காதல் கஃபே – 13
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
13
பாரம்பரிய பிரெஞ்ச் கட்டிட வேலைப்பாடுகளுடன் ட்யூப்லக்ஸ் மாடலில் இருந்தது சித்தார்த்தின் வீடு. கீழே ஹால், திறந்தவெளி கிச்சன், டைனிங் உடன் ஒரு மாஸ்டர் படுக்கை அறை மட்டும் இருக்க, மாடியில் இருந்த கூடமும் அதே விஸ்தீரணத்தில் பரந்து விரிந்திருந்தது.
மாடி ஹாலிலும் கீழே உள்ளதைப் போல எல்சிடி டிவி யை சுவரில் நிறுத்தி வட்டவடிவ சோபாவை வளைவுகளுக்கு ஏற்ப பொருத்தி இருந்தார்கள். ஓரமாய் ஒரு கணினி மேசை நாற்காலி சகிதம் அமர்ந்திருந்தது. அதற்கு எதிர்புறம் பால்கனி ஓரம் சில தொட்டிச் செடிகள் தரையில்.
வந்த வேலையை மறந்து தன்னைச் சுற்றி வேடிக்கைப் பார்த்து நின்ற ஜெனி, ஹாலில் இருந்து நான்கைந்து கதவுகள் சென்றதில் வெளிச்சம் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.
திறந்திருந்த கதவை லேசாகத் தள்ளி அவள் எட்டிப் பார்க்க, சித்தார்த் இரு கைகளைக் குறுக்காக மேலுயர்த்தி டி-சர்ட் அணிந்து கொண்டிருந்தான்.
இவள் வந்த அரவத்தில் திரும்பிப் பார்த்தவன், ”வா, ஏன் அங்கேயே நிக்குற?” பெர்ஃப்யுமை இருபுறமும் பீய்ச்சி கொண்டே அழைக்க…
‘அடப்பாவி, செட்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே.. என்னடா பண்ணப் போற?’
‘அடச்சீ பக்கி. உன் கற்பனைக் குதிரைக்கு ஒரு பிரேக்கை போட்டுட்டு உள்ள போ…’
அவள் உள்ளமே மாறி மாறி நையாண்டி செய்ய, ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தாள்.
“உக்காரு…” வாசமாக இவள் அருகே வந்தவன் சோஃபாவில் கலைந்து கிடந்த ஏதேதோ துணிகளை இன்னொரு பக்கம் தூக்கி எறிந்து விட்டுக் கை காட்டினான்.
ஜெனி அமர்ந்தாள். இரவு கவிழ்ந்த நேரத்தில் அவன் வீட்டில், அவன் அறையில் இருவரும் தனித்திருக்கும் இந்தச் சூழலை வெகு நூதனமாக உணர்ந்தது அவள் இதயம்.
நிமிர்ந்து அவனைப் பார்க்க, இவளுக்குக் குறுக்காக நின்றபடி ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தான். இன்று ஏனோ நெகிழியாய் நெஞ்சம் நெகிழ்ந்திருந்ததில் அபூர்வமாய் அவளது விழிகள் அவனைச் சுற்றியே வட்டமிட்டன.
மாலை அவன் அணிந்திருந்த டெனிம் ஜீன்ஸ், டிசைனர் அரைக்கை சட்டையை விட இப்போது போட்டிருக்கும் ஸ்லீவ்லெஸ் பனியனும், பெர்முடாவும் கவர்ச்சியாக இருந்தன.
அவனது நடையை, உடையை, இவள் இருக்கிறாள் என்று எந்த வெட்டி சீனும் போடாமல் அவன் இயல்பாக நடந்து கொள்வதை, திரும்பிப் பார்த்துத் தன்னைக் கண்டு கண்சிமிட்டி புன்னகைப்பதை…
அவளது மெமரி கார்டில் நிறைய ஸ்டில்கள் பதிவாகி, நொடிக்குள் அவனுக்குரிய பிரத்யேக போல்டரில் அவை சேகரமாய்ச் சேர்ந்தும் இருந்தன.
சித்தார்த்தை ஒன்றும் புதிதாய் அறிந்தவள் இல்லை அவள். இருவருக்குள்ளும் நீண்ட நாள் நட்பு உண்டு. ஆழ்ந்த நட்பின் புரிதலும் உண்டு.
நட்பு என்ற கோட்டுக்குள் அடங்காமல் அவனும், காதல் என்ற உறவுக்குள் உடன்படாமல் இவளும் டக் ஆஃப் வார் நடத்துவதில் பரஸ்பர அன்பை இரண்டுக்கும் நடுவில் நிறுத்தி இந்த வானத்திற்குக் கீழ் உள்ள எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
இதே கேஷுவல் தோற்றத்தில் சித்தார்த்தை எத்தனையோ முறை சந்தித்து இருக்கிறாள். ஒவ்வொரு ஞாயிறு காலையும் இவளைப் பார்க்கும் சந்தர்ப்பத்திற்காகவே கஃபேவுக்கு உணவருந்த வருபவன் இதை விடவும் புத்துணர்ச்சியாக, கண்களைக் கட்டிப் போடுகிற மாதிரி இருந்துள்ளான்.
