காதல் கஃபே – 15 (Final)

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

15

மூன்று வருடங்களுக்குப் பிறகு –

“பூமிக்கு வெளிச்சமெல்லாம் நான் கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நான் முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நான் பல் துலக்குவதால்

காலையில் அடித்தமழை நான் உனை தழுவியதால்”

ஷவர் பைப்பை மைக்காக பாவித்து மேலும் கீழும் தலை ஆட்டி ஆடிக் கொண்டே பாடிய ஜெனி பாத்டப்பில் சுகமாய்ச் சாய்ந்து நிதானமாகத் தன் கூந்தலை அலசிக் கொண்டிருந்தாள்.

“நீ இதமாய் இதயம் கடித்தாய்

என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்

நீ மதுவாய் எனையே குடித்தாய்

இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்”

பாடலின் குஷியிலும், இளஞ்சூடாக உடலை சூழ்ந்திருந்த நீரின் இதத்திலும் எழுந்து வரவே மனம் இல்லை அவளுக்கு.

நேரம் ஆகிறதே என்று ஒருவழியாகத் தண்ணீரில் இருந்து வெளியேறியவள் உடுத்தி ட்ரையரில் ஈரக் கூந்தலை உலர்த்தியபடி, “எழுந்துக்க சித்து, டைம் ஆச்சு…” கதவை ஒருக்களித்துக் குரல் கொடுத்தாள்.

பதிலுக்கு எந்த அரவமும் இல்லாமல் இருக்க, எட்டிப் பார்த்து விட்டு வெளியே வந்தாள்.

டிவியில் ஏதோ கார்டூன் ஓடிக் கொண்டிருந்தது. படுக்கையில் இவள் குளிக்கப் போகும்போது அங்குப் படுத்திருந்த இரண்டு உருப்படிகளும் ஆளை காணவில்லை.

“ஓ.. மை காட்”

அறை இருந்த கோலம் கண்டு அவ்வளவு நேரம் இருந்த குளுமை மறைந்து வெறி ஆனது அவளுக்கு.

படுக்கை கன்னாபின்னாவென்று கலைந்து கிடந்தது. விரிப்புத் தரையில் மிதிபட, மெத்தை மேல் துண்டு, கழட்டிப் போட்ட டி-ஷர்ட், சீப்பு, பவுடர் டப்பா என என்னென்னவோ கலவையாக இறைந்திருந்தன.

தலையணைகளின் உறை கழண்டு தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கமாகப் பிதுங்கி மூலைகளில் சிதறிக் கிடக்க, சோஃபாவிலும் அயர்ன் செய்து வாங்கி வைத்திருந்த துணிகள் கலைந்து கீழே மேலே இறைபட்டு…

அறை முழுக்க அப்படி ஒரு அலங்கோலம்.

“இதே வேலையா போச்சு இரண்டு பேருக்கும்…” கோபத்தில் தங்தங்கென்று நடந்து மாடி வளைவில் எட்டிப் பார்த்தாள்.

“எருமைங்க.. எங்கப் போனீங்க?” மீண்டும் உள்ளே வந்து அறையைச் சீராக்க நினைத்தவள் “வேண்டாம், அதுங்களே வந்து பண்ணட்டும்…” எரிச்சலாய் முனகியபடி படிகளில் இறங்கி கீழே போனாள்.

அவள் நினைத்த மாதிரியே சித்தார்த் சோம்பலாக கவுச்சில் சாய்ந்திருந்தான், கையில் பேப்பருடனும், சூடான காபியுடனும்.

  “எழுந்துட்டினா குளிக்கப் போகாம இங்க உட்கார்ந்து என்ன பண்ற சித்து? நிதானமா பேப்பர் படிச்சிட்டு இருக்க… கிளம்பு. குளிக்கப் போ” சூடாய் இறங்கி வந்தாலும் காலை வேளை என்பதால் ஜெனி சாதாரணமாகச் சொல்வது மாதிரி சொன்னாள்.

  ‘மேலே நைஸா கூட்டிட்டு போய் வேலை வாங்கினா தான் ஆச்சு…’ இந்த ஐடியாவில் அவள் இரண்டு மூன்று முறை அழுத்தியும் சித்தார்த் எழுந்து கொள்ளும் உத்தேசம் எதுவும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“போலாம், போலாம் இரு…” அசால்ட்டான பதில் மட்டும் வந்தது.

முன்னே நிற்பவளை ஏறிட்டும் பார்க்காமல் அவன் மிடறு மிடறாக விழுங்கியவாறு கையில் இருந்த பிசினஸ் வீக்லியை பொறுமையாக மேய, ஜெனிக்கு புசுபுசுவென்று கோபம் வந்தது.

“சோம்பேறி, எந்திரி முதல்ல.. ஆன்ட்டி நீங்க எதுக்கு காபி போட்டு கொடுத்தீங்க உங்க பையனுக்கு…? துரை என்னவோ பெருசா வெட்டி முறிச்சிட்டு வந்த மாதிரி… மேல போய் ரூமை பாருங்க. எத்தனை சுத்தம் பண்ணி வச்சாலும் குப்பைக் காடு மாதிரி பண்ணி வைக்கிறான்”

டைனிங் அறையில் அமர்ந்து தங்கள் கஞ்சியைப் பருகி கொண்டிருந்த சதானந்தும் கௌரியும் இவள் கத்துவதைப் பார்த்து மையமாகச் சிரித்தார்கள்.

“சிரிக்காதீங்க… உங்க பையனை வச்சுக்கிட்டு…. முடியல என்னால… ”

“நீ ஒரு கிளீனிங் ப்ரீக். என் பையன் ஒரு டோன்ட் கேர் மாஸ்டர். உங்க இரண்டு பேர் பஞ்சாயத்தையும் நீங்களே தீர்த்துக்குங்க தாயே.. நடுவுல வந்தா நான் தான் நோஸ்கட் வாங்குவேன்…”

தெளிவாக ஜகா வாங்கிய கௌரி தன் கோப்பையில் கவனமாக, “ஏன்டா.. எடுத்த பொருளை எடுத்த இடத்துல வச்சா தான் என்ன?” மகனை குறையாகப் பார்த்த மாமனார், “அவனைப் பத்தி தான் தெரியுமே, விடும்மா..” என்றார் ஜெனியிடம் சமாதானமாக.

“எத்தனை தடவை அங்கிள் ஒழுங்கு பண்றது? மெனக்கெட்டு நான் கிளீன் பண்ணி வைச்சுட்டுக் குளிக்கப் போறேன்…. வந்து பார்த்தா அதை விட மோசமா பண்ணி வச்சிருக்குங்க… நீங்களே போய்ப் பாருங்க, ரூம்ல கால் வைக்க முடியல…” அவரிடம் புலம்பியவள்,

“மிசர்ஸ்.கே… வர வர நீங்க ரொம்ப பார்ஷியலா நடந்துக்குறீங்க. என்ன, உங்க பையன்னு சப்போர்ட் பண்றீங்களா ? இதெல்லாம் சரியில்ல, பார்த்துக்குங்க…” அவர்கள் எதிரில் சென்று தானும் அமர்ந்து மாமியாரை நேராகப் பார்த்தாள்.

