காதல் கஃபே – 1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

1

“போன்ஜோ ஜெனிம்மா”

“வெரி குட்மார்னிங் தாத்தாகாரு… நான் தான் லேட்டா இன்னிக்கு..?”

முன்னே வந்து கை நீட்டிய கதிர்வேலிடம் சாவியைக் கொடுத்தபடியே தன் காஸ்மிக் சைக்கிளில் இருந்து இறங்கினாள் ஜெனிட்டா.

“காலைல இம்மாகுலேட் கதீட்ரல்ல ஒரு டெலிவரி தாத்தா. அங்க போய்ட்டு வர நேரமாயிடுச்சு…”

அவள் தன் இருசக்கர இறக்கைகளை நிறுத்திவிட்டு வருவதற்குள் கதிர்வேல் முன்னால் இருக்கும் கிரில் கதவைத் திறந்து, பெயர் பலகைக்கு நியான் ஒளிர வைத்து, கண்ணாடிக் கதவுகளை அகல விரித்திருந்தார்.

“எனக்கு போன் பண்ணியிருந்தா நான் போயிருப்பேனேம்மா?”

“லேட் நைட் ஆர்டர் தாத்தா… சர்ப்ரைஸ் கிப்ட் போல… காலைல வந்து ஸ்டாக் எடுத்துட்டு போனேன்…”

அவள் ஜன்னல் திரைகளை புல் செயின் கொண்டு உயர்த்தி விட, “அதானே பார்த்தேன். நேத்து நான் பூட்டிட்டு போன மாதிரி இல்லையேன்னு? பூந்தொட்டி எல்லாம் கொஞ்சம் தள்ளி இருக்கேன்னு யோசிச்சுட்டே நிக்குறேன், நீ வர்ற”

ஜெனிட்டா அவரின் அலம்பலில் வாய் விட்டு சிரித்தாள்.

“நாயுடுகாரு… உங்களுக்கு ஆனாலும் ரொம்ப தான் நெனப்ஸ்…”

“போம்மா… உனக்கென்ன தெரியும் சின்னப்புள்ள… மிலிட்டிரிகாரனோட பார்வைல இருந்து எதுவும் தப்பாது, தெரியுமில்ல….”

நலிந்த தன் மீசையை கதிர்வேல் வருடிவிட, ‘ப்ச்… பாருடா..’ ஒற்றைத் தோள் உயர்த்திக் கண்சிமிட்டிய ஜெனிட்டா உள்ளே நுழைந்து குழல் விளக்குகளைப் பொருத்தினாள்.

பளிச்சென்று விரிந்தது கூடம்.

நாளின் முதல் வேலையாக அன்னையின் புகைப்படம் முன்னால் கண்ணாடி பேழையில் நின்றிருந்த உயர மெழுகுவர்த்திகளை ஏற்றினாள். கதிர்வேல் கொண்டு வந்து வைத்த உதிரி ரோஜாக்களை முன்னால் தூவி ஒரு நிமிடம் கண்மூடி நின்றாள்.

“இன்றைய பொழுது இனிமையாய் இருக்க வேண்டும் இறைமையே” தன் அப்பா கற்றுத் தந்த வழக்கமாய் முணுமுணுத்து நிற்க, அன்றைய பொழுதின் துவக்கத்திற்கான புத்துணர்வும் அமைதியும் ஓடியது உள்ளுக்குள்.

நின்றபடியே சின்னப் பிரார்த்தனை முடித்து மேசை மேல் இருந்த ஒலிப்பெட்டியை எஜெக்ட் செய்து அது துப்பிய குறுந்தகடை ஆராய்ந்தாள்.

வைட்னி ஹூஸ்டனின் ‘ஐ லுக் டூ யூ’ தொகுப்பு.