அப்போதெல்லாம் தோன்றாத சலனமும், படபடப்பும் இப்போது அவளை ஆட்கொள்ள, அவள் மிடறு விழுங்கிக் கொண்டாள்.
ஆனால், தன் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டால் அது ஜெனி அல்லவே?
கிண்டலாகச் சித்தார்த்தை மேலும் கீழுமாகப் பார்த்தவள், “கீழ உங்கம்மா தனியா அத்தனை வேலை செஞ்சுட்டு இருக்காங்க. உங்கப்பா போனை வச்சிட்டே ஓபி அடிக்குறாருன்னா நீ ஜாலியா ஜலக்கிரீடை பண்ணிட்டு வர… ஹம்???” விளையாட்டாய் மிரட்ட,
“அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க. நான் போய் ஏதாவது செஞ்சா, திரும்ப அவங்க ஒரு தடவை செய்வாங்க.. இன் எ வே, இரண்டு வேலை செய்ய வைக்காம அவங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன், தெரிஞ்சுக்க…?” துண்டை அலட்சியமாக விசிறி படுக்கையில் போட்டவன் தோரணையாகத் தோளை ஏற்றி இறக்கினான்.
“ஓ.. அப்படி…!!! இப்படிச் சொல்லியே எல்லா ஆம்பிளைங்களும் எஸ்கேப் ஆகிடுங்க… உ..” கிண்டல் அடித்துக் கொண்டிருந்தவள் அவன் அடுத்து செய்ததைக் கண்டு வார்த்தைகள் மறந்தாள்.
“எல்லாம் ஒரு டேக்டிக்ஸ் தான்…” குறும்பாய் கண்ணடித்து அவள் அருகே கோணலாக அமர்ந்தவன் அவள் தோளில் சுவாதீனமாகத் தலை சாய்த்துக் கால்களை நீள நீட்டிக்கொண்டே ஒலி எழுப்பிய தன் மொபைலை எடுத்துப் பார்க்க….
புவியீர்ப்பு விசைக்கு நேர் எதிராக ரத்தம் அவள் கால்களில் இருந்து தலைக்கு ஏறியது. எப்போதும் வெகு எச்சரிக்கையாக இருப்பவள், அவன் எவ்வளவுதான் நெருங்கினாலும் துள்ளி விலகுபவள் இன்று நகர முடியாமல், ஒருவகையில் விலக மனமில்லாமல் அமர்ந்திருந்தாள்.
‘இப்படியே இந்தக் கணம் உறைந்து நின்று விடக் கூடாதா?’ உள்ளே ஏதோ பிசைந்தது. படபடத்தது.
‘ஆசையை அளவோட நிறுத்திக்க… முதல்ல கிளம்பு இங்க இருந்து’ உள்ளே இருந்த வந்த கட்டளையைச் செயல்படுத்த முடியாமல் கால்கள் நடுங்கின.
“எதுக்குக் கூப்பிட்ட? நேரமாகுது… நான் கிளம்பணும்” எழும்பவே எழும்பாத குரலைத் திடப்படுத்திக் கொண்டு சாதாரணம் போலக் கேட்டாள்.
ஏதோ மும்முரமாக டைப்பிக் கொண்டிருந்தவன், “இரு.. உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு…” என்றான் ஸ்க்ரீனில் இருந்த தன் பார்வையை அகற்றிக் கொள்ளாமல்.
“என்ன, ரிடர்ன் கிப்ட்டா… ஏதோ கிப்ட் கொடுக்குறன்னு சொன்னாங்கன்னு நான் ஓடி வந்தா நீ சாஞ்சுட்டு தூங்குற…? சீக்கிரம்.. சீக்கிரம் கொடு.. வந்ததுக்கு நாலு நாளைக்குச் சேர்த்து சாப்பிட்டாச்சு. கிப்ட்டையும் வாங்கிட்டா வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுரும்.”
அவளது நக்கலில், “வாய், வாய்… யப்பா முடியல” அவள் தோளில் இருந்தவாறு அப்படியே திரும்பி தலையில் கொட்டினான்.
“அதுக்குள்ள உன்கிட்ட சொல்லியாச்சா ?? எங்கம்மா சரியான ஓட்டை வாய்…” அலுத்துக் கொண்டவன், “இரு.. வரேன்…” எழுந்து சென்று ட்ரெஸ்ஸிங் மேசையின் ட்ராயரைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்.