மிசர்ஸ்.கே, மிசர்ஸ் கேதரீன், மாமியார்ஜான் எப்படி வேண்டுமானாலும் அவரை அழைப்பாள் தன் மூடுக்கு ஏற்றபடி. சாதாரணமாக ஆன்ட்டி. பாசம் மிகுந்தால் மம்மிஜான் என்றும் உருகல் இருக்கும். ஊடலோ, வருத்தமோ, நெகிழ்வோ அவள் அழைக்கும் விதத்திலேயே தெரிந்து விடும்.

கௌரி அவளுடைய சீண்டலை சட்டையே பண்ணவில்லை.

“இதே வாய் தான் ‘எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும், நீங்க ஏன் நடுவுல வரீங்க’ன்னு கூசாம கேட்கும், ஆளை விடு” அசட்டையாகச் சொல்லிவிட்டு எழுந்தவர் வேறு வேலையைக் கவனிக்கச் சென்று விட…

“உங்க இரண்டு பேருக்கு நடுவுல நாங்க வந்தாலும் அப்படித் தான் மூக்குடைஞ்சு போறோம், அதுக்கெல்லாம் நானோ சித்துவோ பீல் பண்றமா? நம்ம பையனா இருந்தாலும் நாம தலையிட்டு கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிக்கணும் கௌரி.”

சதானந்த் என்னவோ பாவம், பொறுப்பான மாமனாராக மருமகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் மனைவியிடம் பரிந்துரைத்து வலிய வந்து தலையைக் கொடுக்க….

“எல்லாம் உங்களால தான் அங்கிள்… இத்தனை வயசுக்கு ஆன்ட்டி தான் ஒவ்வொன்னையும் எடுத்து உங்க கைல கொடுக்க வேண்டி இருக்கு. அப்புறம் உங்க பையன் மட்டும் வேற எப்படி இருப்பாரு?”

அவள் அப்படியே அணி மாறி ஆடியதில் அவர் ‘பே’ என விழித்து அசடு வழிந்தார் எனில் “தேவையா உங்களுக்கு?” கௌரி தலையில் அடித்துக் கொண்டார்.

“ஏன்டா, நீ பண்றதுக்கெல்லாம் நாங்க திட்டு வாங்குறோம் பார்த்தியா?” கௌரி மகனை சிரிப்புடன் பார்க்க, இது எதையும் காதில் வாங்காதவன் புதைத்திருந்த தன் தலையை இப்போதைக்கு நிமிர்த்துவதாக இல்லை.

“எவ்வளவு திமிரு பார்த்தீங்களா ஆன்ட்டி?”

ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடை, அதில் இந்தியாவிற்கான சாதகப் பாதகங்கள், வரப்போகிற தேர்தல் தேதிகள், ஒபெக்கிலிருந்து கத்தார் வெளியேறுவது, கஜாவை அடுத்து என்னென்ன புயல்கள் என ஊர் உலக நடப்புகளில் அவன் ஆழமாய் மூழ்கி இருக்க, தன் கையில் இருந்து பத்திரிக்கை பறிக்கப்பட்டதில் எரிச்சலாக நிமிர்ந்தான் சித்தார்த்.

“ப்ச்.. என்னடி வேணும் உனக்கு?”

“கடுப்பேத்தாத… மரியாதையா மேல வந்து நான் எப்படி வச்சிட்டு போனேனோ அப்படியே சரி பண்ணி வை.. எங்க உன்னோட கையாளு…?”

அவன் பேசாமல் இருக்க “க்யூட்டி.. ஏய்.. எங்க ஒளிஞ்சுட்டு இருக்க…?” அப்போது தான் நினைவு வந்தது போல அவள் வெளி ஹாலில், வராண்டாவில், தோட்டத்தில் தேடிப் பார்த்து விட்டு உள்ளே வந்தாள்.

“எங்க போனா? காணோம்… பாக்கியம்மா, க்யூட்டி பால் குடிச்சாளா?”

“ம்ம்… ஆச்சும்மா…”

சமையலறைக்குப் பின்னால் இருந்த திறந்த வெளியில், கீழிருந்த படுக்கை அறையில் என்று பதட்டமாக இவள் தேடுவதைக் கண்டும் காணாமல் மூவரும் நமட்டு சிரிப்போடு அவரவர் வேலையில் கவனமாய் இருக்க…

“யாராவது இந்த வீட்டுல என்னை மதிக்குறாங்களா பாரு…” பொருமிக் கொண்டே வீடெங்கும் சுற்றினாள். ஏதோ தோன்ற மாடிப்படி வளைவின் கீழ் அவள் குனிய, அடுத்த நொடி அங்கு ஒளிந்திருந்த க்யூட்டி துள்ளிக் கொண்டு படிகளில் ஏறி ஓடியது.

“பிசாசே, இங்க தான் ஒளிஞ்சுட்டு எனக்குப் பூச்சி காட்டுனியா நீ… வரேன் இரு…” ஜெனி கோபமாகப் பின்னால் துரத்திக் கொண்டு ஓட…

“ஓடு, ஓடு… இந்த ராட்சசி கைல சிக்கிடாதே….” நெட்டி முறித்து எழுந்த சித்தார்த் சிரித்தபடி அவளைப் பின்தொடர்ந்தான்.

ஜெனி அறையை அடைவதற்குள் மெத்தை மேல் சாய்ந்து நின்ற க்யூட்டி வேகவேகமாகத் தன் பிஞ்சு கரத்தால் போர்வையை இழுத்துவிட்டு சரி செய்ய முயன்றது.

அறை வாசலில் நின்று முறைத்தாற்போலப் பார்த்துக் கொண்டிருந்த ஜெனிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சிரிப்பு தாங்க முடியவில்லை.

“அவ்ளோ பயம் இருக்குல்ல. அப்புறம் ஏன் கலைச்சு போடுற…?”

இவள் கோபம் குறைந்து விட்டது என இவள் அருகே ஓடி வந்தது.

“எங்க வர…? போ.. எப்படிக் கலைச்சு போட்டியோ, அப்படியே சரி பண்ணு” ஜெனி கைகள் கட்டியபடி மீண்டும் மிரட்ட, அழுகிற மாதிரி பாவமாய்ப் பார்த்து விட்டு மீண்டும் ஓடியது.

ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விலகியதில் மாறி மாறி விரிப்பை இருகைகளாலும் இழுத்துக் கொண்டிருக்க….

“ஹ ஹா.. க்யூட்டி யு ஆர் சோ க்யூட்” அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை அவளால்.

அவள் அருகே போவதற்குக் காத்திருந்த மாதிரி அது கைகளை உயர்த்தி அவளிடம் தாவி கொள்ள, வாரி நெஞ்சோடு இறுக அணைத்தபடி சிரித்தாள் ஜெனி.

“என்ன ராசியாகிட்டீங்களா இரண்டு பேரும்?” இருவரும் கட்டிப்பிடித்துச் செல்லம் பேசுவதைப் பார்த்தபடி உள்ளே வந்த சித்தார்த் கிண்டலடித்தான்.

“நாங்க எப்ப சண்டை போட்டோம், ராசி ஆகுறதுக்கு? இல்லடா அம்மு” ஜெனி கேள்வி கேட்க, “அதுதானே” என்கிறமாதிரி அவள் மூக்கோடு மூக்கு வைத்து கொஞ்சித் தள்ளியது க்யூட்டி.

