கண்கள் தேடுது தஞ்சம் – 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகிக் கீழே வந்த தமிழரசனை கையில் காபியுடன் எதிர் கொண்டார் அம்சவேணி.
“என்னப்பா இன்னைக்குப் பசங்க எல்லாம் வர்றதா சொன்னியே, அங்கேயா போற?” என்று கேட்டப்படி காபி டம்ளரை நீட்டினார்.
“ஆமாமா எட்டு மணிக்கு எல்லாம் வந்துருவாங்க. அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்து வைக்கணும். அப்பாவும் அவர் வயலுக்குப் போய்ட்டு நேரா அங்க வந்துடுறேன்னு சொன்னார். சாப்பாடு எல்லாம் ஆளுங்ககிட்ட கொடுத்து விட்டுருங்க. நான் இன்னைக்குச் சாயந்தரம் தான் வீட்டுக்கு வருவேன்” என்று காபியை குடித்துக் கொண்டே சொன்னான்.
“சரிப்பா கொடுத்து விடுறேன். ஆனா வேலை, வேலைன்னு இருக்காம சரியா சாப்பிட்டுரு” என்றார் அம்சவேணி.
“சரிம்மா நீங்க சொல்லி செய்யாம இருக்க முடியுமா? செய்துரலாம்” என்று அரசு சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ஆமாமா…! அப்படியே என் பேச்சு எல்லாத்தையும் கேட்டுத்தான் மறுவேலை பார்ப்ப?” என்று அம்சவேணி ஆரம்பித்தார்.
“ஐயோ அம்மா…! தெரியாம சொல்லிட்டேன் ஆளை விடுங்க. நீங்க திரும்ப ஆரம்பிக்காதீங்க. எனக்கு இப்ப எதையும் கேட்க நேரமில்லை” என்று சொல்லிவிட்டு நிற்காமல் வெளியே விரைந்தான்.
“ஆமா இப்படி ஓடிக்கிட்டே இரு! ஒருநாளைக்குத் தப்பிச்சு ஓட முடியாத மாதிரி செய்றேன்” என்ற வேணியின் குரல் அவன் முதுகுக்குப் பின்னால் கேட்டது.
அதைக் காதில் வாங்கியவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. உதடுகள் மட்டும் ஒரு வறட்சியான சிரிப்பை வெளியிட்டது.
இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தன் வயலுக்குச் சென்றான். வண்டியை வயலுக்கு முன் இருந்த சாலையில் நிறுத்தி விட்டு, காலை நேர குளிர்ச்சியான காற்றை அனுபவித்துக் கொண்டே இன்னும் இருட்டாக இருந்ததால் கையில் ஸ்டார்ச் லைட்டுடன் தன் வயலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இதமான இயற்கை காற்றைச் சுவாசித்து ரசித்தாலும் இன்னும் நேற்று நடந்ததே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
நேற்று தந்தையின் வயலுக்குச் செல்லும் வழியில் மோட்டார் அறைக்கு வரும் போதே அந்த அறைக்குப் பின்னால் லேசாகப் பறந்து கொண்டிருந்த தாவணி அவன் கண்ணில் பட்டது.
இன்றைக்குத் தன் எதிரே நடந்து வராமல் இருந்ததால் அந்தத் தாவணிக்குரியவள் நங்கையாகத் தான் இருக்கும் என்று அறிந்தவன் ‘என்னதான் செய்யப் போகின்றாள் என்று பார்ப்போம்’ என்று நினைத்து மோட்டார் அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை ஒருக்களித்துச் சாற்றிவிட்டு வேலை செய்வது போலப் பாவனைக் காட்டி தன் காதுகளை வெளியே கூர்மையாக உணர வைத்தான்.
சற்று நேரத்தில் லேசாகக் கொலுசின் மணிகள் சிணுங்க அவள் ஓடி வரும் சத்தம் கேட்டது. கொலுசு சத்தம் கேட்டு ‘சரியான லூசு, எதுவோ பண்ணனும் நினைக்கிறவ ஊருக்கே கேட்குற கொலுசு போட்டுட்டா ஓடி வருவது? ஒரு தப்பை கூடச் சரியா பண்ண தெரியல. இந்த லட்சணத்தில் என்னைப் பழி வாங்குறேன்னு அப்ப, அப்ப கிளம்பிடுறா’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.
அவள் போட்டிருந்தது அதிகம் சலங்கைகள் இல்லாத கொலுசு தான் என்றாலும் அந்த அமைதியான நேரத்தில் அது கொஞ்சம் பெரிதாகவே கேட்டது.