“சரி, அப்ப வரட்டா?” அவள் பையில் வைத்தபடி வேகமாகக் கிளம்பப் பார்க்க,
“ஏ தத்தி, என்னன்னு பிரிச்சு பாரு..”
“பிரிக்கணும்ன்ற…?? இரு… ஆட்டி பார்க்குறேன்… என்ன எவர்சில்வர் டிபன் பாக்ஸா…?”
“பிரிச்சு பாருடி எருமை…” அவன் வெறியாகி கடிக்கவும் முறைத்துக் கொண்டே மேலே சுற்றியிருந்த தங்க நட்சத்திரங்கள் மின்னிய கண்ணாடித் தாளை பிரித்தாள்.
உள்ளிருந்த அட்டைப் பெட்டியைத் திறந்து, மேலே இருந்த கிளேஸ் தாளை விலக்கிப் பார்த்தவள் வியப்பாய் நிமிர்ந்து இவனைப் பார்க்க, சித்தார்த் இமைகளை மூடித் திறந்தான்.
“நார்மண்டியா?? நுயுஷாடல்??”
அவளது கண்கள் சாசர் போல விரிவதைப் பார்த்துக் கொண்டே “ம்ம்..” என்றான்.
“எங்க இருந்து வாங்கின? அங்க உள்ளூர் மார்க்கெட்லயே ‘Coeur De Neufchatel’ கிடைக்கிறது கஷ்டமாச்சே…”
“அங்க பேயக்ஸ்ல இருந்து ஒரு டீலர் வந்திருந்தாரு. அவர்கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொன்னேன்…”
இதயவடிவில் இருந்த சீஸ் கட்டி மேலே பவுடர் பூசிக் கொண்டது போல மினுமினுக்க, ஜெனி விரலால் மேற்பரப்பை மெல்ல வருடினாள். அதன் அருமை தெரியும் என்பதால் கையில் இருந்த பொருள் அவளை வெகுவாக நெகிழ்த்தியிருந்தது.
லேசான புளிப்பும், உவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட இந்தப் பாலாடைக் கட்டி பிரான்ஸில் உள்ள வடக்கு நார்மண்டி பிராந்தியத்தில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவது, அங்குள்ள புல்வெளிகளில் மேயும் பசுக்களின் பாலில் செய்யப்படும் ஆதென்டிக் வகை என்பது மட்டுமல்ல அதன் மகத்துவம்.
பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேய பிரெஞ்சு படைகளுக்கு இடையே நிகழ்ந்த போர் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல. கிட்டத்தட்ட நூற்றி பதினாறு வருடங்கள் நீடித்த நீண்ட கால யுத்தம் அது.
‘ஹண்ட்ரட் இயர்ஸ் ஆப் வார்’ என்று சொல்லப்படும் அந்தப் போரில் அந்நியர்கள் உள்ளே நுழையும்போது நிகழும் சண்டை, கொலை, கொள்ளை, ஆக்ரமிப்புகள் மட்டும் நிகழவில்லை.
காதல் என்ற பொதுவுடைமை போர்க்களத்திலும் சமத்துவம் பெற, ஆங்கிலேய வீரர்கள் மேல் காதல் கொண்ட உள்ளூர் பெண்கள் இந்த இதயவடிவ நுயுஷாடல் (Neufchatel) பாலாடைக் கட்டியை தந்து தங்கள் காதலை உணர்த்துவார்களாம்…
அதைச் சுவைத்து மகிழும் காதலர்கள் தங்கள் தேவதைப் பெண்களின் சிறகு தங்களைத் தழுவும் பிரமையில் போர்க்களத்தில் நின்றிருந்தாலும் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்வார்கள் என்பது இந்த இதயவடிவத்தின் பின்னுள்ள ஆதி கதை.
அத்தகைய பிரத்யேக பின்னணி பெற்ற வழக்கம் காலத்திற்கேற்ப உருமாறி இன்றைய நாளில் காதலர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் வேலன்டைன் சின்னமாக மருவி இருக்க…
‘இதை ஏன் எனக்குக் கொடுத்த?’ என்றெல்லாம் அபத்தமாய்க் கேட்கவில்லை ஜெனி. விடைத் தெரிந்த கேள்விகளுக்கு வினாக்கள் அவசியமில்லாததால் கையில் இருந்த இதயத்தையே கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இதைக் கவனிச்சியா?” அவன் நடுவில் குழிந்திருந்த மேல்பூச்சை நீக்கிக் காட்ட, அங்கே ஒற்றைக் கல் வைத்த மோதிரம் கண்சிமிட்டியது.
“சித்தார்த்…” ஜெனி வார்த்தைகளுக்குத் தடுமாறினாள்.
