காதல் சிநேகன் – 1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

காதல் சிநேகன்

அத்தியாயம்- 01

அதிகாலையில் சிலுசிலுவென வீசிய காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துப் பிடித்தபடி அந்த இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள் ஷாமினி.

தோளில் ஒரு பையும், கையில் ஒரு சின்ன டிராலி சூட்கேஸும் வைத்துக்கொண்டு பளீரென்ற தோற்றத்துடன் வருபவளைக் கண்டதும் முகம் மலர்ந்தான் தினேஷ்.

“ஏய் அண்ணா! நீ எப்படி இருக்கன்னு கேட்கத் தேவையில்லாமல் நாம தான் அடிக்கடி போனில் பேசிக்கிறோமே. சரி சொல்லு ரொம்ப நேரமா காத்திட்டிருக்கியா?”

அவள் முதலில் சொன்னதைக் கேட்ட தினேஷ், “பார்ரா இவளை” என்றான்.

“நாம அடிக்கடி போனில் பேசிக்கிட்டாலும் ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு வந்திருக்க… இப்படி நேர்ல பார்க்கும் போது, எப்படி இருக்கண்ணான்னு ரெண்டு வார்த்தை நலம் விசாரிச்சா குறைஞ்சா போயிருவ? பெரியக் கஞ்சாம்பட்டி குட்டிம்மா நீ!”

அவள் தலையில் ஒரு குட்டும் வைத்தான் தினேஷ்.

அவன் காத்திருப்பைக் குறிப்பிட்டுத் தங்கை விசாரித்தது மகிழ்ச்சியைத் தர, அக்கறையாக வருதாக்கும் வார்த்தைகள் எனப் பாசத்தில் கரைந்து உருகியும் போனான்.

“இப்ப தான் வந்தேன் குட்டிம்மா. ஒரு கால் மணி நேரம் இருக்கும்.”

தங்கையின் அருகில் வந்து அவளின் சூட்கேஸையும் பையையும் வாங்கிக்கொண்டு முன்னே நடந்தான். அவளோ அண்ணனை நமுட்டுச் சிரிப்புடன் தொடர்ந்தாள்.

“நா கஞ்சாம்பட்டி தான் இல்லங்கல. சரி நீ எப்ப இருந்து பொய் சொல்லியா மாறுன?”

“பொய் சொன்னேனா… என்னது?” தினேஷ் திகைத்து விழித்தான்.

“நீ அஞ்சு முப்பத்தஞ்சுக்கெல்லாம் இங்க வந்துட்ட. இவ்வளவு நேரமும் அதிகாலை சுபவேளைன்னு பாட்டுப் பாடி அண்ணி கூடக் கடலை வறுத்த வாசனை எனக்கு டிரைன் வரை வந்து மூக்குல ஏறிச்சே.”

பட்டாசு போலச் சடசடவெனச் சத்தமாக உரையாடியவளின் வாய்க்குள் எதை வைத்து அடைப்பது என தினேஷ் சுற்றும் முற்றும் தேடினான்.

‘இவ அக்கறையாவா கேட்டிருக்கா. நம்மள வம்பிழுக்கவில்ல செஞ்சு இருக்கா.’

“என்னத்தை அப்படித் தேடுற? சொன்னா நானும் உனக்கு உதவி செய்வேன்ல?”

அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு. கிண்டலாகக் கேட்டு வைத்தவளை முறைக்க முடியாமல் தவித்துப் போனான் அவன். உண்மையைக் கண்டது போல் பேசுபவளின் வார்த்தைகள் மெய் தானே?

தாய் வீடு சென்றிருந்தாள் தினேஷின் மனைவி மேகலா. அவளுக்குப் பிரசவ நாள் அருகினில் வந்திருக்க… அவளை ஃபோனில் அழைத்து இவ்வளவு நேரமும் பேசி இருந்தான்.

