கண்கள் தேடுது தஞ்சம் – 8
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
திருச்சி சென்று வந்த மறுநாள் தன் வயல் எல்லாம் சுற்றி வந்த நங்கை, அங்கே வயல் வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் கிளம்பி சென்ற பிறகும் வீட்டிற்குக் கிளம்பாமல் அங்கே இருந்த மரத்தடியில் வாணியுடன் அமர்ந்திருந்தாள்.
அங்கே இருந்த அவளின் தந்தை “என்னமா பவளம்! இன்னும் வீட்டுக்கு கிளம்பாம உட்கார்ந்து இருக்க? கிளம்புங்கமா இரண்டு பேரும்! எனக்கு வேற வேலை இருக்கு. நானும் கிளம்பணும். இங்க தனியா இருக்காதீங்க. வீட்டுக்கு போங்க பவளம்” என்றார்.
“அப்பா நாங்க இன்னைக்கு நம்ம பம்புசெட்ல குளிக்கப் போறோம்பா. அதான் எல்லாரும் கிளம்பட்டும்னு உட்கார்ந்து இருக்கோம்” என்றாள்.
நங்கை சொன்னதைக் கேட்டதும் ‘இது எப்ப முடிவாச்சு?’ என்பது போல வாணி நங்கையைப் பார்த்து முழித்தாள்.
தன் அருகில் இருந்த வாணியின் கையைப் பிடித்து ஒரு அழுத்து அழுத்திய நங்கை ‘அமைதியா இரு!’ என்பதைப் போலக் கண்ணைக் காட்டினாள்.
பெண்கள் குளிக்கப் போவதாகச் சொன்னதும் அதற்கு மேல் எதுவும் கேட்காத மருதன் “சரிம்மா! நேரம் போக்காம சீக்கரம் குளிச்சுட்டு வீடு வந்து சேருங்க. நான் கிளம்புறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.
அவர் கிளம்பினதும் எழுந்து சுற்றி, முற்றி ஒரு முறை பார்த்த நங்கை “இப்ப போகலாம்” என்றாள்.
அவளை அமைதியாக வேடிக்கை பார்த்த வாணி “இப்ப என்ன செய்யத் திட்டம் போட்டிருக்க? நீ செய்றதை எல்லாம் பார்த்தா குளிக்கப் போறது போலத் தெரியலையே?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“ஸ்ஸ்…! கொஞ்ச நேரம் அமைதியா இருடி! நீ வேற சும்மா நொய் நொயிண்டு” என்று நங்கை எரிச்சலுடன் சொல்லவும்,
அவளை முறைத்த வாணி “மவளே…! ஏன்டி சொல்ல மாட்ட? நீ எங்க கூப்பிட்டாலும் உன் கூடவே சுத்துறேன்ல? சொல்லத்தான் செய்வ. எங்கம்மா இப்பயெல்லாம் சாயந்திரம் நேரங்கழிச்சி வீட்டுக்குப் போனா திட்டுது.
அதையும் காதில் வாங்காம உன் கூட இங்க இருந்தா, நீ இதுவும் சொல்லுவ. இதுக்கு மேலயும் சொல்லுவ. ஒழுங்கா என்ன செய்யப் போறனு சொல்லு. இல்லனா நான் பாட்டுக்குக் கிளம்பி வீட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்” என்று மிரட்டலாகச் சொன்னாள்.
அவள் மிரட்டலை காற்றில் விட்டவள் “எல்லா அம்மாவும் அப்படித்தான்டி இருப்பாங்க. அவங்களும் நம்ம வயசுல நம்மள மாதிரி அவங்க அம்மாகிட்ட திட்டு வாங்கத்தான் செய்திருப்பாங்க. ஆனா அவங்களும் ஒரு அம்மாவா ஆன பிறகு அவங்க வாங்கின திட்டை எல்லாம் நம்மகிட்ட திருப்புவாங்க. நாளைக்கு நாமளும் அதைத்தான் செய்வோம். அதனால அம்மா திட்டுறதுக்கு எல்லாம் பயப்படக் கூடாது. சரியா தங்கம்…?” என்று நங்கை நீளமாகப் பேசிக் கொண்டு போனாள்.
அவளை முறைத்த வாணி “இப்ப எதுக்கு நீ இவ்வளவு நீளமா வியாக்கியானம் பேசுற? சட்டுன்னு விஷயத்துக்கு வாடி!” என்று திட்டினாள்.
“சரிடி செல்லம்! ரொம்ப மிரட்டாதே! இரு சொல்றேன்” என்றவள் மீண்டும் வயலை சுற்றி வேறு ஆட்கள் இருக்கிறார்களா? என்று பார்த்தாள்.