“சைஸ் சரியா இருக்கும்னு தான் நினைக்கிறேன்” அவன் அவளது வலது கரத்தை தன் கையில் ஏந்தி மோதிர விரலை வருட…
“சித்து.. தயவு செஞ்சு என் பீலிங்ஸோட விளையாடாதே. ஐ’யம் ரியல்லி ப்ரஜைல் டுடே”
அதற்குமேல் முடியவில்லை அவளால். மனதுக்கும் புத்திக்கும் நடக்கும் போராட்டம் அனுதினமும் உயிரை உருக்கிக் கொண்டிருக்க, இப்போதோ உள் மனதில் இருக்கும் ஆசை விஸ்வரூபம் எடுத்துப் பேயாட்டம் போட்டது.
முரசு கொட்டியது போல உணர்வுகள் கூத்தாட உள்ளுக்குள் அலைகள் ஆர்ப்பரித்தன. அவன் மேல் இருக்கும் பிரியமும் அக்கறையும் அதைத் தடுக்க, ஆற்றாமையில் அழுகை வரும் போலிருந்தது.
நடுங்கும் உதடுகளைப் பற்களால் கடித்து மென்றாள்.
“பைத்தியமாடா உனக்கு? என்னைக் கல்யாணம் பண்ணி அவஸ்தைப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா…? ரூம் முழுக்கக் கண்ணாடியா மாட்டி வச்சிருக்கியே… உன் மூஞ்சை அதுல பார்ப்பியா, மாட்டியா?”
“போ, போய்ப் பாரு முதல்ல… மாடல் மாதிரி இருக்க… எத்தனை பொண்ணுங்க உன் பின்னாடி க்யூல நிக்குறாங்கன்னு தெரியுமா…? அதெல்லாம் புரியாம லூஸு மாதிரி?”
தன் கையை அவன் பிடியில் இருந்து வெடுக்கென்று பறித்துக் கொண்டாள்.
“எனக்கென்னமோ இந்தப் பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு ஜெனி… என்ன பண்ணட்டும் சொல்லு” அவள் கன்னத்தின் வளைவில் விரல் ஓட்டியபடி செல்லம் கொஞ்சியவன், “ஆனா இந்தப் பொண்ணுக்கு தான் என்னைப் பிடிக்கவே மாட்டேங்குது” குறையாய் சலிக்க…
“பிடிக்கும் சித்து.. உன்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. உன்னை மட்டும் தான் பிடிக்கும்…”
அந்தக் கணம் அவள் பிடிவாதமாய்க் கட்டி வைத்திருந்த உறுதி அனைத்தும் கட்டவிழ்ந்து கொள்ள, தன்னையும் மீறி வேகமாய்ச் சொன்னவளை அவன் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டான்.
“அது எனக்கும் தெரியும்டி. அப்புறம் என்ன பிரச்னை உனக்கு? இன்னும் எத்தனை வருஷம்டா இப்படியே போகணும்? பக்கத்துல உன்னை வச்சுக்கிட்டு வெறும் பிரெண்ட்னு என்னால பொய் சொல்லிட்டு திரிய முடியாது ஜெனி, என் பீலிங்சையும் கொஞ்சம் புரிஞ்சுக்க…”
“நீ தான் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்குற… உன்னை ரொம்பப் பிடிக்கும்கிறதால தான் வேணாம் வேணாம்ன்னு அடிச்சுக்கிறேன்…. இந்த லவ் கல்யாணத்துக்கப்புறமும் அப்படியே இருக்குமா சித்து?” அவன் கைப்படியில் இருந்து வெளியே வந்தவளின் முகம் கொந்தளிக்கும் உணர்வுகளின் வேகத்தில் சிவந்தது.
“இன்னிக்கு இனிக்கிறது நாளைக்கே கசக்கும். உலக அழகன் அழகியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ஒருகட்டத்துக்கு மேல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து சலிச்சு போயிடுவாங்கன்னு சொல்றதில்லையா. அந்தப் பந்தத்தை இறுக்கிப் பிடிக்க மூணாவதா அங்க ஒரு குழந்தை வேணும். இல்லேன்னா சீக்கிரமே அலுத்துப் போயிடும்.”
“ஒரு வருஷம் தாண்டி பிள்ளை இல்லேன்னா நம்ம சொசைட்டி சும்மா இருக்காது. கேள்வியா கேட்கும். இந்த டாக்டர்கிட்ட போ, அந்தக் கோவிலுக்கு போன்னு துரத்தி அடிக்கும். ஒரு ஸ்டேஜ்ல இவளால தான் நமக்கு இந்த நிலைமைன்னு உனக்கே ஆத்திரம் வரும், நான் அதை நினைச்சு தான் பயப்படுறேன்”
குழந்தை என்ற புள்ளியை, தாய்மையின் வெற்றிடத்தை இவளால் கடக்கவே முடியாதோ, அவனுக்குக் கவலையாக இருந்தது.
எனினும், அவளது படபடப்பிற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் அமைதியாக அவளைப் பார்த்த சித்தார்த் ஒருவகையில் மிக சென்சிடிவான விஷயத்தைக் கையாளுவதற்கு உரிய பொறுமையுடன் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருந்தான்.