‘ம்ம்ம்….. இன்னும் கொஞ்சம் மெலடியா இருக்கணும். இன்னிக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. பெப்பியா கேட்டு தலையை ஆட்டிட்டு இருந்தா வேலை நடந்த மாதிரி தான்’

‘பாப் மார்லி, நோ.. நியூயார்க் ஜாஸ்… ப்ச்.. வேண்டாம்… அடேல்..? ம்ஹும்.. இன்னிக்கு மூட் இல்ல…’

கொத்தாய் கையில் எடுத்த குறுந்தகடுகளை ஒவ்வொன்றாய் புரட்டிப் பார்த்து ஒதுக்கினாள்.

“குட் மார்னிங்கு ஜெனிக்கா…”

கோரஸாக வந்த குரலில் திரும்பிய ஜெனி, “மார்னிங் மணி.. மார்னிங் யமுனா” தன்னருகே வந்தவர்களிடம் சிரித்தபடி முகமன் கூறியவாறே அடுத்தக் குறுந்தகடை பொருத்தி ஓட விட்டாள்.

“என்னா ஜெனிக்கா, வேலையை ஆரம்பிக்கலாமா?” தொப்பி, கையுறை மாட்டிக் கொண்டு யமுனா வர, “ம்ம்.. ஆரம்பிக்கலாம்டா… இப்போதைக்கு அன்ப்ளான்ட் ஆர்டர்ஸ் எதுவும் இல்ல..”

பொன்மணியும் தன் ஆடையைத் திருத்தி இங்குள்ள பணியாளர்களுக்கான உடையில் வந்து நின்றாள். மூவரும் சிறிது நேரம் எது முக்கியம், எது முதலில், எது பிறகு என்று பேசிக் கொண்டார்கள்.

“நானும் என் வேலையைப் பார்க்கிறேன். நேரம் ஓடுது. அதுக்குள்ள எட்டரையா…? ஓ…. மை கடவுளே…” ஜெனி வேகமாக இன்று காலை போய் வந்த வேலைக்கான இன்வாய்ஸை தயாரித்தாள்.

நேற்றிரவே அவள் எழுதி வைத்திருந்த குறிப்பு அட்டவணையை அங்கிருந்த கிளிப் கோப்பிலிருந்து எடுத்துப் பார்த்த யமுனா, தனக்குரிய பணிக்கான காய்கறிகளைக் கழுவி துடைக்கத் துவங்கினாள்.

மணி முட்டை தட்டுகளைத் தூக்கி வைத்து வெள்ளை மஞ்சள் கருக்களைப் பிரிக்கத் தொடங்க, கதிர்வேல் தரையைத் துணிக்குச்சி வைத்து துடைக்க ஆரம்பித்தார்.

பாராதது போலப் பார்த்தாலும் ஜெனி எல்லாவற்றையும் ஒருமுறை கவனித்துச் சிறு திருப்தியுடன் உள்ளறைக்குச் சென்றாள்.

Sunrise, sunrise

Looks like mornin’ in your eyes

But the clock’s held 9:15 for hours

Sunrise, sunrise

நோரா ஜோன்ஸின் “சன்ரைஸ்” பாடல் பின்னணியில் இசைக்க, இவள் உதடுகளும் லேசாக முணுமுணுத்தன.

மெல்லிய இசையும், காலை இளங்கதிரின் வெளிச்சமும், வாசனை மெழுகுவர்த்தியின் இதமான லேவண்டர் நறுமணமும் அந்தக் காலை வேளையை ரம்யமாக்கி இருந்தது உண்மை!

லேயர் கட்டிங்கில் தோள்வரை இழை இழையாகப் பிரிந்து தொங்கும் கரும்பழுப்பு கூந்தலை வெள்ளைத் தொப்பிக் கொண்டு அடக்கிக்கொண்டே எதிரில் இருந்த கண்ணாடியில் தன் தோற்றத்தை ஆராய்ந்தாள் ஜெனி.

