காதல் சிநேகன் – 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்- 04
சிநேகன் விடு விடுவென்று நடந்து பின் பாகத்தின் மாடிப்படிகள் அருகே வர வர, அந்த இருவரும் அவன் கண்களில் பட்டனர். அவர்களை அதிக்கூர்மையாகப் பார்த்துக்கொண்டே முன்னேறினான்.
வீடு தேடி வந்திருந்த உறவினர்களைத் தற்காலிகமாகத் தவிர்க்க நினைத்தான் தான். ஆனால், அவன் மனம் நினைத்தது நிறைவேறவில்லை.
அவன் நினைப்புக்கு மாறாக அவனாகவே அந்த இருவரையும் சமீபித்து அவர்களின் முன்னே போய் நின்றான் சிநேகன். அவர்களைப் பார்த்த பின்னர் அலட்சியம் செய்துவிட்டுக் கடந்து போய்விட முடியவில்லை.
அங்கே, இரசனையாகப் புகையை உள்ளிழுத்து அப்படியே வளைய வளையமாக வெளியேற்றியபடி நின்றுகொண்டிருந்தார் கௌசிக். திடீரெனத் தன் முன்னால் பிரசன்னமானவனைக் கண்டு திகைத்தார்.
திகைப்பு அரை நொடிக்குள் மாறியது. அப்படியே அவர் முகத்தில் ஒரு பரவசமான சந்தோஷமும் கூட. அவசரமாகப் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை உதட்டிலிருந்து உருவி விரலிடுக்கில் வைத்துக்கொண்டார்.
“பாபூ!” என்ற விளிப்புடன் விரிந்த சிரிப்பும் லேசாக கருத்திருந்த ரோஸ் நிற உதட்டில் தொற்றிக்கொள்ள கௌசிக் சிநேகனைக் கட்டிப்பிடிக்க வந்தார்.
அதே நேரத்தில் கௌசிக் அருகே நின்றிருந்த சாத்விக் சிநேகனைக் கண்டதும் கலவரமானான். தான் புகைப்பதைப் பார்த்துவிட்டான் என்கிற பயம் அவன் கண்களில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
தன் செயலாற்றும் திறனை மறந்துவிட்டது போல் நின்றிருந்தான். விரலிடுக்கில் இருந்த பாதி சிகரெட்டை என்ன செய்யவென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
சாத்விக்கை மேலும் கீழுமாக அளவிட்ட சிநேகன் அப்படியே தன்னை ஆரவாரமும் மகிழ்ச்சியுமாக அணைக்க வந்த கௌசிக்கைப் பார்வையாலேயே தடுத்திருந்தான்.
இன்னும் கூட புகைத்தீற்று ஓவியமாகக் கண் முன்னே தெரிய… நாசியில் நுழைந்து அவனைக் கமறவும் வைக்க… புறங்கையை வீசி அதனை அப்புறப்படுத்த முற்பட்டான்.
ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்களைப் பார்வையாலேயே வன்மையாகக் கண்டிக்கச் செய்தான்.
சாத்விக் சிநேகன் காட்டிய முகத்தில் சற்று உள்ளுக்குள் வெல வெலத்துப் போனான். அவனின் உடல்மொழியில் அது அப்பட்டமாகத் தெரிந்தது.
அவனுக்கு வேர்த்து வேறு வழிய, வேர்வையைத் துடைத்தபடி அனிச்சையாக அவர்களின் சித்தப்பா கௌசிக்கின் சிகரெட்டையும் உருவி இரண்டு சிகரெட்டையும் ஒன்றாகத் தரையில் போட்டு மிதித்தான்.
“அண்ணையா” என்று சாத்விக் தயக்கத்துடன் பேச ஆரம்பிக்க… காதில் விழுந்த அந்தக் குரலில் தயக்கம்; ஆர்வம்; உருக்கம்; அன்பு கலந்து ஒலித்ததை சிநேகன் கிரகித்துக்கொண்டாலும், அவன் பக்கம் திரும்பவே இல்லை.
தன்னிடம் இருக்கும் ஆர்வம் தன் அண்ணனிடம் இல்லை என்பதைப் பார்த்த சாத்விக்கின் முகம் சுருங்கிப் போனது. முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.
இவர்கள் இருவருமே பிரதாப் சௌத்ரியின் மைந்தர்கள். வர பிரசாத் சௌத்ரி – துர்கேஷ்வரி சௌத்ரி அவர்களின் பேரன்கள்.
இருவருக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இருவரும் சேர்ந்திருந்த காலமும் குறைவு தான். சிநேகன் சாத்விக் பிறந்து மூன்று நான்கு வருடங்களில் தான் பிறந்து வளர்ந்த வீட்டைவிட்டு, ஊரையும் விட்டு ரவீந்தரிடம் வந்துவிட்டான்.