யாரும் கண்ணுக்குத் தெரியாமல் போக வாணியின் புறம் திரும்பி “அந்த மிளகா இப்ப அவங்க வயலுக்கு வரும்ல? வந்ததும் எப்படியும் அவங்க மோட்டார் ரூம்க்குள்ள போகும். அப்ப நாம ஒளிஞ்சி இருந்து, மோட்டார் ரூம் கதவை வெளிப்பக்கமா பூட்ட போறோம்” என்றாள் நங்கை.
அவள் சொன்னதைக் கேட்டதும் அவளை மேலும், கீழும் பார்த்து “ஏன் இப்படி லூசுத்தனமா யோசிக்கிற நங்கை?” என்று முகத்தைச் சுளித்துக் கேட்டாள் வாணி.
“இதுல என்னத்தை லூசுத்தனத்தைக் கண்டுட்ட?” என்று நங்கை எகிறினாள்.
“பின்ன…? நீ செய்ய நினைக்கிறது வேற எப்படி இருக்கு? உள்ள வச்சு பூட்டுறதுல உனக்கு என்ன லாபம்? இது என்ன சின்னபிள்ள தனமா ஒரு விளையாட்டு. இன்னும் ஏன் சின்னபிள்ளையாவே யோசிக்கிற?” என்று வாணி கடுப்பாகக் கேட்டாள்.
“சின்னபிள்ள தனமா தெரிஞ்சாலும் எனக்குக் கவலை இல்லை. போடி…!” என்று அசால்ட்டாகச் சொன்னவள் “என்ன லாபம்னா கேட்ட? அந்தக் கருவாடுக்கு என்ன தைரியம் இருந்தா என்னைப் பார்த்து நக்கலா சிரிக்கும்? அதுக்கு நான் ஏதாவது செய்தே ஆகணும். பூட்டினா எப்படியும் இப்ப யாரும் அவ்வளவா இந்தப் பக்கம் வர மாட்டாங்க. வேற ஆளுங்க வந்து திறக்குற வரை உள்ளேயே கிடக்கட்டும். கொஞ்ச நேரம் யாரு உள்ள வச்சு பூட்டினாங்கன்னு தெரியாம அவதி படுவான்ல அது போதும் எனக்கு” என்றாள் சூளுரைத்தது போல.
“இது எல்லாம் வேண்டாத வேலை. வா… நாம கிளம்புவோம். ரொம்ப இருட்டிக்கிட்டு வருது” என்று வாணி அவளைக் கிளப்ப பார்த்தாள்.
“போகணும்னா நீ போ…! இன்னைக்கு நான் சொன்னதைச் செய்யாம விடுறதா இல்லை” என்று நங்கை அந்த மரத்தடியில் சம்மணம் போட்டு அமர்ந்து விட்டாள்.
“அய்யோ ஆண்டவா…! சரியான ஒரு லூசுக்கிட்ட என்னை மாட்டி விட்டுடீங்களே. இது நியாயமா?” என்று வாணி வானத்தைப் பார்த்து புலம்ப ஆரம்பித்தாள்.
“ஸ்ஸ்…! கடவுள்கிட்ட அப்புறமா புலம்பு! இப்ப வா! அவங்க மோட்டார் ரூம் கிட்ட போய் ஒளியணும்” என்ற நங்கை வேகமாக நடந்து போய்த் தங்கள் வயலுக்கு அருகிலேயே இருந்த அரசுவின் வயலுக்குள் நுழைந்து அங்கே இருந்த மோட்டார் அறையின் பின்புறம் போய் நின்றாள். வாணியும் தலைவிதியே என்று பின்னால் சென்று நின்றாள்.
வாணி முன்பு பல தடவை இது போல விளையாடாதே என்று எடுத்து சொல்லியும் நங்கை இப்படி விளையாடுவதை நிறுத்துவது இல்லை என்பதால் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டாள். இப்போதும் அவள் தன் பேச்சை கேட்காததால் அவள் இஷ்டம் என்று இருந்து விட்டாள்.
சிறிது நேரம் அவர்கள் காத்திருக்க அன்று சிறிது தாமதமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வேக நடை போட்டு வயலில் நடந்து வந்து கொண்டே கலைந்திருந்த தலைமுடியை ஒரு கையால் அழகாக ஒதுக்கி விட்டுக் கொண்டே வந்தான் பைந்தமிழரசன்.
அவனின் செயலை பார்த்து “ஹக்கும்…! இந்த ஸ்டைலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று நங்கை நொடித்துக் கொள்ள… வாணி கடனே என்று அவளைக் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தாள்.
