காதல் கஃபே – 12

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

12

நடுவே தீ நிதானமாக எரிந்து கொண்டிருந்தது .

அந்த அதிகாலை வேளையில் காற்றின் ஈரம் உடலை குறுக வைத்தாலும் தொலைவில் எரிந்த நெருப்பின் சூட்டை சூட்சமமாய் உடல் உணர்ந்ததோ, இல்லை அது மனதின் மாயாஜாலமோ, இதமான ஒரு கதகதப்பை சருமம் உணர, சுற்றியிருந்த கம்பளி ஷாலை இளக்கி விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள் ஜெனி.

  சுற்றிலும் உலகெங்கும் இருந்து இந்த நிகழ்வுக்காக வந்த வெளிநாட்டினர், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள், உள்ளூர் மக்கள், ஆரோவில்லின் உறுப்பினர்கள் எனக் கூட்டம் அந்த பெரிய மாத்ரி மந்திரை நிறைத்திருக்க…

காணும் இடங்கள் எல்லாம் பூ அலங்காரங்கள், அழகிய கோலங்கள் என்று ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள் விழா கோலாகலமாக அங்கே துவங்கி இருந்தது.

இன்று ஆகஸ்ட் பதினைந்து, சர்வதேச மனிதநேய நாளாக அனுசரிக்கப்படும் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்ததினம் இந்திய சுதந்திர தினத்துடன் இணைந்து வருவதால் புதுச்சேரி எங்கும் இன்று இரட்டைத் திருவிழா.

அதன் தொடக்கமாக அதிகாலையில் நிகழும் டான் பயர் (Dawn fire ) நிகழ்வு நடந்து கொண்டிருக்க, தூரத்து கடல் அலைகளுடன் ஐம்பெரும் பூதங்களையும் ஒருமித்துத் தரிசிக்கும் அந்தக் கணம் மகத்தானதாக இருந்தது.

இந்த நெருப்பு மூட்டும் விழா வருடத்திற்கு இருமுறை தான், இன்றும், ஆரோவில் உதயமான பிப்ரவரி இருபத்தி எட்டில் மட்டுமே என்பதால் ஆம்பி-தியேட்டர் முழுக்க மனிதத் தலைகள். ஆனால், சத்தம், இரைச்சல், கூச்சல், குழப்பம் என மருந்துக்கும் ஏதாவது இருக்க வேண்டுமே. ம்ஹும்…

அனைவரும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டமாதிரி அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட…

ஜெனியும் விழிகளை மெல்ல மூடிக் கொண்டாள்.

வெறுமனே கண்களை மூடிக் கொண்டால் மட்டும் போதுமா? பல்வேறு உணர்வுகள் பொங்கித் ததும்பும் மனதுக்கு எந்த மூடிப் போட்டு மூடுவது?

வெளியில் இருந்த அமைதியையும் தாண்டி அவள் உள்ளத்தில் அலையடித்தது, சந்தோசமாய், துக்கமாய், பரிவாய், பரிதவிப்பாய்…

‘உன்னை நாடி வருவதைப் புறக்கணித்து விட்டு கடைசிமூச்சு வரை ஏங்கி நொந்து சாகப் போகிறாய்’ உள்ளம் எச்சரித்த அதே வினாடி, ‘சித்துவை முதல் முதல்ல பார்த்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சா?’ இன்னொரு பக்கம் வேறொரு நாட்கணக்கு ஓடியது.

‘இருக்கும். போன ஜூலைல தேர் சமயம் கோவிலுக்குப் போனது. இந்த ஜூன், ஜூலை போய் ஆகஸ்டும் வந்துடுச்சே….’

நாட்கள் அதன் வேகத்தில் நகர்ந்திருந்தாலும் இவள் அளவில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. மனதளவிலும் கூட.

