என்னமோ, நீயே எல்லாத்தையும் பார்த்த மாதிரி பேசற?”
“பின்ன சம்பவம் நடக்கும் போதெல்லாம் வேடிக்கை பார்க்கிறேன்ல, அதை தான் சொல்லுறேன்” அசட்டையாக சொன்னவனின் மண்டையில் நங்கென்று குட்டு வைத்தாள்.
“ஸ்ஸ்ஸ்… ஆஆ பைத்தியமே, என்ன சொல்லிட்டேன் இப்ப கொட்டுற?” தலையை தேய்த்துக் கொண்டே கேட்டான். ” அப்படி தான் கொட்டுவேன்… மூஞ்ச பாரு” என்று திரும்பிக் கொண்டாள்.
தன்னை சுத்தம் செய்துக்கொண்டு
கீழே இறங்கி வந்தாள். அவளுக்காக காத்திருந்தது போல, அதிதி, முறுக்கு, சீடை, அவல் நிறைந்த தட்டை எடுத்து அன்னைக்கு கொடுக்க அவளை தூக்கி மடியில் வைத்தவள், தட்டில் இருந்த சீடையை வாயில் போட்டு மெல்ல, பானுமதி ஆரம்பித்தார்.
“இன்னும் எத்தனை நாளைக்கு அதி, உன்னையே அம்மா அப்பானு காட்டுவா? “
“கடைசி வரைக்கும்” என்றவள், ஒருவாய் அதிதிக்கும் ஊட்டிவிட்டாள். “அண்ணி, இப்பவே ஆரம்பிக்கணுமா? பாப்பா இப்பத்தான் வந்திருக்கு கொஞ்சம் அமைதியா இருங்களேன்…” தென்றல் பானுவை அமைதிப்படுத்த, ” இல்ல தென்றல், இதுக்கு நானும் முடிவு கட்டலாம் பார்க்கறேன். இவ வழிக்கு வர மாட்ற, அந்தப் பொண்ணு, இவளை எப்படி பார்த்தானு தெரியுமா?” என்று கண்கள் கலங்க,
“எப்படி பார்த்த என்ன? அவங்க பார்க்கிறாங்கனு நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? இல்ல கழுத்துல தாலி, காலுல மெட்டி நெத்தியிலகுங்குமம் வச்சக்கணுமா? பேசாம அதை மட்டும் வச்சிக்கட்டுமா? அப்ப என்னை அப்படி பார்க்க மாட்டாங்கள, என்ன அத்த ஒ.கே வா…” தென்றலைப் பார்த்து நக்கலாக கேட்டாள்.
“கொழுப்பு டீ உனக்கு? நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க?”
“மா, நீ என்ன சொன்னாலும் அர்த்தம் ஒன்னு தான். மத்தவங்களுக்காக, கல்யாணம் பண்ணி மத்தவங்களுக்காக வாழணும் அதானே?” எனக் கோபமாக கேட்டாள்.
“மத்தவங்களுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லல. உன் பொண்ணுக்காகவாது கல்யாணம் பண்ணுனு தான் சொல்றேன்… அவளுக்கு அப்பானு ஒருத்தர் வேணாமா? எத்தனை நாளைக்கு உன்னையே அப்பா அம்மான்னு சொல்லுவா?” அதிதியைக் காரணம் காட்டி அவளை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க பானுமதி போராடிக் கொண்டிருக்கிறார்..
ஆனால் அவரது போராட்டம் தொடர் தோல்வியை தழுவின.
“ஃபயர் பேபி, உனக்கு அப்பா வேணுமா? “
அதிதியோ, “வேண்டாம்” என்று இட வலப்பக்கமாக தலையை ஆட்டி, “எனக்கு ஏர் பேபி மட்டும் போதும் அப்பா வேணாம்” என்றது. அவளுக்கு ஒரு முத்தத்தை கொடுத்தவள், ‘எப்படி’ என்பது போல தாயைப் பார்த்தாள். பல்லைக் கடித்த பானுவோ” அவளை விடு டீ, உனக்கு ஒரு துணை வேணாமா? கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இருக்க போறீயா? “
“ஆமா, கடைசி வரைக்கும் இப்படி தான் இருக்க போறேன்”
“அப்படியே வாயில் போட்டுருவேன் டீ…நீயும் மத்த பொண்ணுங்கள போல புருஷன் குழந்தை குட்டினு வாழணும் பெத்தவளுக்கு ஆசை இருக்காதா? தனியா இருந்து காலத்த கழிக்கணும் என்ன தலையெழுத்தா டீ உனக்கு… கொஞ்சமாச்சு எங்க பேச்சை கேக்கிறீயா நீ?”
