காதல் கஃபே – 8
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
8
“நோ மம்மா… இன்னும் எழுந்துக்கல…. என்னமோ இன்னிக்கு எழுந்துக்கவே பிடிக்கல. ஆனா பசிக்குது. உன் கைல சாப்பிடணும் போல…. உன் மடியில படுத்துக்கணும்னு….”
போர்வைக்குள் அடங்கியிருந்தபடி பேஸ் டைமில் இருந்தாள் ஜெனி. அந்தப் பக்கம் இருந்த அவள் அம்மா மகளின் வார்த்தைகளில் கலங்கிப் போனார்.
எப்போதும் இப்படிப் பேசுபவள் இல்லை அவள். தன் மனம் சோர்வுறும் நேரங்களில் கூட இவளுடைய வார்த்தைகள் தான் தைரியம் சொல்லும். இன்று என்னவாயிற்று இவளுக்கு? ரொம்பவே சோர்ந்து வேறு தெரிகிறாள்.
“ஏன்டா உனக்கு இந்தக் கஷ்டம்? சொல்ல சொல்ல கேட்காம அங்க தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிற. தனியா யாரும் இல்லாம… அங்க செய்யுற வேலையை இங்க வந்து செய்ய முடியாதா?”
“நீ இப்ப கூட ஒரு வார்த்தை சொல்லு, நம்ம காம்ப்ளெக்ஸ்லயே அப்பா உனக்கு செட் பண்ணி கொடுத்திடுவாங்க, நீ எப்படி ஆசைப்படுறியோ அப்படி…”
“ம்மா… கூல்… நான் சும்மா ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாது. உடனே நீங்க எக்ஸ்ட்ரீம்க்கு போயிடுவீங்களே…” படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த ஜெனி சிரித்தபடியே அம்மாவை அதட்டினாள்.
“என்னாலயும் அங்க வந்து இருக்க முடியல. உங்க அப்பாவும் இந்த வானரமும் கூட நான் இல்லாம எப்படியோ சமாளிச்சுப்பாங்க… உங்க பாட்டியை கவனிச்சு நேரத்துக்குச் செய்யுறது தான் முடியாது. அதுக்கே அங்க இங்க நகர முடியல என்னால”
புலம்பியவரை சமாதானம் செய்து அழைப்பை முடிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது ஜெனிக்கு.
“நாம பேசி நாலு நாளாச்சு இல்லமா… அந்த இதுல சும்மா சொன்னேன். நீங்க வேற?”
வேறு விஷயங்களை இழுத்து பேசி கொஞ்சம் அவரைத் திசை திருப்பிச் சிரிக்க வைத்து ஒருவழியாக போனை வைத்தவள், “ஹப்பா” பெருமூச்சை இழுத்து விட்டாள்.
உடல் சோர்ந்திருந்தது. மனம் அதற்குமேல் எழுந்து கொள்ளவே மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்ததில் மிகவும் ‘லோ’ வாக உணர்ந்தாள்.
கஃபேயில் கூடப் பொன்மணியும், யமுனாவும் துளைத்து எடுத்து விட்டார்கள். “என்னாக்கா, மூஞ்சில லைட்டு இல்லாம சுத்திட்டு இருக்க?” என்று.
“ஹம்… பல்ப் ப்யூஸ் போயிடுச்சு, போங்கடி…” கிண்டலாகப் பதில் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ ஞாபகத்தில் நேற்று கேக் மிக்ஸிங் செய்யும்போது பொடித்த சக்கரைக்குப் பதிலாக அதே மாதிரி மினுமினுத்த கிரிஸ்டல் உப்பை அளந்து வைக்க….
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“யக்கோவ்… எங்க இருக்க நீ?“ யமுனா பார்த்து சரியான நேரத்தில் தடுத்தாளோ, இல்லையோ… ஒரு நிமிடத்தில் கலந்து வைத்திருந்த அத்தனை பண்டமும், மூன்று மணி நேர உழைப்பும் குப்பைக்குப் போயிருக்க வேண்டியது…
‘என்ன தான் ஆச்சு எனக்கு?’ மெடுல்லா ஆப்லோங்கடாவில் அடிப்பட்ட மாதிரி அவளுக்கு அவளே கேட்டுக்கொண்டாள்.
