கண்கள் தேடுது தஞ்சம் – 28
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 28
‘எனக்குச் சம்மதம் இல்லை’ என்று சொன்ன நங்கையின் பதிலில் அதிர்ந்து நெஞ்சில் கைவைத்தார் ஈஸ்வரி.
அவருக்குப் பின்னாலே வந்த வேணியும் அவள் சொன்னதை நம்ப முடியாமல் திகைத்து நிற்க… வெளியே அமர்ந்திருந்த மருதன் “பவளம் இங்கே வா!” என்று கோபமாக அழைத்தார்.
அவரின் கோப குரலில் ஈஸ்வரி ‘என்ன நடக்கப் போகுதோ?’ என்று கைகளைப் பிசைய, நங்கை எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக எழுந்து சென்றாள்.
வரவேற்பறைக்கு வந்தவள் வேறு யாரின் முகத்தையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. தன் தந்தையை மட்டும் நேர் பார்வை பார்த்தவள் “என்னப்பா?” என்று நிதானமாகக் கேட்டாள்.
அங்கே நாயகத்திற்கும் அதிர்ச்சி தான். ஆனால் மருதனின் கோபத்தைப் பார்த்து அவரை அமைதிப்படுத்த முயன்றார். அவரைத் தடுத்த மருதன் நிதானமாகக் கேள்வி கேட்ட மகளை முறைத்து பார்த்தார்.
ஆளுக்கு ஒரு வித பாவனையில் அங்கே இருந்தவர்கள் இருக்க, ‘இதை நான் எதிர்பார்த்தேன்’ என்பது போல ஒரு மர்ம புன்னகையுடன் அவளையே பார்த்தப் படி அமர்ந்திருந்தான் பைந்தமிழரசன்.
“ஏன் உனக்குச் சம்மதம் இல்லை?” என்று கோபத்துடன் கேட்டார் மருதன்.
“எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலை. அதனால சம்மதம் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் நங்கை.
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு. நம்ம தமிழை விட நல்ல பையன் கிடைப்பானா என்ன?” கோபப்பட்டவரை கண்டு சற்றும் தளராமல்,
“உங்களை அடிக்க வந்தவனை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள்.
“என்னை என் மருமகன் அடிக்க வந்தான்னு நீ பார்த்தியா?”
“நான் பார்க்கலை தான். ஆனா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன நானே காதால கேட்டேனே?”
“அது இத்தனை வருஷம் கழிச்சும், அவனுக்கு மனசு உறுத்தினதுனால தான் மன்னிப்பு கேட்டான். அவனுக்கு நல்ல எண்ணம் இல்லைன்னா இத்தனை வருஷத்துக்குப் பிறகு மன்னிப்பு கேட்க தோணிருக்குமா? நீ இந்த விஷயத்தை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு முடிவு பண்ணாதே! நானே அதை மறந்துட்டு மருமகனா ஆக்கிக்கிடணும்னு நினைக்கிறேன். நீ எதுக்கு அதை மனசுல வச்சிட்டு முடிவு எடுக்குற?
இப்ப தமிழ் என்கிட்ட மன்னிப்புக் கேட்கலைனா கூட அதைப் பெருசு படுத்தாம அவன் தான் என் மருமகன்னு முடிவு எடுத்துருப்பேன். ஆனா இப்ப என் மருமகன் என்கிட்ட மன்னிப்பே கேட்டுட்டான். வருஷம் கடந்தும் மன்னிப்பு கேட்ட அவன் மனசே போதும் நான் இன்னும் உறுதியா அவன் தான் என் மருமகன்னு முடிவெடுக்க” என்றார்.
‘அவர் சொல்வதும் நியாயம் தானே? சில வருடங்களுக்குப் பின் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் நினைக்க வில்லையே? அவன் செய்த தப்பிற்கு அவன் மன்னிப்பு கேட்டு விட்டான். அப்போது பாதிக்கப் பட்ட அப்பாவே அதைப் பெரிய விஷயமாக எடுக்காத போது, தான் அந்தக் காரணத்தைச் சொன்னால் எடுபடுமா என்ன?