“நீ சொல்றதை நான் அப்படியே ஒத்துக்கிறேன். குழந்தைங்க ஒரு வீட்டோட பாண்டிங் எலிமென்ட் தான். கம்ளீட்லி அக்ரீட். அப்புறம் ஏன் குழந்தை இருக்கிறவங்க கூட விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுறாங்க? நீ சொல்ற லாஜிக் படி அவங்களுக்குள்ள உறவை முறிச்சுக்குற அளவு கருத்து வேறுபாடு வரவே கூடாதே….”
“ஏன்னா இது மனசு சம்பந்தப்பட்டது ஜெனி. எத்தனை பேர் சுத்தி நின்னாலும் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து போகலைனா எத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டாலும் ஒன்னுமே பண்ண முடியாது.”
“கல்யாணம் சக்சஸ் ஆக இரண்டு பேர் மனசுலயும் இருக்கிற காதல் என்னிக்கும் வத்தாம இருக்கணும். உன் மேல எனக்கிருக்கிற லவ் இந்த ஜென்மத்துல தீர்ந்து போகாது. உன்னை எப்படி என் பின்னாடி அலைய வைக்கணும்ன்னு எனக்குத் தெரியும்.”
அவன் கண்ணடித்துச் சொன்ன விதத்தில் மனதின் இறுக்கம் தளர்ந்து சிரித்த ஜெனி. “டேய்…” அவன் உச்சியில் செல்லமாகக் கொட்டினாள்.
“அப்புறம் இந்த சொசைட்டி… லூசே, நீ ஏன் நாளைக்குச் சுத்தி இருக்கிறவங்க என்ன பேசுவாங்க, என்ன நினைப்பாங்கன்னு ரொம்ப யோசிச்சு குழப்பிக்கிற? நாம என்ன அடுத்தவங்களுக்காகவா வாழறோம்?”
“வெளில யாரு தன்னைத்தானே பரிதாபமா காட்டிக்கிறாங்களோ, அவங்களுக்குத் தான் அட்வைஸ் பண்ண ஒரு குரூப் அலையும். ‘நாங்க இப்படித்தான், இவ்வளவு தான்’னு கான்பிடன்டா நின்னுப் பாரு. அடுத்தவன் எவனும் கேட்டை தாண்டி உள்ளே வர மாட்டான், அனாவசியமா மூக்கை நுழைக்கவும் மாட்டான்.”
“அதை அதை அந்தந்த நேரத்துக்கு ஹாண்டில் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும் ஜெனி. இவ்வளவு யோசிச்சு, திட்டம் போட்டு, குழம்பி…. எதுக்கு? ஆப்டர் ஆல் லைப் இஸ் எ கேம்ப்ளிங்… அது போக்குல போகணுமே தவிர இவ்ளோ ஆராய்ச்சியும் பயமும் நெகடிவ் தாட்ஸ்-ம் தேவையா?”
“சைக்கலாஜி என்ன சொல்லுது தெரியுமா, குழந்தைங்கிறது ஒரு வகையில நம்ம ஈகோவை நிரப்பி ‘என்கிட்டயும் விளையாட ஒரு பொருள் இருக்கு பாரு’ன்னு உலகத்துக்குப் பெருமையா சொல்ல ஒரு கருவி… இட்ஸ் எ பீல் ஆப் பொசஷன்.. அதுல தப்பொன்னும் இல்ல. நல்ல விஷயம் தான். ஆனா, அது மட்டுமே எல்லாம் கிடையாது.”
தன் தலை கோதி அவன் மென்குரலில் பேச பேச ஜெனி தன் விரல்களைக் கோர்த்தாள். விரித்தாள். நிமிர்ந்து அவனையே ஊன்றிப் பார்த்தாள். தலைகுனிந்து எதையோ தீவிரமாகச் சிந்திந்தாள். மீண்டும் விரல்களைக் கோர்த்தாள். விரித்தாள்.
மதில் போலப் பூனையாக நின்று குழம்பித் தவித்தது மனசு.
“நம்ம வாழ்க்கையோட கட்டக்கடைசில மிஞ்சி இருக்கப் போறது நல்ல நல்ல நினைவுகள் மட்டும் தான் ஜெனி. ஜஸ்ட் குட் மெமரிஸ். அதுக்கும் மேல ஒன்னுமே இல்ல. பணம், பதவியோ, படிப்பு செல்வாக்கோ எதுவும் கூட வராது. உறவு, நட்பு எல்லாமே ஒவ்வொரு ஸ்டேஜ் வரைக்கும் தான். அதுக்கப்புறம் அவங்கவங்க லைப்.”