“உன் ஆசைக்காக எல்லாம் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது மா. இது என் வாழ்க்கை எப்படி வாழணும் நான் தான் முடிவு எடுக்கணும்… உனக்கு அதுல உரிமை இல்லை…” என்றாள்.
“உன்னை பெத்ததுக்கு, எனக்கு உரிமை இல்லைனு தான் டீ சொல்லுவா… நீ கேட்டதெல்லாம் செஞ்சு, உன் இஷ்டத்துக்கு விட்டதுனால, எவனையோ காதலிச்சி ஏமாந்து பிள்ளையோட இருக்க, அப்பவே உன்னை கண்டிச்சி வளர்த்திருந்தா, இப்படி பேசிட்டு இருந்திருப்பீயா நீ, இல்ல இந்த தப்பை தான் செஞ்சிட்டு வந்திருப்பீயா?” கடுமையாக கேட்டு வைக்க, அதில் கோபம் வந்து,
“அம்மா…!!!” எனக் கத்தியவள், “கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறதே, நான் செஞ்ச தப்புக்கு, எனக்கு நானே கொடுத்துகிற தண்டனை. இதுல கல்யாணம் பண்ணி இந்தக் குழந்தைக்கும் தண்டனை குடுக்கணுமா? என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறவன், இவளை ஏத்துப்பானு என்ன நிச்சயம்? எனக்கு கல்யாணம் கருமாதினு எதுவும் வேணாம். எனக்கு அதிதி போதும்…” என்றாள் தீர்க்கமாக,
“அப்போ, அந்த அதர்ஷனையே கல்யாணம் பண்ணிக்க, அவன் தானே அதிதிக்கு அப்பா…!!!” என்றதும் முகம் சுளித்தவள் அவரிடம், “அவன் தான் இந்தக் குழந்தைக்கு, நான் அப்பா இல்லேன்னு சொல்லிட்டானே, அவன் எப்படி அப்பனாவான்…?”
“அதான் நான் சொன்னது தப்புன்னு சொல்லி மன்னிப்பு கேட்டானே? அவனை ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்க வேண்டுயது தானே?”
” கடிச்ச நாய கூடவே வைச்சு வாழ சொல்றீங்களாமா? என்னை கெடுத்துட்டான்ற ஒரே காரணத்துக்காக அவனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது… உங்க மைண்ட் செட் எல்லாம் மாறாவே மாறாதா? கெடுத்தவன் எப்பேர்ப்பட்டவனா இருந்தாலும் அந்தப் பொண்ணு அவனை தான் கட்டிக்கணும் அப்படி தானே? என்னை உங்க வரையறை குள்ள திணிக்காதீங்க, நான் அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவள்…” என்றாள் முடிவாக
“இல்ல டீ நான்…” என்னும் போதே அலுவலகத்தில் இருந்து வந்த கிருஷ்ணனோ தமக்கை மேல் கோபம் கொண்டு கத்தினார், “அக்கா, உனக்கு இதே வேலை தானா? எத்தனை
முறை சொல்லிருக்கேன். அவ கிட்ட, கல்யாணத்தை பத்தி பேசாதனு. புரியவே புரியாத அக்கா உனக்கு, அவளுக்கு புருஷன் தான் துணையா இருக்கணுமா, ஏன் நாம இருக்கக் கூடாதா? நம்ம கூட இருக்கிறத விடவா புருஷன் வீட்ல சந்தோஷமா இருக்க போறா? அவளை நிம்மதியா இருக்க விடுக்கா…”என்றார் மற்றொரு தாயானவர்.
“ஆமா அண்ணி, நமக்கு பாப்பாவோட
நிம்மதி தான் முக்கியம், அது இங்கயே கிடைக்கும் போது, எதுக்கு புருஷன் துணையெல்லாம்… அவளுக்கு விருப்பம் இல்லாதத திணிக்காதீங்க ப்ளீஸ்” என்றார் விக்ரமன்..
“என்னமோ பண்ணுங்க…”என்று விட்டு பானுமதி உள்ளே சென்று விட்டார். தன் மகளை தூக்கிக் கொண்டவள், “தேங்க்ஸ் மாமா, தேங்கஸ் ப்பா…” என்று தன்னறைக்குச் சென்று விட்டாள் நிழலி.
புயல் அடித்து ஓய்ந்து போனது போல இருந்தது அங்கிருப்பவர்களுக்கு.