அவனைப் பூட்ட வேண்டும் என்று நினைத்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தவளுக்கு அந்தச் சத்தமே கருத்தில் இல்லை.
அவள் வந்து கதவை பூட்டவும் ‘அட அல்பம்…! இதுக்குத் தான் இந்தப் பாடா?’ என்று தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டவன் அவள் நம்புவதற்காக ‘யாரு?’ என்று சத்தம் கொடுத்தான்.
அவன் சத்தத்தை நம்பி அவள் சந்தோசமாகச் செல்ல “அந்த ஆளை போலவே மூளை சரியா வளராத பிள்ளையைப் பெத்து வச்சிருக்காரு. அப்பாவும், மகளும் எப்படித் தான் இப்படி இருக்காங்களோ?” என்று திட்டியவன் தன் போனை எடுத்து மாறன் எங்கே இருக்கிறான் என்று கேட்போம் என நினைத்து அவனை அழைக்கப் போக, அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
‘யாரு அது? ஒருவேளை போனவ திரும்பி வந்து திறக்குறாளோ?’ என்று நினைத்து கவனிக்க “டேய் தமிழரசா…!” என்று சத்தம் கொடுத்துக் கொண்டே கதவை திறந்து விட்டான் மாறன்.
“என்னடா இன்னைக்கு இந்தப் பழிவாங்கும் படலமா? ஆனாலும் அந்தப் புள்ள உன்னை ரொம்பத் தான் பழிவாங்குதுடா. ஆனா என்ன ரொம்பச் சின்னப் பிள்ள தனமா இருக்கு” என்று மாறன் நக்கலுடன் சொன்னான்.
“ஹ்ம்ம்…! எல்லாம் அவ அப்பா புத்தி அதான் இப்படி” என்று சலித்த அரசு, “சரி, நீ எப்படிக் கதவை திறந்துவிட வந்த?” என்று விசாரித்தான்.
“நான் வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன்டா. அப்பதான் அந்த இரண்டு பிள்ளைங்களும் உன் வயல் பக்கமா நடக்க ஆரம்பிச்சுதுங்க. என்னடா அதிசயமா உங்க வயலுக்குப் போகுதுங்களேனு பார்த்துட்டு இருந்தா, மோட்டார் ரூம் பின்னாடி போய் ஒளியவும், சரி அப்படி என்னதான் பண்றாங்க பார்ப்போம்னு வெய்ட் பண்ணிட்டு இருந்து உன்னைப் பூட்டிட்டுப் போனதும் திறக்குறேன்” என்றவன்,
“சரி…சரி… வா. அவங்க முன்னாடி போய் நின்னு, நங்கை ரியாக்ஷன் என்னனு நான் பார்க்கணும். ஆனாலும் இந்த விளையாட்டும் நல்லா தாண்டா இருக்கு. இந்தக் காட்டுக்குள்ள நல்ல எண்டர்டென்மெண்ட் தான் போ” என்ற மாறன் அரசுவை அழைத்துக் கொண்டு வந்தான்.
நேற்று நங்கை முகம் போன போக்கையும், அதையும் சமாளித்துத் தங்களையே கிண்டல் அடித்துச் சென்றதும் இப்போது நினைவில் வந்து பைந்தமிழரசனின் அதரங்களைப் புன்சிரிப்பில் விரிய வைத்தது.
நங்கை ஏன் தன்னிடம் இப்படி இன்னும் குழந்தைத்தனமாக விளையாடுகிறாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அவளை இப்படி விளையாடவிடாமல் தடுக்க அவனால் மட்டுமே முடியும் என்றும் தெரிந்தாலும் அதைச் செய்ய ஏனோ அவனுக்குத் தோன்றியதே இல்லை.
தோன்றியது இல்லை என்பதை விட அவளைத் தடுக்க மனதில்லை.
தான் ஒரு வார்த்தை அவளின் முகம் பார்த்து நேரடியாகப் பேசிவிட்டால் அவளின் விளையாட்டுத் தனம் அனைத்தும் அவளை விட்டு போய்விடும் என்று நன்றாகவே உணர்ந்தவன் அவன்.
ஆனால் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், நிற்பது விளையாட்டுதனம் மட்டும் இல்லை. அவளின் உயிர்ப்பும் அதில் போய்விடும் என்பதால் தான் அவளின் சிறுபிள்ளை தனத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறான்.
