காதல் கஃபே – 14

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

14

“ஹே மச்சான்… ஹௌ ஆர் யூ?”

வீட்டுக்குள் நுழையும்போதே தன் முன்னால் வந்து வழிமறிக்கும் ஐம்பது கிலோ தாஜ்மகாலைக் கண்டு மிரண்டு, விழித்து, பிறகு உள்ளே கண் ஓட்டி ஒரு அசட்டு சிரிப்போடு நின்றான் சித்தார்த்.

ஆறு அடிக்குக் குறையாமல் வெள்ளை வெளேரென்று இருந்தவள், “ஐ’யம் ஜெனிட்டா’ஸ் ட்வின் சிஸ்டர்” புன்னகையுடன் கை நீட்ட, கண்களில் வியப்பு தாங்கி ஏறிட்டான் எதிரில் நின்றவளை.

“ஹாய்…” முறுவலுடன் அவள் கையைப் பற்றிக் குலுக்கினான்.

முதல்முறை ஜெனியின் இரட்டையைப் பார்ப்பதில் கொஞ்சமல்ல நிறையவே ஆச்சரியம் கூடியது அவனுக்கு.

ஜெனிக்குத் தங்கை இருக்கிறாள் என்று தெரியுமே தவிர அவர்கள் ட்வின்ஸ் என்று இதுவரைக்கும் தெரியாது. ஆன்லைன் அழைப்புகளில் அவளது அம்மா அப்பாவை பார்த்திருக்கிறான். இவளைக் கண்களில் காட்டியது கூட இல்லை அந்த ராட்சசி.

‘சொன்னதும் இல்ல, ஒரு போட்டோல கூடக் காட்டினதும் இல்ல வச்சுக்கிறேன் அவளை’ சித்தார்த் கருவி கொண்டே “எப்ப வந்தீங்க? ட்ராவல் ஓகேவா? “அவளிடம் விசாரித்தபடி தோட்டத்திலேயே கொஞ்ச நேரம் நின்றான்.

“உள்ள வாங்க….”

“நீங்க போங்க மாம்ஸ், நான் வந்துடுறேன். ஒரு கால் பண்ணணும்” அவள் தன் கையில் இருந்த போனை உள்ளங்கையில் தட்டிக் காட்டிவிட்டு செல்ல, சித்தார்த் வீட்டினுள் நுழைந்தான்.

“இதோ வந்துட்டாரே உங்க சன்-இன்-லா…” கௌரி கண் காட்ட, இவனைக் கண்டதும் அங்கு அமர்ந்திருந்த இருவரும் வரவேற்பாய் எழுந்து நின்றார்கள்.

ஜெனியின் தந்தை மற்றும் தாய்.

“ஹலோ, எப்படி இருக்கீங்க?” முதல்முறை மருமகனை நேரில் பார்ப்பதால் இருவரின் முகங்களும் பரவசத்தில் பூரித்து ஒளிர்ந்தன. இவனும் மரியாதையாக நலம் விசாரித்து அவன் தந்தையை அணைத்து விலகினான்.

பெரிய மகளைப் பற்றி இத்தனை வருடங்கள் இருந்த கவலையும் பயமும் நீங்கி நிம்மதி வந்திருந்ததில், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினார்கள். அவனது தொழில் பற்றிப் பொதுவாக விசாரித்த ஜெனியின் தந்தை, தன் மர நிறுவனம், அவர்களது வீடு என்று ஆசையாகப் பேசினார்.

