கலைந்த ஓவியமே – 4

அத்தியாயம் 4

“என்ன பாப்பாவா, ஹலோ என்னை பாத்தா எப்படி தெரியுது, பேம்பர்ஸ்ஸா போட்டுட்டு சுத்திட்டு இருக்கற மாதிரி இருக்கா,  பாப்பான்னு சொல்ற…” என எகிறி  நின்றாள் நவினின் தங்கை நிவேதா…

‘இது என்னடா வம்பா போச்சு…’ என்பதை போல் பார்த்து வைத்தவன் “மன்னிச்சுடுங்கமா…” என பணிவாக கூறி முன்னால் நடக்க”என்ன ம்மாவா, ஹலோ…” என சொடக்கிட்டு அழைத்தாள்.

அவள் அழைத்த விதம் அவனுக்கும் கோபத்தை உண்டாக்க சட்டென அவளின் அருகில் சென்றவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் நெருங்கி நின்று “அதுக்காக,சாரி டி பொண்டாட்டின்னா சொல்ல முடியும்…” என்றதும் நிவேதாவின் கண்கள் இரண்டும் விரிந்து “யூ…” என அடுத்து சொல்ல வருவதற்குள்

“மன்னிச்சுடுங்க க்கா,…” என கண்சிமிட்டி கூறியவன் அவளின் இதழ் விரிப்பையும், விழி விரிப்பையும் ஓர பார்வை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான்…

வெளியில் வந்தவனின்  இதழ்கள் என்னவோ “ஏப்பா சாமி, சரியான பஜாரியா இருப்பா போல, வாயை திறந்தா மூடவே மாட்டிங்குது…” என முனுமுனுத்துக் கொண்டாலும் புன்னகை மலர் நன்றாகவே மலர்ந்தது அவனின் இதழ்களில்.

‘சரவணா, என்ன இது சுத்தமா சரியில்ல, நம்ம வீட்டுலயும் பொம்பளை புள்ளைங்க இருக்குன்னு

யோசிக்கணும்,..” என மதி அவன் செய்ததை கண்டித்தது என்றால் அவனின் மனமோ அவளின் செய்கையும், துடுக்கான பேச்சும், முறைக்கும்  கண்களும், எவ்வித சிவப்பு ப்பூச்சும் இல்லாமல் இருந்த இதழ்களின் சிவப்பும் நினைவு வர தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்…

“வயசு புள்ளை வீட்டுல இருக்கான்னு ஞாபகம் இருக்கா சரவணா உனக்கு, பொறுப்பு இல்லாம கண்ட கண்டத யோசிச்சுட்டு இருக்க, உனக்கு இனிமே தான் தலைக்கு மேல பொறுப்பு இருக்கு…” என மதி மீண்டுமொருமுறை அதட்டல்போடவும் தான் கட்டுப்பாடற்ற மனதை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

*******

ஏற்கனவே  புரோக்கர் அனுப்பிய முகவரியை (அட்ரசை) ஒருமுறைக்கு இருமுறை பார்த்தவன் கூகுளின் உதவியுடன்  நவினின் வீட்டை அடைவதற்கு  கிட்டத்தட்ட அவனுக்கு அரைமணி நேரத்திற்கு மேலாகி விட்டது…

நவினின் வீடு இருப்பது என்னவோ சூரம்பட்டியில் தான் ஆனால் கூகுள் காட்டிய வழி தான் சுற்று பயணமாக இருந்தது… முகவரியில் இருந்த வீட்டிற்கு வந்தவன் வீட்டின் அழகில் லாயித்து தான் போனான்…

சின்ன வீடு தான் ஆனால் வெளிப்புறம் அத்தனை அழகாக இருந்தது. மாடர்ன் ஹவுஸ் என்பார்களே அது போல இருந்தது நவினின் இல்லம்.ஒரு இரண்டாயிரம் இல்லை மூவாயிரம் சதுரடி தான் இருக்கும்…

அதில் இத்தனை அழகாக வீட்டை அமைக்க முடியுமா என்பதிலயே சரவணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டை சுற்றிலும் காம்பவுன்ட் சுவருடன் அமைக்கப்பட்ட கேட் இருந்து.வீட்டிற்கும் கேட்டுக்கும் கிட்டத்தட்ட  நானூறடி இடைவெளி இருக்கும்..

வீட்டின் வலது, இடது புறத்தில் வேப்ப மரமும், தென்னை மரமும் அழகாக வீற்றிருந்தது… வெளியில் இருந்து பார்க்கவே கேட்டை தான்டி உள்ளே  செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் எழாமல் இல்லை… இருந்தும் கேட்டின் வாயிலில் இருந்தப்படியே வண்டியின் ஹாரணை அழுத்தினான்.

