காதல் கஃபே – 4

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

4

‘இந்த குர்திக்கு பேரலல் பேன்ட் சரியா இல்லையோ, ரொம்ப ப்ளைனா இருக்கு. இந்த ப்ளு… ம்ஹும்.. வேண்டாம், கிராண்டா இருக்கு…’ தேர்ந்தெடுத்த பத்தில் முன்னே பின்னே போய்க் கழித்தது போக, வீட்டில் இருந்து கஃபே க்கு இவள் எடுத்து வந்ததே மூன்று செட் தான்.

அதையும் மாற்றி மாற்றிப் புரட்டிக் கொண்டு ஜெனி கண்ணாடி முன் நின்று ‘இங்கி பிங்கி பாங்கி’ ஆடுவதைக் கவனித்த பொன்மணி, “என்னாக்கா…? எங்கயாச்சும் விசேஷமா? வெளில போறியா?” என்றாள்.

 “இல்ல மணி… ஒரு கெஸ்ட்டை கூப்பிட்டுருக்கேன் ஈவினிங் டின்னர்க்கு….”

அசுவாரஸ்யமான பதில் வந்தாலும் இனம்புரியாத உணர்வொன்று அவள் கண்கள் வழி கசிவதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒரு நொடி கூர்ந்து எதிரில் இருப்பவளை வியப்பாகப் பார்த்தாள் மணி.

“இன்னிக்கு என்னமோ ரொம்ப அழகா தெரியறக்கா…” அவள் நின்ற இடத்தில் இருந்தே ஜெனியின் முகத்தை வழித்துக் கிண்டலாக விரல்களைச் சொடுக்கினாள்.

“ஆரம்பிச்சுட்டியா நீ….?”

“அது ஒன்னுமில்லடி மணி.. அக்கா இன்னிக்கு தான் குளிச்சிட்டு வந்திருக்காம்…” புடவையைத் திரும்ப அவிழ்த்துக் கொசுவியபடி முதுகு காட்டி நின்றிருந்த யமுனா நக்கல் அடிக்க…

“உன்னை மாதிரி நினைச்சியாடி இவளே…” ஜெனி அவள் தலையில் சொருகியிருந்த சீப்பையே எடுத்து அவள் தோளில் ஒன்று வைத்தாள்.

“அந்த மஞ்சளை போட்டுக்கோ. உனக்கு நல்லாருக்கும்” தேர்ந்தெடுத்துக் கொடுத்த மணி, “யாரு வராங்க, உங்க சொந்தக்காரங்களா..? ஏன்க்கா இங்க கூப்பிட்ட? வீட்டுக்கு வர சொல்லி இருக்கலாம்ல..” உரிமையாக அதட்டினாள்.

“சொந்தமெல்லாம் இல்ல. சும்மா தெரிஞ்சவங்க தான்” வீட்டுக்கு அழைத்தால் அதீதமாகத் தோன்றுமே என்று தான் இங்கே அழைத்திருந்தாள், வெறும் தொழில்முறை நட்பு சந்திப்பாகவே இருக்கட்டும் என்ற எண்ணத்தில்.

 “யக்கா… எனக்கொரு டவுட்டு?” சோப்பை குழைத்து முகத்தில் தேய் தேய் என்று தேய்த்துக் கொண்டே யமுனா அடுத்துக் கேட்ட கேள்வியில், “ஏய் வேணாம்….” குளியலறையை நோக்கி ஜெனி பாய, “அய்யோ.. நானில்ல…” அவள் கதவை வேகமாக அடைத்துக் கொண்டாள்.

“ஜெனிக்கா.. அன்னிக்கு வந்தாரே ஒரு சாரு… அதான் அந்தப் பசங்க தண்ணி போட்டுட்டு வந்த அன்னிக்கு.. அவரா?”

‘எப்படிக் கண்டுபிடிச்சா இவ…? கற்பூரக் கட்டி’ சொன்னால் இரண்டும் சேர்ந்து கொண்டு ஓட்டும் என்பதால் தான் ஜெனி சொல்லவில்லை.

