காற்று 11
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தன் உதடுகளை மடித்து சிரிப்பை அடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள் நிழலி. அலுவலகம் வந்த பின்னும் முகத்தை மாற்றாமல் ‘உர்ரென்று’ வைத்திருக்கும் சாகரனை பார்க்க பார்க்க தான் அவளுக்கு சிரிப்பு பொங்கி வந்தது. எங்கே வாய்விட்டு சிரித்தால் மேலும் அவனது முகம் கர்ண கொடூரமாக மாறக் கூடும் என்று கஷ்டப்பட்டு அடக்கினாள்.
“உன் இன்டென்சன் என்ன?” எனக் கேட்டு அவனை வெகுவாய் கோபப்படுத்திருந்தாள் நிழலி… அவனும் பாதி பொய் பாதி உண்மையெனக் கூறி பதிலளித்தாலும்” என்ன பார்த்து ஏன்டா அப்படி ஒரு கேள்வி கேட்ட?” என்பது போல பத்து முறையாவது அடித்திருப்பான் நிழலியை, கற்பனையில் தான். நிஜத்தில் புருஷனாக இருந்தாலுமே அது சாத்தியமற்று, கற்பனையாவது செய்துக்கட்டுமே…! மேலும் அவளை பார்க்காமல் தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவன் அவ்வாறு அமர்ந்திருப்பது அவளது கல்லூரி நாட்களை தான் நினைவு படுத்தியது… அவளிடம் யாரையும் நெருங்க விட்டதில்லை, அது பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி பத்தடி தள்ளியே நிற்க வைப்பான் ‘பொஸ்ஸிவ் பொங்கல்’ என நிழலியும் அவனை கேலி செய்வாள்.
அப்பொழுதெல்லாம் அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான். அவனது மூக்கும் கன்னமும் சிவந்திருக்கும், பாலில் குங்குமப் பூ இட்டது போல ஆங்காங்கே சில சிவப்பு… அவனது கன்னத்தை பிடித்திழுப்பாள், “ஸ்ஸ்ஸா ஆஆ”அவன் வலியில் கத்துவதும், அவளுக்கு ஒரு ஆனந்தம்.
“பால்கோவா…!” பல பல ஸ்வீட் பெயர்கள் கொண்டு அழைத்து கிண்டல் செய்வாள். அதை எல்லாம் உள்ளே ரசித்தாலும் வெளியே பொய் கோபம் கொண்டு, அவளது காதை திருகுவான், இவர்களை காதலர் தான் என்பார்கள் அனைவரும். அன்று அவர்களுக்குள் இருந்தது நட்பும் மட்டுமே…!
“குட் மார்னிங் மேடம்” என்றழைத்த அர்ச்சனா, அவளது பழைய நினைவுகளில் இருந்து வெளியே கொண்டு வந்தாள்.
“குட் மார்னிங் அண்ணா…!” சாகரனை பார்த்து சொல்ல, “ம்ம்.. மார்னிங்” என்றான் சுரத்தே இல்லாமல்.
“அண்ணா, வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க?”
“வேண்டுதல், வேலை கிடைத்திடுத்துன்னா,
முதல் நாளே முகத்தை தூக்கி வச்சிருக்கேன் வேண்டிக்கிட்டேன் அதான்” என்றான் கடுப்பில்
‘திமிர பாரு… ஹெல்ப் கேட்டு வருவேல மவனே வச்சுக்கறேன் …!” முனங்கிக் கொண்டு அவளிடத்தில் அமர்ந்தாள்.
அவனது இந்த பதிலில் மேலும் சிரித்தவள், அவனை அழைத்தாள். “மிஸ்டர் சாகரன், நேத்து உங்க கிட்ட டிடெய்ல் கேட்டேனே கேதர் பண்ணிட்டீங்களா? கொண்டு வாங்க “என்றாள்.
அவனும் தான் தேடிய விவரங்களை எடுத்து வந்தவன்,” மேடம், நீங்க கேட்ட, டிடெய்ல் இதுல இருக்கு…” என்று கொடுத்தான்.