நடுவில் யமுனாவுக்குத் திருமணமாகி இருந்தது. மறுவீடு வந்து கணவனுடன் கிளம்பும் முன்னால் கஃபேவுக்கு வந்தவள் இவர்களைக் கட்டிக் கொண்டு ஒருமூச்சு அழுது, தன் சித்தி பெண்ணை வேலைக்குச் சேர்த்து விட்டு கிளம்பினாள்.

பொன்மணிக்கு இரண்டாவதாய்ப் பையன் பிறந்திருந்தான். குழந்தைக்கு இப்போது மூன்று மாதமாகிறது.

இரண்டு வாரம் முன்னால் கதிர் தாத்தா சைக்கிளில் போகும்போது மீன்பாடி வண்டி ஒன்று உரசிச் சென்றதில் நடக்கமுடியாமல் வலது காலில் நல்ல அடி. நான்கு நாட்கள் ஓய்வில் இருந்தவர் சொல் பேச்சுக் கேட்காமல் அடுத்த நாளில் இருந்து பிடிவாதமாய் ஆட்டோ பிடித்து வந்து போகிறார்.

கஃபே ஸ்டோர் அறைகளில் ஒன்றை ஒழித்து அவரையும், அவர் மனைவியையும் அலைச்சல் இல்லாமல் அங்கேயே தங்க வைத்து விடலாமா என்று ஜெனி யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

நடுவில் பிரான்ஸில் பாட்டி படுத்த படுக்கையாக, தங்கைக்கு அவள் நீண்ட கால நண்பனுடன் நிகழ்ந்த எங்கேஜ்மென்ட் சமயம் இவள் ஊருக்கு சென்று விட்டு வந்தாள்.

கஃபேயை மூடிவிட்டுச் சென்றதில் அந்தப் பத்து நாட்களும் பிறந்த பிள்ளையை விட்டுவிட்டு வந்தது போல இவள் தவிக்க, “கிளம்புடி மகராசி…. இந்த மகாராணியை இனி நாங்களே வந்து பார்த்துக்கிறோம், நீ கிளம்பு” அம்மா கிண்டலடித்து அனுப்பி வைத்தாள்.

மற்றபடி, வேறு என்ன விசேஷம்? ஒன்றுமில்லை.

சித்தார்த் எப்போதும் போல இருந்தான். கிண்டலாக, உரிமையாகப் பேசினான். அடிக்கடி போன் செய்தான். என்ன வேலை எப்படி இருந்தாலும் வீட்டிற்கோ, கஃபேவுக்கோ வாரம் இரண்டு முறையாவது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனான்.

‘என்னுடைய மற்ற எல்லா நண்பர்களைப் போலத்தான் நீயும்’ என இவள் என்னதான் புள்ளி வைத்து தள்ளி நின்றாலும், அவனுடைய சுவாதீனத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அந்தப் பரிவை விலக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் மறுகுவது அவளுக்கு அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

தன்னை மீறி மனசு பொங்கும் நேரங்களில், ‘அலையாதே ஜெனி, அது அவனுக்கு நல்லது இல்ல’ நாலையும் யோசித்து அறிவு தடா போடுவதில், ஞானி போல ‘டிடாச்மென்ட் இன் அட்டாச்மென்ட்’ பற்றி எண்ணிக் கொள்வாள்.

‘தாமரை இலை தண்ணீர் மாதிரி இரு, முடியலையா அட்லீஸ்ட் அவன் முன்னாடி நடிக்கவாவது செய்’ புத்தி திரும்பத் திரும்ப அறிவுரை சொல்வதில் வெளியே போடும் வேஷத்தை ஒழுங்காகப் போடுகிறாள்.

‘இன்னும் கொஞ்சநாள், அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு நெருக்குறாங்கன்னு போன தடவை பார்த்தப்ப கூடச் சொன்னானே. எப்படியாச்சும் கம்பெல் பண்ணி சீக்கிரம் செஞ்சு வச்சிடுவாங்க…’

‘சித்து பக்கத்துல இன்னொரு பொண்ணா?’ நினைக்கும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.