“ஓ.. அப்படி?” அவள் அருகில் வந்தவன், “ஏன்டி, உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா எங்கம்மா கிட்டயே இவன் வெட்டி முறிச்சிட்டு வந்தானான்னு கேட்ப? நைட்டெல்லாம் வெட்டி முறிச்சது பத்தாதா உனக்கு?” அவள் காதைத் திருகி முறைக்க,

“அடச்சீ… எருமை… எதுக்கு எப்படி அர்த்தம் சொல்ற…? ஜெனி முகம் சிவந்தாள் எனில், க்யூட்டி கடுப்பாகி தன் மூக்காலேயே அவனை முட்டித் தள்ளியது.

அது என்னவோ அவனுடன் தனியாக இருக்கும்போது கொஞ்சித் தள்ளும், கட்டி உருளும். கூடச் சேர்ந்து அறையைத் தலைகீழாக்கி ரணகளம் செய்யும். இன்று மாதிரியே இருவருமாகக் கலைத்துப் போட்டு ஜெனியை வேலை வாங்கி, தனக்கு ரகசியமாய் ஹைஃபைவ் தரும் சித்துவுடன் ஈசிக் கொள்ளும்.

ஜெனியிடமும் அப்படியே. முகமோடு முகம் ஒட்டி கட்டிக் கொண்டவாறு ஒரே கொஞ்சல்ஸ் தான் எந்த நேரமும்.

ஜெனியும் சித்தார்த்தும் சேர்ந்து சிரித்துப் பேசினால் சந்தோசமாக உடனிருக்குமே தவிர, சித்தார்த் ஏதாவது கோபமாக முகம் காட்டினால், குரல் உயர்த்தினால் நொடியில் ஜெனிக்கு கட்டப்பாவாக மாறி சீறித் தள்ளிவிடும்.

மூச்சின் ஒலியே மாறக் கண்களாலேயே சித்துவை முறைத்ததில் , “நானும் பார்த்தாலும் பார்த்தேன், உன்னை மாதிரி ஒரு பச்சோந்தியை பார்த்ததே இல்ல…” என்று சித்தார்த்தும்,

“என் செல்லத்துக்கு இவ்ளோ பாசமாடா என் மேல…?” என்று ஜெனியும் இறுக்க, இருவர் அணைப்பிலும் சுகமாய் நெளிந்தது அந்த பிஸான் ஃப்ரிஸ் வகை நாய்க்குட்டி.

ஐந்தறிவு தான் என்றாலும் மனிதனுக்கு ஈடாக அது காட்டும் பாசமும், பச்சைப் பிள்ளைக்கு ஈடாகச் செய்யும் குறும்புகளும்.

வேண்டுமென்றே சித்தார்த் ஜெனியை திட்டினால், அடிக்கிற மாதிரி சைகை செய்தால் போச்சு, அவ்வளவு தான். அவனை உதைத்து, தலை வைத்து முட்டி, கோபமாய்க் குரைத்து, ஜெனி சிரிக்கும் வரை சித்தார்த் அவளை நெருங்கவும் முடியாது.

“ஹௌ க்யூட் ஈஸ் மை செல்லம்?” ஜெனி க்யூட்டியை கொஞ்சியபடி அமர, “ஹௌ க்யூட் ஈஸ் மை செல்லம்ம்ம்ம்ம்?” அதே மாடுலேஷனில் திருப்பிச் சொன்ன சித்தார்த் இவளை பின்பக்கம் கட்டிக் கொண்டு படுக்கையில் சரிந்தான்.

“இப்ப எதுக்குப் படுக்கற சித்து, நேரம் ஆச்சு, கிளம்பு…” இவள் விரட்ட, “போலாம்டி, பறக்காதே… நீயும் நானுமா அங்க போய்க் கொடி ஏத்தப் போறோம்?” இவளையும் சேர்த்து அவன் இழுக்க…

க்யூட்டிக்கு என்ன புரிந்ததோ, ஏதோ முக்கியமான போர்ட் மீட்டிங் நடுவில் கிளம்பி வந்தது போல ஜெனி கையில் இருந்து வெடுக்கென்று துள்ளி இறங்கி விறுவிறுவென ஓடியது கீழே.

ஜெனி அதன் செயலில் இவனை முறைத்தாள்.

“ஹஹ ஹா… எப்படி என் ட்ரைனிங்?”

“சகிக்கல. அதுக்கு மட்டும் வாய் இருந்துச்சு, மகனே…. உன்னை???”

******************************

ஒரே தாள லயத்தில் முழங்கும் ட்ரம்ஸ்களின் ஒலிக்கேற்ப சீராக அணிவகுத்த வீரர்களின் ஊர்வலம் ப்ரோமனேட் பாதையை எட்டி மகாத்மா காந்தி சிலையைக் கடந்து அவருக்கு எதிரிலே நின்ற பிரெஞ்சு போர் நினைவிடத்தில் நுழைந்து அங்கிருந்த ஓவல் வடிவத்திடலில் குழுமியது.

அரசாங்கத்தின் முக்கியமானவர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அங்கு வந்து காத்திருக்க, “பஸ்டீல் டே” (Bastille Day) – ஐ கொண்டாட அந்தத் திறந்தவெளி நினைவிடத்தில் எல்லோரும் தயாராய்க் காத்திருந்தார்கள்.

சித்தார்த்தும், சதானந்தும் வெளித் திடலில் தெரிந்தவர்களுடன் பேசிக்கொண்டு இருக்க, ஜெனியும் கௌரியும் அணிவகுப்பை நன்றாகப் பார்க்கும் வகையில் முன்னால் வந்து நின்றிருந்தார்கள்.

பிரெஞ்சு புரட்சி தொடங்கிய ஜூலை பதினான்கை ஒவ்வொரு வருடமும் தங்கள் தேசிய நாளாக பிரான்ஸ் நாடு அனுசரிக்க…

புதுவையில் இன்றளவும் இந்தத் தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில், இந்த விழாவில் தாங்களும் பங்கேற்க கிளம்பும் காலை வேளையில் தான் வீட்டில் அத்தனை அமர்க்களமும்.

முன்னூறு வருடங்கள் இங்கிருந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் நீட்சியாக இந்த மண்ணில் இரண்டறக் கலந்து நிற்கும் வரலாற்று வேர்களை வருடத்திற்கு ஒருமுறை நினைவுப்படுத்திக் கொள்ளும் கலாச்சார விழா இது என்பதால் இங்கு வராமல் இருக்கப் பெண்கள் இருவருக்கும் மனம் கேட்கவில்லை.

“ஏதோ நீ சொல்றியேன்னு இந்த இரண்டு மூனு வருஷமா கிளம்பி வராங்க. நான் எத்தனை தடவை கேட்டாலும் வீட்டுல டிவிலயே பார்த்துக்கோங்கம்பான் உன் புருஷன். உன் மாமனாரு அதைக் கூடப் பார்க்க விடாம நியூஸ் சேனலை வச்சி முன்னாடி உட்கார்ந்துப்பாரு….”

“அவங்க வரலேன்னா என்ன? வீட்டுக்குள்ள தள்ளி கதவை சாத்திட்டு நீங்க மட்டும் வர வேண்டியது தானே? சரி சரி, டோன்ட் வொர்ரி… இதே மாதிரி காதைப் பிடிச்சு திருகி இழுத்துட்டு வந்துடலாம்”

மார்ச்-பாஸ்ட் நடக்க வேடிக்கை பார்த்து நின்ற கௌரியும், ஜெனியும் தங்களுக்குள் இடக்காய் முணுமுணுத்துச் சிரித்துக் கொண்டார்கள்.

அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து பிரான்ஸ் தூதரகம், புதுவை அரசு, பொதுத் துறைகள் என ஒவ்வொரு துறை சார்பிலும் ‘முகமில்லா வீரர்’ (Unknown Soldier) சிலைக்கு மலர் வளையங்கள் வைத்து முதல் உலகப் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரெஞ்சு மற்றும் இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட, இரு நாட்டு தேசிய கொடிகளையும் ஏற்றி மரியாதை செலுத்தி, இனிப்புகள் விநியோகப்பட, கொஞ்ச நேரத்தில் கும்பல் மெல்ல கலைய ஆரம்பித்தது.

நிகழ்வுகளின் ஊடே அவ்வப்போது ஜெனியும் கௌரியும் அருகில் உள்ளவர்களுடன் மெல்லமாகப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண் விடைபெறுகிற விதத்தில் ஜெனியைப் பார்த்து சிரித்தாள்.

“உங்க அம்மாவா?” கெளரியைக் கண்கள் காட்டி அவள் கேட்க….

ஒத்த நிறத்தில், கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோற்றம் அளிப்பவர்களைக் கண்டு யாரேனும் இப்படிக் கேட்பது ஒன்றும் முதல் முறையில்லை என்பதால் ஜெனி தலையசைத்தாள்.

“ம்ம்… அம்மா தான்” கௌரியின் காதிலும் அது விழுந்ததில் அவர் மருமகளைத் திரும்பிப் பார்த்து முறுவலித்தார்.

“என்ன சிரிப்பு மிசர்ஸ்.கேத்தரின் ? சாக்லேட் கூடக் கொடுத்து முடிச்சிட்டாங்க, இன்னும் இங்கயே நிக்குறீங்க? இதுக்குமேல வேற எதுவும் தர மாட்டாங்க… வாங்க, போலாம்…”

“வர வர உனக்கு ரொம்பவே துளிர் விட்டுப் போச்சு” கூட நடந்த கௌரி தன் சுடிதார் ஷாலை விசிறிப் போட்டுக்கொண்டே திரும்பி முறைத்தார்.

“ம்ம்… பாருடா… ஸ்டைலு..?? ஆனாலும் அழகாத்தான் இருக்கீங்க” அவள் கலாய்க்க…

“வாயாடி…” லேசாய் வெட்கம் சேர சிரித்த கௌரி கொஞ்ச வருடங்கள் முன்பு வரை சேலையைத் தவிர்த்து வேறு எதையும் கண்ணெடுத்தும் பார்க்காதவர் தான். இப்போது மருமகளின் உபயத்தால் சுடிதார், குர்தி அணிகிறார். வீட்டில் இலகுவாக நைட்டி உடுத்துகிறார்.

எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது அவசியம், அதற்காகத் தன் சுயத்தை இழக்கத் தேவையில்லை என்று அனுதினமும் வீட்டில் பார்த்துப் படிப்பவர் இலகுவான தன் சின்னச் சின்ன ஆசைகளைத் தற்சமயம் மறைப்பதில்லை. உறவுகள் எதையாவது எடுத்துக் குறை பேசினால் அதைக் கேட்டு மறுகுவதும் இல்லை.

மிசர்ஸ். கேத்தரின் என்றும், மிசர்ஸ். கே என்றும் ஜெனி கூப்பிடும்போது எப்படித் தன் பெயரை, தன் அடையாளத்தைக் கூடத் திருமணத்திற்காக இழக்கத் துணிந்தோம், அவருக்கு நினைத்துப் பார்க்கும்போது ஒருவகையில் ஆச்சரியமாகக் கூட இருந்தது.

“இப்பத்திய பிள்ளைங்களுக்கு இருக்கிற தெளிவும், எக்ஸ்போஷரும் நமக்கு இல்லைங்க… ‘அடுத்தவங்களுக்காகத் தியாகம் பண்ணினா தான் சந்தோஷம்கிற மாயை’ல நம்ம தலைமுறை வாழ்ந்திருக்கோம்” பின்னோக்கி யோசிக்கும் சில பொழுதுகளில் அவர் கணவரிடம் பகிர்ந்து கொள்வது உண்டு.

“ம்ம்ம்.. உண்மை தான்… இந்த ஜெனரேஷன் பசங்க ‘அவங்கவங்க சந்தோஷம் அவங்கவங்க கைல தான்’ன்னு தெளிவா, கிரிஸ்டல் கிளியரா இருக்காங்க”

சதானந்தும் சிந்தனையுடன் ஆமோதிப்பார். ஒரு டைம் மிஷின் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!!?

“மிசர்ஸ் கே….” மருமகளைப் பின்பற்றிச் சீண்டலாக மனைவியை அழைத்து, “அடடா… ரொம்ப நல்லவரு தான் நீங்க? காலம் போன காலத்துல” கெளரியின் முணுமுணுப்பையும் முறைப்பையும் அவர் பதிலாகப் பெற்றுக் கொள்வதும் உண்டு.

“இவங்க இரண்டு பேரும் எங்க போனாங்க?” கண்களால் தேடியபடி வெளியே வந்த பெண்கள் இருவரும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்களைக் கண்டு அருகே வந்தார்கள்.

“கேத்தி, நாம கிளம்பலாமா?” முறைப்பார் என்று தெரிந்தும் சதானந்த் குறும்பாகக் கூப்பிட…

“ம்ம்… கிளம்பலாம்” அதிசயமாய்த் தன் அழைப்பை ஏற்றுக் கொண்ட மனைவியைப் பார்த்த சதானந்துக்குச் சந்தோசத்தில் நெஞ்சு வலியே வந்து விடும் போல இருந்தது.

டீன் ஏஜ் பையனாய் சிலிர்த்தபடி ஓடிப் போய்த் தன் காரில் அமர்ந்தார்.

“நாங்க இப்படியே கிளம்பறோம்டா…. வீட்டுக்குப் போய்ச் சாப்டுட்டுக் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் நாங்க போய்ப் பார்த்துக்கிறோம்.. ஜெனி ஏதோ கடைக்குப் போகணும்ன்னு சொன்னா.. போய்ட்டு எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடுங்க…”

“ம். சரிம்மா… நைட் பயர் வொர்க் வைக்கிற நேரம் இங்க வந்துடுங்க. கொஞ்ச நேரம் இருந்துட்டு எல்லோரும் ஒன்னா வீட்டுக்குப் போயிடலாம்”

“சரி” என்றபடி பெரியவர்கள் அங்கிருந்து விடைபெற்றுக் கொள்ள, ஜெனியும் சித்தார்த்தும் இன்னும் கொஞ்சம் தள்ளி நிறுத்தியிருந்த தங்கள் காருக்கு நடந்தார்கள்.

“எத்தனை மணிக்கு சித்து பயர் வொர்க்?”

“எட்டரை மணின்னு போட்டுருக்கு… எப்படியும் முன்ன பின்ன ஆகும்.”

1789- இல் இதே நாளில் தான் பிரெஞ்சு புரட்சியின் தொடக்கப் புள்ளியாக பஸ்டீல் சிறை உடைத்து நொறுக்கப்பட்டது என்பதால் அதை நினைவில் கொள்கிறமாதிரி நேற்று இரவு லாந்தர் விளக்குகளுடன் வீதி ஊர்வலமும்…

இன்று மாலை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் குறியீடாக பீச் ரோட்டில் கண்ணைக் கவரும் தொடர் வான வேடிக்கைகள் விடுவதும் இந்த நிகழ்வின் முக்கியக் கொண்டாட்ட அம்சங்கள்!

