காதல் கஃபே – 11

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

11

பெரிய சாஸ்பேனில் பாலை இளம் சூடாகக் காய்ச்சிய ஜெனி இன்னொரு பாத்திரத்தில் ஏற்கனவே தயாராகப் பிரித்து வைத்திருந்த முட்டையின் மஞ்சள் கருக்கள், சக்கரை, மைதா, காரன் ஸ்டார்ச் என்று ஒவ்வொன்றாய் கலந்து மர விஸ்கினால் வேகமாக அடித்தாள்.

ஓரளவு பால் சூடு வந்ததும் நன்கு கலந்திருந்த இந்தக் கலவையை ஊற்றி வேகமாக அடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக வெண்மஞ்சள் நிறத்தில் கஸ்டர்ட் உருவாகி மேலெழும்பியது.

பாத்திரத்தில் சூடு ஏற ஏற, பால் முழுவதும் அடர்த்தியான கஸ்டர்ட்டாக மாற, கொஞ்சமும் தாமதிக்காமல் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வென்னிலா எசென்ஸ் ஊற்றி ஐஸ்கட்டிகள் நிரம்பிய அகன்ற ட்ரேயில் வைத்தாள்.

கொஞ்சம் குளிர்ந்ததும் அதைக் குளிர்பதனியில் வைத்துவிட்டு சார்லட் மோல்டை எடுத்தாள். காலையில் செய்திருந்த லேடிஸ்பிங்கர் பிஸ்கட்டுகள் மேடையில் தயாராக இருந்தன. அவற்றை மோல்டை சுற்றி இறுக்கமாக அடுக்கிவிட்டுக் கொஞ்சம் நேரம் அமர்ந்தாள்.

வெகு நேரம் நின்று கொண்டிருந்ததில் கால்கள் வலித்தன. களைப்பு நீங்க நிதானமாகக் கருந்தேநீர் அருந்தினாள். வெளியில் கதவு சுண்டும் ஒலி கேட்க…

“யமுனா, யாரோ கதவை தட்டுறாங்க பாரு…”

“இதோ பார்க்கிறேன்கா”

கிளம்பும் நேரம் என்பதால் பவுடரை கொத்தாய் அள்ளி பூசிக் கொண்டிருந்த யமுனா கதிர்வேல் என நினைத்து ஓடிப் போய்க் கதவை வேகமாகத் திறக்க, அங்கே நின்றிருந்த நபரைக் கண்டு “ஹி ஹி.. வாங்க சார்” என்றாள் வெட்கியபடி.

“ஜெனிக்கா…. அந்த சாரு வந்திருக்காரு….” கத்திக் கொண்டே அவள் உள்ளே மறைந்து விட,

“எந்த சாருடி…?

“அதுதான் உங்க ப்ரெண்டு…..”

“ஹே சித்தார்த்.. நீயா, வா வா…” சுவாதீனமாக உள்ளே வந்தவனை இயல்பு போல எழுந்து வரவேற்ற ஜெனி அவன் முகத்தை அறியாமல் பார்ப்பது போல பார்த்தாள்.

‘பாரு… இவன் அம்மாகிட்ட வத்தி வச்சோமே, என்ன ரியாக்ஷன்னு முட்டைக் கண்ணை விரிச்சு நல்லாப் பாரு..’ சித்தார்த்தும் அந்தப் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து சிரித்தபடியே, “வரேன் மேடம்ஜி” பெரிய சலாம் வைத்தவாறு வந்தான்.

“எதுக்கு இவ ஓடுறா? வந்தவுடனே பயமுறுத்திட்டியா என் ஸ்டாஃபை?”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அவங்க என்னைப் பயமுறுத்தாம இருந்தா பத்தாது. அங்க பாரு உன் செக்யூரிட்டி முறைச்சு முறைச்சு என்னைப் பார்க்கிறதை….”

ஜெனி எட்டிப் பார்க்க அவனைத் தொடர்ந்து உள்ளே வந்திருந்த கதிர் இவன் ஜெனியிடம் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்து ஏதோ வேலை இருப்பது போல அங்கேயே நின்றார்.