ஏற்கனவே இரு வீட்டு பெற்றோர்களும் ஸ்கைப்பிலும் பேஸ்டைமிலும் சந்தித்துத் திருமணம் பற்றிக் கலந்து பேசி இருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகப் பேசி பழகுவதில் இலகுவான சௌஜன்யம் வந்திருக்க, முதல்முறை சந்திக்கும் தயக்கம் எதுவும் இன்றி இரு குடும்பத்தினரும் நெருக்கமாக உணர்ந்தனர்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஜெனியின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால் திருமண வேலைகளைத் தாங்கள் ஏற்று நடத்துவதாகக் கௌரியும், சதானந்தும் பொறுப்பேற்று இருக்க, கல்யாணத் தேதி குறிக்கப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் சீராக நடந்து கொண்டிருக்கின்றன.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்க, ஜெனியின் பெற்றோரும் தங்கையும் பிரான்ஸில் இருந்து கிளம்பி இங்கு வந்து சேர…

“எங்க மாமியாருக்கு சுத்தமா முடியல. யாராவது கூடவே இருக்கவே வேண்டி இருக்கு. இல்லேன்னா நீங்கல்லாம் அப்புறம் வாங்கன்னு நான் மட்டுமாவது முன்னாடி கிளம்பி வந்திருப்பேன். என்ன பண்றது? மத்தபடி என் மனசெல்லாம் இங்க தான்…” ஜெனியின் தாய் கெளரியிடம் பகிர்ந்து கொண்டார்.

“அதனால என்ன, இப்பதான் வந்துட்டீங்க இல்ல. இந்த ஒரு வாரத்துல மலையையே புரட்டலாம்.” என்ற கௌரி,

“ஜெனிக்கு தைச்சு வந்திருக்க ப்ளவுஸ் மட்டும் ட்ரையல் பார்த்துடுங்க. நான் சொன்னா ‘அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ஆன்ட்டி’ன்னு போட்டு பார்க்க மாட்டேங்குது. அப்படியே அந்த பார்லர் பொண்ணை வர சொல்றேன். எந்த மாதிரி மேக்கப்ன்னு நீங்களும் ஒரு பார்வை பார்த்துடுங்க….“ என்று ஒவ்வொன்றாக யோசித்துச் சொல்ல,

“இவ எல்லாத்துக்கும் டென்ஷன் ஆவா… அதையெல்லாம் ஜெனி பார்த்துக்கும்மா… நீங்க வந்த அலுப்புக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க ” சதானந்த் இடையிட்டு சொன்னார்.

“ம்ம்ம்.. இவரைப் பாருங்க” கௌரி கைவிரித்துக் கணவரை காட்ட, “எங்கப்பா மாதிரியே எல்லோரும் நேரத்துக்குத் தூங்கி நேரத்துக்கு ரெஸ்ட் எடுக்கணும்… இல்லேன்னா டென்ஷன் ஆயிடுவார்” சித்தார்த் அவரைக் கிண்டல் செய்ததில் அனைவரும் நகைத்தார்கள்.

சிரித்தபடியே ஜெனியின் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். எந்த பந்தாவோ, பரம்பரை பெருமையோ பேசாமல் வெகு நாட்கள் பழகிய இயல்பில் எதார்த்தமாக இருந்தவர்களைக் கண்டு திருப்தியாக உணர்ந்ததன் பொருள் பேசியது அவர்கள் பார்வை.

வீடியோ காலில், தொலைதொடர்புகளில் எத்தனை முறை பேசி இருந்தாலும் நேரில் வந்து பார்க்கும் வரை அவள் அம்மாவுக்குக் கொஞ்சம் ‘பக் பக்’ மனநிலை தான்.

சம்பந்தி வீட்டினரைப் பார்த்து, இப்போது மாப்பிள்ளையையும் நேரில் பார்த்துவிட, ‘கடவுள் என் பொண்ணை முழுசா சோதிச்சுடல’ மகளின் வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தின் நிழல் முழுதாய் விலகி நிம்மதி வந்திருந்தது அவருக்கு.

இவர்கள் நால்வருக்கும் நடுவில் மாட்டியிருந்த சித்தார்த் அவ்வப்போது இடையிட்டு கலகலப்பாகப் பேசியபடி இருந்தாலும் ‘எங்க ஆளைக் காணோம்?’ அவன் கண்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தன.