நினைக்க விரும்பாததை எல்லாம் விலாவரியாகப் பேசி மீண்டும் மனதின் மேற்பரப்புக்குக் கொண்டு வந்து அன்று தேவையில்லாத வேலை செய்தேனே, அதனாலா…?
இல்லை எட்டு, ஒன்பது வருடங்கள் முன்பு சதா தாழ்வுணர்ச்சியில் துவண்டபடி இறுக கட்டிய மனமும் எந்த நிமிடமும் ததும்பும் கண்களுடனும் வளைய வருவேனே, அந்தத் தருணங்களை ஞாபகப்படுத்திக் கொண்டதாலா?’
‘இதெல்லாம் எனக்குப் புதுசா என்ன? கேட்டுட்டு ஓடினவன் இனி இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்….’ திடீரெனத் தனக்குத்தானே சத்தமாகச் சிரித்துக் கொண்டாள்.
“ப்ச்… பாவம்… புள்ள ரொம்பவே அரண்டு போயிடுச்சு…” அன்றைய நினைவில் கசப்பாய் புன்னகை பரவியது அவள் இதழ்களில்.
“விளக்கமாறு பிஞ்சிடும் சித்தார்த், மரியாதையா நகர்ந்து போய்டு…” வெகு நெருக்கமாய் நின்றபடி தன் முகம் பார்த்து அவன் அசந்த நொடி ஒற்றைக் கையை வீசி இவள் பட்டென்று வெட்டி விட,
“பாருடா… ஸெல்ப் டிபென்ஸ்..!!!” நக்கலாகச் சிரித்தவன் அப்போதும் விலகாமல் சட்டம் மாதிரி சமையலறை மேடையை ஒட்டி நிற்க, “நீதானே லிவிங்.. டூ கெ…”
“பொய் சொன்னேன்டா கூமுட்டை. உன்னைப் பத்தி தெரியாம சொல்லிட்டேன். இப்ப நீ மட்டும் நகரல, யோசிக்கவே மாட்டேன், கொதிக்கிற பாலை எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன்…” அவள் கடுமையாக முறைத்தாள்.
“ஹ ஹா… அப்படி வா வழிக்கு… உன் வாய்ல இருந்து வரவழைக்குறதுல ஷப்பா….” சிவந்து மினுங்கும் கொவ்வைப் பூ மூக்கைப் பற்றி லேசாகத் திருகினான்.
“பட் இதுவும் நல்லாத்தான் இருக்கு….” குறும்பாய் சிரித்தபடி இன்னும் நெருங்க எத்தனித்தவனின் நெஞ்சில் ஒற்றை விரல் பொருத்தி தள்ளி நிறுத்தியவள், “ம்ம்ம்.. செருப்பு…” என்றாள் எரிச்சலாக.
“உனக்கு இது விளையாட்டா, டாகே…? சிரிக்காதே, கொன்னுடுவேன்”
“ஏன்டி, நீ நிஜமாவே பிரெஞ்ச் பொண்ணு தானா? இப்படிக் கழுவிக் கழுவி ஊத்துற…”
“அந்த ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் வச்சுக்கோ. இப்ப இடத்தைக் காலி பண்ணு”
“நீ என்ன காரணம்னு சொல்லாம நான் இங்க இருந்து கிளம்புறதா இல்ல, ஸ்வீட் ஹார்ட்…”
“வேணும்னா, ‘உன்னை எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவே இல்லடா மடையா’ன்னு என் மூஞ்சுக்கு நேரா இப்ப சொல்லு. மேல ஒரு வார்த்தை கூட விளக்கம் கேட்காம இங்க இருந்து நான் கிளம்பிடுறேன்”
புசுபுசுவென்று மூச்சு வாங்க தண்ணீர் குடித்தவள், டம்ளரை அவன் முகத்திற்கு நேராக வீசி எறிந்தாள்.