“ம்ம்ம்….”

ஞாயிறு மாலை வேலையைச் சீக்கிரம் முடித்து இங்கிருந்து நேரே கடற்கரைக்குச் செல்லும் சந்தோசத்தில் பவுடரை தாராளமாகத் தூவி கொண்டிருந்த மணி இவளைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவனில் வரும் அலாரம் சத்தத்தை ஒட்டி அடுப்பை அணைக்க விரைந்தாள்.

“ஏதாவது செய்யணுமாக்கா?”

“பெருசா ஒண்ணும் இல்ல யமுனா. ஏழு மணிக்கு மேலத்தானே வருவாங்க. ஏதாச்சும் சூடா செஞ்சுக்கிறேன்.” உலையின் கண்ணாடி கதவு திறந்து ஒருமுறை பார்த்துக் கொண்டாள் ஜெனி.

கடைசி ஈடு நெய் பிஸ்கட்டுகள் உள்ளே பொங்கி பூத்திருக்க, ஒரு ட்ரேயை முன்நகர்த்தி வெளியே எடுத்தாள்.

“இந்தா இதுல கொஞ்சம் எடுத்துட்டு போங்க.” அட்டை டப்பாவில் போட்டுக் கொடுத்து, “இதையெல்லாம் நான் எடுத்து வச்சிக்குறேன். நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க.” பொன்மணியும் தயாராகி வந்து விட, இரண்டு பேரையும் கிளப்பி விட்டாள்.

கதவை உள்பக்கமாகப் பூட்டி உள்ளே வந்து, கையில் மாட்டிய டிவிடியை சொருகி தொலைகாட்சியை இயக்கிவிட்டு காய்கறிகளை நறுக்க அமர்ந்தாள். திரையில் ஓடிய காட்சிகளில் கண்கள் இருந்தாலும் அவள் கவனம் மட்டும் ஏதேதோ எண்ணங்களில் மிதந்து கொண்டு இருந்தது.

எப்போதும் யாரையும் இப்படித் தனிப்பட்ட முறையில் அழைத்ததில்லை. நிறைய நட்புகள் இருந்தாலும் எல்லாமே ஒரு எல்லைக்குள் மட்டுமே. இந்த கஃபேயை தாண்டி அவள் உலகம் விரிந்ததே இல்லை. விரிவதில் அவளுக்கு விருப்பமும் இல்லை.

உண்மையில் இவள் திட்டமிட்டுப் பிரத்யேகமாக எல்லாம் அவனைக் கூப்பிடவில்லை. அவனாகவே கேட்டபோது மறுக்க முடியாமல்….

“ஹலோ ஜெனி…” நான்கு நாட்கள் முன்னால் இரவு வந்த அழைப்பில் கசிந்த கரகரத்த குரல் காதைத் தீண்ட, தெரியாத எண் என்பதால் இவள் விறைப்பாக “எஸ்” என்றாள்.

“நான் சித்தார்த்… இப்ப நீ ப்ரீயா..? பேசலாமா ?” என்று தொடங்கிய பேச்சு சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளில் மேலும் பத்து நிமிடம் கடத்தியிருக்க…

அவள் அன்று கொடுத்த சாக்லேட்களுக்கும் வாழ்த்து அட்டைக்கும் நன்றி சொன்னவன், போனை வைக்கப் போன நிமிடம் கேட்டான்.

“அப்புறம் எப்ப பார்க்கலாம்…?”

“எப்ப வேணா பார்க்கலாம்… நான் என்ன உங்களை மாதிரி அப்பாடக்கரா…!?” இவள் விளையாட்டாகக் கேலி செய்ய…

“இந்த சண்டே ஈவினிங் ப்ரீயா?” அவன் படக்கென்று கேட்பான் என்று இவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘சரின்னு சொல்’, ‘ம்ஹும் வேணாம்..’ இரு வேறு மனக்குரல்கள் உள்ளுக்குள் கபடி ஆடின.