“‘மேடமா…?’ ஓ சார் கோபத்த காட்றாராமா! எவ்வளவு நேரத்துக்கு தான் பார்ப்போம் டா ‘என்
கோவ கோவாலு ” என எண்ணிக் கொண்டவள், ” இதை யாரு எக்ஸ்பளைன் பண்றது மிஸ்டர் வரதராஜனா?” என நக்கலாக கேட்டு அவனை மேலும் சீண்ட,
‘எல்லாம் என் நேரம் டி …! ஆசிஸ்டெண்ட்டாக அடம் பண்ணதுக்கு என்ன நல்ல வச்சு செய்றேல, ஹஸ்பண்டா ஆகிட்டு டி, என் வேலைய காட்டுறேன் டி
..!’ அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டவன்.
அவளருகே குனிந்து, குடுத்த விவரங்களை, விவரிக்கலானான்… அவளும் தீவரமாக கேட்டுக் கொண்டே வந்தாலும் ஒரு கட்டத்தில் அவளது கண்கள், அவனது கன்னங்களில் நிலைக்குத்தி நின்றன.
மாசுமருவற்ற கன்னம், பொதுவாக ஆண்கள் தோள் முரட்டு தனமாக இருக்கும், ஆனால் உள்ளே ஒரு மென்மை இருக்கும்… ஆனால் அவனுக்கோ உள்ளே வெளியே என ஓவர் கோட்டிங் குடுத்தது போல மென்மையாகவே இருந்தது.
குரலில் கூட ஒரு மென்மையும் வசீகரமும் இருந்தன .கோபம் வந்தால் மட்டுமே உயரும் அந்தக் குரல், மற்ற நேரங்களில் குழலிலிருந்து வரு(டு)ம் மெல்லிசை தான்.
மொத்தத்தில் அவனொரு சுவீட் பேக்கேஜ் எனலாம். தன்னையும் மீறி பத்து நிமிடமாவது அவனை பார்த்து இருப்பாள்.
“அவ்வளவு தான் மேடம்” என்றதும் தான் சுயநினைவிற்கு வந்தாள். அவனையும் பைலயும் மாறி மாறி பார்த்து விழித்தாள். அவன் விழிப்பதைக் கண்டவன்,
“என்னாச்சி?” என கேட்கவும் ” ஒன்னுல்ல நீங்க போங்க…” என்றவள், தன்னை தானே கடிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
‘ என்னாச்சு உனக்கு அவனை ஏன் விழுங்கறது மாதிரி பார்க்கற?
இதெல்லாம் தப்பு நிழலி …! எப்போ இருந்து மாறினா நீ? அவன் இன்னொருத்திக்கு சொந்தமாக போறவன், அவன போய் சைட் அடிக்கற? ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துட்டு என்ன காரியம் பண்ற நீ? ஏற்கெனவே பட்டது போதாதா, இன்னமும் படனுமா?’ என மூளை குற்றம் சுமத்த,
‘என்னடா பண்ணிட்டேன் இந்தக் கேள்வி கேட்டு கிழக்கற நீ?’ என மனம் கேட்டு நிக்க, அவள் பாடு திண்டாட்டமானது.
தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். உள்ளுக்குள் ஒரு படபடப்பு. ‘நாம பார்த்தது மட்டும் அவனுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்…? ‘ நிழலி, உனக்கு எங்க போச்சு புத்தி… ?’ பலவாறு சிந்தித்து தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டாள்.
அவளது டேபிளில் காபி கப்பை வைத்தவன் “குடிங்க, தலைவலி சரியாகிடும்” என்றவன் மீண்டும் தன் இருப்பிடம் சென்று அமர, அதை பருகியவாறே அவனை பார்த்தவள்’ இவன் என் பிரண்ட்
அவ்வளவு தான். அதுக்கு மேல எந்த எண்ணமும் இல்ல’ என்று தனக்கு தானே
கடிவாளம் போட்டுக் கொண்டாள்.
“இது ஒரு க்ரிட்டிக்கலான கேஸ். இதுக்கு முன்ன இது போல கேஸ் பைல் ஆகிருக்கானு சேர்ச் பண்ணுங்க, எந்தக் செக்சன் அடிப்படையில இந்தக் கேஸ் பைல் பண்ணிருக்காங்க, என்ன மாதிரியான தீர்ப்பு வந்தது எல்லா டிடெய்லும் வேணும் எனக்கு…” என்று இருவரிடமும் கட்டளையிட்டவள், தனது வேலையில் முழ்கிப் போனாள்.