தூக்கி எறிந்ததை அலாக்காக கேட்ச் பிடித்தவன், “எங்க, சொல்லு பார்க்கலாம்…” கன்னங்கள் உள்குவித்துக் கிண்டலாகச் சிரிக்க, ஜெனி இயலாமையுடன் முறைத்தாள்.
“நான் சொல்ல மாட்டேன்னு உனக்கு அவ்ளோ கான்பிடன்ஸ்?” மேல் மூச்சு வாங்கியது. அவளுக்கு இன்னுமே படபடப்பு அடங்கவில்லை.
“உன்னால சொல்ல முடியாதுடி. இந்த ஒன்றரை கண்ணை வச்சு வளைச்சு வளைச்சு சைட் அடிச்சிட்டு…?”
கிண்டலாக அவளது வளைந்த புருவங்களை வருடிவிட்டு அவன் குழைய, ஜெனி கண்களைக் கடுமையாக உருட்டினாள். ‘என் கண்ணு ஒன்றரை கண்ணா?’ அந்த நேரத்தில் கூட அவளுக்கு முக்கியமான சந்தேகம் எழுந்ததை என்ன சொல்ல?
“நான் பார்க்காதப்ப உத்து உத்து பார்த்து ஜொள்ளு விட்டு, ஒரு வயசுப் பையனை பின்னாடியே அலைய வைச்சு… வாடி கல்யாணம் பண்ணிக்கலாம்னா மொக்கையா ஏதாச்சும் காரணம் சொல்லி மழுப்ப வேண்டியது, ஹ்ம்…. என்ன திமிரா உனக்கு?”
“கையைப் பிடிக்கக் கூட விட மாட்டாளாம், இதுல இந்த மேடம்க்கு லிவிங் டூ கெதர் வேணுமாம்… நீ வேற ஏதாவது பொய் சொல்லி இருந்தா கூட நான் நம்பி தொலைச்சிருப்பேன். இந்த லூஸு அவ்ளோலாம் வொர்த் இல்லியேன்னு குழம்பி குழம்பி எனக்கே ரொம்ப லேட்டா தான் ஸ்ட்ரைக் ஆச்சு…”
புருவத்தில் இருந்து கீழிறங்கி கன்னத்தில் கோடு போட்ட விரலை அவள் எரிச்சலாகத் தட்டி விட, அவள் செய்கையில் சித்தார்த்துமே கடுப்பானான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“பொண்ணுங்க ‘நோ’ சொன்னா அது ‘நோ’ தான்னு நீங்க தானே கொடி பிடிக்குறீங்க. இப்ப அந்த ‘நோ’வை தான் சொல்லித் தொலையேன்…”
“உனக்கு என்ன என்னைப் பார்த்தா டீனேஜ் பையன் மாதிரி தெரியுதா? உன் பின்னாடியே ஸ்டாக்கிங் பண்ணிட்டு திரிய… என்னன்னு சொல்லித் தொலைடி… மனுஷனை உயிரோட கொன்னுக்கிட்டு…” அவன் கடுப்படித்தபடி அங்குமிங்கும் அலைபாய….
அவள் சொல்லித் தீராமல் அவன் இங்கிருந்து கிளம்ப மாட்டான் என்பது புரிய ஜெனி ஆயாசமாக உணர்ந்தாள். முகத்தை இரு கைகளாலும் அழுந்த துடைத்துக் கொண்டாள்.
நகர்ந்து கூடத்திற்கு வந்தவள், “வா… வந்து உட்காரு சித்தார்த்.” சோஃபாவில் சென்று அமர, சித்தார்த்தும் நிதானமானான். அவளிருந்த இருக்கையின் கைப்பிடியில் அமைதியாக வந்தமர்ந்தவன் அவள் தோள்வளைவை இரு கைகளாலும் பிடித்தான்
“இஃப் ஐ ஹேவ் கிராஸ்ட் மை லிமிட்ஸ், ஸாரிடா”
நெகிழ்வாக உணர்ந்தவள் அவன் முகம் பார்த்து சீண்டலாக முறைத்தாள்.
“போதும்டா… ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே… இப்படி வந்து முன்னாடி உட்காரு…”
“ஹ ஹா… கண்டுபிடிச்சிட்டியா…? ஜெனி, நீ ஏன் பொய் சொல்லி என்னை அவாய்ட் பண்றேன்னு எனக்குத் தெரியும்… சொல்லட்டா?”