“அன்னிக்கு கஃபே இருக்கே…” இவள் இழுக்க, “ஆறு மணி வரைக்கும் தானே. அதுக்கப்புறம் பார்க்கலாமே…?” அவன் இலகுவாகக் கேட்ட விதத்தில், “ஓகே.. ஷ்யூர்…” என்றாள் அதற்கு மேல் எப்படி மறுப்பது என்று தெரியாமல்.

அடுத்ததாய் சொன்னதைச் சொல்லியிருக்க வேண்டாம் என இப்போது நினைத்து, ‘பறக்காவெட்டி… பறக்காவெட்டி…’ தலையில் அடித்துக் கொண்டாள்.

“உங்க வீட்டுலயும் கூட்டிட்டு வாங்க…” அவனுடைய சோசியல் மீடியா ப்ரொஃபைலில் ‘மேரிட்’ ஸ்டேடஸ் பற்றி ஒன்றும் இல்லையே… குடைந்து துழாவி வெறுத்துப் போனதில் வார்த்தைகள் அவளையும் மீறி வந்திருக்க…

”ஓஓ… கண்டிப்பா… ஷி வில் பி வெரி ஹேப்பி… தேங்க்ஸ் பார் எக்ஸ்டண்டிங் தி இன்வைட்…”

ஒரு நொடி மௌனித்தாலும் கள்ளச் சிரிப்புடனே அவன் வைத்து விட, இவளுக்குத் தான் மண்டை காய்ந்தது.

‘நானா… கல்யாணமா…? நான் எலிஜிபிள் பேச்சுலர்ங்க….’ என்ற பதிலைத்தான் அவள் உண்மையில் எதிர்பார்த்திருந்தாள்.

‘அப்புறம் என்னத்துக்குடா என்னைக் கூப்பிட்டு கடலை போடுற…!!???’

‘ச்சீச்சீ.. அப்படிலாம் இருக்காது… அவன் சும்மா கலாய்க்குறான்’ திரையில் ஓடிய ப்ளாக் காமெடியை விட இவள் தனக்குள் நடத்திய ‘நீயா, நானா’ சுவாரஸ்யமாய் இருக்க…. இவள் முகம் கழுவி, உடைமாற்றி முன் டேபிளை செட் செய்து தயாரான போது சரியாக மணி ஏழு அடித்திருந்தது.

அடுத்தப் பத்து நிமிடம் கழித்து உள்ளே வந்தவர்களைக் கண்டு ஜெனி நிஜமாகவே வியந்து தான் போனாள்.

*******************************

நல்ல உயரம், ஒல்லியான உடல்வாகு, சின்னக் கொண்டை, அதில் குட்டியாய் இளஞ்சிவப்பு பட்டன் ரோஜா, சாம்பல் நிறத்தில் மஞ்சள் புட்டாக்கள் இட்ட எளிமையான காட்டன் புடவையில் சிறு சிகப்பு பொட்டுடன் களையான முகம்.

காரில் இருந்து இறங்கி உள்ளே வருபவரைப் பார்த்தபோது “ஹே….” தன்னையும் மீறிய துள்ளல் உள்ளே ஓட, “பியன்வென்யு டான்ட்” (bienvenue tante) ஜெனி உற்சாகமாக வரவேற்றாள்.

“வாங்க… ப்ளீஸ் கம்” அவருக்குப் பின்னால் வந்தவர் சித்தார்த்துக்கு இன்னும் முப்பது வருடம் சேர்த்து ஃபோட்டோ எஃபெக்ட் கொடுத்தால் எப்படி இருப்பானோ அப்படியே இருந்தார்.

இருவரும் தலையசைத்து புன்னகை முகமாக உள்ளே வர காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் முகத்தில் இருந்த குறும்பு சிரிப்பு அவளைக் கேலி செய்தது.

வரவேற்பாய் கதவு திறந்து நின்றாளே தவிர, ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் அவனைப் பார்க்க, தலையைக் கோதியபடி அவள் அருகே வந்தவன், “அப்புறம் ஜெனி…!!?” என்றான்.