நண்பகல் ஒன்றைத் தொட, அர்ச்சனா எழுந்து நிழலி முன் வந்தவள் ” மேடம், லஞ்ச் டைம், வீட்டுல வந்து அம்மா சாப்பிட சொன்னாங்க, போயிட்டு வரட்டுமா?”
எனக் கேட்கவும் ” சரி” என்றாள்.
அவள் செல்ல நிழலிக்கும் சாப்பாடு வந்தது. இன்னும் வேலையில் கண்ணாக இருக்கும் சாகரனை கண்டவள், ” சாகரா , வா சாப்பிட…!”
“எனக்கு வேணாம் மேடம், நீங்க சாப்பிடுங்க…!” என்றான் இன்னும் குறையாத கோபத்துடன்.
“பச்… என் மேல உள்ள கோபத்த ஏன் சாப்பாட்டு மேல காட்ற? ஒழுங்க சாப்பிட வா…!”
“நான் யார் மேடம் உங்க மேல கோபத்த காட்ட?நான், ஜஸ்ட் இன்டென்ஷிப்
பண்ண வந்த ஜூனியர் அவ்வளவு தான்…!”என பற்களை கடித்தவன்.
“இன்டென்சனோட பழகற ஆள் வேற” என்றான்.
“போதும் சாகரா, நான் கேட்டது தப்பு தான். ஆனால் கேட்டதுக்கான, ஒரே ரீசன் நான் பட்ட அனுபவம் தான். என்னை அந்தக் கேள்வி கேட்க வைச்சது. கடைசி வரை கூட வருவான் பழகின காதலன் கூட, தேவைக்கு என்னை பயன்படுத்திட்டு போயிட்டான். நண்பனா, நினைச்சவன் என்னையும் ஒரு ஆளா கூட மதிக்காம விட்டுட்டு போயிட்டான் .
இனி வர எந்த உறவும் கண்டிப்பா எதாவது ஓரு நோக்கத்தோடு பழகும் எனக்குள்ள நல்லாவே பதிஞ்சிருச்சு …!இனி, எந்த உறவும் தர, வலி எனக்கு வேணான்ற முடிவுல தான் இருக்கேன் சாகரா. என்னால் நீ கஷ்டப்பட்டு இருந்தேன்னா சாரி. நீ கிளம்பு” என்றாள்.
“கிளம்புன்னா என்ன அர்த்தம்? எந்த அர்த்தத்துல சொல்ற நீ?”
“நான் பண்ற சின்னசின்ன விஷயம் கூட உன்னை ஹர்ட் பண்ணும். என் கிட்ட பழகற எல்லா உறவையும் சந்தேக பார்வையோட பார்க்கறேன். எங்க அம்மா முதற்கொண்டு. என் எண்ணமும் பார்வையும் மாறிருச்சு… அது அவங்களுக்கு வலிய குடுக்கலாம். அதான் சொல்லுறேன் என்ன விட்டு போயிடு” என்றாள் கண்ணீர் திறள,
“போயிடவா? நீ போயிடு சொன்னாலும் போற உறவு நான் இல்ல… ஒரு குழந்தை ஒரு விஷயத்தை தப்பா புரிஞ்சு வச்சிருந்தால், அதை திருத்தி, சரியான விளக்கம் கொடுத்து புரியவைக்க வேண்டியது பெத்தவாளோட கடமை. அந்தக் கடமையில தான், இப்போ நானும் இருக்கேன். அப்றம் சொன்னியே, உன்னை ஒரு ஆளா மதிக்காம போனேன், உண்மை தான். அதுக்கு தான் தண்டனை அனுபவிக்கறனே. இனியும் அந்தத் தப்ப ஒரு போதும் செய்ய மாட்டேன். என் மேல, உனக்கு இருக்கற அந்த எண்ணம் மாற வைக்கறது என் கடமை. அதை செய்யாம இங்க இருந்து கிளம்ப மட்டேன். வா சாப்பிடலாம் எனக்கு பசிக்கறது” என்றவன் சாப்பிட அமர, அவள் கண்களில் வழிந்த நீர் கன்னம் தொட உணர்வு பெற்றவள், அதை துடைத்து விட்டு முறுவலுடன் சென்று அவன் அருகில் அமர்ந்தாள்.