“எங்க சொல்லு பார்க்கலாம்…”
“பிரான்ஸ்ல ஒரு கொலை பண்ணிட்டு இங்க ஓடி வந்துட்ட… இன்டர்போல் உன்னைத் தேடிட்டு இருக்கு…. சரியா?”
“இல்லையா…? அதுக்கேன் முறைக்குற….? சரி, அப்புறம் வேற என்ன? ஹாம்.. கண்டுபிடிச்சிட்டேன். உன் பேக்கரில சக்கரைன்னு சொல்லி ஏதோ பவுடர் விக்குற… கரெக்ட்?”
“அடச்சீ…. அடங்கு… நீயும் உன் கற்பனையும்….”
‘தெரியும்றானே… எப்படித் தெரியும்…’ தன் பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்திருந்தவள், இப்போது எதை எடுத்து அவன் மண்டையை உடைக்கலாம் எனத் தேடத் துவங்கியிருந்தாள்.
“கோலமாவு கோகிலா பார்த்துட்டு நேரா இங்க வந்து.. உன்னை… என்னைப் பார்த்தா உனக்கு பவுடர் விக்குற மாதிரி தெரியுதாடா…?”
அவள் குஷன் மெத்தைகள் கொண்டு மொத்த, சிரித்தபடி வாங்கிக் கொண்டவன், “எனக்கும் டவுட்டு தான். உன்னை மாதிரி ஒரு லோக்கல் பீஸை எங்க நயனோட எப்படி கம்பேர் பண்றதுன்னு….?”
அவன் மேலும் மேலும் வெறுப்பேற்ற…
அடித்து அடித்துக் கைகள் வலிக்க, அசந்து போய் அமர்ந்தவள் எதிரில் இருப்பவனின் சிரித்த முகத்தையே தன்னை மறந்து பார்த்தாள். இந்தப் புன்னகையும் கிண்டலும் இப்படியே இருக்குமா, தான் சொல்வதைக் கேட்டபிறகும்?
சந்தேகம் தான்.
“ஓகே.. ஃபன் அபார்ட். என்னன்னு சொல்லு…” அவன் ஒழுங்காக அமர்ந்து அவள் முகம் பார்க்க, “வேதாளம் விக்கிரமாதித்தன் கழுத்துல கட்டி தொங்குற மாதிரி உயிரை வாங்குற… சொல்றேன், சொல்லித் தொலைக்கிறேன்…” அலுத்தவள் புன்னகையுடன் சொல்லத் துவங்க…
கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் தான் சிரிப்பை மறந்து இறுகியது. எதிர்பாரா அதிர்ச்சியில் அந்த இரவு வேளையிலும் வியர்க்க, நெற்றியில் பொடிந்த நீர்த்துளிகளை டிஸ்யூ கொண்டு ஒற்றிக் கொண்டான்.
ஏறி இறங்கும் அவன் தொண்டைக்குழியைக் கவனித்தவாறு சொல்லி முடித்த ஜெனி, எழுந்து சென்று வெதுவெதுப்பாய் இருந்த பாலை எடுத்து வந்தாள்.
“இந்தா குடி…” உணர்வு மரத்து இருந்தவனுக்கு அது தேவையாய் இருக்க, மறுக்காமல் வாங்கியபடி அவளை ஊன்றிப் பார்த்தான்.
‘திரும்ப விளையாட ஆரம்பிச்சிட்டாளா, என்ன…?’
“இதெல்லாம் நிஜமா சொல்றியா? இல்ல உன் வழக்கம் போல என்னை வெறுப்பேத்த சொல்றியா?”
“இந்தளவுக்குக் கற்பனை பண்ணி வெறுப்பேத்துற அளவுக்கெல்லாம் இங்க சரக்கு இல்ல சித்தார்த்…” தன் தலையைத் தொட்டுக் காட்டி சிரித்தவள், “உஷ்…. போதும்… தயவு செஞ்சு இப்படிப் பரிதாபமா மட்டும் பார்க்காதே…” என்றாள் கண்களைச் சிமிட்டியபடி.