“தாத்தாகாரு… சித்தார்த்துக்குக் குடிக்க ஆப்ரிகாட் நெக்டார் எடுத்துக் கொடுங்களேன். என் கை மாவா இருக்கு” அவரது பார்வை புரிந்து அவள் சொல்ல, மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பு போல, “இதோ ஜெனிம்மா” என்று உள்ளே ஓடினார்.

இவன் ஒவ்வொருமுறை இங்கே வரும்போதும் இப்படித்தான். ஜெனியின் முகம் பார்த்து இவனை நெருங்க விடலாமா, வேண்டாமா என்று கோடு கிழிக்கிற தந்தையின் கவனம்! சொந்த சகோதரியிடம் பழகும் வாஞ்சையுடன் வேலை செய்யும் பெண்கள்!

ஒருவகையில் அவனுக்குச் சந்தோசமாக இருந்தது. வேலை செய்பவர்கள், சம்பளம் கொடுப்பவள் என்று இல்லாமல் இவர்கள் அனைவரும் இவ்வளவு ஆத்மார்த்தமாகப் பழகுவதால் தான் இவள் இங்கே தனியாக வசித்தபடி இந்த கஃபேயை நடத்த முடிகிறது என்ற புரிதலில் பெருமிதமாய் ஜெனியைப் பார்த்தான்.

அவளோ கடமையே கண்ணாகக் குளிர்ந்திருந்த கஸ்டர்டை வெளியே எடுத்து மோல்டுக்குள் கவனமாக ஊற்றிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் தாமதித்தாலும் பதம் கெட்டு விடும் என்பதால் அங்கிருந்து கண் எடுக்காமல் “உக்காரு சித்தார்த்” என்றாள் காலாலே அடுத்த சேரை உந்திக் காட்டியபடி.

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“ஃப்ரெஞ்ச் வென்னிலா ஸ்ட்ராபெர்ரி சார்லட்”

நடுவில் மென்மையான ஸ்பான்ஜ் கஸ்டர்ட் கேக்கும், ஓரங்களில் அரணாக பிஸ்கட்டுகளும் அடுக்கிய சார்லட் டெசர்ட்.

தயாரிப்பின் இறுதி கட்டமாக ஓரத்தில் உள்ள லேடிஸ் பிங்கர்ஸை கலைத்து விடாமல் சீராய் கஸ்டர்ட் மெழுகி மோல்டுடன் மீண்டும் குளிர்பதனியில் வைத்துக் குறைந்தது நாலு மணி நேரம் செட் செய்தால்…

“டன்டடான்… யம்மி சார்லட் ரெடி” எல்லாம் கச்சிதமாக அமைந்த சந்தோசத்தில் சின்னதாய் ராகம் போட்டு பாடினாள்.

குழந்தையின் குறும்புடன் நாக்கை துருத்தியவாறு அவள் சொன்ன அழகை இரு கண்களிலும் நிரப்பிக் கொண்டவாறு ரசித்துச் சிரித்தான் சித்தார்த். 

“ஓ.. பாருடா… என்னமோ விதவிதமா காபி ஆத்த மட்டும் தான் உனக்குத் தெரியும்னு நினைச்சா கிளாஸிக் ரெசிபி செய்யுற அளவுக்குப் புத்திசாலியா ஜெனி நீ?”

சக்கரைப்பாகும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையில் நேற்று முழுவதும் ஊறி மினுமினுத்த ஸ்ட்ராபெர்ரிகளை ஒவ்வொன்றாய் கிடுக்கியில் பிடித்து மேலே அடுக்கிக் கொண்டிருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“கொழுப்பு…??”

இதைச் செய்வது கடினம். அதைப் பின்னப்படாமல் வெட்டி பரிமாறுவது அதைவிடச் சிரமம் என்று அறிந்திருந்தவன், “எனி ஹெல்ப்?” ஆர்வமாக அவள் அருகில் நின்று பார்த்தான்.

“ரொம்பத் தாகமா இருக்கு.. தண்ணி மட்டும் எடுத்துக் கொடு”

அவன் டம்ளரை நிரப்பி அருகே வர புறங்கையைத் துடைத்து வாங்க முயன்றவள், அவனே புகட்டத் தொடங்கியதில் மறுக்காமல் பருகினாள், அவனைப் பார்த்துக் கொண்டே.