நங்கையைப் பற்றி யோசித்துக் கொண்டே நடந்து தன் வயலுக்கு வந்தவன் வேலை இருப்பதால் அத்துடன் அந்த நினைவை தள்ளி வைத்து விட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.
நேற்றே செய்து வைத்த ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா? என இன்னொரு முறை பார்வையிட்டு விட்டு திருப்தி அடைய, பொழுதும் புலற ஆரம்பித்தது.
வெளிச்சம் வர ஆரம்பிக்கவும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான்.
பாதி வேலை முடிந்திருக்க அரக்க பரக்க ஓடிவந்தான் அங்கே வழக்கமாய் வேலை செய்யும் முருகன் “தம்பி மன்னிச்சுக்கோங்க தம்பி. இன்னைக்கு வர நேரம் ஆகிருச்சு. குடுங்க சொச்சம்(மீதம் உள்ள) பாத்தி நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க தம்பி” என்று அரசு கையில் வைத்திருந்த மம்பட்டியை வாங்க கை நீட்டினான்.
முருகனின் முகத்தைப் பார்த்த அரசு “என்ன அண்ணே! கண்ணு எல்லாம் இப்படிச் சிவந்துருக்கு. என்னாச்சு…?” என்று விசாரித்தான்.
“ராவெல்லாம்(இரவு) புள்ள ஒரே அழுகை தம்பி. உடம்புக்கு முடியல. நானும் ஏ ஊட்டுக்காரியும் மாத்தி, மாத்தி பிள்ளையை வச்சிட்டு இருந்தோம். இப்ப விடியல்ல கொஞ்சம் கண் அசந்துட்டேன். இல்லனா வெள்ளனயே (சீக்கரம்) வந்திருப்பேன்” என்று சொன்னான்.
“நீங்க வெள்ளன வர்றது இருக்கட்டும். புள்ளக்கு இப்ப எப்படி இருக்கு?” அரசு கேட்டான்.
“இன்னும் ஜொரம்(காய்ச்சல்) இருக்கு தம்பி. ஏ ஊட்டுக்காரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகச் சொல்லிட்டு இங்க ஓடியாந்தேன். இன்னும் கொஞ்சம் வெயில் ஏறவும் வயலுக்கு வர்ற பிள்ளைக வந்துரும்ல தம்பி. அதுவரைக்கும் நீங்க போயி கொஞ்சம் இளப்பாருங்க(ஓய்வு எடுங்க). நான் பாத்தி வெட்டி விட்டு வாறேன்” என்று அவன் சொல்லவும்…முருகனை முறைத்துப் பார்த்தான் அரசு.
“என்ன தம்பி எதுக்கு முறைக்கிறீக?” என்று முருகன் புரியாமல் கேட்டான்.
“புள்ள அப்படி உடம்பு முடியாம இருக்குறப்ப உன்னை யாரு இங்க வர சொன்னாண்ணே?” என்று கடிந்து கொண்டவன் தன் சட்டை பையில் இருந்து பணம் எடுத்து “இந்தா! மொத பிள்ளைய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்டிட்டு உடம்பு சரியான பிறகு வேலைக்கு வாண்ணே போதும்” என்றான்.
“இல்ல தம்பி! என் சம்சாரம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போவா. இங்க ஆளு வேணுமே? நீங்க எப்படிச் சமாளிப்பீங்க?” என்று முருகன் தயங்கினான்.
“இங்க நான் சமாளிச்சுப்பேன். இப்ப பிள்ள தான் முக்கியம். நீ சும்மா பேசிட்டு நிக்காம கிளம்புற வேலையைப் பாரு!” என்று அரசு விரட்டினான்.
முருகன் “சரி தம்பி…” என்று பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பினான்.
முருகன் சென்றதும் தன் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டுக் கிணற்றில் போய்க் குளித்து விட்டு வந்து மோட்டார் அறையில் இருந்த ஒரு மாற்றுடையை எடுத்து மாற்றித் தயார் ஆனதும், வெளியே வந்து நின்றான்.
எட்டு மணி ஆகியிருந்தது வீட்டில் வேலை செய்யும் ஒரு ஆள் சாப்பாட்டை எடுத்து வந்து கொடுக்க அதைச் சாப்பிட்டு முடிக்கவும் கூலி வேலைக்கு வருபவர்கள் வந்தார்கள். அவர்களுக்கான வேலையைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது தூரத்தில் சலசலவெனப் பேச்சுச் சத்தம் கேட்டது.
