கண்கள் தேடுது தஞ்சம் – 31
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்–31
மஞ்சளில் முத்துக்குளித்த மங்கள நாணை தன் கழுத்தில் தாங்கிய நொடியில் பவளநங்கைக்குக் கண்களில் கண்ணீர் சரம் கோர்த்தது.
மனதில் மையம் கொண்டவன் மணாளனாக மாறிய அந்நொடி தந்த பூரிப்பில் உள்ளம் நெகிழ்ந்து சந்தோஷ வானில் சிறக்கடிக்க வைத்தது.
நங்கையின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு நிமிர்ந்த தமிழரசன் கலங்கிய அவள் விழிகளைக் கண்டு திரும்ப அவள் புறம் லேசாகச் சாய்ந்தவன் “கண்ணீர் நிக்க மருந்து வேணுமா நங்கா?” என்று ரகசியமாக அவளின் காதில் முணுமுணுத்தான்.
‘ஹா…! எல்லார் முன்னாடியுமா?’ என்று திடுக்கிட்டவள் குனிந்திருந்த தலையை மெல்ல நிமிர்ந்து விழிகளை உயர்த்திப் பார்த்து முறைத்தாள்.
கண்ணீர் பளபளக்க தன்னை முறைத்தவளின் விழிகளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.
அவனின் சிமிட்டலை எதிர்பார்க்காதவள் சட்டென மீண்டும் தலையைக் குனிந்துக் கொண்டாள்.
“யாரோ என் நாத்தனாரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி குதிச்சாங்க. இப்ப என்னடான்னா சுத்தி இத்தனை பேர் நிக்கிறாங்கன்னு கூட நினைக்காம என் நாத்தனாரை பார்த்து வழியுறாங்கப்பா” என்று அவர்களுக்குப் பின்னால் நின்றுக்கொண்டிருந்த கனிமொழி தம்பியை கிண்டலடித்தாள்.
கனியின் கிண்டலில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “இப்ப நான் ஒன்னும் உன் நாத்தனாரைப் பார்த்து வழியலை. என் பொண்டாட்டியை பார்த்து தான் வழியிறேன்” என்று தன் அக்காவுக்குப் பதிலை சொல்லிவிட்டு நங்கையைப் பார்த்தான்.
அவன் ஆவலாக அவளைப் பார்க்க, அவளோ ஓரப்பார்வையால் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
இவள் எதுக்கு இப்போது முறைக்கிறாள்? என்று யோசித்தவனுக்குச் சற்று முன் தன் அக்கா சொன்னதை நினைத்துப் பார்த்து மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.
ஏற்கனவே கனியிடம் நங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்று முன்பு சொன்னதை அவனின் அப்பா அன்று சொன்னதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு இருக்கிறாள் என்று உணர்ந்திருந்தான்.
இப்ப திரும்ப இவ வேற இன்னைக்கு ஞாபகபடுத்தி விட்டுட்டாளா? என்று நினைத்தவனுக்குச் சிறிது கடுப்பு வர “அதான் எல்லாத்துக்கும் கல்யாணத்துக்குப் பிறகு விளக்கம் சொல்றேன்னு சொன்னேன்ல அப்புறமும் ஏன் சும்மா, சும்மா மூஞ்சை தூக்கி வச்சுட்டு திரியுற?
இன்னைக்கு நைட் உனக்கு எல்லாத்துக்கும் பதில் கிடைச்சுரும். கொஞ்சம் சிரியேன்” என்றவன் “இந்தச் சில்வண்டுக்கு விளக்கம் சொல்லியே இன்னைக்கு நைட் முடிஞ்சுரும் போலயே?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.
அவனின் முணுமுணுப்பில் வெட்க சிரிப்புடன் தலையைக் கவிழ்ந்துக் கொண்டாள்.
அவர்களின் ஊர் கோவிலில் கல்யாணத்தை வைத்திருந்தார்கள். கோவிலில் கல்யாணமும், அரசுவின் வீட்டில் விருந்தும் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
காலை எட்டுமணி அளவில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுப் பெற்றவர்களின் ஆசிர்வாதத்துடன் பவளநங்கை, பைந்தமிழரசனின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் நடந்து முடிந்திருந்தது.