அவனும் அவளை ஆழமாகப் பார்க்க, இருவர் விழிகளும் சில கணங்கள் பின்னிக் கொண்டன.

அவன் இஞ்ச் இஞ்சாக தன்னை நெருங்குவதை முகத்தில் படும் மூச்சுக்காற்று உணர்த்த, ஜெனி கழுத்தை வேகமாக ஆட்டிக் காண்பித்தாள்.

என்னவென்று புரியாமல் அவன் சற்றே விலக, “டேய் லூஸு… காலியான டம்ளரை வச்சு அழுத்தி ஏன்டா என்னைக் கொல்லப் பார்க்குற ?”

‘தெய்வமே, இந்த மரமண்டையை வச்சுக்கிட்டு எந்த ஜென்மத்துல நான் ரொமான்ஸ் பண்றது?’ நொந்து போனவன், கையில் வைத்திருந்ததைக் கொண்டே அவள் மண்டையில் ஒன்று வைத்தான்.

‘ஆ…’ நெற்றியைத் தடவி, “இரு வந்துடுறேன்” வெளியே சென்ற ஜெனி கதிரையும் யமுனாவையும் அனுப்பிவிட்டு கதவை கொக்கியிட்டு உள்ளே வந்தாள்.

“அப்புறம் ஜெனி, வேறென்ன விசேஷம்?” கடைசி வேலையாக ட்ரேயை அலுங்காமல் தூக்கி குளிர்தட்டில் வைத்து டெம்பரேச்சர் செட் செய்தவள், கையைக் கழுவித் துடைத்து அவனெதிரே வந்து அமர்ந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

குறும்பாய் அவன் சிரிப்பதில் தன்னை அவன் ஆழம் பார்க்கிறான் என்று புரிந்தது.

“இங்க ஒன்னும் விசேஷம் இல்ல சித்தார்த். உனக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகி எங்களுக்கு ஏதாவது பெரிய ஆர்டர் கிடைச்சா தான் விசேஷமெல்லாம்…” என்றாள் விஷமமாய்ச் சிரித்தபடியே.

 “கல்யாணப் பொண்ணு கிச்சன்ல நின்னு சமைச்சுக்கிட்டு இருந்தா ‘கஞ்சப்பிசுநாறிடா நீ’ ன்னு உலகமே என்னைக் காறித் துப்புமேம்மா, காறித் துப்புமே”

‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு’ வசனத்தில் ஏற்றி இறக்கி பேசி தான் விடாகொண்டன் என்று சித்தார்த் நிரூபிக்க, ஜெனிக்கு முசுமுசுவென்று கோபம் வந்தது.

“பைத்தியக்காரன் மாதிரி நீ யோசிக்கிறது தெரிஞ்சா இதைவிடவும் அசிங்கமா கழுவி ஊத்தும், பரவாயில்லையா?” அடங்கிய குரலில் கேட்டாள் சூடாக.

“விளையாட்டு போதும் ஜெனி. நாம கொஞ்சம் சீரியஸா பேசலாமா?” சித்தார்த்தும் அவள் முகத்தை அழுத்தமாகப் பார்க்க,

“பேச வேண்டியது எல்லாம் ஏற்கனவே பேசியாச்சு சித்தார்த். என் இடம் தேடி வந்தவன்கிட்ட கோபத்தைக் காண்பிக்க வேணாம்ன்னு நான் பொறுமையா பேசுறேன், புரிஞ்சுக்கோ…” அத்தனை நாள் ஆதங்கத்தையும் சேர்த்து வைத்து அவள் வெடித்தாள்.

“டாக்டர் ஷர்மா கிட்ட என்ன பேசினேன்னு முழுசா கேட்டியா?”

அவளெங்கே கேட்டாள். சித்தார்த் வந்து தனியே பேசினான், உன்னைப்பற்றிச் சொன்…. என்று அவர் ஆரம்பிப்பதற்குள் இவளது ரத்த அழுத்தம் உயர்ந்ததில் எப்படி உங்கள் கேஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை மூன்றாம் நபரிடம் பேசுவீர்கள் என்று காள் காளென்று கத்தி இருந்தாள்.

