கலைந்த ஓவியமே 3

மகியிடம் தான் கூறிய பொய், பொய்த்து போகவில்லை என்ற எண்ணமே நிம்மதியை கொடுத்தது பூங்கொடிக்கு… இருந்தும் மனதில் ஓரத்தில் நேற்றும்,இன்றும் சரவணன் பேசியதும் நடந்துக் கொண்ட விதமும் மனதில் அழுந்தி கொண்டே இருக்க, கண்மூடி மீண்டுமொரு முறை அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள்.

******

தங்களின் காதலை பற்றி கூறியதும் மகி துளியும் நம்பவில்லை என்பது அவளின் பார்வையிலயே தெரிந்தது. எப்படியாவது  அவளின் நிச்சியத்தை தடுக்க வேண்டும், அதே போல் தான் கூறிய பொய்யை (காதலிப்பதாக கூறியதையும்) அவள் நம்ப வைக்க வேண்டும், சரவணனை விட்டு அவள் விலகி இருக்க வேண்டும்…

இந்த மூன்றும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்ன செய்யலாம் நினைக்க நினைக்கவே சரவணனின் புல்லட் சத்தம் கேட்டது. நிச்சியம் சரவணனை காண மகி வெளியில் வருவாள் அதற்குள் ஏதாவது கூறி மாமனுடன் நெருங்கி நிற்பது  போல் செய்ய வேண்டும் என நினைத்தவளின் மண்டைக்குள் சட்டென தோன்றியது அந்த நாடகத்தின் வில்லி சீன். (எந்த சீரியல் எல்லாம் கேட்க கூடாது)  சீரியலில் வந்தது போலவே செய்தால் நிச்சியம் அனைத்தும் சரியாக நடக்கும் என நினைத்தவாறு சரவணன் உள்ளே நுழைந்தமே

“மாமா, அந்த மாப்பிள்ளை  மகியை வேண்டா சொல்லிட்டான்…”எனக் கூறி அழுதது மட்டுமல்லாமல் அவனைக் கட்டியணைத்து கொண்டாள். அவனோ,அவளை விலகி விட முயற்சிக்க, பூங்கொடியோ அவனை விட்டு இம்மியும் பிரியாது இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றாள். அது அவனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்த முகம் இறுகி நின்றான்.

இவனின் கோபத்தை அறியாத பூங்கொடியோ மகி வெளியில் வருகிறாளா இல்லையா என்பதிலயே கவனத்தை வைத்திருந்தாள். மகி வெளியில் வந்து தாங்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் நிச்சியம் நம்புவாள் என நினைத்து தான் சரவணனை கட்டியணைத்தது, அவள் நினைத்தது மகியின் விசயத்தில்  சாதகமாக  முடிந்தது. ஆனால் சரவணன் விசயத்தில்…???  தங்களை கண்டதும் மகி உள்ளே சென்றுவிட, அவளை நம்ப வைத்துவிட்ட மகிழ்ச்சியில்  சரவணனை விட்டு விலகி நின்றாள். அவள் விலகி நின்ற  மறுகணம் பூங்கொடியின் கன்னங்கள் தீ பட்டதைப் போல் எரிந்தது…ஆம் சரவணன் அவளை அறைந்து இருந்தான்.

“விலக்கி விலக்கி விடறேன், அப்படியே பசை மாதிரி ஒட்டிக்கிட்டு நிக்கற, அறிவில்லை,படிச்ச புள்ளை தானே நீ,..” என மெல்லிய குரலில் கர்ஜிக்க,