“அய்ய… கஷ்டப்பட்டுச் சிரிக்காதே.. இது அதை விடக் கேவலமா இருக்கு…” விளையாட்டாகவே பேசுபவளிடம் அவனுக்கு எப்படி எதிர்வினை புரிவது என்று தெரியவில்லை.
“இதனால தான் வேணாம்னு மறைமுகமா சொல்லிப் பார்த்தேன், விஷயம் தெரியாம ப்ரோபோஸ் பண்ற பசங்க கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா, சொல்லு.. அதனால ஒவ்வொருத்தங்க கிட்ட ஒவ்வொரு மாதிரி.”
“வெளிநாடு போகணும்னு ஆசையிருக்கவன் கிட்ட நான் இங்க இருந்து நகர மாட்டேன்னு சொன்னா, ‘ச்சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’னு ஓடிடுவான். மாடர்னா இருக்கிறவன்கிட்ட கன்சர்வேட்டிவா, இப்படி மாத்தி, மாத்தி…. உனக்கு இங்க இருக்கிற பிடிப்பு தெரிஞ்சு தான் பிரான்ஸ் போயிடணும்னு சொன்னேன்.”
”ஆனா ஒன்னு, நான் இதைச் சொன்னா நீ எந்தளவுக்கு நம்புவேன்னு தெரியல. லிவிங்-டூ-கெதர்னு சொன்னதெல்லாம் உன்கிட்ட மட்டும் தான்.”
‘ஏன்னா உன்னை எனக்குப் பிடிக்கும்டா.. ரொம்ப… ரொம்பப் பிடிக்கும்…’ கடைசிவரியை மனதோடு பேசிக் கொண்டவள், அவனைப் பார்த்து புன்னகைக்க…
சித்தார்த்தும் ‘புரிகிறது’ என்கிற மாதிரி முறுவலித்தான். ஆனால், அந்தச் சிரிப்பில் ஜீவன் தான் இல்லை.
அதற்குள் அவனுக்கு ஏதோ ஒரு அழைப்பு வர, அடுக்கிய பெருமூச்சுடன் பேசியை எடுத்துப் பார்த்தவன் பச்சையைத் தேய்த்து, “ஹாம்… என்னம்மா?” என்றபடி காதில் வைத்தான்.
“என்னாச்சு…? இங்க ஜெனில வீட்டுல தான் இருக்கேன்… ஓஓ…. இல்லல்ல, கிளம்பிட்டேன்… அப்பா எங்க?…” பேசுவது அவன் தாய் என்று தெரிந்து ‘என்ன’வென்று சைகையில் வினவினாள்.
அந்தப் பக்கம் என்ன பேசினார்களோ, ஏற்கனவே வெளுத்திருந்த அவன் முகம் இப்போது பதட்டத்தில் இன்னும் சிவக்க, ‘பொறு’ என்பதாய் ஒரு கை உயர்த்தினான்.
இவள் அவனையே புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “அம்மா தான்.. நான் கிளம்பணும் ஜெனி…” தாடைகள் இறுக அவசரமாக எழுந்தவன்,
“பை டா… டேக் கேர்… தூங்கு போ.. குட் நைட்” அவளை லேசாக அணைத்து அவள் எதிர்பார்க்காத நொடியில் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுத் தடதடவெனப் படிகளில் இறங்கி போய் விட்டான்.
நெற்றியில் பதிந்த முத்தத்தின் சூட்டை இப்போதும் உணரமுடிய, ஒற்றை விரலால் வருடிப் பார்த்த ஜெனி எதிரே கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தாள்.
‘ஒரு பப்பி ஹக்கோட ‘பை’ சொல்லி மொத்தமா புல்ஸ்டாப் வச்சுட்டியா சித்தார்த்…? ம்ம்.. சோ நைஸ் ஆஃப் யூ’
******************
கதவு சுண்டும் ஒலியில் எழுந்து வந்து கதவைத் திறந்த சதானந்த், “வாம்மா…. உள்ள வா..” வெளியே நின்றவளிடம் வரவேற்பாகத் தலையசைத்தார்.