ரவீந்தர் சிநேகனின் அம்மா சம்யுக்தாவின் அப்பா. அவருக்கு ஒரே மகள் சம்யுக்தா மட்டுமே.
சிநேகனுக்கு அவ்வளவாக இளையவனிடம் ஒட்டுதல் இல்லை. ஆனால், சாத்விக்குச் சிநேகனைப் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். அவனிடம் பேசிப் பழக ஆசை. கூடவே இருக்கிறாயா எனக் கேட்டால் மறுயோசனையின்றி ஓகே சொல்வான்.
இதோ, இப்போது கூட சிநேகன் தற்போது குடியிருக்கும் லாஸ் ஏஞ்சலஸில் படிக்க ஆசைப்பட்டு அதனருகே வீற்றிருக்கும் பல்கலைக்கழகங்களாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் சாத்விக் சௌத்ரி.
கல்லூரிப் படிப்பு யூ. எஸ்ஸில் என்பதைவிட, அண்ணையா அருகில் என்பதே அவன் விருப்பம். அதில் சாத்விக்கிற்கு அப்படியொரு உற்சாகம்!
சாத்விக் என்ன படிக்கிறான், என்ன படிக்க ஆசைப்படுகிறான், எங்குப் படிக்க வரப் போகிறான் என்று எதுவுமே சிநேகனுக்குத் தெரியாது! தெரிந்து வைத்துக்கொள்ள ஆர்வம் இல்லாது தான் இருந்தான். இப்பொழுதும் அவனிடம் பேசிப் பழகும் ஆர்வம் சிநேகனை அண்டவில்லை.
ஆனால், இத்தனை வருடங்களில் ஒன்றை மட்டும் புரிந்து வைத்திருந்தான்… சாத்விக் அவன் அம்மா பிரேமினியைப் போலில்லை. சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் என்று தெரியும்.
சிநேகன் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தவன். முழுக்க முழுக்கத் தெலுங்கு வாசனை தான் அவனிடம். அவன் உடம்பில் அந்த சௌத்ரி பரம்பரை இரத்தத்தின் கர்வம், பகட்டு, ஆடம்பரம் எல்லாம் கூட முன்பு இருந்தது தான்.
அவன் பதின்ம வயதின் மத்தியில் இவை அனைத்துமே அடிவாங்கின. மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக அவனைவிட்டு விலகவும் ஆரம்பித்தன. இப்பொழுது கர்வம், பகட்டு, ஆடம்பரம் என்று எதுவும் அவனிடம் மிச்சமில்லை.
எனினும் அவன் கோபம் அவனைவிட்டு அகலவில்லை. வீம்பு, பிடிவாதம் கூட அவனுடன் பிறந்த குணங்களில் அடக்கம்.
பதினைந்து வயதில் அம்மாவின் பிறந்த வீட்டுக்கு அடைக்கலமாக வந்தான். இவன் கோபித்துக்கொண்டு தாத்தைய்யா வர பிரசாத் வீட்டைவிட்டுத் தாத்தா ரவீந்தர் வீட்டுக்கு வந்தது எப்படி அடைக்கலமாகும்?
அவன் மனத்தில் அப்படித்தான் பதிந்து போனது. இன்றும் வர பிரசாத்தின் மூத்தப் பேரன் இவனே… வாரிசுகளில் ஒருவன் என்பதும் மாறவில்லை!
சிநேகன் தன் மிச்சப் பள்ளிப் படிப்பைத் தாத்தா ரவீந்திரனுடன் இருந்து படித்து முடித்தாலும், விடுமுறை நாட்களில் விஜயவாடாவுக்குப் போய் வருவான்.
சில பண்டிகை நாட்களில் கூட வர பிரசாத் பிடிவாதமாகத் தங்கள் மூத்தப் பேரன் தங்களுடன் தான் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் எனப் பேரன் சிநேகமித்ராவை வரவழைத்துக்கொள்வார். சம்பந்திக்கு விட்டுத் தர மாட்டார்.
சில சமயம் ரவீந்தர் அவரே சிநேகனை அழைத்துப் போய் விஜயவாடாவில் விட்டு வருவதும் நடக்கும்.
பள்ளிப்படிப்பை முடித்ததிலிருந்து அவனைக் குறித்து எந்த முடிவாகினும் அவனே தான் எடுத்தான். வேறு யாருக்கும் அந்த அதிகாரத்தை சிநேகன் தரச் செய்யவில்லை. அத்தனை உறுதியாக இருந்தான்.
வர பிரசாத்துடன் அடிக்கடி மல்லுக்கு நின்றான். அவரின் வரட்டுப் பிடிவாதங்களை எதிர்த்தான். பிரதாப்பின் பேச்சைக் கேட்பதில்லை. எந்தப் படிப்புப் படிப்பது அவன் முடிவு தான். எந்தக் கல்லூரியில் என்பதும் அவனே தேர்ந்தெடுத்தது தான்.