பைந்தமிழரசன் வயல்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தவன் நேராக மோட்டார் அறை முன் நின்று தன் சட்டை பையில் இருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று ஏதோ செய்து கொண்டிருக்க…
அரசு கதவை திறக்கும் போதே தயாராக நின்று கொண்டிருந்த நங்கை அவன் உள்ளே சென்றதும் வேகமாக ஓடி வந்து லேசாக மட்டும் திறந்து வைத்திருந்த கதவை இழுத்து மூடினாள்.
அரசு சத்தம் கேட்டு “ஹேய்…! யாரு…?” என்று குரல் கொடுத்தான்.
‘ஹ்ம்ம்…! சொல்லிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்’ என்று முனங்கியவள் கதவை தாழ் போட்டு விட்டு ‘வா…’ என்பது போல வாணிக்குச் சைகை காட்டிவிட்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.
வயல்களைத் தாண்டி சென்ற பிறகு தன் நடையின் வேகத்தைக் குறைத்த நங்கை,
“நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்…நான்…நான்…”
என்று ராகம் போட்டு பாட ஆரம்பித்தாள்.
தன் காதை பொத்திய வாணி “ஆமா இந்த அம்மா, பெரிய மெடல் வாங்கணும்னு நினைச்சு நடத்திக் காட்டிட்டாங்க. சின்னப் பிள்ள தனமா விளையாடிட்டு வந்துட்டு நினைச்சதை முடிச்சாலாம். பேசாம வாய மூடிக்கிட்டு வாரீயா! இல்ல வாயையிலேயே ஒரு அடி போடவா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“ஆமா! உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது. ஓஹோ…! நீ தான் அந்தக் குடமிளகாவ அண்ணன்னு சொல்லுவல? அண்ணனை பூட்டினதும் தங்கைக்குக் கோபம் வருதோ?” என்று எகத்தாளமாக நங்கை கேட்டாள்.
“ஆமா அப்படித்தான். சரிதான் போடி…! இனி நீயாச்சு, உன் மாமனாச்சு. உங்க விளையாட்டில என்னை இழுக்காதீங்க! இப்ப நீ பூட்டி வச்சதே என்ன வினை விழுந்து விடுமோன்னு பயந்துட்டு இருக்கேன். இதுல இந்த முகரைக்குப் பாட்டுவேற கேட்குது பாட்டு. வெரசா நட! மொத வீடு போய்ச் சேர்ந்தா தான் எனக்கு நிம்மதி” என்று வாணி சொல்லவும்…
“நீ எதுக்கு இவ்வளவு பயப்படுற? பெருசா ஒன்னும் ஆகாது. பதறாம வா” என்று நங்கை அவளைச் சமாதானப்படுத்திய படி இருவரும் பாதையை மறைத்து ஒருவர் கையை ஒருவர் கோர்ந்துக்கொண்டு கண்மாய்க் கரையின் மேல் நடந்து கொண்டிருக்கும் போதே, அவர்களின் பின்னால் செருமல் சத்தம் கேட்டது.
‘யாரது?’ என்பது போல இருவரும் ஒரு சேர திரும்பி பார்த்த நொடியில் ஒருத்தி முகத்தில் சிறு பயமும், ஒருத்தி முகத்தில் ஆச்சரியம் கலந்த கோபமும் வந்தது.
அவர்களின் எதிரே நக்கல் சிரிப்புடனும், கிண்டலான பார்வையுடனும் நின்றிருந்தான் பைந்தமிழரசன்.
‘அய்யோ…! இந்த அண்ணே இவளோட சேர்ந்து என்னையும் திட்டப் போகுது’ என்று நினைத்த வாணி நங்கையின் பின் ஒதுங்கினாள்.
‘இந்தக் குடமிளகா எப்படி அதுக்குள்ள வெளியே வந்துச்சு?’ என்று யோசித்தப்படி பார்த்த நங்கைக்கு விடையாக அரசுவின் பின்னால் மாறன் நின்றுக்கொண்டு இருந்தான்.
மாறனை பார்த்ததும் ‘அட குரங்கே…! நீ தான் இந்த வேலையப் பார்த்ததா?’ என்று அவனை மனதில் திட்டிக் கொண்டு முறைத்துப் பார்த்தாள்.
நங்கையின் முறைப்பை பார்த்து “என்ன தமிழரசா? இங்க சூடு அதிகமா இருக்கு. பொசிங்கிருவோம் போல?” என்று அரசுவிடம் பேசுவது போல மாறன் அவளைக் கிண்டல் செய்ய… நங்கையின் கண்ணில் அனல் கூடியது.