“எப்படி இருக்காங்க அங்கிள்..?” ஜெனி சத்தமில்லாமல் உள்ளே வந்து தன் கையில் இருந்த கூடையை அவரிடம் கொடுத்தாள்.
“இப்பதான் தூங்கினா… ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க. நாளைக்குக் காலைல வரை இருக்கட்டும்னாங்க.”
“எப்ப டிஸ்சார்ஜ்னு ஏதாவது சொன்னாங்களா?”
“இன்னும் தெரியலம்மா… ராத்திரி ரவுண்ட்ஸ் வரும்போது தான் கேட்கணும்” என்னதான் இருவரும் கிசுகிசுவெனப் பேசினாலும் பேச்சுக் குரல் கேட்டு கௌரி விழித்துவிட்டார்.
”வா ஜெனி…” ரணசிகிச்சையில் பலவீனப்பட்டு இருந்த உடல் ஆஸ்பத்திரி உடையில் மேலும் மெலிந்து சுருங்கி தெரிய, வாட்டமாக இருந்தார்.
“என்ன ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? வலி இருக்கா?”
“இருக்கும்மா… மத்தியானம் சித்து போய்ச் சொல்லிட்டு வந்தான். ஏதோ பெயின் கில்லரை ட்ரிப்ஸ்லயே போட்டாங்க…அப்புறம் தான் தூங்க முடிஞ்சுது.”
“உட்காரும்மா… உட்கார்ந்து பேசு..” அவள் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டார் சதானந்த். “நீ ஏன்மா அலையுற, பாவம்…” என்றவர், “உனக்குக் கஞ்சி கொண்டு வந்திருக்கு…” என்றார் தகவலாக மனைவியிடமும்.
“உனக்கேன்மா வீண் சிரமம்?” கௌரி அவளைப் பிரியமாகப் பார்த்தார்.
விஷயம் தெரிந்ததும் நான்கு ஆரஞ்சு, நான்கு ஆப்பிளுடன் வந்து சம்பிரதாயமாக எட்டிப் பார்த்துச் செல்லாமல் உண்மையான பற்றுதலுடன் வந்து போகும் பெண்ணைப் பார்க்க தனக்கு ஒரு பெண்குழந்தை இல்லையே என எப்போதும் தோன்றும் ஏக்கம் இப்போதும் அவர் மனதைக் கவ்வியது.
தடுக்கி விழுந்தால் ஊர் முழுக்க உறவுக்காரர்கள் தான். இருந்தும் என்ன பயன்? இந்தப் பத்து நாட்களில் இரண்டு கூடை சாத்துக்குடி நிரம்பியது தான் மிச்சம்.
“இதுல என்ன இருக்கு ஆன்ட்டி? அங்கிள் நீங்க சாப்பிட்டீங்களா?”
“இல்லம்மா, இனிமேதான். கீழ தானே கேன்டீன். ஒன்பது மணிக்கு மேல மெதுவா போய்ப்பேன். வீட்டுல சமையலுக்கு ஆளு ஏற்பாடு பண்ணியிருக்கான். நாளன்னிக்கு வந்துடுவாங்க, அப்புறம் கொஞ்சம் ப்ரீயாகிடும்…”
“இட்லியும் கொஞ்சம் இருக்கு அங்கிள். பயப்படாதீங்க, நான் செய்யல… ஏ2பில வாங்கினது தான்” அவள் கேலியாகச் சொல்ல, பெரியவர்கள் இருவரும் வாஞ்சையாகப் புன்னகைத்தார்கள்.
கௌரி திட உணவு சாப்பிடலாம் என்று தெரிந்த இந்த இரு நாட்களாய் பத்தியமாய்ச் செய்து கொடுக்கிறாள். முடிந்தால் இவள் வருவாள், இல்லை கதிர் தாத்தாவிடம் கொடுத்து அனுப்புவாள்.
சித்தார்த் அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை, எமர்ஜென்சியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்பதே மூன்று நாட்களுக்கு முன்பு தான் ஜெனிக்கு தெரியும்.
மாதவனிடம் பேசும்போது எதேச்சையாக வந்த தகவல்.