அந்தக் காலகட்டத்தில் தான் தன் வீடு என்றால் அது ரவீந்தர தாத்தாவின் வீடு தான் என்று முடிவு செய்துகொண்டான். அவன் நிரந்தர முகவரிக்கு அவ்வீட்டு முகவரியை மட்டுமே உபயோகித்தான்.
அவனுக்குத் தோன்றினால் திடீரெனக் கிளம்பி விஜயவாடா போவான். எத்தனை நாளைக்குப் போறான், எப்போது திரும்பி இங்கு வருவான் என்று ரவீந்தருக்குச் சொல்ல மாட்டான்.
சில சமயம் அவ்வளவு மகிழ்ச்சியாகத் திரும்பி வருவான். வந்ததும் தாத்தாவை அமர வைத்து அங்கு என்னன்ன செய்தான், எங்கெங்கு சென்றான், என்ன சாப்பிட்டான், அவன் நாணம்மாவின் ஸ்பெஷல் கவனிப்பு, தாத்தையாவுடனான பொழுதுகள் என்று பகிர்ந்துகொள்வான்.
தொடர்ந்து வரும் நாட்களில் கூட அந்த உரையாடல்கள் நடக்கும். சாத்விக் பற்றிக் கூட ஏதாவது சொல்வான். தன் அப்பா பிரதாப்பை விட சித்தப்பா கௌசிக்குடன் சற்று அதிகம் பேசக்கொள்ள இருந்தான். அவருடைய மகள் மான்விஹாவின் அட்டகாசங்கள், சித்தி காம்னா அவளை வைத்துச் செய்வது என்று பகிர்தல்கள் நீளும்.
சில சமயங்களில் விஜயவாடாவிலிருந்து வரும் போதே கோபமாக வருவான். வந்ததும் அவன் அறையிலுள்ள பொருட்கள் ஏதாவது உடையும் இல்லை இடம் மாறும். ரவீந்தரிடம் பேசவே மாட்டான்.
அவன் இறுக்கமாக இருப்பது ரவீந்தருக்குப் பொறுக்காது. வேண்டுமென்றே பேரனுக்கு வேலை கொடுத்து வெளியே அனுப்புவார். தன்னுடன் வயல் வரப்புக்கு அழைத்துப் போவார். தோப்புக்குப் போகச் சொல்லுவார்.
அந்தச் சந்தர்ப்பத்தை விடாது மண்டி, ஏலம் என்று மெல்ல மெல்ல அவனுக்குப் பழக்கப்படுத்தினார். தனக்குப் பின்னர் அவன் தானே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று அவர் பேரனை இழுத்து ஈடுபட செய்தது.
ஆனால், சிநேகனுக்கு அவற்றில் ஈடுபாடு இருந்ததா என்பது விடை தெரியாக்கேள்வி! ஒப்புக்குக் கற்றுக்கொண்டானா தெரியவில்லை!
சிநேகன் யூ. எஸ். சென்று ஏழெட்டு வருடங்கள் இருக்கும். அங்குப் போனதும் முதலில் மேற்படிப்பு. அங்கேயே இண்டெர்ன்ஷிப், டிரைனிங், வேலை என்றாகிவிட்டது. முதலிலாவது இந்தியா வந்த போது, ரவீந்தரையும் பார்ப்பான். வர பிரசாத்தையும் பார்க்கப் போவான்.
இப்பொழுது அவன் விஜயவாடா பக்கம் போவதே இல்லை. ஐந்து வருடங்கள் ஆயிற்று அவன் ஆந்திர மண்ணில் கால் பதித்து!
அவனுக்குத் தலைக்கனம்… சம்பாதிக்கும் திமிர் என்று உறவுகள் சிலர் சொல்லச் செய்தனர். ஆனால், துர்கேஷ்வரிக்குத் தெரியும் பேரன் என்ன காரணத்தைக்கொண்டு விஜயவாடா வருவதில்லையென்று!
அவன் மனம் மாறுவதற்காகக் காத்திருந்தார். அவன் விஜயவாடா பக்கம் வரவே இல்லை. அப்பக்கம் தலை வைத்துப் படுக்காதது மட்டுமல்ல, மெல்ல மெல்ல ஃபோனில் பேசுவது கூட நின்று போனது.
துர்கேஷ்வரி தானே அழைத்துப் பேசினாலும் வெகு சில வார்த்தைகளுடன் உரையாடலை முடித்துக்கொள்வான். இல்லை மொபைல் எடுப்பதே இல்லை.
வேலையைக் காரணம் காட்டுவது என்று போக, துர்கேஷ்வரிக்கும் வெறுத்துப் போனது. பொறுமை கரைந்து கொண்டே வந்தது. ஒரு நாள் அவரும் பொறுக்க மாட்டாமல் பேரனைப் பேசிவிட, சிநேகன் கொஞ்ச நஞ்சம் பேசிக்கொண்டிருந்ததும் நின்று போனது.