நாயகமும், மருதனும் தாங்கள் சம்பந்தி ஆகிவிட்ட சந்தோஷத்தை ஒருவரை ஒருவர் அணைத்து பகிர்ந்துக் கொண்டனர்.
அவருக்குப் பிடித்த பவளமே மருமகளாக வந்ததில் மகிழ்ச்சியுடன் வலம் வந்தார் அம்சவேணி.
மகளுக்குப் பிடித்த வாழ்க்கை கிடைத்த மகிழ்வில் கண்கலங்க மகளின் மணக் கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. மகளின் மனம் அறிந்தவர் ஆகிற்றே? சிறுபிள்ளையாக இருக்கும் போது அவர் தான் அவளின் மாமாவின் குடும்பத்தை எப்படி எல்லாம் பார்க்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார். ஆனால் குமரி ஆன பிறகும் மாறாத குணத்துடன், தினமும் அவள் தமிழை பார்க்க போவதை கண்டு, தாயின் கண்கள் மகளின் மனதை படம் பிடித்தது.
தமிழை அவளுக்குப் பிடித்திருக்கிறது போலயே? இரண்டு குடும்பமும் இரண்டு பட்டு இருக்கும் நிலையில் எப்படி அவள் ஆசைப் பட்டது நடக்கும்? என்று உள்ளுக்குள் கலங்கி போயிருந்தார். அதனால் அடிக்கடி அவளின் திருமணத்தைப் பற்றிக் கவலைப் பட்டார். ஆனாலும் மகளிடம் அவளின் மனதை மாற்றி கொள்ள சொல்ல மனம் வர வில்லை. ஏனெனில் மகள் விரும்புவது அவருக்கும் பிடித்த பாசமான அவரின் மருமகனை ஆகிற்றே! அதனால் கண்டும் காணாமலும் அமைதியாக இருந்தார். இன்று மகள் ஆசைப்பட்டவனையே கைபிடித்ததும் அந்தத் தாயின் உள்ளம் குளிர்ந்துப் போனது.
அடுத்து நங்கையின் மனம் போலவே அவளின் மாமனை கரம்பிடித்த ஆனந்தத்துடன் தோழியின் அருகில் நின்று சந்தோஷத்துடன் கண்டு களித்தாள் வாணி.
திருமணத்தை நல்லபடியாக முடித்துக் கொண்டு தமிழரசனின் வீட்டிற்கு மணமக்கள் சென்றார்கள்.
மனம் பூரிப்பில் பூத்திருக்கத் தன் மாமனின் கரம் பற்றி அவனின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் பவளநங்கை.
பத்து வருடங்களுக்குப் பிறகு வந்ததாலோ என்னவோ வீட்டின் உள் காலடி எடுத்து வைத்ததும் பரவசமாக உணர்ந்தாள் நங்கை.
தான் பல நாட்கள் உரிமையுடன் சுற்றி வந்த இடம். அவர்களுடன் பேச ஆரம்பித்து விட்டாலும், உடனே திருமணத் தேதி குறித்ததால் கல்யாணத்திற்கு முன் போக வேண்டாம் என்று ஈஸ்வரி தடைப் போட்டதால் இன்று தான் வருகிறாள். அதுவும் தன்னை விட்டு பிரிந்த மாமனின் கரத்தை உரிமையுடன் பற்றிக் கொண்டு வருவதே அவளுக்கு ஆனந்தத்தைத் தந்திருந்தது.
ஒரு நொடி அவளின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. அதனை அவளின் கரங்களின் வழியே உணர்ந்த அரசு அவள் கையை லேசாக அழுத்திக் கொடுத்தான்.
அதில் அவனை நிமிர்ந்து பார்த்து அழகாக முறுவழிந்தாள். அவளின் புன்னகையில் தொலைந்தே போனான் அரசு.
மணக்கோலத்தில் பூரிப்புடன் மிளிர்ந்த அவளின் அழகான புன்னகை அவனை அசர வைத்தது.
மணமக்களுக்குப் பாலும், பழமும் கொடுத்து முடித்ததும் விருந்தையும் முடித்து விட்டு உறவினர்கள் சூழ கூடத்தில் அமர வைக்கப்பட்டார்கள் மணமக்கள்.