‘உன் சந்தேகம் தீர்ந்துச்சா…?’ கேட்காமல் கேட்டது அவனது கிண்டல் பார்வை.

“வாங்க…“ ஒன்றும் தெரியாதது போல இவள் ஃபார்மலாக வரவேற்று அவன் கேலியை பூசி மெழுகினாள்.

மூவரும் உள்ளே வந்து அமர, “இவங்க என் அம்மா கௌரி, அப்பா சதானந்தன்” தன் பெற்றோரை இவளுக்கு அறிமுகம் செய்தான். கௌரியா…? பிரெஞ்சு பெண்மணிக்கு இந்தப் பெயர்?

“நான் என் கல்யாணத்துக்கு அப்புறம் முழுக்க முழுக்கத் தமிழா மாறிட்டேன்மா. பேர் உட்பட…” அந்த ஆன்ட்டி இவள் கண்களில் தெரிந்த கேள்வி புரிந்து அவராகவே சொன்னார்.

“இவங்க அப்பா ஆரம்பிச்ச தொழில்மா இது. எங்க சீஸ் பாக்டரி. வியாபாரத்துக்குன்னு இங்க வந்தவர், குடும்பமா இங்கேயே செட்டில் ஆயிட்டாரு.”

“1962 ல பிரெஞ்சு டெரிட்டரிஸை இந்திய ஒன்றியத்தோட சேர்க்கும்போது இந்திய குடியுரிமையா, இல்ல பிரெஞ்சு குடியுரிமையான்னு தேர்ந்தெடுக்குற உரிமையை ஜனங்களுக்கு அரசாங்கம் கொடுத்துச்சு… தொழில் இங்கேயே ஸ்திரமா இருந்ததால திரும்பி போக வேணாம்னு இவங்க இந்திய குடியுரிமை வாங்கிட்டாங்க…” அவன் தந்தை விளக்க….

“அப்புறம் என்ன… காலேஜ்க்கு படிக்க வந்த பொண்ணை எங்கப்பா கணக்கு பண்ணி கல்யாணம் பண்ணிட்டாரு…”

“சித்து… என்னடா பேச்சு இது? கணக்கு அது இதுன்னு…?” மகனை லேசாக அதட்டிய கௌரி, “பிரான்ஸ்ல எங்கம்மா நீங்க?” அவள் வீடு, அவர்கள் இருக்கும் பிராந்தியத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

சொந்த நாட்டைப் பற்றிப் பேசும்போது அவர் கண்கள் ஒளிவிடுவதைக் கவனித்த ஜெனி, புரிதலான புன்னகையுடன் தகவல்கள் சொன்னாள்.

எத்தனை வயதானால் என்ன, புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவரவருக்கான நிலம் பற்றி அறிந்து கொள்வதில் ஒவ்வொருவருக்கும் உள்ளூர பூக்கும் மகிழ்ச்சி என்பது நிச்சயம் தனி தான்.

“என் பாட்டி…அதாவது என் அம்மாவோட அம்மா வழி சொந்தக்காரங்க கொஞ்ச பேரு அந்தப் பக்கம் இருக்காங்க… எங்க வீடு சதர்ன் பிரான்ஸ் பக்கம்… பெரிய செழிப்பெல்லாம் இல்ல… திரும்பிப் போய்த் திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமான்னு தான் எங்க அப்பா இங்கேயே இருக்குற முடிவை எடுத்தாரு…”

கௌரி சொன்ன பிராந்தியத்தில் இப்போதும் கூட டூரிஸ்ட் மூலமாகத் தான் வருமானமே… ஜெனி குடும்பம் கூட ஒரிருமுறை அந்தப் பக்கம் ட்ரிப் போய் வந்திருக்கிறார்கள்.