“சாயங்காலம் நடந்து தான் வரணும் போல…” வண்டியில் ஏறி நெரிசலாய் இருந்த சாலையை மெல்ல கடந்தனர்.

“பார்க் பண்ண முடியலேன்னா கார்ல உட்கார்ந்துட்டே பார்க்க வேண்டியது தான்.” இந்த நேரத்திற்கே இவ்வளவு மக்கள் நெரிசல் என்றால் மாலையில் கேட்கவே வேண்டாம்.

கடற்கரை சாலைகளின் ஓரத்தில் சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகள் கைகளில் கொடிகளை ஏந்தி அசைத்தபடி நின்றார்கள். இந்தியக் கொடி ஒரு கையில், நீலம், வெள்ளை, சிகப்புப் பட்டைகள் சேர்ந்த பிரான்ஸ் நாட்டுக் கொடி மறு கையில் என.

பதிலுக்கு இவர்களும் உற்சாகமாய்க் கை ஆட்டினார்கள். பிரான்ஸ் தூதரகம் நெருக்கமான சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டுப் பகல் வேளைக்கே தகதகவென ஜொலித்தது.

பிரதான சாலையில் இணைந்ததும் போக்குவரத்து சற்று மட்டுப்பட, “என்ன ப்ரோக்ராம்டி இப்ப? ஷாப்பிங்னு வேற பயமுறுத்துற”

“ஒன்னும் பெருசா இல்ல. கொஞ்சம் டாப்ஸ், ரெண்டு மூனு ஜீன் எடுக்கணும், எல்லாம் பழசாகிடுச்சு… அப்புறம் நேரா லஞ்ச் தான்… எங்க போலாம் சாப்பிட, சற்குரு போலாமா ?”

வாகனம் தலைமை செயலகம் தாண்டி கடற்கரை சாலையில் விரைந்தது.

காலை நேரத்து வெண் கடல் பஞ்சு பொதிகளாய் அலைகள் அனுப்பி ‘வா, வா’ வென அழைப்பது போலிருக்க, “சித்து… பீச்சுக்கு போய்ட்டு போலாமா?” ஜெனி கெஞ்சலாகக் கேட்டாள்.

“ம்ஹும்… நாட் டுடே… தண்ணில நின்னுட்டா நீ வர மாட்டே. இன்னொரு நாள் போகலாம்”

“ஒரு பத்தே நிமிஷம்… சும்மா காலை தொட்டுட்டு வந்துடலாம், அதுக்கு மேல நிக்கமாட்டேன். ப்ராமிஸ்….” தோளில் சாய்ந்து கொஞ்சியபடி அவள் பிங்கி பிராமிஸ் செய்ய, அதற்கும் மேல் எப்படி மறுக்க முடியும் அவனால்?

சொன்னவளுக்கும் தெரியும், கேட்டவனுக்கும் தெரியும் நீரில் நின்றுவிட்டால் ஒரு மணி நேரத்திற்குக் குறைவில்லாமல் இவள் நகர மாட்டாள் என்று.

“போடி லையர்…” தலையில் லேசாக முட்டிச் சிரித்த சித்தார்த், வேண்டுமென்றே கேட்டான். “இங்க நிறுத்த முடியாது. உள்ள போய் நிறுத்திட்டு இவ்வளவு தூரம் நடந்து தான் வரணும், பரவாயில்லையா?”

“பரவால்ல… நீ பீச்சுக்கு கூட்டிட்டு வந்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா?”

“அடிப்பாவி… போன வாரம் தானே வந்து மணிக்கணக்குல ஆடிட்டு நின்னே?”

“அது போன வாரம், இது இந்த வாரம்…”

ஊடல் அடித்துக் கொண்டே வண்டியை அங்கிருந்த கண் பயிற்சி பள்ளி அருகே நிறுத்தி விட்டு பின்னோக்கி நடந்து வெண் மணலில் இறங்கினார்கள்.

பத்து பதினைந்து டூரிஸ்ட் ஆட்கள் தவிரக் கடற்கரை வெறிச்சென்று அமைதியாக இருந்தது. இரண்டு மூன்று பாதுகாப்புக் காவலர்கள் மட்டும் அங்கிருந்த கூண்டின் அருகே அமர்ந்திருந்தார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும், எவ்வளவு நேரம் விளையாடினாலும் அலுக்கவே அலுக்காத நீலக்கடலில் கால்கள் நனைத்தபடி இருவரும் நிற்க, ஜெனியின் கையைச் சித்தார்த் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

கையோடு கை கோர்த்து இழையும் காதல் சமிஞ்சை அல்ல அது. எங்கே உள்ளே ஓடிவிடப் போகிறாளோ என்ற பயத்தில் அவன் இறுகப் பிடித்துக் கொண்டு நிற்க…

“லொள்ளு பண்ணாதே சித்து.. நீ வேணா இங்கேயே நில்லு.. நான் உள்ள போறேன்” ஜெனி எந்த நொடி அவன் பிடியிலிருந்து வெளியேறலாம் என்கிற மாதிரி விரல்களை நெளித்து முறுக்கினாள்.

“இதுக்கும் மேல போன, கொன்னுடுவேன் உன்னை..”

“இங்க நின்னா முட்டி கூட நனையாதுடா.. இன்னும் கொஞ்சம் தூரம் போலாம், ப்ளீஸ்.. ப்ளீஸ்…” ஜெனி கெஞ்சி கொஞ்சி அடியடியாய் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

இருவரும் கிட்டத்தட்ட முக்காலே முழுவாசி நனைந்து, சித்தார்த் குண்டுகட்டாய் அவளை இழுத்துக் கொண்டு வெளியே வரும்போது அவன் நினைத்த நேரத்திற்கு மேல் பத்து நிமிடம் ஓடியிருந்தது.

“இப்படியே எங்க ஷாப்பிங் போறது? அறிவிருக்கா உனக்கு?“ அவன் முறைக்க, “கொஞ்சநேரம் வெயில்ல நின்னா காஞ்சிடும்… ஓவரா சிலுத்துக்காதே” ஜெனி கூலாக அவன் இடுப்பை வளைத்துத் தாஜா செய்தாள்.

காலை இளம் வெயிலில் லேசாய் சூடு ஏறிக் கொண்டிருந்த மணலில் கால் புதைத்து நின்றவர்கள், தூரத்து கலங்கரை விளக்கின் ஓரம் சரக்குக் கப்பல் ஒன்று மிதந்து மிதந்து கடலுக்குள் செல்வதை வேடிக்கை பார்த்தபடி நின்றார்கள்.

எதற்கோ திரும்பிய ஜெனி, “சித்து….” என்னமோ இப்போது தான் கண் தெரிந்தது மாதிரி அவன் முகமருகே நெருங்கி ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.

“இந்த எதிர் வெயில்ல கன்னம்லாம் மினுமினுன்னு தெரியுது… கொஞ்சம் வெயிட் போட்டுட்டடா…. ம்ம்.. பட் நாட் பேட்…. ஸ்மார்ட்டா தான் இருக்க…” அவள் குறும்பாய் சொல்ல,

“ப்ச்.. நீ வேற கடுப்பை கிளப்பாதே… நானே பேன்ட் எல்லாம் பிடிக்குதேன்னு கவலையா இருக்கேன்… குண்டாகிட்டேன்டி…” கவலையாகச் சொன்ன சித்தார்த் உண்மையிலேயே முன்னைக்கு இப்போது சதை போட்டுக் கன்னங்கள் செழுமையாகி மெருகேறித் தெரிந்தான்.