அங்கே உறவினர்கள் அவர்களுக்குள் பேசி சலசலத்துக் கொண்டிருக்க, அரசுவின் அருகே வந்தமர்ந்தான் மாறன்.
வந்தவன் நண்பனின் முகத்தையே கூர்ந்து பார்க்க, “டேய்… என்னடா… எதுக்கு இப்படிப் பார்த்து வைக்கிற?” என்று புரியாமல் கேட்டான் அரசு.
“இல்ல… அந்தப் புள்ள கையைத் தொட்டதுக்கே சோப் போட்டுக் கை கழுவ போறேன்னு சொன்னவன், நாளைக்குக் காலையில் என்ன செய்வான்னு உன் முகத்தைப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்” என்றான் கிண்டலுடன்.
“காலையில் என்ன செய்வேன்? நல்லா சோப் போட்டு தலைக்குக் குளிப்பேன். முதலிரவு முடிஞ்ச பிறகு குளிக்கலைனா நல்லா இருக்காது பாரு” என்று லேசாகக் கண் சிமிட்டியப்படி அசராமல் பதிலடி கொடுத்தான் அரசு.
“அடப்பாவி…!” என்று வாயின் மேல் கை வைத்த மாறன் “எப்படிடா இப்படி என்னைப் போல ஒரு பச்ச பிள்ளையை ஏமாத்த உனக்கு மனசு வந்துச்சு? அந்தப் பிள்ளை பேரையே பிச்சு ஆராய்ஞ்சு பகைன்னு எல்லாம் சொல்லி, இப்ப அப்படியே பல்டி அடிச்சுட்டியேடா? இதுல மட்டுமா அந்த இடம் விக்கற பிரச்சனை பத்தியும் என்கிட்டே மூச்சு கூட விடாம அந்தக் கண்ணன், முத்து பயக கூட மட்டும் சேர்ந்துக்கிட்டு என்னை ஒதுக்கி வேற வச்சுட்ட!
உன் காதல் பத்தியும் என்கிட்டே காட்டிக்கவே இல்லை. என்னை உன் பிரண்டா நினைக்காம என்கிட்ட மறைச்சு என்னை ஒதுக்கி வச்சுட்டேல” என்று விளையாட்டாகப் பேச்சை ஆரம்பித்துப் பின்பு வருத்ததுடன் பேசிய மாறனை கூர்மையாகப் பார்த்தான் அரசு.
“என்னடா நான் இங்க பீலிங்கா பேசிட்டு இருக்கேன். நீ என்னை இப்படி லுக் விடுற?” என்று மாறன் கேட்க…
“இல்ல உன்கிட்ட நான் சொல்லாமவிட்ட இரண்டு விஷயத்தையும் நான் சொல்லி முன்பே உனக்குத் தெரிஞ்சிருந்தா என்ன பண்ணிருப்பன்னு உன் முகத்தைப் பார்த்து ஆராய்ஞ்சுகிட்டு இருக்கேன்” என்றான்.
“ஏன்…? என்ன பண்ணிருப்பேன்?” என்று மாறன் புரியாமல் கேட்க…
அவனிடம் பதில் சொல்லாமல் மெதுவாகத் திரும்பி அந்தப் பக்கம் நங்கையிடம் பேசிக் கொண்டிருந்த வாணியின் மீது ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு மீண்டும் மாறன் புறம் திரும்பினான்.
அரசுவின் பார்வை சென்ற திசையைக் கவனித்த மாறன் அவனிடம் மாட்டிக் கொண்டவன் போலத் திருதிருவென முழித்தான்.
அவன் முழியைப் பார்த்து “என்ன அய்யா காரணத்தை நான் சொல்லாமலேயே தெரிஞ்சுக்கிட்டிங்க போல?” என்று அரசு நக்கலுடன் கேட்க…
“நீ எப்படிடா கண்டுப்படிச்ச?” என்று மெதுவாகக் கேட்டான் மாறன்.