இருவரும் பிரசவத்தை முன்னிட்டுப் பிரிந்து இருப்பதால் தினேஷிற்கு ஏற்பட்டிருக்கும் பழக்கம். விடியுதோ இல்லையோ, கண் விழித்ததும் மனைவியிடம் பேசி விடுவதை வழமையாக்கிக்கொண்டிருந்தான்.

கணவன் மனைவி இருவரும் அவ்வப்போது அனேகமான தம்பதிகளைப் போல் சண்டை போட்டாலும், அவர்களுக்குள் நேசம் வாசம் வீசிக்கொண்டிருப்பதை வீட்டினர் நன்றாக உணர்ந்திருந்தனர்.

இரயில் நிலையம் வந்தும் தன் பேச்சைத் தொடர்ந்தது தங்கைக்கு எப்படித் தெரிய வந்தது என்று தினேஷிற்கு யோசிக்கத் தேவை இருக்கவில்லை.

அவள் வரும் வழியில் இரயிலிலிருந்தபடியே வீட்டிற்கு அழைத்திருப்பாள். தான் கிளம்பி வந்த நேரத்தை வீட்டில் சொல்லியிருப்பார்கள். அதை வைத்துக் கணக்கிட்டிருப்பாள்.

கில்லாடி!

“இதுக்குத் தான் அறிவாளியின் அண்ணனாகப் பிறக்கக்கூடாது.” பொய்யாக அலுத்துக்கொண்டான் தினேஷ்.

“டேய் அண்ணா! நீ எனக்கு முன்னயே பிறந்திட்ட. இனி வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது சொல்லு? பேசாம அந்தச் சாம்பல் நிற வஸ்துவை நல்லா பாலீஷ் போட்டு வை. நான் வேணா அதை நல்லா மினுமினுப்பா தேய்ச்சி வச்சிக்க உதவி செய்யவா?” பற்கள் பளீரிட மீண்டும் ஒரு சிரிப்பு.

“ஹாஹா… வாயாடி! எப்படி இப்படி எல்லாம் பேசக் கத்துக்கிட்ட நீ குட்டிம்மா?” அண்ணனுக்கும் தங்கையின் சிரிப்புத் தொற்றிக்கொண்டது.

“டீச்சர் வச்சிக் கத்துக்கிட்டேன்னு சொல்ல ஆசை. ஆனா பாரு இதுக்கெல்லாம் யாரைத் தேடன்னு புரியாம நானே சுயமா பேசி டிரெயினிங் எடுத்துக்கிட்டேன்.”

ஒற்றைக் கண்ணிமையைச் சிமிட்டி நாவை ஒரு பக்கமாகக் கன்னத்தினுள் முட்டிச் சிரித்தாள்.

“ரொம்ப பெரிய அறிவாளி தான் போ.”

தங்கையின் குறும்பை இரசித்துக்கொண்டான். அவன் முகமெல்லாம் பூரித்து வழிந்தது.

பெங்களூரில் வேலையில் இருப்பவள் நினைத்தாலும் அடிக்கடி வீட்டிற்கு வர இயலாது. ஏதோ ஒரு வேலையில் பிடித்து வைத்துக்கொள்ளும் அலுவலகம்.

கடந்து இரண்டு மாதத்தில் இப்போது தான் ஊருக்கு வந்திருக்கிறாள். அவளைக் காண இவனாலும் நினைத்த நேரம் போக இயலாத நிலை.

“சரி சொல்லு, இன்னைக்கு என்ன கடலை வறுத்த அண்ணிக்கிட்ட?”

சத்தமாக ஒலித்த அக்குரலில் கலவரமாகிப் போனான்.

“குட்டிம்மா…ஆ… உன் அண்ணிட்ட நான் பேசினது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதாதா? இப்ப பாரு அந்த டீக்கடையில பால் ஆத்துறவன், பிளாட்பாரத்துல பூ விக்கிற ஆயி, தெருப் பெருக்குற குப்பனுக்கும் தெரிஞ்சுப் போச்சுப் போ.” என்றபடி தன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

“அங்க தெருவைக் கூட்டுறவன் பேரு குப்பனா? உனக்கெப்படி அவனைத் தெரியும்?”