“இப்ப உன் உடம்பு எப்படி இருக்கு, ஹார்மோனல் இச்யூஸ் கம்ப்ளீட்லி கண்ட்ரோல்டான்னு ஜெனரலா நாங்க பேசிட்டு இருந்தோம். அதை உனக்குச் சொல்ல கேசுவலா அவங்க கூப்பிட்டா, நீ அரையும் குறையுமா காதுல வாங்கி அவங்ககிட்டயே குரல் உயர்த்தி இருக்க.”

“அவங்க என்னைத் திரும்பவும் கூப்பிட்டு, ‘ஜெனி ஏன் கத்துறா? அவளுக்கு இந்த ரிலேஷன்ஷிப்ல விருப்பம் இல்லையா’ன்னு என்னைச் சந்தேகப்படற மாதிரி கேட்குறாங்க… எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு, தெரியுமா?”

ஜெனியும் அதை உணர்ந்து தான் இருந்தாள். இருவருக்கும் இடையே எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம். மூன்றாம் நபர் முன்னால் தான் விட்டுக் கொடுத்து நடந்தது மிகப் பெரிய தவறு தான் என்று புரிந்தது. எனினும் வெளிப்படையாக இவனிடம் ஒத்துக் கொள்ளத்தான் மனமில்லை.

அவர் அதை மட்டும் சொல்லவில்லை. ‘ஏதோ அவளுக்கு நல்லது நடந்தா சரின்னு நான் நினைச்சா, என்ன இப்படி?’ என்றும் வருத்தப்பட்டும் இருந்தார்.

இதைச் சொன்னால், ‘எனக்கு நல்லதுன்னு டிசைட் பண்ண நீங்க இரண்டு பேரும் யாரு?’ என்பாள் இவள் குதர்க்கமாக.

“உடம்பெல்லாம் கொழுப்பு சேர்ந்து போச்சுன்னா இப்படித்தான் யாரு, என்னன்னு வைச்சு பார்க்காம பேச சொல்லும்….” கடுப்படித்தவன்,

“அதென்ன நீ யாரு, நீ யாருன்னு திருப்பித் திருப்பிக் கேள்வி கேட்குற. உனக்கு என்ன அவ்ளோ திமிரா…?” வேண்டுமென்றே விறைப்பாக வேறு எங்கோ பார்த்தவளின் கன்னம் பற்றித் தன் பக்கம் திருப்பினான்.

“என் அம்மாகிட்ட சொன்னா, நான் அப்படியே பயந்து விட்டுட்டு ஓடிப் போயிடுவேன்னு நினைப்பு? மயிலே மயிலேன்னா இறகு போட மாட்ட நீ. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ… வி ஆர் கெட்டிங் மேரிட்… அவ்வளவு தான்”

“நான் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கல. இன்பர்மேஷன் தான் சொல்றேன். சொன்ன நேரத்துக்குச் சொன்ன இடத்துக்கு வந்து நிக்குற, புரியுதா?” கிட்டத்தட்ட மிரட்டலாய் சொல்ல,

“முட்டாளா நீ…?” ஜெனி பல்லைக் கடித்தாள்.

“பொண்ணுங்கிற டெஃபனிஷன் படி நான் பொண்ணே இல்ல. அது தெரிஞ்சு தான் பேசுறியா….? போய் கூகிள்ல ‘பிமேல்’னு அடிச்சு அர்த்தம் பாரு. கருமுட்டையும், கர்ப்பப்பையும் இருந்தா தான் அது பொண்ணு… ஹைபரா யோசிச்சு ஏதாவது உளறிட்டு இருக்காதே…”

‘காட்… ஒன்னு இரண்டு உறுப்பை எடுத்து வெளில போட்டுட்டா நீ பொண்ணே இல்லன்னு ஆகிடுமா, ஏன் எப்படிப் பேசறா..?’ அவனுக்குச் சொல்லமுடியா வருத்தம் எழுந்தது.

இறுக்கமாய்ப் பேசுபவளை இதமாய் நெஞ்சோடு அணைத்து ‘டோன்ட் டார்னிஷ் யுவர்செல்ப்…’ எனச் சொல்லத் துடிக்க…

அவளை நெருங்கி, “ஜெனி…நா….” ஏதோ சொல்ல வந்த சித்தார்த்தை கை நீட்டி தடுத்தாள் நிர்தாட்சண்யமாய் .