“என்ன தான் இங்கேயே செட்டில் ஆகிட்டாலும் எங்கம்மாவோட மனசு மட்டும் கடைசி வரை அங்க ஊர்ல தான் இருந்துச்சு. ஒவ்வொரு லீவுக்கும் எங்களை அங்க கூட்டிட்டு போயிடுவாங்க… உங்க ஜெனரேஷனுக்கு இதெல்லாம் தெரியாதுடா. எங்க காலத்துல நடந்தது… எனக்கே ரொம்பச் சின்ன வயசு…”

“தெரியும் ஆன்ட்டி… எங்கப்பா இங்கே பிறந்து வளந்தவரு தான். நீங்க சொன்ன பீரியட்ல இங்கயே இருக்கிறதா, இல்ல பிரான்ஸ்க்குத் திரும்பப் போகுறதான்னு அவங்க வீட்டுலயும் நிறையக் குழப்பம், டென்ஷன்னு சொல்லி இருக்காரு.”

“உடனே இல்லேன்னாலும் சீக்கிரமா ஊருக்குத் திரும்பப் போயிடணும்ன்ற முடிவுல அவங்க தங்களோட பிரெஞ்சு சிட்டிசன்ஷிப்பை விட்டுக் கொடுக்கல.”

“எங்கம்மாவோட அப்பா அந்த நேரம் அரசாங்கம் கொடுத்த தேர்ந்தெடுக்கிற உரிமையை வச்சு பிரெஞ்சு குடியுரிமையைத் தேர்வு பண்ணினவரு… 73 ல அவருக்கு அங்க வேலை கிடைக்கவும் குடும்பமா அங்க வந்தவங்க… எங்கம்மா வீடு தமிழ் தான்.”

தன்னைப் பற்றி, தன் குடும்பம், ஊர் என்று ஜெனி பகிர்ந்து கொண்டாள்.

“சின்ன வயசுல இருந்தே நட்பா இருந்த இரண்டு குடும்பமும் அப்பாக்கும் அம்மாக்கும் விருப்பம் இருக்கிறது தெரிஞ்சு அவங்களே கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. என் அம்மா கல்யாணத்துக்கப்புறம் உங்க ஊர் பொண்ணான கதை இது தான்”

“நான் இப்படி இந்த ஊர் மருமகளா மாறினேனோ, அப்படியா?” கௌரி மென்மையாகச் சிரித்தார்.

“அப்புறம் நீ எப்படிம்மா இங்க…?”

“படிப்புக்காக வந்தேன். இந்த ஊரும், இங்க இருக்கிற அமைதியும் பிடிச்சிருந்தது. இன்னும் கொஞ்ச நாள் இருந்து பார்க்கலாமேன்னு இந்த கஃபேயை ஆரம்பிச்சு… அப்படியே ஓடிட்டு இருக்கு ஆன்ட்டி….”

“தனியாவா இருக்க? இங்க உன் அம்மா வழி சொந்தமெல்லாம்…?”

“இப்ப யாரும் இல்ல ஆன்ட்டி. அம்மா ஒரே பொண்ணு, தாத்தா பாட்டி காலத்துக்குப் பின்னாடி நெருங்கினவங்கன்னு யாரும் இல்ல. ஒன்னுவிட்ட கசின்ஸ் கொஞ்ச பேரு யானம் கிட்ட இருக்காங்க.. பட் ரொம்ப டச் இல்ல…”

இவர்களின் பேச்சுச் சுவாரஸ்யத்தில் “அப்பா…” நடுவே சித்தார்த் குரல் கொடுத்தான்.

”இவங்க கதை பேசுறது இப்போதைக்கு முடியும்னு எனக்குத் தோணல… நாம வேணா கிளம்பலாமா?” அவன் சிரிப்புடன் அலுக்க…

“அதுதான்டா மகனே எனக்கும் கவலையா இருக்கு. எனக்குப் புரியக் கூடாதுன்னே பேசுறா பாரு உங்கம்மா” பேச்சுச் சுவாரஸ்யத்தில் இவர்கள் மொழி தமிழில் இருந்து எப்போதோ ஃபிரெஞ்சுக்கு மாறி இருந்ததைக் குறிப்பிட்டு அவர் கிண்டலடித்தார்.