மாசு மருவற்ற சருமம் தான். சின்ன நெற்றியின் கீழ் பேசும் நீண்ட நயனங்கள், கத்தியாய் கீழிறங்கும் நாசி; சாட்டின் கன்னங்கள், மெல்லிய உதடுகள், அதற்கு ஈடு செய்யும் சற்றே சதைபற்றான மோவாய்;

ஃப்ரெஞ்சு தகப்பனும் தமிழ்த் தாயும் சேர்ந்து செய்த கலவை பால்வண்ண மேனியுடன் அழகிய யுவதியாக நின்று எதிரே இருந்த பிம்பத்திடம் கண்ணடித்தது.

ஐந்தரை அடி, அந்த உயரத்திற்கு ஏற்ற பி.எம்.ஐ பிசகாத உடல்வாகு; கீழ் உதட்டின் இடது ஓரம் உள்ள அபாய மச்சம் மட்டும் பார்க்கும் சில இளசுகளைப் பதற வைக்கலாம்.

இருபத்தாறு வயது இளமை தன் அரசாட்சியை அங்கம் எங்கும் அணு அணுவாய் படர விட்டிருக்க….

‘ம்ம்.. நாட் பேட்…’ கிண்டலாக உயர்ந்தன வில்லென வளைந்திருந்த அவள் புருவங்கள்.

சற்றே நெருங்கி தன் விழிகளை உற்றுப் பார்த்தவள், ‘சம்திங் மிஸ்ஸிங்… நேத்து நைட் சரியா தூங்காதது கண்ணு டல் அடிக்குதோ!!??’

ஏதோ தோன்ற, கண்ணாடி ஓரத்தில் இருந்த குட்டி வட்டப் பொட்டை எடுத்து ஒட்டிக் கொண்டாள். நடுநெற்றியில் இப்போது செந்தூர அகல் ஒன்று மையம் கொண்டது.

‘ம்ம்ம்.. இப்ப ஓகே…’ பறக்கும் முத்தம் ஒன்றை ஊதி தனக்குத் தானே பரிசளித்தவள், பச்சை மேலாடையின் மேல் முட்டி வரை நீளும் வெளிர்மஞ்சள் ஏப்ரன் அணிந்து கொண்டாள்.

ஏப்ரனின் குறுக்கே ‘சே டேடென்ட்ரே’ (se détendre) சிகப்பு நிறத்தில் மிளிர்ந்த எழுத்துகளை அவள் விரல்கள் ஆசையுடன் வருடின.

அவளுடைய கஃபேயின் பெயர். ‘ரிலாக்ஸ்’ என்ற பொருள் வரும் ஃப்ரெஞ்சு வார்த்தை.

விளையாட்டு போல மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தது இன்று பாண்டிச்சேரியின் பெயர் சொல்லும் ஃப்ரெஞ்ச் உணவங்களில் ஒன்றாக இடம் பிடிக்கும் பிரயத்தனத்தில் இருக்க…

பெயரை வருடும்போதே ‘என் பிள்ளை இது’ தன் குழந்தையைத் தடவிப் பார்க்கும் தாயின் பூரிப்பு அவள் முகத்தில் மிளிர்ந்தது.

“சிலிங்.. சிலிங்” பழகிய ஒலி கேட்டது வெளியே.

வாடிக்கையாளர் யாரோ உள்ளே வரும் அரவம் அசையும் சைம் (chime) மணிகளின் அதிர்வில் தெரிய, ஜெனி விரைந்து தயாராகி வெளியே வந்தாள்.

“நான் போறேன் ஜெனிம்மா”

கதிர் இவளிடம் சொல்லிவிட்டு வரவேற்பு மேசைக்குச் செல்ல, அவரிடம் ஒப்புதலாய் தலையசைத்து வொர்கிங் ஏரியாவுக்குள் நுழைந்தவள், இந்த வருட நிறைவை ஒட்டி யாருக்கு எவ்வளவு போனஸ் தரவேண்டும் என்ற சிந்தனையுடன் ஸ்டான்ட் மிக்ஸரை ஓட விட்டாள்.

நேற்றே அளவுகள் எடுத்து புளிக்க வைத்திருந்த மாவை கொட்டி வெண்ணெய் சேர்த்து சரியான பதம் வந்ததும் உருட்டி கண்ணாடி தாளில் சுற்றி இறுக மூடி வைத்தாள்.