இரண்டு புருவங்களும் உயரக் கேள்விக் கேட்டாள். விழிகள் முழுவதும் குறும்பு ஊறித் தெறித்துக்கொண்டிருந்தது. இமைகள் படபடவென்று அடித்துக்கொள்ள அப்பாவி போலப் பாவனையைக் காட்டினாள்.

“வாயாடிடி நீ! சும்மா அப்படியே ஒரு புளோவுல சொன்னேன். அவனைத் தெரிஞ்சு வைச்சு என்ன செய்யப் போறேன்? கேள்வியைப் பாரு. ஆமா, பெரிய கம்பெனியில வேலைக்குப் போயும் உன் வெண்கலத் தொண்டை மாறலையா?”

“ஹாஹா! அந்தக் கொடுமையை ஏன் கேட்கிற. வாயை இழுத்து மூடிட்டு அந்த கம்யூட்டரை கட்டிக்கிட்டும், நோட் பேடில் நோட்ஸ் எடுத்துக்கிட்டும் நான் படுற பாடு எனக்கு மட்டும் தானே தெரியும்.

எங்க டீம்ல நான் ஒருத்தி தானே பொண்ணு. அது வேற பெரிய தொல்லை. குசுகுசுன்னு பேசக் கூட ஆளைத் தேட வேண்டியதா இருக்குண்ணா.”

வாயடிக்க வழியற்று வேலையை மட்டுமே செய்ய வேண்டியக் கட்டாயத்தில் மாட்டிக்கொண்டு, தன்னிடம் அதைப் பற்றிச் சலித்துக் கொள்பவளைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு மூண்டது.

“ஆமாம் ரொம்ப கவலைப்பட வேண்டிய விசயம் தான். இங்க வயல் வரப்புல, ‘ஏ மூக்காயி ராக்காயி’ன்னு தொண்டைத்தண்ணி வத்தக் கத்திட்டுச் சுதந்திரமா சுத்தி வருவ. அங்க ஆபீஸ்ல போயி அப்படிச் சத்தமா பேச முடியாதில்லடா?

அப்படியே வாயில பிளாஸ்திரி போட்டுவிட்ட மாதிரி கம்முன்னு வேலையை மட்டும் பார்த்திட்டு இருக்கனும்னா எங்க குட்டிம்மாவுக்கு ரொம்ப பெரிய கொடுமையில்ல!

எப்படி உன்னால அமைதியாக இருக்க முடிஞ்சதுடா? இங்க பாரு, நீ சொன்னதைக் கேட்கும் போதே உன் உடன் பிறப்புக்குக் கண்ணு வேர்க்குது.”

வராத கண்ணீரைச் சிமிட்டி விட்டுக்கொண்டான் தினேஷ்.

“போண்ணா! வர வர என்னைய ரொம்பவே கிண்டல் பண்ற நீ.”

ஷாமினி காலைத் தரையில் உதைத்துச் சிணுங்கினாள்.

“நீ தான ஆரம்பிச்சடா… சரி வா வா. அம்மா இந்நேரத்துக்கு நம்ம வாசலுக்கும் வீதிக்கும் நடந்திட்டு இருப்பாங்க.”

‘அம்மா’ என்று அண்ணன் சொன்னதும் ஷாமினியிடம் ஒரு தவிர்க்க முடியாத சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

இருவரும் அக்காலைக் காற்றின் புத்துணர்வைச் சுவாசப்பைகளில் நிரப்பிக்கொண்டும் சுற்றுப்புறத்தை ரசித்தபடியும் பயணித்தனர்.

அமைதியான அப்பயண நேரத்தைப் பறவைகளின் சடசடப்பு முதலில் கலைத்தது. தங்களைக் கடந்து செல்லும் பறவைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தவளை தினேஷின் குரல் கலைத்தது.

“குட்டிம்மா…”

“ம்ம்…”

காலையின் இனிமையில் மூழ்கி இருந்தவளின் கவனம் முழுவதாக அவன் பக்கம் திரும்பவில்லை. அதனை உணர்ந்த தினேஷ் சற்றுக் குரலை உயர்த்திப் பேசினான்.

