கண்கள் தேடுது தஞ்சம் – 32
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 32
“உன் கண்கள் தேடிய தஞ்சம் கிடைச்சுருச்சாடா நங்கா?” என்று கிசுகிசுப்பாய் கேட்டப்படி தன் விழியைத் தீண்டும் அவன் விழிகளைக் கண்டவளுக்கு அவனின் கேள்வியில் விழிகள் உடைப்பெடுக்கத் தன் முகத்தை அவனின் மார்ப்பில் புதைத்துக் கொண்டு கண்ணீர் விட்டவளிடம் இருந்து கேவல் சத்தம் வந்தது.
அவளின் அழுகையை எதிர்பார்க்காதவன் தன் நெஞ்சத்தில் தஞ்சமடைந்திருந்தவளை சுற்றி கையைப் போட்டு இன்னும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.
அவனின் இறுகிய அணைப்பில் தான் இருக்கிறோம் என்று கூட உணரமுடியாமல் தன்னுடைய இத்தனை நாள் தவிப்பை தன் கண்ணீரால் கரைக்க நினைத்தாள்.
தன் மனதில் அவன் நுழைந்த நாள் முதலாய் அவளுக்குள் புகுந்திருந்த தவிப்பு. அவனைக் காணவே தவம் இருந்தவள் போலச் சுற்றி வந்த நாட்களில் அவனின் அலட்சிய பார்வையில் உள்ளுக்குள் உடைந்திருந்தவளுக்கு, தன் வாழ்க்கை அவனுடன் இணையுமா? இல்லையா? என்று தெரியாமலேயே ஏதோ ஒரு நம்பிக்கையில் வெளியில் விளையாட்டு பிள்ளையாகவும், மனம் முழுவதும் அவன் மீதான நேசத்துடனும் வலம் வந்தவளுக்கு இப்போது அவனே தன் கணவனாகத் தன் அருகில் தன்னைத் தாங்கியப்படி என்ற எண்ணமே நங்கையின் மனதை உருக வைத்துக் கண்ணீர் விட வைத்தது.
அவள் உணர்வுகள் புரிந்தது போலச் சிறிது நேரம் மௌனம் காத்த அரசு, தன் மார்பில் உணர்ந்த அதிக ஈரத்தில் அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் தன் அணைப்பை இலகுவாக்கி தன்னிடம் இருந்து லேசாக விலக்கப் பார்த்தான். ஆனால் தான் தேடிய தஞ்சம் கிடைத்து விட்ட நிறைவில் இப்போது தானே அவனை இறுக்கிக் கொண்டாள்.
அவளாகத் தன்னை அணைக்கும் முதல் அணைப்பு! அதை விட்டுவிட மனம் இல்லைதான் அவனுக்கு. ஆனால் அவள் விழிகள் இன்னும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கையில் இந்த அணைப்பை சுகிக்க மனம் இல்லாமல் அவளைத் தன்னிடம் இருந்து மெதுவாகப் பிரித்தெடுத்தான்.
அவனை விட்டு பிரிந்த பிறகு தான், தான் இவ்வளவு நேரம் நின்றிருந்த நிலை உரைக்க அதிர்ந்து இன்னும் இரண்டடி தள்ளிப் போனவளுக்குக் கூச்சம் வந்து ஒட்டிக் கொள்ள அவனுக்கு முதுகை காட்டி திரும்பி நின்றாள்.
அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. ‘நானா அவனை இவ்வளவு நேரம் அணைத்து நின்றேன்? ச்சே…! இப்படியா அவன் அருகில் வந்தாலே தான் செயல் இழந்து அவன் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவது? நான் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்தால் அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?’ என்று எண்ணிப் பார்த்தவளுக்குத் தன் மீதே கோபம் வர சட்டெனத் தன் பின்ன தலையில் லேசாகத் தட்டிக் கொண்டாள்.
அவன் என்ன நினைப்பானோ என்று தன்னையே திட்டிக் கொண்டவளுக்குத் தன் உயிரில் உணர்வாய் கலந்து விட்டவனின் அருகில் வெட்கமென்ன? கூச்சமென்ன?
மனம் முழுவதும் அவன் பரவி இருக்கையில் உரிமையானவனின் தொடுகையில் உருகாமல் போனால் தானே தவறு! அதைப் புரிந்து கொள்ளாமல் இன்னும் தயக்கத்துடன் தமிழரசனின் முகம் பார்க்க முடியாமல் தடுமாறி நின்றாள்.