தயாராக இருந்த வெண்ணைய் பட்டைகளை அறை வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து இரு மாவு உருண்டைகள் இடையே ஒரு வெண்ணெய்ப் பட்டை எனப் பிரித்துப் பிரித்து அடுக்கி லேமினேட் செய்வது போல ஒன்றன் மேல் ஒன்று சீராய் வைக்க…

“யக்கா, அந்த காய்கறி ரேட்டுக்கு எல்லாம் அரிஞ்சாச்சு… நீ அதைப் பாரு… நான் இதை தேய்க்கிறேன்”

“அது ரேட்டு இல்ல யமுனா. ரேடாடூயி (Ratatouille) . எத்தனை தடவை சொல்லிக் கொடுக்குறதடி உனக்கு?” அவள் தலையைச் செல்லமாகத் தட்டினாள் ஜெனி.

“அட போக்கா… எங்கம்மா பண்ற பொங்கக் கூட்டு மாதிரி எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு கிண்டி வைக்குற. இதுக்கு ரேட்டு, மௌஸுனு பேரு வச்சிக்குன்னு… எனக்கு அதெல்லாம் வாய்ல நுழையாது போ…”

“அடியே உன்னை…” நெற்றியில் அடித்துக் கொண்ட ஜெனி, தங்கள் உணவகத்தின் சிக்நேச்சர் டிஷ்கள் அனைத்தும் அனுதினமும் பெயர் பங்கம் அடைவதை எப்போதும் போலவே நொந்து போய்ப் பார்த்தாள்.

யமுனா சொல்வது ஒருவகையில் சரி தான். காய்கறி சாலட் போலத்தான் இந்தப் பாரம்பரிய பிரெஞ்ச் ரேடாடூயி. வெங்காயம், தக்காளி, பூண்டு, பெரிய கத்திரிக்காய், குடை மிளகாய், ஜுகினி என ஒவ்வொன்றாய் வதக்கி, கடைசியாய் ஆரிகானோ, தைம், ரோஸ்மேரி என மூலிகை இழைகள் தூவி….

“அது ஒரு மக்குக்கா.. அதுகிட்ட போய் சொல்றியே? பத்தாங்கிளாஸ் பாஸ் பண்றதுக்குள்ள முக்கி முக்கி பைல்சே வந்துடுச்சு அதுக்கு…” பொடித்த சக்கரையைச் சலித்துக் கொண்டிருந்த மணி அங்கிருந்தே கலாய்க்க..

“ஆமா.. இவ பெரிய கலெக்டருக்கு படிச்சவ. ஒன்பதாங்கிளாஸ்க்கு லொள்ளை பார்த்தியாக்கா…?”

“ஒன்பதாங் கிளாஸ்னாலும் நான் முதல் தடவையே பாஸுடி கூறு கெட்டவளே… தாத்தா.. நீயே சொல்லு, பாஸ் பெருசா, பெயிலு பெருசா?”

உலை அடுப்பை சுத்தம் செய்து கொண்டிருந்த கதிர்வேல் அவள் கேள்விக்கு இருகைகளையும் உயர்த்திக் கும்பிட்டார்.

எதற்கு வம்பு? தான் படிப்பு வராமல் பட்டாளம் ஓடிய கதை எல்லாம் வெளியில் வந்தால் மானம் போகும். அனுபவம் பேசியதில் அவர் தெளிவாக, “நான் இந்த விளையாட்டுக்கே வரல..” தன் வாயை இறுக ஜிப் போட்டுக் கொள்ள…

“யக்கா.. நீ சொல்லுக்கா..”

“வேணாம்டி ரௌடி ராக்காயிஸ்… இனிமே நானும் ‘ரேட்டு’னே சொல்லிடுறேன், போதுமா தெய்வங்களே?” தன் பக்கம் திரும்பிய நாட்டாமை சொம்பை தொட்டுவிடாமல் நைசாக நழுவினாள் ஜெனி.