“இல்லை, நிச்சியம் நிண்ணு போச்சுன்னு ஒரு எமோஷனல்ல…” என தயங்கி கூறினாள்.அவளை  பெருமூச்சுடன் பார்த்தவன் “இங்க பாரு,இது அவ்வளவு பெரிய விசயம் இல்லை, என் தங்கச்சியை எல்லாருக்கும் பிடிக்க வேணும்னு இல்ல, பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் கேட்பாங்க, வேண்டான்னு சொல்லுவாங்க, அதுக்காக இப்படி வந்து கட்டிக்கிட்டு அழுக வேணும்னு இல்லையே…” என சீற்றம் குறையாது பேசியவன் பின் அவளின் பயந்த முகத்தைக் கண்டதும் சற்றே தணிந்த குரலில் “இங்க பாரு கண்ணு, அடுத்தவன் வீட்டுக்கு போக போற புள்ளை, இப்படி என்னைக் கட்டிகிட்டு நின்னா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க, இந்த நேரத்தில வீட்டுல வேலைக்காரங்க யாரும் இல்லாதது நல்லாத போச்சு, இல்லைன்னா என்ன ஆயிருக்கும், இனிமே அடக்கமா இருந்து பழகு…” என சிறு கண்டிப்புடன் கூற “நான் ஏன் அடுத்தவன் வீட்டுக்கு போக போறேன்.உன் வீட்டுக்கு தான் மாமா வருவேன்…” என பூங்கொடி தன் மனதில் இருப்பதை கூறினாளோ இல்லை அவள் அன்னை சொல்லியதை அப்படியே ஒப்பிக்கிறளோ அவள் அறிந்ததே… பூங்கொடி அப்படி கூறியதும் கோபம் துளிர் விட மீண்டும் கையை ஓங்கி விட்டான்.. இப்போது அறைந்த அடியில் அவளின் தலையில் நட்சத்திரம் பறக்காத குறைதான்..

“என்ன மறுபடியும் சொல்லு, இந்த ஆசையோட தான் இங்க வந்துட்டு இருக்கியா நீயு…” என சிங்கம் போல் கர்ஜிக்க, அவனை பயந்த விழிகள் பார்த்தாள்.  கொடியின் பயத்தை துளியும் கண்டுக் கொள்ளாமல்

“இங்க பாரு, நீயும், மகியும் எனக்கு வேற வேற இல்லை புரிஞ்சுதா, இனிமே இப்படி கிறுக்கு தனமா பேசாத,..இப்ப கையை நீட்டனது கூட என் தங்கச்சியை எப்படி அடிப்பேனோ அந்த உரிமையில தான்,இதுக்கும் வேற மாதிரி நினைசுக்காத ..” என்றதும்

“மாமா…” என அதிர்ச்சியாக  வார்த்தைகள் வெளி வந்தது அவளுக்கு.

“இது தான் உண்மை, நான் உன்னை அந்த மாதிரி யோசிச்சது இல்லை, இனிமேவும் அப்படி யோசிக்க வராது. இப்ப கூட என் மாமன் முகத்துகாக தான் உன்னை எதுவும் பண்ணாம போறேன், மனசுல ஆசையை வளத்துக்காத,..” என்றவன் அறையை நோக்கி நடந்தான்.

பின் என்ன நினைத்தானோ மீண்டும் திரும்பி  “அப்பறம் இனிமே வீட்டு பக்கம் வந்தா அத்தையோட இல்லைன்னா மாமாவோட வரதா இருந்தா வா, தனியா வர வேண்டாம்…” எனக் கூறியவன் அங்கிருந்து நகர்ந்தான்.

இவை ஏதும் அறியாத மகியோ தன் அண்ணனின் காதலுக்காக தன் மனதில் துளிர் விட்ட உணர்வை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு  கிருஷ்ணாவை திருமணம் செய்துக் கொள்ள சரியென கூறினாள். மகியின் விசயத்தில் பூங்கொடியின் பக்கமே அனைத்தும் சாதகமாக முடிந்தது…  ஆனால்  எதிர்பாராத ஒன்று சரவணன் இவளை வேண்டாமென மறுப்பான் என்று தான்.