“இன் எ வே இன்னும் உடைச்சு சொல்லணும்னா நம்ம அம்மா அப்பா வாழ்க்கைல நாம கெஸ்ட். நம்ம வாழ்க்கைல அடுத்த ஜெனரேஷன் கெஸ்ட்டா வந்து, வளர்ந்து படிச்சு முடிச்சு அவங்களோட வாழ்க்கையைத் தேடி ஓடிடுவாங்க…”
“என்ன தான் பந்தம் பாசம்ன்னு பக்கம் பக்கமா பேசினாலும் இது தான் எதார்த்தம்… அதனால, இந்தக் குறுகின எண்ணத்துல இருந்து முதல்ல வெளில வா.”
“அதுக்காக ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ, உன்னைத் தங்கத் தட்டுல வச்சு தாங்குவேன், வெள்ளித்தட்டுல நடக்க விடுவேன்’னு எல்லாம் நான் டயலாக் அடிக்க மாட்டேன்.”
“இன்னொரு பக்கம் எக்ஸ்ட்ரீமா போய், ‘உன்மேல எனக்குப் பயங்கரக் காதல், அதனால நான் ஸ்டெரைல் பண்ணிக்கிறேன், வாசக்டமி செஞ்சு என் லவ் எவ்ளோ ஸ்ட்ராங்ன்னு நிரூபிக்கிறேன்’னும் என்னால நாடகத்தனமா பேச முடியாது. ஐ வான்ட் டூ பி பிராக்டிகல்…”
“நான் எப்படி இருக்கிறனோ இப்படியே தான் இருப்பேன். நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு. வி வில் டூ கெதர் லீட் எ ஹேப்பி லைப்….”
அந்த நொடி இதயம் விம்ம, தன் தோள் உரசி அமர்ந்திருந்தவனின் இடுப்பை இறுக கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள் ஜெனி. அவள் நெஞ்சு பொங்கித் ததும்பியது.
‘போதும்.. இது போதும், இந்தப் புரிதலுக்கு மேல் வேறு என்ன வேண்டும்…?’
“ஏய்…. எதுக்குடி இப்ப அழற? நான் அவ்வளவு மோசமாவா பிளேடு போட்டுட்டேன்???” சித்தார்த் அவளை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு சிரிக்க…
அவன் கிண்டலில் சிரித்தாலும் ஜெனியின் கண்களில் மாலை மாலையாக நீர் ஊற்றியது. எத்தனையோ வருடங்கள் ஆயிற்று இப்படி அடுத்தவர் முன்னால் அவள் அழுது.
பதினெட்டு பத்தொன்பது வயதில் எதிர்பாரா அதிர்ச்சிகளில் தாக்கப்பட்டுத் தொட்டதற்கெல்லாம் அழுது தீர்த்தவள், ஒரு கட்டத்திற்குப் பின் பெற்ற தாயிடம் கூடத் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டதில்லை.
எத்தனை துயரம் உள்ளுக்குள் வாட்டினாலும் ‘கூல் அண்ட் கம்போஸ்ட்’ ஆக வெளி உலகிற்கு முகம் கொடுப்பவள் இப்போது தேம்பி தேம்பி அழுதாள். இத்தனை நாட்களின் ஏக்கமும், விரக்தியும் அந்தக் கண்ணீரில் கரைந்து போகிற மாதிரி விசும்பல் வெடித்தது.
“நாளைக்கு இதை ஒரு குறையா நினைச்சு பேச மாட்டில்ல…? ப்ராமிஸ்??” வார்த்தைகள் விம்மல்களுக்கு இடையே தெறித்து விழ, “ஆஆ…” அவனிடம் நறுக்கென்று ஒரு கொட்டு வாங்கினாள்.
“நீ ஏன்டி உன்னைப் பத்தி இவ்வளவு அண்டர்ப்ளே பண்ணிக்குற ? முதல்ல இந்த மாதிரி பேசறதை, நினைக்கிறதை நிறுத்து. மனசுல அழுக்கு வச்சிருக்கிறவன் தான் தன்னைப் பத்தி தாழ்வா நினைக்கணும். நம்ம உடம்புல நமக்கே தெரியாம இருக்கிற இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயம் எல்லாம் ஒரு விஷயமே இல்லடா…”
அழுத்தமாய்ச் சொன்ன சித்தார்த் அவளை நிமிர்த்தித் தன் முகம் பார்க்க வைத்தான்.
“நீ ஒரு தேவதை ஜெனி. ஹே.. முறைக்காதே… நிஜமா சொல்றேன்… வெளி அழகை மட்டும் வச்சு சொல்லல… உள் மனசு அழகையும் சேர்த்து தான் சொல்றேன்.” சிவப்பு மிளகாயாய்க் கனிந்திருந்த அவள் மூக்கை நிமிண்டி நெற்றியில் முத்தமிட்டான்.