இதற்கு மேல் நின்று வாயடித்து வம்பு வளர்க்க நேரமில்லை. பத்து பத்தரை போல வாடிக்கையாளர்கள் வரத் துவங்கி விடுவார்கள். வார இறுதிகளில் எட்டு மணிக்கே தொடங்கும் உணவகம் வார நாட்களில் பத்து மணிக்குத் துவங்கும்.

காளான்களாய் முளைத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் புண்ணியத்தில் இப்போதெல்லாம் வெள்ளியே அறிவிக்கப்படாத விடுமுறையாகத் தோன்றத் துவங்கியிருக்க, இன்றும் அடுத்த இரண்டு தினங்களும் பரபரப்பான நாட்கள் தான் இவர்களுக்கு.

ரேடாடூயியைத் தொடர்ந்து நம் ஊர் மீன் குழம்பு மாதிரியான பொலியாபேஸ், முட்டையின் வெள்ளைக் கரு, மஞ்சள்கரு வைத்து செய்யும் சீஸ் சுஃப்ளே, கிரப்ஸ் என்கிற இனிப்பு அப்பத்திற்குத் தேவையான தோசை (pancake) மாவு, க்ரீம் ப்ரூளேவுக்கான கஸ்டர்ட் மற்றும் கேரமல் என,

மூச்சு விடவும் நேரம் இன்றி யமுனாவை உதவிக்கு வைத்துக் கொண்டு ஜெனி அடுத்தடுத்து தயார் செய்ய, ஃப்ரெஞ்ச் காபி வகைகளுக்கான சில முன் தயாரிப்புகளை மணி எடுத்து வைத்தாள்.

பன், இனிப்பு பிரட், கேக், பிஸ்கட்டுகள் என வீட்டுக்கு வாங்கிச் செல்ல வந்தவர்களைக் கதிர் வெளியே கவனித்துக் கொண்டார். பத்தரை போல பேஸ்ட்ரி செஃப் வந்துவிட, பொன்மணி அவருடைய உதவிக்குச் சென்றாள்.

திட்டமாக ஜெனி தயாரித்து வைத்திருந்த மாவு வெண்ணெய் பட்டைகளை எடுத்த மாஸ்டர் அளவான முக்கோணங்களாக வெட்டி கூம்பு வடிவில் சுருட்டி இதழ் இதழாக க்ரோய்ஸன்ட் விரிக்க, அவர் நடுநடுவே கேட்பதை எடுத்துக் கொடுத்தபடி மணி பேக்கிங் ட்ரேக்களை அடுக்கினாள்.

இனி வரிசையாக கேக்குகள், குக்கீஸ், இனிப்பு பேஸ்ட்ரிகள் என்று இவர்கள் வேலை மாலை வரை நீளும்.

கஃபேயின் உள் உணவகத்துக்கு வாடிக்கையாளர்கள் வரத் துவங்கி விட, அவர்கள் கேட்கும் உணவு வகைகளை மீதம் இருப்பவர்கள் ஆர்டர் எடுத்து தயாரிக்க… மூன்று மணி நேரம் ஓடியது தெரியவில்லை.

மதியம் ஒன்றரை மணி போல ‘ஓபன்/க்ளோஸ்ட்’ பலகையை நிறம் மாற்றிய ஜெனி, கண்ணாடிக் கதவைச் சார்த்திவிட்டு உள்ளே வந்தாள்.

நடுவே இவள் ஒரு கருங்காப்பியையும், மற்றவர்கள் பால் சேர்த்த தேநீரையும் மட்டும் அருந்தியிருக்க, உழைத்த உடலின் வயிறு தன் இருப்பை உணர்த்தினாலும் அதையும் மீறிய அலுப்பு ஆளை அசத்தியது.