கடந்த சில வருடங்களாகச் சம்பந்திகளுக்குப் பேரன் பற்றிய கவலையே அதிகம். ஒட்டாமல் தனித்தீவாகவே வாழ்ந்துவிடுவானோ என்று. வர பிரசாத்திற்கு ஏற்கெனவே ரவீந்தர் மீது கோபம்… தங்களிடமிருந்து பேரன் பிரிந்து போக அவரே காரணமென்று!
தற்பொழுது வர பிரசாத்தின் உடல்நிலை வேறு சரியில்லாமல் போய்விட்டது. மனிதர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார். சமீபத்தில் தான் அப்படி ஆனது.
அவர் சம்பந்தியின் மனநிலை, உடல்நிலை இரண்டையுமே மனத்தில் வைத்தே சிநேகனை ரவீந்தர் நச்சரித்து ஊருக்கு வரவழைத்திருந்தார். அப்படியே அவனைத் திருமணத்திற்கும் சம்மதம் சொல்லவும் வைத்துவிட்டார்.
சம்பந்தி தன்னை இப்படித் தவறாக நினைப்பது அவருக்கு வருத்தம். வீடு தேடி வந்து நின்ற பேரனை எப்படி அவரால் திருப்பி அனுப்பி வைத்திருக்க முடியும்? தனக்கும் அவன் மேல் பாத்தியதை உண்டு தானே?
மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு உணர்வும் பாசமும் அவளை மணம் முடித்த கையோடு செத்துப் போய்விட வேண்டுமா? இது என்ன நியாயம்?
தானாக உரிமையைக் காட்டி வாதாடவில்லை. மகளை இழந்தவர் மனத்தை அறிந்தவன் போல் கடவுள் அவர் துயர் துடைத்து; தனிமையைப் போக்க வரமாகப் பேரனை தன் பக்கம் அனுப்பி வைத்த போது, அரவணைக்க மட்டுமே செய்தார்.
அவனுக்கு அறிவுரை எதையும் தந்து திருப்பி அனுப்பவில்லை. அவன் அப்பா குடும்பத்துடன் தான் அவன் இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லவில்லையாம். அப்பாவையும் மகனையும் பிரித்துவிட்டாராம். வர பிரசாத்தின் குற்றச்சாட்டு!
அந்நினைப்பு அவருக்கு மாறுமா தெரியாது. ஆனால், பேரனுக்கு இந்தியாவிலேயே ஒரு கால் கட்டுப் போட்டுவிட்டால் குடும்பம் மொத்தமும் நிம்மதி அடையும் என்று நினைத்தார்.
இதோ ரவீந்தர் பேரன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டான் என்று செய்தி சொன்னதும், விஜயவாடாவில் இருந்து ஒரு படையே திரண்டு வந்து இறங்கியிருந்தது.
யார் யார் வந்திருக்கிறார்கள் என்று சிநேகனுக்குத் தெரியவில்லை. அப்பா வரவில்லை என்று தோன்றியது. அவர் கார் கண்ணில் படவில்லையே!
“நாலஞ்சு வருசம் கழிச்சுப் பார்த்துக்கறோம் என்னடா முறைப்பு? கூடிய கீக்கிரம் கல்யாண மாப்பிள்ளை ஆகப் போற நீ. இப்பவும் கடு கடுன்னு ஒரு லுக்கு தானா? கொஞ்சம் சிரிச்சா என்ன?”
உரிமையாக கௌசிக் சிநேகனின் தோளில் கை போட்டுக்கொண்டார். அவர் கையைத் தட்டிவிட ஓர் உந்துதல் எழுந்தாலும் சிநேகன் அதைச் செய்யவில்லை.
தன்னை அவர் தோளில் அமர்த்தி இரு பக்கமும் கால்களைப் போட வைத்துக்கொண்டு எத்தனை முறை அலுப்பில்லாமல் சுமந்திருப்பார்? வளர்ந்தும் கூட அவருடன் சினிமா, ஹோட்டல், பீச்சென சுற்றியது…
கிரிக்கெட் மட்டையைச் சரியாகப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தது என்னவோ அப்பா தான். ஆனால், விளையாடக் கூப்பிடும் போதெல்லாம் சளைக்காமல் பௌலராக வந்து நின்று பந்து வீசியது அவன் சித்தப்பா கௌசிக்.
அந்தப் பழைய நினைவுகள் தான் அவனைக் கட்டிப் போட்டது. எத்தனை காலம் ஆகியிருந்தாலும் ஒரு ஜில் நீரூற்று சிநேகனின் மனத்தைக் குளிர்வித்தது!
