காற்று 17

தாள தாமரைத்*  தடம் அணி வயல் திருமோகூர்* 
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது.

மாலை வேளையில் அக்கோவிலேங்கும் ‘ நமோ நாராயணா ‘  என்னும் எட்டெழுத்து மந்திரம் ஒலிக்க, ஒளி வெளிச்சமும்  வைகுண்டதையே எண்ண வைத்தது. சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
பெருமாளுக்கு அன்றைய  நாள் தான் உகந்ததென்று,  உலகளந்தவனின் தரிசனத்தைக் காண பக்தர்கள் கூட , அவரோ, வரதராஜனின் கையால் தன்னை அலங்கரித்து கொண்டு தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து குறைகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்தார்.

காலம் காலமாக, காளமேகப் பெருமாளுக்கு சேவை செய்வதே வரதராஜனின் குடும்பம் பெற்ற பாக்கியம். தன் தந்தை செய்து வந்த சேவையை மகன் வரதராஜன் பார்த்து கொண்டு வருகிறார். அவருக்கு பின் சங்கரனோ சாகரனோ இந்தச் சேவையை தொடங்க வேண்டும், காலையும் மாலையும் கடவுளுக்கு பூஜை செய்வது கோவிலில் சில வேலைகளை பார்ப்பதோடு பூமி பூஜை, கணபதி ஹோமம் , திதி கொடுப்பதென மற்ற வேலைகளையும் பார்த்து  கொண்டிருக்கிறார்.

உடன் மகன் சங்கரனையும் அழைத்து செல்வார். இது போக நிலத்தை குத்தகை விட்டு லாபம் பார்க்கிறார்
. மேலும் இரண்டு வீடு  வாடகைக்கு விட்டு அதிலும் பணம் வரவு இருப்பதால், அதுவே போதுமென்று வாழ்பவர் , தட்டில் விழும் காசைக் கூட  உண்டியலில் போட்டுவிடுவார்.

“ஏன்னா உமக்கு தான் தேவையில்லேன்னா, நேக்காவது குடுக்கலாம்லே இப்படி உண்டியல்ல போடுறேளே ! நாங்களாம் மனுஷாள் இல்லையா எமக்கும் வயிறு இருக்குமோய் இப்படி அந்நியாயம்  பண்றேளே !” உடன் வேலையும் செய்பவர் உள்ளே கறுவிக் கொண்டு வெளிப்படையாக கேட்பார்.

“இதெல்லாம் லஞ்சமோய் , கடவுள்கிட்டயே சிபாரிசு பண்ண குடுக்கற லஞ்சம், அந்தப் பெருமாள் படியளந்தும் உமக்கு பத்தலையா? பெருமாளுக்கு சேர வேண்டியத குடுத்திடனும். அவா பார்த்து செய்வா ! அடுத்தவங்க காசுக்கு ஆசைபடக் கூடாதுமோய் !” என்பார் வரதராஜன்.

“நான் எங்க ஆசைப்படுறேன், அவாளா போடுறா ! அதை கூட வாங்கிக்க கூடாதா
?எல்லாம் பெருமாளுக்குன்ன பூமியில வாழ்ற மனுஷாளுக்கு தான் என்ன  ?இவர் கல்லாட்டாம்  நிப்பார் , ஆனா நாம அப்படியா, வாய் வயிறு குழந்தை  குட்டி குடும்பம்னு இருக்குமோய் உம்ம பங்க உண்டியல்ல போடுங்கோ ! கிணத்துல போடுங்க , ஆனா எம்ம  பங்க  குடுங்க !” என்றிட அதற்கு மேல் அவரும் ஒன்னும் சொல்லவதில்லை
அதில் தலையிடுவதும் இல்லை என்றும் ஒதுங்கி வடுவார் வரதராஜன்.

உடன் வேலையும் செய்பவருக்கு உடம்பு முடியாமல் போக தன் மூத்த மகன் சங்கரனை துணைக்கு அழைத்தார். கல்லூரிக்கு சென்று கொண்டே காலை, மாலையென உடன் இருந்து பூஜைக்கு உதவுவான். இன்று அவனுக்கு பரீட்சை என்பதால்  பத்தாம் வகுப்பு படிக்கும் சாகரனை அழைத்தார்.  இதான் அவனுக்கு முதல் அனுபவம் வேறு.. கொஞ்சம் பயமாக இருந்தது வரதராஜனிடம் வேறு வேலை பார்க்கிறான். ஒன்று என்றால் வெளிபடையாக திட்டுவார். அதுவும் கடவுளுக்கு செய்வதில் குறை இருந்தது, வரதராஜானாக இருக்க மாட்டார், நரசிம்ம ராஜன்னா தான் இருப்பார்.
அதனாலே பார்த்து பார்த்து செய்வான்.