“குட்டிம்மா!”

“என்னண்ணா? சொல்லு.”

உரிமை எடுத்துக்கொண்டு முகத்தில் வந்து உறவாடிக் கொண்டிருந்த முடிக்கற்றைகளை இலாவகமாக ஒதுக்கி விட்டவள், அண்ணனின் பேச்சுக்குச் செவிகளைக் கொடுத்தாள்.

“நாளைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க.”

சந்தோசத்துடன் தினேஷ் சொல்ல, பெரியதாக அண்ணன் போட்ட குண்டில் ஷாமினி அதிர்ந்தாள்!

“பொண்ணு பார்க்க வர்றாங்களா? என்னையவா? என்னண்ணா சொல்ற!”

அவள் ஜெர்க் ஆனதில் பைக்கும் ஜெர்க் ஆனது.

“ஏய் விழுந்துறாதடி! பார்த்து… சரியா பிடிச்சு உட்காரு.”

அந்த ஜெர்க் அவனைத் தடுமாற வைத்தது.

“இப்ப எனக்குக் கல்யாணம் வேணாம்னு அம்மாட்ட சொன்னேன். நான் சொல்றதை எந்தக் காலத்துல அவங்க கேட்டிருக்காங்க. நான் அவ்வளவு கெஞ்சிக் கேட்டும் காதுல போட்டுக்காம இப்படி அவதில மாப்பிள்ளை பார்க்கணுமா அண்ணா?”

கடுகடுவென மாறி இருந்தது அவளது முகம். அம்மாவைக் குற்றம் சொன்னாள். அண்ணன் சொல்லக் கேட்ட செய்தியில் அவள் உள்ளம் கொதித்துப் போனது. தன் கோபத்தை அண்ணனிடம் வெளிப்படையாகக் கொட்டினாள்.

அதை அவதானித்தவாறு, “அம்மா இந்த ஏற்பாட்டைப் பண்ணலை. நாந்தான்…” எனச் சொன்ன அண்ணனைப் பார்வை பொசுங்க முறைத்தாள்.

‘யூ டூ புரூடஸ்!’

மனதில் அவனைத் திட்ட, முகம் செவசெவ என்று பொரிந்து தெரிந்தது.

கண்ணாடியில் அவளைக் கவனித்தவன், “திட்டுறதை மனசாரச் சத்தமா திட்டி விட்டுரு குட்டிம்மா.” என்றான்.

அண்ணனின் உதடுகளில் சன்னமான புன்னகை வெளிப்பட்டதைக் கவனித்தாள் ஷாமினி.

“குட்டிம்மாவாம் குட்டிம்மா. உன் குட்டிம்மாவுக்கு இப்ப எதுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்? அப்படி என் கல்யாணத்த நடத்தியே ஆகணும்னு என்ன உங்களுக்கு அவசரம்?”

இப்படி ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டு இவன் சிரிக்கிறானா? அவள் என்றும் உடன் பிறப்புகளைத் திட்டியதில்லை. இன்று எப்படித் திட்டுவாள்? வசவை வாய்க்குள் வைத்து அரைத்தாள்.

அவளால் இவ்விசயத்தை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள இயலவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக்கொண்ட உணர்வு. அதன் பிறகு அண்ணனிடம் அவள் பேசவே இல்லை!

தினேஷ் ஷாமினியிடம் பேச முயன்ற போது அவள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. அவனைப் பார்வையிலிருந்து விலக்கியும் புறக்கணித்தாள்.

கண்ணாடி வழியாகத் தங்கையின் செயல்களைப் பார்த்து அவனும் அவளிடம் எதுவும் பேச முயலவில்லை. அமைதியாய் வண்டி ஓட்டினான்.

ஆனால், மனதில் வருத்தம் கொண்டான்.