ஆனாலும் முகத்தில் எதையும் காட்டாது இறுக்கம் காட்டி நின்றிருந்தான் சிநேகன்.
“சரி சரி நீ கோவிச்சுக்காத நாணா. நான் இந்தப் பாழாப்போன சிகரெட்டை இனி மேலும் தொட்டா என் கன்னத்திலேயே இப்படிப் போடு!”
கௌசிக் அண்ணன் மகனின் கையைப் பிடித்துத் தன் கன்னங்களில் மாறி மாறி அடித்துக்கொள்ள முயல,
“கையை விடுங்க சின்னான்னா! விடுங்க சொல்றேன்ல!” சிநேகன் கையைத் தன் சித்தப்பாவிடமிருந்து பிரித்து எடுத்தான்.
“இந்தச் சின்னவனுக்கு நீங்க ஒரு நல்ல உதாரணமா இருக்காட்டி போகுது. அட் லீஸ்ட் அவனைக் கெடுக்காம இருங்க!”
அவ்வளவு அழுத்தமாகச் சொன்னான். கட்டளையாக வந்தது பின்னது. இத்தனை உரையாடல்களும் தெலுங்கில் தான் பேசப்பட்டன.
“இக்க லேது ரா… என்னைய நம்பு!” கௌசிக் பரிதாபமாகப் பார்க்க…
“உங்க பழக்கவழக்கம் என்னென்னன்னு எனக்கு ஒன்னும் மறந்து போயிடலை. அவன் வயசென்ன… அவனையும் உங்களை மாதிரி பாழாப் போக வச்சிராதீங்க!”
உங்களை எனக்கு நல்லாவே தெரியும் என்று பார்வையிலும் சிநேகன் காட்டச் செய்தான்.
“சாரி அண்ணையா!” சாத்விக் அண்ணனின் முகத்தைப் பார்த்து ஆழ்ந்த குரலில் சொன்னான்.
“அந்த ரெண்டு சிகரெட் துண்டை எடுத்திட்டுப் போயி அதோ அங்க இருக்கிற குப்பைத்தொட்டியில போடு! அப்படியே உன் சாரியையும் அதோடையே கடாசிட்டு உள்ள போ!”
தூரத்தில் தெரிந்த குப்பைத்தொட்டியைச் சுட்டு விரலால் சுட்டிக்காட்டி விட்டு, கடுமையான குரலில் சொல்லிக்கொண்டே மாடிப்படிகளை இரண்டிரண்டாகத் தாண்டி மேலேறிப் போனான் சிநேகன். அவன் சாத்விக்கைத் திரும்பியும் பார்க்கவில்லை.
அந்த முழு மாடியே சிநேகனுக்காகத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றே கால் ஏக்கர் அளவு நிலப்பரப்பில் அமைந்திருந்தது ரவீந்தரின் பங்களா.
சுற்றி நிறைய இடம் விட்டு, அவ்வளவு இடத்துக்குச் சற்று முன் பக்கமாக இருக்கும்படியான அமைப்பில் கட்டப்பட்டிருந்தது. கீழும் மேலுமாக ஆறாயிரம் சதுரடி அளவு வீட்டின் கட்டமைப்பு.
அதில் இரண்டாயிரம் சதுரடி அளவு சிநேகனுக்காகச் சில வருடங்களுக்கு முன்னர் சேர்த்திருந்தார் ரவீந்தர். கீழ்ப்பாகம் முழுவதும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று நினைத்தது தான். வெளிப்பக்கமும் கட்டடச் சீரமைப்புப் பார்க்கப்பட வேண்டிய நிலையே.
ரவீந்தர் ஒற்றை ஆள். வீட்டில் அவருடன் தங்கியிருப்பது நிர்மலா, மங்கா மற்றும் மன்னார் மட்டுமே. நிர்மலா மங்காவின் மருமகள். மங்கா ரவீந்தருக்கு உறவில் தங்கை முறை. தூரத்து உறவில் தான் வருவார்.
சிநேகனை விட்டால் ரவீந்தருக்கு எடுத்துச் செய்ய வேறு ஆள் படை கிடையாது. சுற்றியும் நிறைய உறவினர்கள் இருந்தும் அவருக்கு ஆத்மார்த்தமான மக்கள் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
காரணம் மகள் சம்யுக்தாவின் காதல் திருமணம். அவள் விபத்தில் போய்ச் சேர்ந்துவிட… அதுவும் நடந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இன்னுமே அதைக் குறித்துப் பேசத்தான் செய்தார்கள்.
பெற்றது ஒற்றை மகள். அவளும் இல்லாமல் போனதே அவருக்குப் பெரும் வேதனை. கூடவே பேரனின் கவலை வேறு. மனிதருக்கு ஏற்கெனவே முழு நிம்மதியில்லை.
