கலைந்த ஓவியமே 10

அவன் கூறிய மாற்றங்களை சில நிமிடங்களிலயே செய்து முடித்தவள் அவனைப் பார்த்தாள். 

அவனோ வழமை போலவே ஏதோ  சிஸ்டத்தில் பார்த்துக் கொண்டிருத்தான்.

இப்போதும் அவளின் கண்கள் அவனை இமைக்காது பார்த்தது ஏனோ இவனின் குரல் அவனை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது.

  “மேம் ஃபினிஷ் ஆயிருச்சுன்னா எனக்கு மெயில் பண்ணிட்டு கிளம்புங்க…” என்றான் அவளை பாராது. அவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள்

“ஹான் சார்…” என விழித்தாள்..

“நா சொன்ன கரெக்சன்ஸ் எல்லாம் சேஞ்ச் பண்ணிட்டா??? எனக்கு மெயில் பண்ணிட்டு கிளம்புங்க…” நிறுத்தி நிதானமாக கூறினான்.

“ஒகே சார், மெயில் ஐடி சொல்லுங்க…” என்றாள் “நவின் பிரசாத் 92.. அட் ஜிமெயில் டாட் காம்…” என இவளை பாராது சிஸ்டத்தை பார்த்தபடி கூறினான்”நவினா…” சற்றே விழி விரித்து எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்தாள்..  அவனோ கணினியில் இருந்து பார்வையை அகற்றுவேனா என்பதை போல் இருந்தான்.

“அப்படியெல்லாம் இருக்காது, ஒரே குரல், ஒரே நேம் இதெல்லாம் வைச்சு எப்படி அவரு தான் இவருன்னு சொல்ல முடியும்…” என்பதைப் போல எண்ணிக் கொண்டவள் அவன் கொடுத்த மெயில் ஐடிக்கு பிளோர் பிளனை அனுப்பி விட்டு

“சார் செண்ட் இட்., உங்களுக்கு மெயில் வந்துருச்சா…”  என அவனை பார்த்தப்படி கேட்டாள்.

“எஸ் மேம்…” என்றவன் இப்போது நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.  நிமிடம் தான் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டது… அதை வலுக்கட்டாயமாக மீட்டு எடுத்தது நவின் தான்… அவன் பார்வையை தாழ்த்தி கொண்டதும் இவளின் பார்வையும் அங்குமிங்கும் அலைபாய்ந்தது ஏனோ மனதில் அத்தனை படபடப்பு…

“ஒகே சார் கிளம்பறேன்…” என்றவள் அவசரமாக வெளியில் வந்துவிட்டாள்… அவனின் பெயர், குரல் அனைத்தும் ஒன்றாக இருக்க மனதில் சிறு நட்பாசை அவன் ஏன் இவனாக இருக்க கூடாது என்று. எதற்கும் அண்ணா அனுப்பிய போட்டோவை பார்க்கலாமா என நினைத்தவள் அப்போதே  புலனத்தில் சரவணன் அனுப்பிய புகைப்படத்தை தேடி டவுன்லோட் செய்ய அதுவோ ‘சாரி திஸ் மீடியா ஃபைல் அப்பேர்ஸ் டூ பீ மிஸ்ஸிங் பிளீஸ் ஆஸ்க் ‘ அண்ணா  ரீசெண்ட் இட் ‘ (நம்ம என்ன நேம்ல சேவ் பண்ணி வைக்கறோமோ அப்படி தான் வரும்) என வந்தது .

மீண்டும் தன் அண்ணனிடம் மாப்பிள்ளை போட்டோவை அனுப்ப சொல்ல சற்றே பயம் வர பெருமூச்சுடன் அந்த வீதியில் நடந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் அவளை பார்த்து கத்திய (ஓடிய) நாய் அங்கிருக்க சற்றே பயம் அவளுள், மீண்டும் கத்தி பல நாய்களை ஒன்று சேர்த்து விடுமோ என்று  ஆனால் அந்த நாயோ இவளைக் கண்டதும் மீண்டும் ஓட்டம் எடுத்தது. நாய் ஓட்டம் எடுத்ததும் மெல்ல சிரித்து கொண்டவள்

‘அந்த பயம் இருக்கணும் யாருகிட்ட சரவணன் தங்கச்சிகிட்டயேவா..’ என இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவளுக்கு அப்போது தான் தன் அண்ணனிடம் பேசாதது நினைவு வந்தது… மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் உடனே அவனுக்கு அழைக்க போன் ஸ்விட்ச் ஆப் என வர ஈரோடு பஸ் ஸ்டேண்ட் சென்ற பிறகு அழைத்து கொள்ளலாம் என விட்டு விட்டாள்.