‘பசங்க வந்துட்டாங்க போல?’ என்று திரும்பி பார்த்தான். அங்கே ஆணும், பெண்ணுமாகப் பத்தில் இருந்து பதினைந்து வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
கூட இரண்டு ஆசிரியர்களும் அந்த மாணவர்களுடன் வந்தவர்கள் தூரத்தில் வரும்போதே அரசுவை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தார்கள்.
அரசுவும் புன்னகைத்தவன், மாணவர்களைப் பார்த்து “வாங்க பசங்களா!” என்று சந்தோஷமாக வரவேற்றான்.
அவர்களும் சிறு கூச்சமும் தயக்கமுமாகச் சிரித்தார்கள்.
அவர்கள் எல்லோரையும் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலுக்கு அழைத்துப் போனான்.
சிறிது நேரம் அந்த ஆசிரியர்களிடம் பேசியவன், பின்பு மாணவர்கள் பக்கம் திரும்பி “அப்புறம் பசங்களா. என் பேரு பைந்தமிழரசன்” என்று அறிமுகப் படுத்திக் கொண்டுவிட்டு “நீங்க எல்லாம் எதுக்கு இங்க வந்துருக்கீங்கன்னு தெரியுமா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்… எங்க சார் சொன்னாங்க. விவசாயம் பத்தி தெரிஞ்சுக்கப் போறீங்கன்னு. அதுக்குத் தான் வந்திருக்கோம்” என்கிறார்கள் கோரஸாக.
“ம்ம்… கரெக்ட் தான். அதை விட நம்ம வாழ்வாதாரத்தைத் தெரிஞ்சுக்கப் போறோம்னு சொன்னா சரியா இருக்கும்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு எல்லாரும் சமத்தாகத் தலையாட்டினார்கள்.
அவர்களைப் பார்த்து சிரித்தவன் “உங்களை எல்லாம் நான் ரொம்பப் போரடிக்க மாட்டேன். நாம அன்றாட முக்கியத் தேவையே உணவு தான். எவ்வளவு தான் நாம சம்பாதிச்சாலும் ஒரு வேலை சாப்பிட சாப்பாடு கிடைக்காத சூழ்நிலை உருவானா நாம எல்லாம் பூஜ்யம் தான். அந்தச் சாப்பாடுக்குத் தானியம் எப்படி உருவாகுதுன்னு கூட நிறையப் பேருக்குத் தெரியுறது இல்லை. என்ன சரியா?” என்று அவர்களைப் பார்த்து கேட்டுவிட்டு “உங்க எல்லாருக்கும் தெரியுமா? அரிசி எதில் இருந்து வருதுன்னு? என்று கேட்டான்.
அவன் கேள்வி கேட்டதும் ‘எனக்குத் தெரியும்’ எனச் சிலரும் ‘தெரியலையே’ எனப் பலரும் சொன்னார்கள்.
“ம்ம்… சரி… சரி. தெரியாதவங்களுக்குத் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?” என்று கேட்டான். அவர்கள் ‘ஆமாம்’ என்று சொல்லவும்,
“குட்…! எல்லாரும் நல்ல பசங்களா இருக்கீங்க!” என்றவன், “வாங்க அப்படியே வயல் பக்கம் நடந்துட்டு வருவோம். உங்களுக்கு அப்படி நடக்கும் போது என்ன கேள்வி கேக்க தோணுதோ அதைத் தயங்காம, தாராளமா கேளுங்க. நான் பதில் சொல்றேன்” என்றவன் ஆசிரியர்கள் உதவியுடன் அவர்களைக் கவனமாக வரப்பில் நடக்க வைத்து வயல்களைச் சுற்றி நடக்க ஆரம்பித்தான்.
நடந்து கொண்டே அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னான்.
அவன் தந்தை அவனுக்குக் கற்று தந்ததைத் தன் வாரிசுக்கு மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைத்து நாளைய தலைமுறைக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் திருச்சிலேயும் அதைச் சுற்றி உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளிலும் அவனே நேரடியாகச் சென்று தலைமை இடத்தில் பேசி அனுமதி வாங்கி இது போல மாதத்திற்கு ஒரு பள்ளியில் இருந்து இன்று போல மாணவர்களை வர வைத்து அவர்களிடம் விளையாட்டு போலப் பேசி தன் வயலை சுற்றி காண்பித்து விவசாயத்தைப் பற்றிச் சிறு புரிதலையாவது அவர்கள் மனதில் ஏறும் படி செய்து விடுவான்.