இதில் சொந்தங்களிடம் இருந்து கிளம்பி வரும் விமர்சனங்கள் அவரை மேலும் நிம்மதி இழக்கச் செய்வதால் அனைவரிடமும் பட்டும் படாமல் இருக்கப் பழகிக்கொண்டார்.
ஆனால், விசேஷ வீடுகளுக்குப் போவது வருவது எல்லாம் உண்டு. இவரைத் தேடிக்கொண்டு வரும் சொந்தங்களும் வருவர். அவசர ஆத்திரத்துக்கு உதவியாகப் பணமோ வேறு ஏதேனும் கேட்டும் கூட வருவர்.
அப்படி மருமகள் நிர்மலாவுடன் வந்து அடைக்கலம் கேட்டவர் தான் மங்கா. ரவீந்தருக்கு வீட்டு வேலை, சமையல் வேலை, தோட்ட வேலைகள் என்று தோதான வேலையாட்கள் இருந்தாலும் மங்காவுக்கு உதவி என்று வீட்டில் தங்கிக்கொள்ள இடமளித்தார்.
இதைப் போன்று நாடி வருபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்யவும் செய்வார். தனக்காக யாரிடமும் உதவி கேட்டு நிற்க மாட்டார்.
பணம் இருந்தாலும் உரிமையாக வேலைகளை எடுத்துச் செய்யக்கொள்ள யாருமே இல்லை தான் ரவீந்தருக்கு. சிநேகனும் தன் வழியில் போய்க்கொண்டிருந்தான். அவனுக்கு நிறைய விசயங்கள் தெரியவில்லை.
சொந்தத்தாய் இருந்து வளர்ப்பது எப்படியிருக்கும்?
“பிரபலத் திரையிசைப் பாடகி சம்யுக்தா xxx தமிழ்த் திரைப்படத்தின் பாடல் ஒலிப்பதிவுக்காகச் சென்னைக்குச் செல்லும் வழியில் வாகன விபத்தில் சிக்கி மரணம்!”
பிரைம் நிகழ்ச்சி ஒன்றின் இடையில் ஃப்ளாஷ் செய்தியாகத் தன் அம்மாவின் மரணம் பற்றி ஒலிப்பரப்பாகிய போது சிநேகனுக்கு வயது ஒன்பது!
அதன் பின்னர் அப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் தன் நாணம்மா துர்கேஷ்வரியின் கண் பார்வையில் தான் வளர்ந்தான் சிநேகன். எதற்கும் குறையில்லாதபடி வளமான வாழ்வு.
ஆனால், அவனோ தன் அன்னைக்கு நிகராக யாருமே இருக்க முடியாது என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் எதிர்கொண்டான். தன் அன்னையை நிறைய தேடினான்.
சம்யுக்தாவும் பிரதாப்பும் எப்போதும் வீட்டில் இருந்ததில்லை. இருவருமே பிரபலப் பாடகர்கள். சேர்ந்து பாடிய பாடல்களும் உண்டு. அவரவர்க்குத் தனித் திரைப்பட வாய்ப்புகளும் வருவதுண்டு.
அந்த நாட்களில் சிநேகன் துர்கேஷ்வரி, கௌசிக், வர பிரசாத் என்று இருந்துகொள்வான். இந்த செட் அப் அவனுக்குப் பழக்கமானது தான். ஆனால், முன்பு எப்படியும் அம்மா திரும்பி வருவார்கள். வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் இவனுக்குத்தான் பெற்றோர்களின் பொழுதுகள்.
அம்மாவின் மடிக்காக ஏங்கினான். அவளின் பரிவான தலை கோதல்… பள்ளியில் நடந்தவை; அவரின் திரைப்படக்கதைகள் பற்றிய உரையாடல்கள்… ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன் என்று இவன் பிடிவாதம் பிடிக்கும் பொழுதுகள்…
முக்கியமாக அம்மாவுடனான தமிழ் நேரங்கள்… அனைத்துமே இல்லையென்றாகிப் போனதில் அச்சிறுவன் அலமலந்து போயிருந்தான்.
சம்யுக்தா மகன் தமிழும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. தாய்மொழி என்றாகிப் போன மொழியில் பேசுவது மட்டும் போதாது. பேசத் தெரிந்த மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாக க் கற்றுக்கொண்டிருந்தான்.
அது அப்படியே நின்று போனது!
இசையும் அப்படித்தான். முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டது பாதியில் நின்றுவிட்டது. அம்மா அப்பாவுக்குப் பிரியமான இசையை வெறுக்கத் தொடங்கினான்.
இப்படி நிறைய அடம். புதிது புதிதாக எதையாவது கிளப்பி விடுவான். அந்த நேரத்தில் யாராலும் அவனிடம் பேச முடியாது. தன்னியல்பைத் தொலைத்தவனாக ஏதோ இருந்தான். ஏனோ தானோவென்று வளர்ந்தான்.