“குண்டுன்னு எல்லாம் இல்ல… ஜஸ்ட் சீக்ஸ் தான் கொஞ்சம் வந்திருக்கு” அவன் கன்னம் கிள்ளி நிமிண்டிய ஜெனி என்னவோ கடைந்து வந்த சிற்பம் போல அப்படியே தான் இருந்தாள். ஏறவும் இல்லை. இளைக்கவும் இல்லை.

“சரி கிளம்பலாமா? வெயில் ஏறுது…” அவர்கள் நடக்க…

“ஹே சித்து, என்ன வாங்கித் தரப் போற என் பர்த்டேக்கு?“ சித்தார்த்தின் கையில் கை கோர்த்து தொங்கியவாறு பாறைப் படிகளில் கால் வைத்து ஏறினாள் ஜெனி. அடுத்த வாரம் அவளுடைய பிறந்தநாள்.

“என்னையே முழுசா உன்கிட்ட கொடுத்திருக்கேன். இதுக்கும் மேல உனக்கு வேற என்ன வேணும்?” அவன் வழக்கம் போல டயலாக் அடிக்க…

“சரியான கோல்மால் பார்ட்டிடா நீ… இப்படியே மஸ்கா போட்டு தப்பிச்சிடு…” எம்பி தோளில் அடித்து விளையாடினாலும் மலர்வாய் சிரித்தாள் ஜெனி.

போற்றிப் போற்றிப் பார்த்துக் கொள்ளும் துணை அமைந்ததாலோ என்னவோ, அவள் கண்களின் துறுதுறுப்பும், முகத்தின் வெளிச்சமும் முன்னை விடக் கூடித் தெரிந்தன.

இந்த மூன்று ஆண்டுகளில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும் இருவரின் பிரியத்தின் உயரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் க்யூட்டி இவர்களிடம் வந்து சேர்ந்ததைப் போல இன்னும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன சூழலிலும் தொழிலிலும்.

முக்கியமாக கஃபேயில்.

பொன்மணியும், யமுனாவின் சித்திப் பெண் வாணியும் வேலைகளில் தேர்ந்திருந்ததில், கஃபேயை முழுமையாக அவர்களின் பொறுப்பில் விட ஆரம்பித்து இருந்தாள் ஜெனி.

திருமணத்திற்கு முன்னால் எப்போதும் அடுப்பு முன்னால் நிற்பவள், மெல்ல மெல்ல அவர்கள் வசமே விட்டு, தவறு செய்தால் தட்டிக் கொடுத்து வேலை பழக்கி, மேற்பார்வையை மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டாள்.

கதிர் தாத்தாவின் பேரன் சதீஷ் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கமாட்டேன் என்று அடம்பிடித்து இப்போது மாஸ்டருடன் நின்று உதவி செய்தபடி பேக்கிங் கற்றுக் கொள்கிறான். படிப்பு தான் வரவில்லையே தவிரத் தொழிலில் நல்ல வேலைக்காரனாக இருந்தான்.

முழு நேரமும் சதீஷ் கஃபே-இல் தங்கி உதவுவதில், சிட்டாளாகப் பறந்து அவன் கைக்குக் கை தோள் கொடுப்பதில் ஜெனிக்கு பெரிய பலம் கூடியிருந்தது. அந்தத் தைரியத்தில் ஒன்றரை வருடம் முன்னால் ‘மியம்’ தொழிற்சாலை வளாகத்திலேயே ‘சே டேடென்ட்ரே’வின் கிளையாகச் சின்னதாய் ஒரு அவுட்லெட் ஆரம்பித்தாள்.

நகரின் முக்கியச் சாலையில் இவர்களுடைய ஃபாக்டரி இருப்பதால் ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்தது இவர்கள் எதிர்பார்த்ததை விடவும் விரைவாக பிக்-அப் ஆகி இருந்தது. விற்பனை மட்டும் தான் அங்கே என்பதால் கதிர் தாத்தா அதைக் கவனித்துக் கொள்கிறார்.

வேலைகள் சீராய் நடப்பதில் மிஞ்சும் நேரத்தில் தனக்கென ஒரு குக்கரி பிளாக் தொடங்கி எழுதுகிறாள்.

பேக்கிங் முறைகள், பிரெஞ்சு பாரம்பரிய வகைகள் குறித்து ஏற்கனவே தன் பாட்டியிடம், அம்மாவிடம் கேட்டு டைரியில் எழுதி வைத்த விஷயங்கள் தான். அவற்றைச் சீராய்த் தொகுத்து இவள் அழகுத் தமிழில் எழுத, வலைத்தளம் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெரிய பெரிய வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் வீட்டில் உள்ள சாதாரண அடுப்பில் பேக்கிங் வகைகள் செய்வதையும், ஒரு பொருள் இல்லாவிட்டால் எளிதாக உள்ளூரில் கிடைக்கும் மற்றொரு பொருளை வைத்து எவ்வாறு அதே சுவையைக் கொண்டு வரலாம் என்றும் சுவாரஸ்யமாக இவள் எழுதும் பதிவுகள் பரவலாகக் கவனம் பெறுகின்றன.

சமீபத்தில் முன்னணி பெண்கள் பத்திரிக்கை ஒன்று இவளது குக்கரி குறிப்புகளை வாரா வாரம் தொடராக வெளியிடக் கேட்டு அணுக, ‘இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்கே…!!’ மனக்குரல் கிண்டல் அடித்தாலும் வெகு சந்தோசமாக உணர்ந்தாள் ஜெனி.

வெகு ஜன பத்திரிக்கையில் எழுதும் போது வெறும் உப்பு இவ்வளவு, சக்கரை இவ்வளவு என்று அளவு சொல்கிற சமையல் குறிப்பாக இல்லாமல் ஒவ்வொரு உணவின் கலாச்சாரப் பின்னணியையும் இணைத்து எழுத வேண்டும் என்று தீர்மானித்தவள், அதற்குரிய தகவல்களைத் திரட்டித் தொகுத்துக் கொண்டிருக்கிறாள்.

நடுவில் சில இளைஞர்கள் வந்து கஃபேவிற்கு ப்ரான்சைஸ் தருவீர்களா என்று கேட்டார்கள்.

“அப்படி ஒரு ஐடியாவே இல்லைங்க…” இரண்டு கிளைகள் போதும், மேலும் மேலும் வேலைப்பளு ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று ஜெனி உடனடியாக மறுத்திருந்தாள்.

“ஏன் கொடுத்தா என்ன? டெவலப் பண்ணாம இப்படியே கேக்குக்கு முட்டை அடிச்சிட்டே இருப்பியா?” விஷயம் கேட்டதும் நல்ல யோசனையாகத் தோன்றியது சித்தார்த்துக்கு.

எப்போதும் “ஓவரா இழுத்துக்காதே… இருக்கிறது போதும்” என்பவன் இப்போது மாற்றிப் பேச, ஜெனி முறைத்தாள்.

“நாம இன்னொரு ப்ரான்ச் ஆரம்பிக்கப் போறது இல்ல மக்கு. இது ப்ரான்சைஸிங்.. நம்ம பேனரை அவங்களுக்குத் தரப் போறோம். எப்படி அக்ரிமெண்ட் போடுறோம், என்ன டி அன்ட் சின்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் மேனேஜ் பண்ணினா மட்டும் போதுமே…”

அவன் பொறுமையாய் விளக்க, “என்னை இதுல இழுக்காம என்ன வேணும்னாலும் பண்ணு” ஜெனி அவன் போக்குக்கே விட்டாள்.