ஆட்டோ பிடித்து  ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்றவள் பவானி பஸ்ஸில் ஏறி அமர்ந்துக் கொண்டு மீண்டும் சரவணாக்கு அழைத்தாள். அது இப்போதும்  ஸ்விட்ச் ஆப் என வந்தது. இரண்டு முறைக்கும் மூன்று முறை அழைத்து பார்த்தவள் மூர்த்திக்கு அழைத்தாள்..

இரண்டு மூன்று ரிங்க் போனதும் மூர்த்தி அழைப்பை ஏற்று “ஹலோ சொல்லு பாப்பா, வேலை முடிஞ்சுதா…” எனக் கேட்டார்

“ஹான் மாமா, முடிஞ்சுது, அண்ணா எங்க, அவரோட போன் எடுக்கல., என்னாச்சு…” என்றாள் பதட்டமாக

“அவன் எங்க கண்ணு போயிருக்க போறான், வீட்டுல இருப்பான்…” என்றவரிடம்.

“அண்ணா கிட்ட பேசணும்…” என்றாள் குழந்தையாக “சரி இரு கண்ணு, நான் இங்க இருக்கானான்னு பார்க்கறேன்…” என கூறிகொண்டே காட்டை விட்டு வெளியே வரவும், 

சரவணன் தூரத்தில் இருந்து   நடந்து  வரவும் சரியாக இருந்தது.”இதோ இங்க தான் இருக்கான் கண்ணு, இரு தரேன்…” என்றவர்

“சரவணா…” என சத்தமாக அழைத்தார்…  அவரைத் தேடி தானே வந்தான். அவரே அவனை அழைக்கவும் இதுவே நல்ல சந்தர்ப்பம் என நினைத்தவன் பூங்கொடிக்கு கூடிய விரைவில் வரன் பாருங்கள் என கூற வேண்டும் என எண்ணியப்படியே  அவரை நோக்கி முன்னேறினான்.

“ஏன் தம்பி போன் என்னாச்சு, புள்ளைக் கூப்பிட்டே இருந்திருக்கு, போன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருதாம், நீ போனை எடுக்கலைன்னு எனக்கு கூப்பிடுச்சு, நல்ல வேளையா நீ இங்க வரவும் சரியா போச்சு இல்லன்னா நா உன்னைத் தேடி வீட்டுக்கு போயிருப்பேன்…” அவன்  பேச ஆரம்பிக்கும் முன்பே அவர் எதற்காக அழைத்தார் எனக் கூறி அவனிடம்  போனை நீட்டினார்.

தங்கை என்றதுமே அவசரமாக போனை வாங்கிக் கொண்டவன் “பாப்பா…” என்றான்

“அண்ணா,போன் என்ன ஆச்சுன்னா.. ஏன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது…” என படபடப்பாக கேட்டாள்.

“போன் கை தவறி கிழ விழுந்தது பாப்பா,ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு போல எனக்கு தெரியல…”என அவளிடம் பதில் கூறினாலும் மற்றொரு கை தொலைபேசியை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது…

“நான் ஆபீஸ் கிளம்பும் போதே கிளம்பிட்டேன்னு உனக்கு மெசேஜ் அனுப்பின, நீ அதுக்கு பதிலே அனுப்பல ண்ணா, சரி வேலையா இருக்கன்னு நினைச்சுட்டு விட்டுட்டேன். இப்ப கிளம்பும் போது தான் கால் பண்ண,  போன் ஸ்விட்ச் ஆபுன்னு வந்துச்சு,ரொம்ப நேரம் அப்படியே இருக்கவும் கொஞ்சமா பயந்துட்டேன்…” என கூறியவளின் குரலில் அத்தனை நடுக்கம் இருந்தது.