சில நிமடங்கள் எந்தவித பதிலும் வராமல் போக வண்டியிலிருந்து கிழே இறங்கியவன் ஆள் உயர கேட்டை எட்டிப் பார்த்தப்படி கேட்டின் வலது புறத்தில் இருந்தபெல்லை அழுத்தினான்.

“காலிங் பெல் சத்தம் காதுல விழுதா இல்லையா நிவேதா,கேட்டை போயி ஓபன் பண்ணு..” சமையலறையிலிருந்து சிவகாமி கத்தினார்.

“நம்ம கேட்காத மாதிரியே இருந்துப்போம்…” என நினைத்தவள் காதில் இருந்த ஏர் பாட்ஸ்ஸை கழட்டாது அமர்ந்துக் கொண்டாள்…இங்கு வெளியில் இருப்பவனோ மீண்டும் மீண்டும் காலிங் பெல்லை அழுத்திக் கொண்டே இருந்தான்…

சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க சமையலறை சுத்தம் செய்து கொண்டிருந்த சிவகாமி அவசரமாக வெளிவந்தவர் ஹாலில் அமர்ந்திருந்த நிவேதாவின் முதுகிலயே ஒன்று போட்டப்படி”இதை  காதுல மாட்டிக்க வேண்டியது, அப்பறம் காது கேட்காத மாதிரியே  உட்கார்ந்துக்க வேண்டியது…” எனத் திட்டிக் கொண்டே கேட்டை நோக்கி நடந்தார்…  கேட்டின் வாயிலில் நின்றுகொண்டு வீட்டை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனை புருவங்கள் சுருங்கி பார்த்தார் சிவகாமி. நேராக கேட்டின் அருகில் சென்றவர் “யாருங்க தம்பி…” என விசாரித்தார்.

“நவின் பிரசாத் வீடு தானே மா…” என கேட்டான்.

ஆமாம் ப்பா, நவின் ஃப்ரெண்ட்டா ப்பா,…” என்றப்படி கேட்டின் கதவை திறந்து விட்டு உள்ளே வர கூறினார்.

“நவின் ஃப்ரெண்ட் எல்லாம் இல்லைங்க ம்மா, நான் மயிலம் பாடியில இருந்து வரேன் ம்மா…” என்றதும் அவரின் புருவங்கள் மெல்ல சுருங்கி விரிந்து

“அட,பொண்ணு வீட்டுக்கறாங்களா., உள்ள வாங்க தம்பி…” என குரலில் சிறு கலகலப்போடு  அழைத்தார். சட்டென உள்ளே செல்ல சிறு சங்கடமாக இருந்தாலும் மனதில் தன் தங்கையின் விருப்பமே முதன்மையாக தோன்ற வண்டியை கேட்டிலயே நிறுத்தி விட்டு  உள்ளே சென்றான்…

“வாங்க தம்பி உள்ள வாங்க…” என வீட்டினுள் அழைத்தார்.

“இல்லைங்க ம்மா, பரவாயில்ல…” என போர்டிக்கோவிலயே தயங்கி நின்றான். தயங்கி நிற்பவனை மேலும் வற்புறத்தி உள்ளே அழைக்க அவருக்குமே சங்கடமாக இருந்தது… 

“தம்பி உட்காருங்க…” என சொல்லவும் ஃபோர்ட்டிகோவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். சிறிது நேரம் மெளனமே அங்கு ஆட்சி செய்ய அதை சிவகாமியே களைத்தார்.

“இருங்க தம்பி, டீ வைச்சுட்டு வரேன், டீ குடிப்பீங்க தானே..” என சிவகாமி கேட்டவுடன்

“அதெல்லாம் வேண்டாமுங்க ம்மா, குடிக்க தண்ணி மட்டும் போதுங்கம்மா…” எனக் கேட்கவும் தான்  வந்தவனுக்கு  தண்ணிக் கூட கொடுக்காது நிற்பது புரிந்தது.

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவர் “வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணி கூட கொடுக்காம பேசிட்டே  இருக்கேன் பாருங்க. தப்பா எடுத்துக்காதீங்க தம்பி…” என்றவர் அவசரமாக உள்ளே நுழைந்து தண்ணிரை கொண்டு வந்து சரவணனிடம் கொடுக்க, எழுந்து நின்று வாங்கி கொண்டவன் நீரை பருகி விட்டு சிவகாமியின் கையில் சொம்பை கொடுத்தான்.