“யக்கா… நீ சாப்பிட வரல…!?” பெண்கள் இருவரும் தங்கள் டிபன் பாக்ஸ்களுடன் உடை மாற்றும் அறையின் தரைவிரிப்பு மேல் நியூஸ் பேப்பர் பரப்பி அமர்ந்திருந்தார்கள்.

கதிர் தாத்தாவும், மாஸ்டரும் மதிய உணவுக்கு வீட்டுக்கு போய் விட்டு மாலை நான்கு மணிக்கு மேல் வருபவர்கள். இவர்கள் இருவரும் தங்கள் வேலையை முடித்து ஆறு மணிக்கு கிளம்பிவிட, மாஸ்டர் வேலையைப் பொறுத்து ஆறரை, ஏழு வரை இருப்பார்.

அதற்குப் பிறகு கஃபேயை அடைக்கும் ஒன்பது மணி வரை கதிர்வேல் தான் ஜெனிக்கு உதவி.

உள் உணவகம் காலை நேரம் மட்டும் தான் என்பதால் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை அவரே சமாளித்து விடுவார். ஜெனி அந்த நேரம் பண விவரங்கள், அடுத்த நாள் வேலைக்கான ஆயுத்தம், சிறிய அளவிலான பேக்கிங் ஆர்டர்கள் செய்வது என இருப்பாள்.

“நீங்க சாப்பிடுங்க… எனக்குத் தூக்கமா வருது. காலைல சீக்கிரம் எந்திருச்சது ” தொப்பியையும், கையுறைகளையும் கழற்றியவள், ஏப்ரனை நீக்கி தங்கள் இணையத் தளத்தைக் கைபேசியில் ஆராய்ந்தாள்.

“என்னக்கா? என்னமாச்சும் வந்துருக்கா?”

“ம்ம்.. ஒரு பார்ட்டி ஆர்டர். அடுத்த வாரத்துக்குத் தான். நேர்ல பேசிட்டு அதைப் பார்த்துக்கலாம். இன்னொரு கேக் ஆர்டர் வந்துருக்குடி நாளைக்கு. இன்னிக்கு நைட் பண்ணனும்….” கட்டியிருந்த தன் கூந்தலை விரித்துக் கோதியபடி ஜெனி அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் சரிந்து விட,

“நான் வேணா இருக்கட்டுமாக்கா…?” யமுனா கேட்டாள்.

“வேணா யமுனா… இரண்டு கிலோ தான். நான் பார்த்துப்பேன். நீ எப்பயும் போலக் கிளம்பு..”

“யக்கா.. கூட மாட வச்சுக்கோ… இது வீட்டுக்கு போய் என்ன பண்ணப் போவுது. பாட்டா கத்தவிட்டு அதுல வர்ற ஹீரோவை எல்லாம் சைட் அடிச்சிக்கிட்டு வெட்டியாத்தான் கிடக்கும்…” மணி யமுனாவை வம்பிழுத்தாள்.

“ஆமா… இவ மட்டும் ரொம்ப யோக்கியம். வீட்டுக்காரரை வச்சுக்கிட்டே டிவியை ஈஈன்னு பார்ப்பா… பொறந்த புள்ள பாலுக்குன்னு அழுகும். இது விஜய் தேவகௌடாவை ஆன்னு பார்க்கும்”

தயவு தாட்சண்யமே இல்லாமல் அடித்துக் கொண்டாலும் அவள் வீட்டு இட்லி இவள் மூடியில். இவள் வீட்டு எலுமிச்சை சாதம் அவள் தட்டில். ஜெனி தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

“ஏய்… அது விஜய் தேவரகொண்டா…. தேவகௌடாவாம்… கூமுட்டை.. கூமுட்டை. அவரு நம்ம நாட்டு பிரசிடென்ட்டுடி…”

‘அடக் கடவுளே.. நமக்குத் தெரியுற கொஞ்ச நஞ்ச இந்தியன் பாலிடிக்ஸும் டணால் ஆகிடும் போலவே…’ இருவரும் தீவிரமாக வாதிட்டுக் கொள்வதில் ஜெனி பொங்கும் சிரிப்பை உதடுகளுக்குள் மெல்ல…