“ஹ்ம்ம்…! அடிக்கடி அந்த வாணி பிள்ளையை நீ முழுங்க போறவன் போலப் பார்த்தா என்னால கண்டு பிடிக்க முடியாதா என்ன? அதோட நீ அந்தப் பிள்ளைகிட்டயும் சம்மதம் வாங்கிட்டன்னு தெரியும். இரண்டு பேரும் உங்க வயல்ல ஒன்னா நின்னு பேசிட்டு இருந்ததை ஒரு நாள் பார்த்தேன்.
வாணியை உன் கூடப் பேச அனுப்பிட்டு நங்கா மட்டும் அவங்க வயல்ல தனியா உட்கார்ந்து இருந்தா. அப்பயே எனக்குப் புரிஞ்சிருச்சு. எப்படியும் நான் உன்கிட்ட ஏதாவது சொன்னா ஒருவேளை வாணிகிட்ட நீ உளறி அது நங்கா காதுக்குப் போய்ரும்னு தான் உன்கிட்ட சில விஷயத்தை மறைக்க வேண்டியா போயிருச்சு” என்றான்.
அரசு சொல்லி முடித்ததும் “உண்மை தான்டா வாணியும், நானும் விரும்புறோம். எங்க இரண்டு வீட்டில் பேசி சம்மதமும் வாங்கிட்டோம். உன்கிட்ட இதைச் சொல்லாம்னு இருந்த நேரத்தில் உன் கல்யாண வேலையில் நீ பிசி ஆகிட்ட. சாரிடா!” என்றான்.
“சாரி எல்லாம் எதுக்குடா? நண்பர்களாகவே இருந்தாலும் சில நேரத்தில் சில விஷயங்கள் அவங்கவங்க பர்சனல் மட்டும் தான். எல்லாத்தையும் எல்லா நேரமும் சொல்லிட்டு இருக்க முடியாது. அது தான் என் விஷயத்திலும் நங்காவுக்கு சில விஷயம் நானா சொல்லணும்னு தான் உன் கிட்ட கூட அவளை விரும்புறதை நான் காட்டிக்கலை. அதை நீயும் புரிஞ்சுக்கோ!” என்றான்.
“ஹே தமிழா…! நான் ஒன்னும் தப்பா நினைக்கலைடா. விடு…! ஏதோ சின்ன வருத்தம் சொல்லிட்டேன். நீ என்கிட்ட சொல்லாம இருந்ததும் நல்லது தான். இல்லைனா எப்படியும் நான் வாணிகிட்ட உளறிருப்பேன்” என்று சொன்னவன் லேசாக அசடு வழிந்தான்.
அவனைப் பார்த்து மனம் விட்டு சிரித்த அரசு “அப்போ அடுத்தக் கல்யாண மாப்பிளை நீ தான்னு சொல்லு” என்றான்.
இங்கே நண்பர்கள் கேலி செய்து பேசிக் கொண்டிருக்க அந்தப் பக்கம் வாணியை இதை போலச் சொல்லி நங்கை கேலி செய்து கொண்டு இருந்தாள்.
“என் கூடத் துணைக்கு வந்து உனக்கும் ஒரு ஜோடியை பார்த்துக்கிட்ட. அடுத்து நீ தான் கல்யாணப் பொண்ணு” என்று சொல்லி வாணியை வெட்கப்பட வைத்துக் கொண்டிருந்தாள்.
சிறியவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, அங்கே நாகராஜனின் இரு புறமும் அமர்ந்திருந்த நாயகமும், மருதனும் தாங்கள் தமிழரசனிடம் மாட்டிய நாளை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மருதனுக்குத் தன் அண்ணன் அவர் வீட்டில் வைத்துத் தன்னிடம் சொன்ன விஷயங்கள் நியாகத்துக்கு வர அதைப் பற்றி இப்போது நினைத்துக் கொண்டார்.
இரு குடும்பமும் பேச ஆரம்பித்ததில் இருந்து சரியாக ஒரு மாதம் கழித்து வந்த ஒரு முகூர்த்த நாளை திருமணத்திற்குக் குறித்தார்கள்.