பொறுமையின் பேட்டரி தீர்ந்து கொண்டே போய், “நீங்க பேசிட்டு இருங்க… நான் வந்துடுறேன்” அவன் எழுந்த நேரம் ஜெனி மேலிருந்து எதையோ தூக்கியபடி கீழிறங்கி வந்தாள்.

“ஹே… வந்துட்டியா?” இவனைக் கண்டதும் சுவாதீனமாகச் சொல்லிக் கொண்டே அவள் சமையல் அறைக்குச் சென்று விட,

“முதல்ல இந்த ஓப்பன் கிச்சனை மாத்தனும்..” சமையல் அம்மாவின் காதில் விழுந்துவிடாமல் பின்னால் நின்று முணுமுணுப்பவனைக் கண்களில் சிரிப்போடு திரும்பிப் பார்த்தாள் ஜெனி.

“மாத்தி….? அப்படியே இவரு பெரிய ரொமான்ஸ் மன்னன் தான்… போடா..”

“இந்த வாய்க்காகவே இதை மாத்துறேன்டி…” சூளுரைத்தான்.

“அது சரி, புருஷன்காரன் வர்ற நேரம் வாசல்ல நின்னு வரவேற்க மாட்டியா? ராணி மங்கம்மா மாதிரி ஆடி அசைஞ்சு மெல்லமா கீழ இறங்கி வர்ற?”

“அதெல்லாம் புருஷன் ஆனதும் பார்த்துக்கலாம் சித்து. உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்? கண்டிப்பா செஞ்சுடலாம்… நான் வீட்டுக்கு வரும்போது நீ வழி மேல விழி வச்சு வெளில நின்னு வரவேற்கணும். சரியா ? இப்போ, அவ்ளோ மரியாதை எல்லாம் எனக்கு வேணாம்டா”

விழிகளில் குறும்பு வழிய ரொம்பத் தீவிரமாகச் சொல்பவளை “உன்னை??” முறைத்தாலும் அவன் கண்களிலும் சிரிப்பு பொங்கித் ததும்பியது.

“என்ன தனியா இரண்டு பேரும் கிசுகிசுத்துட்டு இருக்கீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ரகசியம் பேசுறது எல்லாம் ரொம்பத் தப்பு மாம்ஸ்”

ஜெனி தட்டில் அடுக்கிக் கொண்டிருந்த குக்கீஸ்களில் இருந்து ஒன்றை எடுத்து மென்றபடியே இவர்களுக்கு நடுவே வந்து நின்றாள் ஜெனியின் தங்கை.

“சரிதான் போடி… சித்து, டேனியை பார்த்தியா? ஜெனிட்டா’ஸ் சிஸ்டர் டேனிட்டா…. எப்படி என் சர்ப்ரைஸ்?” ஜெனி கண்கள் பளபளக்க அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஓ… நீதான் அந்த டேனியா ?” நாக்கை கன்னத்தில் துருத்தியபடி அவள் தங்கையைப் பார்த்தவன், “பெரிய புடலங்காய் சர்ப்ரைஸ் தான் போ…” ஜெனியின் பின்னந்தலையில் தட்டினான்.

‘யார் அந்த டேனி? இவன் எப்போது கேட்டாலும் ‘அதெல்லாம் சொல்ல மாட்டேன் போ’ என்று ஜெனி ஆரம்பநாட்களில் முறுக்கிக் கொள்ள, அவள் மனதில் தான் இருப்பது புரிந்து கொண்ட பின்னால் ‘இனி எந்த டேனி வந்தா எனக்கென்ன ?’ என்று தான் அசால்டாகத் தூக்கிப் போட்டது நினைவு வர சிரித்துக் கொண்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இது ஒரு சர்ப்ரைஸ்ன்னு என்னையும் ஆன்லைன் சேட் பக்கம் வரக்கூடாதுன்னு ஒரே இம்சை. செம மொக்கை மாமா இவ..” டேனி வேறு அலுத்துக் கொள்ள, சித்தார்த்தும் அவளும் கை ஓங்கி தட்டிக் கொண்டார்கள்.