கொடியின் கல்லூரி முடிந்ததில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக சரவணன் மேல் ஆசையை வளர்த்து விட்டது அவளின் அன்னை வேணி தான்.. சொல்லபோனால் இப்போது கூட அவனின் மேல் அவளுக்கு காதல் இருக்கிறாதா எனக் கேட்டால் நிச்சியம் அவளிடம் பதில் இல்லை, அந்தளவுக்கு வேணி இவளை குழப்பி விட்டு இருக்கிறார்.. தன்னை தங்கை ஸ்தானத்தில் வைத்திருப்பவனிடம் எப்படி காதலை யாசிப்பது என நினைத்தவள் நேராக வேணியிடம் தான் நின்றாள்… சரவணன் வீட்டில் நடந்த அனைத்தும் ஒன்று விடாமல் கூறிட பொறுமையாகக் கேட்ட  அவளின் அன்னையோ
“இங்க பாரு கொடி, நீ உன் மாமனை வளைச்சு போடலன்னா அவன் வெச்சு  இருக்கற மொத்த சொத்தும் வேற எவளோ வந்து அனுபவிச்சுட்டு போவா…” என பழைய பல்லவியே பாடினார். சலிப்பாக இருந்தது அவளுக்கு முதலில் அவர் கூறியதற்கு கூட ஏதோ சரியென நினைத்தாள் ஆனால் இப்போது கூறுவது துளியும் பிடிக்கவில்லை அவளுக்கு..

” நீ சொன்னதுக்கு தான் கல்யாணம் பண்ண சரின்னு சொன்னேன், நீ சொன்ன மாதிரி தான் இப்ப வரைக்கும் நடந்துக்கிட்டேன். ஆனா அவரு என்னை தங்கச்சியா பாக்கறேன்னு சொல்லும் போது மறுபடியும் எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்கோ மாமான்னு கேட்க சொல்ற… என்னால முடியாது…” என தீர்க்கமாகக் கூறினாள்

“இப்படி ஏன் யோசிக்கற, பல வருசமா கூடயே  இருக்கற உன்னையே அவன்   இதுவரைக்கும் தப்பா நினைச்சது இல்லைன்னா என்ன அர்த்தம் அவன் அந்தளவுக்கு  கண்ணியமா இருக்கான். இப்படி ராமன் மாதிரி இருக்கறவனை வேண்டாம்னு சொல்றியா. பொண்ணுங்க அண்ணா சொல்லிட்டு அதே பையனை கல்யாணம் பண்ணிக்கறது இல்லையா அது மாதிரி இதுவும் நினைசுக்க., அவன் என்ன நினைச்சா என்ன…?? நீ அவனை மாமாவாவே பாரு…” என வேணி கூற.., தெளிந்த நீராய் இருந்தவள் மீண்டும் குழம்பி போனாள்.. குழம்பி நின்றவளை பார்த்த வேணியோ “இங்க பாரு கொடி,  மறுபடியும் சொல்றேன், அவனை மாதிரி சொக்க தங்கம் கிடைக்கவே கிடைக்காது.. விட்டு கொடுக்காம கெட்டியா புடிச்சுக்கோ, அவன் பின்னாடியே சுத்தி சுத்தி வா, எறும்பு ஊர ஊர கல்லும் தேயுன்னு சொல்றது போல அவனே மனசு மாறிடுவான். நாளைக்கு மறுபடியும் அவனை பாக்க போ, அதுக்கு முன்னாடி மாகியை (மகி) வேலைக்கு போக சொல்லு, அப்ப தான் உன் மாமனை நம்ம கைகுள்ளையே வைச்சுட்டு இருக்க முடியும்…” எனக் கூறினார்.

பாவம் அவருக்கு  தெரியவில்லை மகி இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களின் கைக்குள் அவன் இல்லையென… அவர்கள் தான் இவனின் பிடியில் இருக்கின்றன அவருக்கு தெரியவில்லை அவருக்கு தெரிய வரும் நாளும் இனிதே வரும்.. ) வேணி கூறியதை போலவே நேற்று அவனை சந்திக்கவே இல்லை இன்று மதியம் தான் அவனை சந்திக்க சென்றாள். பூங்கொடி வீடும், மகியின் வீடும் ஒரு வீதி தள்ளி இருந்தது.