‘நம்ம ஊர்ல பொண்ணுங்கன்னா எப்பவுமே அவங்க குடும்பத்துக்குப் பெரிய பொறுப்பு. ஒவ்வொரு வீட்லயும் அந்த வீட்டுப் பொண்ணு படிப்ப முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு நினைக்கிறது சகஜமானது.

என் தங்கச்சிக்கு மட்டும் இது ஏன் புரிய மாட்டேங்குது? காலங்காலமா இது எல்லாயிடத்துலயும் நடக்குற பழக்கம் தானே?’

அவளுக்கு வயதில் ஒரு திருமணத்தை செய்து வைக்க நினைப்பது தவறா என்ன? ஆணா இருந்தாலுமே வேலை கிடைத்து வருமானம் வருகிறதென்றால் திருமணப் பேச்சு எழத்தானே செய்யும்?

ஒரு வருசத்தை அவளிஷ்டம் போல வேலையில் சேர்ந்து கடத்தி இருக்கிறாள். அது போதவில்லையா? இன்னும் எத்தனை காலம் இப்படியே கடத்த முடியும்?

‘இந்த அஞ்சாறு மாசமா இவட்ட கல்யாணத்துக்குச் சம்மதம் கேட்டு அலுத்துப் போச்சு. இவளை வெளியூருக்கு அனுப்பி வைச்சது இப்ப தப்புன்னு நினைக்க வைக்கிறா.

தினமும் அம்மா வேற புலம்பித் தள்ளுது. என் மண்டை மட்டுமா உருளுது? என் பொண்டாட்டி மண்டையும் இல்ல உருளுது.

நாங்க வீட்டுப் பெரியவங்களா இருந்து இவளைக் கண்டிக்காம இவ போக்குக்கு விட்டுக்கிட்டு இருக்கோம்னு கோவிக்குது.

ஏதோ நாத்தனாரும் அண்ணியும் இணக்கமா இருக்காங்க. அதைப் புரிஞ்சிக்காம என்னன்னமோ சொல்லிக் குறைப்பட்டா?

என்ன நடக்கப் போகுதோ? வேளாங்கண்ணி தாயே! நீ தான் எனக்குத் துணைக்கு நின்னு எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்.’

யோசனைகளும் புலம்பல்களுக்கும் முடிவில் வேளாங்கண்ணி மாதாவை மனதில் நிறுத்தி வேண்டிக்கொண்டவனின் நெஞ்சம் முழுவதும் பாசத்தால் கரைந்தது. தங்கையின் மௌனம் அவனுக்குத் துன்பம் தந்தது.

அரை மணிநேரம் பயணத்தின் முடிவில் அவர்களின் இரண்டு சக்கர வாகனம் அந்த ஊராட்சிக்குள் நுழைந்தது.

எதிர்பாராத வகையில் தகைந்து வந்திருக்கும் சம்பந்தம். அதனை எப்பாடுபட்டாவது முடித்து விட வேண்டும் என்று தினேஷ் முனைப்பாக இருந்தான்.

அவன் மனைவி மேகலா, தன் ஒரே நாத்தனாரின் திருமண வேலைகளில் தற்போது கலந்துகொள்ள முடியாது. அவளின் பிரசவம் இப்பவோ அப்பவோ எனும் நிலை.

இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கணவனும் மனைவியும் சேர்ந்து தான் இந்த முடிவெடுத்திருந்தனர்.

மருமகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகளுக்குத் தயங்கிய மாமியார் மனோகரியை, மேகலா பக்குவமாக எடுத்துச் சொல்லித் தானே சம்மதிக்க வைத்திருந்தாள்.

‘இந்தச் சம்மந்தத்தைத் தவறவிட்டிட்டா போச்சு! இவங்க நம்மளை அரைச்சு உப்புக்கண்டம் போட்டாலும் போட்டுடுவாங்க. வார்த்தையால குத்திப் பேசி… யப்பா! மனோகரியா இல்லைக் கொக்கான்னு நினைக்க வச்சிடுவாங்க நம்மள!’