குடும்பம் சேர்ந்த மகிழ்ச்சியுடன் தங்கள் பிள்ளைகளின் திருமண மகிழ்ச்சியும் பெரியவர்களைச் சுறுசுறுப்பாகச் செயல் பட வைக்கத் திருமண வேலைகள் களைகட்டின.
கால் காயம் சரியானதும் மகளின் திருமண வேலையை இழுத்து போட்டு செய்த மருதன், தன் அண்ணன் வீட்டிற்குக் குடும்பத்துடன் நேரில் போய் இந்தச் சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொண்டார்.
அவர்கள் வந்ததில் கனி தான் பெரும் மகிழ்ச்சியுடன் வலம் வந்தாள்.
“என்னடி நாத்தனாரே… என் மேல கோபம் போய்ருச்சா? போன் போட்டா எடுக்கக் கூட மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டியே!” என்று கனி நங்கையைச் சீண்டினாள்.
“உன் மேல கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை மதினி. மாமா தான் என்னைக் கொஞ்சம் டென்சன் ஆக்கி விட்டுருச்சு. அதான் எனக்கு யார்கிட்டையும் பேச முடியல. உன் தம்பிகிட்ட சொல்லி வை மதினி. இனி என்னைச் சீண்டினா நான் யார்கிட்டையும் அப்புறம் பேசவே மாட்டேன்” என்று நங்கை கறாராகச் சொல்ல…
“இனி என் பேச்செல்லாம் அவன்கிட்ட எடுபடாது பவளம். இனிமே நீ சொல்றது தான் வேதவாக்குன்னு சுத்தப் போறான் பாரு” என்று நங்கையைக் கிண்டலடித்தாள்.
கிண்டலும் கேலியுமாக அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.
கனியுடன் ஈஸ்வரியும், மருதனும் சந்தோஷமாகப் பேசி மகிழ்ந்தனர்.
அப்போது “அம்மாடி…! நீயும் உன் மாமனாரும் என்னை இப்படியா மாட்டிவிடுவீங்க? என் மருமகன் என்னை நல்லா எல்லார் முன்னாடியும் போட்டுக் கொடுத்துட்டான்” என்று மருதன் சோக கீதம் வாசிக்க…
“ஹா…ஹா… மாமா! நான் செய்ய இருந்த வேலையை என் தம்பி செய்துட்டான். இருந்தாலும் என் மாமனாரும் நல்லா ரகசியத்தை ஐந்து வருஷமா காப்பாத்திட்டார் பாருங்க” என்று கனி சொல்ல…
“எங்க என் அண்ணன் காப்பாத்தினார். அதான் அதுக்கும் சேர்ந்து பவளத்துக்கு வந்த வரனை நான் தட்டி விட்டதையும் சேர்த்து சொல்லிட்டாரே” என்று மருதன் சொல்லிக் கொண்டிருக்க… அப்போது அங்கே வந்த நடராசன் “என்ன மருதா செய்றது? நானும் உன்கிட்ட போய் நாயகத்துகிட்ட பேசுன்னு பலமுறை சொல்லிட்டேன். நீ கேட்குற பாடு இல்லை.
இதில் உன் பிள்ளை கல்யாணம் விசயமா நீ என்ன செய்யப் போறன்னு வருத்தப்பட்டயே தவிர வேற நடவடிக்கை எடுக்குற மாதிரி தெரியலை. எனக்கு எல்லாம் தெரிஞ்சும் வெளிய சொல்ல முடியாதது போல நீ என் வாயை கட்டிப் போட்டுட்ட. நாயகம் பொண்ணு போட்டோ திருச்சியிலிருந்து, மதுரைக்கு அதுவும் சரியா என் கையில் கிடைச்சப்பவே எனக்கு நாயகம் வேலையோனு சந்தேகம். அப்புறம் பொண்ணு பார்க்க நேரா போனப்ப நான் நாயகத்துகிட்ட தனியா விசாரிச்சப்ப சொன்னார்.