“தங்கோ (தங்கம்) மா, போன் தானே ஸ்விட்ச் ஆப் ஆச்சு, எதுக்கு இப்படி பயப்படற,உன்கிட்ட  பல தடவை சொல்லிட்டேன் என்னை நினைச்சு பயபடாதன்னு…” சற்று கடினமாகவே கூறினான். அதில் மேலும் பயந்து போனாள் அவனின் தங்கை.

((தன் தங்கையின் பயத்தை அறியாதவனா அவளின் அண்ணன், வெளியில் தைரியமான பெண் தான் ஆனால் சரவணனிடம் மட்டும் பயம் அதிகம். அதுவும் அவன் சற்று சத்தமிட்டு பேசினாலே பயந்து விடுவாள். அதை அவளிடம் மட்டுமே  மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறான்  சரவணன். ஆனால் இன்றுவரை அவனின் தங்கை மாறும் வழியை தான் காணவில்லை., அவளின் பயதிற்கும் காரணம் உண்டு, ஊரில் நடக்கும் அத்தனை பஞ்சாயத்திற்கும் முன்னால் நிற்பவன் என்ன தவறு செய்து இருந்தாலும் யார் எவரென்று பார்க்க மாட்டான் கை நீட்டிய பின் தான் மறு வார்த்தையே பேசுவான்… சிறு வயதிலேயே இவனின் கோபத்தை பார்த்து வளர்ந்தவளுக்கு ஒருபுறம் அண்ணனை போல் இருக்க வேண்டும் என தோன்றினாலும் மற்றொரு புறம் சரவணனை கோபத்தை கண்டு மிரள தான் செய்வாள். தங்கையிடம் மட்டுமே அவனின் குரல் தணிந்து ஒலிக்கும். மற்றவர்களின் முன் அவனின் குரல் கர்ஜனையாக தான் இருக்கும். சொல்லபோனால்  வேணி உட்பட அனைவருமே இவனின் சிறு அதட்டலுக்கும் பயந்து தான் போவார்கள்., ஏன் பூங்கொடி கூட முன்பெல்லாம் சரவணன் இருக்கும் திசைக்குக் கூட வர மாட்டாள், இப்போது தான் வேணியின் பேச்சை கேட்டு இப்படி செய்துக் கொண்டிருக்கிறாள்…))

அவளின் பயத்தை உணர்ந்தவனாய் பெருமூச்சுடன் “பாப்பா, பாவனி வந்தது சொல்லு, அண்ணன் வந்து கூட்டிட்டு வரேன்…” என மென்மையாக கூறினான்.”ஹும்…” என மட்டுமே பதில் வந்தது.

“சரி வைக்கிறேன் பாப்பா, பயப்படாம வந்துருவ தானே இல்லைன்னா நானே வரவா…” என்றான் மென்மையாக”இல்லை அண்ணா நான் பவானி வந்ததும் சொல்றேன்…” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

“என்ன சரவணா,  பாப்பா கிட்ட இப்படி தான் பேசுவியா…” சற்று அதட்டினார் மூர்த்தி.

“பின்ன கொஞ்ச சொல்றீங்களா, என்கிட்ட என்ன பயம் அவளுக்கு, அவகிட்ட எத்தனை தடவை சொல்றது கேட்கவே மாட்றா …” தங்கையை குற்றம் சாட்டினான் சரவணன்..