மாமியாரைப் பற்றி எண்ணிப் பயந்தாலும் மேகலாவிற்கு நாத்தனாரின் மேல் வாஞ்சையும் பாசமும் உண்டு. நாத்தனாரை மிக நன்றாகவே அறிந்து வைத்தவளும் கூட!

பட்டிக்காட்டு மாப்பிள்ளைகளை அவள் விரும்பி ஏற்க மாட்டாள். பண்ணை, வீடு, தோட்டம், வயல்வெளி என்று அவளுக்கு நாட்டம் இல்லை.

வரும் வரன்கள் அப்படியே பட்டம் வாங்கி வேலையில் இருந்தாலும் சம்பளம், நாகரீகம் என விதம் விதமான காரணங்களைச் சமயத்திற்கு தகுந்தார் போலப் பொறுக்கி எடுத்து மறுப்பதில் வல்லவி அப்பெண் ஷாமினி.

அவள் மனத்தில் வேறு ஏதேனும் எண்ணங்கள் இருக்கின்றனவா என்று கேட்டால் வேலையை மட்டும் காரணம் காட்டி திருமணம் தற்போது வேண்டாமென மறுத்தாள். வேற எதையும் இவர்களால் தெரிந்து கொள்ள இயலவில்லை.

அப்படி அவளின் மனத்தில் காதல் முளைத்திருப்பின் மேகலாவால் அவளை ஆதரிக்க இயலாது. கெடுபடியான மாமியார் மற்றும் கணவரின் வீட்டுச் சொந்தங்கள் மட்டுமல்ல, இவளின் பிறந்த வீடும் பேசும்.

பொதுவாக நம் திருமணங்களை ஜாதி, இனம், மொழி மட்டுமல்ல பல உட்பிரிவுகளும் அல்லவா நிச்சயிக்கின்றன?

பெரிய நகரங்களில் இவையெல்லாம் மாறிக்கொண்டிருக்கலாம், சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள் பல பழக்கங்களை எளிதில் மாற்றிக்கொள்வதில்லை.

நான்கையும் யோசித்துப் பார்த்தே நாத்தனாரை விரைவாகத் தாட்டிவிட முயன்றாள்.

தற்போது விரும்பிப் பெண் கேட்டு வருபவர்களை அவள் மறுக்கவே முடியாது என்பது மேகலாவின் திண்மையான எண்ணம். கணவனை நல்லது பேசியே முடிக்கி விட்டிருந்தாள்.

“நான் பிரசவ வலி எடுத்துப் போய்ப் படுக்கையில கிடந்தாலும் நீங்க யோசிக்கக்கூடாது. தயங்கிக் கல்யாணத்தைத் தள்ளி வைக்கக்கூடாது மாமா. மாப்ள வீட்ல என்ன பிரிய படுறாகளோ சரின்னுடுங்க. அவங்க இஷ்டப்படியே எல்லாத்தையும் நடத்திப் போடுவோம்.”

உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த மனைவியை இடையிட்டிருந்தான் தினேஷ்.

“நான் பார்த்துக்க மாட்டேனா மேகலா. நீ உன் உடம்பைப் பார்த்துக்க. இந்நேரத்தில போயி இப்படி நீ மனசை உலட்டி உணர்ச்சி வசப்பட்டா பிள்ளைத்தாச்சி உடம்பு என்னத்துக்கு ஆவறது?

உன்னை மனசுல நிறுத்தித் தான் அவ்வளவு யோசனை எனக்கு. ரொம்ப தயக்கமாகவும் இருந்திச்சு. நீ எல்லா விசேசத்துல கலந்துக்க முடியாதேன்னு மனசு அடிச்சுக்குது. வேற ஒன்னுமில்லை.

இப்ப சொல்லிட்டேல்ல. நான் பார்த்துக்கிறேன். இனி நீ நிம்மதியா இரு. சரி எஞ்சிங்கக்குட்டி என்ன பண்றான்? அவனை மனசு ரொம்ப தேடுதுடி. கண்ணுக்குள்ளேயே நிக்கிறான்.”