ஜெனி இருவரையும் முறைத்தாள்.

“தொப்பித் தொப்பி….“ தங்கை இன்னும் வெறுப்பேற்றியதில் ஜெனி அவளை அடிக்கத் துரத்த, டேனி கௌன்டர்டாப்பை சுற்றி ஓட, அப்படியே சித்தார்த்தை சுற்றி ஓடிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

இவர்களின் அதகதளத்தை என்னவென்று புரியாவிட்டாலும் பெரியவர்கள் நால்வரும் புன்னகையுடன் வேடிக்கை பார்க்க, “சித்துப் பிடி.. மாம்ஸ் அவளைப் பிடிங்க..” இருவருமே கத்தினாலும் அவன் சிரித்தபடி கைகள் கட்டியவாறு நின்று கொண்டான்.

கடிகார பெண்டுலமாய்த் தன்னைச் சுற்றி ஓடும் சகோதரிகள் ட்வின்ஸ் என்றாலும் இருவர் தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. முற்றிலும் மாறுபாடான ஃப்ரெடர்னல் வகை இரட்டையர்கள் போலும் இவர்கள்.

ஜெனி தன் தாயின் முகவெட்டை அச்சு அசலாக வடிவெடுத்திருந்தாள் என்றால் டேனி அப்படியே அவள் தந்தையின் ஜாடையையும், அசாத்திய உயரத்தையும் கொண்டிருந்தாள். ஜெனிக்கு முற்றிலும் மாறான மேற்கு உலக முகமும், அதற்குரிய நடை, உடை, பாவனைகளும் என.

“சிங்கிள் ப்ரொடக்ஷன், கம்ப்ளீட்லி டிபரன்ட் ப்ராடக்ட்ஸ்… வாவ்..!!!”

ஒருகட்டத்தில் அவர்கள் நிற்காமல் ஓடுவது இவனுக்கே தலை சுற்றுவது போலிருக்க, ஜெனியை பிடித்துத் தன்னுடன் நிறுத்தியவன், அவள் காதில் முனக… பதிலுக்கு இடுப்பில் நறுக்கென்று ஒரு கிள்ளு வாங்கினான்.

“நீ டேனி, டேனின்னு உருகவும் நான் கூட ஏதோ பாய் பிரெண்டோன்னு நினைச்சேன். இவ்ளோ அழகான மச்சினிச்சின்னு சொல்லவே இல்ல நீ….” அவன் கண்ணடிக்க,

“ம்ம்.. செருப்பு. மச்சினிச்சி கிச்சினிச்சின்னு சைட் அடிக்க நினைச்சா கொலை விழும் ஜாக்கிரதை”

மூச்சு வாங்க கிரானைட் மேடை மேல் ஏறி அமர்ந்திருந்த டேனி இருவரது வம்பையும் குறும்பாய் பார்த்தாள்.

“உன் அக்கா அவ்ளோ வயலன்ட்டா டேனி?” அவளிடம் கேட்ட சித்தார்த், “சே சே.. நீ ரொம்ப நல்லவ.. அப்படில்லாம் பண்ண மாட்டே” ஜெனியிடம் முடிக்க….

“நான் நல்லவ தான். கத்தியை எடுக்கப் போறது நான் இல்ல, இவளோட வுட் பி…”

“அவ கிடக்குறா மாம்ஸ். நீ இவளை கழட்டி விட்டுடுங்க. நானும் பயஸுக்கு பை சொல்லிட்டு வந்துடுறேன். என்ன சொல்றீங்க?”

“இது நல்ல ஐடியாவா இருக்கே??” தீவிர பாவனையில் யோசித்தவன் ‘என்ன சொல்லட்டும்?’ என்கிற மாதிரி ஜெனியை பார்த்தான்.