ஆனாலும் அதையும் தவிர இன்னும் ஒன்றும் இருக்கிறதே? அதை எப்படி நான் அப்பாவிடம் சொல்ல முடியும்? அவன் மீது பாசம், நேசம் கொண்டு அவனைப் பார்க்க ஓடினேன் தான். ஆனால் அதற்காக அவன் என்னை விரும்புகின்றானா? இல்லையா? என்று தெரியாமல் நிச்சயமாகக் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்ல என்னால் முடியாது’ என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டவள் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள்.
அவள் மௌனத்தைப் பார்த்து “பவளம்! அப்பா அன்னைக்குத் தண்ணிக்குள்ள விழுந்தப்ப என்ன நினைச்சேன்னு தெரியுமா? என் பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்காம அதுக்குள்ள இந்த அப்பன் சாகப் போறேனே… என் பொண்ணுக்கு எப்படி வாழ்க்கை அமைய போகுதோன்னு தான் எனக்குத் தோனுச்சு. ஏன் உங்க அம்மா இருக்காளேன்னு நீ நினைக்கலாம். ஆனா உங்ககிட்ட நான் வெளியே கடுப்பா பேசினாலும் உள்ளுக்குள அவ மேல எனக்கு ரொம்பப் பாசம் இருக்கு.
என் கஷ்டம், நஷ்டம் எல்லாத்துலயும் எந்த முகச் சுளிப்பும் காட்டாம என் கூட இருக்குறவ அவ. என்ன என் பாசத்தை எனக்கு அவகிட்ட காட்ட தெரியலை. நான் காட்டலைனாலும் என்னை, என் அன்பை முழுசா புரிஞ்சு வச்சிருக்குறவ அவ. என்னை விட அவளுக்கு என் மேல அன்பு அதிகம். நான் போன பிறகு அவ சுயமாக முடிவெடுக்குற அளவுக்கு அவளால யோசிக்கக் கண்டிப்பா முடியாது. வெளியே சொல்லிக்கிட்டா தான் அன்பா? நாங்களும் மனசார ஆதர்ச தம்பதிகள் தான். நான் இல்லைனா நிச்சயம் அவ தாங்க மாட்டா.
அப்படி இருக்கும் போது உனக்கு எப்படிக் கல்யாணம் முடிச்சு கொடுத்து எப்படி வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருப்பா சொல்லு? கடவுளுக்கு நம்ம குடும்பத்து மேல கருணை அதிகம் போல. தமிழ் மூலமா என்னைக் காப்பாத்த வச்சு இப்ப இரண்டு குடும்பமும் ஒன்னு சேர வச்சுருக்கார்.
இன்னைக்கு இருக்குறது போல இனி எப்பயும் இந்தக் குடும்பம் ஒற்றுமையா இருக்கணும். அதுக்கு இந்தக் கல்யாணம் நடந்தா சந்தோஷப்படுவேன். அதோட இன்னும் ஒரு தடவை என்னைக் காலன் வந்து கூப்பிடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சு வைக்க இந்த அப்பன் ஆசை படுறேன். சரின்னு சொல்லு பவளம்!” என்று தன் மனதில் இருந்த ஆசையை உருக்கமாகச் சொன்னார்.
அவர் உணர்ச்சி வசப்பட்டதைப் பார்த்து நாயகம் அவர் முதுகில் தடவி கொடுத்து சாந்தப் படுத்த, அங்கே சமயலறையில் கேவி அழுதார் ஈஸ்வரி. இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையில் கணவனின் இந்த வெளிப்படையான பேச்சு அவரை நெகிழ வைத்துக் கண்ணீர் விட வைத்தது.
அதோடு தன்னைப் பற்றி எப்படிச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் என் கணவர் எனப் பெருமையும் அவரின் மனதில் எழுந்தது.
அவரை அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த வேணிக்கும் கண் கலங்கி இருந்தது.
தந்தையின் பேச்சை கேட்டுச் சிலையாக நின்று போனவள், தந்தைக்குப் பதிலும் சொல்ல முடியாமல், அரசுவின் மனம் என்னவென்றும் புரியாமல் தவித்த நங்கைக்குக் கண்ணீர் பெருக்கெடுக்க, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் தன் அழுகையை அடக்க முடியாமல் தன் அறைக்கு ஓடினாள்.