தன் முகத்தையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் விழிகளில் அழுந்த இதழ் பதித்தவன், “லவ் யூ டா” சன்னமாய் முணுமுணுத்தபடி கன்னத்துக் கண்ணீர் தடயங்களை இருபெருவிரல் கொண்டு துடைத்து விட்டான்.
“இப்ப போட்டு விடட்டுமா?” அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்து தன் வலது கையைப் புன்னகையுடன் அவன் முன்னால் விரித்தாள் ஜெனி. அழுததில் சிவந்திருந்த அவள் முகம் இப்போது மகிழ்ச்சியில், வெட்கத்தில் மேலும் கனிந்திருந்தது.
மலர்ந்த சிரிப்புடன் மோதிரத்தை போட்டு விட்டவன், சிமிட்டி மின்னிய ஒற்றைக்கல்லில் இதழ் பதித்து அவள் விரலுக்கு முத்தமிட்டான்.
“எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்…?”
“இப்பயே…” அவள் சிணுங்கலாய் சொல்ல, “பாருடா…” சித்தார்த் மந்தகாசமாய்ச் சிரித்தான்.
“இப்ப மணி பத்தரை ஆகுது. முஹூர்த்த நேரமான்னு பார்த்துடலாமா?” அவன் உன்மத்த உணர்வுடன் அவள் கன்னத்தில் இதழ் பதிக்க,
“மை காட்… பத்தரையா…? நான் மேல வந்து இவ்ளோ நேரம் ஆச்சு… நீ நகரு… நான் கீழ போறேன். உங்கம்மா என்ன நினைப்பாங்க என்னைப் பத்தி…?” அதற்கு நேர்மாறாகப் பதற்றம் தொற்றியது அவளை.
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க… அவங்களுக்கும் எல்லாம் தெரியும்… இன்னிக்கு வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்பும்போது உங்க மருமகளா தான் கிளம்புவான்னு பிங்கி ப்ராமிஸ் பண்ணியிருந்தேன் எங்கம்மா கிட்ட”
“ஏய்.. போர் ட்வென்டி… பண்றதெல்லாம் திருட்டு வேலை… இதுல பிங்கி ப்ராமிஸ் வேறயா உனக்கு?” வெட்கமாய்ச் சிரித்த ஜெனி கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
இவன் வேண்டுமானால் காதலின் அடர்த்தியில் இந்தக் குறையைக் குறையாக எண்ணாமல் இருக்கலாம், போன தலைமுறையைச் சேர்ந்த வீட்டுப் பெரியவர்களும் எந்த எதிர்ப்பும் இன்றிப் பரந்த மனதுடன் தன்னை ஏற்றுக் கொள்வது என்ன சாதாரணச் செயலா…?
கெளரியையும் சதானந்தையும் எண்ணி ரொம்பவே நெகிழ்வாய் உணர்ந்தாள்.
“சித்து, உன்கிட்ட அப்பவே கேட்கணும்ன்னு நினைச்சேன். சாயங்காலம் டாக்டர் ஷர்மா குடும்பமா வந்திருந்தாங்களே… உங்களுக்கு ரொம்ப க்ளோஸா அவங்க?”
“அவங்க எங்க பேமிலி ப்ரெண்ட் ஜெனி. அவங்க ஹஸ்பண்ட் ராகவ்ஷர்மா அப்பாவோட காலேஜ்ல தான் பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடியா இருக்காரு… அப்பா, அவரு எல்லாரும் ஒரே செட், அதனால சின்னதுல இருந்தே பழக்கம்”
“ஓ…” குடும்பமாய்ப் பழகும் மருத்துவரிடம் தன் உடல்நிலை பற்றி இவன் கேட்டு அறிந்து கொண்டதற்கா அன்று தான் அவரிடம் அப்படிக் கத்தினோம்?
தன் அவசர புத்தியை நொந்து கொண்டவள், “நான் அன்னிக்கு நடந்துகிட்டதை வச்சு தப்பா நினைச்சுருப்பாங்க இல்ல?” பாவமாக அவனிடமே திரும்பிக் கேட்டாள்.
“தப்பால்லாம் ஒன்னும் நினைக்கல… நீ ஒரு லூஸுன்னு எனக்கு மட்டும் இல்ல, அவங்களுக்கும் தெரியும் போல… இன்னிக்கு நல்லா தானே பேசுனாங்க?” அவன் அப்போதே அவரை நேரே போய்ப் பார்த்து ‘ஸாரி’ சொல்லியிருந்தான்.
“ம்ம்.. அவங்க நல்லாதான் பேசுனாங்க… எனக்குத்தான் கில்டியா இருக்கு…”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… ப்ரீயா விடு.. ஏய்… உன்கிட்ட இன்னொரு ரகசியம் சொல்லட்டா?” வில்லங்கமான பார்வையுடன் அவன் நெருங்க, அதைக் கவனிக்காத ஜெனி, ‘ஹம்.. சொல்லு, சொல்லு…” ஆர்வமாய்க் காதை நீட்டினாள்.