‘இதைப் பாருடா, இவ பண்ணுற மெலோ டிராமாவை’ அவளுள்ளமே அவளை ‘கெக்கிலி, பிக்கிலி’ காட்ட தன்னை மீறி புன்னகைத்தவள், மூடிய கண்களை இன்னும் இறுக்கி தியானத்தில் மனம் குவிக்க முயன்றாள்.

மூச்சை நிதானமாய் இழுத்து விட்டு கூத்தாடும் எண்ணங்களை அடக்கி அவள் மெல்ல இளக, பத்து நிமிடம் சென்றிருக்கும்.

கைகளில் குறுகுறுவென அந்நிய ஸ்பரிசம் பட, கண்களைத் திறந்து பார்க்காமலேயே தெரிந்தது யாரென்று. வேறு யாருக்கு இவ்வளவு உரிமையுடன் கைகள் கோர்த்து உள்ளங்கையில் கிச்சு கிச்சு மூட்டும் அளவுக்குத் துணிச்சல் வரும்?

“ஹே சித்தார்த்…” பட்டென்று விழிகள் திறந்தவள் பரவசமாய் அழைத்தாள்.

“எப்ப வந்தே…? சொல்லவே இல்ல…” ஏதோ மெஷினரி வாங்குவது சம்பந்தமாக அவன் டென்மார்க் சென்று பத்து நாட்கள் ஆகியிருந்தன.

“நேத்து நைட்…” பளிச்சென்று சிரிக்கும் அவன் புன்னகையில் கழுவித் துடைத்த தரை போல இவள் மனம் துலங்க, கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள்.

“இந்த சண்டே தானே வர்றதா இருந்த?”

“முந்தாநேத்து மதியமே போன வேலை முடிஞ்சுடுச்சு. நேத்தும் இன்னிக்கும் சைட் சீயிங் மாதிரி எங்கேஜ் பண்றதா இருந்தாங்க… நான் மட்டும் தனியா ஊர் சுத்தி என்ன பண்றது?”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… கல்யாணம் பண்ணி வொய்ஃபோட ஹனிமூன் வரேன்னு சொல்லிட்டு டிக்கட்டை அட்வான்ஸ் பண்ணி கிளம்பிட்டேன்.” அவன் நமுட்டாகக் கண்ணடிக்க, ஜெனி சிரித்தாள்.

“அப்புறம்..?”

“அப்புறமென்ன, நீதான் சொல்லணும் எப்ப போறதுன்னு” ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் கேலியாய் பார்க்க….

“என்னது???”

“எப்ப இங்க இருந்து கிளம்புறதுன்னு கேட்டேன், நீ என்ன நினைச்ச ?” அவன் இன்னும் நெருங்கி அவள் தோள் உரசும் நெருக்கத்தில் அமர்ந்தான்.

 “நம்பிட்டேன்டா… அடங்கவே மாட்டியா நீ?” வேகமாய் அவன் முன்னுச்சியைக் கொட்டினாள். இவர்களுடைய விளையாட்டில் பக்கத்தில் இருந்த ஆணும் பெண்ணும் திரும்பிப் பார்த்தார்கள்.

“உஷ்…. கத்தாதடி…” தன் உள்ளங்கை கொண்டு அவள் வாயை அடைத்தவாறு அவன் கிசுகிசுக்க, “யாரு நானா கத்துறேன்?”

“சண்டைக்கோழி, நீ இல்ல, நான் தான். எந்திருச்சு வா….” அவன் எழுந்து நின்று அவளை எழுப்பினான்.

“ம்ஹும்.. நான் மெடிடேட் பண்ணப் போறேன்”

“ஆமா, இவ அப்படியே மதரோட நேரடி வாரிசு… வராத தியானத்தை எதுக்கு வா வான்னு இழுத்துக்கிட்டு…? எழுந்து வா”

என்னதான் கிசுகிசுவெனப் பேசினாலும் இவர்கள் பேசுவது அருகில் இருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருப்பது புரிய ஜெனியும் அவன் இழுத்த இழுப்புக்கு எழுந்து நடந்தாள்.