பிற்காலத்தில் விவசாயத்தின் மீது இங்கே வந்திருக்கும் முப்பது, நாற்பது பேரில் ஒரு இரண்டு பேராவது விவசாயம் செய்ய மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பும் அவனின் இந்த முயற்சிக்குக் காரணம்.
இந்த முயற்சியில் பைந்தமிழரசனுக்குச் சிறு வெற்றியாவது கிடைத்தால் அது அவனுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. விவசாயத்திற்கே கிடைத்த வெற்றி.
பிள்ளைகளுடன் வயலை சுற்றி விட்டு அவர்களைப் பேச வைத்து தன் விளக்கங்களை எல்லாம் பகிர்ந்துகொண்ட அரசு மீண்டும் மரத்தடியில் அமர வைத்தான்.
அனைவருக்கும் வீட்டில் இருந்து சாப்பாடு வந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் வேலைக்கு வந்திருந்த ஆட்களின் துணையுடன் அவனின் தென்னை, மாந்தோப்பிற்கு அனுப்பி வைத்தான்.
ஆசிரியர்கள் இருவரும் அவனுடன் மரத்தடியில் அமர்ந்திருக்க, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“உங்க இந்த முயற்சி பாராட்டுக்குரியது தமிழரசன். நல்லா படித்த ஒரு இளைஞரா இருந்து விவசாயத்தில் ஈடுபடுறதும் இல்லாம, இது போலச் சின்னப் பிள்ளைகளுக்கும் விவசாயத்தைப் பற்றிய அருமைகளை அவங்களுக்குப் புரியுற மாதிரி அழகா சொல்லி தர்றீங்க” என்றார் ஒரு ஆசிரியர்.
அவரைப் பார்த்து மென் புன்னகை ஒன்றை சிந்திய அரசு “இதை நான் பாராட்டுக்காகச் செய்யலை சார். இப்ப நாட்டுக்கு எது தேவையோ அதில் ஒரு விவசாயியா நான் அக்கறை செலுத்துறேன் அவ்வளவுதான். இதுவும் கூட எங்கப்பா எனக்குச் சொல்லி தந்தது தான். என் அப்பா தான் எனக்குக் குரு. அவர் எப்படிச் சின்னப் பிள்ளையில் இருந்தே எனக்கு விவசாயம் பத்தி தெரிஞ்சிருக்கணும்னு நினைச்சாரோ, அதை நான் இப்ப நடை முறை படுத்துறேன்.
இப்ப இருக்குற பிள்ளைங்களுக்குப் பாதிக்குப் பாதிப் பேருக்கு கண்டிப்பா விவசாயம்னா என்னன்னு கூடத் தெரிஞ்சிருக்காது. ஏன்னா எல்லாம் விஞ்ஞான மயம் ஆகிவிட்ட உலகம் இது. நகரத்தில் வளர்ற பிள்ளைங்களுக்கு மட்டும் இல்ல, கிராமத்தில் வளர்ற பிள்ளைங்களுக்குக் கூட விவசாயத்தின் அருமை தெரியுறது இல்லை. அதன் அருமையைத் தெரிய வைக்க என் இந்த முயற்சியின் மூலம் செயல் படுத்துறேன். அவ்வளவு தான். என் முயற்சிக்கு உதவியா இருந்த உங்க பள்ளிக்கும், முதல்வருக்கும், காலையிலேயே பிள்ளைகளைக் கூட்டிட்டு வந்த உங்களுக்கும் தான் என் நன்றியை சொல்லணும்” என்றான்.
அவன் பேசி முடித்ததும் “உங்க முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கட்டும் சார்” என்று இரு ஆசிரியர்களும் தங்கள் வாழ்த்தை சொன்னார்கள்.
மாணவர்கள் மாலை நேரத்தில் கிளம்பி சென்று விட, அன்றைய தன் வேலையைத் திருப்திகரமாக முடித்த மகிழ்ச்சியுடன் தந்தையின் வயலுக்குச் சென்றான்.
அப்போது எதிரே வந்த நங்கையைப் பார்க்க அவளின் முகத்தில் என்றும் இல்லாத வகையில் இருந்த சோர்வை தான் பார்க்க நேர்ந்தது.
அவளைக் கடந்து செல்லும் போது ஓரக்கண்ணால் அவளது சோர்ந்த முகத்தைக் கண்டவன் முகம் யோசனையில் சுருங்கியது.
‘என்னாச்சு எதுக்கு இப்படி இருக்கா?’ என்று நினைத்துக் கொண்டே அவளைக் கடந்து சென்றான் பைந்தமிழரசன்.