மருதனை அணுக இதுவும் ஒரு வழி. ஆனா இப்ப நான் நேரா பேச முடியாத சூழ்நிலையில் இருக்கேன். அதுனால தயவுசெய்து இப்ப எதுவும் வெளிய தெரிய வேண்டாம்னு கேட்டுகிட்டார். அப்படித் தயவா கேட்குறப்ப என்னாலும் அதுக்கு மேல என்ன செய்றதுன்னு தெரியல. ஒருத்தர் ஒரு விஷயத்தை வெளிய சொல்லாதிங்கன்னு சொல்லும் போது அதை எப்படி மீறி சொல்றதுன்னு அமைதியா இருந்தேன். நீ அதுக்கு மேல என் வாயை கட்டி போடுற.
நானே எப்படி உங்க இரண்டு பேரையும் பேச வைக்கிறதுன்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் தான் மருமக என் தம்பி நங்கையைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்னு சொன்னா. அதான் அவன் மறுக்கும் போது எப்படி இரண்டு பேரையும் பேச வைக்கிறது. அவன் உன் பொண்ணை வேண்டாம்னு சொல்லி திரும்ப உங்களுக்குள்ள பிரச்சனை வந்துருமோனு அமைதியா இருந்தேன்.
ஆனா மருமக பவளம் பேச மாட்டிங்கிறான்னு புலம்பி தள்ளவும் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சது பவளம் மனசு. அதுக்குப் பிறகு தான் மருமககிட்ட சில விஷயங்களைச் சொன்னேன். பொண்ணு ஒருத்தனை மனசுல நினைச்சுட்டா மாற மாட்டாளே. பொம்பள பிள்ளை வாழ்க்கை இனி இந்த விஷயத்தில் இருக்கு.
இதுக்கு மேலயும் நான் அமைதியா இருக்கக் கூடாதுனு நானே ஒரு நாள் நேரில் வந்து சம்மந்திகிட்ட பேசி பார்ப்போம்னு நினைச்சேன். அந்த நேரத்தில் தான் நீ ஆத்துல மாட்டி எல்லாமே தன்னாலே நடந்துருச்சு. இனி என்ன பவளம் கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திரலாம்” என்று நடந்ததை எல்லாம் சொன்னார் நடராஜன்.
இப்போது கல்யாணமும் நல்ல படியாக முடிந்திருக்கத் தன் அண்ணனின் அருகில் அமர்ந்திருந்த மருதன் தன் நினைவில் இருந்து மீண்டு நாயகத்தின் புறம் பார்த்து “ஏன் நாயகம் நீயும் போய் அண்ணன்கிட்ட தான் உன் பையனுக்கு வந்த வரனை வேண்டாம்னு சொல்லிட்டதைச் சொன்னியா?” என்று கேட்டார்.
“இல்லை மருதா! என் பையனுக்கு வந்த வரனை தடுத்துட்டேன்னு நான் எப்படிச் சம்பந்திகிட்ட சொல்ல? தயக்கமா இருந்துச்சு. அவன் உள்ளுருக்குள்ள தான் விசாரிச்சு வரனை தடுத்து நிறுத்துனதை தெரிஞ்சுக்கிட்டான்னு அப்புறம் தான் என்கிட்ட சொன்னான். பக்கத்து ஊர் புரோக்கர் பய மூலமா தான் பயபுள்ள விஷயத்தைக் கறந்துட்டு வந்து அம்சா முன்னாடி போட்டுக்கொடுத்து மாட்டிவிட்டான்” என்று அன்று நடந்ததை நினைத்து அலுப்புடன் சொன்னார்.
நண்பர்கள் இருவரும் செய்து வைத்த வேலை தெரிய “ஆனாலும் இவ்வளவு ஒற்றுமையா யோசிக்கிற நண்பர்களை இங்க தான் பார்க்குறேன். நங்கைக்கு வந்த வரனை மருதன் வேண்டாம்னு சொன்னது போல. நீங்களும் மகனுக்கு வந்த வரனை தடுத்து மருதன் மாதிரியே யோசிச்சுருக்கிங்க.
இவ்வளவு ஒற்றுமையை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு வெளியே சண்டை போட்டு இத்தனை வருஷத்தை கடந்துருக்கீங்க. முன்பே பேசிருந்தா நீங்க எப்பயோ ஒன்னு சேர்ந்துருப்பீங்க” என்று நடராஜன் சொல்ல… “உண்மை தான் ண்ணா! ஆனா என்ன செய்ய? யாராவது முதல் அடி எடுத்து வச்சுருக்கணும். தயங்கி தயங்கியே வருஷத்தை ஓட்டிட்டோம்னு எனக்கும் வருத்தமா தான் இருக்கு” என்றார் மருதன்.