திறந்தவெளி அரங்கில் இருந்து வெளியே வந்தவர்கள், வாகனம் நிறுத்துமிடம் தொலைவில் என்பதால் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

“வேறென்ன ப்ரோக்ராம்?”

“ஒன்னுமில்ல. வீட்டுக்குப் போய்ட்டு நேரா கஃபே போக வேண்டியது தான்.”

விடிந்து விட்டாலும் இன்னும் வெளிச்சம் வரவில்லை. கருப்பும் பழுப்புமாக மேலே மேகங்கள் நகர, வழியில் எண்ணற்ற விழுதுகளுடன் பிரமாண்டமாக பரந்து நின்ற ஆலமரத்தின் தூண்களைத் தொட்டு தடவியபடி இருவரும் நடந்தார்கள்.

இதமான அதிகாலை காற்றில் பரபரப்பில்லாமல் இவனுடன் நடக்கும் இந்தக் காலை நடை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

“சாயங்காலம் எதுவும் வேலை இல்லல்ல… வீட்டுக்கு வா…” அவனுடைய காரை நெருங்கி ஏறி அமர்ந்தார்கள்.

“வீட்டுக்கா..? எதுக்கு?”

இதுவரை ஜெனி அவனுடைய வீட்டுக்கு சென்றதில்லை. வெளியே பார்த்து பேசுவது தானே தவிர அந்த மாதிரி சந்தர்ப்பங்களை முயன்று தவிர்த்தே வந்திருப்பதால் லேசான தயக்கம் தோன்றியது.

“அம்மா அப்பாவுக்கு வெட்டிங் அனிவர்சரி… முப்பதாவது வருஷம்… சின்ன கெட் – டூ – கெதர் இருக்கு வீட்டுல”

“வாவ்.. சொல்லவே இல்ல… பேர்ல் ஜூப்ளியா…?” சந்தோசமாக அவனைப் பார்த்தவள் மறு நொடியே முறைத்தாள்.

“அப்ப நீ பிளான் படியே இன்னிக்கு வர்றதாதான் இருந்துருக்க…. எனக்குத் தான் அப்டேட் பண்ணலன்னு சொல்லு…”

“எப்ப கிளம்புறேன்னு கடைசி நிமிஷம் வரைக்கும் தெரியலடா. நேத்து வந்து சேர்ந்தப்புறம் தான் இன்னிக்கு இந்த பிளான். இல்லேன்னா அடுத்த வாரம் போல ஏதாச்சும் பிளான் பண்றதா இருந்தோம்…. ” என்றவன்,

“உங்களுக்கு நான் எங்க இருந்தா என்ன மேடம்? இன்பாக்ட் இருக்குறனா, இல்லையான்னு கூட யாரு என்னைத் தேடுறாங்க…? மீ புவர் பாய்… நோ அக்கறை ஃப்ரம் எனி ஒன்….” பரிதாபமாக உதடு பிதுக்கினான்.

அவன் விளையாட்டாய் சொன்னாலும் அதில் இருந்த ஆதங்கம் புரியாமல் இல்லை அவளுக்கு.

‘இருக்கு சித்தார்த்… நிறைய இருக்கு மனசு தளும்பத் தளும்ப’ மனதில் எண்ணிக் கொண்டவள், “போடா ப்ராடு…” இயல்பாய் சலித்தபடி திரும்பிக் கொண்டாள்.

தன்னை அரவணைக்கும் கரையைத் தலை வணங்குவது போல அலைகளை அனுப்பி அனுப்பிப் பணிந்து கொண்டிருந்தது தூரத்துக் கடல். கடலின் மேலே வெண்மேகங்களுக்கு இடையே ஜெட் ஒன்று கோடு கிழித்துச் செல்ல….

வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தாலும் அருகில் இருந்தவனின் யோசனையான தோற்றம் அவளை என்னவோ செய்தது.

“என்ன சிடி வச்சிருக்க?” அவனைப் பேச்சில் இழுத்தபடி ஸ்டீரியோவைத் திருகினாள்.

“என் மாலை வானம் மொத்தம்

இருள் பூசிக்கொள்ளும் சத்தம்

இங்கும் நீயும் நானும் மட்டும்

இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்

உயிரின் திரையின் முன் பார் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்

அது வானின் காதல் வெப்பம்”

ஏஆர்ஆர் மெலடியில் இழைத்திருக்க, ஸ்ரேயா கோஷலின் குரலில் மனசு வழுக்கிக் கொண்டு சென்றது.

இரு வேறு மனநிலையில் இருந்தவர்களின் மௌனத்தை இதமான இசை ஆகர்ஷிக்க, அதற்குப்பின் அங்கு வார்த்தைகளுக்குத் தேவை இருக்கவில்லை.

அமைதியான பயணத்தில் அவளது வீடு வந்திருக்க, “நாலு மணிக்கு ரெடியா இரு…. வந்து பிக்கப் பண்ணிக்குறேன்” சித்தார்த் கார் கதவைத் திறந்து விட்டான்.

“ஆமா, நான் பச்சை பாப்பா பாரு வழித் தெரியாம முழிக்க… நானே வந்துப்பேன். இன்னிக்காவது ஓபி அடிக்காம வீட்டுல ஏதாவது வேலையைப் பாரு” ஜெனி நக்கலடித்தபடி இறங்கிச் செல்ல, அவன் சிரித்தவாறு கிளம்பினான்.

*********************

சமீப நாட்களாக ஆட்கள் பற்றாக்குறையால் ஜெனிக்கு மூச்சு முட்டுகிறது. சோதனைப் போல அன்று பார்த்து அவ்வளவு வேலை கஃபேயில்..

கைக் குழந்தையை வைத்திருப்பதால் பொன்மணி நடுவில் ஒருமுறை வீடு வரை சென்று மாலையும் சீக்கிரம் கிளம்பி இருக்க… புதிதாய் வந்த பெண் எதைச் சொன்னாலும் தடுமாறி விழித்தாள். கட்டுப் போட்ட காலுடன் உட்கார்ந்தபடியே தாத்தா கொஞ்சம் உதவ, ஒருவழியாக வேலைகளை ஏறக்கட்டினாள்.

‘எருமை மாடு, முன்னாடியே சொல்லி இருந்தா பொறுமையா பார்த்து வாங்கி இருக்கலாம்… இப்ப கடைசி நிமிஷத்துல பறக்க வேண்டியிருக்கு” திட்டிக் கொண்டே நகைக்கடைக்கு ஓடினாள்.

செயற்கை முத்துகள் பதித்த ஊஞ்சலில் ஆணும், பெண்ணும் உட்கார்ந்து இருப்பது போன்ற ஷோ பீஸ் வெள்ளிக் கம்பிகளில் முடுக்கப்பட்டு வெகு அழகாக இருந்தது.

கண்ணாடிப் பெட்டிக்குள் பளிச்சென்று இருந்ததைப் பார்த்ததும் பிடித்துப் போக, மறு யோசனை செய்யாமல் பணம் செலுத்தி பரிசுத்தாள் சுற்றி வாங்கிக் கொண்டாள்.

என்ன அடித்துப் பிடித்து இவள் ஓடினாலும் அங்குப் போவதற்குள் மணி ஏழாகி இருந்தது. வீட்டிற்கு முன்னால் நிறைய கார்கள் நிற்க, ஆட்டோவை கட் பண்ணி அனுப்பி ஜெனி உள்ளே நுழைந்தாள்.

தோட்டத்தில் அங்கங்கே விருந்தினர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க, பிரமாண்டமான கூடம் விருந்தினர்களால் ஏற்கனவே நிரம்பி வழிந்தது.