தன் நங்கா தன்னைவிட்டு அதிர்ந்து விலகியதில் முதலில் திகைத்துப் போன அரசு. அவள் முகம் காண மறுக்கவும் வெட்கம் போல என்று நினைத்து அவள் நிதானப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்து விலகி நின்றான்.
ஆனால் அவள் தன் தலையில் அடித்துக் கொள்ளவும், தன்னை அணைத்தற்கா அடித்துக் கொள்கிறாள்? என்று நினைத்தவனுக்கு மனம் வருந்தியது.
அதனுடன் மெல்லிய கோபமும் எழ, விரைந்து அவள் அருகில் சென்று தங்களுக்குள் இருந்த இடைவெளியை குறைத்தவன் திரும்பி இருந்தவளை தன் பக்கம் வேகமாகத் திருப்பினான்.
அவனின் வேகத்தில் நிலை தடுமாறியவள் “என்….என்ன?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“இப்ப எதுக்கு நங்கா உன்னை நீயே அடிச்சுக்கிட்ட? என்னை அணைச்சுக்கிட்டதுக்கா?” என்று சிறு கோபத்துடன் கேட்டான்.
‘ஆம்…!’ என்று சொல்ல நங்கைக்குத் தயக்கம் தடை போட, தன் இமையைத் தாழ்த்திக் கொண்டாள்.
அவளின் மௌனமே பதிலை தந்துவிட அவனுக்கு இன்னும் கோபம் தான் வந்தது.
“என் முகத்தை நிமிர்ந்து பாரு நங்கா?” என்று சிறு அதட்டல் போட்டவனைப் பட்டென அவள் நிமிர்ந்து பார்க்க… “நீ இப்ப என் மனைவி தானே? அப்படியிருக்கும் போது இப்ப நீ செய்ததில் என்ன தப்பு இருக்குனு அடிச்சுக்கிட்ட?” என்று கேட்டவனை இப்போது கூர்மையாகப் பார்க்க ஆரம்பித்த நங்கையைப் புரியாமல் பார்த்தான்.
“என்ன நங்கா? எதுக்கு இப்படிப் பார்க்குற?” கேட்டவனை இமைக்காமல் பார்த்து “எப்பவும் நானே தானே மாமா உன்னைத் தேடி வர்றேன். உன்னைப் பார்க்கணும்னு சின்னப் பிள்ளைல உன் மேல இருந்த அன்பால தேடி வந்த நான், ஒரு கட்டத்துல அன்பை தாண்டி உன் மேல வந்த பிரியத்தால உன் முகம் பார்க்க ஓடி வந்தேன். ஆனா நீ…?” கேட்டுவிட்டு ஒரு நொடி பேச்சை நிறுத்தியவள் மீண்டும்,
“இதோ இப்ப கூட நீ தொட்டதும் உன் கையில் உருகி போறேன். இப்படி வெட்கமே இல்லாம நான் உன் பின்னாடி அலைஞ்சது மட்டும் இல்லாம, இப்படி உன் கைல கரையிறதையும் நினைக்கும் போது எனக்குப் பயமா இருக்கு. நீ என்னை என்னமாதிரி எப்படி நினைச்சிருவியோனு” என்று அவள் சொல்லி முடிக்கும் போது குரல் அழுகையில் கரகரக்க ஆரம்பித்தது.
அவளின் பேச்சில் கண் மூடி தன்னை நிதானித்துக் கொண்டு பின் கண் திறந்தவன் “இப்படி உட்கார்டா நங்கா பேசுவோம்” என்றவன் அருகில் இருந்த கட்டிலில் அமர சொன்னான்.
அவள் சிறு தயக்கத்துடன் நிற்க, அவள் அருகில் வந்தவன் அவளின் கையைப் பற்றி நகர்த்திச் சென்று கட்டிலில் அமர வைத்து விட்டு தானும் அவள் முகம் காணும் வண்ணம் எதிரில் அமர்ந்தான்.
“நீ என்னைப் பார்க்க வந்ததுக்கு வருத்தப்படுறியா நங்கா?” என்று கேட்டான்.
“இல்லை” என்று நங்கை “ஆனா விலகி விலகி ஓடுறவங்களை ஏன் அப்படிப் பார்க்க போகணும்னு வாணியே ஒரு முறை என்கிட்ட கேட்டுருக்கா. அப்பயெல்லாம் நீங்கெல்லாம் என் உறவு. உங்களைப் பார்க்க போறதில் என்ன தப்பு இருக்குனு கேட்டுருக்கேன். ஆனா உன்னை என்னவனா நினைக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் தயக்கம் வந்துருச்சு. ஆனா என்னாலயே அந்தத் தயங்கத்துக்குத் தடை விதிக்க முடியலை. அப்படி நான் எனக்கு நானே தடை விதிச்சுருந்தா நிச்சயம் என் உணர்வுகளுக்கு உயிர் இருந்திருக்காது. அப்போயெல்லாம் என்னை நானே கேட்டுருக்கேன். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கேன்?