அதற்குரிய ஆரம்ப வேலைகளை அவன் முடுக்கி விட, சென்னை செல்லும் பைபாஸில் ஒன்று, எஸ் வி படேல் சாலையில் ஒன்று எனப் புதுவையின் இரண்டு இடங்களில் இப்போது ‘சே டேடென்ட்ரே’வின் பிரான்சைஸ் கடைகள் இயங்குகின்றன.

அவளுக்கு வேலைப்பளுவை ஏற்றாமல் கஃபேயின் கணக்கு வழக்குகளைச் சித்தார்த் கவனித்துக் கொண்டான். மற்றபடி மியம்-ல் இரண்டு ப்ரொடக்ஷன் லைன்களை அதிகரித்திருக்க, சீஸ் டிஸ்ட்ரிப்யூஷன் தமிழகம், புதுவை முழுவதும் விரிந்து திருப்பதி, கடப்பா வரை விஸ்தீரணம் ஆகி இருந்தது.

‘நான் ரொம்..ப பிஸி… பி…ஸி..’ ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் அலட்டிக் கொள்வது போலப் பேசி தங்களுக்குள் கேலி செய்து கொண்டாலும் உண்மையிலேயே இருவரும் தத்தம் வேலைகளில் பரபரவெனத் திரிந்தார்கள்.

மற்றபடி, போன செப்டம்பரில் சதானந்த் ஓய்வு பெற்று விட, வீட்டில் இருந்தாலும் அவரது நேரக்கணக்கின் தீவிரம் தொடர்வதில் கௌரி தான் அடிக்கடி கடுப்பாகி கொண்டிருந்தார்.

கௌரிக்கும் இன்னும் ஒரு வருடமே சர்வீஸ் பாக்கி இருந்தது. ஒழிந்த பொழுதுகளில் அவர் மருமகளின் கஃபேவுக்கும், சதானந்த் மியம்- மும் சென்று கவனித்துக் கொள்ள, அந்தச் சந்தர்ப்பங்களில் ஜெனியும் சித்தார்த்தும் தங்களுக்கான தனி நேரத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.

கௌரி கஃபேவுக்குள் நுழைந்ததில் நல்ல முன்னேற்றமாக இப்போது அங்கே ப்யூசன் வகைகளை அறிமுகம் செய்கிறார்கள். இருபது வருட கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அவர் பெற்ற உள்ளூர் சமையல் அனுபவம் இப்போது கை கொடுக்கிறது.

புதுச்சேரியின் மண்ணுக்குரிய பிரத்யேக உணவுகளை உள் நுழைத்து வெண்ணெய் புட்டுடன் சீ புட் ஸ்டூ, தட்டை ரொட்டியும் (Flat bread) பொடி இறால் தொக்கும், மட்டன் கீமா அடைத்த க்ராய்ஸன்ட் பன்களும் எனக் கௌரி அவுட்-ஆப்-தி-பாக்ஸ் யோசனைகளில் பின்னி எடுக்கிறார்.

மாமியாரும் மருமகளும் சேர்ந்து செய்யும் இவ்வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்க, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புது விதத்தைத் தங்கள் மெனுவில் சேர்த்துத் கொண்டு வருகிறார்கள்.

“இந்த மாச ஸ்பெஷல் என்ன தெரியுமா? பாண்டி ஸ்பெஷல் காய்கறி வெள்ளைக் கறி வித் ஜூகினி பாஸ்தா“

“ம்ம்… இன்ட்ரெஸ்டிங்” மெச்சுதலாய் புருவம் உயர்த்திய சித்தார்த். “இந்தத் தடவையும் நாங்க இரண்டு பேரும் தான் பலியாடா?” என்றான் பாவமாக.

“கண்டிப்பா… இதுல என்ன சந்தேகம் உனக்கு …? நாளைல இருந்து எங்க ட்ரையல் ஆரம்பிக்குது…” மேங்கோ லஸ்ஸியை உறுஞ்சிய ஜெனி குறும்பாகக் கண்ணடித்தாள்.

ஷாப்பிங் முடித்து ஆற அமர ஹோட்டலில் சாப்பிட்டவர்கள், கஃபேவிற்குச் சென்று சில கணக்கு வழக்குகள் பார்த்து, மூன்று மணி போலத் தேவையானவற்றை வண்டியில் ஏற்றி கொண்டார்கள்.

ட்ரன்க்கில், பின் இருக்கைகளில் என நீக்கமற பொருள்களை நிரப்பிய ஜெனி மணியிடமும் சதீஷிடமும் சொல்லிவிட்டு முன்னால் வந்து அமர, சித்தார்த் காரை கிளப்பினான்.

பள்ளி விடும் நேரம் சரியாக மூர்த்தி குப்பம் அருகே வந்திருந்தார்கள். அந்த அரசு தொடக்கப் பள்ளியின் திறந்த வெளி வளாகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இவர்கள் காத்திருக்க, உள்ளே வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

இங்கு வசிக்கும் குழந்தைகளுக்காகத் தன்னார்வலர்கள் நடத்தும் விடுமுறை வகுப்புகள் அவை. இவர்கள் வந்தது தெரிந்ததும் அந்தக் குழுவில் இருந்த இளைஞர்கள் சிலர் வெளியே வர, இரண்டு பேர் இவர்கள் கொண்டு வந்த மளிகைப் பொருட்களை, காய்கறிகளை இறக்கி சமையல் கூடத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.

வார இறுதிகளில் இங்கு நடக்கும் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு பயிற்சிகளின் போது ஒரு சமையல்காரர் வந்து சமைத்து விட்டு போக, இங்கேயே காலை, மதியம் சாப்பிட்டு இரவு வரை படித்து விட்டுச் செல்வார்கள் பிள்ளைகள்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்..”

“அட நீங்க வேற, நாங்க தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். எவ்வளவு அர்ப்பணிப்போட நீங்க எல்லாம் பிள்ளைங்களுக்குச் சொல்லித் தரீங்க… உங்க சர்வீஸ்க்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல”

சித்தார்த்தும் ஜெனியும் அவர்களுடைய பணிகளை, மாலை வகுப்புகளைப் பற்றிக் கேட்டு பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சின்னப் பிரார்த்தனை பாடலுடன் உள்ளே வகுப்புகள் முடிவது தெரிய, வண்ண வண்ண மலர்கள் சிதறிப் பாய்வது போல இவர்களை நோக்கி கத்திக் கொண்டே ஓடி வந்தார்கள் சிறுவர் சிறுமிகள்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வயது, ஒவ்வொன்றும் ஒரு விதம், உயரமாய், குட்டையாய், குண்டாய், நோஞ்சானாய், வயிறு உப்பலாய், எலும்புத் தெரிய என.

ஆனால் ஒன்று போல எல்லாப் பிள்ளைகளின் மீதும் வறுமையின் நிறம் வஞ்சனை இல்லாமல் பூசி இருக்க, அந்த எளிய வீட்டுக் குழந்தைகள் இவர்கள் பங்கிட்டுத் தரும் இனிப்புகளை, கேக்குகளை, பழங்களை ஆசையுடன் வாங்கிக் கொண்டார்கள்.