“அடுத்த வாரம் தான் உங்களுக்கு டெலிவரி வரும் ஜென்னி. பாகிங் லைன்ல சில கரெக்ஷன்ஸ் நடக்குது. போன வாரமே முடியும்னு நினைச்சது, இதனால ப்ரொடக்ஷன் லைன் வேற நேத்துலருந்து நிக்குது. பயங்கர டென்ஷன் இந்த ஒரு வாரமா” அவன் ஆர்டர்கள் தேங்குவதைப் பற்றிப் புலம்ப,
“ஏன், இதுகூடக் கவனிக்காம என்ன பண்றாரு, உங்க பாஸ் பாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்?”
வேண்டுமென்றே சித்தார்த்தை தங்கள் பேச்சுக்குள் இழுப்பது ஏன்? கேட்ட பின்னால் அவளுக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
‘அந்த அப்பாடக்கர் இந்த ஒரு வாரமா ஒரு போன் கூடப் பண்ணல…. அன்னிக்கு சாப்பிட்ட கசப்பு மருந்து இன்னுமா ஜீரணமாகல? இவ்வளவு தானா நீயும்?’ என்ன தேற்றினாலும் அவள் மனசு உள்ளுக்குள் விண்டுபோனது நிஜம்.
“அவரு எங்க…? ஹாஸ்பிடலுக்கும், பாக்டரிக்கும் மாறி மாறி ஓடிட்டுருக்காரு…”
“ஏன், என்னாச்சு உடம்புக்கு?” அனிச்சையாகப் பதட்டம் மேவியது.
“ஏன் தெரியாதா உனக்கு? சார் அம்மாக்கு ஏதோ முடியல போல.. போன வாரம் அட்மிட் பண்ணிருக்காங்க, எனக்கும் என்னன்னு முழுசா தெரியாது. யாரும் ஹாஸ்பிடலுக்கு வந்து அலைய வேணாம்னு சொல்லிட்டாரு. வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நாங்கல்லாம் போய்ப் பார்க்கிறதா இருக்கோம்…”
“ஓஓ…”
‘இதைக் கூடவா சொல்ல முடியாது சித்தார்த் உன்னால? பழகினது, பேசினது, சிரிச்சது எல்லாமே காதல்ன்ற ஒத்தை வார்த்தைக்குப் பின்னாடி மட்டும் தானா? இது நடக்காதுன்னு தெரிஞ்சதும் மொத்தமாகத் தூக்கி எறிஞ்சுட்டியா?’
எந்த மருத்துவமனை என்று மாதவனிடம் கேட்டு எண் தேடி அழைத்தாள். ஆபரேஷன் நேற்று முடிந்தது என்ற தகவல் தெரிந்ததும் யாரோ, என்னவோ என்று வாளாவிருக்க முடியவில்லை அவளால். ஒரேயொரு முறை சந்தித்தவர் தான்.
அந்த வாஞ்சையான முகமும், அன்பான பேச்சும், பண்பும் கொஞ்சமாய் எழுந்த ரோஷத்தை நீர்த்துப் போகச் செய்ய, அன்று மாலை மருத்துவமனை சென்று பார்த்து வந்தாள்.
கௌரி மயக்கத்தில் இருக்க, சதானந்த் ஒருமாதிரி படபடப்பாய்த் தெரிந்தார்.
“நல்லா தான் இருந்தா, திடீர்னு வலிக்குதுன்னு துடிச்சு போயிட்டா…” இருந்திருந்தாற்போல வந்திருந்த மனைவியின் சுகவீனம் அவரை ரொம்பவே மருட்டியிருப்பது தெரிய, கொஞ்ச நேரம் அமர்ந்து அவரிடம் ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தாள்.
அடுத்த நாள் கௌரி மயக்கம் தெளிந்து சுவாதீனத்தில் இருக்க, “எனக்கு ஒரு கப் டீ வைக்கக் கூடத் தெரியாதும்மா. சித்து அதுக்கும் மேல. எங்க இரண்டு பேரையும் ஒரு வேலை கூடச் செய்யச் சொல்லி பழக்காம கெடுத்து வச்சிருக்கா இவ.”