அவளின் முறைப்பிற்குப் பதிலாக அரசு நமட்டுச் சிரிப்பொன்றை வெளியிட்டவன் தன் தோளை குலுக்கி விட்டுக் கொண்டான்.
அரசுவின் சிரிப்பில் அவனை முறைத்த நங்கை மாறனிடம் “என்ன வாய் நீளுது?” என்று மாறனை பார்த்து சொன்னவள் “நேத்து ஒரு ஆள் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரிச்சதுக்குத் தான் பூட்டி வச்சுட்டு வந்தேன். இன்னும் அடங்கலைனா நான் என்ன செய்ய?” என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டு தானும் அரசுவை போலவே தோளை குலுக்கினாள்.
“ஓஹோ…! அறிவு கொழுந்து தான் நீ. இந்தக் காலத்தில் மொபைல் இல்லாம எவன் இருக்கான்? அவன் ஒரு போன் போட்டா யாராவது வந்து திறந்து விடப் போறாங்க. ஆனா பாரு அதுக்கு அவசியம் இல்லாம நான் செய்துட்டேன்” என்றான் மாறன்.
“என்ன சொல்ற?” என்று நங்கை அவனைக் கூர்ந்து பார்க்க…
“ஆமா நீங்க பூட்டும் போது நான் எங்க வயல்ல தான் இருந்தேன். நீங்க இரண்டு பேரும் என்னைக் கவனிக்கலை. நீங்க இந்தப் பக்கம் வந்ததும் நான் திறந்து விட்டுட்டேன்” என்றான்.
‘நாம யாரும் இருக்காங்களா இல்லையானு சுத்தி பார்த்தோம். அப்ப எல்லாம் இவன் கண்ணில் படலையே. என்கிட்டயும் தான் மொபைல் இருக்கு. நான் வயலுக்கு வரும் போது எடுக்காம தானே வர்றேன். இந்தக் குடமிளகாவும் அது போல வருவான்னு பார்த்தா மொபைலை எடுத்துட்டு வந்திருக்கு எருமை’ என்று இருவரையும் மனதிற்குள் திட்டிய நங்கை தன் கையில் இறுகல் உணர்ந்து தன் பின்னால் திரும்பி பார்த்தாள்.
வாணி தான் அவளின் கையை இறுக பிடித்திருந்தாள். என்ன என்பது போல நங்கை வாணியைப் பார்க்க “வார்த்தையாடாம கிளம்புடி!” என்று அவள் காதில் மெதுவாகச் சொன்னாள்.
“நீ எதுக்கு இப்ப பயப்படுற? இவனுங்க அப்படி என்ன செய்திருவானுங்க?” என அரசு, மாறன் இருவரையும் பார்த்து ஏளனமாகச் சொன்னாள்.
நக்கல் சிரிப்பு அப்படியே மாறக் கோபத்தைக் கண்ணில் தாங்கி பார்த்தான் அரசு.
அவன் கோபத்தில் குதூகலம் வந்தது போல நங்கை இன்னும் ஏதோ சொல்லப் போக…
அதற்குள் மாறன் “அம்மா தாயே…! நாங்க உன்னை விடக் கொஞ்சம் மூத்தவங்க. மரியாதையா பேசினா நல்லா இருக்கும்” என்றவனை அரசு தான் மனதில் நினைத்ததைச் சொன்ன நண்பனை மெச்சும் பார்வை பார்த்தான்.
அரசு வந்ததில் இருந்து ஒரு வார்த்தையும் பேசாமல் மாறன் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தான்.
அதைக் கவனித்த நங்கை அவனைப் பார்த்து ஒரு கிண்டல் சிரிப்பை வெளியிட்டவள், “அடியே வாணி! இங்க டப்பிங் சோ நடக்குதுடி. திட்டறதை கூட ஆள் வச்சு திட்டுற மகாபிரபு முன்னாடி நமக்கு என்ன பேச்சு? வா நாம போவோம்” என்று வாணியின் கையைப் பிடித்துத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் பேச்சில் கடுப்பான மாறன் “டேய் பாருடா…! உன்னால என்னை டப்பிங் பீஸுன்னு சொல்லுட்டு போறா” என்று கத்தினான்.
நங்கை போவதையே ஒரு புரியாத பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்து விட்டு நண்பனின் கத்தலில் திரும்பி அவனைப் பார்த்து “உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும் மாறா” என்று புன்னகையுடன் சொன்னான் பைந்தமிழரசன்.