“உங்க சிங்கக்குட்டியா, உங்க தொந்தரவு போட்டி எல்லாம் இல்லாம என்னைக் கட்டிப்புடிச்சித் தூங்கிட்டு இருக்கான். ஆமாம்… அவனை மட்டும் தானா தேடுது உங்க மனசு?”

‘இவளை…’

மனைவி சொன்னத் தொனியில் மனம் விட்டுச் சிரித்திருந்தான்.

அந்நேரம் தன்னருகில் மேகலா இருந்திருந்தால், வெட்கம் பூசிக்கொண்டிருக்கும் தன்னுடைய முகத்தை என்னென்னவோ செய்து மேலும் சிவக்க வைத்திருக்கக்கூடும்.

இந்நினைவே தினேஷிற்குள் சுகமான ராகத்தின் வருடலாய்!

இரண்டு நாளைக்கு முன்னர் கணவன் மனைவிக்கிடையே நடந்த உரையாடல்கள் இவை. நேற்றே மாமனார் வீட்டிற்குப் போய் மனைவியைப் பார்த்துவிட்டு மகன் ரித்திக்கை தன்னுடன் அழைத்து வந்துவிட்டான்.

அண்ணனும் தங்கையும் சில நிமிடப் பயணத்தின் முடிவில், அந்த வீட்டு வாசலில் வந்து இறங்கினர்.

வாகனத்தின் சத்தம் கேட்டு ரித்திக் ஓடி வர, அவன் பின்னே ஓடி வந்தான் பிரவேஷ். தினேஷ் மற்றும் ஷாமினிக்குப் பின்பு பிறந்த இளவல். இவன் கல்லூரி மாணவன்.

“அத்தே!” தன்னை நோக்கி ஓடி வரும் மருமகனைக் கையில் அள்ளிக்கொண்டாள் ஷாமினி.

“நல்லா இருக்கியாக்கா?”

புன்னகை முகத்துடன் ஆவலாகத் தன்னை அணைக்க வந்த பிரவேஷை ஷாமினி சட்டை செய்யவில்லை. ஒரு கையால் அவனைப் பிடித்து ஒதுக்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அக்காவின் செயலைக் கண்டு பிரவேஷ் முகம் கூம்பிப் போனான். தன் மீது ஏனிந்த கோபம் என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் பின்னாடியே இவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.

தினேஷ் நடந்ததைப் பார்த்ததும் மிகவும் சங்கடப்பட்டுப் போனான். என்ன கோபமாக இருந்தாலும் ஷாமினி பிரவேஷைத் தள்ளிவிட்டது சரி கிடையாது. அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

“அவ எம் மேலக் கோவமா இருக்காடா. கொஞ்ச நேரத்தில அவளே சரியாகிடுவா. நீ இதை நினைச்சி வருத்தப்பட்டிட்டு இருக்காத பிரவேஷ்.”

தம்பியின் தோளில் கை போட்டுத் தட்டிக்கொடுத்தான்.

இன்னும் தொடர்ந்து தம்பியிடம் அவன் ஏதோ சொல்லப் போக, அந்நேரம் சமையலறையில் பொங்கி வந்த பாலை அணைத்துவிட்டு, இட்லி குண்டாவை அடுப்பில் ஏற்றி வைத்த மனோகரியும் அரவம் கேட்டு அப்படியே வெளியே வந்தார்.

தினேஷ் கப்பென வாயைப் பொத்திக்கொண்டான். இவன் பிரவேஷிடம் சமாதான வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டு வைத்தால் மனோகரி சும்மாவா இருப்பார்?

அவர், “என்ன நடந்தது… என்ன பிரச்சனை இப்ப?” என்று விசாரிக்க ஆரம்பித்து ஒரு பாட்டம் பேசி வைத்தால் ஷாமினிக்கு இன்னுமே கோபம் வரும். மனதுக்கும் கஷ்டமாகிப் போகும்.

தேவையா அது?

ஆண்கள் அமைதியாக நிற்க, ஷாமினி ரித்திக்குடன் ஐக்கியமாகி இருந்தாள்.