“இப்ப வந்து ஜாலியா படுத்துக்கிட்டா பாரு, ஒரு சுடு தண்ணி கூட வைக்கத் தெரியாம நாங்க தான் தவிச்சு போறோம்.”
சதானந்த் கிண்டலாய் பேசினாலும் ஆண்கள் இருவர் மட்டுமே இந்த மாதிரி சூழ்நிலையைச் சமாளிக்கும் நடைமுறை வருத்தம் புரிந்ததில் தன்னால் முடிந்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எடுத்து வருகிறாள்.
“போய் ஒரு காபி வாங்கிட்டு வந்து கொடுங்களேன்…” கௌரி கணவரை விரட்ட,
“வேணாம் ஆன்ட்டி… காலைல இருந்து நாலு காபி ஆச்சு… இல்ல.. அங்கிள் நீங்க போகாதீங்க…” ஜெனி பிடிவாதமாக ‘வேண்டாம்’ என்று மறுத்து விட்டாள்.
“நீ கொஞ்ச நேரம் இருப்பேல்ல…? அப்ப நான் கொஞ்சம் நடந்துட்டு வரேன்மா…” சதானந்த் வெள்ளை பனியன் மேல் சட்டை அணிந்து வெளியே சென்றார்.
“இப்படி வந்து உட்காரேன், அப்படியே என்னையும் கொஞ்சம் எழுப்பி உட்கார வை” இவள் படுக்கையை லேசாக உயர்த்தித் தலையணைகளை வைத்து உதவ, சரிந்து உட்கார்ந்த கௌரி தன்னருகே அமர்ந்தவளின் கையைப் பற்றிக் கொண்டார்.
“ஜெனி, நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காதே. உங்க இரண்டு பேருக்கும் ஏதாச்சும் சண்டையா?”
ஜெனி மிடறு விழுங்கினாள்.
“சண்டையா ? அப்படிலாம் ஒன்னுமில்ல ஆன்ட்டி.”
“எங்க இரண்டு பேருக்குள்ள சண்டை போடற அளவுக்கு என்ன இருக்கு ஆன்ட்டி? ஜஸ்ட் எ அகுவிட்ன்ஸ் (acquittance). ஏன் கேட்குறீங்க?”
ஏனோ ஃப்ரெண்ட்ஸ் என்று கூடச் சொல்லத் தோன்றவில்லை. நட்பென மதித்திருந்தால் இப்படியா பாராமுகமாய் இருப்பான்?
இவள் சொன்னதில் இருந்த உள்குத்தை அவர் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டாரோ தெரியாது. “என்னவோ தெரியலம்மா… அவன் முகமே சரியில்ல… அதுதான் கேட்டேன்”
“திடீர்னு உங்களுக்கு இப்படி ஆனதுல பயந்துருப்பாரா இருக்கும்..”
“ம்ம். அது சரிதான்மா. ஆனா, இந்த ரெண்டு மூனு நாளா நல்லாதானே இருக்கேன்… கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றான். ஏன்டான்னா எதையாச்சும் சொல்லி மழுப்புறான். கம்பெனில ஏதாவது பிரச்சனையா என்னன்னு தெரியல… இவரைத் தான் நாளைக்குப் போய்ப் பார்க்க சொல்லணும்…”
எதார்த்தமாக இவளிடம் பகிர்ந்து கொள்ள, இவள் ‘உம்’ கொட்டியபடி அமர்ந்திருந்தாள். வெளியே யாரோ கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார்கள்.
“இப்பதான் உன்னைப் பத்தி ஜெனி கிட்ட பேசிட்டு இருந்தேன். ஆயுசு நூறுடா உனக்கு…” உள்ளே வந்த மைந்தனைப் பார்த்து கௌரி சொல்ல, அவனோ இவளைக் கண்டவுடன் துளி சலனமும் இன்றி முறுவலித்தான்.
ஏற்கனவே இவள் வந்து இந்நேரம் இப்படி உட்கார்ந்திருப்பாள் என்று எதிர்பார்த்த மாதிரி “ஹேய்…” என்றான் சாதாரணமாக.