வேண்டாம்னு போறவனை நான் இப்படிப் பார்க்க தவமிருக்கேன்னேன்னு என்னையே திட்டிக்குவேன். ஆனாலும் மறுநாள் அதை மறந்துட்டு பார்க்க மொத ஆளா ஓடி வருவேன். ஆனா அப்படி நான் வர்றதை நீ தப்பா எதுவும் நினைச்சுருவயோன்னு கோபமா இருக்குற மாதிரி காட்டிக்குவேன்” என்றாள்.
“அப்போ என்னைப் பார்க்க வந்தது வருத்தம் இல்ல. நீ அப்படி வந்ததை நான் தப்பா நினைச்சுருவேன்னு தான் பயப்படுற. அப்படிதானே…?” என்று கேட்டவனுக்கு இப்போது மௌனமே பதிலாகத் தந்தாள் நங்கை.
“ஹ்ம்ம்…! புரியுது…!” என்றவன் மெல்லிய பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “நீ என்னைப் பார்க்க வந்த இடத்தில் எல்லாம், பார்க்க வந்த நேரம் எல்லாம் நான் அங்கே எப்படி இருந்தேன் நங்கா?” என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கேட்டான் தமிழரசன்.
என்ன சொல்கிறாய்? என்பதாக நங்கை அவனை இமை சிமிட்டாமல் பார்க்க “ம்ம்…! சொல்லுடா…! உனக்கு என்ன தோணுது?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
அவன் சொல்வதைப் பார்த்தால் தான் அவனைக் காண ஓடியது போல அவனும் தன்னைத் தேடி வந்தான் என்பது தானே அர்த்தமாகின்றது? என்று எண்ணியவளுக்கு அவனைச் சந்தித்த இடங்களை நினைத்துப் பார்த்தாள்.
மொழியால் என்னை வீழ்த்த வந்தாயோ??
என்னைச் சருகாய் சாய்க்க வந்தாயோ??
சிறு கடுகாய் என்னை மாற்ற வந்தாயோ??
என்னை வீழ்த்த மொழி தேவையில்லையடி பெண்ணே!!
உன் விழியசைவு போதும்
சருகாய், கடுகாய் மாறித்தான் போவேனடி!!
அவள் விழியசைவில் அவளின் எண்ணத்தை அறிந்துக் கொண்டவன் “என்ன நங்கா? புரிஞ்சுருச்சா? ஆமா… நான் எத்தனை வேலை இருந்தாலும், அதை எல்லாம் அந்த நேரத்திற்கு ஒதுக்கி வச்சுட்டு, தினமும் மாலையில் நீ என்னைப் பார்க்கிறது போல எதிரே வந்தேனே? அது எதுக்குன்னு இப்பவாவது புரியுதா நங்கா?” என்று கேட்டவனின் குரலில் நான் சொல்வது முற்றிலும் உண்மை என்ற உறுதி இருந்தது.
அதைக் கேட்டவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது உணர்வுகள். உண்மை தானே? அவன் நினைத்தால் தன் பார்வையில் படாமல் ஒதுங்கி இருந்திருக்க முடியுமே? என்று நினைத்தாள்.
ஆனாலும் என்று அவளுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது. அவள் யோசனையில் புருவங்கள் சுருங்க, அதைக் கண்டவன் அவளின் மடியில் இருந்த ஒரு கரத்தை எடுத்து தன் இரு கரங்களுக்குள்ளும் அடக்கிக் கொண்டவன், “ஒன்னை மட்டும் நல்லா புரிச்சுக்கோ நங்கா…! நீ பார்க்க வந்ததை நான் என்னைக்கும் தப்பா எடுத்துக்க மாட்டேன். அதே போலக் கண்டிப்பா நீ என்கிட்ட உரிமையா ஒட்டிக்கிறதை நான் தவறா நினைக்க மாட்டேன்.
நீ அப்படி என்கிட்ட நெகிழ்ந்து போறது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? என்னை நேசிக்கும் ஒருத்தி. சின்ன வயசில் இருந்து என் மேல அதிகம் பாசம் வைச்சிருக்கும் ஒருத்தி. என்னைப் பார்க்கலைனா உடைந்து போகிற ஒருத்தி. என்னை நேசிக்க ஆரம்பிச்சதில் இருந்து என்னை எப்படியாவது பேச வைக்கணும்னு துடிச்ச ஒருத்தி.