‘எங்க சொல்லித்தான் பாரேன்’ என்பது போல ஜெனி கண்களை உருட்டி மிரட்ட…

“சே சே… என்ன தான் உங்கக்கா என் பெர்சனாலிட்டிக்கு சுமாரான மேட்ச் தான்னாலும் நான் ஒரு ஏக பத்தினி விரதன். இப்படில்லாம் பேசாதே.. என் விரதத்துக்குப் பங்கம் வந்துடும்.”

“ஹலோ என் அக்கா உங்களுக்குச் சுமாரான மேட்சா, ரொம்ப லொள்ளு தான் உங்களுக்கு…” என்று டேனி ஒரு பக்கமும், “ஏக பத்தினி விரதன் மூஞ்சை பார்த்தியா? சரியான ஜொள்ளு பார்ட்டி…” ஜெனி மறுபக்கமுமாக அவன் காதுகளை இழுத்து திருக…

“ஆஆ…..” வலிக்கவே இல்லாவிட்டாலும் சித்தார்த் சத்தமாக அலறினான்.

********************

எண்ணி எண்ணி காத்திருந்த அந்த இனிய நாளும் உதயமாக, உறவுகள் நட்புகள் சூழ ஜெனி சித்தார்த்தின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

இரண்டு குடும்பத்தின் பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி, சித்தார்த்தின் தந்தை வழி குடும்பத்தின் செல்வாக்கை காட்டும் வகையில் வெகு விமரிசையாக நிகழ்ந்தன எல்லா நிகழ்வுகளும்.

ஜெனிக்கும் சித்தார்த்துக்கும் இந்த ஆடம்பரங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை, எனினும் ‘தன்னை மாதிரியே மருமகளையும் பிடிச்சுட்டாளே’ என்று தன் தாயை மெல்லும் உறவுகளின் வாய்க்கு மேலும் அவல் சேர்க்க விரும்பாமல் அவர்கள் சொல்லும் எல்லாச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஒத்திசைந்தார்கள்.

மெகந்தி, சங்கீத், குதிரை ஏறி மாப்பிள்ளை ஊர்வலம் என்று இளம் தலைமுறை இன்னொரு பக்கம் அட்டவணையை வளர்க்க, “நாமென்ன நார்த் இந்தியனா? இந்தப் பக்கமும் இல்லாம, அந்தப் பக்கமும் இல்லாம புதுசு புதுசா வளர்க்காதீங்க…”

சித்தார்த் அழுத்தமாக மறுத்ததில் அப்போதைக்கு முகம் வாடினாலும் விலையைப் பார்க்காமல் அவன் எடுத்துக் கொடுத்த பட்டு, துணிமணிகளில் குஷியாகி கல்யாணத்தில் ஒரு கலக்கு கலக்கி இருந்தார்கள் அவனுடைய பெரியப்பா அத்தை பிள்ளைகள்.

ஜெனி, டேனியின் சிறுவயது நண்பர்கள், டேனியின் வுட்பி பயஸ் மற்றும் அவளது நெருங்கிய தோழிகள் இருவர் என பிரான்ஸில் இருந்து வந்திருந்த இளைஞர் கூட்டம் இந்திய திருமண நிகழ்வுகளையும், அவற்றில் நிகழும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டு அசந்து தான் போனார்கள்.

“இந்தியன்ஸ் எல்லாரும் பயங்கரப் பணக்காரங்க போல இருக்கு…” என்கிற எண்ணத்துடன் தமிழ் வழி உபசரிப்பையும், வகை வகையான உணவுகளையும் களிப்புடன் அனுபவித்து ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படங்களாக எடுத்துக் குவித்தார்கள்.

 திருமண வரவேற்பை முடித்து அடுத்த நாள் ஜெனியின் பெற்றோரும் தங்கையும் ஊர் திரும்ப, இவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்குச் சென்று வழியனுப்பி வைத்தார்கள். உடல்நலமில்லாத பாட்டியை நண்பர்கள் குடும்பத்திடம் ஒப்படைத்து இங்கு வந்திருந்ததால் அதற்கு மேல் அவர்களால் தாமதிக்க முடியவில்லை.