எல்லாரும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருக்க அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அரசு இருக்கையை விட்டு எழுந்து தன் மாமனின் பேச்சை நினைத்துப் பெருமையாகப் பார்த்தவன், “மாமா நான் நங்காகிட்ட தனியா பேசணும். அவ ரூமுக்கு போக உங்க அனுமதி வேணும்” என்று அவரின் கண்ணைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
மகள் பதில் சொல்லாமல் ஓட, மருமகன் கண்ணியமாகத் தன்னிடம் கேட்ட கேள்விக்கு வேறு வழி இல்லாமல் ‘சரி’ என்பது போலத் தலையசைத்தார்.
அவர் சம்மதம் சொன்னதும் “அப்பா?” என்று அவரின் பதிலுக்காகவும் அவரைப் பார்த்தான். அவர் மகனை கூர்மையாகப் பார்த்து “போ..!” என்பது போலக் கையை அசைத்தார்.
இருவரின் சம்மதமும் கிடைத்ததும் நங்கையின் அறைக்குச் சென்ற அரசு உள்ளே சென்று கதவை தாளிட்டான். பின்பு நிதானமாகத் திரும்பி நங்கையைப் பார்க்க அங்கே கட்டிலில் குப்புற படுத்து தேம்பி, தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவளின் அருகில் மெதுவாகச் சென்றவன் கட்டிலின் அருகில் நின்று “நங்கா! எழுந்திரி! உன்கிட்ட பேசணும்” என்று அழுத்தமாக அழைத்தான்.
அரசுவின் குரல் அருகில் கேட்கவும், இவன் எப்படி இங்கே வந்தான் என்று நினைத்து அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்து பார்க்க, அவன் கால்களை அகல வைத்து கையைக் கட்டிய படி அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அரசு.
அவனின் கூர்மை அவளின் இதயத்தையே குடைந்தது போல இருக்கத் தன் கவனத்தைத் திருப்பி, அவன் எப்படி உள்ளே வந்தான்? எப்படி அப்பா விட்டார்? என்பது போல வாசலை பார்க்க திரும்ப, அங்கே பூட்டியிருந்த கதவு அவளைக் கட்டிலை விட்டு துள்ளி எழுந்து கீழே நிற்க வைத்தது.
“எப்படி உள்ள வந்தீங்க? வெளியே போங்க!” என்று கோபமாகச் சொன்னாள்.
“நல்லவேளை நீயே எழுந்துட்டியா? நீ அழுகுறதை பார்த்து எங்க உன் பக்கத்தில் உட்கார்ந்து உன்னைச் சமாதானப்படுத்தி எழுப்ப வேண்டி இருக்குமோன்னு பார்த்தேன்” என்று கண்ணில் கேலி மின்ன சிறு சிரிப்புடன் சொன்னான்.
அவன் பேச்சில் “ஆ…! என்னது?” என்று அதிர்ந்து விழித்தாள் நங்கை.
“என்னடா? என்ன அதிர்ச்சி? உன் மாமன் இப்படியெல்லாம் பேசமாட்டான்னு நினைச்சியா? நான் இதை விட நல்லாவே பேசுவேன். எங்க இப்ப நம்ம பேச்சை ஆரம்பிப்போமா?” என்று துள்ளலாகக் கேட்டான்.
அவன் பேச, பேச நிஜமாகவே அதிர்ந்து தான் போனாள் நங்கை. தான் அவ்வளவு வம்பிலுக்கும் போதும் தன்னிடம் எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்றவன், இப்போது இவ்வளவு உரிமையாக, இப்படிக் கேலியாகப் பேசுபவனைப் பார்த்து வியப்பாகவே இருந்தது.
“அப்படிக் கண்ணை முழிச்சு பார்க்காதேடி! என் நங்கா! அப்புறம் உன் மாமன் பேசவேண்டியது எல்லாத்தையும் மறந்துருவான்” என்று குரலை கிசுகிசுப்பாக வைத்து சொல்ல… நங்கைக்குத் தலை கிறுகிறுத்து தான் போனது.
நிஜமாவே இவன் பைந்தமிழரசன் தானா? இல்ல வேறு எதுவும் பூதமா? என்று அவளின் சிந்தனை ஓடியது.
“என்னடா இத்தனை நாள் நம்மைக் கண்டுக்காம இருந்தவன் இப்ப இப்படிப் பேசுறான்னு பார்க்குறியா? எல்லாத்துக்கும் நேரம், காலம் சரியா வரணுமே? இன்னைக்கு அந்த நாள் வந்துருச்சுனு நினைச்சுக்கோ!” என்றான்.