இப்ப எனக்கே எனக்கு மட்டும் சொந்தமா இப்ப என் கைகளில் இருக்குற ஒருத்தி. அந்த ஒருத்தியின் ஒட்டு மொத்த அன்போடு என் அணைப்பில் அடங்கிப் போறதை நினைக்கும் போது, இந்த உலகத்தில் என்னை விட அதிர்ஷ்டசாலி இருக்க முடியாது” என்று குரலில் நெகிழ்வும், கரகரப்பும் கலந்து சொன்னான்.
அவன் பேச, பேச நங்கைக்கும் மனதை இளக்கியது. ஆனாலும் இது எல்லாம் என் பக்கம் மட்டும் தானே? நான் அவன் மீது அவ்வளவு அன்பாக இருக்கும் போது அவனும் தன்னிடம் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது தானே இயற்கை? அதைத் தான் நங்கையின் மனமும் எதிர்ப்பார்த்தது.
அதையே கேள்வியாகவும் கேட்டாள் நங்கை. “நீ சொல்றது எல்லாம் சரி தான் மாமா. ஆனா நீ சொன்னது போல நானும் இப்படி உன்னைப் பத்தி அடுக்கடுக்கா சொல்றது போல நீ நடந்துக்கலையே மாமா? என் பார்வையில் படும் படி வந்த சரி. ஆனா நீ தைரியமான வளர்ந்த ஆண்மகன் தானே மாமா? நீயா ஏன் என்னைத் தேடி வந்து பேசலை. இப்ப நீ சொன்னயே என் பார்வையில் நீ வீழ்ந்து போனேன்னு, அதை நீ எனக்கு உன் பார்வையால கூட உணர்த்தலையே மாமா?
உன் கண்ணில் என் நேசத்துக்கான பிரதிபலிப்பை எதிர்ப்பார்த்து எத்தனை நாள் தவிச்சுப் போயிருக்கேன் தெரியுமா? ஏன்? ஏன் நீ என்னை விரும்புறதை கொஞ்சம் கூடக் காட்டிக்கலை? நீயா வந்து என்னைப் பொண்ணு கேட்கலையே மாமா? எங்கப்பா வந்து உன்கிட்ட கேட்கவும் சரினு சொல்லிட்ட. நீயே என்னைத் தேடிவந்து கேட்டுருந்தா ரொம்பச் சந்தோஷப்பட்டுருப்பேன். ஆனா பெரியவங்க சொல்லவும் நீ சரினு சொன்னது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்று தன் மன ஆதங்கத்தை எல்லாம் கேள்விகளாகக் கொட்டினாள்.
“ஒரு தைரியசாலி ஆண்மகன்னா என்ன நங்கா? மனசுக்கு பிடிச்ச பொண்ணைப் பார்த்தும் அவள்கிட்ட காதல் சொல்லி, பார்க்குற நேரத்தில் எல்லாம் நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி, காதல் மொழி பேசி, ஒட்டி, உரசி ஊர் சுத்துறது மட்டும் தான் ஒரு ஆண்மகனின் வேலையா நங்கா?
அப்படி இருந்தா தான் தைரியசாலினா நான் உன் பார்வையில் கோழையாவே இருந்துட்டு போய்டுறேன் நங்கா. ஆனா என்னைப் பொறுத்தவரை ஒரு ஆண்மகனின் கடமை முதலில் பெத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்புத் தர்றது. நான் சொன்ன பெத்தவங்க உன் அப்பா, அம்மாவையும் சேர்த்து தான் சொல்றேன்” என்று அரசு சொல்ல, நங்கை அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“புரியலையாடா…? நம்ம அப்பாக்கள் இரண்டு பேரும் எவ்வளவு நட்பா இருந்தாங்கன்னு உனக்கு அவ்வளவா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை நங்கா. ஏன்னா அவங்க நட்பா இருந்தப்பவும் சரி, அவங்க சண்டை போட்டு பிரிஞ்சப்பவும் சரி நீ சின்னப் பிள்ள. நீ உனக்கு ஒரு விளையாட்டு தோழனையும், உன்கிட்ட பாசம் கொட்டின என் வீட்டு ஆட்களின் அன்பை மட்டும் தான் உன் மனசு அந்த வயசில் எதிர்ப்பார்த்துச்சு.