“சந்தோசமா இருடா…” ஜெனியின் தாய் அவளைக் கட்டிப்பிடித்து அழ, ஜெனி நெகிழ்ச்சியில், பிரிவுத் துயரில் கண்கலங்கினாள்.

“தைரியமா போயிட்டு வாங்க… உங்க பொண்ணு கெட்டிக்காரி. அவ இருக்கிற இடம் எப்பயும் சந்தோஷமா இருக்கும்…” கௌரி சம்பந்திக்குத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.

அன்று இரவு விமானத்தில் மணாலி கிளம்பினார்கள் பெண்ணும் மாப்பிள்ளையும், ஹனிமூனுக்காக.

ரோடாங் பாஸிலும், குலு பள்ளத்தாக்கிலும், ஜோகினி அருவியிலும் காதல் பயிரை இனிக்க இனிக்க வளர்த்தவர்கள், திகட்டாமல் தேனிலவு கொண்டாடி ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பினார்கள்.

வந்து இருவரின் தொழிலையும் கொஞ்சம் ஒழுங்குபடுத்தி, தேங்கியிருந்த வேலைகளை முடித்து அடுத்த இரண்டாவது வாரம் பிரான்ஸ் விமானம் ஏறி இருந்தார்கள், டேனியின் திருமணத்திற்காக.

மாமியார் வீடு வந்த மூத்த மருமகனை விழுந்து விழுந்து கவனித்தது ஜெனியின் வீடு. டேனி மற்றும் பயஸ் உடன் ஷாப்பிங், அவுட்டிங் என்று சுற்றியவர்கள், தனியாக பாரிஸ், பிரிட்டானி, நீஸ் என்று அடுத்த ஒரு வாரம் இரண்டாவது தேனிலவு கொண்டாட சென்றார்கள்.

“எங்கம்மா கூட இருக்க விடாம நீ சைட்ல சிந்து பாடு…” ஜெனி அலுத்துக்கொண்டே கிளம்பி இருந்தாலும் மறக்க முடியாத பயணமாக அது அமைந்ததில் கொள்ளை மகிழ்ச்சி இருவருக்கும்.

இவர்கள் பயணம் முடித்து வீடு திரும்பிய அன்று மருமகளின் தங்கை திருமணத்தில் பங்கேற்க கௌரியும் சதானந்தும் பிரான்ஸ் வந்து இறங்கி இருந்தார்கள்.

எத்தனையோ ஆண்டுகள் கழித்து வெறும் நிழலாய் நினைவில் நின்ற மண்ணை மிதித்த போது கெளரியின் கால்கள் நடுங்கியது நிஜம்.

அவருடைய பிறந்த வீட்டுச் சொந்தங்கள் எல்லாம் எங்கெங்கோ கலைந்திருக்க, நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. இருக்கும் உறவுகளின் தொடர்பும் எப்போதோ விட்டுப் போயிருந்தது.

தெற்கு பிராந்தியத்தில் இருந்த அவருடைய தாய் வழி பாட்டி வீட்டை மட்டும் எல்லோருமாகச் சென்று பார்த்து வந்தார்கள்.

இப்போது வீடு வேறு யார் கை வசமோ சென்றிருக்க, “இவங்க மிசஸ் கேதரின்” என்று கெளரியை அறிமுகம் செய்து ஜெனி விவரம் சொல்ல, “ஓ.. ஷுர்.. ப்ளீஸ் கம்…” தற்போதைய உரிமையாளர்கள் வீட்டினுள் அழைத்து உபசரித்தார்கள்.

அந்தப் பெரிய வீட்டை சுற்றி வந்த கௌரி, “சின்னதுல இங்க வந்தது, விளையாடினது எல்லாம் கனவு மாதிரி இருக்கு” என்றபடி கண்கலங்க, ஜெனி புரிதலுடன் அணைத்து அவரைத் தட்டிக் கொடுத்தாள்.