“சரி தான் கருப்பு சாமி மாதிரி மூஞ்சியை விறப்பா வைச்சு இருந்தா புள்ளை பயப்படாம என்ன பண்ணும், அதுவும் இப்ப அதட்டி பேசனயே, கிட்ட இருந்த எனக்கே பயமா இருந்துச்சு குழந்தை என்ன பண்ணும்…” என்றார் மூர்த்தி, 

  ‘ அட போ மாமா, எனக்கு பயபடாத ஆளும் இருக்கு…’ என  நினைத்தவன்”என்ன பண்றது சின்ன வயசுலே இருந்தே இப்படி இருந்து பழகிட்டேன் இனி மாத்தவா முடியும்…” என்றான் இதழில் தோன்றிய சிரிப்போடு.( அந்த சிரிப்பு நிவேதாவின் மேல் தோன்றிய உணர்வு எதற்காக என்ற கேள்விக்கு விடை கிடைத்தற்கான சிரிப்பு)

“சொல்ல மறந்துட்டேன் பாரு, இங்க வேலையை முடிச்சுட்டு ஆளுங்க எல்லாம் இப்ப தென்னை தோப்புக்கு வந்தாச்சு,  கிழங்கு ரெடியா இருந்தா விதைக்கு போட்டுட வேண்டியது தான்…” என்றதும் வேணி செய்தது நினைவு வர அவரை முறைத்தான் சரவணன். அவனின் முறைப்புக்கு அர்த்தம் புரியாது பார்த்தவர் “என்ன தம்பி…” என்றார்”வீட்டுக்கு போயி பாத்தீங்களா,..” என்றான் இவனும்..

“இல்லப்பா ப்பாப்பாவை பவானில விட்டுட்டு வந்ததும் இங்க காட்டுல வேலையை பார்த்துட்டு போகல, ஏன் என்னாச்சு..” என்றார் புருவ மத்தியில் கேள்வியுடன் கேட்டார்.

“கிழங்கை எங்க காய  போட்ட மாமா…” என்றான்”நீயும் தானே பார்த்த, நம்ம வீட்டு முற்றத்தில் தானே போட சொன்னேன்…” என்றார் மூர்த்தி”அத்தை, விதை கிழங்கு மாடியில இருக்குன்னு துரைக் கிட்ட சொல்லி அவனுங்க மாடியில இருக்கிற கிழங்கை கிழ எடுத்துட்டு வந்துட்டானுங்க,  நல்ல வேளை நான் போனேன். இல்லன்ன இன்னைக்கு பொழப்பே போயிருக்கும், வண்டியில ஏத்தின  கிழங்கை மறுபடியும் மாடியில கொண்டு போயி போட சொல்லி அத்தையை காய வைக்க சொல்லிட்டு, துரையை விதை கிழங்கை கொண்டு வர சொன்னேன், இரட்டிப்பு வேலை,;…” என்றான் பெருமூச்சுடன்”இவளை வைச்சுட்டு ரோதனை (தொல்லை), சரி நானும் விதை கிழங்கை எடுத்துட்டு வர, நீ அடுத்தடுத்து என்ன பண்ண வேணும்னு பாரு தம்பி…” எனக் கூறியவர்  வீட்டை நோக்கி புறப்பட்டார்.

இவனுக்கும் அப்போது தான் வேலைகள் வரிசைக்கட்டி நிற்பது நினைவு வந்தது. ஒரு ஏக்கர்,இரண்டு ஏக்கர் என்றால் பரவாயில்லை கிடத்தட்ட இருநூறு ஏக்கர் அளவிற்கு அல்லவா சாகுபடி செய்கிறான்… மஞ்சள் கிழங்குகள் எப்போதும் நிழலை விரும்பும் பயிர் என்பதால் மஞ்சளுடன் சேர்த்து துவரை, ஆமணக்கு, அகத்தி போன்றவைகளையும் ஊடு பயிராக போட்டு வைத்தான். இருநூறு ஏக்கரில் பாதி தென்னை தோப்பு என்பதால் சிலதுக்கு ஊடுபயிர்கள் தேவைப்படவில்லை. நடவு வேலை முடிவே கிட்டதட்ட ஒருவாரத்திற்கு மேல் ஆனது, அதுவரையில் சரவணனை கையில் பிடிக்க முடியவில்லை அத்தனை வேலையாக இருந்தான். மகியும் அன்று அலுவலகத்திற்கு சென்றது தான் மீண்டும் செல்லவில்லை,  அடுத்த மாதத்தில் இருந்து அலுவலகம் வந்தால் போதும் என்று கூறிவிட மகியும் அண்ணனுக்கு உதவியாக வீட்டில் தான் இருக்கிறாள்.