நாங்க எல்லாம் சண்டைக்குப் பிறகு உங்க குடும்பத்துக் கூடப் பேசாம போனப்ப எங்க அன்புக்காகத் தான் நீ ஏங்கின. அதைத் தவிர நம்ம பெத்தவங்க மனநிலையை யோசிக்கலை. நீ யோசிக்கலைகிறதை விட உன் வயசும், அன்பு மட்டும் இருந்தா போதும்னு நினைச்ச உன் மனசும் வேற எதையும் நினைக்க விடல. அதான் உண்மை. ஆனா நான் உன்னை விடச் சில வருசம் மூத்தவன்கிறதால அவங்க நட்பையும் பார்த்து வளர்ந்தவன், அதே நேரம் அவங்க சண்டையையும் நேரில் பார்த்தவன்.
உங்க அப்பா வெளியிடத்தில் அவமானப்பட்டப்ப அவர் எந்த அளவுக்கு மனசு கஷ்டப்பட்டுயிருப்பாரோ அதை விட அதிகமா தான் எங்க அப்பா வேதனை பட்டிருப்பார். ஏன்னா… அந்த அளவுக்கு வீட்டுக்கு வந்து புலம்பி வருத்தப்பட்டதைக் கண் கூடா பார்த்தவன் நான். அதே போலச் சண்டை நடந்த அன்னைக்கு மாமா பேசிய வார்த்தையால் எந்த அளவு காயப்பட்டார்ன்னு அருகில் இருந்து உணர்ந்திருக்கேன் நான்.
எப்பயோ எங்க தாத்தா பேசினதை கூட மனசில் வச்சுக்கிட்டும், எங்கப்பா வசதியானவர்கிறதால மாமாவோட வறுமையைப் புரிஞ்சுக்காம நிலத்தை விக்க விட மாட்டிங்கிறார்கிற அப்போதைய கோபத்தில் தன் நண்பன் நல்லது தான் சொல்லுவான்னு யோசிக்காம பேசின நண்பன் தன் நட்பை பெருசா மதிக்கலைன்னு ரொம்ப, ரொம்ப அதிகமா வருத்தப்பட்டார். என் நட்பை புரிஞ்சிக்கலையே அவன்கிட்ட இனி நான் போய் என்னத்த பேசன்னு தான் அவர் ஒதுங்கிப் போனார்.
ஆனா அதே நேரம் மாமாவை விவசாயத்தைத் தொடர வைக்கணும்னு தன் நட்பை தனக்குள்ள போட்டு புதைச்சுக்கிட்டு சவாலுங்கிற பேர்ல விலகி வந்தவர். அப்படி வந்துட்டாரே தவிர மருதன் மாமாகிட்ட பேசாம இருந்தது அவருக்கு எந்த அளவு வலிச்சிருக்கும்னு என்னால நல்லாவே உணர முடிஞ்சது. இப்படிப்பட்ட ஒரு நட்புக்கு அவரோட மகனா நானும் மதிப்பு தரணும் தானடா நங்கா? அதைத் தான் நான் செய்தேன். என் அப்பாவும், உன் அப்பாவும் இனி பேசுறது அதே நட்பால இருக்கணுமே தவிர, மகன் பவளத்தை விரும்புறான்.
அதுனால உன் பொண்ணைக் கொடுன்னு போய்க் கேட்டு சம்பந்தியா அவங்க ஒன்னு சேரக் கூடாதுன்னு நினைச்சேன். நம்ம அவங்களுக்குத் தெரியாம விரும்பிட்டு நாங்க விரும்புறோம் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னா கண்டிப்பா நம்ம விருப்பத்துக்குத் தடை சொல்லாம பேச ஆரம்பிச்சிருப்பாங்க. ஆனா அவங்களுக்குள்ள முன்ன இருந்த மாதிரி ரொம்பக் குளோஷா பழக முடியாது.
இப்ப அக்கா கல்யாணம் மூலமா நம்ம இரண்டு குடும்பமும் உறவா ஆகும்னு நினைச்சு இரண்டு அப்பாக்களும் ஏற்பாடு பண்ணிட்டாலும், அவர்களால இயல்பா பேசமுடியலையே நங்கா? ஏதோ ஒரு உறுத்தல் எப்பயும் உள்ளுக்குள்ள இருக்கப் போய்த் தானே அவங்களால பேச முடியலை. நம்ம கல்யாணம் நம்ம இரண்டு விருப்பத்தால மட்டும் நடந்திருந்தா திரும்பவும் அந்த உறுத்தல் தான் இருந்துருக்குமே தவிர, முன் போல அதிக உரிமை உணர்வு அவங்களுக்குள்ள இருந்திருக்காது.