“ஹ ஹா… ஸாரி அங்கிள்…” சிரித்தாள் ஜெனி.

வந்தவர்களுக்குக் குடிக்கக் கூட எதுவும் கொடுக்காமல் தான் வாய் பார்த்ததில் தன்னையே மானசீகமாகக் குட்டிக் கொண்டவள், “என்ன சாப்பிடுறீங்க?” மூவரிடமும் கேட்டு அவர்கள் சொன்ன பானத்தை எடுத்து வர உள்ளே சென்றாள்.

ஏற்கனவே தயாராக இருந்த பாலை கெட்டிலில் சூடு செய்து நின்றபோது எதிரில் இருந்த கண்ணாடி டைல்ஸ்களில் தன் சிரித்த முகம் துண்டு துண்டாகத் தெரிய, இன்னுமே புன்னகை ஊறியது அவள் இதழ்களில்.

தன்னைப் போலவே சித்தார்த்தும் பிரெஞ்சு தமிழ் கலப்பு என்பதில் ஏன் இவ்வளவு சந்தோஷமும் பூரிப்பும் தோன்றுகிறது? அவளுக்கே புரியவில்லை.

அவர்கள் நிறுவனத்தின் பெயர் ’மியம்’ என்பதை வைத்து ஏதோ பிரெஞ்சு சம்பந்தம் இருக்கும் என்று தெரியும். ‘யம்மி’ என்பதற்கு பிரான்ஸில் புழங்கும் வார்த்தை அது.

தொழில் என்பது யாரிடம் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் கைமாறி இருக்கலாம், அதுவும் இங்கே புதுச்சேரியில் அதற்குரிய சாத்தியங்கள் நிறைய இருக்கும் என்பதால் அதைப் பற்றி அவள் அதிகம் யோசிக்கவில்லை.

சித்தார்த்தை முதல் முறை பார்த்தபோது மினுங்கும் அவன் கண்கள் மட்டும் தனியாகத் தெரிய, உள்ளுக்குள் லேசாய் ஒரு ஆர்வம் தோன்றியது உண்மை.

மற்றபடி இவன் அப்படியே அவன் அப்பா ஜாடை தான். மாநிறம், உயரம், உடல்வாகு என அனைத்தும். லேசாய் பச்சை மேவிய கண்களும், தாடையை உயர்த்திச் சிரிக்கும் விதம் மட்டும் அம்மாவிடம் இருந்து…

காபி டிகாஷனை தனிக் கோப்பையில் ஊற்றி சாசர்களையும் கப்களையும் தட்டில் அடுக்கியவள், மாலை செய்திருந்த இலவங்க பிஸ்கட்டுகளையும், பொடி வெங்காயம், தக்காளி, காளான் தூவிய மினி டார்ட்டுகளையும் இன்னொரு தட்டில் அடுக்கினாள்.

 ‘அடப்பாவி… யமுனா கேட்ட மாதிரியே ஆயிடுச்சே.’

“ஏன்க்கா… உன்னை யாராச்சும் பொண்ணு பார்க்க வராங்களா….?” என்று கேட்டு அடி வாங்காமல் தப்பி ஓடினாளே!!!

‘பக்கிப் பய… அப்படியே பொண்ணு பார்க்க வந்த மாதிரியே குடும்பத்தோட வந்து உட்கார்ந்து, நான் காபி ட்ரேயை வேற அடுக்குறேன்….’ இவள் கிண்டலாக எண்ணும்போதே டாம் ஃபோர்ட் பெர்ப்யூமின் நறுமணம் அவள் பின்னால்.

“ஏதாவது ஹெல்ப் வேணுமா?”

‘நீ எந்த ஆணியும் புடுங்க வேணாம். இப்படி உத்து உத்து பார்க்காம இருந்தா அதுவே போதும்’ அவனது துளைக்கும் பார்வையும், உதடுகளுக்குள் அடங்கித் ததும்பும் புன்னகையும் அவ்விதம்.