“ஹே… வா வா.. ஜெனி… யப்பா, எவ்வளவு நேரம்?” உரிமையாக அதட்டியபடி கௌரியும், “வாம்மா… வா “ என்று சதானந்தும் வரவேற்க…

“விஷ் யூ ஹேப்பி அனிவர்சரி ஆன்ட்டி… அங்கிள் உங்களுக்கும் தான் மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ்” வாழ்த்தியபடி தான் கொண்டு வந்த பரிசை அவர்களிடம் கொடுத்தாள்.

“எதுக்கும்மா இதெல்லாம்?” மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்கள். கௌரி சின்ன பார்டர் வைத்த பட்டுப் புடவையில் இருக்க, அங்கிள் வேஷ்டி சட்டையில் எளிமையாக இருந்தார்.

இருவரையும் இணைந்து பார்க்க பாந்தமாய் நிறைவாக இருக்க, ஜெனி அதை வெளிப்படையாகச் சொன்னதில் ஆன்ட்டி அழகாக வெட்கப்பட்டார். “பாருடா இவளை?” தங்கள் அருகே வந்த சித்தார்த்திடம் அவர் செல்லமாகச் சலிக்க…

பச்சை ஜரி இழைத்த மேலாடையும், மேபில் இலைகள் தெளித்த வெள்ளை ஸ்கர்டும் அணிந்து வசீகரமாக நின்றவளை பார்த்து அவன் ரகசியமாக கண்சிமிட்டினான்.

“என்னவாம்? வாட் மேடம், ஒருவழியா வந்துட்டியா? வழக்கம் போல ‘எஸ்’ ஆயிட்டேன்னு நினைச்சேன்”

“ஸாரி சித்தார்த். யாருமில்லாம விட்டுட்டு வர முடியல. கஃபேயை க்ளோஸ் பண்ணிட்டு வர நேரம் ஆயிடுச்சு…”

“சரி, சரி, பரவால்ல வா… தேவி எங்கள் இல்லம் அருளியது யாம் செய்த பாக்கியம்” அவன் கிண்டல் அடித்தவாறு உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தான்.

“என்ன குடிக்கிற?”

குளிர்பானத்தை எடுத்துக் கொடுத்து அவளருகே நின்று இரண்டு நிமிடங்கள் பேசிய சித்தார்த், யாரோ எதற்கோ அவனை அழைத்ததில், “இரு, வந்துடுறேன்” அங்கிருந்து அகன்றான்.

சுற்றிலும் நிறையப் பேர், ஆனால் ஒருவரைக்கூடத் தனக்குத் தெரியாது. சித்தார்த் நின்று கலாட்டாவாகப் பேசியதில் தன்னைக் குறுகுறுவெனப் பார்க்கும் உருப்படிகள் வேறு. சிலரின் எடைபோடும் பார்வையில் அவளுக்கு மூச்சு முட்டியது.

வேறெங்கு போவது என்று தெரியாமல் சற்றே சங்கடத்துடன் அங்கே உட்கார்ந்திருந்தாள் ஜெனி.

வந்திருந்தவர்களில் பெரும்பாலும் உறவுகள் என்பது கொத்துக் கொத்தாக அவர்கள் அணிந்திருந்த நகைகளிலும், தகடாய் பளபளத்த பட்டிலும் தெரிய, ’மியம்’ –இல் இருந்து கொஞ்ச பேர் வந்திருந்தார்கள்.

ஏதாவது தெரிந்த முகம் தென்படுகிறதா என்று இவள் தேட, “ஜென்னி, எப்ப வந்தே? சவி, இங்க வா…” வெளியே இருந்து எதற்கோ உள்ளே வந்த மாதவன் இவளைக் கண்டதும் தன் மனைவியை அழைத்து அறிமுகம் செய்து வைத்தான்.