“அவங்க கிட்ட பொதுவா உன் ஹெல்த் பத்தி மட்டும் கேட்கல… முக்கியமா இன்னொரு மேட்டர் பத்தியும் கேட்டேன்…” அவன் குறும்பாகக் கண்சிமிட்டி காதோரம் முணுமுணுத்ததில் அவள் முகம் சிவந்தது.
“குரங்கே…. இதெல்லாம் விளக்கமா கேட்டியா நீ?”
“பின்ன கல்யாணம் பண்ணியும் சந்நியாசியா கமண்டலம் எடுத்துட்டுக் காட்டுக்கா போக முடியும்? குடும்பம் நடத்தணும் மேடம்… குடும்பம்…. நாளப்பின்ன எல்லாம் கரெக்டா நடக்கணும்ல”
அவன் விஷமமாய்ப் பேசத் துவங்கியதில் “போதும் நிறுத்துடா இடியட், ரொம்ப கிரீனா பேசுற” சிவக்கும் காது மடல்களை இருகை கொண்டு மூடியபடி அங்கிருந்து அவள் எழுந்து ஓட, கதவைத் தாண்டும் கடைசி நொடியில் இழுபட்டு அவன் கைகளில் சிக்கினாள்.
“என்னன்னு முழுசா கேட்காம எங்க ஓடுற?” அவள் முகம் பற்றி செர்ரி பழக் கன்னங்களில் முத்தமிட்டவன், ஒற்றைக் காலால் கதவை உதைத்துச் சாத்தினான்.
“அடப்பாவி… சினிமா வில்லன் மாதிரி என்னடா வேலை பண்ற?”
“இனிமே நோ ஹீரோ வேலை. வில்லன் தான் இப்போதைக்கு ட்ரென்ட்…” ஸ்ட்ராபெரியாய் மினுமினுத்த இதழ்களில் அழுந்த இதழ் பதித்து அவன் சிரிக்க, ஜெனியின் கைகள் உயர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டன.
“ஐ லவ் யூ சித்து…”
“ஐ லவ் யூ மோர் தேன் யூ டார்லிங்…”
அவன் அணைப்பு இறுகியதில் அவளது உணர்வுகள் உருகின. அதே நேரம் பெண்ணுக்குரிய மணியும் உள்ளே ஓங்கி அடித்தது.
“நகரு… உதை வாங்காம கீழ வா… ஏய்.. பிசாசே…” உடும்பாய் வளைத்திருந்தவனின் புஜத்தில் இரு கைகளாலும் செல்லமாய்க் குத்தி விலகினாள்.
கைப்பையை எடுத்துக் கொண்டு முக்கியமாக நுயுஷாடல் இதயத்தைப் பொக்கிஷமாக அதன் உள்ளே வைத்து அறையில் இருந்து வெளியேறி அவனைத் தாண்டி வேகமாக இரண்டு அடி எடுத்து வைத்தவள், அவன் தன்னுடன் வராமல் அறைக் கதவிலேயே கைகட்டி சாய்ந்து நிற்பதைப் பார்த்துச் சன்னமாய்ச் சிணுங்கினாள்.
“தனியா இறங்கிப் போக என்னமோ வெட்கமா இருக்குடா.. நீயும் வா….” அவனையும் சேர்த்து இழுக்க…
“அப்படி வா வழிக்கு…” அவளைத் திமிற திமிற ஒருமுறை அணைத்து அவள் உச்சியில் முகவாய் பதித்த சித்தார்த் அப்படியே நின்றான்.
இவளுடைய மனமாற்றம் நிஜம் தான் என்று நம்புவதற்கு அவனுக்கு அந்த அணைப்பு மிகத் தேவையாக இருந்தது. எத்தனை நாட்களாய் இருந்த தவிப்பு?
அவன் உணர்வு புரிந்தமாதிரி அவனுடன் உடன்பட்டு நின்ற ஜெனிக்கும் அதே நிலை தான்.
சில நொடித்துளிகள் கரைய, “சரி…. வா போகலாம்…” நிமிர்ந்தவன் நிறைவாய்ப் புன்னகைத்து அழைக்க, நீட்டிய அவன் கையில் தன் விரல்களை இதமாய்க் கோர்த்த ஜெனி அவனுடன் சேர்ந்து நடந்தாள்.
இவர்கள் படிகளில் இறங்கி கடைசிப்படியில் கால் வைக்க, அகமும் புறமும் ஜொலிக்க இறங்கி வந்தவர்களின் நாணச்சிரிப்பில் இருந்தே புரிந்து கொண்டார்கள் கௌரியும் சதானந்த்தும்.
சந்தோசமாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், “கங்கிராட்ஸ்டாம்மா…” பூரிப்புடன் கைகள் விரித்து எழுந்து நின்றார்கள்.