அன்று கூட்டம் அதிகமாக இருக்க, சாகரனின் பெண்டை நிமிர்த்தினார் … அன்று தான் தன் பிஸ்னஸில் அடைந்த பெரும் லாபத்திற்கு  கடவுளுக்கு  நன்றி சொல்ல தன் குடும்பத்தை கூட்டிக்கு கொண்டு வந்தார் வினோதன் (நிழலியின் தந்தை )

அழகாய் பட்டுப் பாவாடை அணிந்து, பிச்சி பூ சரத்தை பின் மண்டையில் வைத்து அலங்கரித்து , தன் பாவாடை இருகைகளாலும் பிடித்து கொண்டு  கரண்டை கால் தெரிய கொலுசுகள் அவள நிறத்திற்கேற்ப ஒளி மங்கி இருக்க, அந்த அப்சரஸை கண்டு வாயை பிளந்து  நின்றான் சாகரன்.

பருவம் தொடங்கிய காலம், அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும் பருவம் வந்தது.. அவளை கண்டதும் உள்ளுக்குள் ஒரு படபடப்பு, உள்ளே என்ன செய்றது
என்று அவனால் யூகிக்க முடியவில்லை
ஆனால் இதெல்லாம் அவளால் தான் செய்கிறது என்று மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிகிறது. அவளை பாரத்த படியே  நின்றிருந்தான்.

அவளோ தனது தந்தையிடம் எதையோ கேட்டுக் கொண்டும் அவரோடு சேர்ந்து தாயை கிண்டலடிப்பதுமாக இருந்தாள். பின் தன்னை யாரோ குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்து அக்கம்பக்கமெல்லாம் பார்த்தவள்  தனக்கு நேரெதிராக பார்க்க பார்வையை வேறெங்கோ திருப்பினான்.

மீண்டும் தோளை குலுக்கி விட்டு தந்தையுடன் இணைந்த விட்டாள். வரிசையில்  நின்றவர்கள் குறைந்து கொண்டே இருக்க, அவர்கள் நெருங்க நெடுங்க, இதயம்  ஒரு புறம் வேகமாக துடிக்க உடம்பெல்லாம் உதறி தள்ளியது.

அரச்சனை செய்ய தட்டை, வரதராஜனிடம் நீட்டி, ” சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணுங்க ! ” என்றார் வினோதன்
. அவரும் வாங்கி ,தேங்காயை உடைத்து சாமி  பெயருக்கே அரச்சனை செய்தார்.
அந்தப் பெருமானை நோக்கி அவனது உடம்பு இருந்தாலும் அவனது விழிகள் அவளை நோக்கியே இருக்க, பயந்து பயந்து அவளை பார்த்தான்.

அவளும் அவனை பார்த்து சிரிக்க, அவ்வளவு தான் சாகரன் சரிந்தான் உள்ளுக்குள்ளே ! ‘  பெருமாளே என்னை ஏன் சோதிக்கற? நேக்கெல்லாம் இது புதுசா இருக்கு என்ன மாதிரியான உணர்வு இது?  ஏன் இந்தப் பொண்ண பார்க்கறச்ச தோன்றது. உடம்பெல்லாம் வெடவெடக்குது . இவா என்ன துஷ்ட சக்தியா ? என்னை ஏன் ஆட்டி படைக்கறா ? ‘ நண்பர்களுடன் புலம்புவைதை போல  அந்தப் பெருமானிடம் புலம்பினான். அவரும்  மையல் சிரிப்புடன் நின்றிருந்தார்.

கடவுள் கழுத்திலிருந்த பூமாலையை எடுத்தவர் சாகரனிடம் , ” அவா கழுத்துல போடு !” என்று கொடுத்தவர். கையில் அர்ச்சனைத் தட்டும் தீபதட்டும் ஏந்தினார்.
கையில் மாலையோடு  நெருங்கியவன் , தங்கெதிரே  மயக்கும்  புன்னகையில்  நிற்கும் நிழலியின் கழுத்தில் தன்னை அறியாமல் மாலையை போட்டு விட, “சாகரா !” எனஅதட்டலில்  தன் நிலையில் வந்தான்.