“அது எல்லாம் நான் நினைக்கிறது இருக்கட்டும். நீங்க மொத வெளியே போங்க! எல்லாரும் வெளியே இருக்கும் போது அது என்ன கதவை சாத்தி வச்சுருக்கீங்க? வெளியே இருக்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்று கேட்டாள்.
அவள் அருகில் நிதானமாக நெருங்கி வந்தவன் “நான் இப்படி உன் பக்கத்தில் நின்னு பேசுறதை பார்த்து அவங்க பயந்துற கூடாது பாரு? அதுக்குத் தான் கதவை பூட்டினேன். அதோட எங்க அப்பாகிட்டயும், உங்க அப்பாகிட்டயும் சம்மதம் வாங்கியாச்சு. அதுனால அவங்க ஒன்னும் நினைக்க மாட்டாங்க” என்றவனின் மூச்சு காற்று அவள் முகத்தில் சூடாய் வீசியது.
‘என்னது…? இவ்வளவு சுடுது?’ என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அவன் தன்னை மிகவும் நெருங்கி நிற்பது புரிய வேகமாகப் பின்னடைந்து சென்றாள். ‘அட கழுதை! அவன் பக்கத்தில் வந்தது கூடத் தெரியாமயா அவன் முகத்தை அப்படிப் பார்த்துட்டு நிற்பேன்’ என்று தன்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
அவனிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் அவனின் முகத்தை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்கவும் தன்னையறியாமல் அவன் முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஆமா… இவன் ஏன் இவ்வளவு நெருங்கி வந்தான்? எப்போதும் என்னை விட்டு தள்ளி தானே ஓடுவான்’ என்று எண்ணினாள்.
“ஹம்ம்…! அப்போ எல்லாம் உன்னை இன்னும், இன்னும் நெருங்கி வந்து பேச தான் எனக்குத் தோணும். ஆனா உன் மனசுல தேவையில்லாம சலனத்தைக் கூட்டிவிட்டுற கூடாதுன்னு தான் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் விலகி போனேன்” என்றான் அவளின் எண்ணத்திற்குப் பதில் சொல்வது போல்.
‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று அவன் சொல்ல வருவது புரியாமல் முழித்தாள் நங்கை.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் பார்வை புரிந்தாலும் “என் சேட்டைகார சலசல நங்கா எங்கே போனா? இன்னும் எத்தனை நாள் தான் கண்ணாலேயே பேசி என்னைச் சுத்த வைப்பா? நீ நினைக்கிறதை வாயை திறந்து சொல்லேன்” என்றான்.
‘ஆமா… நீ சொன்னதும் அப்படியே நான் பேசிறணுமாக்கும்?’ என்று அவள் உள்ளுக்குள் அவனைத் தாளித்துக் கொண்டிருந்தாள்.
“பேசமாட்டியா நங்கா? என் மேல உனக்கு இருக்குற கோபம் நியாயமானது தான். இத்தனை நாளும் உன்னைத் தவிக்க விட்டவன் கிட்ட பேச உனக்குக் கஷ்டமா இருக்கும் தான். ஆனா நான் ஏன் உன்னைத் தவிக்க விட்டேன்கிறதுக்கும் ஒரு காரணம் இருக்கும் தானே நங்கா? அதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன்” என்று கெஞ்சுதலாகப் பேசினவனைப் பார்த்தவள்,
தன் மௌனத்தை மெல்ல கலைந்து “என்ன இன்னைக்குப் பேச்சு, செயல் எல்லாமே புதுசா இருக்கு? எப்பயும் என்னைவிட்டு விலகி ஓட தானே உங்களுக்குத் தெரியும். தினமும் நான் உங்களைப் பார்க்கத்தான் வர்றேன்னு தெரிஞ்சும் என்னை விட்டு விலகி ஓடத்தானே எப்பயும் நினைப்பீங்க? அதுவும் நான் ஆவலா உங்க கண்ணில் என் மீதான அன்பை தேடும் போது முறைக்கதானே தெரியும்?