பானுமதி, வினோதன்
தம்பதியரின் ஒரே மகள் தான் நிழலி. முப்பது தொடக்கத்தில் இருக்கும் இவளை ஒரு குழந்தைக்கு அன்னை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். வெண்ணெய் மேனியுடையாள், அதில் நழுவாத வில் புருவமும் நாவல் பழ விழிகளும், கத்திபோன்ற கூர் நாசியும் பால் ரோஸ் அதரங்களென பிரம்மன் படைத்து ‘தேவதை இவளோ ‘ என்று முணுமுணுக்கும் படைப்புகளில் இவளும் ஒருவளே!
வினோதனின் தம்பி விக்ரமன், விக்ரமனின் மனைவி வெண்மதி. அக்கா தங்கையை இருவரையும் அண்ணன் தம்பி இருவரும் கட்டிக் கொண்டனர் . விக்ரமன் வெண்மதிக்கு இரு பிள்ளைகள் மிருதுளா, மிருதன்.
பானுமதி, வெண்மதியின் ஒரே தம்பி கிருஷ்ணன். அவரது மனைவி தென்றல், மகன் வாசுதேவ்.
மூன்று குடும்பமும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருக்கின்றன… வினோதன் இறந்துவிட, கிருஷ்ணனும் விக்ரமனும் தான் கம்பெனியையும் தாங்கி பிடித்துக் கொண்டனர். மதுரையில் புகழ் பெற்ற கன்ஸ்டருக்ஷன் கம்பெனிகளில் இவர்களதும் ஒன்று.
குடும்பத்தில் மூத்த வாரிசான நிழலி , பி.ஈ சிவில் நான்கு வருடம் முடித்தவள், வழக்கறிஞர் ஆக வேண்டுமென்ற தன் கனவில், பி.எல் மூன்று வருடம் படித்து தேர்ச்சி பெற்று, இன்டெர்ன்ஷிப் என்று மிகப் பெரிய வழக்கறிஞரிடம் ஐந்து வருடம் அஸிஸ்ட்டேன்ட்டாக பணிபுரிந்து, பார் கவுன்சிலில் தன் பெயரையும் பதித்து விட்டு தானும் ஒரு வழக்கறிஞர் என்று தனக்கு வந்த முதல் கேஸிலே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தாள். வழக்கறிஞருக்கு முதலில் தேவை தைரியம், பேச்சு திறன் என இன்னும் ஐந்து திறமைகள் இருக்க வேண்டும் என்று அவளது தந்தை அடிக்கடி சொல்வர்.
அவளது முதல் தோழன், அவளது தந்தை தான் . ஏனோ அவரது இழப்பே வாழ்க்கையில் அவள் காணும் முதல் சரிவு. எந்தவொரு விஷயத்திலும் சரியாக முடிவெடுபவள் காதலில் மற்றும் தவறானவனை தேர்ந்தெடுத்து விட்டு அதற்கு தண்டனையாய் அதிதியை சுமந்தாள் கல்யாணமாகாமலே, ஆனால் அவளை தண்டனையாக ஏற்காமல் வாழ்க்கையின் பிடிமானமாய் நினைத்து வாழ்கிறாள். வாசுதேவ்வும் படித்து முடித்து விட்டு தந்தை மாமனுடன் தொழிலை கவனித்து கொள்ள, மிருதுளா ஃபேசன் டீஸைனிங் படித்துக் கொண்டுருக்கிறாள். மிருதன், பி.ஈ மெக்கானிக்கல் முதல் வருடம் படிக்கிறான். அவர்கள் வீட்டு இளவரசி அதிதி, u.k.g படிக்கிறாள்.
மப்பும் மந்தாரமுமாக ககனமிருக்க, மிரனின் ஆட்சி இன்றில்லை போலுமென ஏக்கத்தோடு வானம் பார்த்து நின்றவனது வாழ்க்கையிலும் பருவதி(நிலா)யும் என்றோ மறைந்து போனது.
வளியின் வேகத்தில் மேனியெங்கும் சீதளம் பரவ, தன்னவளே வந்து அணைத்தது போல இருந்தது. ஆனால் அவனை அணைத்திருப்பதோ அவளது நினைவு மட்டுமே.
பி.ஈ சிவில் முடித்தவன் காத(லு)லிக்காக தண்டமாய் மூன்று வரும் பி.எல் முடித்தான். தந்தையின் கறாரான முடிவில் IELTS தேர்வு எழுதி கேனடாவில் சிவில் இன்ஜினீயாராக வேலைக்கு சென்றவன், இன்று தான் இல்லம் திரும்பினான் அன்னையின் வற்புறுத்தலிணங்க…
சாகரன், வரதராஜன் கண்ணம்மா தம்பதியாரின் கடைசி புதல்வன். மூத்தவன், சங்கரன் மனைவி வெண்ணிலா அவர்களது மகன் கேசவன்.