அப்படி மட்டும் நடந்திருந்தா அது கண்டிப்பா அவங்க நட்புக்கு நியாயம் செய்யாது. ஒரு மகனா இருந்து பெரியவங்க நட்புக்கு நான் நியாயம் செய்யணும்னு நினைச்சேன். அதுக்கு என் மனசை நான் மறைச்சு தான் ஆகணும். என் மனசு என்னனு எங்க அப்பாகிட்ட காட்டாதலால தான் இப்ப அவங்களா ஒன்னு சேர்றப்ப ரொம்ப இயல்பா பேசி அவங்க நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசி முடிவெடுத்தாங்க.
அதே நான் வந்து பொண்ணு கேட்டு அதனால அவங்க சேர்ந்திருந்தா கண்டிப்பா அந்த இயல்பு இருந்திருக்காது. அம்பது வருடம் கடந்தும் நிலைச்சு நிற்கிற நட்புக்கு நான் செய்த சிறு செயல் தான் என் காதலை அவங்களுக்குக் காட்டாம இருந்தது. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியுது தானே நங்கா?” என்று தான் சொன்னதை அவள் எப்படிப் புரிந்துக் கொண்டாள் என்று தெரிந்து கொள்ளத் தன் பேச்சை நிறுத்திக் கேட்டான்
“இந்தக் காரணத்துக்காகத் தான் நீங்க விலகி போனிங்களா? என்கிட்டயும் உங்க காதலை காட்டலையா?” என்று கேட்டாள்.
“நான் விலகி போனதா நீ நினைக்கிறியா?” என்று அவன் திருப்பிக் கேட்க நங்கை புரியாமல் முழித்தாள்.
அவள் முழியைப் பார்த்து சிரித்தவன் அவள் உச்சந்தலையில் கையை வைத்து தலையை ஆட்டி “அப்படியே அப்பா போலவே. உன்னைப் பத்தி மட்டும் யோசி” என்று வார்த்தையால் கொட்டுவைத்தான்.
அவன் சொன்னதின் அர்த்தம் புரிய தன் கண்களை அகல விரித்து வைத்து முறைத்தாள்.
“உண்மையைச் சொன்னா முறைக்காதடி என் பொண்டாட்டி!” என்று சிரித்த படி சொன்னவன் அவளின் அருகில் நகர்ந்து தன்னை முறைத்த விழிகளில் இதழ் ஒற்றி விழிகளைத் தாழ்த்த வைத்தான்.
அவனின் பொண்டாட்டி என்ற சொல்லும், இதழ் ஒற்றலும் நங்கையை நெகிழ்த்த இமையைத் தாழ்த்திய படி அமைதியாக இருந்தாள்.
அவளின் மனநிலை புரிந்தவன் போலத் தங்களுக்குள் இருந்த சிறிது இடைவெளியையும் முற்றிலும் குறைத்து “நங்கா ப்ளீஸ்டா! இனி நமக்குள்ள இடைவெளி வேண்டாம்னு நினைக்கிறேன். நீ என்கிட்ட நெகிழ்ந்து போயிருவ. நான் எதுவும் நினைப்பேன்னு மட்டும் நினைச்சுறாத. கண்டிப்பா நினைக்க மாட்டேன். சொல்ல போனா நான் தான் உன்னை விட நீ பக்கத்தில் வந்தா உருகி போறேன்.
ஆனா என்ன உன்கிட்ட பேசி முடிக்கிற வரை வேற எதுவும் நினைக்கக் கூடாதுன்னு தான் என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா இப்ப நீ என் பக்கத்தில் வேணும்டா. என் நங்காவை என் கைக்குள்ள வச்சுக்கிட்டே என் மனசை அவகிட்ட சொல்லணும்னு என்னோட பல நாள் கனவு. அதை உன்னால மட்டும் தான் நிறைவேத்த முடியும். என்னடா சொல்ற?” என்று கேட்டப் படி அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான்.
அவனின் குரலில் கெஞ்சலை உணர்ந்தவள் “ஹ்ம்ம்..!” என்று மெல்லிய குரலில் சம்மதம் சொன்னாள்.
அரசுவின் முகம் அவள் சம்மதத்தில் மலர்ந்து போக, அவள் தோளை சுற்றி கையைப் போட்டவன் அவள் தலையை இதமாகத் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
தன் கைகளுக்குள் அடங்கி இருந்தவளை ஆக்கிரமிக்க உள்ளம் விரும்பினாலும் தங்களுக்குள் இன்னும் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தங்கள் வாழ்க்கை ஆரம்பிக்கக் கூடாது என்று தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டவனின் கரங்கள் அவனின் கட்டுப்பாடுகளைக் கண்டு கொள்ளாமல் அவளின் கரத்தை மெல்ல வருட ஆரம்பித்தது.