பூங்கொடி அங்கு சென்றது அவளின் நல்ல நேரமாக தான் இருந்திருக்க வேண்டும்.  ஆம் மகியிடம் சரவணன்  அவள் இன்டர்வியூக்கு சென்றதை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.எங்கே தன்னை திட்டிவிடுவனோ, மீண்டும் அடித்து விடுவானோ என்ற பயம் மனதில் ஒரு புறம் இருந்தாலும் மகி  ஏதாவது உளறி விடுவாளோ  என்ற எண்ணத்திலேயே அவசரமாக இருவருக்கும் இடையே நுழைந்து”நான் தான் வேலைக்கு போக சொன்னேன் மாமா…” என்றாள். அவள் அப்படிக் கூறியதும்

“ஏன்,..” என சீறினான். 

அவன் பார்வை உள்ளுக்குள் கிலியை பரப்பினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “இல்லை மாமா, அந்த பையன் வேண்டாம்னு சொன்னதுல இருந்து புள்ளைக்கு மூஞ்சியே இல்லை, அதான் அவங்க நினைப்பு வராம இருக்கறது பழையபடி வேலைக்கு போன்னு சொன்னேன். அப்பன், அம்மா இல்லாத புள்ளை உங்க கிட்ட மனசு திறந்து எல்லாமே பேச முடியாம, உள்ளுக்குள்ளே உடைஞ்சு போயிட்டா, அதான் வேலைக்கு போக சொன்னேன்…” என வாய்க்கு வந்ததைக் கூறினாள்.

(பாவம் இதுவே அவளுக்கு மிக பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என அவள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை…)அவளின் முகத்தை கூட சரவணன் பார்க்கவில்லை, அந்தளவுக்கு  அவளின் மேல் கோபத்தில் இருந்தான். அவள் செய்த காரியம் அப்படி அல்லவா… (மகி நிமிர்ந்து பார்த்து இருந்தால் பூங்கொடி பேசும் போது சரவணனின் முக மாற்றத்தை அறிந்து இருப்பாளோ என்னவோ..)

“கொடி சொல்றது உண்மையா பாப்பா…” என தணிந்து ஒலித்தது அவனின் குரல்.  இத்தனை நேரம் சீறும் பாம்பை போல் நின்றவன்  அவள் வந்து பேசியதும் அப்படியே மாறி விட்டானே என ஆயாசமாய் இருந்தது மகிக்கு, படிப்பு முடிந்ததும் வேலை வேலை என இருந்திருக்க கூடாதோ என தாமதமாக தோன்றியது மகிக்கு… இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆமென தலையாட்டினாள்.

“பாப்பா, நான் வேணும்னா அந்த பையன் வீட்டுல மறுபடியும் பேசி பாக்கட்டுமா…” என மென்மையாக கேட்டான் சரவணன்.

“ஐயோ காரியமே கெட்டுச்சு,..” என நினைத்த பூங்கொடியோ

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா, அவன் இருக்கறதுக்கும் நம்ம புள்ளை இருக்கறதுக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது, இப்படியே விட்ருங்க,  சனியன் தொலைஞ்சுதுண்ணு நினைச்சுப்போம்…” என்றதும் மகி,  நேரடியாகவே பூங்கொடியை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து கொள்ள, தற்போதும் பூங்கொடியும், சரவணன் மட்டுமே தனித்து நின்றனர்.சரவணன் ஏதாவது பேசுவான் என நினைத்து பூங்கொடி நகராது அங்கேயே நின்றிருக்க, அவனோ அவளை ஒரு பொருட்டாக கூட நினைக்காது சட்டென அங்கிருந்து நகர்ந்தான்.