“உட்காருங்க தம்பி…” என கூறவும் நாற்காலியில் அமர்ந்து கொண்டவனுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பதென தெரியவில்லை.

ஊரில் இருக்கும் அத்தனை பஞ்சாயத்திற்கும் முதலில் நிற்பவன் எதிரில் இருப்பது பெரியவர்களோ, சின்னவர்களோ மனதில் இருப்பதை வெளிப்படையாகவே கூறி விடுபவன் இன்று தன் தங்கையின் திருமணத்திற்கு பேசவே அத்தனை தயங்கினான்…

“புள்ளைக்கு ஏதாவது விசேஷம் வைச்சு இருக்கீங்களா தம்பி,..” அவனின் தயக்கத்தை புரிந்து கொண்டவராய்  சிவகாமியே பேச்சை ஆரம்பித்தார். 

“அதுக்காகதா ம்மா உங்களை பாத்து பேச வந்தேன்…” என நேராக விசயத்திற்கு வந்தான்…

அவன் பேச வருவது புரியாமல் பார்த்தார் சிவகாமி. அவரின் பார்வையை புரிந்துக் கொண்ட சரவணனோ

“முன்னாடியே எங்களை பத்தி புரோக்கர் சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்னுங்கம்மா …” என தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தான். இத்தனை தயக்கதிலும் அவன்  நிமிர்ந்து தான் அமர்ந்திருந்தான். ஆண்களுக்கு அழகே அந்த நிமிர்வு தானே. அவனின் நிமிர்வும், மரியாதை கலந்த பேச்சும் சிவகாமிக்கு சரவணனின் மேல் நல்ல அபிப்பராயத்தைக் கொடுத்திருந்தது…

“புரோக்கர் சொல்லி இருந்தாலும் சரி சொல்லல ன்னாலும் சரிங்க ம்மா,  எங்க வீட்டாலுங்க பத்தி சொல்லிடறேன் ம்மா, என் பேரு சரவணன், பாப்பா பேரு  மகாலட்சுமி (மகிமா) எனக்கு பதினைஞ்சு வயசா இருக்கும் போதே அப்பா, அம்மாவும் தவறீட்டாங்க, அப்ப இருந்தே காடு, தோட்டமுன்னு என் பெறுப்புல வந்துருச்சு, படிப்பை பாதில விட வேண்டிய நிலைமை,  தாய் மாமா உதவியால எல்லாத்தையும் பாத்துகிட்ட., அப்பா, தாத்தா சேர்த்து வைச்ச சொத்து காடு, தோட்டமா இருக்கு, நான் கொஞ்சம் சேர்த்து வைச்சதை தங்கச்சி பேருல பணமா தான் போட்டு வைச்சு இருக்கேன்… அவளுக்கு தான் இத்தனை சொத்தும், பணமும்,..” என சரவணன் சொல்ல சொல்ல சிவகாமியின் கண்கள் சுருங்கி விரிந்தது…

அவரின் பார்வையில் தெரிந்த கேள்விகளை அறிந்து கொண்ட சரவணனோ “இல்லைங்க ம்மா நீங்க கொஞ்சம் எதிர் பார்க்கறீங்கன்னு அத்தை சொன்னாங்க… அதான் நேருலயே பேசிட்டு போலாம்னு வந்தேன்., அவ பேருல மூணு, நாலு கோடி பணம் இருக்கும்மா, நூறு பவனுக்கு மேல நகையும் செஞ்சு வைச்சு இருக்கேன், நீங்க எப்படி எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி பண்ண நான் தயாரா தான் இருக்கேன்., ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு இருக்கும் போது சாதாரண நகைக்காக ஏன் நல்ல சம்மதத்தை விடனும்னு தான் வந்தேன் மா…” என வாய் கூறினாலும்

அவனின் மனமோ ‘வெறும் நகைக்கு ஆசைப்பட்டு தான் நம்ம பொண்ணை வேண்டாம்னு சொன்னாங்க, இது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது., இப்ப கூட ஒன்னும் கேட்டு போகல, ஏதாவது சொல்லிட்டு வந்துரு, அத்தையும், மாமாயும் வேண்டாம்னு சொல்லியும் இங்க வந்துருக்க அவங்களுக்கு தெரிஞ்சா கண்டிப்பா சங்கட படுவாங்க…’ என இடையிட்டது… இருந்தும் நேற்று பூங்கொடிக் கூறியது நினைவிலாட மனதின் கேள்விக்கு பதில் கூறாமல் எதிரில் நின்ற சிவகாமியிடம்

“தயங்காம என்ன வேணும்னு கேளுங்க ம்மா எதுவா இருந்தாலும் செய்ய நான் ரெடியா இருக்கேன்…” என்றான் அவரின் கண்களை நேருக்கு நேர் பார்த்தப்படி..