“இரு… உன் சமாதானம் எதுவும் எனக்குத் தேவையில்ல. நான் சொல்றதை முதல்ல காது கொடுத்துக் கேளு… நோ எமோஷன்ஸ் ப்ளீஸ்” என்றாள் படபடவென.

“இன்னிக்கு த்ரில்லா இருக்கிற விஷயம் நாலே நாள்ல கசந்துடும் சித்தார்த். கல்யாணம் பண்ணி அடுத்த மாசத்துல இருந்து எல்லாரும் கேட்க ஆரம்பிப்பான், வீட்டுல ஏதாச்சும் விஷேசமான்னு ? என்ன பதில் சொல்லுவ?”

“எல்லார்கிட்டயும் என் பொண்டாட்டி ஆஸ் பெர் டெஃபனிஷன் பொண்ணே இல்ல, சும்மா ஒரு ஷோ பொம்மைனு விளக்கம் கொடுப்பியா? உன் அம்மா அப்பாவுக்கு உன் வாரிசு மேல, அடுத்தத் தலைமுறை மேல ஆசை, கனவு இதெல்லாம் இருக்காதா? அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவ?”

“என் அம்மா, அப்பாகிட்ட பேசுறது என் வேலை ஜெனி. அதைப்பத்தி நீ கவலைப்படாதே….” எரிச்சலாக இடைமறித்தவன், “குழந்தையைத் தவிர வேற எதுவுமே இல்லையா? அதை மட்டுமே பிடிச்சிட்டு நீ பேசறது எனக்கு எரிச்சலா இருக்கு.” என்றான் வறண்ட குரலில்.

“ஏன்னா நீ கனவுல மிதக்குற… நான் தரைல நிக்குறேன். அது தான் வித்தியாசம்” இடக்காய் சொன்னவள்,

“கொஞ்சமாச்சும் ப்ராக்டிகலா யோசி சித்தார்த். நான் வெளிப்படையாவே சொல்றேனே… என்னை மாதிரி பொண்ணுங்களுக்குக் கல்யாணம்ங்கிறது இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல… இன்னும் ஏழேழு ஜென்மம் ஆனாலும் வெறும் கனவு தான். எனக்கு ரியாலிட்டி தெரியும். அதனால நீ பாவம் பார்த்து இப்படிப் பேசுறதை முதல்ல நிறுத்து.”

“ஜெனி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… ஐ லவ் யூ… ஐ லைக் யூ…. இதுல பாவம் பார்க்கிறது எங்க இருந்து வந்துச்சு….?”

  “நீ பாவம் பார்க்குறியோ, பரிதாபப்படுறியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது சித்தார்த். வாழறது ஒருமுறை தான். புரட்சி பேசி அதை வீணாக்கிக்காதே… ஏஸ் எ ப்ரெண்ட்டா சொல்றேன், கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு….”

“அதே தான் நானும் சொல்றேன். வாழ்க்கைங்கிறது ஒரு முறை தான். அதை என் மனசுக்கு பிடிச்ச மாதிரி, மனசுக்கு பிடிச்ச பொண்ணோட வாழணும்ன்னு நான் ஆசைப்படுறேன்”

“சித்தார்த், நீ விதண்டாவாதம் பண்றடா…“

“என் உறுதிக்கு பேர் விதண்டாவாதம்னா அப்படியே இருந்துட்டு போகட்டும். ஐ சிம்ப்ளி டோன்ட் கேர்”

“எனக்கு எந்தப் பரிதாபமும் வேணாம்டா இடியட்… ஜஸ்ட் கெட் அவே” ஒருகட்டத்துக்கு மேல் அவனுக்கு ஈடு கொடுத்து பேசத் தெம்பில்லாமல் அவள் குரல் உயர்த்த, அதற்கு எதிர்மாறாகச் சித்தார்த் அவளருகே தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவள் மடியில் இருந்த விரல்களை எடுத்து தன் கன்னத்தில் பதித்தவன், “ஜெனி. நீ இவ்ளோ ஹார்ஷா பேசுறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” என்றான் அடிபட்ட குரலில்.

“என் கண்ணுக்கு அழகா, மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கிறது இந்த முகம் தான். இந்த அழகான பொண்ணோட முகம் மட்டும் தான்.”