திட்டவாவது தன்னிடம் பேசுவான் என நினைத்த பூங்கொடிக்கு அவனின் இச்செயல்  செருப்பில் சாணியை முக்கி அடித்ததை போல் உணர்ந்தாள். நேற்றும், இன்றும் நடந்த அனைத்தையும் நினைத்து கொண்டிருந்தவளின் மனதின் ஓரத்தில் வேணி கூறியதை போல சரவணன் ஏற்று கொள்வானோ என்ற கேள்வியே நிறைந்திருக்க படுத்திருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்… 

**********

இங்கு சரவணனின் மனமோ மதியம் பூங்கொடி கூறியதிலயே சுழன்று கொண்டிருந்தது… ஒருவேளை தங்கை, தான் பார்த்த மாப்பிள்ளையை விரும்பி விட்டாளோ..?? அவனை மறக்க முடியாமல் தான் வேலைக்கு செல்கிறேன் என கூறுகிறாளோ மதியம் கேட்டதிற்கு கூட ஆமாம் என்று தானே கூறினாள். நம்மிடம் மனம் விட்டு பேச முடியாமல் பூங்கொடியிடம் இதைப்பற்றி பேசி இருப்பாளோ?? அதனால் அவள் மகியை வேலைக்கு செல் என கூறியிருப்பாளோ,??? என நினைத்தப்படி படுத்திருத்தவனுக்கு அன்று வேணி கூறியதும் உறுத்தலாக இருந்தது.

“மாப்பிளை வீட்டில் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கறாங்க போல சரவணா, எனக்கு என்னவோ இந்த சம்பந்தம் சரின்னு படலை…” என வேணி கூறியது இப்போதும் கண்முன்னே தோன்றியது…

முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தது கூட இதற்காக தான்.. ஆனால் தற்போது தங்கையின் விருப்பம் அறிந்தவுடன் அது எல்லாம் கண்களுக்கு தெரியவில்லை.. மகியின் விருப்பம் தான் முன்னே தோன்றியது, நாளை காலை மாப்பிள்ளை வீட்டிற்கே சென்று பேசி விடலாம் என முடிவெடுத்தவனாய் உறங்கிப் போனான்… அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்தவன் தோட்ட வேலைகளை துரிதமாக முடித்தான் மீதி வேலைகளை வேலையாட்களிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டு திண்ணையில் அமர்ந்தப்படி செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்த மகியை பார்த்தான். “பாப்பா,..” என மென்மையாக அழைத்தப்படி அவளின் அருகில் அமர்ந்தான். சரவணன் அருகே அமர்ந்ததும் அவனின் தோள் சாய அவளின் கேசத்தை கைகளால் வருடியபடி”பாப்பா என்னடா ஆச்சு…” எனக் கேட்டான்.

“ஒன்னுமில்லை ண்ணா,..”என்றாள்.

அவளின் மனமோ பூங்கொடியை பற்றி விசாரிக்க சொல்ல,அவளின் மதியோ அவனே அவன் காதலை பற்றி கூறட்டும் எனக் கூற அவளுக்கும் அதுவே சரியென்று தோன்ற அமைதியாகி விட்டாள். தங்கையின் அமைதியில் அவள் அந்த மாப்பிள்ளையை நினைத்து தான் கவலையில் இருக்கிறாள் என நினைத்தவன் மகியை திசை திருப்ப எண்ணி “ஆமா இன்டர்வியூ போனயே என்ன சொன்னாங்க..” என விசாரித்தான்.

“நான் யாரு சரவணன் தங்கச்சில்ல அவங்க கேட்ட எல்லா கொஸ்டீன் எல்லாத்துக்கும் டக்கு டக்குன்னு பதில் சொல்லி அசைத்திட்டேன். அவங்க என் பதில்ல மெர்சலாகிட்டாங்க ண்ணா, உடனே வேலைக்கு வந்து ஜாயின் பண்ண சொன்னாங்க, நான் தான் நெக்ஸ்ட் மந்த் வரண்ணு சொல்லிட்டேன்…” அத்தனைக் குதுகலமாக கூறினாள்.

“என் அழகு பாப்பா, எப்பவும் சமத்து தான்,…” என திருஷ்டி கழிக்க கிளுக்கி சிரித்தாள் அவனின் தங்கை.