‘கிடைச்சுடுச்சுடா ஒரு கம்பெனி…’ மகிழ்ந்து போன ஜெனி அந்தப் பெண்ணுடன் கோந்து போட்டது போல ஒட்டிக் கொண்டாள்.

அந்தச் சவிக்கும் அப்படித்தான் இருந்தது போல. அவள் கோந்து போடாமலேயே இவளுடன் ஒட்டிக்கொள்ள, இருவரும் டைனிங் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் உறவினர், நண்பர்கள் சூழ விழாத் தம்பதிகள் இருவரும் கேக் வெட்ட, அதைத் தொடர்ந்து ஹோட்டலில் ஆர்டர் செய்து வந்திருந்த உணவு வகைகளை மேடையில் பரப்பினார்கள் வேலை செய்பவர்கள்.

கௌரி வந்தவர்களைக் கவனித்தவாறு அங்கே இங்கே எனப் பரபரக்க, நெருங்கிய உறவினர்கள் அவ்வளவு பேர் இருந்தும் ஒருவர் கூட விரல் அசைக்கவும் முன்வரவில்லை.

சூழ்நிலையைக் கவனித்து ஜெனியும், சவியும், இவர்களுடன் உட்கார்ந்திருந்த சதானந்த் நண்பரின் மனைவியும் மகளும் இயல்பாக எழுந்து கை கொடுக்க…

தன் வீட்டைப் பற்றி, தன் தந்தை வழி உறவுகள் குறித்து, தன் அம்மாவை இப்போதும் அவர்கள் தள்ளி நிறுத்துவது பற்றிச் சித்தார்த் ஓரிரு முறை கோடாய் சொல்லி இருக்கிறான். இப்போது நேரில் பார்க்கும்போது அவன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்று தோன்றியது ஜெனிக்கு.

கிசுகிசுவெனத் தங்களுக்குள் மட்டுமே பேசி சிரித்துக் கொண்டவர்கள் வந்த இடத்தில் சௌஜன்ய பாவமாய் ஒரு துரும்பையும் நகர்த்த மனமில்லாமல் அப்படியே அமர்ந்து இருக்க, வயதில் பெரியவர்கள் தான் இப்படி என்றால் இளம் தலைமுறை அதற்கும் மேல்.

‘அத்தை அது எங்க? சித்தி இது இங்க?’ என்று கேட்டபடி கெளரியைத் தான் வேலை வாங்கினார்கள். மீதி நேரத்தில் தாங்கள் செய்திருந்த அழகு நிலைய அலங்காரத்தை விதவிதமான செல்பிக்கள் எடுக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

சாப்பிடுவதற்குக் கூட ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கௌரியும் சதானந்தும் அழைத்த பின்னால் தான் எழுந்து வந்தார்கள். தொட்ட தொண்ணூறுக்கும் மரியாதை எதிர்பார்க்கும் குறுகிய மனோபாவமோ!?

‘சரியான மாயாண்டி குடும்பமா இல்ல இருக்கு? பாவம் இந்த ஆன்ட்டி… இவங்களோட எல்லாம் எப்படித்தான் இத்தனை வருஷம் ஓட்டினாங்களோ தெரியல…’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஒருவழியாகத் தாம்பூலம் வாங்கிக் கொண்டு ஒவ்வொருவராய் புறப்பட, கூடம் கொஞ்ச கொஞ்சமாய்க் காலி ஆனது. வீட்டின் அழகும், கெளரியின் கைவேலைப்பாடுகளும் கூட அப்போது தான் கண்ணில் தெரிந்தன..

எந்த இடத்திலும் பணத்தைக் கொட்டி விலை உயர்ந்த பொருட்களை வாங்கிப் பரப்பி வைக்காமல் எளிமையான உள் அலங்காரத்தில் அழகுணர்ச்சியோடு மிளிர்ந்தது அந்த இல்லம். எங்கும் பகட்டோ, படோபடமோ தெரியவில்லை.