அவனின் வருடலில் நங்கை உணர்ச்சிமயமாக மாறி அவனின் கைகளில் நெளிய ஆரம்பிக்க, அவளின் உணர்வுகள் புரிந்து தன் கையை மெதுவாக விலக்கிக் கொண்டு லேசான அணைப்புடன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“நான் உன்னை விட்டு மனசால விலகிப் போக நினைக்கலை நங்கா. ஆனா உடலால விலகிப் போக நினைச்சேன். நான் மட்டும் உன்கிட்ட என் காதலை காட்டிருந்தா அது எப்படியும் அப்பா காதுக்குப் போயிருக்கும். அப்புறம் எப்படி நான் அவங்க முன்ன போல உரிமையா பழகணும்னு நினைச்சது நடக்கும்?
அதுவும் அப்பாங்க சண்டை போட்டுக்கிட்டு பிரிந்துப் போனப்ப அந்த நேரத்தில் நானும் மாமா மேல கோபமா தான் இருந்தேன். காரணம் என் அப்பா தான் என் வழிகாட்டி, ஹீரோ எல்லாம். அவரை ஒருத்தர் தரம் தாழ்ந்த வார்த்தை பேசுறதான்னு வந்த கோபம். அப்புறம் வளர, வளர வாழ்க்கையில் நிறையக் கற்றுக்கொள்ளும் போது மாமா பக்க நியாயத்தையும், அப்பா ஏன் அந்த நேரம் விலகி போனார்னு எல்லாத்துக்கும் அர்த்தம் புரிய ஆரம்பிச்சது. அதோட இன்னும் ஒன்னும் நல்லாவே புரிய ஆரம்பிச்சது. அது உன்னோட அன்பு! சண்டை போட்டப்ப எல்லாம் நீ உங்க அப்பா பேச்சுக்குக் கட்டுப்பட்டுப் பேசாம விலகி ஓடினாலும் எங்களைப் பார்க்க நீ ஓடி வர்றதை புரிஞ்சு கிட்டேன். அதையே தான் கனி அக்காவும் சொன்னா.
‘பவளம் பாவம்டா. பெரியவங்க சண்டைல அவளை நாம அழ வச்சிட்டோம். அதனால அவகிட்டயாவது பேசலாம்னு தோணுதுன்னு சொல்லுவா’. ஆனா நான் தான் பேசாதேனு சொல்லி அவளைத் தடுத்தேன்” என்று அவன் சொல்லி நிறுத்த…
அரசு பேசும் போது நங்கையின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தான் பேசினான். அவன் பேச, பேச அகல விரிந்த நங்கையின் கண்கள் அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தையில் பட்டென அதிர்ந்து தன் தோளில் இருந்த கையை விலக்கினாள்.
அவளின் கோபம் புரிந்தாலும் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் தோளில் கையைப் போட்டு தன் அருகில் இழுத்துக் கொண்டவன் கோபத்தில் துடித்த அவளின் இதழ்களைத் தன் ஒற்றை விரலால் வருடி விட்டான்.
அவனின் கையில் பட்டென ஒரு அடி போட்டவள் “போடா!” என்றாள் கோபமாக.
“போகவா…? எங்க போக…? இனி என் நங்காவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். அவளே போக நினைச்சாலும் போக விடவும் மாட்டேன்” என்று சொன்னவனின் பேச்சில் மனம் உருகினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “ஆமா இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. என்னைப் பிடிக்கும்கிற, பக்கத்தில் இருக்க ஆசைகிற, வேணும்னேதான் விலகி போனேன்னு சொல்ற, நான் தான் பேச வேணாம்னு தடுத்தேன்னு சொல்ற.
இப்ப போக மாட்டேன். போக விடமாட்டேன்னு உருகுற. எதுதான் உன் உண்மையான எண்ணம்? அதைச் சொல்லு மொதல! சும்மா என்னைப் போட்டு குழப்பிக்கிட்டு இருக்க?” என்று கடுகாய் பொரிய ஆரம்பித்தாள்.
அவளின் படபடப் பேச்சில் “ஹா…ஹா…” என்று சிறிது சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தவனை வேகமாக வாயை பொத்தியவள் நொடியில் தன் கையை விலக்கிக் கொண்டாள்.
கையில் உணர்ந்த அவனின் மீசையின் குறுகுறுப்பும், அவன் அதரங்கள் அவளின் உள்ளங்கையில் பதிந்ததும் தான் அவளை உடனே விலக்கிக் கொள்ளத் தூண்டியது.