அவன் மென்மையாகச் சொன்ன விதத்தில் அவளுள் உள்ளே ஏதோ உருகியது. நெகிழ்ந்த மனதோடு கண்களில் நீர் ஏற அவனையே பார்த்திருந்தாள்.

“தாய்மைங்கிறது அழகு தான். அதுக்காக அது மட்டுமே வாழ்க்கை இல்லடா. நாம நமக்காக வாழறதும், அந்த வாழ்க்கைல எவ்வளவு நிம்மதியா நிறைவா இருக்கோம்ங்கிறதும் தான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்….”

“மதர்குட் ஐ அதிகபட்சமா ரொமாண்டிசைஸ் பண்ணிட்டே இருக்கக் கூடாது ஜெனி. டோன்ட் க்ளோரிபை இட் டூ மச்…. அவ்வளவு உன்னதமான விஷயத்திலயும் சில விதிவிலக்குகள் இருக்கு…. எத்தனையோ குழந்தைங்க தாய் தகப்பன் இல்லாம ஆசிரமத்தில வளர்றதும், வயசானவங்க பிள்ளைங்க ஆதரவு இல்லாம ஹோம்ல இருக்கிறதும்….”

 “குழந்தைங்கிறது இட்ஸ் நாட் எ சொலுயூஷன் ஆர் எ ரெமிடி… பல பேருக்கு அமையும்.. சில பேருக்கு அமையாது. வாய்ப்பு இல்லேன்னா அடுத்து என்னன்னு போகணுமே தவிர இது ஒரு குறையா நினைச்சு அதுலயே தேங்கி நிக்குறது பத்தாம்பசலித்தனம் ஜெனி”

உண்மை தான்… அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் தான். ஆனால், ஒரு தலைமுறை நிறைவுறாமல் துண்டித்துப் போகும் துர்பாக்கியம் தன்னால் நிகழ வேண்டுமா? அந்தக் குற்றவுணர்வு தன் வாழ்நாள் முழுவதும் துரத்துமே.

தெரியாமல் இருந்தால் பரவாயில்லை. அறிந்தே இவன் வாழ்க்கையைக் கெடுப்பது ??

“உனக்கு நான்… எனக்கு நீ… நமக்கு நம்மைச் சேர்ந்தவங்க…. இது போதாதா நமக்கு?”

‘உனக்கு நான்… எனக்கு நீ…’

அவள் இதயம் கசிந்ததில் தன்னையும் மீறி அவன் வார்த்தைகளுக்குள் மூழ்கிப் போக இருந்தவள் கடைசி நொடியில் சுதாரித்தாள்.

அந்த மென்மையும், இதமும், அவன் கண்கள் வழி வழிந்த நேசமும் அவளை அச்சுறுத்தியது. எங்கே தன்னையும் மீறி ‘சரி’ என்று விடுவோமோ என்று பயந்தவள், “போதும் சித்தார்த். ஐ’யம் டயர்ட்….” என்றாள் வேகமாக.

“தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் பேசாதே. என்னைப் பேசி பேசியே ப்ரைன் வாஷ் பண்ண முடியும்னு நீ நினைச்சீனா, ஸாரி… இந்த விஷயத்துல நான் ரொம்பத் திடமா இருக்கேன். என்னை கம்பெல் பண்ணாதே… எனக்கு என்னிக்குமே நீ நல்ல ப்ரெண்டா இருக்கணும்னு ஆசைப்படுறேன்….”

”நல்ல பொண்ணா, உனக்குப் பிடிச்சவளா கல்யாணம் பண்ணி ‘சே டேடென்ட்ரே’ கூட்டிட்டு வா…. சந்தோஷமா உங்களுக்குக் கல்யாண விருந்து செஞ்சு போடுறேன். அதுக்கும் மேல நடக்காத எதையும் வீணா கற்பனை பண்ணாதே….”

“இந்தச் சலனமெல்லாம் பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரி… தன்னால கலைஞ்சு போயிடும்… நேரம் ஆச்சு… நீ கிளம்பு… ஆன்ட்டி பார்த்துட்டு இருப்பாங்க….”

அவன் கையை உதறி எழுந்தாள் தெளிவாக, பெருகும் கண்ணீரை உள்ளிழுத்தபடி.