இரண்டாவது மகள் ராதிகா கணவன் ரகுராம் அவர்களது மகள் வினிஷா…
அடுத்த மகள் வேதிகா, கணவன் பார்த்தசாரதி குழந்தை இல்லை … கடைக்குட்டி சாகரன் தான்.
வரதராஜன், அருகே உள்ள கோவிலில் ஐயராகவும் மேலும் கணபதியாகம், தீட்டு கழிக்க, கல்யாணம் செய்துவைக்க என பல வேலைகளை செய்து வந்தார். பழமைவாதி, வேதங்களை மதிப்பவர் சுத்தமான ஆச்சார ஐயங்கார் குடும்பம் இவர்களது குடும்பம்.
அதில் கலப்படம் உண்டாகுமா இவனால்?
“சாகரா, அடுத்து என்ன செய்றதா இருக்க? “
சேதுராமன் கண்ணம்மாவின் ஒன்னு விட்ட அண்ணன், வரதராஜனின் பால்ய தோழன்.
சாகரன், வந்ததும், அந்தக் கண்ணை வழிபட்ட பின்னே கூடத்தில் அமர்ந்து காலை உணவை அனைவரும் சேர்ந்து உண்டனர். பின் ஆண்கள் அமர்ந்து பேச, பெண்கள் சமைக்கச் சென்றனர்.
“அது வந்து மாமா, வேலை தேடலாம் இருக்கேன். ஏதாவது கன்ஸ்டருக்ஷன்
கம்பெனியில் வேக்கண்ட் இருக்கான்னு பார்த்து அப்ளை பண்ணனும் மாமா” என்றான்.
“அதான் சரி சாகரா, வெளிநாட்டு உத்தியோகம் நமக்கு சரிப் பட்டுவராது. உன் அம்மா, உன்ன பார்க்காம தவிச்சு போயிட்டா, இனியாவது எங்க கூட இருடா அம்பி…!” என்றார்.
“நானும் அத சொல்லுறேன் சேது, இங்கே ஒருவேலைய பார்த்துண்டு கண் பட இருந்தாலே போதுங்கறேன்…” வரதராஜனும் தன் கருத்தை சொல்ல, சாகரன் மௌன புன்னகை உதிர்த்தான், அந்தப் புன்னகைக்கு வேட்டு வைப்பது போல தான் அடுத்த பேச்சும் இருந்தது.
“ஆமா, வரதா எனக்கும் என் பொண்ண பக்கத்தில் கட்டிக்கொடுத்தது
போல இருக்கும்…” என்று மாமா பொடி வச்சு பேச, ‘ ங்கே ‘ என மாமாவை கண்டு புரியாமல் விழித்தான்.
“என்னடா அம்பி, அப்படி பார்க்கற? நோக்கு விஷயம் தெரியாதா…? ” எனவும், திருவிழாவில் வெட்ட போகும் ஆட்டின் முதல் தலை உலுக்கலைப் போல தெரியாது என்று ஆட்டினான்.
“தெரியாது சேதுராம, இங்க வந்ததும் சொல்லிக்கலாம் விட்டுண்டேன்… சாகரா, உனக்கும் சந்தானலக்ஷ்மிக்கும் கல்யாணம் பண்ணலாம் இருக்கோம்…” என்றதும் உடல் தூக்கி வாரி போட்டது.
“ஆனா, அப்பா, அவா ரொம்ப சின்ன பொண்ணுப்பா, இப்பதான் காலேஜ் போறா, அதுக்குள்ள கல்யாணமா? நான் இன்னும் வேலைக்கு கூட போகலப்பா …! செட்டில் ஆயிட்டு கல்யாணம் பண்ணிக்கறேனே…!” தன் முடிவென கூறாமல் கூறினான்.