நங்கையைப் பார்த்து ஒரு குறும்பு புன்னகையைச் சிந்திய தமிழரசன் “மரியாதைனா கிலோ என்ன விலைன்னு என் பொண்டாட்டிகிட்ட தான் கத்துக்கிடனும் போல?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனைப் ‘போய்யா நான் அப்படித்தான் பேசுவேன்’ என்பது போலப் பார்த்து வைத்தாள்.
“அப்படித்தான் பேசுவேன்னு சொல்றியா? சொல்லிக்கோ…! என் நங்கா கூப்பிடாம வேற யார் கூப்பிடுவா?” என்றவனை ஒரு மயக்கும் புன்னகையுடன் பார்த்து “சார் விஷயத்துக்கு வாறீங்களா?” என்று நக்கலாகக் கேட்டாள்.
“சேட்டை…! சேட்டை…! உனக்கு ரொம்ப அதிகம் தான்” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “நான் சொன்னனே நங்கா, வளர வளர சில விஷயங்கள் எனக்குப் புரிஞ்சதுன்னு? அதில் ஒன்னு மாமாவோட குணம். நாம அவருக்குத் தெரியாம பேசி பழகினா அது அவருக்குத் தெரிய வரப்போ கண்டிப்பா நீ எங்களைப் பார்க்க ஓடி வந்தியே! அது கூட நடந்திருக்காது. ஏன்னா அவருக்கு அப்ப இருந்த வீம்புல அதைத்தான் மொதல செய்திருப்பார்” என்றான்.
நிஜமா? என்பது போல நங்கை பார்க்க “ஹ்ம்ம்… ஆமா நிஜமா உன்னை எங்களைப் பார்க்க விடாம தடுத்து நிறுத்தியிருப்பார். அன்னைக்குப் பேசுறப்ப நீ எங்களைப் பார்க்க வர்றது தெரிஞ்சும் பேசாம இருந்தார்ன்னு சொன்னாரே?
அது நாங்க உன் கூடப் பதிலுக்குப் பேசாம இருந்ததால தான் இருக்கும். நாங்க மட்டும் பேசிருந்தா ஆடு பகை, குட்டி உறவானு இன்னும் அவருக்கு வீம்பு வந்து, எங்களைப் பார்க்க கூட விடாம செய்துருப்பார். அப்படி நடந்திருந்தா என்ன பண்ணிருப்ப நங்கா?” என்று கேட்டான்.
“ஜடமா வாழ்ந்திருப்பேன்” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
“அந்த நிலை வந்திருக்கக் கூடாதுன்னு தான் நான் ஒதுங்கி போனேன்டா. அதோட அக்காவையும் அப்படி இருக்கச் சொன்னேன்” என்றவன் அவள் தலையைத் தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான்.
“ஹம்ம்…! ஆனா கனி மதினி கல்யாண விஷயத்தில் அப்பா அந்த வேலை பார்த்தது எனக்கு அதிசயம் தான்” என்றாள்.
“ஆமா… அந்த விஷயத்தில் என் கணிப்பும் தவறிடுச்சு தான். ஆனா அப்படி அவர் மாறினத்துக்கு முக்கியக் காரணம் நட்பு. என்னதான் கோபம், மனஸ்தாபம் வந்தாலும், அவருக்குள்ள இருந்த உண்மையான நட்பு தான் அவரை இளக்க வச்சிருக்கு. அதோட நண்பன்கிட்ட பேசின மாதிரி சம்பந்தி ஆகணும்னு எண்ண வச்சிருக்கு” என்றான்.
“ஆமா மாமா. ஆனா கனி மதினிகிட்ட நான் பேச ஆரம்பிச்சப்ப அப்பா ஒன்னும் சொல்லாம தானே இருந்தார். அது போல உன்கிட்ட பேச ஆரம்பிச்சிருந்தாலும் ஒன்னும் சொல்லிருக்க மாட்டார் தானே?” என்று நங்கை சந்தேகம் கேட்க…
தமிழரசன் எப்படிப் பதில் சொல்வது எனப் புரியாமல் சில நொடிகள் மௌனத்தில் ஆழ்ந்தான். பின்பு மூச்சை இழுந்து விட்டவன் “அந்த நேரம் மாமாவே வந்து உன்கிட்ட பேச சொல்லியிருந்தாலும் நான் பேசிருக்க மாட்டேன்டா நங்கா” என்று நிதானமாகச் சொன்னான்.
தன் காதில் விழுந்த வார்த்தையில் ‘என்ன?’ என்று அதிர்ந்தே போனாள் பவளநங்கை.