“இந்தா உளறாதே… அவரு ஆந்திரா ஆக்டரு…. கிருஷ்ணர் வேஷம் போட்டுட்டு வருவாருல்ல…”

‘தெய்வமே…’

“லூஸுங்களா… அவரு ப்ரைம் மினிஸ்டரா இருந்தவரு. கிருஷ்ணரா நடிச்சது என்.டி.ஆர்… சரி, இந்த வாரம் என்ன படம் பார்த்தீங்க? ஏதாச்சும் நல்லா இருக்கா?” அதற்கு மேல் அரசியல் தாங்காது என்பதால் பேச்சை மாற்றிய ஜெனி இவர்கள் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

இது பெண்கள் மூவரும் வம்பு வளர்க்கும் நேரம்.

“இல்லக்கா.. எங்கயும் போகல… இனி தீபாவளி ரிலீஸுக்குத் தான் சினிமா தியேட்டருக்கு கூட்டிட்டுப் போவேன்னு என் வீட்டுக்காரரு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டாரு…”

“ஏனாம்…?”

“அந்த அண்ணனும் இவ மாதிரியே கஞ்சபிசுனாரி ஆயிடுச்சா இருக்கும், வேறென்ன?”

“ஏ… குரங்கே… நீ வாயை மூடு..”

“அடங்க மாட்டீங்கடி….”

சிரித்தபடி எழுந்த ஜெனி பேசிக் கொண்டே மூன்று ஆம்லேட்களைத் தயாரித்தாள். இவளுக்குப் பாலாடைத் துருவல் சேர்த்து. அவர்கள் இருவருக்கும் மிளகு தூக்கலாய். கூடவே பெரிய பீங்கான் கோப்பையில் வெதுவெதுப்பான காய்கறி சூப், இவளுக்கான மதிய உணவு.

வயிறுக்கு உணவும், செவிக்கு வம்பும் அளவாய் ஈந்து, வெட்டி அரட்டையில் முக்கால் மணியைக் கழித்து எழுந்த போது உண்மையிலேயே உடம்பில் மனசில் அவ்வளவு சுறுசுறுப்பு வந்திருந்தது.

யார் சொன்னது பெண்கள் கதையடிப்பது வீண் நேர விரயம் என்று?

இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்… விச்ராந்தியாகப் பேசி, சிரித்து, களைப்பு மறந்து, அடுத்த வேளைக்கான உழைப்புக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் தருணம்.

கை துடைத்து வந்த மணியும் யமுனாவும் பேக்கிங் தட்டுகளை மின்சார உலையில் அடுக்கி தங்கள் வேலையைத் தொடர, ஜெனி காய்கறி, மளிகை என அந்த வாரத்துக்கான காசோலைகளை எழுதினாள். செலுத்த வேண்டிய சில தொகைகளை ஆன்லைனில் செலுத்திவிட்டு, உள்ளிருப்புகளைக் கணக்கெடுத்தாள்.

“மொசரெல்லா, ஃபெடா சீஸ் எல்லாம் இன்னொரு கேஸ் எங்க யமுனா? இன்னிக்கு காலைலயே பார்த்தேன். ஒரு பாக்ஸ் தான் இருந்துச்சு.”

“அது எங்கக்கா வந்துச்சு? இன்னும் ஸ்டாக்கே வரல..”

“ஆர்டர் போட்டு இரண்டு வாரம் ஆச்சே. வந்துருக்கும். கலந்து வச்சிருப்பே. நல்லாப் பாரு..”

“இல்லக்கா. போன வாரமே சொன்னியே, போன் பண்ணி நியாபகப்படுத்தனும்னு. பண்ணலையா நீ…?”

“அப்படியா சொன்னேன்..? மறந்தே போய்ட்டேன்டி…” அலைபேசியை எடுத்து நினைவில் இருந்த எண்களை எக்ஸ்டென்ஷனுடன் ஒற்றினாள்.

“ஹலோ….”