அதையும் விட என்னைத் தொட்டா தீண்ட தகாததைத் தொட்டது போலத் தானே துடைச்சுக்கத் தெரியும். கண்டவன் என்கிட்ட வந்து காதலுன்னு வந்து உளரும் போது நக்கலா சிரிக்கத் தெரியும். எனக்கு ஒரு உதவி தேவைன்னு நானா கேட்குற வரை வேடிக்கை பார்த்துட்டு இருக்கத் தெரியும். இது எல்லாத்தையும் விட அந்தக் கண்டவனை என்னைப் பொண்ணு பார்க்க போகச் சொல்ல தெரியும்.
இத்தனை செய்த நீங்க இப்ப வந்து எங்க அப்பாகிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்றீங்க. என்கிட்ட இப்படித் தனியா பேசணும்னு சொல்றீங்க. எது உங்க உண்மை முகம்? உங்க மனதில் நிஜமா என்ன இருக்கு? எங்க அப்பா சாகப் பிழைச்சு வந்த பரிதாபமா? இல்ல வேற எதுவும் காரணம் இருக்கா?” என்று இத்தனை நாளும் அவளின் மனதில் இருந்த கேள்விகளை எல்லாம் கணைகளாக மாற்றி அவனின் மீது வீசினாள் நங்கை.
“ஹப்பா…! உன் கண்ணும், வாயும் நல்லாவே என் மேல கணையைப் பாச்சுதே நங்கா!” என்று அவள் பேச்சில் சிலிர்த்துப் போனது போலத் தலையைக் குலுக்கிக் கொண்டவன், “அன்னைக்குச் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன் நங்கா. உன்னோட எல்லாக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இருக்கு. ஆனா அதைச் சொல்ற சூழ்நிலை தான் இன்னும் வரலை” என்றான் அரசு.
தன் கேள்விகளுக்குப் பதிலை எதிர்பார்த்த நங்கைக்குக் கிளிப்பிள்ளையாக அவன் அன்றைக்குச் சொன்னதையே சொல்லவும், அவளின் கோபம் உச்சத்தில் ஏறியது.
அவனை நெருங்கி வந்தவள் “போ இங்கிருந்து… போய்ரு…! இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னா நானே பிடிச்சு உன்னை வெளியே தள்ளிருவேன். போய்ரு…!” என்று அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.
ஆனால் சிறிதும் அசையாமல் வலுவாகக் கால் ஊன்றி நின்றவன், தன் நெஞ்சில் இருந்த அவளின் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி ஒரு இழு இழுத்தான்.
அவனைத் தள்ளுவதில் குறியாக இருந்தவள் தன்னை இழுப்பான் என்று எதிர்பார்க்காததால் அவன் மேலேயே போய் விழுந்தாள்.
தன் மேல் விழுந்தவளை கைவளைவில் பொருத்தி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், பின்பு மெல்ல அவள் முகத்தை மட்டும் நிமிர்த்தி அவள் கண்களுக்குள் கூர்மையாகப் பார்த்து, “இதோ… இப்படி என் தோளில் சாச்சுக்கிட்டு, உன் முகத்தை இப்படிப் பார்த்து, உன் கண்ணோடு கண் கலந்து என் மனசை திறந்து எல்லாத்தையும் நான் சொல்லணும். நீ அதுக்குத் தயாரா நங்கா?” என்று அவளின் கண்ணைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“நீ இப்படி என் கைக்குள்ள இருந்து கேட்க தயார்னா? நான் இப்பயே எல்லாத்தையும் சொல்லவும் தயார்! என்ன சொல்லட்டுமா?” என்று கேட்டு அவளின் கண்ணிமையைத் தன் ஒற்றை விரலால் மெல்ல வருட ஆரம்பித்தான்.
அரசு நெஞ்சில் சாய்த்துக் கொண்டதும் திமிறிய நங்கை, அவன் தன் கண் பார்த்து பேச ஆரம்பித்ததும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போலக் கேட்டுக் கொண்டு இருந்தாள். இப்போது அவன் இமையை வருட ஆரம்பித்ததும் சட்டென அவன் கையைத் தட்டிவிட்டு அவனிடம் இருந்து விலகியவள் அவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.
‘அவனைப் போ என்று சொல்லிவிட்டு அவன் கையிலேயே அடைக்கலமானால் அவன் தன்னை என்னவென்று நினைப்பான்?’ என்று பெண்ணாக அவளின் மனம் அஞ்சியது.