“என்னடா பண்ணிண்டு இருக்க, மாலை அவா கழுத்துல தானே போட சொன்னேன் !” வினோதன் தவறாக எண்ணுவதற்குள் தன் மகனை வரதராஜன்  கடிந்து கொள்ள, “அப்பா அது…!” என தலைகுனிந்து நின்றான்,

“விடுங்க சாமி, கடவுள் ஆசிர்வாதம் எனக்கு கிடைச்சா என்ன என் பொண்ணுக்கு கிடைச்சா என்ன எல்லாம் ஒண்ணுதான் ” என்றார் வினோதன் பெருமிதத்தோடு.

எங்கே அவர் தவறாக எண்ணி விட்டாரோ என்று பயந்தவருக்கு அவரது பதிலில் பெருமூச்சை இழுத்து விட்டவர் , தீபத்தை காட்ட, அதை தொட்டு முதலில் தன் மகள் கண்ணில் வைத்து விட்டு தான் தன் கண்ணில் ஒத்தினார் வினோதன்.

அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு மீண்டும் ஒரு முறை கடவுளை வணங்கி விட்டு அவர்கள் செல்லும் வரை படபடப்பில் இருந்தான் சாகரன். செல்லும் போது அவளை பார்க்க, அவனை பார்த்து கேலியாக சிரித்து விட்டு சென்றாள்.

“பெருமாளே ! நான் என்ன செய்றேன்.ஏன் என்னை இன்னைக்கு படுத்தற ?அந்த பொண்ணும் சிரிக்கும் படி செய்துட்ட !’ என்று பெருமானை கடிந்தான்.

அவர்கள் மூவரும் பிரகாரத்தை சுத்திவிட்டு அங்கே அமர்ந்து கதைகள் பேச, வரதராஜன்  கொடுத்த வேலையை செய்து விட்டு மீண்டும் சன்னதிக்கு செல்ல, இவர்கள் அமர்ந்திருக்கும் இடைத்தை கடந்து தான் செல்ல வேண்டும்…

அவளை பார்த்தவன், சட்டென தலையை தாழ்த்தினான் அவள் பார்த்த பின். குனிந்த தலையை நிமிர்த்தாமல்  சென்றவனை நிமிர வைத்தது அவளது அழைப்பு.

“யோவ் ஐயங்கார் ! ” என்றாள்.

அவனும் சுற்றி முற்றும் பார்த்தவன், மீண்டும் அவளை பார்த்து, ” என்னையா?” என்று பூணூல் அணிந்த தன் வெற்று நெஞ்சை குத்திக் காட்டி கேட்டான்.

“ஆமா ஐயங்கார் உன்னைதான். நீ ரொம்ப அழகா இருக்க ! என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா ?” எனக் கேட்கவும் அழகு விழிகளை அகல  விரித்தான். ” என்ன பண்ணிக்கிறீயா?”  என மாலையை காட்டி கேட்க, அவனோ அதிர்ந்து, ” பெருமாளே ! ” என்று கத்திக் கொண்டு அணிந்த வேட்டியை தூக்கி பிடித்துக் கொண்டு ஓட, வினோதன் , மற்றும் நிழலியின் சிரிப்பலைகள் தான்.

“கொழுப்பு டி உனக்கு அந்தப் புள்ள பாவம் .அது கிட்ட இப்படியா கேட்ப? இதுக்கு  நீங்களும் உடந்த ! எல்லாம் நீங்க குடுக்கற இடம் தான். பொம்பல பிள்ளையா இருக்க சொல்லுங்க உங்க மகளை, அடவடியாவே வரா! ” வினோதனின் வளர்ப்பை கண்டிக்க சொன்னார்.