தூண்டித் துருவிய அவனது விழிவீச்சு அருகில் நின்றவளின் முகத்தைச் சூடாக்க, “ஷ்யூர், வை நாட்?” மனம் என்ன நக்கல் பண்ணினாலும், வாய் சம்பிரதாயமான வார்த்தைகளைச் சொல்ல மறக்கவில்லை.

“முதல்ல இதைக் கொடுத்துடலாம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு டின்னர் எடுத்து வைக்கலாம்.“ அவள் ஒரு தட்டை எடுத்துக் கொள்ள, சித்தார்த் காபி ட்ரேயை எடுத்துக் கொண்டான்.

நால்வரும் அமர்ந்து கலகலவெனப் பேசியபடியே சாப்பிட்ட இத்தருணத்தை எப்போதுமே மறக்க முடியாது என்று தோன்றியது ஜெனிக்கு.

 அவர்கள் கிளம்பும்போது நேரம் பத்தை கடந்திருக்க, கொஞ்சமும் தூக்கமோ, சோர்வோ, எப்போது கிளம்புவார்கள் என்ற எண்ணமோ சிஞ்சித்தும் தோன்றவில்லை. முதல் முறை சந்திக்கிறோம் என்ற உணர்வின்றிச் சிலரிடம் மட்டும் தான் இப்படிப் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் மனது.

மூவரோடு நால்வராக இப்படிக் கதையடித்துக் கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கிறுக்குத்தனமான சிந்தனை ஓடியதில் அவளுக்கு அவளே துணுக்குற்றுப் போனாள்.

“இந்தாம்மா… வந்தவுடனே கொடுக்க மறந்துட்டேன் பாரு…” இனிப்பு பெட்டியுடன் கண்ணாடி கற்கள் பதித்த கைப்பை ஒன்றையும் கௌரி இவளிடம் கொடுக்க,

“மெர்சி டான்ட்…” (நன்றி ஆன்ட்டி) பிகு செய்யாமல் சிரித்தபடி வாங்கிக் கொண்ட ஜெனி, புறப்பட்டவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பினாள்.

“வீட்டுக்கு ஒருமுறை வாம்மா” இவளை அழைத்து விட்டு கௌரியும், சதானந்தும் காரில் ஏறி அமர, சட்டைப்பை, பேன்ட் பாக்கெட்டுக்களில் எதையோ தொட்டுத் தொட்டுத் தேடினான் சித்தார்த்.

“ஒரு நிமிஷம், வாலட்டை டேபிள் மேல வச்சிட்டேன்னு நினைக்கிறேன்…” அவன் மீண்டும் உள்ளே போக, ஜெனியும் அவன் பின்னால் வந்தாள்.

அவன் சொன்னது போலவே அந்த லெதர் பர்ஸ் மேசையில் அமர்ந்திருந்தது. கையில் எடுத்துக் கொண்டவன், “வொண்டர்புல் டைம் ஜெனி… ஐ என்ஜாய்ட் இட் வெரி மச்” உணர்வுத் ததும்பும் அவன் குரலில் மெல்லிய சிலிர்ப்பு ஓடியது இவள் நரம்புகளில்.

“நாளைக்கு ப்ரீயா நீ? கஃபே லீவ் தானே… லஞ்ச் இல்ல டின்னர் வெளில போலாமா? நாம இரண்டு பேர் மட்டும்”

‘ஓ… இதுக்குத்தான் இந்த வாலட் நாடகமா?’

“ஹேய்… உன்னைத் தான் கேட்குறேன்… எங்க போலாம்னு நீயே சொல்லு”

அவன் மீண்டும் ஆர்வமாக அழுத்த, கழுத்தில் கிடக்கும் வெள்ளி செயினைப் பல்லில் கடித்தபடி நிமிர்ந்து பார்த்த ஜெனி அவனை நேருக்கு நேராகவே கேட்டு விட்டாள்.

“என்ன, என்னை டேட்டுக்குக் கூப்பிடுறியா சித்தார்த்?”