சேதுராமனுக்கும் வரதராஜனுக்கும்
முதலில் சங்கட்டமாக இருந்தது. அவன் சொன்னதும் உண்மையென பட்டது. அவன் மட்டும் எனக்கு இஷ்டமில்லை என்று கூறியிருந்தால், இந்நேரம் இருவருக்கும் கல்யாணமே முடிந்து இருக்கும். ஆனால் இந்த இடத்தில் அவன் உபயோகித்த சமயோஜன புத்தியே அவனுக்கு கைகொடுத்தது. இருவரும் யோசிக்க, ” சாகரன் சொல்லுறது சரிதான் மாமா …! லக்ஷ்மி ரொம்ப சின்ன பொண்ணு முதல் அவ ஒரு டிகிரீ வாங்கட்டும், அதுக்குள்ள சாகரன் ஒரு நல்ல வேலையில் அமர்ந்திடுவான் ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சிடலாம் மாமா…” ரகுராம் மைதுனனுக்காக பேச,
‘ தேங்கஸ் அத்தம்பேர் தேங்க்ஸ்…. உமக்கு பெரிய கோவிலை கட்டி அதில நானே உமக்கு பூசாரியா இருக்கேன்… தொலைக்க இருந்த என் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த நீ எனக்கு இன்னொரு பாலாஜியே..’ என்று மனத்திற்குள் அவனுக்கு கோவில் காட்டி, மணி அடித்து தீப ஆராதனை காட்டிவிட்டான்.
“அதுவும் சரிதான் வரதா, பொண்ணு படிப்பை முடிக்கட்டும், அப்றம் பார்த்துக்கலாம்.. எங்க போயிட போறான் சாகரன்… ” எனவும் வரதராஜனும் சரியென தலையசைக்கவே, ‘போன உசுரு வந்திடுச்சு’ சாகரனுக்கு.
பெரியவர்களின் பேச்சை எண்ணி அசை போட்டவனுக்கு கண்கள் ஈரத்தை சுமந்திருந்தன, தன் காதலித்த ஜீவனை தேடி,உடல் ஜீவனற்று போனது.
“எங்க டீ இருக்க? எப்படி இருப்ப..?” என்னை விட்டு போய் ஆறுவருடமாச்சி …! என் காதல் மேல இன்னும் நம்பிக்கை இருக்கு, இன்னமும் நீ எனக்காக , எனக்காக மட்டுமே இருப்பனு நம்புறேன். எனக்கு கிடைத்த காலநேரத்துல உன்னை தேடுறது தான் என் முதல் வேலை…” என்று சுளுரை எடுத்து கொள்ள அதற்கு அவசியமற்று போனது.
மறுநாள் மதுரை ஹை கோர்டிற்கு பார்த்தசாரதியும் சாகரனும் சென்றனர்.
“எதுக்கு அத்தி, கோர்ட்டுக்கு வந்திருக்கோம் …?” தன் சந்தேகத்தை கேட்க,
“உங்க அக்காளை டிவோர்ஸ் பண்ண தான்…” என்றான் நக்கலாக, ” அதுக்கு எதுக்கு அத்தி கோர்ட்டுக்கு எல்லாம்… அவா சமயலை நல்லா இல்லேன்னு சொல்லுங்கோ போதும்… கோர்ட் வேணாம், வக்கீல் வேணாம் பணமும் வேணாம் டேரக்டர் கிடச்சுடும்…” என்றவனை” இடமறித்தவன், ” எது எனக்கு சங்கு தானே?” என்று முறைத்தான்.
தனது சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டான் சாகரன்.
இருவரும் அங்கே இருந்த போலீஸிடம் ஒரு நல்ல வழக்கறிஞர் வேணும் என்று கேட்க, அவரே அலுவலகத்தைக் காட்டி போகச் சொன்னார். இருவரும் உள்ளே செல்ல, அங்கே இருந்தவளை கண்டு வாய் அணிச்சையாக்’ o2′ என முணுமுணுத்தது.
அவளோ இருவரையும் பார்த்து என்னவென்று விசாரிக்க? தன்னை தெரியாததை போல காட்டிக்கொண்டு பேசும் அவள் மீது கோபம் கொண்டவன், அக்கோபத்தை அடக்க முடியாமல் டேபிளை ஓங்கி அடித்து ” எப்படி டீ உன்னால் இப்படி பச்சையா நடிக்க முடியறது. நானும் பார்த்துண்டே இருக்கேன் என்னை தெரியாத மாதிரி பேசிட்டே போற …!நோக்கு என்னை யாருனு தெரியும் தானே !” எனக் கோபமாக கத்தியவனை, கண்டு முளைத்த மூரலை மறைத்து,
” யோவ் ஐயங்கார்!
கொஞ்சம் நிறுத்துறீயா…! ” என்று அவனை அடக்கினாள்.
‘ஐயங்கார்…’ என்ற வார்த்தையை கேட்டதும் அவன் இதழ்கள் வளைந்து கேலியாக புன்னகைத்தன.
காற்று வீசும்…