“ஹ்ம்ம்…! நிறைய உறவுகள் அப்படித் தான் மருதா. ஒரு சின்ன விஷயத்துக்குச் சண்டை போட்டு பரம்பர, பரம்பரையா பகையை மனசுல வச்சுக்கிட்டு சுத்தின குடும்பங்களும் கூட இருக்கே. நாமளும் அப்படி இல்லாம இப்பவாவது பேசிக்கிட்டோம்னு சந்தோஷப் படுத்துக்க வேண்டியதுதான்” என்றார் நாயகம்.
“அது என்னவோ சரிதான்!” என்றார் மருதன்.
அடுத்து இங்கே சம்பந்திகள் மூவரும் அவர்களுக்குள் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க…
கல்யாண அலைச்சலில் சோர்ந்து போயிருந்த கனியை ஒரு ஓரமாக அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான் சந்திரன்.
“இன்னைக்குச் சந்தோஷத்தில் நீ ரொம்ப அழகா தெரியுற கனிமா” என்று சந்திரன் சொல்ல…
“ஏன் இல்லைனா நான் அழகு இல்லையா?” என்று கேட்டுச் சந்திரனை முழிக்க வைத்து விட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் “சந்தோசம் இருக்காதா பின்ன? எங்க மேல பாசமா இருக்குற பவளத்துக்கு அவள் ஆசை பட்ட வாழ்க்கை கிடைச்சுருச்சு. அதோட என் தம்பிக்கும் சிறப்பா கல்யாணம் நடந்துருச்சு. அவங்க இரண்டு பேரும் சேரணும்னு தானே நான் இங்க அடிக்கடி வந்து சண்டை போட்டுட்டு போனேன். அவங்க சேர நானும் காரணம்னு நினைக்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு” என்றாள்.
“ஆமா கனிமா… இன்னைக்குப் பாரேன் நம்ம பவளம் முகத்துல எப்பயும் இருக்குற ஒருவித தவிப்பு குறைஞ்சு அவ தேடின பாசத்தோட காதலும் கிடைச்சதுல முகம் நிர்மலமா இருக்கு” என்று அவனின் தங்கையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
“ஆமாங்க…! பாவம் எல்லாரும் சேர்ந்து அவளைத் தான் கொஞ்சம் கஷ்டப் பட வச்சுட்டோம். இனி அவ சந்தோஷமா இருப்பா. அதோட எங்க அம்மாவும், அத்தையும் பாருங்க. இரண்டு பேரும் பிள்ளைங்க கல்யாணம் முடிஞ்ச ஜோர்ல பரபரன்னு சந்தோஷமா சுத்தி கல்யாணத்துக்கு வந்தவங்களைக் கவனிக்கிறதை என்று வேணியையும், ஈஸ்வரியையும் காட்டினாள்.
கனி சொன்னது போலத் தங்கள் பிள்ளைகளை மணக் கோலத்தில் பார்த்த பூரிப்பில் மட்டும் இல்லாமல் நாயகமும், மருதனும் அங்கே பழைய நண்பர்களாகக் கலகலத்துப் பேசிக் கொண்டதை பார்த்து, இவர்களும் அந்தச் சந்தோஷத்தில் கலந்துக் கொண்டவர்களாக விருந்தினர்களைப் பம்பரமாக மகிழ்ச்சியுடன் சுழன்று கவனித்துக் கொண்டிருந்தனர்.
அனைவரின் மனமும் சந்தோஷத்தில் திளைத்திருக்க அந்த வீடே கல்யாண களையில் ஜொலி ஜொலித்தது.
இரவு பத்து மணி அளவில் தன் அறைக்குள் நுழைந்த தன்னுடைய நங்காவை விழியெடுக்காமல் பார்த்து பார்வையால் வரவேற்றான் தமிழரசன்.