பள்ளிக்குப் போவான், வீடு வருவான். பின் கணினியுடன் தான் அவன் பொழுதுகள் அதிகம். நீச்சல், கிரிக்கெட், இசை என்று அவன் விரும்பிய அனைத்தையும் விட்டு விலகியிருந்தான்.
பிரதாப்பும் காதல் மனைவியின் இழப்பு, துக்கம் என்றிருக்க, சிநேகனுக்கு அன்னை, தந்தை இரண்டு பேருமே ஒருங்கே விலகியது போலிருந்தது.
தன் தாய், தந்தையுடன் தானும் சேர்ந்து உருவாக்கிய தங்கள் அழகான கூடு கலைந்து போனது. இனி அந்த இனிமையும் மகிழ்ச்சியும் மீண்டும் வரவே வராது என்பது தான் நிதர்சனம்.
இதையும் போக போக உணர்ந்துகொண்டான் சிநேகன். அப்படியே மெல்ல மெல்ல ஓரளவு மீண்டு வரச் செய்தான்.
தாத்தைய்யா, நாணம்மா, சித்தப்பா, சித்தி, அவர்களின் மகள், எப்போதாவது காணக் கிடைக்கும் அப்பா என்று அவனும் பழகிக்கொண்டான்.
எப்பவும் போல் ரவீந்தர் தாத்தாவின் வருகை. அவருடன் அம்மா வளர்ந்த வீட்டில் விடுமுறை நாட்கள் என்று காலம் கடந்ததில் அவன் பதின்ம வயதும் விரைவில் வரவிருந்தது.
மருமகன் பிரதாப்பை ரவீந்தருக்கு மிகவும் பிடிக்கும். இல்லாது போனால் தன் ஆருயிர் மகளை அவருக்கு மணம் செய்து வைத்திருப்பாரா? இருவருக்குள்ளும் ஓர் இனிமையான உறவு நிலவியது!
எப்போதுமே நல்ல இணக்கமாகத் தான் இருந்தனர். ஒற்றை மகளை இழந்த வேதனை இவருக்கு. தன் பேரனை மனத்தில் வைத்து மீண்டுகொண்டார்.
காதல் இணையைத் தொலைத்த பிரதாப் துடித்த துடிப்பும் வேதனையும் ரவீந்தருக்கு அப்படியொரு கண்ணீரை வரவழைந்திருந்தது. மருமகன் இழப்பிலிருந்து மீண்டால் போதுமென நினைத்த காலமது.
பிரதாப் சௌந்தரியும் மனைவியின் இழப்பிலிருந்து மீண்டதாகத் தெரிந்தது. மகன் சிநேகனையும் பழையபடி பார்த்துக்கொள்ள தொடங்க… எல்லோருக்கும் ஒரு மனநிம்மதி.
சம்யுக்தாவின் மறைவுக்குப் பின்னர் இரண்டு வருடங்களும் உருண்டு சென்றன.
திடீரென ஒரு நாள் அடிப்பது தானே புயல்? அப்படித்தான் கீழ் வந்த செய்திகளும்!
“சங்கீத ராஜூ பிரதாப்புக்கும் இசைக்குயில் பிரேமினிக்கும் காதலா?”
“சங்கீத ராஜூ மீண்டும் காதலில் விழுந்துவிட்டார்!”
“பிரதாப் சௌத்தரியை yyy திரைப்படத்தின் டூயட் பாடலின் மூலம் வலை விரித்துப் பிடித்தார் பிரேமினி ரெட்டி! வலையை விரித்துப் பிடித்தாரா இல்லை விரித்தது புடவை முந்தானையா?”
“பிரதாப் சௌத்தரி சம்யுக்தா ரவீந்தரைவிட பிரேமினி ரெட்டியிடம் அதிகமாக மயங்கிக் கிடப்பதாகத் தெரிகிறது. விரைவில் திருமணத்தை எதிர்பார்க்கலாமா?”
இப்படியாகப் பல ஊடகங்களின் செய்திகளில் பிரதாப் அடிபட தொடங்கினார். இருவர்களுக்குள்ளும் ஈர்ப்பு தோன்றியிருந்ததா இல்லை காதலிக்கத் தொடங்கியிருந்தனரா தெரியவில்லை.
இல்லை ஒன்றுமே இல்லாததை ஊதிவிட்டுத் தலைப்புச் செய்தியாக்கி ஆதாயம் தேடிக்கொண்டனரா தெரியவில்லை.
இருவரின் திருமணமும் நடந்தே விட்டது தெலுங்கு சாங்கியப்படி… இருவரின் குடும்பங்கள் மனம் குளிர குளிர ஆசீர்வதித்தனர். ரவீந்தரும் திருமணத்தில் கலந்துகொண்டு அட்சதையைத் தூவி ஆசீர்வாதத்தை வழங்கினார்.