அவள் முதுகையே பார்த்த அரசு அவள் தோள் நடுங்குவதை உணர்ந்து “நான் உன்னை எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்டா நங்கா. நான் இப்ப செய்து காட்டினது போல உன்னால கல்யாணத்துக்கு முன்னால என் கூட அப்படி நின்னு கேட்க முடியாது இல்லையா? அதான் மாமா கல்யாணத்துக்குக் கேட்டதும் உடனே சரின்னு சொன்னேன்.
எவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் உன் கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கும். ஆனா இப்ப ஒண்ணே ஒன்னு மட்டும் தெளிவு படுத்துறேன். ஆனா நீ என் பக்கம் திரும்பி என் முகத்தைப் பார்த்தா தான் சொல்வேன்” என்று அவள் திரும்புவதற்காகக் காத்திருந்தான்.
ஆனால் நொடிகள் தான் கடந்தனவே தவிர அவள் திரும்பவில்லை.
அதனால் “சரி நான் வெளியே போய்ச் சீக்கிரம் கல்யாணம் வைக்கச் சொல்றேன். அதுக்குப் பிறகு நான் இதையும் சேர்த்து சொல்றேன்” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் பட்டெனத் திரும்பியவள் “என்ன…?” என்று அதிர்ந்து பார்த்தவள், “கல்யாணத்துக்கு என் சம்மதம் வேண்டாமா?” என்று கடுப்பாகக் கேட்டாள்.
“ஹ்ம்ம்…! அதைக் கேட்க தானே வந்தேன். நீ சொல்ற வழியைக் காணோம். நான் இன்னும் எவ்வளவு நேரம் இங்க நிக்க முடியும்? நீயே சொல்லு?” என்று கேட்டான் அரசு.
“நீங்க ஏதோ ஒன்னு சொல்லணும்னு சொன்னீங்களே… அதை மொத சொல்லுங்க. நான் அப்புறம் என் சம்மதம் சொல்றதா வேணாமான்னு யோசிக்கிறேன்” என்று எடுப்பாகப் பதில் சொன்னாள் நங்கை.
அவளின் பேச்சை ரசித்துப் பார்த்த அரசு அவளின் முன் இன்னும் ஒரு எட்டு வைத்து நெருங்கி நின்றவன் அவள் முகத்தைக் கையில் தாங்க போனான்.
ஆனால் அவனை விட வேகமாக ஒரு எட்டுப் பின்னால் வைத்த நங்கை “தொடாம தள்ளி நின்னே சொல்லுங்க” என்றாள்.
அரசுவும் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான். நங்கை ‘மாமா’ என்று சொல்வதைத் தவித்தாள். மாமா என்றழைத்தால் ஒருமையில் அழைப்பவள் இப்போது பன்மையில் மட்டுமே அழைத்தாள். அதில் அவனுக்கு வருத்தமாக இருந்தது.
திரும்பவும் அவளை ‘மாமா’ என்று சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் இப்போது சொல்ல வந்ததைச் சொல்லிவிட வேண்டும் என்று அவள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் அருகில் மீண்டும் கால் எடுத்து வைத்து “நங்கா… ப்ளீஸ்…! இந்த ஒருமுறை. அப்புறம் கல்யாணம் முடியுற வரை தேவையில்லாம பக்கத்தில் வர மாட்டேன்” என்றான்.
கெஞ்சுவது போலக் கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் நங்கை திருதிருவென முழித்தாள். ஆனால் கெஞ்சி கேட்பவனிடம் அதற்கு மேல் முரண்டுபிடிக்கத் தோன்றாமல் அமைதியாக நின்றாள்.
நங்கையை நெருங்கி நின்றவன் அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் ஏந்தினான். பின்பு அவள் கண்களுடன் தன் கண்ணைக் கலக்க விட்டவன் தன் தொடுகையால் படபடத்த அவள் விழிகளைப் பார்த்து “என் வாழ்க்கையில் எனக்கு மனைவினு ஒருத்தி வந்தா அது என் நங்கா மட்டும் தான்!” என்று அழுத்தம் திருத்தமாகக் குரலிலும், கண்களிலும் தன் காதலை தேக்கி வைத்துச் சொன்னான் பைந்தமிழரசன்.