சிவகாமிக்கோ என்ன பதில் கூறுவதென தெரியவில்லை… விட்டுபோன சம்பந்தம் மீண்டும் வந்து இருக்கிறதென சந்தோசப் படவா இல்லை, சரவணனின் பேச்சிற்கு வருத்த படுவாத என இரு வேறு மனநிலையில் இருந்தார்.  சரவணனுக்கும் அடுத்து எப்படி பேசுவதென தெரியவில்லை அவன் பேசியது சரியோ,தவறோ ஆனால் மனதில் இருந்ததை பேசி விட்டான்… மீண்டும் அங்கு மெளனமே ஆட்சி செய்ய, அதை இப்போது களைத்தது நிவேதாவின் குரல்… இத்தனை நேரம் இருவரும் பேசுவதை பொறுமையாகக் கேட்டு கொண்டிருந்தவள் சரவணனின் பேச்சில் கோபம் வர, விரித்து வைத்திருந்த கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டுக் கொண்டே “புள்ளையை கல்யாணம் பண்ணி தர கேட்க வந்தீங்களா இல்லை, வித்துட்டு போக வந்து இருக்கீங்களா…” என சத்தமாக கேட்டுவிட்டு

  “புள்ளையை பேரம் பேசிட்டு இருக்கான் பாரு, பொட்ட பய…” என வாய்குள்ளயே முனகியபடி வெளியில் வந்தாள், மகளின் பேச்சில் சிவகாமிக்கு, சரவணனின் முகத்தைப் பார்க்கவே அத்தனை சங்கடமாக இருந்தது…

இங்கு சரவணனை சொல்லவே வேண்டாம்.. முதலில் அவளின் குரலை கேட்டதுமே கண்டுக் கொண்டான். மீண்டும் சந்திக்க மாட்டோம் என்ற தைரியத்தில் அவளிடம் சற்றே விளையாடி விட்டான். இப்போது அவளின் குரலைக் கேட்டதுமே அல்லு விட்டது அவனுக்கு… பூங்கொடியிடம் கூட இன்றுவரை விளையாட்டாகக் கூட பேசியதில்லை, இன்று ஏனோ இவளின் பேச்சும், செயலும் சிறு வயது குறும்புக்கார சரவணனை வெளிக் கொண்டு வரவும் ஏதோ விளையாடி விட்டான். ஆனால் இங்கே அவளை பார்ப்பான் என சத்தியமாக நினைக்கவில்லை அவன்… அவன் அந்த நினைவிலயே இருக்க நிவேதா பேசியது அனைத்தும் காதில் விழாமல் தான் போனது… அவளின் நல்லா நேரமோ என்னவோ அவள் பேசியது சரவணனின் காதில் விழவில்லை அப்படி மட்டும் அவன் கேட்டிருந்தால் பூங்கொடிக்கு விழுந்த அடியை விட பலமடங்கு கூடுதலாக தான் வாங்கி இருப்பாள். (அடியை திருப்பிக் கொடுத்து இருப்பாள் என்பது வேறு கதை)

“மன்னிசுடுங்க தம்பி அவ கொஞ்சம் வாய் துடுக்கு, மனசுல எதுவும் வைச்சுக்காதீங்க…” என்ற சிவகாமியின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் சிவகாமியைப் பார்க்க, அவரோ கதவை அடத்து நின்றப்படி “என்ன பேச்சு இது நிவேதா, வந்தவங்களை இப்படி தான் மரியாதை இல்லாம  பேசுவியா…” என ஒரு அதட்டல் போட்டார்,

“பொண்ணை பேரம் பேசிட்டு இருக்கான் இவனுக்கு எல்லாம் என்ன மரியாதை, எங்களை மாதிரி பொண்ணுங்களை பாத்தா ஆட்டு கூட்டம் மாதிரி தெரியுதா… இதுல நீ மன்னிப்பு வேற கேட்கற, தள்ளுமா இவங்களை மாதிரி ஆளுங்களை சும்மாவே விட கூடாது…” எனக் கத்தியப்படி சிவகாமியை தள்ளிக் கொண்டே வெளி வந்தவளின் பேச்சு போர்டிக் கோவில் அமர்ந்திருந்தவனை கண்டதும் அப்படியே நின்றது… காலையில் விரிந்தது போலவே இப்போதும் அவளின் விழிகளும், இதழ்களும் விரிந்து கொள்ள சரவணனின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை அரும்பியது…
(அவ பேசனத நீ கேட்டு இருக்கணும் டா டே))