சிநேகன் மட்டுமே அத்திருமணத்தை எப்படி எதிர்கொள்வது என்று திண்டாடிப் போனான். ஊடகங்களின் லைம்லைட் அவன் மீதும் விழுந்தது. எல்லாவற்றையும் கடந்து வரத்தான் செய்தான்.
அடுத்து வந்திருந்த நான்கைந்து வருடங்களில் அவனுக்கு இரண்டே குழப்பங்கள் மட்டுமே. ஒருவருக்கு இரண்டு காதல் சாத்தியமா? பிரேமினிக்கு உண்மையிலேயே தன் மீது பாசமா இல்லை பாசாங்கு செய்கிறாளா?
இரண்டாம் குழப்பம் அவன் பதினைந்தாம் வயதில் விலகியது. பொருந்திப் போக முடியாத கூட்டிலிருந்து விலகி வந்துவிட்டான். இனி அவனின் முதலாம் குழப்பத்திற்கு அவனே விடையாகப் போகிறான்.
தன்னால் தான் ரவீந்தர் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் உறவில் விரிசல் விட்டதோ? சிநேகன் யோசித்தபடி ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.
அவனுக்குப் பொண்ணு பார்க்கப் போவது; அவன் உறவுகளின் வருகை என்று எல்லாம் சற்று நேரத்திற்கு பின்னுக்குப் போய்விட்டது. தாத்தாவும் வீடும் மட்டுமே அந்நேரம் அவன் நினைவில். அந்த வாகன ஓட்டுநர் விவேக்கின் அலட்சியத்தால் தான் வெகுண்ட அக்காட்சி மனத்தில் ஓடியது.
வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடும் நபர்களை சிநேகன் கண்டு கொள்வதில்லை. ஆனால், இன்று ஏனோ மனத்தைப் பாதித்தது.
ரவீந்தர் தாத்தா அவனின் உயிரானவர். அவரின் பொருட்டு வரும் எந்த விசயமும் சிநேகனுக்கு அதி முக்கியமான ஒன்று. இல்லையென்றால் திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமா மறுத்து வந்தவன் அந்த உறுதியை விட்டுத் தருவானா?
கூடிய விரைவில் வீட்டின் கீழ்ப்பகுதியைப் புதுப்பிக்க டிசைன் செய்ய வேண்டும். தனக்குத் தெரிந்த நண்பர்களில் யாரெல்லாம் கன்ஸ்ட்ரக்ஷெனில் இருக்கிறார்கள் என நினைவை ஓட்டிப் பார்த்தான். நிலவனும் மம்தாவும் நினைவுக்கு வந்தனர். அவர்களிடம் பேச வேண்டும் என்று மனத்தில் குறித்துக்கொண்டான்.
இப்பொழுது தனக்கு இருக்கும் நேரமின்மையை நினைத்து வருத்தமடைந்தான். தாத்தாவுக்காக ஏதேனும் உடனே கவனிக்க வேண்டிய வேலைகள் இருந்தால் அவற்றை மட்டும் துரிதமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்.
ஆனால், அப்படிப்பட்டச் சின்ன சின்ன வேலைகளை தினேஷ் பார்த்துக் கொடுப்பது சிநேகனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தங்கள் வயல்களுள் மூன்று பாகங்களைக் கூட தாத்தா தினேஷிற்கு குத்தகைக்கு விட்டிருப்பதும் அவனுக்குத் தெரியவில்லை. அவனின் தங்கையைத் தான் தனக்குப் பார்த்திருப்பது என்பது மட்டும் எப்படித் தெரிந்திருக்கப் போகுது?
தாத்தாவிடம் பேச வேண்டும் என்று அவருக்கு அழைத்துப் பார்த்தான். அவர் ஃபோன் ரிங் போனது. ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை. தன்னைத் தவிர்க்கிறாரா?
வந்த எரிச்சலில் மொபைலை தூக்கிப் போட்டுவிட்டுக் கண் மூடிப் படுத்துக்கொண்டான். இடது கையை கண்களுக்கு மேல் வைத்தபடி படுத்திருந்தவன் அப்படியே உறங்கியும் போனான்.
யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டுப் புரண்டு படுத்த சிநேகன், “கம் இன்!” எனச் சொல்ல…
“பூட்டி வச்ச கதவைத் திறந்திட்டு உள்ளார வர என்ட்ட பீங்க்கம் (சாவி) லேது ரா நாணா! கதவைத் திற!” கணீர்க் குரலில் பதில் வந்தது.
அதைக் காதில் வாங்கிய சிநேகன் துள்ளி எழுந்தமர்ந்தான்.
“வயசானாலும் இந்த அதிகாரம் போகுதா பாரு!” முணு முணுத்தபடி கதவைத் திறந்துவிட்டான்.