“மதி, இதெல்லாம் ஒரு ஜாலிக்காக தானே !இதுக்கு போய் ஏன் சீரியஸா பேசுற?  பசங்க மட்டும் தான் கேலி கிண்டல் பண்ணனுமா? ஏன் பொண்ணுங்க பண்ண கூடாதா? ரெண்டு பேரும் மனுஷங்க  தான? ஆனால் ஏன்  ரூல்ஸ் மட்டும்  வேற  வேற, பொது இடத்துலே பொண்ணு கேலி பேசி சிரிக்க கூடாது ஆனால் பசங்க பண்ணலாம்  என்னமா உன் நியாயம்?” எனக் கேட்க,

“சூப்பர் ப்பா ! என்ன பண்ணாலும் பொண்ணுங்க அத பண்ணக் கூடாது பொண்ணுங்க இத  பண்ணக் கூடாது அப்படி இப்படி இருக்கணும் ரூல்ஸ் போட்டு வாழ சொன்னால் எங்களால்  எப்படி  சந்தோஷமா வாழ முடியும்? நீங்க ரூல்ஸ் போட போட தான்  மீரனும் தோணும். நீங்க  சும்மா இருந்தால் நாங்களும் நாங்களா இருப்போம்” என்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவரால்.

அடுத்து வந்த வார இறுதி  நாளிலெல்லாம் கோவிலில் அவளது வருகை இருந்தது சனிக்கிழமை மட்டும் தந்தையுடன் வந்திடுவான் அவளை காண, தூண் மறைவிலிருந்து அவளை பார்ப்பான்.  அன்று கேட்ட  கேள்வியில் பயந்து  வெட்கத்தில் ஓடினாலும் அக்கேள்வி அவனுக்கு பிடித்திருந்தது. வளர்ந்து பெரியவனானதும்  அக்கேள்விக்கு நிச்சயம் பதிலளிக்க காத்திருகிக்கிறான்.

அவள் வரும் பொழுதும் அவள் தன்னை தேடுவாள் எதிர்பார்த்தது தோற்றது தான் மிச்சம். அவள், அவனை மறந்தது தான் உண்மை . இவ்வாறே அவளை பார்த்து கொள்வதோடு மட்டுமே இருந்தான்.

ஒரு நாள்,  சனிக்கிழமை  மாலை வழக்கம் போல கோவிலுக்கு குடும்பத்தோடு வந்தாள்.  பெருமானை சேவித்து விட்டு அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு பெண் , வினோதனிடம் அனுமதி வாங்கி நிழலியை இரண்டு முறை போட்டோ எடுத்தாள்.

போட்டோவாகவே வரும் கேமராவை வைத்திருந்த அந்தப் பெண் ஒரு புகைப்படத்தை அவளிடம் கொடுத்து விட்டு,   ஒன்றை தன்னோடு வைத்து கொண்டாள். அதை கவனித்த சாகரன், ஓடி சென்று அந்த வெளிநாட்டு பெண்ணை மறித்து நின்றான்.

“வாட்?”

“ஐ வான்ட்  தட் போட்டோ ” என்றான்.

“விச் போட்டோ?” சந்தேகமாக கேட்க, ” தட் கேர்ள்  போட்டோ ” என்றான்.

” ஒய், யூ வான்ட் தட் கேர்ள் போட்டோ !”

“ஐ லவ் ஹேர் ” என்றான். அவள் அவனை ஒரு மாதிரி பார்த்தவள் அந்த புகைப்படத்தை கொடுக்க ” தேங்கஸ் ” என்று வாங்கி கொண்டு ஓடியே போய்விட்டான்.

அதன் பின் வந்த நாட்களெல்லாம் அவளை பார்ப்பது வழக்கமானது. பத்தாம் போது  தேர்வு முடிவுகள் அறிவிக்கும் நாளன்று வந்தவள் தான் அதன் பின் வரவே இல்லை, இரண்டு வருடமாக காத்திருக்கிறான் அவளுக்காக. ஆனால் அவள் வரவே இல்லை.

அவனும் அவளது புகைப்படத்தை கண்டு மனதை தேற்றிக் கொள்வான். “அவளை பார்க்கும் நாளை குடு ! “என்று பெருமாளிடம் விளக்கு போடுவதாக வேண்டியும் கொண்டான். அவன் வேண்டுதலுக்கு மனமிறங்கி அவளை காண வைத்தார் அப்பெருமாள். 

கல்லூரியின் முதல் நாளன்று… தன் தேவதை தன்னை நோக்கி வருவதைக் கண்டு முதல் முறையாக பார்த்த போது  இருந்த அறிகுறியை தனக்குள் உணரக் கண்டான். ஒத்தயடி பாதையில் ஒத்தையாக செல்லும் போது அங்கே அழகான மோகிணி பிசாசை பார்ப்பது போல பரவசமும் பயமும் சேர்ந்த கலவையான பார்வையில் பார்த்து நின்றான்.

காற்று வீசும்.