“என்ன லஞ்சு? ” என ஆர்வமாக கேட்டான் ” வேற என்ன அசைவம் தான் ” என்றதும் பட்டேன எழுந்துக் கொண்டவனின் முகம் அஸ்டகோணலாக போக, அதைக் கண்டவள் வாய் விட்டே சிரித்தாள்.
” என்ன சொன்னா நீ மாறிட்டேன்னு தானே? அண்ட புழுகி டி நீ…! இன்னும் அந்தக் குறும்பு போகவே இல்ல…” என்றவன் மீண்டும் அமர அவனுக்கு பறிமாறி அவளும் சாப்பிட்டாள்.
“என்னப்பா சத்திய மூர்த்தி, அந்தப் பொண்ணு வரும் சொன்ன, காணலயே ப்பா, அந்தப் பொண்ணும், இந்தக் கேஸூம் வேணாம் முடிவு பண்ணிருக்குமோ…!இந்த ஊருக்கு ஒரு விடிவு காலம் இல்ல போல, கொஞ்சம் கொஞ்சம் இந்த ஊர் அழிஞ்சுட்டே வருதேப்பா” என அந்தப் பெரியவர் வருத்தம் கொள்ள,
“ஐயா, இந்த முறை கண்டிப்பா அந்தப் பொண்ணு வருங்கய்யா, ரெண்டு நாள் அவகாசம் கேட்டிருக்குல… ஒரு நாள் தானே ஆயிருக்கு கொஞ்சம் பொறுமையா இருப்போம்…” என்றார் தன் மாணவியின் மேல் குறையாத நம்பிக்கையுடன்.
“பாப்போம் யா, அந்தப் புள்ள வருதா இல்லையான்னு… வரலேன்ன இந்த ஊர் மக்கள் எல்லாரும் ஒன்னு நோய் வந்து சாகட்டும் இல்ல வேற ஊர பார்த்து போகட்டும்… பணம் இருக்கறவன் தான் ஜெயிக்கறான்… நாம எல்லாம் அவனுக்கு கால் தூசிக்காணக்காக அற்பமா போயிட்டு இருக்கோம்…” என்று புலம்பிய படிச் செல்ல, சத்திய மூர்த்தியோ மனத்தோடு தன் மாணவியிடம் உரையாடினார்.
மாலை நேரம் வர, அர்ச்சனா சொல்லிக் கொண்டு கிளம்ப, சாகரனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
“சாகார, நீ ஒரு பைக் வாங்க வேண்டியது தானே…! “
“மேடம், நீங்க வேணா முழு பணம் கட்டி வாங்கி குடுங்களேன்…!” என நக்கல் செய்தான்.
“என்ன நக்கலா?”
“பின்ன, இப்போதான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன்… சம்பளம் கூட சரியா வருமோ வராதோ” அவளை ஓரக் கண்ணால் பார்த்தப்படி சொன்னவன், “அண்ணா கிட்ட தான் பஸ்க்கு பணம் வாங்கிண்டு வர்றேன் .என் நிலைமை அப்படி இருக்க, இதுல எங்க நான் பைக் வாங்கறது…?” என்று புலம்ப, அவள் எதுவும் சொல்ல வில்லை, ” சரி சாகரா, நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வா. நாம கொஞ்சம் வெளிய போகணும்” என்றாள்.
“வெளிய வா எங்க…?”
“தேனி ” என்றாள்.
“வாவ், தேனியா? எதுக்கு…?” என ஆர்வமாக கேட்டான்.
“கேஸ் விஷயமா” என்றதும் அவன் முகம் புஸ் என்றானது.
மறுநாள் இருவரும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த, ஊருக்குச் செல்ல, அந்த ஊரில் அடித்த துர்நாற்றம் குடலை புறட்டியது, சாகரனுக்கோ வாந்தியே வந்தது.
காற்று வீசும்…