  சிலர் அங்கேயே பிரித்துச் சாப்பிட, சில பிள்ளைகள் தம்பி, தங்கைகளுடன் சேர்ந்து உண்ண வீட்டுக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள், கோரஸ் குரலாக “தேங்க்ஸ் அக்கா, தேங்க்ஸ் அங்கிள்” உடன்.

“அக்கா நான் காலைல இருந்து ஜன்னல் வழியா பார்த்துட்டே இருந்தேன். நீங்க வருவீங்களான்னு…” ஒழுகும் மூக்கை துடைத்துக் கொண்டே ஒரு குழந்தை ஜெனியின் சட்டையைப் பிடித்து இழுத்தது.

“அச்சச்சோ… அப்ப காலைல இருந்து ஒன்னுமே படிக்கலையா குட்டி.. வேடிக்கை பார்த்துட்டே இருந்தியா?”

கையில் இருந்த டிஸ்யூ கொண்டு முகத்தைத் துடைத்து விட்டவள் அந்தக் குழந்தைக்கு உரிய பையை எடுத்துக் கொடுக்க, அது வெட்கமாக நிமிர்ந்து பற்களைக் காட்டி வெள்ளையாய் சிரித்தபடி வாங்கிக் கொண்டு ஓடியது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பள்ளி அல்லது இல்லம் என்று அட்டவணை போட்டு இவர்கள் உணவு வகைகளை எடுத்து வந்து பங்கிட்டுக் கொடுப்பதில் வாங்கிச் செல்லும் பிஞ்சுகளின் வயிறு நிறைகிறதோ இல்லையோ, கொடுக்கும் இவர்களின் மனசு நிறைகிறது.

காதலித்த நாட்களிலும் சரி, கல்யாணம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளிலும் சரி, ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கலாமா என்று இருவருமே பேசிக் கொண்டதில்லை. ‘கூடாது’ என்ற எந்த நிர்பந்த எண்ணங்களும் இல்லை. ஏனோ இயல்பாகவே நிகழவில்லை.

பார்க்கும் எல்லாப் பிள்ளைகளிடம் பாசத்தைக் கொட்டும் மனசு இருவருக்கும் வாய்த்ததாலேயோ என்னவோ, ஒரு குழந்தை, இரு குழந்தை என்று எடுத்து வளர்ப்பதை விட….

உள்ளத்தை விசாலமாக்கி காணும் எல்லாக் குழந்தைகளிடமும் அன்பை கொட்ட, எந்த எதிர்கால நிபந்தனையோ, எதிர்பார்ப்போ இல்லாமல் பிரியம் காட்ட இருவரின் மனமும் ஒருமித்து வசப்படுவதில் இதில் ஏதோ கூடுதல் இன்பமும் சிலிர்ப்பும் உணர்ந்தது அவர்கள் இதயம்.

ஜெனியும் சித்தார்த்தும் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்ந்து பார்க்க விரும்பினார்கள். மறந்து கூட எந்த எதிர்மறை எண்ணமும் வேண்டாம் என்ற உறுதியுடன் கை கோர்த்தவர்கள், தங்கள் மனசு சொல்லும் பாதையில் மட்டுமே நடந்தார்கள்.

ஆரம்ப நாட்களில் சமயத்தில் குழம்பிப் போகும் ஜெனி கூடச் சித்தார்த்தின் ஆத்மார்த்தமான அன்பில் தேவையில்லாத சிந்தனைகளை, நெகடிவ் எண்ணங்களை ஒதுக்கப் பழகி இருந்தாள். சந்தோசமும், வெற்றிடமும் நாம் பார்க்கும் விதத்தில் தான் என்ற தெளிவு வந்திருந்தது.

நம் மனசை பார்வையை விரித்து வைத்துப் பார்த்தால் எல்லாமும் சந்தோஷம் தான், சகலத்திலும் அன்பையும், கருணையையும், நேசத்தையும் பொழிந்து பரஸ்பரம் உள்வாங்குவது தானே தாய்மையின் மகத்துவம், இந்தப் புரிதல் அவளுள் அழுத்தமாக வேரோடியது.

அவ்வப்போது எழும்பும் நீர்க்குமிழிகளும் கள்ளமில்லா அன்பு காட்டி காலை சுற்றி சுற்றி வரும் க்யூட்டியின் வரவுக்குப் பின்னால் முற்றிலும் அடங்கிப் போக…

‘நான் இழந்ததுக்கு நூறு மடங்கு மேலா என் சித்துவும், க்யூட்டியும், அங்கிள் ஆன்ட்டியும் கூட இருக்கும்போது எனக்கு வேற என்ன வேணும்?’

நிறைவான வாழ்க்கை ஓட்டத்தில் அவள் வெகு திருப்தியாக உணர்ந்தாள். உணர்த்தினாள்.

காலை முதல் இரவு வரை தத்தம் பணிகளில் மூழ்கி கடுமையாக உழைத்தவர்கள் மூச்சு விடும் இடைவெளியிலும் தங்கள் துணைகளைக் காதலித்தார்கள், காதல் செய்வித்தார்கள்.

இதற்கு மேல் வாழ்வின் பொருள் தான் வேறு என்ன?

யார் கண்டது? ஒருவேளை எதிர்காலத்தில் தோன்றினால் ஒரு குழந்தை என்ன, பத்து குழந்தைகளைக் கூட இவர்கள் எடுத்து வளர்க்கலாம். நாளை என்ன நடக்கும் என்று அறிந்தவர் யார்?

“அங்கிள்.. நீ…ங்க வந்துருக்கிங்கன்னு பக்கத்து வீட்டுச் செல்வா சொல்…லி ஓடி வரேன். எங்..க நான் வரது…க்கு..ள்ள நீங்க போயிரு…ப்பீங்களோன்னு நினைச்சிட்டே வந்தே..க்கா”

ஏழு வயது சிறுமி ஒருத்தி ஓடி வந்ததில் துண்டு துண்டாய் பேசி மூச்சிரைத்து நிற்க,

“அதென்ன எல்லோருக்கும் நீ மட்டும் அக்கா, நான் அங்கிள்… என்னன்னு கேளு??” ஜெனி பக்கம் தாழ்ந்த சித்தார்த் முக்கியமான சந்தேகம் கேட்டான்.

“ஹ ஹா… உன் கவலை உனக்கு!!?? அங்கிளை அங்கிள்னு தான்யா கூப்பிட முடியும்…”அவனிடம் கிண்டலாகக் கண் சிமிட்டிய ஜெனி அந்தக் குழந்தையிடம் குனிந்தாள்..

“உன்னைப் பார்க்காம போவோமா வனிக்குட்டி….? உனக்காகவும் உன் குட்டித் தம்பிக்காகவும் ஸ்பெஷலா கொண்டு வந்திருக்கோமே….” சித்தார்த் உள்ளிருந்து எடுத்து நீட்டியதை வாங்கி அவள் கையில் கொடுத்த ஜெனி மடிந்தமர்ந்து பையைப் பிரிக்க உதவி செய்தாள்.

“ஹை… தேங்க்ஸ்க்கா“

தம்பிக்கான சட்டைத் துணிகளுடன் நிறையப் பழங்களும் இனிப்புகளும் இருந்ததில் விழி விரித்த குழந்தையின் சந்தோசக் கூவலில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நிறைவாகப் புன்னகைக்க….

காரில் இருந்த ஸ்டீரியோ அடுத்தப் பாடலை மென்மையாக ஒலிக்கத் துவங்கியது.

“மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதனில் தொலைந்தால்

நீயே வருவாய்

வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை”

(நிறைந்தது)