கதவை தாளிட்டு விட்டு சிறு தயக்கத்துடன் அடி மேல் அடி எடுத்து வைத்து வந்தவள், அவன் பார்வையைச் சளைக்காமல் எதிர் கொண்டாள் பவளநங்கை.
அவள் பார்வையைப் பார்த்துக் கொண்டே அவளின் அருகில் நெருங்கி வந்தவன் எதிரே நின்று அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி “இந்தப் பார்வை தான்! இதே பார்வைதான்!” என்றான்.
அவன் அறைக்குள் நுழைந்ததும் சட்டென இப்படிச் செய்வான் என்று நினைக்காத நங்கைக்கு அவனின் தொடுகையில் உடல் ஒரு முறை சிலிர்த்தது. பின்பு அவன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ‘என்ன?’ என்று கண்களால் கேள்வி எழுப்பினாள்.
பவளநங்கையின் கேள்வியைத் தன் கண்களால் படித்தவன் “என்னை வீழ்த்திய பார்வை இது தான்!” என்று வார்த்தையில் காதல் பொங்க தன் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்ன அரசுவின் பார்வையை எதிர் கொண்ட நங்கை “அப்படியா?” என்று கண்களால் கேட்டாள்.
அவள் கண்களால் கேட்ட கேள்விக்கு “ஆம்!” என்று தன் கண்களால் பதில் சொன்ன அரசு, இன்னும் அவளை நெருங்கி தங்கள் இருவருக்கும் இருந்த இடைவெளியை குறைக்கும் வண்ணம் அவள் கையில் இருந்த பாலை ஒருகையால் வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் மீண்டும் அவள் கன்னத்தில் கை வைத்து தன் அருகில் இழுத்தான்.
அவனின் நெருக்கம் நங்கைக்கு ஏதோ செய்ய “என்ன?” என்று முனங்கினாள். அவள் கேள்விக்குத் தன் செயலால் பதில் சொன்னான் அரசு.
அவளின் அருகில் நெருங்கி கன்னம் தாங்கி தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இரண்டு இமைகளின் மீதும் மாறி மாறி தன் அதரங்களை அழுத்தி வைத்து அச்சாரம் இட்டுவிட்டு மெல்ல விலகி நின்றான்.
அவன் அருகில் வந்தாலே செயல் இழந்தது போலாகும் நங்கை, அவனின் இதழ் ஒற்றலில் கிறங்கி தான் போனாள். அவன் விலகவும் சுதாரிப்புக்கு வந்தவள். அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிறுத்த முயன்றப்படி “எனக்குச் சொல்ல வேண்டிய பதில் எல்லாம் சொல்லாம இனி பக்கத்தில் வரக்கூடாது” என்று அழுத்தமாகச் சொல்ல முயன்றவளை அவளின் குரலே அவளைத் தோற்கடித்து மெல்லிய சிணுங்களாகச் சொல்ல வைத்தது.
அவளின் சிணுங்கல் குரலில் அரசுக்குப் புன்னகை வர, அவளின் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டவன் “என் நங்காவுக்கு நான் அன்னைக்குச் சொன்ன கண்டிஷனே மறந்து போயிருச்சு போல இருக்கு?” என்று கேலியாகக் கேட்டான்.
அவனின் கையைத் தன் தோளில் இருந்து எடுத்து விட முயன்ற படி “என்ன கண்டிஷன்? அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்லையே?” என்று நங்கை சொல்லிவிட்டு அவனை விட்டு நழுவி செல்ல பார்க்க…
தன் அழுத்தத்தை அவள் தோளில் கூட்டியவன் “அப்படியா…? அப்போ இன்னொரு முறை செய்து காட்டிற வேண்டியது தான்” என்று விட்டு அவளைத் தனக்கு நேராக இழுத்து நிற்க வைத்தவன் அவளின் ஒற்றைக் கையைப் பிடித்து அன்று போலவே சுண்டி இழுக்க, அவனின் மார்பில் வந்து விழுந்தாள்.
தன் மேல் விழுந்தவளின் முகம் நிமிர்ந்தி விழியோடு விழி உரசி “உன் கண்கள் தேடிய தஞ்சம் கிடைச்சுருச்சாடா நங்கா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான் பைந்தமிழரன்.