அங்கங்கே பொருத்தமாய் க்ரோஷா சுவர் அலங்காரங்களும், திரைசீலைகளும். ஒவ்வொரு அறையின் மனநிலைக்கும் ஏற்ற நிறங்களில் தரை விரிப்புகளும் என அழகாய் கம்பீரமாய் இருந்த வீட்டை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.

அநேகமாக வந்த அனைவரும் கிளம்பி இருக்க, சமையல் அம்மாவுடன் கூட நின்று சற்று ஏறக்கட்ட உதவிய ஜெனி “அப்ப நான் கிளம்பட்டுமா ஆன்ட்டி…” தன் கைப்பையை மாட்டியபடி அப்போது தான் சாப்பிட அமர்ந்த கௌரியின் அருகே வந்தாள்.

“இரு.. இரு… எனக்குக் கொஞ்சம் கம்பெனி கொடேன்… நீயும் ஏதாவது எடுத்துக்கோ வா…” அவர் ஒரு பேப்பர் தட்டை எடுத்துக் கொடுத்து வற்புறுத்த,

“என்னவோ நீங்க சொல்றீங்களேன்னு எடுத்துக்குறேன் ஆன்ட்டி..” கண்ணடித்தவள், பிஸ்தா மிதந்த குல்கந்த் ரப்ரியை ஃபோம் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டாள்.

“இன்னிக்கு ஏறப் போற இரண்டு கிலோவுக்கு நீங்க தான் பொறுப்பு…” என்றபடி அவள் சாப்பிட,

“அப்படி ஒன்னும் வெயிட் போட்டுட மாட்ட.. அப்படியே சதை போட்டாலும் நல்லா தான் இருப்ப. கவலைப்படாம சாப்பிடு….” கௌரி இன்னுமொரு முறை அந்தக் கிண்ணத்தை நிறைத்திருந்தார்.

“ஜெனி, கொஞ்சம் மேல வா…”

மாடிப்படி வளைவில் எட்டிப் பார்த்தபடி சித்தார்த் சத்தமாக அழைக்க, அவன் குரலில் இருந்த உரிமையில் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று கெளரியின் முகத்தைப் படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் ஜெனி.

அவர் என்னவோ இயல்பாகத் தான் இருந்தார்.

“அதெல்லாம் வர முடியாது.” இவள் இங்கிருந்தே குரல் கொடுக்க, “ஏய்.. வா…” அவன் அதிகாரமாகச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டான்.

‘அம்மா முன்னாடியே பயமில்லாம அதட்டிக் கூப்புடுறான். என்ன ஆன்ட்டி பிள்ளை வளர்த்து வச்சிருக்கீங்க?’ உள்ளே சீண்டலாய் எண்ணினாலும் எழுந்து செல்லாமல், செல்ல விரும்பாமல் இவள் தயங்க…

“போ ஜெனி, அதான் கூப்பிடுறான்ல… உனக்கு மட்டும் ரிடர்ன் கிப்ட் அவனே வாங்கிக்கிறதா சொல்லிட்டான். என்னடா வாங்குனன்னு கேட்டா என்கிட்ட கூடக் காண்பிக்கல… அதைக் கொடுக்கத்தான் கூப்பிடுறானா இருக்கும்….” கௌரி எதார்த்தமாகச் சொன்னார்.

“கௌரி, நம்ம வரதா லைன்ல இருக்காரு..” என்றபடி வந்த கணவரிடம் கார்ட்லெஸ்சை வாங்கி “ஹம்.. சொல்லுங்கண்ணா” என்று அவர் பால்கனிக்கு சென்று விட்டார்.

போகிறபோக்கில் “ம்ம்ம்.. போ.. போ…“ என்ற ஜாடை வேறு.

இதற்கும் மேல் மறுத்தால் அலட்டலாகத் தெரியுமே.

‘யோவ்… குடும்பமா சேர்ந்து என்னயா பண்றீங்க?” படபடப்பு பாதி, பரவசம் மீதியுமாகப் படிகளில் ஏறினாள் ஜெனி.