“எதுக்குக் கவலைப்படுறீங்க? உங்களுக்குன்னு உங்க அண்ணன் வீடு எப்பயும் இங்க இருக்கு.” ஜெனியின் தந்தை சொன்னதில் ஆறுதலாக உணர்ந்த கௌரி முறுவலுடன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

வீடு திரும்பியவர்கள் ஊர் சுற்றிப் பார்த்தபடியே ஆளுக்கொரு வேலையாக எடுத்துச் செய்ய, டேனி பயஸின் திருமண நாளும் வந்தது.

ஜெனி சித்தார்த் கல்யாணத்தில் எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் அமர்க்களங்கள் நிகழ்ந்ததோ, அதற்கு நேர் மாறாக இந்தத் திருமணம் அமைதியாக எளிய முறையில் நடந்தது.

நெருங்கிய நட்பு, உறவுகள் மட்டும் புடை சூழ, அடுத்தநாள் தேவாலயத்தில் எளிமையான திருமணம். அதைத் தொடர்ந்த சுவையான மதிய விருந்து.

அத்துடன் மாப்பிள்ளையின் பெற்றோர் உட்பட அனைத்து உறவினர்களும் அங்கிருந்தே கிளம்பி விட, பெண் மாப்பிள்ளை தனி காரில், இவர்கள் அனைவரும் இரண்டு கார்களில் என்று மூன்றே வாகனங்களில் வீடு திரும்பி விட்டார்கள்.

“நம்ம ஊரு மாதிரி ஒருநாள் கூத்துக்குக் காசை இறைச்சு வீண் பண்றது உலகத்துல வேற எங்கயும் நடக்காது போல..” சித்தார்த் சொல்ல,

“அப்படி ஒட்டு மொத்தமா சொல்லாத சித்து. எல்லோரும் ஒன்னா சேர்ந்து கூடி கும்மாளம் அடிக்கிறதுலயும் ஒரு அழகு, சந்தோசம் இருக்கு. எல்லாத்துலயும் ப்ளஸ் மைனஸ் உண்டு” ஜெனி அதையே வேறு மாதிரி பார்த்தாள்.

அடுத்த நாள் கௌரியும் சதானந்தும் இந்தியா கிளம்பி விட்டார்கள்,

திருமணம் முடிந்த நான்காம் நாள் புதுப் பெண்ணும் மாப்பிள்ளையுமே தங்கள் வேலைக்குச் செல்லத் துவங்கி விட்டார்கள். அதிகாலையில் அவசர அவசரமாகக் கிளம்பி இரண்டு கார்களைக் கிளப்பி அவர்கள் பறக்க…

“பாவம்யா இந்த பசங்க…” சித்தார்த் மேற்குலக வாழ்க்கையின் இன்னொரு கோணத்தை விளையாட்டாகக் கிண்டலடித்தான்.

“நான் தான் சொன்னேன்ல ப்ளஸ் மைனஸ் எல்லாத்துலயும் இருக்குன்னு. இந்தியன் சிஸ்டம் மாதிரி ஒரு பெஸ்ட் சப்போர்டிங் சிஸ்டம் உலகத்துல வேற எங்கயும் கிடையாது, தெரிஞ்சுக்க…” புகுந்த நாட்டின் பெருமையுடன் ஜெனி தோளை ஏற்றி இறக்க,

“ஓ.. அப்படி…!!!” அவள் இடுப்பில் கைகோர்த்தவன் போலி வியப்புடன் கனிந்த அவள் கன்னங்களை நிமிண்டினான்.

மிச்ச சொச்ச ஷாப்பிங்கையும் முடித்து நண்பர்களுக்குக் கொடுக்கவென வாசனைத் திரவியங்களையும், சாக்லேட்டுகளையும், இனிப்புகளையும் மூட்டை மூட்டையாகக் கட்டிக் கொண்டு அந்த வார இறுதியில் ஜெனியும் சித்தார்த்தும் ஊர் திரும்பினார்கள் திகட்டாத சந்தோசத்துடனும், இனிப்பான இனிய நினைவுகளுடனும்.