“மாதவன், எப்பப்பா எங்களுக்கு டெலிவரி பண்ணப் போறீங்க? எத்தனை நாளாச்சு நான் சொல்லி..?”

“??? எக்ஸ்க்யூஸ் மீ… மாத”

“எங்க ஸ்டாக் இப்ப நில்(nil). உங்களால கொடுக்க முடியலேன்னா அதைச் சொல்லிடுங்களேன், நாங்க வேற எங்கயாச்சும் பார்த்துப்போம்ல…. ஒரு டப்பா கம்பெனிக்கு ஒரு டப்பா மேனேஜர்யா நீங்க…”

கொஞ்சம் உதார் விட்டால் தான் வேலையாகும் என்று அள்ளிவிட்ட ஜெனி வழக்கம் போலக் கிண்டல் அடிக்கத் துவங்க…

“மிஸ்… ப்ளீஸ் ஹோல்ட் ஆன்… மாதவன் ஒரு எமர்ஜென்சின்னு லீவ்ல போயிருக்காரு. ஸாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ்… உங்க டீடைல்ஸ் சொல்லுங்க, நான் பார்க்கிறேன்… யுவர் குட் நேம்?”

‘ஓ.. அதுதான் குரல் வேற மாதிரி இருக்கா? அதானே, மாதவன் என்னிக்கு இவ்ளோ ஃபார்மலா பேசியிருக்கான்!!!???’

“ம்ம்ம்.. உங்க கிளையன்ட் கோட்???”

சொன்னாள்.

“ஜெனிட்டா ரெமி…” தன் மௌனம் பேர் சொல்ல மறுக்கிற மாதிரி தோன்றிவிட்டதோ!? வேகமாகப் பெயரையும் சேர்த்து சொன்னாள்.

“அவரு சிஸ்டம்ல என்ட்ரி எதுவும் போடாம போயிட்டாரு போல. ஸாரி… உங்க பர்சேஸ் லிஸ்ட்டை இன்னொரு முறை சொல்ல முடியுமா?”

கையில் இருந்த பட்டியலை ஒருமுறை படித்தாள்.

“ஃபெடா, ஹலூமி மட்டுமாவது நாளைக்கு உடனே கொடுத்துடுங்க, சுத்தமா ஸ்டாக் இல்ல…”

இவை இரண்டும் வெள்ளாடு, செம்மறியாட்டுப் பால்களைக் கலந்து செய்யும் ஸ்பெஷாலிட்டி சீஸ் வகைகள். வேறு எங்கும் கிடைக்காது. முன்பே சொல்லி வைத்திருந்தால் ஆரோவில்லில் கொஞ்சமாக வாங்கலாம். அதற்கும் நிறைய நடைமுறைகள் உண்டு அங்கே.

பெரிய அளவில் இவர்கள் மட்டும் தான் தயாரிப்பது. பாண்டிச்சேரி, கடலூர், வட தமிழகம் முழுவதும் டிஸ்டரிப்யூஷனும் இவர்களே.

“கண்டிப்பா மேடம். நாளைக்குக் காலைல எல்லாத்தையும் ஒன்னாவே டெலிவரி பண்ணிடுறோம். ஒன்ஸ் அகைன் ஸாரி…”

தான் பெயரை சொல்லியும் கூட அவன் மேடம் என்று அழைத்துப் பேசுவது அவளுக்கு வினோத உணர்வைக் கொடுத்தது. இயல்பான மரியாதையா, நீ அதிகம் பேசிவிட்டாய் என்று சொல்லாமல் சொல்கிறானா?

“நீங்க…?” சிறு சங்கடத்துடன் இவள் இழுக்க, அவன் சொன்ன தகவலில் ஜெனிக்கு இன்னுமே வெட்கமாய்ப் போனது.

‘அந்தப் பக்கம் யார்னு கூடத் தெரியாம? உனக்குக் கொஞ்சமில்ல ஜெனி, ரொம்பவே வாய் ஜாஸ்தியாயிடுச்சு…’