*************

புடுபுடுவென அவனின் புல்லட் சத்தம் ஈரோடு மேட்டூர் ரோட்டையே திரும்பி பார்க்க வைத்தது என்றால் அதுதான் இல்லை, ஈரோடு மையின் ரோடுகளில் மேட்டூர் ரோடும் ஒன்று என்பதால் வாகன நெரிசலும் ஜன நெரிசலும் சற்று அதிகமாகவே இருந்தது…

தன் வண்டியின் சத்தம் கேட்டாலே ஊரில் இருப்பவர்கள் அத்தனை பேரும் சற்று நின்று திரும்பி பார்ப்பார்கள், ஆனால் இங்கு தன் வண்டியின் சத்தமே வெளிக் கேட்கவில்லையே என்ற பெருத்த வருத்தம் அவனுக்குள்… இப்போது மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் ஈரோடு வந்தால் இவனுக்குள் தோன்றும் பெரிய வருத்தம் இதுவாக தான் இருக்கும்… மேட்டூர் ரோட்டிலிருந்து பிரப் ரோடு சிக்னலில் சிக்காது வந்து விட்டவனின் வாகனம் பொருந்துறை ரோட்டை நோக்கி பயணித்தது…

சிறிது தூரம் சென்றதுமே கொங்கு பரோட்டா ஸ்டாலில் இருந்து வரும் பரோட்டாவின் வாசனையும் சிக்கன் குறுமாவின் வாசனையும் எதிர்ப்புறம் வந்து கொண்டிருந்தவனின் மூக்கை துளைத்தது…மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட்டு வந்து சாப்பிடுவோம் என நினத்தவனின் வயிறோ பரோட்டாவை சாப்பிட வேண்டும் அடம் பிடிக்க,வேறு வழியில்லாமல் அடுத்து வந்த வளைவில் வண்டியை திறும்பியவன் கொங்கு பரோட்டா ஸ்டாலை நோக்கி முன்னேறினான்… குழம்பின் வாசனையை பிடித்து கொண்டே கடையினுள் சென்றவன் கைகளை கழுவி விட்டு தனக்கு தோதனா இடத்தில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததும் பேரர் வர அவரிடம் இரண்டு பரோட்டோக்களை ஆர்டர் செய்ய இரண்டு நிமிடங்களில் பரோட்டாவும் குருமாவும் சுடசுட வந்திறங்கியது.

இரண்டு புரோட்டோகளையும் நன்றாக ருசித்து ரசித்து உள்ளே தள்ளியவன் வயிறு நிரம்பியதும் எழுந்து நின்றான். எழுந்து நின்ற இடத்திலேயே பெரிய ஏப்பம் விட்டவனாய் கைகழுவ முன்னேறி நடக்கவும் அவனின் எச்சில் கை ஒரு பெண்ணின் மேல் படவும் சரியாக இருந்தது… கைகளை கீழே விடாது மடக்கி வைத்திருந்தாள் சரியாக எதிரில் வந்த பெண்ணின் கன்னங்களில் பட்டு விட்டது.. அவனின் கை அந்த பெண்ணின் மேல் பட்டதும்

“ஐயோ மன்னிச்சிடுங்க பாப்பா…” என மன்னிப்பு வேண்டியவனாய் எதிரில் இருந்தவளை பார்த்தான் சரவணன். எதிரில் இருந்தவளின் கன்னத்தில் சிக்கன் குருமா ஒய்யாரமாக ஒட்டி கொண்டிருந்தது… அதனை பார்த்தவனுக்கு மேலும் சங்கடமாக போக “சாரி பாப்பா, ஏதோ கவனிக்காம…” எனக் கூற கூறவே “என்ன பாப்பாவா, ஹலோ என்னை பாத்தா எப்படி தெரியுது, பேம்பர்ஸ்ஸா போட்டுட்டு சுத்திட்டு இருக்கற மாதிரி இருக்கா, பாப்பான்னு சொல்ற…” என எகிறி நின்றாள் நிவேதா…’இது என்னடா வம்பா போச்சு…” என்பதை போல் பார்த்து வைத்தான் சரவணன்..